இறுகிய ஒற்றைக் குரலுக்கெதிராக தனித்த குரல்களின் பயணம்

சிறுபத்திரிகை

பயணி

ஃபாரென்ஹீட் 451 நாவலை முன்வைத்து…

ரே பிராட்பரியைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பட்டாலும், தமிழில் அவரைப் பற்றி முறையான அறிமுகம் வந்ததாகத் தெரியவில்லை. ‘வலசை’ சிற்றிதழில் “ஃபாரென்ஹீட் 451” நாவலைப் பற்றி வந்த கட்டுரையே ரே பிராட்பரி குறித்தும் அவரது நாவல்கள் குறித்தும் தேடிப் பார்க்கத் தூண்டியது. இந்நாவலை 1966ல் ட்ரூஃபோ திரைப்படமாக எடுத்து அதற்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறார். திரைப்படத்தைப் பற்றிச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கத்தைத் திசைதிருப்பும் என்பதால், அதைத் தகவலாக மட்டுமே பதிய நினைக்கிறேன். பலரும் கூறுவதுபோல், ரே பிராட்பரியை விஞ்ஞான புனைகதையாளன் என்னும் ஒற்றைப் பார்வையோடு அணுக வேண்டியதில்லை. அவரின் நாவல்கள், அதன் அரசியலுக்காகவும், படைப்பின் கச்சிதத்தன்மைக்காகவும் உலகெங்கும் பெரிதும் கொண்டாடப்படுகின்றன. விஞ்ஞான புனைகதையாளன் என்னும் முத்திரை அவரின் வீச்சை மட்டுப்படுத்தும் ஒரு காரணியாகவே பார்க்கிறேன். ஒரு கலைஞன்/படைப்பாளி அவன் கொண்டுள்ள அரசியல்நிலை காரணமாக மறக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் சமூகத்தின் நோய்த்தன்மையையே காட்டுகிறது.
தமிழ் நாவல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆயிரம், இரண்டாயிரம் பக்கங்களென ரிலீஸ் செய்து பீதிக்குள்ளாக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ரே பிராட்பரியின் “ஃபாரென்ஹீட் 451” நாவல் 187 பக்கங்களில் கச்சிதத்தன்மையுடன் வெளிவந்திருப்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகவே தோன்றுகிறது. இதைச் சீரிய மொழியில் மொழிபெயர்த்திருக்கும் வெ. ஸ்ரீராம் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். 1953ல் வெளிவந்த இந்த நாவலை 61 ஆண்டுகள் கழித்துத் தமிழுக்கு அறிமுகம் செய்து மொழிபெயர்த்தும் தந்திருக்கிறார் அவர்.
“ஃபாரென்ஹீட் 451” நாவல் போன்று ரே பிராட்பரியின் மற்றொரு பெயர்பெற்ற நாவல் “Martian Chronicles” (செவ்வாய் பரம்பரைக் கதைகள்) ஆகும். பின்னுரையில் இ. அண்ணாமலை கூறியுள்ளதுபோல், “ஃபாரென்ஹீட் 451” நாவல் dystopian Literature (எச்சரிக்கை இலக்கியம்) வகைமையைச் சார்ந்ததாகும். மேலும், 1951ல் ரே பிராட்பரியால் எழுதப்பட்ட “Fireman” (தீயணைப்பாளன்) என்னும் சிறுகதையின் அடுத்தகட்ட விரிவாக்கமே இந்நாவல். இந்நாவலின் தலைப்பு புத்தகத்தை எரிக்கும் வெப்பம் என்பதோடு பொருத்திப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
நாவலின் கரு இதுதான். கை மோன்டாக் ஒரு தீயணைப்பாளன். புத்தகங்களையும் புத்தகங்கள் உள்ள வீடுகளையும் எரிப்பதே அவன் பணி. இப்படியொரு சூழலில், அவன் சந்திக்கும் க்ளாரிசும் புத்தகங்களுக்காக தன்னையே எரித்துக்கொள்ளும் பெண்மணியும் அவன் வாழ்வையே புரட்டிப் போடுகிறார்கள். இதன் காரணமாக, தான் யார், தன் பணி என்ன, தன்னைச் சூழ்ந்துள்ள உலகம் என்ன, தன்னைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அரசதிகாரத்தின் நோக்கம் என்ன, என்னும் தொடர் கேள்விகளால் உந்தப்படும் மோன்டாகின் பயணங்களும் தேடல்களுமே இந்நாவலை விரித்துச் செல்கிறது. ஆனால், இப்படியொரு நாவலில் பிரச்சார தொனி கிஞ்சித்தும் தலைதூக்காமல், அமெரிக்காவின் சமூகத்தையும் அதன் மனவியலையும் நாவலின் தன்மைக்கேற்ப சமரசமற்ற தன்மையில் ரே பிராட்பரி படைத்துத் தந்துள்ளார்.
இது எதிர்காலத்தில் நிகழும் நாவலென்பதாக சொல்லப்பட்டாலும், நாவலில் நிகழும் சம்பவங்கள் சமகாலக் குரல்களோடு இணைந்தே செல்கின்றன. மேலும், நாவல் பின்வருமாறு தொடங்க, அந்தக் குரலே நம்மை நாவலுக்குள் அழைத்துச் செல்கிறது. “தீ வைத்து எரிப்பது மகிழ்ச்சியாக இருந்தது” என்பதே அது. இதில் இரு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று எரிப்பது, மற்றொன்று மகிழ்ச்சி. எரிப்பது என்பது புத்தகங்களை எரிக்கும் வெப்பம் என்னும் நேர்ப்பொருளில் கொள்ளப்பட்டாலும், படைப்பாளிகள் உருவாக்கும் புத்தகங்களின் வெப்பம் சமூகத்தை எரிக்கும் தன்மை கொண்டது என்னும் எதிர்ப்பொருளிலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அடுத்து மகிழ்ச்சி. மகிழ்ச்சி என்னும் சொல் குறித்து மதங்கள் அவற்றுக்கான பீடங்களில் அமர்ந்துகொண்டு, காட்சி ஊடகங்கள் தொடங்கி வெவ்வேறு ஊடகங்களில் விளக்கம் தந்துகொண்டிருக்கும் வேளையில், மகிழ்ச்சி என்னும் நிலை குறித்தும், அது உருவாக்கித் தரும் பயணங்கள் குறித்தும், அதை இழந்து நிற்கும் சமூகம் குறித்தும், அதைப் போலி செய்து வாழ்ந்து தீர்க்கும் சமூகக் கட்டமைப்புகள் குறித்தும் மிக ஆழமாகச் சொல்லிச் செல்கிறது இந்நாவல்.
நாவல் எதிர்காலத்தில் நிகழ்வதாக சொல்லப்பட்டாலும், காலத்தை அறிவுறுத்தும் கடமையை ரே பிராட்பரி வலிந்து திணிக்கவில்லை. நாவலின் ஓரிடத்தில் மட்டுமே அது சுட்டிக்காட்டப்படுகிறது. “2022க்குப் பிறகு, இரண்டு அணு ஆயுதப் போர்களைத் தொடங்கி வெற்றி கண்டுவிட்டோம்”. மோன்டாக் தன் மனைவி மில்ட்ரெட்டிடம் கொள்ளும் உரையாடலாக இது சொல்லப்படுகிறது. மற்றபடி நாவலின் காலத்தில், ரே பிராட்பரி தன் சாமர்த்தியத்தையெல்லாம் காட்டாமல் அதைத் தன் போக்கிலேயே உலவ விடுகிறார். ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, இது எச்சரிக்கை இலக்கியமாக இருந்தாலும், நாவலாசிரியர் பல்வேறு விஷயங்களினூடே நாவலில் இரு விஷயங்களை முதன்மைப்படுத்துகிறார். ஒன்று, பெருகிவரும் தொழில்நுட்பத்தால் (முக்கியமாக காட்சி ஊடகம்) மழுங்கடிக்கப்படும் சிந்தனை.
அடுத்து அணுஆயுதப் போர். நாவலின் பின்னணியில் அணு ஆயுதப் போர் நிகழ்ந்துகொண்டிருப்பதாகக் காட்டியிருப்பது பெரும் எச்சரிக்கையே. சிந்தனைகளை நசுக்கும் அரசையும் சிந்தனைகளைப் புறந்தள்ளும் சமூகத்தையும் அருகருகே நிற்கவைத்து எச்சரிக்கை செய்கிறார் ரே பிராட்பரி. இதில் குடும்பக் கட்டமைப்பின் வன்முறையையும் கேள்விக்குட்படுத்துகிறார்.
நாவலில் க்ளாரிஸின் வருகையும் அவள் உருவாக்கும் மனநிலையும் மிகவும் முக்கியமானது. “எனக்கு வயது பதினேழு, நான் கொஞ்சம் கிறுக்கு. இந்த இரண்டும் சேர்ந்தேதான் இருக்கும் என்று என் மாமா சொல்வார். உன்னுடைய வயதை மற்றவர்கள் கேட்கும்போது ‘பதினேழு’ ‘கிறுக்கு’ இரண்டையும் சேர்த்தே சொல் என்று அவர் சொன்னார். இரவில் நடப்பதற்கு உகந்த நேரம் அல்லவா இது? சுற்றிலும் இருப்பதை முகர்ந்து, கூர்ந்து கவனித்து, சிலவேளை இரவு முழுவதும் விழித்திருந்து, நடந்து, சூரியன் உதிப்பதைப் பார்க்க எனக்குப் பிடிக்கும்”. இரவில் தனியாக நடந்து, முகர்ந்து அதை ஆராதிக்கும் பதினேழு வயது சிறுமியை, சமூகம் ‘கிறுக்கு’ என்றே வர்ணித்து மகிழ்கிறது. இந்த முரண்நகை நாவலெங்கும் ஒலிக்கிறது.
மோன்டாக்தான் நாவலை வழிநடத்தும் கதாபாத்திரம் என்றாலும், க்ளாரிஸ், மோன்டாகின் மனைவி மில்ட்ரெட், கேப்டன் பியாட்டி, ஃபேபர் ஆகியோரை கச்சிதத்தன்மையுடன் நாவலுக்குள் உலவ விட்டிருக்கிறார் ரே பிராட்பரி. இறுகிய ஒற்றைக் குரலுக்கெதிராக தனித்த பல குரல்கள் நாவலெங்கும் ஒலிக்கின்றன. சமூகத்தின் கட்டமைப்புகளால் காணாமல் போன சில குரல்களுக்கு, தனித்த அடையாளத்தைத் தந்திருக்கிறார் நாவலாசிரியர். இதில் கேப்டன் பியாட்டி அரசதிகாரத்தின் நேரடி செயலாளராகவே படைக்கப்பட்டிருக்கிறார். நாவலெங்கும் தொடரும் இறுகிய குரலுக்குச் சொந்தக்காரர் இவரே. மேலும், நாவலில் அவரின் உரையாடல்கள் மிகவும் கூர்மை வாய்ந்தவை.
“ஆடைகளில் பித்தான்களுக்குப் பதிலாக ‘ஸிப்’ வந்துவிட்டது. அதிகாலையில் ஆடை அணியும்போது, தத்துவச் சிந்தனையின் நேரமாக, அதனாலேயே சோகமாக இருக்கும் அந்த வேளையில், அந்தக் குறைந்த அவகாசங்கூட அவனுக்கு (சமூக மனிதன்) இல்லாமல் ஆகிவிட்டது”
“வாழ்க்கையே மல்லாக்க விழும் பெரிய வீழ்ச்சியாகிவிட்டது; எல்லாமே டமால், டூமில், ஆஹா!”
“அரசியல்ரீதியாக ஒருவர் வருத்தப்படாமல் இருக்க வேண்டுமானால், ஒரு பிரச்சினையின் இரண்டு பக்கங்களையும் அவருக்குக் கொடுத்து அவரைக் கவலைக்குள்ளாக்காதே; ஒரே ஒரு பக்கத்தை மட்டும் அளி. அதைவிடச் சிறந்தது, எதையுமே கொடுக்காமல் இருப்பது. போர் என்ற ஒன்று இருப்பதை அவர் மறக்கும்படி செய்துவிடு. அரசாங்கம் திறமையற்றதாக, அதிக எண்ணிக்கையில் மேலதிகாரிகளைக் கொண்டதாக, வரிவெறி கொண்டதாக இருந்தால் அதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதைவிட அதை அப்படியே இருக்க விட்டுவிடு”
கேப்டன் பியாட்டி வாயிலாக அரச திகாரத்தின் இந்தக் குரல் என்றென்றும் சமூகத்தை இறுக்கமாக வைத்திருக்கும் குரலாக இருக்கிறது. இந்திய நிலங்களின் பன்முகக் குரலை ஒடுக்கி, அதை ஒற்றைக் குரலாக மாற்ற நினைக்கும் இன்றைய அரசின் பயங்கரவாதத்தோடு இந்தக் குரல் ஒத்துப்போவதைக் காணலாம். 64 ஆண்டுகள் முன்பு ரே பிராட்பரி படைத்திருக்கும் இந்த நாவலானது அனைத்துக் காலத்திற்கும் பொதுவானதென்றே தோன்றுகிறது. இதைச் சிந்தித்தே அவர் இந்த நாவலின் பெயர், ஊர் என எதையும் உருவாக்கவில்லை. அவரைப் பொறுத்தவரையில், எல்லாக் காலத்துக்கும், நிலங்களுக்கும் பொதுவானது இந்த நாவல்.
பிராட்பரி இந்த நாவலில் ஒரு சமூகப் பிரச்சனையைக் கையாண்டிருக்கிறார். கேள்வி கேட்காத, சிந்தனையைத் தூண்டாத சமூகத்தை அரசதிகாரம் உருவாக்க நினைக்கிறது. அதற்கு நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை (முக்கியமாகக் காட்சி ஊடகம்) சாதனமாகப் பயன்படுத்துகிறது. இன்றைய ‘டிஜிட்டல் இந்தியா’வுடன் இதைப் பொருத்திப் பார்க்கலாம்.
“வரலாற்றின் இடிபாடுகளையும் சிதைவுகளையும் வீழ்த்திய தீக்கொழுந்துகளின் சிம்பொனிகள் அனைத்தையும் நிகழ்த்தும் ஒருவரு டைய கைகளைப் போல இருந்தன அவனுடைய கைகள்”
“நிலா வெளிச்சத்திலிருந்த நடை பாதைமேல் இலையுதிர் காலத்தின் காய்ந்த இலைகள் விழுந்து, அங்கே வீசிய காற்றிலும், பறந்து சென்ற இலைகளின் ஓட்டத்திலும் தூக்கிச் செல்லப்பட்டதைப் போலத் தோன்றிய ஓர் இளம்பெண், தான் நடந்துகொண்டிருந்தாலும் சறுக்கியபடி, நகரும் நடைபாதை ஒன்றில் பொருந்தி நிற்பதைப் போலத் தோன்றினாள்”

மேலே குறிப்பிட்டவை ரே பிராட்பரியின் நடைக்கு எடுத்துக் காட்டுகள். இவை ஒருங்கே படிமத் தன்மையுடனும், அழகியலுடனும் கையாளப்பட்டிருக்கின்றன.
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு. ஆமாம். இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு. ஆமாம். மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு. ஆமாம். இவை யெல்லாமேதான். தவிர வேறு என்ன? வேறென்ன? ஏதோ ஒன்று, ஏதோ ஒன்று”. நாவல் தரும் இந்த நம்பிக்கையுடன் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *