ஆங்கிலத்தில் பேட்டி கண்டவர் : ஒய். அயோத்தி தமிழில் : இராம. குருநாதன்
எம்.வி.வி.யுடன் நேர்காணல்
நீங்கள் எப்படி உங்கள் எழுத்துப் பணியைத் தொடங்கினீர்கள் என்பதை விளக்கமுடியுமா?
13 அல்லது 14 வயதில் துப்பறியும் நாவலை எழுதத்தொடங்கினேன். எழுதுவது எனக்கு எளிமையாக இருந்தது. இத்தனைக்கும் அறிவார்ந்த மரபில் வந்தவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. என் தந்தை மற்றும் அவரின் முந்தையோர் நெசவாளர்கள் அல்லது அதில் மிகவும் தேர்ச்சிமிக்கவர்களாக இருந்தார்கள். சிறுவயது முதலே நாவல் படிப்பதில் ஆர்வம் இருந்தது. கைக்குக்கிடைத்த எல்லாத் தமிழ் நாவல்களையும் படித்து மகிழ்ந்தவன். வார்த்தைகளைத் தேடி அலைவதை விட, எனக்கென்று ஒரு நடையைப் பின்பற்றினேன்.நான் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் எதுவும் பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டதில்லை. இருந்தாலும், எனது ஆர்வம் ஒருபோதும் தளர்ந்துபோய்விடவில்லை. தொடர்ந்துநான் எழுதிவந்தது, மொழி நடையில்ஒரு லாவகத்தை ஏற்படுத்தித் தந்தது. எனக்கென்று ஒரு நடையை வளர்த்துக்கொண்டேன். நான் எழுதிய சிட்டுக்குருவி என்ற சிறுகதையை ந.பிச்சமூர்த்தியிடமும், கு.ப.ராவிடமும் படிக்கத் தந்தேன். அவர்கள் அதனை மணிக்கொடி இதழுக்கு அனுப்பிவைத்தனர். அது பிரசுரமானது. இப்படித்தான் என் எளிய தொடக்கம் ஆரம்பமானது.
உங்கள் எழுத்தின் தன்மை எவ்வாறு இருந்து வந்திருக்கிறது? எழுதிய பிரதியை மீண்டும் படித்துத் திருத்தியதுண்டா?
எழுதத்தொடங்குவதற்கு முன், சில கணங்கள் எழுதப்போகும் பொருள் பற்றி ஆழ்ந்து யோசிப்பேன். பிரதியைப் படித்துவிடுவேன். எழுதத் தொடங்கிவிட்டால், ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவேன். படிக்கும்போது பொருத்தமின்மை எதுவும் தோன்றினால், அதனை மறுபடி முழுவதுமாக எழுதிவிடுவேன். சில சமயங்களில் இருபது தடவையாவது திருத்தி எழுதியதுண்டு.
நீங்கள் நாவல், சிறுகதை ஆகிய இரண்டு தளங்களில் எழுதுகிறீர்கள். இந்த இரண்டில் எது உங்களுக்கு அதிகமான ஈடுபாடு அல்லது நீங்கள் எதில் கலையின் நோக்கம் உங்களுக்குப் பொருத்தமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை –இவை யாவுமே எனக்கு உகந்தவைதாம். என்றாலும் சிறுகதை, நாவல் மட்டும் எழுதுவது என்பதை வரையறைப்படுத்திக் கொண்டேன். ஏனெனில், அந்த நாள்களில் இதழ்கள் பெரும்பாலும் கவிதைகளை, நாடகங்களை, கட்டுரைகளை வெளியிடுவதில்லை.
உங்கள் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தமான படைப்பு என்று எதைச்சொல்வீர்கள்?
எனது எல்லாப் படைப்புகளுமே எனக்குப் பிடித்தமானவைதாம். அவை எனது படைப்புகளாயிற்றே! அரும்பு என்ற நாவல்தான். எனது இதயங்கவர்ந்த படைப்பு. அதில் ஒரு பெரிய கதையே அடங்கியிருக்கிறது. அதில் நாடகப்பாணியான நகர்வோ அல்லது நிகழ்வோ இல்லை. அதில் சொல்லபட்டவை உளவியல் ரீதியான நிகழ்வுகள். அது குறித்து மனோ தத்துவவாதிகள்தாம் தீர்மானிக்கவேண்டும்.
நீங்கள் படைத்த பெண்பாத்திரங்கள் ஆர்வமூட்டுபவர்கள்; தனித்துவம் மிக்கவர்கள்; மனச்சிக்கல் கொண்டவர்கள்; அதுவன்றியும் அவர்களோடு பங்கேற்கும் பிற பாத்திரங்களைக் காட்டிலும் அவர்கள் லட்சியவாதிகள். ஆண்களைக் காட்டிலும் பெண்களைப் படைப்பதில்தான் உங்கள் கூரிய பார்வை வெளிப்பட்டுள்ளது. இக்கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா?
தயங்காமல் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இந்த மானிட வரலாறு ஆண் ஆதிக்க வல்லமையில் உருவாகியது என்பதை முற்றிலும் ஒத்துக்கொள்கிறேன். மானிட வாழ்வில் ஆண் எல்லாவகையிலும் உரிமை கொண்டாடுகிறவனாக உள்ளான். இதனால் இயல்பாகவே நான் பெண்கள் குறித்து இரக்கப்படுபவன். அவளை வழிபாட்டுக்குரியவளாய் ஆக்கியிருக்கிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவள் அங்குமிங்குமாக அலைக் கழிக்கப்படுகிறாள். பெண் மீது ஆணாதிக்கம் செலுத்துவது என்பது முடிவுறாத ஒரு வரலாறாகவே இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் அவளுக்குத் தேவை என்பதை உணர்கிறேன். இப்படித்தான் எனது படைப்புகளில் பெண்பாத்திரங்கள் ஆண்வர்க்கத்தினர் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர்.
நீங்கள் படைத்த புகழ்பெற்ற நித்யகன்னி நாவலில் வரும் அமரத்வமான கன்னியாக மாதவியைக் கலை உணர்வோடு அழகிய பாத்திரமாகப் படைத்திருக்கிறீர்கள். அது எப்படி உங்களுக்குச் சாத்தியமானது?
மகாபாரத்தில் வரும் மொத்த கதைத்தொடர்கள் முழுவதிலும் எனக்குத் தனித்த ஈடுபாடு உண்டு. அவற்றை மையமாக வைத்துச் சிறுகதைகள், நாவல்கள், ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளேன். மாதவி பற்றிச் சிறிய அளவில் அதில் இடம்பெற்றிருந்தாலும் அவளைப் பற்றிய எண்ணம் என்னுள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. அந்தக் கால கட்டத்தில், பெண் என்பவள் ஒரு நுகர் பொருளாகவே பார்க்கப்பட்டாள். மாதவி கதை என் பார்வைக்குக் கிட்டியபோது, அவள் அதற்கோர் உதாரணமாய் விளங்கினாள். என் உணர்வைப் பறித்துக்கொண்டாள். அதனை ஒரு சிறுகதையாக எழுதுவதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். அது பற்பல அத்தியாயங்களாக விரிந்துபோனது. நித்யகன்னி என் ஆழ்மனத்தில் உறைந்தவள்; கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தவள்.
உங்களின் வேள்வித் தீ நாவலின் கருத்து அழகியலின் விதி மீறலாகவும், அதன் மீதான மதிப்பீட்டினைக் களங்கப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறதே, அது பற்றிய உங்கள் கருத்து என்ன?
இதனை ஒத்துக்கொள்ளமாட்டேன். அந்த நாவல் நீதிக்குப் புறம்பாக இருக்கிறது என்று நீதிவாணர்கள் குற்றம் சாற்றியிருக்கின்றனர். அது தவறு. வாழ்க்கையில் அறமும் அறமற்றவையும் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. அந்த நாவலில் வரும் கதாநாயகனும், பெண்களும் படிக்காதவர்கள். காமத்தில் முடிவான இன்பம் அல்லது வலி என்பது இயற்கையான ஒன்று. அது எக்காலத்திற்கும் உரியது; நிலையானது.
நீங்கள் அதிகமான மொழிபெயர்ப்பினைச் செய்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பாளனுக்குப் படைப்புத் திறன் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அவன் ஒரு இரண்டாந்தர எழுத்தாளனா? உங்கள் கருத்து என்ன?
மொழிபெயர்ப்பவன் படைப்பாற்றல் கொண்டவனாக இருக்கவேண்டும். இல்லையெனில், அவன் மூலத்தின் சுவையைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு நெருக்கமாக இருந்திட இயலாது.
கடந்த பத்து வருடங்களாக நீங்கள் எதையும் எழுதி வெளியிடவில்லை.. எழுதுவதைக் கட்டுப் படுத்திக் கொண்டீர்களா? அல்லது இதுவரை எழுதியதுபோதும் என்று நினைக்கிறீர்களா?
உடல் நலிவால் ஐந்தாறு வருடங்களாக எழுத இயலவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிவிட்ட பிறகு, எனது கைகளும், கண்களும் எழுதுவதைத் தவிர்த்து விட்டன. நான் சொல்லச்சொல்ல மற்றவரை எழுதச்சொல்லவோ அல்லது தட்டச்சுச் செய்விக்கவோ வழியில்லாமல் போனது. முற்றுப் பெறாத நாவல்கள் பல உள்ளன; எனது கைகளும் கண்களும் பழையபடி நன்றாக இயங்குமானால் அவற்றை எழுதி முடிக்கலாம். எனது அந்தக் கனவு நிறைவேறும் என்று எனக்குத் தோன்றவில்லை.
இரண்டு தலைமுறை வாசகர்களை அறிந்துவைத்திருக்கிறீர்கள். வாசகர்களின் தற்காலத்திய உணர்வு நாவலை வரவேற்பதிலும், எதிர்விளைவு கொள்வதிலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
கற்றறிவும், மக்கள் தொகையும் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது. படிப்பவர்களும் பரந்துபட்ட அளவில் உள்ளனர். இது ஒருபுறம். மற்றொரு புறம் நோக்கமில்லாமல் எழுதுவது அல்லது வணிக நோக்கிற்காக எழுதுவது அல்லது இதழ்களுக்காக எழுதுவது இவை பொதுவாசகர்களைப் பாழாக்கி வருகிறது என்பதோடு, அது தற்காலப்படைப்பாற்றலையும் தடைசெய்வதாய் உள்ளது. கீழ்த்தரமான உணர்ச்சிகளை இன்றைய வாசகர்கள் நாடுகிறார்கள். எந்த ஒரு சீரிய சிந்தனையும், சீரிய எழுத்தும் அவர்களிடையே இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் ஓராயிரம் அல்லது இரண்டாயிரம் வாசகர்களாவது படைப்பிலக்கியங்களைப் பற்றிய புரிதலும் புரிந்து கொண்டு போற்றுவதுமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழில் விமர்சனப்பார்வையின் போதாமை எழுத்தாளர்களின் வெகுசன மதிப்பை முடக்கியிருப் பதாகத் தாங்கள் கருதுகிறீர்களா?
விமர்சனமோஅல்லது விமர்சனமின்மையோ அது இருந்துவிட்டுப்போகட்டும். எழுத்தாளன் எப்போதுமே எழுத்தாளன்தான். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. தமிழில் இலக்கியத் திறனாய்வு குழந்தைத் தனமாகத் தான் இருக்கிறது. அதன் விரும்பத்தகாத சூழலைக் கண்டு எனக்கு அச்சமாக இருக்கிறது. சாதி, இனம், அரசியல் சார்பு இவற்றைக் கொண்டு ஒரு படைப்பை அணுகும்போது திறனாய்வு அதன் மதிப்பை இழந்துவிடுகிறது.
நீங்கள் நடத்திவந்த தேனீ இதழ், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எத்தகைய பங்களிப்பை ஆற்றியுள்ளது?
தமிழ் இலக்கிய வளர்ச்சியின் இடைவெளியை நிரப்ப நான் வெளியிட்டு வந்த தேனீ குறித்து எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அன்றிருந்த மணிக்கொடி எழுத்தாளர் பலருக்கு அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த அவ்விதழ் வழி ஓர் அமைப்பினை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நினைத்தேன். நாவல் வளர்ச்சிக்குத் தேனீயின் பங்கு பெரிதாக இல்லையெனினும், சிறந்த சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றிற்கு அது பெரிதும் இடந்தந்தது. கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், க.நா.சு, லா.ச.ரா முதலியோர்க்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த தேனீ படிக்கற்களாய் இருந்து உதவியது.
எழுத்தாளர்க்குச் சமூகப் பொறுப்பு உண்டு என்பது பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வணிக நோக்கு பற்றி நாம் பேசவில்லை. படைப்புத் திறன் மிக்க எழுத்து பற்றித்தான் நமது பேச்சு. படைப்பு என்பதே சமூகத்திற்கான பொறுப்பு அல்லவா? இப்படிச் சொல்வதால், எந்த ஒரு ‘இஸ’த்தையும் படைப்பிற்கு எடுத்துக்கொள்வதாக நினைத்து விடக்கூடாது அல்லது அவன் ஒரு பிரச்சாரகனாகவும் இருந்துவிடக் கூடாது. என்பதுமன்று. எழுத்து என்பதே, இன்றைய சமூக, அரசியல், உளவியல் என்பவற்றின் விருப்பங்களின் பிரதிபலிப்பு அல்லது பிரதிநித்துவம்.
இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
கலைஞன் பிறக்கிறான்; உருவாக்கப்படுவதில்லை. அவன் யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை, எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களைத் தேடிச் செல்லமாட்டான் அவன். இளைய வயதுடைய நண்பர்கள் பலர் என்னிடத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வேன், எழுதுவதற்கு முன் பரவலாகப் படித்துவிட்டு எழுதத் தொடங்குங்கள் என்று!
வெளிவந்த இதழ் : இந்தியன் எக்ஸ்பிரஸ் – 21.10.1989