எம்.வி.வியும் நானும்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ்

இராம. குருநாதன்

1994. ஒரு பகல்வேளையில் குடந்தை பஞ்சாமி அய்யர் உணவகத்தில் இருந்து எழுத்தாளர் விட்டல்ராவ்  உணவு உண்டுவிட்டு வெளியே வரும்போது என்னைப் பார்த்ததும், ”சென்னையிலிருந்து எப்போது வந்தீர்கள்” என்று என்னைக் கேட்டார். ”எனக்குச் சொந்த ஊர் இதுதானே” என்றேன். ”சரி இப்போ எங்க போறதா இருக்கீங்க” என்றேன். ”தோப்புத்தெருவுக்குப் போகணும். வழி தெரியலே” என்றார். ”நான் உடனே எம்.வி.வி சாரைப் பார்க்கப் போறிங்களா” என்றேன்.  சரியான கோடைக்காலம். அக்னி நட்சத்திர சமயம்.  வெய்யில் கொளுத்தியது. நானும் அவரும்  சைக்கிள் ரிக் ஷாவில்  ஏறி உட்கார்ந்தோம். பாதை மேடும் பள்ளமும் ஆக இருக்கவே  வண்டியைச்   சாமர்த்தியத்தோடு ஓட்டினான் வண்டிக்காரன். நாங்கள் பேசிக்கொண்டு வந்ததைக் கேட்டிருப்பான் போல! ’37 ஆம் எண் இதுதான், நீங்க வண்டியில் பேசிக்கொண்டிருக்கும்போதே நினைத்தேன். எம்.வி. வி சார் வீட்டுக்குத் தான் போறீங்க’ என்று சொன்ன அவனிடம் பேரம்  எதுவும் பேசாது கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுவாசல்  முன் இறங்கினோம். வாசலில் நின்றிருந்த வயதான பெண்மணியிடம் ”இது எம்.வி.வி சார் வீடுதானே” என்றோம், எம்.வி.விசாரோட துணைவியாராகத்தான் இருக்கும் என்ற ஊகத்தில், ”ஆமாம் அவர் உள்ளே இருக்கிறார் வாங்கோ”, என்ற அவரது அழைப்பின் பேரில் உள்ளே நுழைந்தோம். வாசலின் உட்புற வலப் பக்கத்தில் நெசவு  நெய்வதற்கான உபகரணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ”இவர்தான் கதை நெசவு செய்து ஓய்ந்திருக்கிறாரே. அதனால் இவைகளுக்கு வேலை இல்லை போலும்” என்றேன் விட்டலிடம். அவரும் சிரித்துக்கொண்டார். 

எம்.வி.வி! அவருக்கே உரிய ஆகிருதி. சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வாயில் வெற்றிலைப் பாக்கு போட்டிருந்தபடியால் அதனைப் புழைக்கடைப்பக்கம் சென்று துப்பிவிட்டு  வந்தார். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு எங்களோடு உரையாடத்தொடங்கினார். அவருடைய துணைவியார் மைசூர் பாக்கும், காப்பியும்  கொண்டுவந்து கொடுத்தார். இலக்கியச்சர்ச்சைகள் தொடர ஆரம்பித்தன. அதனைக் கண்ட அவருடைய துணைவியார், ‘இனி நேரம் போவதே தெரியாது’, என்று வேடிக்கையாகச்சொல்லிவிட்டு அடுக்களைப்பக்கம் சென்றுவிட்டார்.

நேரடியாக எனக்கு எம்.வி. வி  பழக்கமில்லை. ஆனாலும், சென்னையிலிருந்து அவருக்கு  முதன்முதலாக ஒரு மடல் எழுதியிருந்தேன்.  நான் எம்.வி.வியிடம் தாங்கள் சிவாஜி இதழில் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். தொடக்க காலக் கவிஞர்கள் குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணம்பாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளேன்.  உங்கள் கவிதை, வல்லிக்கண்ணன், க.நா.சு, கு.ப.ரா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி முதலானோரின் கவிதைகள் பற்றிப் பேச இருக்கிறேன் என்று கடித த்தில் குறித்திருந்தேன். அவர் கைப்பட எழுதியிருந்த கவிதைகளை எனக்கு அனுப்பி வைத்தார். அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இது 1992 இல் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு  அவரைக் கடைத்தெருவில் சந்தித்திருக்கிறேன். விட்டல் ராவோடு அவரை வீட்டில் சந்திப்பது இதுதான் முதல் தடவை.  அதற்கு முன்பே ஒரிரு முறை கடிதப்போக்குவரத்து மட்டும் இருந்ததுண்டு. (92-93)

என்னைப் பற்றிய முழுவிவரத்தையும் விட்டல் இருக்கும் போதுதான் கேட்டறிந்தார்.  குடந்தையில் நான் வசிக்கும் தெருப்பெயரைச்சொன்னதும்  உடனே அவர்,  ”அந்தத் தெருவில் வசிக்கும் சாமிநாதனைத் தெரியுமா” என்றார். அவர் என் சிற்றப்பா  என்று நான் சொன்னதும், ”அவ(ன்)ர் என் வகுப்புத் தோழ(ன்)ர்’ என்று சொல்லிக்கொண்டார். ”உன் சித்தப்பா, சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம் ஒன்றைச் சிறப்பாக நடத்துகிறார்” என்று கேள்விப்பட்டேன்.   அவனை நான் சாமு என்றுதான் அழைப்பேன்.  என்று சொல்லிக்கொண்டே, என்னால் நூலகத்திற்குப் போக இயலாத சூழ்நிலை.  ”அவர் இப்ப எப்படி இருக்கிறார்?  என்று கேட்டதோடு, அந்த  நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தைக் கூட வீட்டுக்குப் படிக்கக் கொடுக்கமாட்டா(ன்)ர்” என்று என் சிற்றப்பாவிடம் இருந்த பழைய கால நட்பைக் கதை போலச்சொன்னார். இதன் பின்னர் இலக்கிய விவாதம் தொடர்ந்தது. மாலை நான்கு மணி அளவில் அவரிடம் இருந்து விடைபெற்றோம். அவருடைய படைப்புகளைக் குறித்து விட்டல் அவரிடம் நீண்ட நேரம் பேசினார்.

1992  இல் ஜன ரஞ்சினி சபாவில்  அமரரான கரிச்சான் குஞ்சு நினைவாகப் படத்திறப்பு விழா  ஒன்று நிகழ்ந்தது. நண்பர் தேனுகாவும், ரவி. சுப்பிரமணியனும்  விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கோமல் சுவாமிநாதன், அசோகமித்திரன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். அன்று மாலையில் எம்.வி.வியின் காதுகள் நாவல் வெளியீட்டுவிழா. அசரீரி வாக்காக அந்த நாவல் சாகித்திய அகாதெமி விருது பெறும் என்று மேடையில் பேசிவிட்டேன். அந்த ஆண்டே அது விருது பெற்றது. அதனைப் பின்னொரு சமயம் நேரில் எனது வாழ்த்துதலைத் தெரிவித்தேன். அந்த நூலை வல்லிக்கண்ணனிடம் 1994 வாக்கில் தந்திருந்தேன். வல்லிக்கண்ணன் அதனைப் படித்துவிட்டு எனக்கு அஞ்சல் அட்டை ஒன்றை அனுப்பிவைத்தார். அந்த நாவலைக் குறை சொல்லியிருந்தார். இன்னும் சொல்லப்போனால் நன்றாக இல்லை என்பது அவரது கணிப்பு. அந்த அஞ்சல் அட்டையை இன்னும் வைத்திருக்கிறேன். ( வீட்டில் தேடுவது கொஞ்சம் சிரமம்- ஏதாவது ஒரு நூலின் உள்ளே நுழைந்துகொண்டு இருக்கும் என்ற நம்பிக்கை)   விட்டல்ராவுடன்  எம்.வி.வியைச்சந்தித்த  அன்று, காதுகள் பற்றிய வல்லிக்கண்ணனின் கருத்தை   எம்.வி.வியிடம் நேரடியாகச் சொல்லவேண்டி வந்தது. நான் சொன்னதும், எம்.வி.வி, நாகரிகமாக. அது ‘வல்லிக்கண்ணனின் தனிப்பட்ட அபிப்ராயம்’ என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டார். ஆனால் வல்லிக்கண்ணன் எனக்கு எழுதிய மடலைக் காண்பித்திருந்தால் கண்டிப்பாகக் கோபப்பட்டிருப்பார் என்றே கருதுகிறேன்.   

இறுதிக்காலத்தில் கண்பார்வை சரியில்லாத காரணத்தால் எம்.வி.வியால் எழுதமுடியாமல் போனது. இருப்பினும் இலக்கியத் தாகம் அவரிடம் இறுதிவரை இருந்துகொண்டுதான் இருந்தது.

சாகித்திய அகாதெமிப் பொதுக்குழுவில் உறுப்பினரான நான் இருந்த போது, அதன் சார்பாக எம்.வி.வி பற்றிய ஒருநாள் கருத்தரங்கு 22.01.2011 அன்று குடந்தை ஜன ரஞ்சனி சபாவில் சிறப்பாக நடந்தேறியது. எம்.வி.வி படைப்புகள் குறித்துக் கவிஞர் சிற்பி, ரவி சுப்பிரமணியன், இரா. மோகன்,  திருமதி  நிர்மலா மோகன், திருப்பூர் கிருஷ்ணன், கெளதம நீலாம்பரன் முதலியோர் எம்.வி.வி  படைப்புகள் குறித்துப் பேசினார்கள். குடந்தையில் சாகித்திய அகாதெமி கருத்தரங்கு  முதன்முதலாக நடந்தேறியது மறக்கமுடியாத அனுபவம். 

                                      எம்.வி .வி எழுதிய கவிதைகள்

வசன கவிதை

                                                 புரண்டழுதாள் 

( எம். விக்கிரக விநாசன் என்ற புனைபெயரில் கலாமோகினியில் (1945) வெளியான கவிதை. 1970 இல் சிவாஜியில் மீண்டும் அச்சேறியது)

                                                    (கதைக்களம்) ஹிமாசலத்தில்தவமியற்றும் மகேசன் மீது  மையலுற்ற  பார்வதி அவருக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அசுரனின் ஹிம்சையைப் பொறுக்க முடியாத தேவர்கள் தேவிக்கும் மஹாதேவனுக்கும்  மணமுடித்து அவர்களிடம் தோன்றும் குமரனைக் கொண்டு அசுரர்களை அழிக்க விரும்புகிறார்கள். ஆனால், நெற்றிக்கண்ண னின் தபஸ் களைந்து , அவர் பர்வத குமாரி மீது மோகம்கொள்ள வேண்டும்? அந்த மரண முயற்சியை மேற்கொள்ள அசுரர்கள் உடன்படவில்லை. இந்திரன் மன்மதனின்  உதவியை வேண்டினான். ஹரனையும் வெல்வேன் என்று வீரம் பேசி வஸந்தனுடன்  பனிவரை சென்று கங்காதரனைமலர்க்கணையால் அடித்தான் மன்மதன்.  சங்கரனின் சிந்தை கலைந்தது. சினம் மூண்டது. நெற்றிக்கண் திறக்கவும் மன்மதன் முட்டு நீறாய் முடிந்திட்டான்.

 1. கண்பட்டுப் புண்பட்டான்,
  விண்ணழகன்
  விழுந்து பட்டான்,
  மண்பட்டான்
  மன்மத்தன்
  மின்பட்ட பருத்தி போல,
 2. பட்ட கதி
  கண்ட ரதி
  பட்டுடலும்
  மொட்டினையும் தறிகெட்டுக்
  குலைந்தாட
  முறிவுற்றுச்
  சாய்ந்தாளே.
 3. அறிவுற்றாள் பின்
  அறிவுமற்றாள்
  அழக ழிந்த
  இடமடைந்தாள்
  கரிகண்டாள், வெறும்
  கரிகண்டாள்,
  தரையணைத்துப்
  புரண்டழுதாள்.
 4. கட்டித் தங்கக்
  கட்டு மேனி
  நட்ட கண்ணால்
  பட்டு வெந்து
  முட்டு நீறாய்
  முடிந்திட்டாய்,
  கரமிரண்டால்
  அரவணைத்துக்
  கண்விட்டுக் கரை தற்கும்
  சின்னம் காணேன்
  வண்ணமும் காணேன்;
  பின்னத் திலுஞ்சிறு
  பின்னமானாய்,
  என்ன செய்வேன்?
  என்ன செய்வேன்?
 5. கரும்பு வில்
  கருகியொழிய
  மலர்க்கணை
  மணை மணைந்தும்
  மயலென்னுள்
  மடியக் காணேன்,
  மர்மம் மறைந்தும்
  மர்மமே கண்டேன்.
 6. கருத்தனின் கருத்தே
  கருத்தின் பொருளே ,
  காதலின் காதலே.
  சாதலின் சாதனையே,
  சிங்கார ரச ஜீவனாய்,
  எங்கும் நிறைந்தவனே.
  மங்கிவிட்டாயின்று
  மங்கிவிட்ட திரிபோல
 7. கனலுக்குள் புனலானாய்,
  புனலுக்குள் கனலானாய்,
  வானுக்குள் வாயுவானாய்,
  வாயுக்குள் வானானாய்,
  மண்ணுடனின்று மண்ணானாய்,
  பண்கெட்ட பரமனாலே,
  மனமின்று முடங்கிட்டாய்
 8. நகமும் நாகமும்
  நிலவும் நீரும்
  அணியா யணிந்தும்
  அணியுறா அவலத்தால்
  முனிவுமிகப் பெற்ற
  முக்கண் முகக்கோரம்
  அழகுன்னை அழித்து
  விழுப்பம் விழைந்ததோ?
 9. நிறைமதிய முகம்கண்டு
  பிறைமதியம் குறைந்ததோ?
  குறைந்துனைக் குறைத்ததோ?
  நதிநங்கை மதிமயக்கி,
  சதி செய்து வதைத்ததோ?
  கருநாகக்குழல் கண்டு
  மறுநாகம் என்றஞ்சிச்
  சிறுநாகம் சிதைத்ததோ?
 10. சம்ஹரிக்கும் சாமிக்குச்
  சாம்பாருக்குப் பஞ்சமோ?
  சவம் காக்கும் தேவுக்குத்
  தவமொன்று தேவையோ?
  சிவமென்னும் பேருக்குச்
  சீவவதை தம்மமோ?
  எவனுக்கு மினியவனை
  எரித்துத் ததுவும் மதமோ?

( மன்மதன் நீறானதும் மஹாதேவன் மறைந்துவிட்டார்.. அவரை விளித்து)

 1. அறனுக்கு அரண்,
  அரன் என்றார்
  அறம் தன்னை
  அழித் தாயே!
  அழித்த லுந்தன்
  தொழி லென்றார்
  அறம் தன்னை
  அழித் தாயே!
  அசுரர் வசம்
  அல்லல் படும்
  அமரர் தம்
  துயர்தீர்ப் பான்
  அறம் செய்ய வந்தானை
  அதம் செய்தாய் பித்தனே!
 2. வெற்றியுற்றுக் களியாடும்
  வெறியுற்ற நெற்றிக்கண்
  பெற்ற பயன்
  நெறி மீறிச்
  செல்லவோ?
  ஆதியென்று
  பறைபறைந்து,
  பாதிநிலை
  மறந்தவனே
  சக்தி தன்
  துணைவனைச்
  சக்தியுள் எறிந்தாயே
 3. கற்புக்கனல்
  காய்ந்துந்தன்
  கண்கனலைக்
  காயுமுன்னம்
  கண்ணாளன்
  உயிருடலம்
  தந்து நீ
  உய்ந்திடுவாய் (மீண்டும் மதனை எண்ணி)
 4. என்னதான்
  எரிந்திடினும்
  உன்னுடனான்
  துணைவருவேன்
  அணுக மனம்
  செய்திடுவேன்
  எரிமூட்டிப்
  பெரும் எரிமூட்டி
 5. என்தெய்வம்
  என்தெய்வம்
  என்தெய்வம்
  நீயே!
  உருவிற்றும்
  உயிரற்றும்
  வெற்றியுற்றாய்
  நீயே!
  சரிவுற்றுச்
  சங்கரனும்
  எரியுற்றான்
  காமத்தால்
  வெற்றியுற்றோம்
  வெற்றியுற்றோம்
  வெற்றியுற்றோம்
  நாமே”

கிராம ஊழியன். மலர் 10. இதழ் 14. 1.5. 46
(கவிதை)
போதம்
(தாய் பாடுகிறாள்)

            என்னுடல் நாதமே 
              என்னுயிர் பிம்பமே 
            என்பெரும் சிருஷ்டியே, 
             என்னெழில் கனலே, 
            பெண்ணுடல் படைத்த 
             வெள்ளியின் உதயமே, 
            என்னரும் குழந்தாய், 
         உலகைப் பாராய்

            இப்பெரும் உலகில் 
             வந்தது மேநீ 
            அம்மா என்றே 
             அழுதாய் ஏனோ? 
            துளியாய் விழிக்கும் 
             உன்சிறு கண்ணால் 
            ஒளியைப் புதிதாய்க் 
             கண்டஞ் சினாயோ: 
            ஒளியும் இருளாய்த் 
             திகழ்தல் கண்டு 
            இல்லை புதுமை 
             என்றெண்ணி னாயோ?

           உண்மையே கண்டாய், 
            விளக்கம் பெறுவாய், 
           இல்லை புதிதாய் 
            ஒன்றும் இங்கே; 
           பழமையே எல்லாம் 
            அதற்கும் பழமை, 
           பழியெலாம் பெண்மேல் 
            சுமத்தும் பழமை; 
          புதுப்பெயர் தரித்துப் 
            புதுமை யாகி 
          இருளுக் கொளியெனப் 
           பெயரைச் சூட்டி; 
          ஒளியைப் பொய்யென 
            ஒதுக்கித் தள்ளி, 
          இருளைப்புதிதாய் 
           வாழ்த்தும் கண்டாய்!

          புதுமைப் பெண்ணைக்
           கற்பனை செய்து, 
          பழமைச் சிலுவையில் 
           பெண்ணை அறையும் 
          பண்டைப் பெருமை 
           படைத்த நாட்டில் 
          பெண்ணாய்ப் பிறந்தாய் 
           அழுகை அதற்கோ? 

         அழுகை நிறுத்திடு, 
           ஆறுதல் கொண்டிரு! 
         விழியும் செவியும் 
           அழகுறச் செய்யும் 
         பூணாய் ஒளிரும் 
          அகம் தந்திடுவேன் 
        ஆணுக் கடிமை 
          பெண்ணெனும் சிறுமை 
       அடியுடன் அழிக்கும் 
          திறன்தந் திடுவேன். 
       அம்மா என்றிரு 
          அழகாய்ச் சிரித்திடு
                         -- எம். விக்ரஹவிநாசன்

(திருச்சியிலிருந்து வெளிவந்த சிவாஜி இதழில் 8.6. 1945) ,

                கணக்கு

( உலகம் அறியாத ஒரு கணக்கு ஆசிரியர் ‘டியூசன்’ சொல்லித் தரும்போது விளைந்த விபரீத த்தை விளக்குகிறார்)

 1. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றேன்
  மூன்றும் மேலும் ஆகுமென்றாள்
  என்ன விந்தை எனவியந்தால்
  கன்னம் நன்றாய்ச் சிவந்து நின்றாள்
 2. இரண்டில் ஒன்று கழிந்தால் என்றேன்
  இருண்டு போகும் வாழ்வு என்றாள்
  கணக்குநான் சொன்னது என்றேன்
  எனக்கு நன்றாய்த் தெரியம் என்றாள்
 3. எட்டுடன் எட்டு பெருக்கு என்றேன்
  ஒட்டாத கண்ணை ஓட்டிக் கழித்தாள்
  எட்டாத மொழி சொன்னாய் என்றால்
  எட்டும் ஒட்டும் உள்ளத்துக்கு என்றாள்
 4. வகுத்துச் சொல்இதனை என்றேன்
  உகுத்த நீரால் மார்பை நனைத்தாள்
  என்ன பெண்ணே அழுதாய் என்றால்
  பின்னவிடை வந்ததே என்றாள்
 5. கூட்டலும்நீ அறிவாய் என்றேன்
  பிரிதல்தான் அறியேன் என்றாள்
  கழிதலும் சுழித்தாய் என்றால்
  கழித்தாள் பென்னம் பெருமூச்சு
 6. பெருக்கல் உனக்கு வருமா என்றேன்
  பெருக்கினாள், பெரும் கண்ணாறு
  வகுத்தலும் உனக்கு பூஜியம் என்றால்
  நூற்றுக்கு நூறு உமக்கு என்றாள்! -- எம். விக்ரஹவிநாசன்

    தொகுப்பு — பேராசிரியர் இராம. குருநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *