எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமன்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ்

தி.ஜானகிராமன்

இலக்கிய வட்டம் இதழில், “மூன்று இலக்கிய ஆசிரியர்கள்“ என்ற தலைப்பில் தி.ஜா  ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  எம்.வி.வி, கிருத்திகா, பராங்குசம்  ஆகியோரே அந்த மூவர். அவர்களில் ஒருவரான எம்.வி.வி. குறித்த செய்திகளை மட்டும்  இக்கட்டுரையிலிருந்து எடுத்து இங்கே தனியாகப் பதிவிடப்படுகிறது

பண்டிதர்களிடமும் வாசகசர்களிடமும் பிழைப்புத்  தருபவர்களிடமும் தர்மோபதேசிகளிடமும் பயப்படுகிறவர்கள் உண்மையைச் சொல்லப் பயப்படுகிறார்கள்.  அந்தக் கிலியில் உண்மை அவர்களுக்கே நாளாவட்டத்தில் புலனாகாமல் போய் விடுகிறது.   தான் ஒரு மனிதன் தனக்கு ஒரு தனித்தன்மை உண்டு என்பதையும் மறக்கப் பழகிவிடுகிறார்கள். உண்மையைக் காணாமலிருக்கலாம். ஆனால் அதைத்தேடும் முயற்சியாவது தன்னுடையது, தனக்கென்ற ஒரு வழி உண்டு என்று திடம்கூட இல்லாமல் ஏதோ வச்யத்துக்குள்ளானது போல தன்னைப் பிறரின் வழிக்கு ஆட்படுத்திக் கொள்பவரும் நல்ல இலக்கியம் சிருஷ்டிக்க முடியாது.

நல்ல விமர்சகர்கள் ஆத்திரப்படுவது இந்தத் தனித்தன்மை இல்லாததைக் கண்டு தான் என்று தோன்றுகிறது. ஆனால் தனித்து இயங்க தைரியம், தியாகம், நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பதில் ஆசையில்லாத சுதந்திரப்பாங்கு இவை எல்லாம் வேண்டும். 1947-1964இல் இந்த மாதிரி தைரியசாலிகள் இருக்கத்தான் இருக்கிறார்கள். மூன்று பேர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.  மற்றவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அவர்களை நாடு அறிந்திருக்கிறது. வாசகர்கள் படித்திருக்கிறார்கள். பொதுவான அறிமுகம் அல்லது பேர்களையும் குறிப்பிடுவேன். அவர்கள் பராங்குசம், கிருத்திகா, எம்.வி.வெங்கட்ராம் மூவரும்.

எம்.வி.வெங்கட்ராமனை அறிமுகப்படுத்தவில்லை. ஞாபகப் படுத்துகிறேன். அதுகூட நகைப்புக் கிடமான காரியம்தான்.  ஏனென்றால்  வெங்கட்ராமன் இருபத்தெட்டு வருஷங்களாக எழுதி வருகிறவர். பதினாறு வயதிலிருந்தே எழுதி வருகிறார் என்று ஞாபகம். மாணவராக இருந்தபோதே அவர் கதைகள் பழைய மணிக்கொடியில் வந்து கொண்டிருந்தன. பின்பு கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி, ஜோதி, அவரே ஆரம்பித்து நடத்திய தேனீ  முதலான பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கிறார். வாசகனை நிமிர்த்தி உட்காரவைக்கும்  அதிர்ச்சியும் ஆற்றலும் உள்ள எழுத்து அது. சோதனை சோதனை என்று விமர்சகர்களின் அளவுகளையே வைத்துப் பார்க்கும் பொழுது சிறுகதைத்துறை ஒன்றிலேயே அவர் செய்துள்ள சோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வந்துள்ள பல விமர்சகர் கட்டுரைகளில் அவற்றைப் பற்றி யாரும் அவ்வளவாகப் பேசியதில்லை. நான் ஆரம்பத்தில் சொன்ன காரணமாகத் தான் இருக்கவேண்டும். ஒரு விமர்சகன் எல்லாவற்றையும் படித்திருக்கத்தான் இயலாது.

எம்.வி.வெங்கட்ராமனை அறிமுகப்படுத்தவில்லை. ஞாபகப் படுத்துகிறேன். அதுகூட நகைப்புக் கிடமான காரியம்தான்.  ஏனென்றால்  வெங்கட்ராமன் இருபத்தெட்டு வருஷங்களாக எழுதி வருகிறவர்.

“நித்திய கன்னி”, “இருட்டு”, “உயிரின் யாத்திரை”  என்ற மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. வயிற்றுப் பாட்டுக்காக அவர் மொழிபெயர்த்த சில நூல்களும் வெளியாகியுள்ளன. சிறுகதைகள் வரவில்லை. சிறுகதைகள்தான் “விக்கமாட்டேங்கு” தாமே!

வெங்கட்ராமனின் கதைகள் மேகம் போன்றவை. அவற்றின் உருவ ஓரங்கள் விமர்சகர்களின் வரைபடக்கோடுகளை ஒட்டிவராமல் துரத்திக்கொண்டோ உள் தள்ளியோ இருக்கலாம். ஆனால் அது வடிவமாகிவிடும். தனித்தன்மை பெற்றவையாக இருக்கும்.

மகாபாரதத்திலும் நம் நாட்டின் பழைய இலக்கிய மரபுகளிலும் நன்கு தோய்ந்தவர் வெங்கடராமன். மகாபாரத சம்ப5ங்களையும்  பாத்திரங்களையும் புதுக் கண்கொண்டு பார்த்த அவருடைய பல கதைகள் சொந்த சிருஷ்டிகள்தான். வடமொழி இலக்கிய விமர்சகர் ஆனந்தவர்த்தனன் நாடகாசிரியனுக்குச் சிபாரிச செய்துள்ளதுபோல, கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, தன் சொந்தக் கற்பனையால் புதிய செயலும் ஊக்கமும் பெறும்படி பாத்திரங்களைத் தூண்டியிருக்கிறார். நித்யகன்னி என்பது இப்படி வந்த ஒரு புதிய முயற்சி அபாரமான சுய அனுபூதியுடன் மாதவியின் உள்ளத்தில் தோய்ந்து, ஒரு பெண்ணின் ஏக்கங்களையும் கனவுகளையும் சித்திரிக்கிறார் வெங்கடராமன்.

“இருட்டு”, “உயிரின் யாத்திரை” ஆகிய இருநாவல்களும் மனிதனின் ஆத்ம விசாரத்தையும் இரட்டை வாழ்க்கையையும்  பாத்திர உருவில் தெளிவுபடுத்திக் காட்டுகிற புதிய முயற்சிகள். அவருடைய தைரியமும் தனித்தன்மையும் விசிறிக்கொண்டு நம்மைத் தாக்குகிற படைப்புகள் அவை. வெங்கடராமன் 1947க்குப்  பத்து வருடங்கள் முன்பாகவே, எழுதத் தொடங்கி, சிறுகதையில் பல வெற்றிகள் அடைந்தவர்.  1947-1964 என்று சொல்லும்பொழுது இந்த மூன்று நூல்களும் எனக்கு ஞாபகம் வந்தன. நித்ய கன்னி 1947க்கு முன்னமே எழுதப்பட்டதாக ஞாபகம். பாதகமில்லை.  நடுவில் பல ஆண்டுகள் அவர் எழுதுவது தடைப்பட்டிருந்தது.  எனவே நித்திய கன்னியையும் இந்தக்காலத்தில் சேர்க்கலாம்.

நித்யகன்னி என்பது இப்படி வந்த ஒரு புதிய முயற்சி அபாரமான சுய அனுபூதியுடன் மாதவியின் உள்ளத்தில் தோய்ந்து, ஒரு பெண்ணின் ஏக்கங்களையும் கனவுகளையும் சித்திரிக்கிறார் வெங்கடராமன்.

அவருடைய சிறு கதைகள் என்று புத்தக உருவில் வரப்போகின்றவோ, தெரியவில்லை.  எழுத்தாளர்கள் கூட பிரசுரகர்த்தாக்களாக மாறும்போது பக்கத்துக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு, சர்வ வில்லங்க சுத்தியாக உரிமையை எனக்கு எழுதிக் கொடு என்று இன்னும் கேட்கிற இந்தநாளில் இத்தகைய நல்ல புத்தகங்கள் நாள் பிடிக்கத் தான் செய்யும்.

தனித்தன்மை, உண்மை, ஒரு ஆன்மிக நிர்ப்பந்தம் இந்த மூன்றும் உந்துவதால்தான் எம்.வி.வி. கிருத்திகா, பராங்குசம் – மூன்று பேரும் எழுதுகிறார்கள். இவர்களைப் போல ஆன்மிக வெற்றியுடன் எழுதுகின்றவர்களின் எண்ணிக்கை இப்பொழுது மிகக் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. குமாஸ்தா முதல் ஆள்கிறவர் வரையில் தைரியத்தையும் ஆன்மிக சுயேச்சையையும் இழந்து நிற்கிற சுதந்திர இந்தியாவில் தைரியசாலிகளைக் கண்ட நான் மரியாதை செலுத்துவது எனக்கே பெருமை தான்.

மூன்று இலக்கிய ஆசிரியர்கள் கட்டுரையிலிருந்து
தொகுத்தவர் – ராணிதிலக்
நன்றி: இலக்கிய வட்டம், ஜுலை 1964

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *