இயல்பு

இயல்பு ஏன்?

இயல்பு

இயற்கை வரலாறு, அதன் தொடர்ச்சியான சமூக வரலாறு ஆகியவற்றுக்கு இடையிலான இயைபு-முரண்-இயைபு என்ற சூழல்போக்கே மனித சமூகத்தின் உயிர்ப்பிழைப்புச் சாரம் ஆகும். இயற்கையிலிருந்து தம்மை வேறுபடுத்திக் கொண்டு நின்று, இயற்கையை உணர்வுநிலையோடு மனித உயிர் தன்வயமாக்கத் தொடங்கியது. மனித உயிரின் இயற்கைத் தன்வயமாக்கல் என்பது தம் உயிர் வாழ்த் தேவைக்காகவும் சமூக வாழ்த் தேவைக்காகவும் இயற்கையிலிருந்து தேவையானவற்றை பெற்றுக் கொள்ளல் ஆகும்.
உயிரின் விலங்கு நிலையிலிருந்து மனித நிலையை வேறுபடுத்திக் காட்டும் பண்பு உழைப்பு – அதாவது உணர்வுநிலையோடு இயற்கையைத் தன்வயமாக்கும் செயல் – ஆகும். அவ்வகையில் மனித உயிர்க்கு எல்லா வகையிலும் இயற்கையே தாய், ஆதாரத்தளம். இயற்கையின் ஊற்றுப் பொருளே மனித உயிர். அவர்கள் இயற்கையின் ஓர் அங்கம். அவ்வகையில் இயற்கையைத் தன் வயமாக்கலின் உள்ளுறும் பிரிநிலை மனித உயிர் இயற்கைவயமாதல் ஆகும். இதன் பொருள், இயற்கையுடனான முரண்போக்கைக் கைவிடல் ஆகும்.
அதே வேளையில், இயற்கையைத் தன்வயமாக் கலின் மற்றொரு பக்கம், மனிதர் தம்மையே தன்வயமாக்கிக்கொள்ளல் ஆகும். அதாவது உயிர்ப்பிழைப்புக்காக மனிதர் கூட்டாக-சமூகமாக இணைக்கிறபோது அவர்களிடையே தோன்றும் இயைபு-முரண்-இயைபு என்னும் சூழல் போக்கிலான உறவை உணர்நிலையோடு கட்டுக்குள் கொண்டுவருதல் ஆகும். வர்க்கச் சமூகம் முழுவதிலும் இயற்கையுடன் பகை பாராட்டும் போக்கு நிலவுகிறது; அத்துடன் மனிதருக்குள்ளும் பல்வேறு பகைப் போக்குகள் நிலவுகின்றன. இவ்விரு பகைப் போக்குகளும் உள்ளுற இணைந்தவை.
நாம் வாழும் காலத்தில் மனிதன் மனிதனை அழிக்கும் போக்கு முற்றியுள்ளது; பேரரசுகளும் அவர்களின் அடிவருடிகளும் பெரும் பெரும் படு கொலைகளை நிகழ்த்துகின்றனர்; மனித அவலம் சொல்ல முடியாததாக, சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது. இதன் மற்றொரு புறம் இயற்கையின் பேரழிவு ஆகும். இதையும் இன்றைய உலகப் பேரரசுகளும் அதன் உள்ளூர் அடிவருடிகளும் செய்கின்றனர். இவ்விரு செயல்பாடுகளையும் அவர்கள் பிரித்தறிவதே இல்லை. மனித அழிப்பும் இயற்கை அழிப்பும், மனித அவலமும் இயற்கை அவலமும் பிரித்தறிய இயலாதவை.
மனித அவலத்தின் முக்கியமான, மையமான கூறு மனித இயல்பை இழத்தல் ஆகும். சக மனிதன் மீதும், தம் சூழல் மீதும் அக்கறை கொள்ளுதல் மனித இயல்பு. ஏனென்றால் அதன் மூலமே உயிர் பிழைத்திருக்க முடியும். அவ்வியல்பை இழந்து நிற்றல் மனித குலத்தின் கையறுநிலையைக் காட்டுகிறது. மனித சமூகம் மனித இயல்பைப் பெறுதலும், இயற்கை இயல்பை அழிப்பதைத் தடுத்து நிறுத்தலும் காத்தலும், ஒவ்வொரு மனிதக் குழுவும் தம் இயல்பைக் காத்தலும் மீட்டமைத்தலும் நம் யுகத்தின் போக்கு ஆகும். அதையே தேசிய விடுதலைக்கும், ஜனநாயகத்துக்குமான சுழன்றடித்த / சுழன்றடிக்கும் போராட்டங்கள் காட்டுகின்றன; காட்டி வருகின்றன. இயக்கங்கள் எழுச்சி-வீழ்ச்சி-எழுச்சி என்ற போக்கினூடாக மறுவார்ப்பு செய்து வருகின்றன.
இயக்கங்களுக்குள்ளும் வெளியேயும் விடுதலை யின் இயல்பு, சுதந்திரத்தின் இயல்பு, உண்மையான ஜனநாயக, சமத்துவ, சகோதரத்துவத்தின் இயல்பு பற்றி விவாதங்கள் நடை பெறுகின்றன; இனியும் அவை தொடர்ந்து நடைபெறும். அவ் விவாதங்களும் விவாதங்களில் முகிழ்க்கும் கருத்துகளும், அக்கருத்துகளின் அடிப்படையில் எழும் இயக்கங்களும், அதாவது விவாதங்கள் – இயக்கங்கள்- விவாதங்கள் – இயக்கங்கள் என தொடர் ஓட்டம் ஓயாது. இந்த ஓட்டமே நாம் மனித இயல்பை – மானிட சுதந்திரத்தைப் பெறுவதற்கு அடிப்படை ஆகும். இந்த ஓட்டத்தில் இங்கு தேசியவாதத்தின் பல்வகைப் போக்கினர், சமூகச் சீர்திருத்தத்தின் பல்வகைப்போக்கினர், மார்க்சியத்தின் பல்வகைப் போக்கினர் இடம் பெறுகின்றனர்.
இந்தியப் பெருநிலப்பரப்பிலும் தமிழகத்திலும் இந்த ஓட்டம் நீண்டகாலமாகத் தொடர்கிறது. இவ்வோட்டத்தில், தொன்னூறுகளில் தோன்றிய/ பங்குபெற்ற ஒரு போக்கினரே பூவுலகின் நண்பர்கள் அல்லது இயற்கை மீதான அக்கறையாளர்கள்; இதற்கு சற்றுமுன்பே பல்வேறு வெளிகளில் இயற்கை அழிப்புக்கு எதிராகவும், ஐம்பதுகளில் தொடங்கி இந்திய நவீன உயர்குடிகளால் முன்னெடுக்கப்பட்ட ‘வறுமை ஒழிப்பு’, ‘வளர்ச்சி’த் திட்டமிடல்களுக்கு எதிராகவும் எழுந்த போராட்டங்கள், இயக்கங்கள் ஆகியவற்றின் ஒருகூறை – இயற்கை மீதான அக்கறை என்னும் கூறை பூவுலகின் நண்பர்களும் இன்னும்பிற இயற்கை மீதானஅக்கறையாளர்களும் வளர்த்தெடுக்க முயன்றனர். இவர்கள் முன்சொன்ன பல்வேறு போக்கினருடன் உறவும் முரணும் கொண்டு தன் பணிகளை முன்னெடுத்தனர். இதன் மூலமாக வளர்ச்சி, அறிவியல் என்னும் கருத்துச் சட்டகங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்தனர். இது குறித்த காலனிய, முதலாளிய அல்லது நவீன மூடு திரைகளைக் களைவதற்கு முயன்றனர். இந்தப் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பணியை ‘இயல்பு’ முன்னெடுக்க விழைகிறது. ‘இயல்பு’ மார்க்சிய-லெனினிய-மாஓவியக் கருத்துநிலை சார்ந்த இயற்கை அழிப்பு எதிர்ப்பு, மனிதகுல விடுதலை, சமத்துவம் ஆகிய வற்றின் மீது அக்கறைகொண்ட குழு ஆகும். ஆயினும் எம் கருத்துநிலையுடன் வேறுபட்ட அனைவருடனும், முக்கியமாக சமூக மாற்றத்திற்கு விழையும் அனைத்து கருத்துநிலையாளர்களுடனும் உரையாடவும் நல்லுறவைப் பேணவும் இணக்கத்தைக் காணவும் விழைகிறோம்.
‘இயல்பு’ அல்லது ‘சுபாவம்’ அல்லது இந்தியப் பெருநிலப் பரப்பில் விளைந்த பொருள் முதல்வாத மெய்யியல்களின் அடிப்படை; உள்ளோட்டம். இயல்புநெறி அல்லது சுபாவவாதம் முந்து அறிவியல்களின் தாயாக விளங்கியது. இயல்பே அவர்கள் முன்எழுந்த பல கேள்விகளுக்கு விடையாக முன்வைத்தனர். அதன் இயல்பு எனக்கூறி, வாளாதிருத்தல் அல்ல; ஒவ்வொரு இயல்பை அதன் இயல்போடு விளங்கிக்கொள்ளல், தன்னியல்பை விளங்கிக்கொள்வதின் பகுதியாக நோக்கினர். துன்பங்கள், துயரங்கள் இயல்பு பிறழ் நிலையாகவே கண்டனர். ஆகவே இயல்பை மீட்டமைத்தலே நோக்கம் ஆயிற்று. நாமும் இந்த இயல்பு பிறழ்நிலையை கேள்விக்குள்ளாக்கி, இயல்பு நோக்கி தெளிதலைக் கடமையாகக் கொள்வதால் ‘இயல்பு’ எனப் பெயர் கொண்டோம்.
‘இயல்பு’ மார்க்சிய-லெனினிய-மாஓவியக் கருத்துநிலையை எமது சொந்த பண்பாட்டில் மலர்ந்த பொருள்முதல்வாதப் போக்குகளில் ஊன்றி நின்று, தழுவிக்கொள்கிறது. அதன் மூலமே மா-லெ-மா-வை எமது மண்ணில் பொருளுடையதாக ஆக்க இயலும். நாம் முகம் கொடுக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு தேடவும் இயலும்.
இயற்கை, அறிவியல், வளர்ச்சி, சமூக மாற்றம் பற்றி எழும் எமது சொந்த சிக்கல்களை விவாதிக்கவும், காலனிய முதலாளிய கருத்துச்சட்டகங்களைக் களையவும், எமக்குத் தேவையான கருத்துச் சட்டகங்களை உருவாக்கிக்கொள்ளவும் ‘இயல்பு’ விழைகிறது. இதில் அக்கறையுள்ள அனைவரையும் பங்களிக்குமாறு அழைக்கிறோம்.

—————————————————————————————

ஆசிரியர்: அருண் நெடுஞ்செழியன், ஆசிரியர் குழு:
தமிழ் காமராசன், லிங்கராஜா வெங்கடேஷ், பிரவீன் ராஜ், முகவரி: ரெட் புக்ஸ், எண்: 6, எழுபது அடிச்சாலை, சுப்புப் பிள்ளைத் தோட்டம், தி.நகர், சென்னை-600017 9941183263, 9842391963, மின்னஞ்சல்:editor.iyalbu@gmail.com, fb:///இயல்பு அட்டை ஓவியம்-வடிவமைப்பு: கார்த்திக் மேக்கா

ஜூன் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *