இருட்டொளி

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ் பிற

கல்யாணராமன்

1

அப்போது நான் ஒரு தி.ஜானகிராமன் பைத்தியம். அப்போதென்ன அப்போது? இப்போதும்தான். பின் அந்த அப்போது எதற்கு? இங்கே அது சுமார் 30 வருடங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்படுகிறது. என் பதினேழாம் வயதில் நான் மோகமுள்ளைப் படித்தேன். (அதற்குமுன், என் பதினைந்தாம் வயதில், பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்த கோடை விடுமுறையில், மரப்பசுவையும் வாசித்திருந்தேன்.). மோகமுள்ளில் எம்.வி.வெங்கட்ராமைப் பற்றி, “வெங்கடராமன், நீங்கள் இலட்சத்தில் ஒருவர்_” எனப் பாபு தழுதழுப்பான். அந்த வரி மனத்தில் அப்படியே நிற்கிறது. அப்போதுதான், ‘எம்.வி.வி. வெங்கட்ராம்’ என்ற எழுத்தாளரின் பெயர் எனக்குத் தெரியவந்தது. அதற்குப்பின் நான்கு வருடங்கள் கழித்துச் சுபமங்களா பத்திரிகையில் எம்.வி.வி. பேட்டி வந்திருந்தது. நான் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். (கோமல் அறிமுகப்படுத்திய ‘புதிய பேனாக்கள்’ பகுதியில், என் முதல் சிறுகதையான ‘மனோநிலைகள்’ வெளிவந்தது.). சுபமங்களா பேட்டியில் எம்.வி.வி., “மோகத்தைக் கொன்றுவிடு – அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு” என்ற பாரதியின் அடிகளிலிருந்துதான் மோகமுள்ளுக்குத் தலைப்பிடப்பட்டது என்ற பொதுபுத்தி புரிதலுக்கு மாறாக (2012இல் காலச்சுவடு கொண்டுவந்த மோகமுள் பதிப்பின் முன்னுரையில், கவிஞர் சுகுமாரனும், பாரதியின் தாக்கத்தையே மோகமுள்ளின் தலைப்புக்குக் காரணமாகக் குறித்துள்ளார்!), அத்தலைப்பு, கவிஞர் சாலிவாகனனின் “சொல்லிலே விளைந்த இன்பம், எங்குனக்கு உதித்தது, சோர்ந்த நெஞ்சு, மோகமுள்ளில், சொக்குதே அது என்ன?” என்ற கவிதையிலிருந்தே எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்டிருந்தார். முனைவர் பட்டத்திற்குத் தி ஜானகிராமனின் நாவல்களை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டிருந்த எனக்கு, அது பெரியதோர் ஆய்வாதாரமாகப் பயன்பட்டது. இது பற்றியே, எம்.வி.வி. என்றாலே, எனக்கு ஒரு தனி இஷ்டம் உண்டாயிற்று. அவருக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டபோது, ‘காதுகள்’ நாவலை விரும்பிப் படித்தேன். யார் மாதிரியுமில்லாத ஒரு தனிமாதிரி எழுத்து இது என்பது, புரிந்தும் புரியாமலும் புலப்பட்டது.
(எம்.வி.வி. குறிப்பிட்ட அந்தக் கவிதையை, அதன் முழுவடிவத்தில், சென்ற வருடம் எழும்பூர் அரசு ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ‘கலாமோகினி’ இதழிலிருந்து கண்டெடுத்தபோது, மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.)

உயிரின் யாத்திரை

மோகமுள்ளுக்குப் பிறகு எம்.வி.வி. பற்றித் தி.ஜா. வேறு ஏதாவது எழுதியுள்ளாரா என்று தேடியபோது, க.நா.சு. நடத்திய ‘இலக்கிய வட்டம்’ இதழில், ‘மூன்று ஆசிரியர்கள்’ என்ற தலைப்பில், ‘பராங்குசம், கிருத்திகா, எம்.வி.வி.’ ஆகிய மூவர் பற்றியும் தி.ஜா. எழுதியிருந்தது என் கண்ணுக்கு பட்டது. அதன்வழி, ‘நித்யகன்னி’க்குத் தி.ஜா. எழுதிய முன்னுரையையும் படிக்க நேர்ந்தது. அதில், “இலக்கியக் கர்த்தாக்களுக்கு மாடம் கட்டிப் போற்றும் விமர்சனக் கொத்தனார்களுக்கு இவருடைய நினைவு வராதது வியப்பான செய்தி” என்றும், “நித்யகன்னியைப் பல தடவை படித்தால்தான் நல்லது. அன்றாடம் நாம் காண்கிற காதற்கதையோ, கற்புக்கதையோ, கற்பு கெட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூலம் சித்திரிக்கிறது” என்றும் தி.ஜா. குறிப்பிட்டிருந்தார். இருபத்திரண்டாம் வயதில், நித்யகன்னியைப் படித்ததாக ஞாபகம். “வசீகரமாக இருக்கிறாள் – வசீகரிக்கிறாள் எனில், அது பெண்ணின் குற்றமா?” எனக் காலவன் கேட்கும் பகுதி, இப்போதும் பசுமையாய் நினைவிலிருக்கிறது. அந்தக் கற்பனைப் பிரபஞ்சத்திலேயே பல நாள்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். அதற்கப்புறம் வேள்வித்தீயைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ‘நமக்குச் சரியாகப் புரியாத ஏதோ ஒன்று, இந்த ஆளிடம் இருக்கிறது’ என்ற அந்த முதல் எண்ணத்திற்கு, இன்றுவரை பழுதில்லை. இவையெல்லாம் சுமார் இருபத்தைந்தாண்டு முன்பு நிகழ்ந்தவை.

1998இல் என் ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டபின், (அதன்பின், ஒரு பன்னிரண்டாண்டுக் காலம், இந்தப் பக்கமே நான் தலையெடுத்தும் பார்க்கவில்லை.), அதைப் படித்தவர்களிடமிருந்து, பிரதானமாக ஒரு கேள்வி என் மீது வீசப்பட்டது. ‘முதல் தொகுப்பிற்கு, யாராவது இப்படி எதிர்மறையாகத் தலைப்பிடுவார்களா?’ என்றார்கள். பெரும்பாலும், என் கெழுதகை நண்பர்களே, இப்படிக் கேட்டவர்கள். அப்போது திருத்தணி அரசு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான், வாரக் கடைசியான சனி ஞாயிறுகளில், என் அண்ணனின் ஆழ்வார்பேட்டை வீட்டிலிருப்பேன். பக்கத்தில்தான் ‘புதிய பார்வை’ பத்திரிகை அலுவலகமிருந்தது. அங்கு என் பள்ளித்தோழன் சுந்தரபுத்தன், ‘தமிழரசி’ பத்திரிகாசிரியனாக இருந்தான். அவன் மூலம் பாவை சந்திரன், விட்டல்ராவ், எஸ்.ஷங்கரநாராயணன், மனோ.கதிர்வேலன், ரவிசுப்பிரமணியன், சு.வேணுகோபால் எனப் பலரும் எனக்கு அறிமுகமானார்கள். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் ஓரிரு முறையே நான் பார்த்திருந்த ராமசுப்பிரமணியனோடும் (இப்போது டைரக்டர் ராம்) அங்குதான் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்கேற்பட்டது. இவர்களில் சிலர், என் எதிர்மறைத் தலைப்புக் குறித்து என்னைக் கடிந்துகொண்டார்கள். அதிலும் ரொம்பக் குடைச்சல் கொடுத்தவர் ரவிசுப்பிரமணியன்தான்.

ஆழ்வார்பேட்டைக்கு வீணை கற்றுக்கொள்வதற்காக ரவி வரும்போதெல்லாம், தவறாமல் டிசில்வா ரோட்டிலிருந்த என் அண்ணன் வீட்டில் என்னைச் சந்திப்பார். என்னைச் சுஜாதா கூப்பிட்டதாகக் கூறி, ஒருமுறை சுஜாதா வீட்டிற்கும் அழைத்துப் போனார். நாங்கள் போனபோது சுஜாதா வீட்டில் இல்லை. அவர் மனைவியுடன் மட்டும் பேசிவிட்டுத் திரும்பிவிட்டோம். எதற்காக இத்தனை சொல்கிறேன் என்றால், என் மீது அத்தனை அன்புடையவர் ரவி என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான். அவருக்கு என் தொகுப்பின் தலைப்பில் உவப்பில்லை. அவர் மனம் கோணாமல் அதற்கு மறுப்புச் சொல்லவேண்டும் என்பதற்காகச் சாமர்த்தியமாக நான் ஒரு பதிலை அவருக்குச் சொன்னேன். ரவி – எம்.வி.வி.யின் அத்யந்த சிஷ்யன். அடிக்கடி அவர், ஏழு அற்புதமான நாவல்களை எம்.வி.வி. எழுதியிருப்பதாக, அவற்றின் பெயர்ப் பட்டியலை என் காது கேட்க ஒலித்துக்கொண்டேயிருப்பார். தி.ஜா.வுக்குத் தாலிகட்டிக்கொண்டவன் நான் என்பதால், அவற்றை உடனே படிக்கும் ஆர்வம் எதுவும் என்னிடம் பீறிடவில்லை. அதில் ரவிக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், எம்.வி.வி. எழுதிய ‘இருட்டு’வழி, ரவியை மடக்க, எனக்கு ஒரு பிடி கிடைத்தது. “உங்களவரைப் பார்த்து, ‘இருட்டு’ என, எதிர்மறையாக ஏன் தலைப்பிட்டீர்கள் என, என்றேனும் நீங்கள் கேட்டதுண்டா? என்னை மட்டும் கேட்கிறீர்களே! இது நியாயமா?” என, இருட்டைப் படிக்காமலேயே, ரவியுடன் மல்லுக்கு நின்றதை நினைத்து, இப்போதும் சிரித்துக்கொள்கிறேன். அறியாப்பிள்ளையின் சமத்காரம் அது. இவ்வளவுதான், ஒரு வாசகனாக, எம்.வி.வி.யை நான் அறிந்திருந்த முன்கதை. அதன்பின், இருபத்தைந்தாண்டுகள் எப்படிப் போயினவென்றே தெரியாமல் பறந்துபோய்விட்டன. எம்.வி.வி.யையும் நான் மறந்துவிட்டிருந்தேன். மீண்டும் சென்ற வருடம் ரவிதான் ஞாபகப்படுத்தினார். கடந்த ஜனவரியில் என்னைத் தொலைபேசியில் அழைத்தவர், எம்.வி.வி.யின் ஒட்டுமொத்தச் சிறுகதைகளையும் தொகுக்கும் தம் பெரும் முயற்சிக்குத் தோள்தரும்படி கேட்டுக்கொண்டார்.

தி.ஜா.வுக்குத் தாலிகட்டிக்கொண்டவன் நான் என்பதால், அவற்றை உடனே படிக்கும் ஆர்வம் எதுவும் என்னிடம் பீறிடவில்லை. அதில் ரவிக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், எம்.வி.வி. எழுதிய ‘இருட்டு’வழி, ரவியை மடக்க, எனக்கு ஒரு பிடி கிடைத்தது.

நானும் என் மாணவன் தனசேகரும் ரவியுடன் இணைந்துகொண்டோம். அவர் செலவில் (உண்மையாகவே நானும் தனசேகரும் ஒரு காசுகூடச் செலவழிக்கவில்லை!),புதுக்கோட்டை ஞானாலயா நூலகம், கும்பகோணம் எம்.வி.வி. வீடு, தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் எனப் பல இடங்களுக்கும் சேர்ந்து பயணித்துத் தங்கிப் பல எம்.வி.வி. சிறுகதைகளை மீட்டெடுத்தோம். முப்பதுக்கும் மேற்பட்ட புதிய கதைகளைத் தேடிப்பிடித்திருக்கிறோம்! அது 1200க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஒரு பெருந்தொகுப்பாகக் ‘காலச்சுவடு’ பதிப்பகம்வழி விரைவில் வெளிவரவுள்ளது. இச்சூழலில்தான், நண்பர் கவிஞர் ராணி திலக்கும், அடவி பத்திரிகாசிரியர் திரு. தில்லை முரளியும் எம்.வி.வி. நூற்றாண்டு விழா பற்றி நினைவூட்டிக் கட்டுரை தரும்படி கேட்டனர். கரிச்சான் குஞ்சு – 2019; எம்.வி.வி.-2020; தி.ஜானகிராமன்- 2021; நகுலன் – 2022; கு.அழகிரிசாமி – 2023 என்று வரிசையாகப் பெருங்கலைஞர்களின் நூற்றாண்டு விழாக்கள் அணிவகுத்துள்ளன. (எம்.வி.வி.க்கு மட்டுமா? ப.சிங்காரத்திற்கும் இதுதான் நூற்றாண்டு!) இப்பெருங்கலைஞர்களைத் திரும்பத் திரும்பப் படிப்பதன்றி, இம்மனிதவாழ்வுக்குப் பொருள் வேறேதுமில்லை எனத் திடமாக நம்புகிறவன் நான். அதனால்தான், எம்.வி.வி.யின் ‘இருட்டு’ப் பற்றிக் கட்டாயம் எழுதித் தருகிறேன் என்றேன்.

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன், ரவியுடன் தொடங்கிய அந்தச் சம்வாதம், இப்படி இந்தக் கட்டுரை மூலம் மேலும் தொடரும் என நான்தான் எதிர்பார்த்தேனா? இல்லை, ரவிதான் எதிர்பார்த்தாரா? எம்.வி.வி. நம்பிய அந்த இயற்கையிகந்த கூறுகளே (Super natural elements), முருகன் அருளால் அவருக்குச் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்ததைப்போல, இப்போது இக்கட்டுரையை நான் எழுதவும் என்னைத் தூண்டிவிட்டுள்ளன போலும்! இதை நான் நம்பாவிட்டாலும், என் நண்பர் கவிஞர் ஸ்ரீநேசன் உறுதியாக நம்புவார். அது என்னவோ? சாதாரண மனிதர்களாகிய நமக்கு, என்ன தெரிகிறது? அல்லது என்னதான் புரிகிறது? சரி வாருங்கள். உங்களை, இதற்கு மேலும் குழப்ப, நான் விரும்பவில்லை. இக்கட்டுரையின் இரண்டாம் பகுதிக்குள், ‘இருட்டு’க்குள் நுழைவோம்.

2

சென்னையிலிருந்து கும்பகோணத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் டாக்ஸியில், ஓர் இறந்த பெண்ணின் சடலத்தோடு, அவள் கணவனும் ஒரு டாக்டரும் கதைசொல்லியும் டிரைவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள். டிரைவரோடு முன்னால் அமர்ந்திருக்கிறான் கணவன். டாக்டரும் கதைசொல்லியும் பின்னால் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் காலடியில், அந்தப் பெண்ணின் சடலம் கிடக்கிறது. அப்பயணத்தின்போது, “குளிர் நெருப்புப்போல் சுட்டது” என்று எம்.வி.வி. எழுதுகிறார். இப்படி ஒரு தொடக்கம், எத்தனை தமிழ்க் கதைகளில் இருக்கிறது? என்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், எவ்வளவு பரீட்சார்த்தமாக எழுதக்கூடியவர் எம்.வி.வி. என்ற கதைக் கண்ணி, உங்களுக்குச் சிறிதேனும் புலப்பட்டுவிடக்கூடும். அந்த டாக்ஸி தென்னிந்தியாவுக்கே முதன்முதலாக வந்ததாயிருக்க வேண்டும் என்றும், ஷட்டர்கள்கூட அதற்குக் கிடையாது என்றும், கதவுகள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டுத் திறந்துகொள்ளாதிருந்தன என்றும், பயணிப்பவர்களின் புண்ணியவசத்தால் அது ஓடிக்கொண்டிருந்தது என்றும் எம்.வி.வி. நக்கலடிக்கிறார். “சஞ்சல புத்தியுள்ள எந்த இளைஞனும், காலடியில் அவள் கிடக்கிற நிர்ப்பந்தத்தைக் காரணமாகக் கொண்டே, காலால் அவளைத் தீண்டி இன்பம் பெறலாமே என்று நினைக்கத் தூண்டும்படியான அழகி அவள். எனக்குச் சஞ்சல புத்தி இல்லை என்பதுடன், தீண்டுவதற்கும் ரஸிப்பதற்கும் முடியாத ஓர் அழகாக அவள் ஆகிவிட்டாள். அவளுக்கு உயிர் இல்லை. ஆம். என் காலடியில் கிடந்தது ஒரு பெண்ணின் பிரேதம்” என்கிற இந்தச் சித்திரிப்பெல்லாம், இன்றுகூடத் தமிழ்ச் சிறுகதைக்கு எவ்வளவு புதியது! இந்த வியப்போடுதான், எம்.வி.வி.யைப் படிக்க வேண்டியுள்ளது.

காதுகள்

‘இருட்டு’ என்ற இந்தக் கதை, 1956ஆம் ஆண்டில், ஏப்ரல் 22 ; ஏப்ரல் 29; மே 6; மே 13 ஆகிய நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து சுதேசமித்திரனில் வெளிவந்துள்ளது. இதைத் தம்மிடம் தாம் எழுதிய நாவல்களில் ஒன்றாகவே எம்.வி.வி. எப்போதும் குறிப்பிடுவார் எனத் தொலைபேசியில் ரவி என்னிடம் தெரிவித்தார். இதைக் குறுநாவலாகத் தாம் கருதுவதாகவும் ரவி கூறினார். ஆனால், எனக்கென்னவோ, இதை ஒரு சிறுகதையாகவே பார்க்கத் தோன்றுகிறது. வேண்டுமானால் கொஞ்சம் நெடிய சிறுகதை எனத் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ போல இதையும் சொல்லிக்கொள்ளலாம்.

பின்னிருக்கையில் டாக்டர் அம்பலவாணருடன் அமர்ந்திருக்கும் கதைசொல்லி, இப்படி நினைத்துக்கொள்கிறார். ‘வீட்டில் பெண்டாட்டி பிள்ளைகளுடன் இருப்பதைப் போன்ற சகஜ பாவத்துடன், இந்த டாக்டர், எப்படித்தான் பிணத்தை வைத்துக்கொண்டு இப்படியிருக்கிறாரோ?’ எனக் கதைசொல்லி வியக்கிறார். “பிரயாணம் எவ்வளவு சுகமாக இருக்கிறது? குளிரோடு இப்போது இருட்டும் கூடிவிட்டது. நிம்மதியாகத் தூங்கலாம்” என்கிறார் டாக்டர். “காலடியில் இதை வைத்துக்கொண்டு, எப்படித் தூங்குவது?” எனக் கேட்கிறார் கதைசொல்லி. “அவள் இறந்ததற்காக வருத்தப்படவேண்டும். இரக்கப்படவேண்டும். காலடியில் கிடப்பதால் கொஞ்சமாவது பயப்படவேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் அருவருப்பாவது அடையவேண்டும். இவ்வளவு அழகான மனைவியை அடைந்து, பறிகொடுத்தவரிடம் உங்களுக்கு அனுதாபம்கூட இல்லையா? உங்களுக்கு அலட்சியமாக இருக்கும் இந்தப் பிரேதம், கூத்தரசுக்கு என்ன வேதனை உண்டாக்குகிறதோ?” எனக் கதைசொல்லி, டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கணவனைச் சுட்டிக்காட்டிக் கலங்குகிறார். “இந்த யாத்திரைக்குக் குளிரும் இருட்டும் போதும். அழுகையை வேறு சேர்த்துக்கொள்ள வேண்டுமா?” என்கிறார் டாக்டர். பாடவும் தொடங்கிவிடுகிறார். “சவத்துடன் பிரயாணம் செய்யும் நமக்கு மனத்தெம்பு குறையாமலிருப்பதற்கும் தெய்வ ஞாபகம் – பிரார்த்தனை – அவசியம்” என்கிறார் டாக்டர். இக்கதையின் அடிப்படைக் கருத்தை, இவ்வாசகம் மூலம் அவர் தொட்டுக் காட்டுவதாக, இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

என்ஜினில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, இடைவழியில் கார் நின்றுவிடுகிறது. கார் திரும்பவும் கிளம்ப, “இரண்டு மணி நேரமாவது ஆகும்” என்கிறான் டிரைவர். இவர்கள் மூவரும் கீழிறங்கிவிடுகிறார்கள். “டாக்டர், இந்த இருட்டு எனக்குப் பிடிக்கவில்லை” என்கிறார் கதைசொல்லி. “எனக்கும்தான் பிடிக்கவில்லை. ஆனால், இருட்டு இருக்கிறதே!” என்கிறார் டாக்டர். கவனியுங்கள். நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ‘இருட்டு இருக்கிறது’. இந்த இருட்டுதான் இங்குக் கதை. வெறும் புற இருட்டு இல்லை; உள்ளத்துக்குள்ளே ஏறிக்கொண்டு மனிதர்களைக் கதறடிக்கும் இயற்கையிகந்த ஆற்றல்களின் அக இருட்பிடுங்கல்களே கதையின் ஜீவநாடியாய்த் துடிக்கின்றன. கார் கிளம்பும்வரையில் பொழுதுபோகக் கதைசொல்லி ராமுவுக்குக் கூத்தரசின் கதையை அந்நடுநிசியில் அவனையே சொல்லச் செய்கிறார் டாக்டர். டாக்டருக்குத் துணையாகச் சென்னைக்கு வந்தவர் கதைசொல்லி ராமு. கொட்டுகிற ரத்தத்தையும், குமட்டுகிற வாந்தியையும், பிரிகிற உயிரையும், புதிதாக வருகிற உயிரையும் எவ்விதப் பேதமுமில்லாமல் நிதானம் இழவாத புன்சிரிப்புடன் கையாளும் டாக்டர் – பிறக்கிறவர்களோடு பிறந்து, அல்லல்படுவோருடன் அல்லல்பட்டு, சிரிக்கிறவர்களோடு சிரித்து, சாவோருடன் சாகின்ற டாக்டர் – கதைசொல்லி ராமுவுக்கு ஒரு வியப்புப்பொருள். அவரை வியந்து பின்தொடர்ந்தமையால்தான், இந்த இக்கட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார் ராமு. ‘இதிலிருந்து தப்பித்து, எப்போது கும்பகோணம் போவோம்? நாளைய விடியலை உயிருடன் பார்ப்போமா?’ என்ற மனப்பதற்றத்துடனேயே, கூத்தரசு கூறும் அவனின் சொந்த வாழ்க்கைக் கதையைக் கேட்கத் தொடங்குகிறார் ராமு.

கதைசொல்லி, டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கணவனைச் சுட்டிக்காட்டிக் கலங்குகிறார். “இந்த யாத்திரைக்குக் குளிரும் இருட்டும் போதும். அழுகையை வேறு சேர்த்துக்கொள்ள வேண்டுமா?” என்கிறார் டாக்டர்.

கூத்தரசு ஒரு பகுத்தறிவுவாதி. அவன் காதலித்து மணந்துகொண்ட வெண்ணிலாவும் ஒரு பகுத்தறிவுவாதி. இருவரும் சேர்ந்து ‘மெய்ப்பொருள் கண்டோர் கழகம்’ தொடங்கித் தமிழ்நாடு முழுதும் சுற்றிப் பரப்புரைக் கூட்டங்கள் பேசி அதை ஒரு பேரமைப்பாக வளர்க்கத் திட்டமிடுகிறார்கள். ‘கடவுள் என்னும் புரட்டை இல்லை என்று ஆக்குவதுதான்’, ‘மெய்ப்பொருள் கண்டோர்’ கழகத்தின் கொள்கை. அதன் தலைவராகக் கூத்தரசும், செயலாளராக அவன் மனைவி வெண்ணிலாவும் தீவிரமாகக் களப்பணியாற்றுகிறார்கள். அதேவேளையில், இல்வாழ்வில் திகட்டத் திகட்டப் போகத்தையும் பிசாசுகளைப்போல் நுகர்கிறார்கள். இருட்டும் சுடுகாடுமே வெண்ணிலாவுக்கு அதிகமாகப் பிடிக்கின்றன. பௌர்ணமியை அவள் வருகிறாள்; அம்மாவாசைதான் அவளுக்குச் சாந்தமளிக்கிறது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் நள்ளிரவில், திடீரெனக் கண்விழிக்கும் கூத்தரசுக்குப் படுக்கை அறையில் பிணவாடை அடிக்கிறது. அருகிலிருக்கும் வெண்ணிலாவைப் பார்க்கிறான். கை, கால், தலை ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து ஒரு கோர உருவமாக அவள் கிடக்கிறாள்‌. இதைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாய்க் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடுகிறான் கூத்தரசு. வெண்ணிலா படுத்திருக்கும் அறைக்கதவையும் சாத்தி வெளியே தாழிட்டுவிடுகிறான். அவனுக்கு முன்பே நன்கு தெரிந்த டாக்டர் அம்பலவாணரிடம் ஓடிவருகிறான். கூத்தரசின் விநோதமான அனுபவங்களைக் கேட்கும் டாக்டர், அந்த இருட்டிலிருந்து அவன் விடுபட வேண்டுமானால், ‘ராம நாமம்’ ஜெபிக்க வேண்டும் என்கிறார். முதலில் கடவுள் பக்தரான அம்பலவாணர், தம் கொள்கை வேறுபாடு காரணமாகவே, இப்படித் தன்னைத் திசைமாற்றுவதாகக் கூத்தரசு நினைக்கிறான். ஆனால், அவனின் மனச்சேட்டைகள், அவனை விடாது துரத்தவே, வேறு வழியின்றி டாக்டர் சொல்வதுபோல் ‘ராம நாமம் ஜெபிக்கத் தொடங்குகிறான். அதன்வழி நாளடைவில் அவன் மனக்கனம் குறைகிறது. இதேபோல் வெண்ணிலாவையும் டாக்டர் கோயில்களுக்குப் போகச் சொல்கிறார். அதைக் கேட்க மறுக்கும் வெண்ணிலா, கூத்தரசுடன் சண்டையிட்டுவிட்டுப் பிறந்த வீட்டுக்குப் போய்விடுகிறாள். டாக்டரிடம் முறையிடுகிறான் கூத்தரசு. ‘அவள் உன்னைத் தேடிக்கொண்டு கட்டாயம் வருவாள்; அவள் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் தீயசக்திகள் அவளை விடா; அவற்றுக்கு நீ வேண்டும் என்பதால் அவளை உன்னிடம் அவை திருப்பியனுப்பாமலிரா’ என்கிறார் டாக்டர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது.

வெண்ணிலாவுக்கு டாக்டர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கிறார். அதில் எதுவும் தெரிவதில்லை. ஆகவே, தீய சக்திகளின் பிடியால்தான், அவள் இப்படிச் சுடுகாட்டையும் இருட்டையும் தியானிப்பதாய்க் கண்டுபிடிக்கிறார் டாக்டர். நாத்திகனாயிருந்த கூத்தரசு, இப்போது முழு ஆத்திகனாக மாறிவிடுகிறான். எனினும், வெண்ணிலாவின் மனத்தைக் கரைக்க டாக்டராலும் முடியவில்லை. அவள் டாக்டரைப் பகைவனாய்ப் பார்க்கிறாள். கையோடு சிகிச்சைக்காக டாக்டர் கொண்டுவரும் ராமர் படத்தைப் பார்த்து அவள் நடுநடுங்குகிறாள். கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விடுகிறாள். அங்கே ஒரு டாக்டர், அவளைச் சோதித்துவிட்டு, அவளுக்குப் ப்ரைனில் ட்யூமர் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுச் சென்னைக்கு போய்ப் பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் ராவிடம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் பரிந்துரைக்கிறார். உலகப்புகழ்பெற்ற டாக்டர் ராவ், வெண்ணிலாவின் மூளையை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது, அங்கு டியூமர் கட்டி இருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவர் அறுவை சிகிச்சை செய்துவிடுகிறார். அதன் விளைவாக, உண்மையில் ட்யூமர் இல்லாததால், சிகிச்சை பலனளிக்காமல் வெண்ணிலா இறந்துபோகிறாள்.

வெண்ணிலாவுக்கு டாக்டர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கிறார். அதில் எதுவும் தெரிவதில்லை. ஆகவே, தீய சக்திகளின் பிடியால்தான், அவள் இப்படிச் சுடுகாட்டையும் இருட்டையும் தியானிப்பதாய்க் கண்டுபிடிக்கிறார் டாக்டர்.

டாக்டர் அம்பலவாணர், தன்னிடமுள்ள எக்ஸ்ரே படத்தை டாக்டர் ராவிடம் காட்டி வெண்ணிலாவுக்கு ட்யூமர் இல்லை என்று வாதிடுகிறார். ஆனால், ராவ் எடுத்த எக்ஸ்ரே படத்தில், அது இருக்கிறது! இது எப்படி நேர்ந்தது என்று ராவுக்குப் புரிவதில்லை. டாக்டர் அம்பலவாணருக்கு, அது தீய சக்திகளின் வேலை என்பது புரிகிறது. கூத்தரசும் அம்பலவாணர் கூறும் உண்மையைப் புரிந்துகொள்கிறான். இறுதியில் டாக்டரும் கூத்தரசும் எவ்வளவோ பாடுபட்டும் வெண்ணிலாவைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இதுதான் கதை.

இக்கதை மூலம் என்ன சொல்ல வருகிறார் எம்.வி.வி.? நம் புலன்களுக்குப் புலப்படாத எத்தனையோ நல்ல ஆற்றல்களும், தீய ஆற்றல்களும் பிரபஞ்ச வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. பகுத்தறிவு என்ற பெயரில், இவற்றையெல்லாம் பார்க்காது அலட்சியப்படுத்துவதால், நமக்குத்தான் கேடு சூழும் என்கிறார். திராவிட இயக்கம் அதன் உச்சத்திலிருந்த 1950 – 1970களில் இக்கதை எழுதப்பட்டிருப்பதைத் தற்செயலாகக் கருதுவதற்கில்லை. பேய், பிசாசு, கெட்ட ஆவிகள் பற்றிய நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையைவிட, மனித அறிவு எல்லைக்குட்பட்டது, அதற்குப் புலப்படாத எத்தனையோ மன விகாரங்கள் இன்னும் நவீன உளவியல் மருத்துவத்தாலும் தீர்க்கப்படாது நீடித்திருக்கின்றன என்பதை வலியுறுத்துவதே, இங்கு எம்.வி.வி.க்கு
நோக்கமாகலாம்.

இதை டாக்டர் அம்பலவாணர் மூலம் எம்.வி.வி. வெளிப்படுத்துகிறார். இதற்குச் சாட்சியாகக் கதைசொல்லி ராமுவைப் பயன்படுத்திக்கொள்கிறார். இது உண்மையான மன அனுபவம் என்பதைக் காட்டும் பாத்திரமாகக் கூத்தரசைப் பேச வைக்கிறார். ‘உயிரின் யாத்திரை, காதுகள்’ ஆகிய எம்.வி.வி.யின் பிற படைப்புகளிலும், இத்தகைய பார்வையையே, அவர் புலப்படுத்தி நிற்கிறார். வழிவழியாகச் சாஸ்திர நம்பிக்கைகளினூடாகப் பயணப்பட்டுவந்த பாரம்பரியக் குடும்ப மரபிலிருந்து கொண்டு, தம் காலத்தில் பொங்கிவரும் பகுத்தறிவு முழக்கங்களையும், நவீன விஞ்ஞான முன்னேற்றங்களையும் கண்டு பதறும் ஒரு மனத்தின் குரல் இது என்று தர்க்கபூர்வமாக விமர்சிக்க, நாம் துடிக்கலாம். அதற்குத் தர்க்கம் மட்டுமே வாழ்வுக்குப் போதாது என்பதுதான், எம்.வி.வி.யின் பதிலாயிருக்கும் என்று நினைக்கிறேன். ‘எதையும் அழிப்பது எளிது; உருவாக்குவது கடினம்’ என்ற புரிதலிலிருந்து, கெட்டதை அழித்து நல்லதை வாழவைக்கும் ஆற்றல்களைப் பற்றித் தொடர்ந்து எம்.வி.வி. எழுதிக்கொண்டேயிருந்தார். பகுத்தறிவுவாதிகளால் இகழப்படுவது பற்றிய கவலை அவருக்கில்லை; இடையறாத மனப்போரிலிருந்து உரிய ஆற்றல்கள்வழி மீட்சியுறுவதே அவர் கனவும் நனவுமாயிருந்தது.

கடவுளைக் கயவர்களின் கற்பனையாகவும், பொய்யர்களின் புரட்டாகவும் அடுக்குச்சொற்களால் தெய்வ நிந்தனை செய்துகொண்டிருந்த கூத்தரசு, கதையின் இறுதியில், மருத்துவர் ராவாலும் காப்பாற்ற முடியாமல் வெண்ணிலா இறந்தபின், “தெய்வ சித்தப்படி நடப்பதை நாம் எப்படித் தடுக்க முடியும்? என்று, அந்த மகா சக்தியின் முன் குனிந்துவிட்டேன்” எனக் கையாலாகாதவனாய்த் தெய்வச் சித்தத்திடம் சரணடைகிறான் என்கிறார் எம்.வி.வி. “கடவுள் என்கிற இந்தக் கொடிய பொய்யை, இன்றைய சமூக அமைப்பிலிருந்து நீக்கிவிட்டால், சமூகம் ஓர் ஒழுங்கான அமைப்புப் பெறும் என்று நம்பிய கூத்தரசு, கடைசியில் கடவுளை ஏற்பதாகக் கூறிக் கதையை முடிக்கிறார். இதைத் திராவிட இயக்கத்திற்கு எதிரான ஒரு பிரதி எனக் காண முடியும். “நாத்திகத்தின் அடிப்படையில் கட்சி கட்டிப் பிறகு ‘ஒரே ஒரு தேவன் இருக்கிறான், அவனுக்கு உருவமில்லை’ என்று மடைமாறுகிறவர்களயும் பார்த்துவிட்டேன்” என்கிறான் கூத்தரசு. இது பேரறிஞர் அண்ணாவைக் குறிவைப்பது வெளிப்படையாகும்.

ஆனால், இப்பிரதி பகுத்தறிவு இயக்கத்திற்கு எதிரானது என்ற விமர்சனத்தை நாம் முன்வைப்பதற்கு முன், இக்கதையில் எங்கும் வெண்ணிலா உருமாறுவதாகக் காட்டப்படுவதில்லை என்பதையும் உளங்கொள்ளவேண்டும். அவள் பேசுவதைக் கேளுங்கள். “தெய்வம் என்னும் பொய் முன் தலைவணங்குகிறோம். என்ன அறியாமை இது! அந்தப் பொய்யைப் பெரிதுபடுத்தும் மதம் நம்மைப் பெருநோயாகப் பிடித்து வதைத்து வருகிறது. அந்த நோயை வளர்க்கும் கிருமிகள்தான் புராண இதிகாசங்கள். இந்தக் கிருமிகளைச் சுட்டுப் பொசுக்கி, அந்த நோயை அகற்றினாலொழிய இந்நாடு முன்னேற முடியாது. சமூகத்தின் எந்தப் பிரச்சினையும் தீராது. இன்று இந்த நாட்டிற்கு வேண்டியது அகாரம் அல்ல, உகாரம் அல்ல, மகாரம் அல்ல – ஆகாரம்தான். இன்று, இந்த நாட்டுக்கு வேண்டியது ஓங்காரம் அல்ல; ‘மனிதனால் முடியாதது ஏதும் இல்லை’ என்கிற ஆங்காரம்தான். இந்த ஆங்காரத்தை வளர்ப்போம்” என்னும் வெண்ணிலாவைத் திராவிட இயக்க வார்ப்பாகவே எம்.வி.வி. புனைந்துள்ளார். இதன் தொனியில், அவரிடம் கூரிய கேலியே செயல்பட்டாலும்கூட, அவரையும் மீறி, அவரது எதிர்த்தரப்பையும் அவர் களத்தில் நிறுத்தவே செய்கிறார். “இருட்டில்தான் மனிதன் சந்தோஷமாக இருக்கமுடியும்; வெளிச்சத்தில் வந்ததும் கவலைகள் தலைதூக்கிவிடுகின்றன; இல்லையா?” எனக் கேட்கிறாள் வெண்ணிலா.

இந்த இருட்டு,எதைக் குறிக்கிறது? சமூக அநீதிகள் என்றுகூட, இதை நாம் அர்த்தம் செய்துகொள்ளமுடியும்தானே!வெண்ணிலாவின் மாற்றுத்தரப்பான டாக்டர் மட்டும் சளைத்தவரா என்ன? “இது மிகப் பழைய வியாதி. இதை இதுவரை யாரும் சரியாக ‘டயகனைஸ் ‘ செய்யவில்லை…… இந்த வியாதி உள்ளுக்குள் இருப்பது புரியாமல், இதற்குப் பலியாகிறவர்கள்தான் அதிகம்” என்கிறார் டாக்டர். இங்கே பகுத்தறிவையே வியாதியாக டாக்டர் காட்டுகிறாரோ! வெண்ணிலாவும் டாக்டரும் இரண்டு எல்லைகள் என்றால், பகுத்தறிவிலிருந்து ஆன்மீகத்துக்கு மாறிய கூத்தரசு என்ன சொல்கிறான்? “அறிஞன் என்றும், அறிந்தவன் என்றும் போற்றப்படும் எந்த அறிவும் ஒரு வரம்பு கடந்தால் அறியாமை ஆகிவிடுகிறது என்பதை நன்றாய் உணர்ந்துகொண்டேன். உணர்ந்தாலும், அகந்தையுள்ள என் அறிவு, தன் தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்ள மறுத்தது” என்கிறான் கூத்தரசு. வெண்ணிலாவையும் கூத்தர்சையும் பிடித்துள்ள வியாதிக்குப் பெயர் ‘இருட்டு’ என்கிறார் டாக்டர்.

லெனினையும் வம்புக்கு இழுக்கிறார். “மூளை இல்லாமல் சிந்தனை சாத்தியம் என்று சில தத்துவவாதிகள் நம்புகிறார்கள் என்று லெனின் கிண்டலும் கேலியும் செய்கிறான்….. மூளை இல்லாமல் நினைக்க முடியும் என்று மட்டும் நான் நினைக்கவில்லை. கண்ணில்லாமல் பார்க்க முடியும், காது இல்லாமல் கேட்க முடியும், மூக்கு இல்லாமல் நுகர முடியும் என்றெல்லாம்கூட நான் நம்புகிறேன். நம்புவது என்ன? நன்றாக அறிந்திருக்கிறேன்……. உன் இச்சை இல்லாமல் – உன் மூளையும், உன் மனமும் – சிந்திக்கும், செயலாற்றும் – இதைத்தான் ‘மூளையில்லாமல் நினைக்கிற நிலை’ என்கிறேன்” என்கிறார் டாக்டர். இவற்றைக் கூத்தரசு எவ்வாறு எதிர்கொள்கிறான்? “அவர் கூறிய விளக்கம் உண்மையா, பொய்யா என்பது இருக்கட்டும். இருட்டு செய்யும் கோரம் நீடித்தால், என் உயிருக்கு அபாயம் விளையும் என்பது பற்றி, எனக்குச் சந்தேகம் இல்லை. இன்பம் எதிர்பார்த்துத்தான் படுக்கையறையை நாடுகிறோம்; இன்பம் அளிக்க வேண்டியவள் தலையற்ற முண்டமாய்க் காட்சியளிக்கும் கோரத்தை, எவனால் தாங்கமுடியும்?” எனக் கூத்தரசு டாக்டரிடம் சரணடைகிறான். “பேடியின் சரித்திரம் என்று தூற்றி நான் தீக்கிரையாக்கின நூலின் நாயகனான ராமரை – மெய்ப்பொருளாக வழிபட, நான் அந்த அறைக்கு வந்திருக்கிறேன்” எனத் தனியறையில் புகுந்து ராம ஜெபம் செய்பவனாகப் பகுத்தறிவாளன் கூத்தரசைத் திசைதிருப்புகிறார் எம்.வி.வி.

நவீன இலக்கியத்தில் இதுவரை ஒலிக்காத ஒரு புதிய சநாதனக் குரல் என்றும் இதைப் பார்க்கலாம். எம்.வி.வி.யின் பகுத்தறிவு ஒவ்வாமையைத் தாண்டி, இக்குரலின் அடிப்படை எது? என்ற வினாவை எழுப்பிக்கொள்கிறேன். இதற்குப் பதிலாக, இக்கதையின் இறுதியில், கூத்தரசு யோசிப்பதாக வரும் பின்வரும் சொற்களைக் காட்டலாம். “தோற்றம், வளர்ச்சி, மறைவு என்கிற அடிப்படையில் பல கோடி உயிருள்ளவைகளையும் உயிரில்லாதவைகளையும் படைத்து, வினை-விளைவு என்னும் சட்டகத்தால் அவைகளை ஆட்டிவைக்கும் மகா சக்தியின் முன்னிலையில், நாம் அனைவரும் சிறு துகள்கள். ‘அறிந்துவிட்டேன்’ என்று மனிதன் அகந்தை கொள்வதற்கு ஏதும் இல்லை. அவன் அறிய வேண்டியதுதான் அதிகம் என்கிற உண்மையை, அவளுடைய மறைவு எனக்கு உணர்த்திவிட்டது. அவளுடைய ஆன்ம சாந்திக்காக, என் தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்……” என்கிறான் கூத்தரசு. இக்கருத்தியலைக் காழ்ப்பாகவோ, பகைமையாகவோ எம்.வி.வி. முன்வைப்பதில்லை. தாம் சொல்வதை அவ்வளவு ஆழமாக நம்புகிறார் அவர். இக்கருத்துகளுடன், தனிப்பட்ட முறையில் என்னால் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும், அவற்றைச் சொல்வதில் எம்.வி.வி. காட்டும் நேர்மையையும் துணிவையும் நான் வரவேற்கிறேன். திடீரென நம் கண்களுக்கு எல்லோருமே பகுத்தறிவுவாதிகளாகப் புலப்படும் ஒரு சமூகத்தில், ‘இல்லையில்லை – நான் பகுத்தறிவுவாதி இல்லை’ என்ற குரல் எவ்வளவு முக்கியமானது? அல்லது முக்கியமானதில்லை? இதுதான் எம்.வி.வி.யின் ‘இருட்டு’வழி மேற்கிளம்பிவரும் வினாவாகும். ஆகவேதான், என் கட்டுரைக்கு, இருட்டு என்றோ, ஒளி என்றோ தலைப்பிடாமல், ‘இருட்டொளி’ எனத் தலைப்பிட்டுள்ளேன். ‘இருட்டும்தான் ஒளியும்தான் உலகம்’ என்கிறார் எம்.வி.வி. எனக் கருதுகிறேன்.

1 thought on “இருட்டொளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *