இயல்பு

இந்தியத் தத்துவங்களில் இயற்கையும் மனிதரும் சூழலும்

இயல்பு

க.காமராசன்

ஏன் இந்தத் தொடர்?
இந்தியத் தத்துவங்களில் இயற்கையும் மனிதரும் சூழலும் என்னும் தலைப்பில் ‘இயல்பு’ முதல் இதழிலிருந்து ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய போது அனைவரும் வரவேற்றனர். அவர்கள் இந்தத் தொடரின் நோக்கமாக இருக்க வேண்டிய பல விசயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். அவற்றை ஒன்று திரட்டி ஏற்கனவே நான் யோசித்திருந்த பல விசயங்களையும் சேர்த்து, இந்தத் தொடருக்கான பின்வரும் நோக்கத்தைக் குறித்துக்கொள்கிறேன்.
நோக்கத்தைக் குறிப்பிடும் முன் ஒன்றைக்கூற வேண்டும். அண்மைக் காலத்தில் நான் படிக்கும் பல எழுத்துகளிலும் சந்தித்து உரையாடும் பேச்சுகளிலும் மார்க்சியம் உள்ளிட்ட பொருள்முதல்வாதத் தத்துவ மரபுகள் இயற்கையை வெல்லுதல் குறித்தே அக்கறை கொள்ளுகின்றன என்ற கருத்து அடிபடுகிறது. இந்தக் கருத்து நேர்மறையாக மனித வல்லமை குறித்து ஊக்கம்கொள்வதற்குச் சமூக மாற்ற இயக்கத் தளங்களில் முன்வைக்கப்படுகிறது; இந்த மனித வல்லமை என்னும் கருத்தாக்கம் இயற்கையின் புதிர்களை வெல்லும் கடைமையும் உடைமை சமூக உறவுகளின் தீமைகளை வெல்லுதலையும் சமமாகவே பார்க்கிறது. அதே வேளையில் இதே கருத்து, எதிர்மறையாக, ஒரு குற்றச்சாட்டாகவும் முன்வைக்கப்படுகிறது. ‘உற்பத்திப் பெருக்கம் என்னும் கோட்பாட்டில் முதலாளியமும் மார்க்சியமும் ஒன்னு, இதை அறியாதவன் வாயில மண்ணு’ என்ற வசனம் சூழலியல் வட்டாரத்தில் உள்ளது. ஆகவே உள்ளூர் ஆன்மீக/ மத மரபுகளுக்குத் திரும்புதலே சூழல் பாதுகாப்பு என்பதற்கு முன்நிபந்தனை என்று கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இந்தத் தொடரின் நோக்கம் பிறக்கின்றது.
இந்தியத் தத்துவங்கள் இயற்கை, மனிதர், சூழல் பற்றியும் இவற்றிடையே உள்ள உறவு பற்றியும் என்ன கூறுகின்றன?
இன்றைய சூழல் பாதுகாப்பு இயக்கத்திற்கு எந்தத் தத்துவம் அல்லது தத்துவங்கள் ஒரு கருத்துநிலை அடிப்படையாக இருக்க முடியும்?
என்ற கேள்விகளுக்கு விடை காணுதலே இந்தத் தொடரின் நோக்கம் ஆகும்.
தத்துவம் என்றால் என்ன?
நான் எழுப்பியுள்ள கேள்விகள் உங்களுக்கும் முக்கியமானவையாகப்படும் என்று நம்புகிறேன். இந்தக் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் பெற முயற்சி செய்வேன் என்றால், எல்லா அடிப்படைகள் மீதும் கேள்விகளை எழுப்பி விடைபெற முயல்வதிலிருந்து தொடங்குவேன். அதில் முதல் அடிப்படைக் கேள்வி தத்துவம் என்றால் என்ன?
‘தத்துவம் என்றால் ஒரு உலகக் கண்ணோட்டம்’ என்ற பதில் உடனே வந்துவிழும். சரி உலகக் கண்ணோட்டம் என்றால் என்ன? இப்போது கொஞ்சம் யோசிப்போம். எல்லா விசயங்கள் பற்றிய அபிப்ராயம் என்று சொல்வதா? பார்வை என்று சொல்லுவதா? உண்மையில் நாம் தடுமாறலாம். சிலர் உறுதியான பதில்களை உடனே தந்துவிடலாம். எப்படியாயினும் இது அவ்வளவு எளிமைப்பட்டது இல்லை.
நான் தத்துவம் என்பதற்குப் பழைய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். திறவோர் காட்சி என்ற சொல்தொடர் புறநானூறு பாடலில் வந்துள்ளது. பிறகு மெய்யுணர்வு, மெய்ப்பொருள், மெய்யறிவு, வாதம், சமயம், மதம் இப்படியான சொற்களே இன்று நாம் தத்துவம் என்று அழைக்கும் வகைப்பாடுகளுக்கு பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் சுட்டின. பூதவாத மதம், உலோகாயத மதம் என்பன போன்ற தொடர்கள் பழந்தமிழில் மிகச் சாதாரணம். அந்தக் காலத்தில் மதம் என்ற சொல், இன்று போல ரிலிசன் என்ற பொருளில் வழங்கவில்லை; கொள்கை என்ற பொருளில் வழங்கியது. அந்தக் காலத்தில் தத்துவம் என்னும் சொல்லே வகைமை அல்லது வகைப்பாடு என்ற பொருளில் வழங்கியது. உயிர் தத்துவம் என்னும் போது உயிர் என்னும் வகைமையைச் சுட்டியது. சாங்கியத்தில் பிரகிருதி, மான், புத்தி, அகங்காரம் முதலான இருப்பத்தி நான்கு தத்துவங்கள் உள்ளன.
தத்துவத்திற்கு நான் எடுத்துக்காட்டிய சொற்கள் அனைத்தும் தத்துவம் என்பதற்கு ஒவ்வொரு பொருளைத் தருகின்றன. காட்சி என்னும்போது புலக் காட்சியே தத்துவம் என்னும் பொருளைத் தருகிறது. மெய்யுணர்வு என்னும்போது உண்மை உணர்வு என்ற பொருளைத் தருகிறது. இதே போலவே மற்றவையும்.
தத்துவம் என்பது நாம் இப்போது ‘பிலசோபி’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ‘அதன் தன்மை’ என்பது இச்சொல்லின் பொருள். அது எது என்னும் கேள்விக்கு ஒவ்வொரு தத்துவச் சிந்தனையும் ஒரு பொருளைச் சுட்டும். அது பிரமம் என்னும் அத்வைதம், அது பிரகிருதி என்னும் சாங்கியம். பிரமம் இன்ன தென்று சொல்லவோ அறியவோ முடியாத குணமற்றது. ஆனால் பிரகிருதி சத்து(சமநிலை), ரஜஸ்(கிளர்வுநிலை), தமஸ்(ஓய்வுநிலை) ஆகிய முக்குணங்களாகவே இருக்கின்றது.
ஏன் தத்துவம் என்ற சொல்லை இப்படிப் போட்டுக் குழப்புகிறேன் என்று நினைக்கின்றீர்களா? தத்துவம் என்ற சொலுக்குப் பல பொருள் இருக்கின்றது. அதுபோலவே தத்துவம் என்னும் அறிவுப் புலமும் பல வகையில் விளக்கப்படுகிறது. காலந்தோறும் தத்துவம் என்பதின் அர்த்தமும் மாறிக்கொண்டே இருக்கிறது.
பண்டைக் கால தத்துவவாதிகள் பெரும்பாலும் தம் தத்துவத்தை விளக்குவதோடு நின்றுவிட்டனர். அந்தத் தத்துவத்தைக் கொண்டு தன் கால சமூக முறை, அரச நீதி பற்றியெல்லாம் எழுதினார்களா? பெருமளவு ஒன்றுமே எழுதவில்லை என்று சொல்லி விடலாம். நவீன கால தத்துவவாதிகள் யாரும் இப்படி இருப்பதில்லை. இவர்கள் தங்கள் தத்துவம் பற்றி குறைவாக எழுதுகிறார்கள்; சமூகம், மதம், வரலாறு, இப்படி பல துறைகள் சார்ந்து ஆய்வுகள் செய்து கட்டுரைகளையே அதிகம் எழுதுகின்றனர்.
உதாரணத்திற்கு சங்கரரையும் மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சங்கரர் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதியதின் வழியாக உலகத் தோற்றம் உள்ளீடற்றது, அதை அறிவதாகத் தோன்றும் நம் புலனுணர்வுகள் பொய்யானவை என்ற கருத்தை விளக்கினார். அவர் பிரமம் அல்லது உலக மாயத் தோற்றம் பற்றி எந்தத் தத்துவ நூலும் சொந்தமாக எழுதவில்லை. சொந்தமாக பக்திப் பாடல்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. மெய்யான உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது என்னும் தத்துவ மான இயங்கியல் பொருள்முதல்வாதம் அல்லது பொருள்முதல்வாத இயங்கியல் பற்றி மார்க்ஸ் ஒரு தனிநூல்கூட எழுதவில்லை. மூலதனம் பற்றியே ஆராய்ந்து பெரிய நூல் எழுதினார். அவர் ஏன் தன் தத்துவத்தை/ முறையியலை விளக்கி ஒரு நூல்கூட எழுதவில்லை. அவர் எழுதிய ஜெர்மன் கருத்துநிலை என்ற நூல்கூட, அவர் இறந்த பின்னேதான் வந்தது.
“தத்துவாதிகள் உலகைப் பல்வேறு வழிகளில் விளக்குகிறார்கள்; ஆனால் உலகை எவ்வாறு மாற்றுவது என்பதுதான் இப்போதைய பிரச்சனை” என்ற வசனம் பாயர்பாக் பற்றிய மார்க்சின் ஆய்வுக் குறிப்புகளில் பதினோராவது குறிப்பு. இதில் மார்க்ஸ் உலகை விளக்குவதைக் கைவிட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஏனென்றால் மார்க்ஸ் ஓயாது பல விசயங்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துகொண்டே இருந்தார். அந்த விளக்கங்கள் அனைத்தும் அவர் காலத்து சமூக மாற்றச் செயல்களோடு இணைந்தன; சமூக மாற்ற செயல்களிலிருந்து அவருடைய பல விளக்கங்கள் பிறந்தன.
ஆக தத்துவம் ஒரு உலகக் கண்ணோட்டம்; விளக்கம்; அபிப்ராயம் மட்டுமல்ல. அது செயல் பாடும்கூட. அது எப்போதும் பொத்தாம் பொதுவானதாக, எல்லாக் காலத்துக்குமானதாக இருக்க முடியாது. குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட விளக்கங்கள் எவ்வாறு பிறந்தன என்பதும், அந்த விளக்கங்கள் சூழல் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தின என்பதும் இவ்வாறான இடையுறவுகள் பற்றியதுமான வரலாறே தத்துவம். ஆகவேதான் தத்துவப் படிப்பு என்பது தத்துவ வரலாற்றைப் படிப்பது ஆகும். இப்போதைக்கு இந்த விளக்கத்துடன் நிறைவுகொள்வோம். இதுவே இந்தத் தொடரை வாசிப்பதற்குப் போதுமானது.
இந்தியத் தத்துவங்கள்
இப்போது அடுத்த இடத்திற்கு நகர்வோம். இந்தியத் தத்துவங்கள் என்றால் எவை? துணைக் கண்டம் முழுவதும் புழங்கிய தத்துவச் சிந்தனை மரபுகள் அனைத்தும் சேர்ந்தவையே இந்தியத் தத்துவங்கள். இந்தியத் தத்துவம் என்ற ஒன்று இல்லை; ஆனால் பல தத்துவங்கள் சேர்ந்த இந்தியத் தத்துவங்கள் என்ற தொகுதி உண்டு.
பொதுவாக, இந்தியத் தத்துவம் என்ற ஒருமை பிரயோகம் புழக்கத்தில் உள்ளது. இது பெரும்பாலும் வடமொழி நூல்களை மட்டுமே கொண்டு கட்டி எழுப்பப்படும் கருத்தாக்கம். இது முழு உண்மை இல்லை.
இந்தியத் தத்துவங்கள் என்பது நாம் மிக அண்மையில் கொடுத்துக் கொண்ட பெயர் அவ்வளவுதான். இந்தியப் பெருநிலப் பரப்பிற்குள் புழங்கிய தத்துவங்களுக்குள் எவ்வளவு ஒத்த தன்மை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தனித் தன்மையும் இருக்கிறது. இவை தமக்குள் ஒத்தும் முரண்பட்டும் வளர்ந்து வந்துள்ளன.
இந்தியத் தத்துவ இலக்கியங்கள் உள்ள முக்கியமான மொழி சமஸ்கிருதம். ஆனால் சமஸ்கிருதத்தில் மட்டுமே எல்லா நூல்களும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் மூலாதாரமான தத்துவ நூல்கள் உண்டு. தமிழ் மொழியில் இத்தகைய செல்வங்கள் ஏராளமாக உள்ளன. இந்தியத் தத்துவ மரபுகளுக்குத் தமிழ் நிலம் பல பங்களிப்புகளைச் செய்துள்ளது. பௌத்தத் தருக்கம், நியாயத் தருக்கம் ஆகியவற்றுக்குத் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. பௌத்தத் தத்துவம், சமணத் தத்துவம், அத்வைதம், வைணவ சித்தாந்தம், சைவ சித்தாந்தம் முதலானவை குறித்து தமிழில் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. இவையெல்லாற்றையும் தாண்டி, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளில் தமிழ் நிலத்துக்கே உரிய திணை நோக்கு தமிழ்ப்புலமை மரபாகத் தோன்றி வளர்ந்து உள்ளது. இத்தகைய சிந்தனை மரபுகளில் இயற்கை, மனிதர், சூழல் பற்றிய சிந்திப்புகளையே இத்தொடரில் எடுத்துக்காட்ட முயல்வேன்.
ஆதாரங்களும் ஆராயும் முறையும்
இந்தத் தொடரில் நான் பெரும்பாலும் தமிழ் நிலத்துடன், மொழியுடன் உறழ்ந்து விவாதம் நடத்திய சில தத்துவங்கள் பற்றியே விவரிப்பேன். தமிழ் மொழியில் உள்ள மணிமேகலை, நீலகேசி-சமயதிவகாரர் உரை, சிவஞானபோதம் பேருரை போன்ற நூல்களை முதன்மைச் சான்றுகளாகப் பயன்படுத்துகிறேன். இந்தியத் தத்துவம் பற்றிய ஹிரியண்ணா, தேவிபிரசாத் சட்டோ பாத்தியாயா போன்றோரின் நூல்களை இரண்டாம்நிலை ஆதாரங்களாகப் பயன்படுத்துகிறேன்.
அளவை அல்லது தருக்கம் என்னும் ஆய்வு முறையை நமது மரபிலிருந்து பெற்றுக் கொள்கிறேன். இம்முறையைப் பற்றிய ஓர் அருமையான விளக்கம் மணிமேகலையில் உள்ளது. தருக்கத்தில் பல வகைகள், கருத்துநிலைச் சார்புகள் உண்டு. பிறர் கூறவரும் கருத்தைத் தன் கருத்துநிலைச் சார்பினாலும் மொழிப் பிரயோக நிலைகளாலும் தவறாக விளங்கிக் கொள்வதைத் தவிர்க்க முனைகிற சௌத்திராந் திரகர்களின் தருக்க முறையைக் கைக்கொள்கிறேன். இம்முறையை விரிவாக விரிப்பது சோர்வைத் தரும். பிரயோகநிலையில் வாசகர்களால் இம்முறையை விளங்கிக் கொள்ள முடியும். இத்தருக்க முறை இயங்கியல் ஆய்வு முறைக்கு மிக நெருக்கமானது என்பதை மட்டும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
இந்தியத் தத்துவார்த்த வகையினங்களின் ஆன்மீக மூடுதிரைகளை விலக்கி, அவை எந்த எதார்த்த நிலைமைகளை பேச முனைகின்றன என்பது பற்றி விளங்கிக் கொள்ள பூதவாத நோக்குகளையே என் தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்கிறேன்.
இந்தத் தொடரில், அடுத்தடுத்த பகுதிகளில் ஒவ்வொரு தத்துவத்தைப் பற்றிய அறிமுகத்தோடு தொடங்கி, அதன் சொல்லாடலில் இயற்கை, மனிதர், சூழல் ஆகியவை இடம்பெறும் விதம், இவற்றிடையேயான உறவு பற்றியு அத்தத்துவத்தின் நோக்கு பற்றியும் எடுத்துக்காட்டுவேன்.
இறுதியாக ஒரு சொல். இந்தியத் தத்துவங்கள் அனைத்தையும் விவாதிப்பது அந்தத் துறையில் பெயர் போன அறிஞர்களாலேயே முழுமையாக நிறைவு செய்ய முடியாத காரியம். ஆகையால் நான் முன் சொன்ன நோக்கத்திற்காக, என்னால் இயன்ற அளவு விவாதிப்பேன். இந்தத் தொடர் இந்தியப் பெருநிலத்தில் புழங்கிய, புழங்குகிற தத்துவ மரபுகள் குறித்து இத்தொடரை வாசிப்போருக்கு ஆர்வம் ஏற்படுமாயின், அதுவே என் நோக்கம் நிறைவேறியதற்கு சான்று ஆகும்.
இத்தகைய அறிமுக முன்னுரையோடு இப்போது நின்று விடுவோம். அடுத்த இதழில் கட்டமைப்புடைய தத்துவங்கள் தோன்றாத பொழுது தமிழ் நிலத்தில் புழங்கிய சிந்தனையில், அதாவது தமிழின் ஆதி இலக்கியங்களில், தமிழின் ஆதி நினைவுகளில் உள்ள சிந்தனைகளைப் பார்ப்பதிலிருந்து நம் தத்துவ ஆராய்ச்சியைத் தொடங்குவோம்.

ஜூன் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *