அந்த விளக்கின் ஒளி பரவாதது

அன்றாடத்தின் துயர் வரிகள்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

அகச்சேரனின்  முதல் கவிதைத் தொகுதியான அன்பின் நடுநரம்பு (2012) பிறகு, ஏழு வருடங்கள் கழித்து இரண்டாவது தொகுப்பாக வந்துள்ளதுதான், இத்தொகுதி. அதிக இடைவெளி என்பது கவிஞரின் எழுதுமனோநிலைதான் காரணமாக இருக்கலாம்.

இவரின் முதல் தொகுதியின் சில கவிதைகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். இரண்டாவது தொகுப்பை வாசிக்கும்போது, அவருக்குள் ஒரு பக்குவமும் மென்மையும் தீர்க்கமும் வந்திருப்பதைக் காணமுடிகிறது.

ரெப்பை அரிந்த விழி தொடங்கி அமரத்துவம் வரையிலான 29  கவிதைகளை முதல்வாசிப்பில் வாசிக்கும்போது, துயரம் ஒரு மலையாக, மேகமாக எனக்குள் படர்ந்துவிட்டது.  இரண்டாவது முறை வாசித்தேன்.  துயரத்திற்கு அடுத்ததாக நிலம் புலப்பட்டது. மூன்றாவது வாசிப்பில், அகச்சேரனின்  உலகம் துயரங்களாலும் மரணங்களாலும் சூழ்ந்த வாழ்வு எனத் தெரிய  வருகிறது. பெரும்பாலான கவிதைகள் முழுக்க  இயலாமையின்பால்  நிகழ்ந்த  மரணமும்,   துரதிர்ஷ்டமும் ஒரு ரேகையாகப்  படிந்துள்ளதைக் காணமுடிகிறது.

ஒருவகையில் இவற்றை அகக் கவிதைகள் என்றோ, சுயசரிதைக் கவிதைகள் என்றோ சொல்லலாம். தங்கை, தாய், செல்ல மகள் என விரியும் கவிதைகளில் பாசமும்  பிரிவும்  ஒருசேர இயலாமையால் அமைந்துவிடுவே சோகம். இதற்கு ‘அம்மா விழுந்தாள்’ கவிதையே சாட்சி.  ரத்த உறவு கவிதையில், தந்தையும் மகளும் அழுகைக்காக வளர்வதாகக் குறிப்பிட்டிருப்பதும் மற்றொரு சாட்சி.

மரணத்திற்குப்பிறகும் வெட்டுக்கத்தியைப் பார்க்கும் மீன், தேநீர்த் தட்டோடு இறக்கும் அம்மா, கோபத்திலும் துயரத்திலும் தன்னை இழந்துகொண்டிருக்கும் மலைகள், பறிக்கப்பட்ட பிறகும் மௌனமாக இருக்கும் மலர், தாயின் சாலை விபத்து மரணத்தை அறியாமல் சாலையில் விளையாடும் நாய்க்குட்டி மரணம், யாவரையும் அன்பால் வீழ்த்தும்  கவிஞர் பாபுவின் மரணம், தொங்கிய மகள், மலிவான மரணம் எனப் பல  படிமங்கள், மரணத்தின் வெவ்வேறு வடிவங்களையும் குணங்களையும் காட்டுகின்றன. துயரம் ஒரு கண்ணீராக மாறி மரிப்பதை நான் காண்கிறேன்.

அகச்சேரன் தன் வாழ்வையும் சில கவிதைகளில் எழுதி இருக்கிறார். மருத்துவமனை உச்சியில் பறக்கும் குருவிகள் சாட்சியாக, தனக்காக நிரந்தரமின்மை உள்ளதைப் பேசுகிறார்.  அமரத்துவம் கவிதையில் உச்சி விளிம்பில் யூகலிப்டசும் அவருடைய கண்ணீரும் இருப்பதாக எழுதுகிறார். சித்திரம் கவிதையில் மளிகைக் கடைக்கு, ஆஸ்பத்திரிக்கு, குப்பை மேட்டுக்குச் செல்லும் அம்மா, சிறுவன், குழந்தை மூவரும் செல்கிறார்கள். தனிமை அவர்களுக்குள் ஒரே தனிமையாக இருக்கிறது. வெகுதொலைவில் இருக்கும் தந்தைக்கோ, தன் குடும்பம் இனிய சோலையாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த இனிய சோலையைத் தான் பல கவிதைகள் வழியாக அகச்சேரன் வேண்டுகிறார்.

என் சிறிய புரிதலும் ஒப்புதலும் – கவிதையை முன்னிட்டு என்கிற அகச்சேரனின் தன்னுரை, அவர் கவிதைகளுக்கு ஒத்துப்போகிறது. அதாவது அவர் வாழ்வின் கணங்களுடன் கவிதைகளும் ஒத்துப்போகிறது. இன்றைய நவீன கவிஞர்களிடம் இல்லாத நேர்மை அகச்சேரனிடம் உள்ளது. அன்றாடத்திற்கு ஒப்புக்கொடுத்துள்ள இக்கவிதைகள், அவ்வளவு நேர்மையாக, நம்பகத்தன்மையாக உள்ளவைதான்.

சமகால அரசியல் கவிதைகள் சிலவற்றில் எனக்குப் பிடித்தமான ஒன்று, மிகுபோதையின் சிறுநீர்ச் சொட்டே என்ற  அவருடைய கவிதை.  எனது நேர்காணல் ஒன்றில், சிலைகளை,  கவிதைகளால் உடைக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தேன். அதனினும் அதிகமாக, சிறுநீர்ச்சொட்டுகளால் சிலைகளை உடைப்பவராக அகச்சேரன் எழுதியிருக்கிறார்.  வாழ்த்துகள் அகச்சேரன்! நாங்களும் இணைந்து சிலைகளுக்கு எதிராகப் பெய்வோம்.

 “கவிதையைப் படிமக் காட்சி என்றும், எளிய உரைநடையில் எள்ளல் தன்மையென்றும் கூர்மையான மொழியில் அகச்சேரனால் நுட்பமாக வழங்க முடிந்திருக்கிறது.  மொழியை இத்தனை பொறுப்போடும் துல்லியமாகவும் பயன்படுத்துபவர்களை இன்று காண்பது அரிதாகவே உள்ளது” என்கிற ஸ்ரீநேசன் பின்னட்டை குறிப்பும் மிகச் சரியாகவே படுகிறது.

மிகச் சிறிய தொகுப்பு இது என்று சொல்வதற்கு முடியாது அளவிலான பெரும் உணர்வுக்கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. இவர் கவிதைகளைப் பற்றி, இவர் கவிதைகளின் வழியாகவே பற்றிச்சொல்லிவிடலாம். “புறந்தள்ளி எம்பும், சிறுகால் உதைப்பில் ஆடும், குருவி எனப்படாததின், வானுயர்ந்த பொன்னூசல்” தான் அது. வானுயர்ந்த பொன்னூசல் யாவர் கண்ணிலும் தரிசனமாகவேண்டும். அதிக பொன்னூசல்களை இவர் தொடர்ந்து எழுதவேண்டும்.

தொகுப்பைப் புரிந்துகொள்ள சில கவிதைகள்

அம்மா விழுந்தாள்

அம்மா விழுந்தாள்
நன்றாகவே பின்கட்டிலிருந்து
தேநீர்த் தட்டோடு நடந்து வந்தவள்
வீட்டின் சகல
ஜடங்களும் உயிர்களும் பார்க்க
இடறி

தூக்க எத்தனிக்காத
என் கற் கைகளை நண்பனிடம்
குறைபட்டேன்

வீட்டில் மறைந்திருந்த
பாழ்ங் கிணற்றை அறிந்த பீதியில்
இன்றைய தேநீரோடு

அம்மா நடந்து வருகிறாள்
நான் என் கைகளை கைகளை…

பிற்பகலின் நம்பிக்கை போன்ற மலை

நடுப்பகலில் நிராதரவாய்
புறவழிச் சாலையில் இறக்கி விடப்படுகிறீர்கள்

அடிபட்டு இறந்து இரண்டு நாளான நாயின் நைந்த சடலம்
உங்கள் கண்களில் தட்டுப்பட்டிருக்கக்கூடாது

அக் கடுப்பகலில் நாய்க்கு ஆதரவாக நிற்க முடியாததுதான்

உங்கள் பசியால் பூமியின் விளிம்பில் நிற்பதாய்
உணரும் கணம்
திரும்பி அருகிருக்கும் மலையைப் பார்க்கிறீர்கள்

நிழல் உங்களைக் கூப்பிடுகிறது
நடக்கிறீர்கள்

அடைந்து சிறிய கடையில் பசியாறி
கைகழுவும் பின்பக்கம்
பார்க்கிறீர்கள்

சூரியனுக்கும் மேலே வளர்ந்திருக்கும்
மலை தந்த நிழலில்
நான்கு நாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருப்பதை.

மிகுபோதையின் சிறுநீர்ச் சொட்டே

மிகுபோதையின் பிடரியில் விழுந்தது மரண அடி
மிகுபோதையும்
காக்கி உடுப்பணிந்த மரண அடியும்
தங்கள் பிணைப்பை
உறுதி செய்துகொண்டன

மிகுபோதையோ சிலைகளின் அடியில் சிறுநீர் கழித்து
பீடத்தை நொறுங்கச் செய்ய வல்லது

சிலைகளின் அசைவின்மையைத் தொழுவது
ஜீப்பில் வலம்வரும் மரண அடி

சிலைகளின் தலையில் இருந்துவிட்டுப் போகும்
காகங்களிடம் மரண அடியின் பாச்சா
ஒருநாளும் பலிப்பதில்லை

சிலைகளைத் தகர்க்க
பீடத்தில் இன்னும் பெய்க
என் மிகுபோதையின் சிறுநீர்ச் சொட்டே.

ஸ்தானம் அல்லது
புதுமைப்பித்தன் எழுதிக் கொண்டிருந்தார்

முடிவாக
வேறு வழியின்றி
என் சந்துமுனை விளக்குக்
கம்பத்தினடியிலேயே
நின்றுகொள்ள எண்ணினேன்

அந்த விளக்கின் ஒளி பரவாதது

கடை மறைக்கிறதென இட்லிக்காரக்
கிழவியால் துரத்தி அடிக்கப்பட்டேன்
போய் நின்றதுமே

உச்சியில் அமர்ந்து
கவிழ்ந்த வெளிச்சத்தின்
பின் மண்டையில் கால்மிதித்தபடி

இருளில் புதுமைப்பித்தன்
எழுதிக் கொண்டிருந்தார்.

0

நெடுஞ்சாலையின் காற்றைக் கிழித்துக் கொண்டு
இந்த பஸ் ஏன் இப்படி
அரளிகள் பின்னோட வெறிபிடித்தோடுகிறது?

இருநிலைகளிலும் வெறுமையைக் காண்தற்கா
இந்தப் பித்து?

இந்நடையில் லாவகமாக உயிர்தப்பிய
ஓணானை நிமிர்ந்து நோக்காத
ஆன்ராய்டு மண்டைகளை இன்னும்
குனிந்து கொள்ள கேட்டுக் கொள்ளலாம்

யார் ஆட்டுவிப்பு இது?

அடிவானைத் துளைக்கிறதே
காற்றொலிப்பான்

நியதியின் உறுமலை
மறக்கவில்லை பழைய எஞ்சின்

பாவம் அந்த நான்கு சக்கரங்களுக்கும்
அநாதை என்று பெயரே
கணப்பொருத்தம்

0

ரத்த உறவு

நேற்றைக்கு நாம் சேர்ந்துபோன
பாதையில் முட்களை விளைக்கிறது
காலம்

பொழுதுகளை
சிறுபிராயத்தைவிட மூர்க்கமாக
சண்டையிட்டு நாம் வீணாக்கலாம்

பார்
நாம் தனித்தனியே அழுகிற அளவிற்கு
வளர்ந்துவிட்டோம்.
(தங்கைக்கு)

ஈகோ

ஆயினும் நான் முன்வருகிறேன்
உன் பாதங்களில் நசுங்க

பரந்த மைதானத்தின் மூலைச்சருகே
நான்.

0

எதனைவிடவும்
மலையின் எண்ணம்
உண்மையிலேயே பெரியதுதான்
இல்லையெனில்
பரந்த நிலத்தைப் பார்ப்பதற்கு
வாய்ப்பேது

0

அந்த விளக்கின் ஒளி பரவாதது /
அகச்சேரன் /
புது எழுத்து / டிச.2019 / ரூ.50

1 thought on “அன்றாடத்தின் துயர் வரிகள்

  1. துயரின் அதி உயரத்தில் ஒரு படைப்பாளி காண்பதென்பது அத்துயரின் பரியூரண அழகையே. அது ஒரு வகையில் பிரசவம் போலத்தான். நல்ல மதிப்புரை. இருவர்க்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *