எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை என்கிற சித்திரக் கேன்வாஸ்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ்

வியாகுலன்

அருகருகே சுவாரஸ்யமிக்க நண்பர்கள் வசிக்கிறார்கள். யார் அந்த சுவாரஸ்யமான நண்பர்கள்? ஒருவர் கரிச்சாங்குஞ்சு என்கிற நாராயணசாமி, இன்னொருவர் தி.ஜா என்கிற தி.ஜானகிராமன், மற்றொருவர் எம்.வி.வி என்கிற எம்.வி.வெங்கட்ராம். கு.ப.ராஜகோபாலனின் எழுத்தால் கவரப்பெற்று தங்கள் ஆளுமைக்குள் இலக்கியத்தை உருக்கொள்ளச் செய்த பாடைப்பாளிகள் மூவரும்.

எம்.வி.வெங்கட்ராம் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு சிறப்பான எழுத்துமுறை எந்தெந்த வகைகளில் சாத்தியமாகிறது. அதன் உத்தி, உருவம், உள்முகம் இந்தக் கட்டமைப்புகளை மீறி இன்னொன்றின் உறவையும் அது தேடுகின்றது. அது தேடுகிற அழகே அந்தப் படைப்பிற்கான கலையம்சத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது.

அப்படி சேர்த்த படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம் அவர்களை 1994இல் காதுகள் என்ற அவரது நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைக்கப்பெற்ற காலக்கட்டத்தில் கும்பகோணம் தோப்புத் தெருவில் அமைந்திருந்த எம்.வி.வி அவர்களின் வீட்டிற்கு நாவலாசிரியர் சி.எம்.முத்து அவர்களோடு அவரைச் சந்திக்க இருவருமாகப் போனோம். அரசலாறு ஓடுகிற வடக்கரையிலிருந்த தோப்புத் தெருவில் அமைந்திருந்தது அவரது வீடு.

ஒவ்வொரு ஊரிற்கும் ஒரு அம்சம் உண்டு. கும்பகோணம் நிறைய அம்சங்கள் வாய்க்கப்பெற்ற நகரம். எழுத்து ஜாம்பவான்கள் நிறைய பேர் வசித்த நகரம். பழைய அக்ரஹாரத்து வீட்டின் சாயல் மாறாத அந்த வீட்டில் எம்.வி.வி அவர்களைச் சந்தித்தத் தருணம் நினைவாக இருக்கிறது.

எம்.வி.வெங்கட்ராம் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு சிறப்பான எழுத்துமுறை எந்தெந்த வகைகளில் சாத்தியமாகிறது.

சற்று இருள் சூழ்ந்த அந்த ஹாலில் வீட்டின் முற்றத்திலிருந்து வந்து கொண்டிருந்த சற்றேயான வெளிச்சத்திலும் குழந்தையின் முகம் படைத்த ஒரு பேரழகனாகத் தெரிந்தார். யார் வந்திருக்கிறோம் என்ற அறிமுகப் படலங்களுக்குப் பிறகு சி.எம்.முத்து அவர்களை பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டார். நாங்கள் அவரைச் சந்தித்தபோது ஏறக்குறைய கேட்கும் திறனை அவர் செவிகள் இழந்திருந்தன. அவர் கேட்டுக்கொண்ட படி சி.எம்.முத்து பாடினார். அவர் பாடி முடித்ததும் அவர் சன்னமான குரலில் மொட்டக் கோபுரம் பஞ்சாமி ஹோட்டலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கு சி.எம்.முத்து பாடியது அவருக்குக் கேட்டிருக்கும் என்று தோன்றவில்லை. மற்றவர்களுக்கு இல்லாத நுட்பமான ஒன்று எழுத்தாளர்களுக்கு இருக்கும். ஒரு முப்பது வருஷங்களுக்கு முன்பு காரைக்குடியில் டி.டி நகர் வீட்டுக்கு கோண்ங்கி வந்திருந்தபோது அந்த வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்கள் எல்லோரும் படுத்திருந்தோம். அப்போது நடுநிசி தாண்டி கோணங்கி என்னை எழுப்பினார் “பக்கத்துல எங்கேயோ புலி உறுமுறது மாதிரி சத்தம் கேக்குதுடா” என்றார். மறுபடி மறுபடி அதையே சொல்லிக்கொண்டிருந்தார். நான் “அதெல்லாம் ஒன்னுமில்ல படுங்க கோணங்கி” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். பிறகு விடிந்ததும் எல்லோருமாக கிளம்பி மெயின் ரோட்டிற்கு தியேட்டர் அருகில் தேநீர் அருந்துவதற்காக வந்தோம். அப்போது தியேட்டர் எதிரிலிருந்த திடலில் சர்க்கஸ் துவங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. கூடாரத்தின் பின்பக்கத்தில் உண்மையாகவே சர்க்கஸ் புலி கூண்டிற்குள்ளிருந்து உறுமிக்கொண்டிருந்தது. அந்த உறுமல்தான் முந்தின இரவில் கோணங்கியுடைய காதுகளுக்குள் நுட்பமாக கேட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிதானமான நுட்பத்தை நான் தோப்புத் தெரு வீட்டில் வைத்து சந்தித்த எம்.வி.வெங்கட்ராம் அவகளிடம் உணர்ந்தேன்.

அவரது பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதையும் அப்படியொரு நுட்பமான மன அவஸ்த்தைகளுடன் கூடிய மனிதர்களின் கதைதான். வெகுஜென வாசகர்களிடம் வராதுபோன எழுத்துமுறையாக அமைந்துபோன இவரது சிறுகதைகள் இலக்கிய பூர்வமான சிற்றிதழ் தன்மையான கதைகளாகவும் இதிகாசங்களை புனைவாக மாற்றும் வித்தையை அறிந்தவையாகவும் இருக்கின்றன.

தமிழ் சிறுகதைக் கலைமரபில் எம்.வி.வெங்கட்ராம் அடைந்திருக்கிற வித்தகம் அவ்வளவு லேசுப்பட்டதல்ல. கதைக்களனோடும் கதாமாந்தர்களோடும் உறவாடத் தெரிந்த ஒரு கலைஞனுக்கே அது சாத்தியம். அந்த வகையில் எம்.வி.வி பைத்தியக்கார பிள்ளை சிறுகதையில் அவர் கையாண்டுள்ள நேர்த்திகள் குறிப்பிடப்படவேண்டியவை. தாயை ஒரு தெய்வீகப் பிறவியாய் பார்த்து வருகிற நம் இலக்கியப்போக்கிலிருந்து ஒரு மாறுபட்ட தாயைக் கதாபாத்திரமாக மாற்றியுள்ளார் எம்.வி.வி.

அவரது பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதையும் அப்படியொரு நுட்பமான மன அவஸ்த்தைகளுடன் கூடிய மனிதர்களின் கதைதான்.

அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையேயான சம்பாஷனைகள் கோபதாபங்களோடு ‘பைத்தியக்காரப் பிள்ளை’ கதை தொடர்கிறது. இந்த சிறுகதையின் வாசிப்பு அனுபவத்தில் எம்.வி.வி யின் கவனமெல்லாம் ஒழுங்கற்ற மனதைச் சுமந்தலையும் கதாப்பாத்திரங்களை கலையாக்குவதிலேயே இருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. நேரடியான வருணனைகளோ மரம், செடி, பறவை என்று இயற்கைக்கோ சுற்றுச்சூழலுக்கோ இடம் கொடுக்காத தன்மையோடு கதை மனிதர்களைச் சுற்றிச்சுற்றியே வருகிறது. தறி சத்தமும் பக்கத்து வீட்டின் சேவல் கூவுகிற சத்தமும் மட்டுமே விதிவிலக்கு.

பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதை எப்போதும் திருப்தியடையாத மனநிலையில் இருக்கிற ஒரு தாயோடு காலம் தள்ளிக்கொண்டிருக்கிற ஒருவனின் கதை. இதன் உளவியல் அர்த்தங்களை எம்.வி.வி கையாண்டுள்ள லாவகம் முக்கியமானது.

ஆற்றாமை, கனகாம்பரம், நூருண்ணிசா போன்ற மனித உணர்வுகளைக் கட்டித் தழுவி உலகப் புகழ்பெற்ற கதைகளைத் தந்த கு.ப.ரா வின் சீடரல்லவா எம்.வி.வி. மனித தோற்றத்திற்கு அப்பால் ஒளிந்திருக்கும் ஒரு விதமான உணர்ச்சியை கலாவடிவமாக்கியுள்ளார். உணர்ச்சிப்பூர்வமான சிருஷ்டிப்பில் கலையம்சம் இழந்து போகாமல் மனித உணர்வுகளே கலையின் தாதுக்களாக மாற்றியமைத்த நேர்த்தியும் இச்சிறுகதையின் பலமாகப்படுகிறது.

எம்.வி.வி யிடம் காணக்கிடைக்கின்ற இன்னொரு முக்கியமான அம்சம் உதிரிக் கதாப்பாத்திரங்கள். இந்தக் கதையில் வருகிற சீமா என்கிற சர்வர் கதாப்பாத்திரம் கலை உதிரிதான். சீமா மாதிரியான மனிதர்கள் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட எதற்குள்ளும் அகப்படாமல் ஒரு எளிய வாழ்வைச் சுகமாக எதிர்கொள்கிறாவர்கள். அப்படிப்பட்ட மனிதன் கலாப்பூர்வமானவன். அவன்தான் கலைஉதிரி. எம்.வி.வி யும் மனித வாழ்வின் மகோன்னதமான உண்மைகளை கலை உதிரிகளிடமே கண்டுபிடித்து நமக்குத் தருகிறார்.

உணர்ச்சிப்பூர்வமான சிருஷ்டிப்பில் கலையம்சம் இழந்து போகாமல் மனித உணர்வுகளே கலையின் தாதுக்களாக மாற்றியமைத்த நேர்த்தியும் இச்சிறுகதையின் பலமாகப்படுகிறது.

ஒரு வகையில் நம்மிடமிருந்து நம்மையெடுத்து நம்மிடமே தருகிற வித்தையையும் அவர்கள்தான் அறிந்திருக்கிறார்கள்.  எனவே பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதையைப் பார்க்கும்போது மனித மனதின் விம்மல்கள் கலையாக மலர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர தர்க்கரீதியன அறிவுக்கெல்லாம் எம்.வி.வி யிடம் இடமில்லை. மனித வாழ்வின் இன்பத் துன்பங்கள் எதார்த்த நடையில் உணர்ச்சி தளத்திலேயே இயங்கியிருக்கிறது. இயல்பிலேயே எம்.வி.வி யிடம் அமைந்துபோன நடையென்பது அடித்துப் பேசும் நடையல்ல. இசையிலேயே ஒன்றிய தாள கதியைப் போல ஒரு இனிமையும் உளவியல் பகுப்பாய்வு விசயங்களை கையாளும் லாவகமும் கைவரபெற்ற கதையாக பைத்தியக்காரப்பிள்ளை சிறுகதை அமைந்துள்ளது.

எம்.வி.வி ஒரு சித்திரக்காரர். புறவயப் பார்வையிருந்தும் அகவயப் பார்வையிலிருந்தும் தனது கதாப்பாத்திரங்களைச் சித்திரமாகத் தீட்டுகிறார். இந்தயத்தனிப்பே ஆளுமையாக எம்.வி.வி யிடம் உருக்கொண்டுள்ளது.

கலைஞன்தான் காலத்திற்கான கனவுகளை தாங்கி நிற்கிற திசைமானி. அவந்தான் அந்தக் காலக்கட்டத்தின் மனித இருப்புகளையும் அவர்களது மனோபாவங்களையும் வெகுவான சாத்தியங்களுக்குள் படைப்பின் மூலமாக வாசக வெளிகளுக்குள் உளவவிடுகிறான்.

எம்.வி.வெங்கட்ராமின் ரகசிய அறையிலிருந்து ராஜம் வருகிறான். அம்மா வருகிறாள். டினோபால் சலவை செய்த உருப்படி போல் இருக்கிற வெள்ளைசேவல் ஒன்றும் வருகிறது. பங்கஜம், சீமா வருகிறார்கள். புகைவண்டியிலிருந்து பயணிகள் இறங்குவதுமாதிரி கதாப்பாத்திரங்கள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.வி.வி யின் பைத்தியக்காரப் பிள்ளை என்ற சிறுகதையிலிருந்து அவரது படைப்பு வெளியின் பிரதானக் கூறுகளாக சில விஷயங்களை உணர முடிந்தது. வாசலில் நிற்கின்ற ஒரு மரம் ஏதோ ஒரு தடையாக மௌனியின் கதாப்பாத்திரத்திற்கு தத்துவார்த்த ரீதியாக உருவெடுக்கிறதென்றால் எம்.வி.வெங்கட்ராமின் கதாப்பாத்திரத்திற்கு உளவியல் ரீதியாக உருவெடுக்கிறது.

தனது எழுத்தைப் பற்றி அவரே கூறும்போது என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் என்கிறார். பதினாறு வயதில் எழுத துவங்கி இலக்கியப் படைப்பு மட்டுமல்லாமல் பொழிப்பெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு நூல்கள் என 200 படைப்புகளைத் தந்துள்ளார். அவரைப் பற்றியத் தேடல் அவருக்குள் தொடரும்போது யாரும் இல்லாத இடத்தில் ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம் என்ன. வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது என்கிறார். இப்படித்தான் அவரது படைப்புகளும் தோன்றுகின்றன.

பல்வேறு வகையான புரிதல்களுக்கு உள்ளாகி பைத்தியக்காரப் பிள்ளைச் சிறுகதை ஒரே நேர்கோட்டுப் பாதையை இயங்குத்தளமாகக் கொண்டுள்ளது. அதன் இயங்குதளத்தின் முக்கியமான காலக்கட்டத்தில் அந்த மரபிற்கு வளம் சேர்த்த குறிப்பிட்ட எழுத்தாளர்களில் ஒருவராக எம்.வி.வெங்கட்ராம் இருந்திருக்கிறார். இருக்கிறார்.

2 thoughts on “எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை என்கிற சித்திரக் கேன்வாஸ்

  1. வியாகுலனின் “பைத்தியகார பிள்ளை ” குறித்த பார்வை ஒரு நுணுக்கமான உளவியல் புரிதல் சார்ந்த உள்வாங்கல். அதே நீரோட்டத்தில் அமைந்த கட்டுரை. கோணங்கியோடு புலி உறுமல் கேட்ட இரவில் நானும் உடனிருந்தேன். சிறப்பான பதிவு…..

  2. வியாகுலனின் தெளிந்த உளவியல் பார்வையிலிருந்து வெளிப்பட்டுள்ள கட்டுரை. “பைத்தியக்கார பிள்ளை ” சிறு கதையின் நடுநரம்பை தொட்டுப் பார்த்துள்ள சிறப்பான பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *