இயல்பு

உற்பத்திக் குறைப்பை, முதலாளித்துவ வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்களுடன் சோசலிசவாதிகள் எவ்விதம் தொடர்புபடுத்துவது எப்படி?

இயல்பு

டான் ஃபிட்ஸ்
தமிழில்: நிழல்வண்ணன்

முதலாளித்துவ சமுதாயத்திற்குள் உற்பத்தியைக் குறைப்பதை நாம் ஆதரிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதல்ல கேள்வி: அதைவிட, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிற போராட்டங்களுடன் நம் எப்படி சிறப்பாகத் தொடர்புபடுத்துவது என்பதுதான் கேள்வியாகும். மனித இனம் உயிர் பிழைத்திருப்பதை அச்சுறுத்துகிற பொருளாதார விரிவாக்கத்தின் கட்டுப்படுத்தவியலாத இயங்காற்றலை உலகெங்கும் உள்ள செயல்வீரர்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சிகளை ஒன்றாக இணைக்கக் கூடிய ஒரு புதிய சமுதாயம் பற்றிய ஓர் சித்திரத்தை வழங்குவது இப்போதைவிட எப்போதும் மிகவும் அவசரமானதாக இருந்ததில்லை.
காலநிலை மாற்றம் என்பது 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நியாயமான வகையில் மிகவும் அக்கறைக்குரியதாக இருக்கிறது. பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலக் கரியமில வாயுவின் அளவு ஒரு மில்லியனுக்கு 450 பகுதிகள் (PPM) என்ற அளவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூடுதல் தொழில்துறை நடவடிக்கை இல்லாமலே கூட காலநிலை மாற்றத்தின் சுழற்சியால் அதிகரிக்கக் கூடிய கரியமிலவாயுவின் அளவு மனித இனத்திற்கு ஒரு பேரழிவைக் கொண்டுவருவதை தடுக்கவேண்டுமானால், இந்தக் கரியமிலவாயுவின் அளவைத் தடுத்தாக வேண்டும். கரியமிலவாயுவின் அளவை குறைந்தபட்சம் ஒரு மில்லியனுக்கு 350 பகுதிகளாகக் கட்டுப்படுத்துவதற்கு தனது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொன்றையும் மனித இனம் செய்தாக வேண்டும் என்பது அறிவின் கட்டளையாகும்.
இருப்பினும், உற்பத்தியை அதிகரிப்பதே பொருளாதார நெருக்கடிக்கான ஒரே தீர்வு என்று பெருங்குழும (கார்பரேட்) அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாகக் கூச்சலிடுகிறார்கள். கடந்த முறை, மிகப்பெரிய விண்கல் பூமியைத் தாக்கியதிலிருந்து காணப்படாத அழிவு வீதத்தை, தங்கு தடையற்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது புவிப்பரப்பின் உயிர் வாழ்க்கையோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை -பெருங்கடல்சார் உயிர்வாழ்க்கையையும் அமிலமயமாக்கல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
பெருமளவிலான தொழில்துறை உற்பத்தியானது, பாலூட்டும் இனத்தின் இருத்தலையே அழிக்கக்கூடிய நச்சுக்களை உமிழ்ந்துகொண்டிருகிறது. இரண்டாம் உலகப் போரிலிருந்து, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேதியியல் கலவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மைல் தீவு, செர்னோபில், ஃபுகுசிமா ஆகியவற்றுக்குப் பிறகும், கதிர்வீச்சுக் கழிவுகள் தொடர்ந்து மலைபோலக் குவிந்துகொண்டிருக்கின்றன, அவை மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டு, உயிர்வாழ்க்கையை என்றென்றைக்குமாக நச்சாக்கிவிடும் நாளை நெருங்கிக்கொண்டிருக்கின்றன.
எண்ணெய் மட்டுமல்ல நிலக்கரியும் எரிவாயுவும் கூட ஒரு எல்லைக்கு உட்பட்டுத்தான் உள்ளன, “அனைத்தும் தீர்ந்துபோகும்” என்ற ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது. “இறுதிநிலையில் உள்ள மண்” பற்றி இப்போது எழுதுபவர்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் அவருக்கு முந்தைய எழுத்தாளர்களும் கூறிய அதே கருத்தாக்கத்தைத் தான் சாராம்சத்தில் குறிப்பிடுகிறார்கள். (1) உண்மையில், மூலவளத்தைப் பிழிந்து எடுப்பதற்கான போராட்டம் “இறுதிநிலையில் உள்ள நீருடன்” பின்னிப்பிணைந்திருக்கிறது, அது இப்போது பல லட்சக்கணக்கான உயிர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, “பிளத்தல்”, “தார் மணல்” போன்றவற்றைக் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள், இப்போது அது மூலப் பொருட்களுக்கான பேராசை எவ்வாறு முதலாளித்துவத்தை அதிகரித்த அளவில் துணிகர அழிவுச் செயல்களுக்குத் தள்ளிவிடுகிறது என்பதை அடையாளப்படுத்தக் கூடியதாக ஆகியுள்ளது.
வளர்ச்சியின் மையத்தன்மை உயிரியலின் இருத்தலை அழிப்பதில் இருந்தாலும், முற்போக்காளர்கள் பல நேரங்களில் பொருளாதார விரிவாக்கத்தை எதிர்ப்பதற்கு பலவகையான ஆட்சேபனைகளை அள்ளி வீசுகிறார்கள்.

 • உற்பத்தியைக் குறைப்பது உழைக்கும் மக்களின் வாழ்கையை மோசமாக்கி விடக் கூடும்.
 • வளர்ச்சிக் குறைப்பு இயக்கம் முதலாளித்துவ தாராளவாதிகளால் தொடங்கப்பட்டது.
 • வளர்ச்சிக் குறைப்பு முதலாளித்துவத்திற்குள் நிகழமுடியாது, அதைப்பற்றி விவாதிப்பதற்கு “புரட்சிக்குப் பின்பு” வரை காத்திருக்க வேண்டும்.
 • குறைவாக உற்பத்தி செய்வது என்ற கருத்தாக்கம் ஓர் இயக்கத்தைக் கட்டியமைப்பதற்குப் போது மான அளவுக்குத் தெளிவாக இல்லை.
 • வளர்ச்சி எதிர்ப்பு இயக்கம் எளிதில் சமரசப் படுத்தப்பட்டு விடும்.

இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

 1. உற்பத்தியைக் குறைப்பது என்பது வாழ்க்கைத்தரத்தை மோசமாக்கிவிடுமா?
  உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஒரு பலமான இணைப்பு இருக்கிறது என்று பெரும்பாலான பொருளாதார எழுத்தாளர்கள், சோசலிசவாதிகளும் கூட, இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உற்பத்தியும் நுகர்வும் என்ற சொற்றொடரில் உள்ள சொற்களை இணைப்பது அவை ஒரே நிகழ்ச்சிப்போக்கின் இரண்டுபகுதிகளாக இருக்கின்றன என்பதைக் குறிக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான மாற்றங்கள் அவற்றுக்கு இடையில் இருந்த பிணைப்பைத் தீவிரமாகப் பலவீனப்படுத்தியுள்ளன.
  1880இல் எங்கல்ஸ் எழுதினார்:
  சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் மூலம், சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொருளியல்ரீதியாக முழுவதும் போதுமான ஒரு வாழ்நிலையைப் பெற்றுத்தரும், மேலும் நாளுக்கு நாள் முழுமையாகப் பெற்றுத் தரும் சாத்தியம், அனைவருக்கும் சுதந்திரமான வளர்ச்சியையும் அவர்களுடைய உடல் மற்றும் மூளைத் திறன்களைப் பயன்படுத்துவதையும் உத்தரவாதப்படுத்தும் ஓர் வாழ்நிலையைப் பெறுகிற சாத்தியம் – இந்தச் சாத்தியம் இப்போது முதல்முறையாக இருக்கிறது, ஆனால் அது இங்குதான் இருக்கிறது. (2) (அழுத்தம் மூலத்தில்)
  ஆனால் முதலாளித்துவம் மனிதத் தேவைகளை நிறைவு செய்யும் உள்ளாற்றல் கொண்டுள்ளது என்பதாலேயே விரிவாக்கத்தை நிறுத்திவிடாது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, ராபெர்ட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளதாவது:
  1913 இல், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 39 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2005 வாக்கில், அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 12.4 டிரில்லியன் டாலர்கள் அல்லது 1913 ஆண்டை விட 300 மடங்கு கூடுதலாக இருந்தது. இவ்வாறாக, ஒரு வியக்கத்தக்க ஒப்பீட்டில், அமெரிக்காவின் 300 மடங்கு பொருளாதார உற்பத்தியோடு சேர்ந்து எண்ணெய் இறக்குமதியும் 300 மடங்கு அதிகரித்துள்ளது.(3)
  மனிதத் தேவைகளை நிறைவுசெய்யும் திறனை அடைந்த பின்பும்கூட, உற்பத்தியில் அத்தகைய ஒரு மிகப்பெரிய அதிகரிப்பை பெருங்குழுமங்கள் தொடர்ந்து எப்படிச் செய்ய முடிந்தது? அண்மைப் பொருளாதார மாற்றங்கள் குறித்து 1929 இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஹெர்பர்ட் ஹூவர் குழு அதன் கருத்தாக்க ரீதியான திருப்புமுனையை அறிவித்தது. முதலாளித்துவம் செயற்கையான தேவைகளைத் தயார் செய்வதன் மூலம் காப்பற்றப்படலாம். திட்டமிட்ட வழக்கொழிந்துபோகும் சகாப்தம் பிறந்தது.(4)
  முதலாளித்துவம் நுகர்வின் “பொருளியல் சூழலை” வடிவமைத்தது குறித்து ஆண்ட்ரூ கோர்ஸ் மிகவும் விளக்கமாக விவரிக்கிறார். வழங்கலை (supply) அவசியப்படுத்தும் தேவைக்கான (need) வேண்டலுக்குப் (demand) பதிலாக, முதலாளித்துவம் இப்போது ஒரு “பொருளுக்கான ஒரு தன்னிலையை” அல்லது பெருங்குழுமங்கள் விற்க விரும்புவதற்கான நுகர்வோரின் வேண்டலை உருவாக்குகிறது.(5)
  நவீன மேற்கத்திய வாழ்நிலையானது பண்டங்களின் மலைமுகட்டின் மீது அமைந்துள்ளது, அது நமது வாழ்க்கையை சிறப்பாக்குவதற்கு எந்தப் பாத்திரத்தையும் வகிக்கவில்லை. உண்மையில், நமது வாழ்வின் உயிரியலை அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறது. (6) நவநாகரிக பாணியிலான மின்னணுப் பொருட்களுக்கான, ஆசைகள் தூண்டப்பட்டு, நுகர்வோரால் வாங்கப்படும் பொருட்கள் பெரும் குவியலாகக் கழிவுகளை உருவாக்குகின்றன. தேவை யற்றதும் அழிவுதரக் கூடியதுமான உற்பத்திக்கு நுகர்வோர் தேர்வுகள் ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
  எவர் ஒருவரும் காலை உணவுக்காக வெடிகுண்டுளை உண்பதில்லை, அமெரிக்கர்கள் முடிவுறாத போர்களுக்கும் உலகெங்கும் விரவியிருக்கும் ராணுவத் தளங்களுக்கும் ஆதரவாக ஒருபோதும் வாக்களிப்பதில்லை. இருப்பினும், இதுவே அமெரிக்க உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 15 விழுக்காட்டை எடுத்துக்கொள்கிறது.
  பொருளாதார வீணடிப்பின் மிகப்பெரும் பகுதி தொழிலாளர்களும் நுகர்வோரும் எந்தவிதமான கட்டுப்பாடும் செலுத்தமுடியாத உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குகளின் போதே நிகழ்கிறது. 85% ஆற்றல், வீடுகளில் சூடுபடுத்துதல் மற்றும் குளிரூட்டுதல் கருவிகளுக்காகச் செலவிடப்படுகிறது. கனப்பு தேவை இல்லாமலே, வசதியாக வீடுகள் கட்டுவது எப்படி என்பதை நாம் காலம் காலமாக அறிந்து வைத்திருக்கிறோம்; இருப்பினும் கட்டிடக் கலைஞர்கள் நாளை என்பதே இல்லை என்பதுபோல வடிவமைப்பைத் தயார் செய்கிறார்கள். 80% பயணங்களை நடந்தோ, மிதிவண்டியிலோ சென்றுவருகிற தூரத்திலேயே அருகாமைத் தேவைகளைத் திட்டமிடுவதற்கும் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மாநகரத் திட்டமிடுவோர் தேவையற்ற வகையில் “பசுமை” சூழல் என்ற பெயரில் பயணத் தூரத்தை அதிகரிக்கும் வகையில் திட்டமிடுகின்றனர், அது காலநிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  ஒரே நேரத்தில் பட்டினியும் மிதமிஞ்சி உண்பதையும் வளர்க்கிற போக்கு உணவுப் பொருள் தயாரிப்புத் துறையின் தனி முத்திரையாக உள்ளது. பெரிய அளவிலான மூலப்பொருள்களிலிருந்து சத்துணவு சிறிய துகள்களாக மாற்றப்படும் உற்பத்தியில், வேதிப்பொருள் சேர்க்கை, நேர்த்தி செய்தல், பொட்டலமாக்குதல், பாதுகாத்தல், போக்குவரத்து, சந்தைப்படுத்தல், சர்க்கரை சேர்ப்பு, மரபணுரீதியாக மாற்றம் செய்தல் ஆகியவை மக்களை மளிகைப் பொருட்களிலிருந்து வெளியேற்றுகின்றன, மேலும் நாள் ஒன்றுக்கு மூன்று முறை மக்கள் இறைச்சி உண்பது அவசியம் என இணங்கச் செய்கின்றன.
  மருந்துத் துறையிலும் இதுவேதான் நடக்கிறது. கியூபாவிலும் அமெரிக்காவிலும் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகளாகத்தான் இருக்கின்றன. ஆனால் குடிமக்களின் உடல் நலத்திற்கு அமெரிக்காவில் ஆகும் செலவில் வெறும் 4% தான் கியூபா செலவு செய்கிறது. அதேபோல காப்பீட்டு நிறுவனங்களுக்கு 30% க்கும் மேல் செலவிட வேண்டியுள்ளது. இது ஏன்? இலாபமீட்டும் மருத்துவத் துறை செயல்பாடுகளே இதற்குக் காரணம். அவை மிகப்பெரிய அளவுக்கு மிதமிஞ்சி சிகிச்சையளிப்பது, குறை சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகளின் நோயை அதிகரிக்கச் செய்வது, நோயை உருவாக்கிச் சிகிச்சையளிப்பது, மருத்துவமனையிலேயே நோய்த் தொற்று வரும் வகையில் சிகிச்சையளிப்பது, நோய்த்தடுப்பு ஆராய்ச்சிக்குப் பதிலாக நோய் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது ஆகியவையே இதற்குக் காரணம் ஆகும்.(8)
  மனித வாழ்வின் முந்தைய காலகட்டங்களில் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஒரு பலமான தொடர்பு இருந்துவந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. முதலாளித்துவம் எப்போதுமில்லாத அளவுக்கு மிகுதியாக இப்போது உற்பத்தி செய்து வருகிறது, அதேநேரத்தில், உண்மையில் உற்பத்தி செய்யப்படுவதில் குறைவான அளவே மனிதத் தேவைகளை நிறைவுசெய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது.. முதலாளித்துவம் உற்பத்தி செய்வதன் பெரும்பகுதி பயனற்றதாகவோ, தீங்கிழைப்பதாகவோ இருக்கிறது, இப்போது 1) தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை அதிகரிப்பதும், 2) ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவைக் குறைப்பதும் சாத்தியமே.
 2. குழந்தைகள், குளியல்நீர், முதலாளித்துவ தாராளவாதம்
  தனிப்பட்ட வாழ்க்கைப் பாணி மாற்றங்களின் தாராளவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் வளர்ச்சிக் குறைப்பு இயக்கம் நிராகரிக்கப்படுவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் சில நேரங்களில் மனிதர்கள் அவர்களுடைய ஒட்டுமொத்த உலகக்கண்ணோட்டம் பெரிய அளவுக்கு திருப்திகரமாக இல்லாவிட்டாலும், மிகவும் அறிவார்ந்த வகையில் ஆழ்ந்து நோக்குகிறார்கள். வளர்ச்சிக் குறைப்பை ஆதரிப்பவர்களின் தத்துவார்த்தப் பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவது, சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்கும் பொருட்டு பொருளாதாரம் சுருக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தாக்கத்தைத் தவறென்று நிரூபிப்பதில்லை.
  அதற்கு ஒரு எடுத்துக்காட்டு மாபெரும் சிந்தனையாளர் டெட் ட்ரெயினர் ஆவார், அவர் சூரிய ஆற்றலும் காற்றாலை ஆற்றலும் முடிவற்ற வளர்ச்சியிலிருக்கும் ஒரு பொருளாதாரத்தை என்றென்றும் நீடிக்கச்செய்யும் என்ற கற்பனையைத் தவறானது என நிரூபிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வேலையைச் செய்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அவர் “எளிய வழிமுறை”களைக் கடைப்பிடிக்கும் மாற்று சமூகங்களுக்குப் பின்வாங்கிச் செல்வதை ஆதரித்து, திட்டவட்டமாக வர்க்கப்போராட்டத்தை (அல்லது எந்த வகையான போராட்ட வடிவத்தையும்) நிராகரிக்கிறார்.(9)
  “சமூகத் தோட்டங்கள், உழவர் சந்தைகள், திறன் வங்கிகள் போன்ற இன்னபிற விடயங் களைக் கட்டியமைக்கும் பொருட்டு”, “கடந்து செல்லும் நகரங்கள் இயக்கத்திற்குள்” பல லட்சக் கணக்கானவர்கள் ஈடுபட்டாலும் கூட, அது முதலாளித்துவத்தின் அழிவு நடவடிக்கைகளின் மேல்மட்டத்தில் கூட சிராய்ப்பை ஏற்படுத்தாது.(10) எனது கொல்லைப்புறத் தோட்டம் அணுஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கை மீதோ, நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்பின் திட்டத்தின் மீதோ, வேளாண்மைத் தொழில்வணிகத்தால் சிறிய விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதன் மீதோ எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. கடந்து செல்லும் நகரங்களுக்குப் பெருந்திரளாக மக்கள் இடம்பெயர்ந்து செல்வது, விவசாயத்திலிருந்து வெளியேறுவோரின் செல்வத்தை 1 விழுக்காட்டினர் மேலும் அபகரிப்பதற்கே உதவும்.
  பொருளாதாரத்தைச் சுருக்கும் கருத்தையே லெனினியவாதிகள் வெறுப்புடன் பார்க்கின்றனர், அவர்கள் கடந்துசெல்லும் நகரங்களின் மீதான அணுகுமுறையை மார்க்ஸ் “கருத்துமுதல்வாதம்” எனக் குறிப்பிடுவார் என்று கூறுகின்றனர். நிலத்தைப் பிளந்து எரிவாயு எடுப்பதையும், தார் மணலில் இருந்து எரிபொருள் எடுப்பதையும், ஆழ்கடலில் துளையிட்டு எண்ணெய் எடுப்பதையும் அவை உள்ளார்ந்தவகையில் அபாயகரமானவை என்ற புரிதலிலிருந்து பலரும் எதிர்ப்பதில்லை, மாறாக அவை இலாபத்திற்காகச் செய்யப்படும் போதுதான் அபாயகரமானவை என்று நம்புகிறார்கள். ஆனால் உற்பத்தியின் மீதான உயிரினங்களுக்கு அழிவை ஏற்படுத்தும் நிலத்தின் பயன்பாடு விரிவாக்கப்படுவதைத் தொழிலாளர்களின் கட்டுப்பாடு தடுக்காது. அது யுரேனியத்தை ஆபத்தில்லாததாக ஆக்காது.
  சூழலிய இருத்தலுக்கான பொருளியல் அடிப்படை மீதான தாராளவாதிகளின் அக்கறையற்ற தன்மையும், தெளிவான உண்மைகளின் மீதான அவர்களின் பகைமைகொண்ட அணுகுமுறையும், ஹெகலின் மீதான மார்க்சின் அணுகுமுறையிலிருந்து மிகவும் மாறுபட்டதாகும். எங்கெல்ஸ் எழுதியது போல, “ஹெகலிய முறை அது முன்வைத்த பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்பது இங்கு முக்கியமல்ல. பிரச்னையை முன்வைத்ததே அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகுதிச்சிறப்பாகும்.”(11) ஹெகலின் கருத்துமுதல்வாதம் காரணமாக மார்க்ஸ் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள மறுத்திருந்தாரானால், மார்க்ஸ் ஹெகலின் கருத்துக்களிலிருந்து இயக்கவியல் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தை ஒருபோதும் அமைத்துக்கொண்டிருக்க முடியாது.
  கற்பனாவாத சோசலிசமும் அறிவியல்பூர்வமான சோசலிசமும் நூலில், “மூன்று மாபெரும் கற்பனாவாதிகளை” (செயின்ட்-சைமன், ஃபூரியர், ஓவன்) பற்றிய எங்கெல்சின் ஆய்வு இன்னும் கூடுதலான ஓர் அம்சமாகும். குறிப்பாக, ஓவனுக்குப் புகழஞ்சலி செலுத்தும் எங்கல்ஸ், அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகளையும் போற்றிப் புகழ்கிறார்:
  இங்கிலாந்தில் தொழிலாளர்களின் பெயரில் நடைபெறும் ஒவ்வொரு இயக்கமும், உண்மையான ஒவ்வொரு முன்னேற்றமும் இராபர்ட் ஓவனின் பெயருடன் இணைந்துள்ளது. அவர், ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, 1819ல் தொழிற் சாலைகளில் பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான வேலை நேரத்தைக் குறைக்கும் சட்டத்தை நிறைவேற்றச் செய்தார். இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஐக்கியப்பட்டிருந்த தனிப் பெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் முதலாவது பேராயத்தின் தலைவராக அவர் இருந்தார். (12)
  அறிவியல்பூர்வமான சோசலிசத்தைப் பற்றி விளக்கும் முன்பு எங்கல்ஸ் மூன்று பேரையும் ஆய்வு செய்து, “அவர்களுக்கு சோசலிசம் என்பது முழுமுதலான உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகிய வற்றின் வெளிப்பாடாகவும், அதனுடைய சொந்த ஆற்றலின் மூலம் உலகை வெற்றி கொள்ளக் கூடியதாவும் இருந்தது” என விளக்கினார்.(13) அவர்களுடைய கற்பனாவாதக் கருத்துமுதல்வாதத்தை எங்கெல்ஸ் நிராகரித்த அதே வேளையில், அவர்களுடைய சோசலிசம் என்ற இலக்கை உறுதியாகப் பற்றிக் கொண்டார்.
 3. ‘புரட்சிக்குப் பின்பு’வரை காத்திருப்பது
  ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவைக் குறைப்பதன் தேவையை அங்கீகரிக்கத் தவறுவோருக்கு மாறாக, ஜான் பெல்லமி ஃபாஸ்டர், அந்தத் தேவையைப் பற்றிய குழப்பம் எதுவும் இல்லாமல், முதலாளித்துவ உற்பத்தியின் வேகத்தைக் குறைப்பது மட்டுமின்றி, முதலாளித்துவப் போக்குகளையே தலைகீழாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறுகிறார்.(14) முதலாளித்துவத்தின் ஏராளமான வீணடிப்பைக் குறைப்பது பற்றிய நோக்கத்தோடு மட்டுமின்றி, இதை நிறைவேற்ற முடியாத “பசுமைத் தொழில்நுட்பத்தின்” பரிதாபகரமான போதாமை குறித்தும், அதற்கும் மேலாக, “வளர்ச்சிக் குறைப்புக்” கோட்பாட்டாளர்கள், மூலதனமானது விரிவாக்கத்தை விட்டுக்கொடுக்காமல் முடுக்கி விட்டுக்கொண்டிருப்பதைத் தடுக்கத் தவறியுள்ளதைக் குறித்தும் அவர் சர்ச்சையை எழுப்பு கிறார். உற்பத்தியின் அளவைக் குறைப்பதற்கான ஓர் இயக்கம் தற்போதைய வேலையின்மை நெருக்கடியைக் கையாளவேண்டும், தொழிலாளர்களுடன் ஒரு கூட்டணியை முன்னெடுக்கவேண்டும், உலகளாவிய தெற்கு எதிர்கொண்டுள்ள கட்டமைப்புப் பிரச்சனை களைத் தீர்ப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பெல்லமி ஃபாஸ்டர் குறிப்பிடுகிறார்.
  இந்த முக்கியமான கேள்விக்கான இரண்டு பதில்களில் ஒன்றை ஆதரிப்பதற்கு ஃபாஸ்டரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்: ஒரு புறம், “முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், உற்பத்தியைக் குறைப்பதற்கு நாம் பணியாற்ற வேண்டுமா?”, “முதலாளித்துவமும் வளர்ச்சிக் குறைப்பும்: ஒரு சாத்தியமற்ற கோட்பாடு” என்ற அவரது தலைப்பு, “இல்லை, தெளிவாகவே அடைய முடியாது எனக் தெரிந்தும் அதற்காக (முதலாளித்துவத்திற்குள் ஒரு விரிவாக்கப்பட்ட கால அளவில் பெருந்திரள் உற்பத்தியை தொடர்ந்து குறைப்பது). வேலை செய்வது திசைதிருப்பும் பணியாக ஆகிவிடும்” என்று பொருள்படுத்துவதாக விளங்கிக்கொள்ள முடியும்.
  இன்னொருபுறம், தொழிலாளர்களின் போராட் டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், சமூக மேலாதிக்கம் மற்றும் சூழலியல் (வளர்ச்சி எதிர்ப்பு) போராட்டங்கள் ஆகியவற்றை ஒன்றி ணைக்கும் ஒரு “இணை புரட்சிகர இயக்கத்தை” அவர் ஆதரித்து வாதிடுகிறார்.
  குறிப்பாக உற்பத்தியைக் குறைக்க வேண்டும் எனக் கூறுவது (அல்லது விவாதிப்பதுகூட) எதிர் விளைவை உருவாக்கும் என நம்புவோரிடத்தில் அத்தகைய ஓர் ஒன்றிணைப்பை வளர்த்தெடுப்பதன் முக்கியத்துவத்தை அதிகம் வலியுறுத்த முடியாது. முதலாளித்துவ சமுதாயத்திற்கு உள்ளாகவே ஒரு குறிக்கோளை அடைய முடியாமலிருப்பது, அதை ஆதரித்து வாதிடுவதிலிருந்து விலகியிருப்பதற்கான காரணமாக இருக்க முடியாது.
  தொழிலாளர் இயக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே, முதலாளிகள் தொழிலாளர்களை இன ரீதியாகவும், பாலின ரீதியாகவும் பிரிப்பதற்கு முயற்சி செய்துவருகின்றனர். ஏராளமான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உழைக்கும் சக்திகளை அவற்றுக்கு எதிராகவே பிளவுபடுத்துவதன் மூலம் இலாபத்தை அதிகபட்சமாக்கிக்கொள்ளும் ஓர் உற்பத்தி முறைக்குள், இனவெறியையோ பாலியல் பாகுபாட்டையோ ஒழிப்பது சாத்தியமில்லை. ஆனால் இந்தப் போராட்டங்களிலிருந்து விலகியிருந்தால் முற்போக்காளர்களைக் கண்டறிவது கடினம், ஏனென்றால் அவர்களை “புரட்சிக்குப் பிறகே” வென்றெடுக்கப்பட முடியும். அதற்கு நேரெதிராக, ஒரு சமூக இயக்கம் உணர்வுநிலையை மாற்றுகிறது, ஒடுக்குமுறை குறித்த புதிய விழிப்புணர்வு, முதலாளித்துவத்திற்குப் பிந்தைய ஒரு சமுதாயத்தில் அதை முழுமையாக வெல்வதற்கான விதைகளை ஊன்றுகிறது.
  அதேபோல ஏகாதிபத்தியத்திற்குள். அமெரிக்க வரலாற்றில் உணர்வுநிலையை மாற்றிய மாபெரும் சகாப்தங்களில் ஒன்று வியட்நாம் போர் எதிர்ப்பு ஆகும். ஒரு பெருந்திரள் மக்கள் இயக்கம் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர நிர்ப் பந்தித்திருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக்கப்படவில்லை. ஏகாதிபத்தியம் இல்லாமல் முதலாளித்துவம் என்பது ஒரு சாத்தியமில்லாத கோட்பாடாக எவ்வாறு இருந்திருக்கும் என்பதை லெனின் மிகப்பெரிய அளவில் விளக்குகிறார் – நிதி மூலதனம் உச்சத்தில் ஆட்சிசெய்தபோது, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் காலகட்டமாக ஆகியிருந்தது. உண்மையில், ஏகாதிபத்தியம் என்பது பாராளுமன்றத்தின் ஒரு குழுவினரது மோசமான கொள்கை என்று கண்ட சோசலிசவாதிகளுக்கு எதிராக லெனின் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தார். “ஏகாதிபத்தியம் என்பது நவீன முதலாளித்துவம் அல்ல. அது நவீன முதலாளித் துவத்தின் கொள்கை வடிவங்களில் ஒன்று மட்டுமே. இந்தக் கொள்கையை எதிர்த்து நம்மால் போராட முடியும், போராட வேண்டும்…”(15) என்று தெரிவித்ததற்காக லெனின் கார்ல் காவுத்ஸ்கியை முற்றமுழுக்கக் கண்டித்தார்.
  ஏகாதிபத்தியம் என்பது தடையற்ற பொரு ளாதார வளர்ச்சியாகும். நிதி மூலதனமும் தொழில்துறை மூலதனமும் ஒன்றாகச் சேர்ந்து, குவிப்பின் விகிதத்தை அதிகரித்துக்கொள்வதற்கு பொருளாதார அமைப்புமுறையை அதன் தேசிய எல்லைகளுக்கு அப்பால் கொண்டுசென்று, அதைப் பிறநாடுகளுக்குள் பலவந்தமாகத் திணிக்கிறது.
  முதலாளித்துவம் வளரவளர, மூலப்பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது, அதனால் போட்டியும் மிகவும் கடுமையாக ஆகிறது, மேலும் கூடுதல் வேகத்துடன் மூலப்பொருட்களுக்கான வேட்டை உலகெங்கும் முன்னேறிச் செல்கிறது, இன்னும் கடுமையான போட்டியில், காலனிகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டமாக ஆகிறது.(16)
  போர் எதிர்ப்பு இயக்கம் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளாக மாறுகிறபோது தான், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது என்பது வெற்றிகரமானதாக இருக்கமுடியும். ஒருவகையான போராட்டம் இன்னும் பெரிய ஒன்றாக மாறும் சாத்தியத்தை மெய்யாக உணர்ந்துகொண்டதுதான், அரசியல்வாதிகளை சரியான செயல்களைச் செய்யுமாறு இணங்கச்செய்வதன் மூலமே ஏகாதிபத்தியத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் வாதிட்ட சோசலிசவாதிகளை லெனினால் சகித்துக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணமாக இருந்தது.
  தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் இருந்த உள்ளார்ந்த இணைப்பைப் பற்றி புரிதல் இருந்தபோதும், முதலாளித் துவம் இருக்கும்வரை ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது பொருளற்றது என்ற முடிவுக்கு லெனின் வரவில்லை. வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் வளர்ச்சியின் அழிவு நடவடிக்கைகள் ஒரு தலைமுறை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அழிக்கும் தன்மையைக் கண்டுகொள்வதற்கு இட்டுச் செல்கின்றன. ஒரு புரட்சிகரமான உலகக் கண்ணோட்டத்திற்குச் சூழலியல் மையமானதாக இருப்பதைப் புரிந்துகொள்வதில், தங்களை “லெனினியவாதிகள்” என்று குறிப்பிட்டுக் கொள்ளுவோர் கடைசியானவர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது.
  ஏகாதிபத்தியம், பொருளாதார வளர்ச்சி இரண்டுமே ஒரே தோற்றத்தின் வெளிப்பாடுகளாக – அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய பின்னரும் விரிவாக்கம் செய்வதற்கான முதலாளித்துவத்தின் தடுக்கமுடியாத பெருவிருப்பத்தின் வெளிப்பாடுகளாக – இருக்கின்றன. வளர்ச்சியை எதிர்ப்பதற்கு மறுப்பது என்பது ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மறுப்பதாகும். முதலாளித்துவ சமுதாயத்திற்குள்ளாகவே ஒரு இயக்கம் “வெற்றி பெற வேண்டும்” என்பதுதான் ஒரு இயக்கத்தை ஆதரிப்பதற்கான ஒரே அளவுகோல் என்றால், உண்மையில் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒரு கால விரயமாகவே இருக்கும்.
 4. வளர்ச்சிக்கு எதிரான இயக்கம் அருவமானதல்ல
  ஐரோப்பிய மென்முடி வியாபாரிகள் வட அமெரிக்கர்களிடையே வளர்ச்சிக்கு முதலாவது எதிர்ப்பை ஆவணப்படுத்தினர். பூர்வீக அமெரிக்கர்களின்மீது அவர்கள் மிகவும் கோபம் கொண்டனர். ஏனென்றால் அவர்கள் கத்திகளையும் சமையல் பாத்திரங்களையும் போன்ற தேவையான பொருட்களை வாங்குவதற்குத் தேவையான பணத்தின் அளவுக்கு மட்டுமே விலங்குகளைப் பிடித்தனர். அதன் பிறகு அப்படிச் செய்வதை நிறுத்திக்கொண்டனர். ஏனென்றால் கட்டுப்பாடற்ற பணக் குவிப்பில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கவில்லை.
  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வருவோம். பயனற்ற பொருட்களைக் குவிப்பதிலும் முடிவற்ற வகையில் மாறிக்கொண்டிருக்கும் நாகரீக பாணிகளிலும் வாழ்க்கை சிறப்படைவதில்லை என்ற மிகப்பெரிய விழிப்புணர்வை பொருளின் கதை (Story of Stuff) என்ற ஒரு அறிவார்ந்த திரைப்படம் பிரதிபலித்தது. கணினியைத் தேவையற்ற வகையில் தரம் உயர்த்திக்கொள்ள நிர்பந்திக்கப்பட்ட ஒவ்வொருவரும், ஒரு மட்டத்தில், காரணமற்ற வளர்ச்சியின் முட்டாள்தனத்தைப் பற்றிப் பேசினர். “குறை, மறுபடியும் பயன்படுத்து, மறுசுழற்சி செய்” என்ற பழைய சுற்றுச்சூழல் மெய்க்கூற்று, “முதலில் மறுசுழற்சி செய், எப்போதாவது மீண்டும் பயன்படுத்து, குறைப்பதைப்பற்றி ஒருபோதும் பேசாதே” என்ற புதிய பேசப்படாத கூற்றுக்கு வழிவிட்டுவிட்டது. பெருங்குழும நிறுவனங்களுக்கு மறுசுழற்சி செய்வது என்பது திட்டமிட்ட காலாவதி ஆகிப் போகும் உற்பத்திக்கான வழியாக ஆகிவிட்டது.
  சுரங்கத் தொழில்துறையின் பால் ஆக்கிரமிப்பு தீவிரமாக இருக்கிறது. பூமியிலிருந்து மரங்களைப் பிடுங்கி எடுப்பது, தாதுக்களை அகழ்ந்தெடுப்பது, எல்லா இடங்களிலும் நீரை உறிஞ்சி எடுப்பது ஆகியவை மூலதனத்தைக் குவிப்பதற்கான அடிப்படைகளாக இருக்கின்றன. பல நூறு ஆண்டுகளாக, ரோமப் பேரரசுக்குக் கப்பல்கள் கட்டுவது தொடங்கி, வீட்டுக்கூரைகள் அமைப்பது போன்றவற்றுக்கு மரங்கள் வெட்டி எடுக்கப்படுவதைப் தனிநபர்கள் பார்த்து வருகிறார்கள். அமெரிக்கச் செம்மரங்களின் கடைசி 5 விழுக்காட்டைப் பாதுகாப்பதானாலும் சரி, தென் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள தாயக நிலங்களைப் பாதுகாப்பதானாலும் சரி, அண்மைப் பத்தாண்டுகளில் வேகமாக அதற்கு எதிர்ப்பு வளர்ந்துவருவதைக் காண்கிறோம்.
  தார் மணலிலிருந்து எரிபொருள் பிரித்தெடுப்பது காலநிலை மாற்றத்தின் பாதிப்பை உச்சநிலைக்குக் கொண்டுசெல்லக் கூடும் என்பதை மெய்யாக உணர்ந்ததால் ஆலபர்ட்டா குழாய்வழியை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர். உலகின் தெற்குப் பகுதியில் தங்கம், வெள்ளி, வைரம், கோல்டன் (அலை பேசியிலும், கணினியிலும் பயன்படுத்தப்படும் சில்லுகளுக்குப் பயன்படும் கனிமம்) போன்றவை அகழ்ந்தெடுக்கப்படுவதிலிருந்து மண்ணையும் சமூகங்களையும் பாதுகாப்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கானோர் அணிவகுத்துச் சென்று போராடி வருகின்றனர், பல நேரங்களில் போராட்டத்தில் மடிந்தும் வருகின்றனர். நைஜீரிய அரசாங்கத்துக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டுக்கு எதிரான ஒகோனி மக்களின் போராட்டம் எண்ணெய் அகழ்வுக்கு எதிரான பல மோதல்களில் ஒன்றாகும்.
  தொழில்துறை செயல்முறைகளுக்கு தண்ணீர் தேவை. ஒரே ஒரு மகிழுந்தைத் தயாரிக்க 3,50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. பூமியில் தண்ணீரைத் தேக்கிவைக்கும் அளவைவிட 15 மடங்கு வேகமாகத் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஏரிகள் வறண்டு வருகின்றன, மேலும் மோசமான வகையில் பாழ்படுத்தப்பட்டு வருகின்றன.(17) 2010 டிசம்பரில் நான் லிமாவுக்குச் சென்றபோது, மக்களுக்கு வழங்கப்படும் நீரை மாசுபடுத்துவதிலிருந்து பாதுகாப்பதற்கு பெரு எங்கும் 250 இடங்களில் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாகவே வந்திருந்ததைக் கண்டேன்.(18).
  ஆம், உண்மையில், ஏகாதிபத்தியத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் ஒரு பலமான தொடர்பு இருக்கிறது. ஏகாதிபத்தியமும் வீணடிக்கப்படும் உற்பத்தியும் வளர்ச்சிக்காக நிர்ப்பந்திக்கப்படும் பெருங்குழுமப் பொருளாதாரத் தின் இரண்டு பக்கங்களாகும். தனிப்பட்ட பங்குதாரர்களோ அரசியல்வாதிகளோ என்ன விரும்புகிறார்கள் என்பது பற்றி அவை கவலைப்படுவதில்லை. பயனற்ற மற்றும் வீணாகும் பொருட்களை உற்பத்தி செய்து மலைபோலக் குவிப்பதற்கான மூலப்பொருட்களைப் பெற உலக மேலாதிக்கமே பெருங்குழுமங்களுக்கு ஒரே வழியாகும். மூலப்பொருள்களின் சந்தை மீதான கட்டுப்பாட்டிற்கான முடிவற்ற போர்களுக்கு எதிராக அணிதிரளுவது என்பது (உணர்வுபூர்வமாகவோ அல்லது உணர்வற்றமுறையிலோ) பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக அணிதிரள்வது என்று பொருளாகும்.
 5. தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் உள்வாங்கிக் கொள்வதைத் தடுத்து நிறுத்தல்
  “வளர்ச்சிக் குறைப்புத் திட்டத்திற்கும் முதலாளித்துவம் பற்றிய சோசலிச விமர்சனத்திற்கும் இடையில் ஒரு வேறுபாட்டைக் கண்டடைய முயற்சி செய்கிற” லட்டூசின் பொய்யான நம்பிக்கைகளை மிகவும் செயலூக்கத்துடன் ஃபாஸ்டர் எடுத்துக்காட்டுகிறார்(19) வளர்ச்சிக் குறைப்புக் கோட்பாடு, அதனை ஆதரிப்போரில் ஒருவர், பொருளாதாரத்தை குன்றச்செய்வது ஒரு சந்தைப் பொருளாதாரத்துடன் முழுமையாகப் பொருந்தக் கூடியது என்று காட்டுவதற்கு முயற்சி செய்கிற ஒவ்வொரு முறையும் பலவீனப் படுத்தப்படுகிறது. இது ஒரு நிதானமான அரசுப் பொருளாதரக் கோட்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசியான ஹெர்மான் டேலியைப் பொருத்தவரை இது முற்றிலும் உண்மையாக இருக்கிறது.(20)
  பல ஆதரவாளர்களின் இந்தத் தாராள வாதம் பொருளாதாரத்தைக் குன்றச் செய்யும் கருத்தாக்கத்தை எந்தவகையிலாவது தனித்துவ மிக்கதாக ஆக்குகிறதா? உண்மையில், விடுதலை இயக்கங்களை ஊழல்மயமாக்குவதில் முதலாளித்துவத்திற்கு மிகவும் பரந்துவிரிந்த அனுபவம் உண்டு. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் இலட்சியவாத விருப்பங்களைச் சுற்றுச்சூழல் அழிவுக்கு பங்களிப்புச் செய்யும் நடத்தையாக திசைதிருப்புவது அதற்கு விதிவிலக்கல்ல.
  இது ஆற்றலைச் சேமிக்கும் கருவிகளின் விடயத்தில் அப்பட்டமான உண்மையாகும். 150 ஆண்டுகளாக, ஜெவோனின் முரண்கூற்றுப் பற்றி அறிந்துள்ளோம் – அதாவது ஆற்றல் திறனில் அதிகரிப்புகளைத் தொடர்ந்து, ஆற்றலைப் பயன்படுத்துவது அதிகரிக்கிறது. ஆற்றல் திறன்மிக்க வீடுகள், ஊர்திகள், முடி உலர்த்திகள், மற்றும் அவை போன்றவை உண்மையில் பெருங்குழுமங்கள் அவற்றின் விற்பனையை அதிகரிப்பதற்கு உதவுகின்றன, அதனால் ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கிறது, குறைவதில்லை. ஆற்றல் திறனை ஆதரிப்போர் உண்மையில் ஆற்றல் பயன்பாடு விரிவாக்கப்படுவதை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
  எரித்து அழிப்பது, குழிதோண்டிப் புதைப்பது, நச்சுப் பொருள் தயாரிப்பு அல்லது சுரங்கத் தொழில்துறை ஆகியவற்றறை எதிர்க்கும் எவர் ஒருவரும் எனது கொல்லைப்புறத்தில் வேண்டாம் (NIMBY-Not In My Backyard) என்ற மனநிலையில் தேங்கிப்போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். வலிமையற்ற வேறு ஒரு சமூகத்தில் நச்சுக்கழிவுகளைக் குவிப்பதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று அவசர அவசரமாக அரசியல்வாதிகள் ஆலோசனை கூறுகிறார்கள். முக்கியமான காரணி உணர்வுநிலையுடன் தொடர்புகொள்வதாக ஆகிறது, அதாவது பிரச்சனையை இன்னொரு இடத்திற்கோ அல்லது எதிர்காலத் தலைமுறை களுக்கோ தள்ளிவிடுவதன் மூலம் வளர்ச்சிப் பொருளாதாரத்தால் ஏற்படுத்தப்படும் சமூக மற்றும் சூழலியல் அழிவு தீர்க்கப்பட முடியாது என்பதை விளக்குகிறது.
  ஒரு குறுகிய வேலை நாளுக்கான போராட்டம் உற்பத்தியைக் குறைக்கச் செய்யும் எந்த ஒரு முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆனால் அதை உற்பத்தியை நிலைநிறுத்திக் கொள்வதற்கான அல்லது அதிகரித்துக்கொள்வதற்கான கருவியாகக் கூட எப்படி மாற்றுவது என்பதை நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே முதலாளித்துவம் புரிந்துவைத்துள்ளது. குறைந்த மணிநேரம் வேலையினால், குறைந்த நேரத்திலேயே அதே அளவுக்கு உற்பத்தி செய்ய தொழிலாளர்களை ஊக்குவிக்க முடியும் என்று தாராளவாதிகள் பலநேரங்களில் வாதிடுகின்றனர். ஒன்று சேர்க்கும் வரிசையில் (assembly line) வேலையின் வேகத்தை அதிகரிப்பது அல்லது பதினைந்து மாணவர்களுக்குப் பதிலாக, ஒரு வகுப்பில் இருபது மாணவர்களைச் சேர்ப்பது என இரண்டுமே சுரண்டல் விகிதத்தை அதிகரிக்கிறது.
  குறைந்த வேலைநேரத்திற்கும் (“40 க்குப்பதிலாக 30”) அதே ஊதியத்தை முதலாளிகள் அளித்தாலும் கூட, அவர்களால் சமூக ஊதியத்தைக் (இலவச பூங்காக்கள், சாலைகள், கல்வி, சமூகப் பாதுகாப்பு, மருத்துவப்பராமரிப்பு) குறைத்துக்கொள்ள முடியும்.
  மேலும்/அல்லது அவர்களால் பணவீக்க விகிதம் அதிகரித்து, 40 மணி நேரத்திற்கான ஊதியத்தில் தொழிலாளர்கள் வாங்கும் பொருட்களின் அளவைக் குறைத்துவிட முடியும். மிக முக்கியமாக அவர்களால் திட்டமிட்ட முறையில் பொருள்களின் காலாவதியாகும் விகிதத்தை அதிகரித்துக்கொள்ள முடியும், அதன்மூலம் பொருட் களின் நீடிக்கும்கால அளவைக் குறைத்து மிகுதியாக வாங்க நிர்ப்பந்திக்கமுடியும். ஒரே நிகழ்ச்சிப்போக்கு (வேலை நேரக்குறைப்பு), அது முதலாளித்துவத்தை ஒப்புக்கொள்கிற ஓர் இயக்ககத்தின் பகுதியா அல்லது முதலாளித்துவத்தை அகற்றி அதனிடத்தில் வைக்கப்படும் ஒரு புரட்சிகர திட்டத்தின் பகுதியா என்பதைப் பொருத்து, எதிர்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை பெருங்குழும எதிர் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
  பகுத்தறிவுள்ள எந்த ஒரு நபரும் நச்சுப்பொருள் உற்பத்திகளை மூடுவதையோ, வேலைநாளின் நேரத்தைக் குறைப்பதையோ, உலகின் ஏழை மக்கள் மிகுந்த பகுதிகளுக்கு மருத்துவப் பராமரிப்பை விரிவாக்கம் செய்வதையோ அல்லது குறைந்த ஆற்றல் தேவைப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையோ எதிர்க்கமாட்டார். இருப்பினும், முதலாளித்துவம் இந்தக் கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் அதன் ஆதரவாளர்களின் உண்மையான குறிக்கோள்களை திசைதிருப்பும் ஒரு வழியில் நிறைவேற்றுவதாகப் பாசாங்குசெய்யும்.
  மிகவும் எதிர்மறையான வகையில்தான் முதலாளித்துவம் உற்பத்திக் குறைப்பை அனுமதிக்கும் எனபது இந்தக் கோரிக்கைகளை தனித்துவமிக்கவையாக ஆக்குவதில்லை. அது எந்த ஓர் இயக்கத்தையும் அதன் எதிர்மறையாக மற்றும் முதலாளித்துவத்தின் விருப்பத்தை உறுதிப் படுத்துகிறது. முதலாளித்துவத்தால் திசைதிருப்ப முடியாத வகையில் ஒரு மதிப்புவாய்ந்த குறிக்கோளை எவ்விதம் தக்க வைத்துக் கொள்வது என்பதுதான் முக்கியமான பிரச்சனையாகும். ஓர் இயக்கம் அதன் கவனத்தை ஒரு குறிப்பான போராட்டத்திலிருந்து மனித விடுதலைக்கான ஓர் அனைத்து தழுவிய போராட்டமாக விரிவாக்கம் செய்வதன் மூலம்தான் இதை நிறைவேற்ற முடியும்.
  முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான முதன்மையான உந்துதலை எதிர்ப்பதைவிட அதன் இதயத்தைச் சென்று தாக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை. முதலாளித்துவ வளர்ச்சியைக் குற்றவாளியாக அடையாளப்படுத்திக்கொள்ளத் தவறுவது – காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது, பல்லுயிரினத்தைப் பாதுகாப்பது, நச்சுப் பொருள்களிலிருந்து சமூகங்களைப் பாதுகாப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கான தாராளவாத இயக்கங்களின் மிகப்பெரிய குறைபாடாகும். வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்களை நிராகரிப்பதைவிட, சோசலிசவாதிகள், அதன் முதலாளித்துவ எதிர்ப்பு சாராம்சத்தை ஆதரித்து அவற்றில் பங்கேற்க வேண்டும்.
  வளர்ச்சிக் குறைப்பை நாளையே தொடங்கிவிட முடியாது என்று கூறிக்கொண்டு, வளர்ச்சியை எதிர்க்கும் போராட்டங்களிலிருந்து விலகியிருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. இன்றைய மூலவளச் சுரண்டல் எதிர்ப்பு (அதாவது வளர்ச்சி எதிர்ப்பு) மோதல்கள் எப்போதையும் விடத் தீவிரமாக இருந்துவருகின்றன. அவற்றை ஆதரிப்பதிலிருந்து பின்தங்கியிருப்பவர்கள் தாங்கள் ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியமைக்க விரும்புவதாகக் கூறிக்கொள்வார்களானால், அவர்கள் உருவாக்கக் கூடிய சமுதாயத்தின் பொருளாதாரம் மேலும் மேலும் வளர்ந்து மனித உயிர்வாழ்க்கையையே சாத்தியமற்றதாக ஆக்கி விடும்.
  99% மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது மட்டுமல்ல பிரச்சனை, மாறாக 1% மனிதர்கள் புவிக்கோளைத் தீவிரமாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை இதனை வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுக இயக்கத்தில் பங்கேற்ற பலர் நன்கு அறிந்துள்ளனர். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் உழைப்பின் தனித்துவமிக்க ஆற்றலை அவர்கள் பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் சோசலிசவாதிகளின் மாபெரும் பலம் ஆகும். ஆக்கிரமிப்பதற்கான உற்சாகத்தையும், வேலையிடங்களில் தொழிலாளர்களின் பலத்தையும், உற்பத்தியைக் குறைப்பது மனித உயிர்வாழ்க்கையை பதுகாப்பதற்கு இன்றியமையாதது என்ற புரிதலையும் ஒன்றிணைக்கும் ஓர் இயக்கம்தான் உண்மையில் ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக இருக்கும்.

(இக்கட்டுரையின் ஒரு சுருக்கமான வடிவம் Climate and Capitalism வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. அதில் ஆர்வமூட்டும் விவாதம் எழுந்தது. டான் ஃபிட்ஸ், செயின்ட் லூயிஸில் உள்ள KNLC-TVயுடன் இணைந்து Green Time TV யின் தயாரிப்பாளராக இருக்கிறார். அமெரிக்காவின் பசுமைக் கட்சியில் (Green Party USA) செயலூக்கத்துடன் இருக்கிறார். fitzdon@aol.com இல் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.)

குறிப்புக்கள்.

 1. For a discussion of the way Karl Marx approached soil depletion, see John Bellamy Foster, The Ecological Revolution: Making Peace with the Planet (New York: Monthly Review Press, 2009).
 2. Frederick Engels, Socialism: Utopian and Scientific (in Karl Marx and Frederick Engels: Selected Works, vol. 3, Moscow: Progress Publishers, 1970). In his footnote (p. 149), Engels attributes this abundance to the 386% growth of production in England between 1814 and 1875.
 3. Robert Bryce, Gusher of Lies (New York: Public Affairs, 2008).
 4. J. Kaplan, The gospel of consumption: And the better future we left behind. Orion Magazine, May/June, 2008. http://www.orionmagazine.org/index.php/articles/article/2962
 5. G.S. Evans, Consumerism in the USA: A nation of junkies? Synthesis/Regeneration: A Magazine of Green Social Thought No 57, Winter 2012, 23-26.
 6. http://www.storyofstuff.org/movies-all/story-of-stuff/
 7. www.warresistors.org http://www.warresistors.org/
 8. Don Fitz, Eight Reasons US Healthcare Costs 96% More than Cuba’s-With the Same Results. (December 9, 2010). Also at http://links.org.au/node/2082.
 9. http://www.grist.org/. Ted Trainer, Renewable Energy Cannot Sustain a Consumer Society. (The Netherlands: Springer, 2007).
 10. Ted Trainer, Renewable energy cannot sustain a consumer society. Synthesis/Regeneration: A Magazine of Green Social Thought No 48, Winter 2009, 19-22.
 11. Engels, Socialism: Utopian and Scientific, 130
 12. Ibid, 125.
 13. Ibid, 126.
 14. John Bellamy Foster, Capitalism and degrowth: An impossibility theorem. Monthly Review, 62 (8), January 2011, 26-33. Also at http://links.org.au/node/2089.
 15. V.I. Lenin, Imperialism, The Highest Stage of Capitalism (In Selected Works, vol. 1, Moscow: Progress Publishers, 1970). 740.
 16. Ibid, 732
 17. Sam Bozzo, Blue gold: World water wars. Purpleturtle Films. (PBS Home Video, 2008).
 18. Cynthia Campos & Luis Poma, El agua de la discordia. La Revista de La República, Lima, December 19, 2010. 9-12.
 19. Foster, Capitalism and degrowth.
 20. Herman Daly, Economics in a full world, Scientific American, 293 (3), September 2005,100-107.

ஜூன் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *