சா

“எல்லோர் வீட்டிலும் இருக்கும் கடுகு”

மதிப்புரை

சிவசங்கர்.எஸ்.ஜே.

வானம் பூமி, ஒளி இருள், நீர் நெருப்பு, போன்ற ஆதி இரட்டை எதிர்மறைகளில் ஒன்று வாழ்வும் மரணமும். மனித குலத்தின் தீராப்புதிர். மனிதர்களின்  பிறப்போடு  கூட வளரும் வளர்ப்பு மிருகம். மனிதக் குழுவின் நகைச்சுவை உணர்வுக்கான ஊற்று. புத்தர் தொடங்கி எல்லா ஞானிகளாலும் உணரப்பட்ட, விளக்கப்பட்ட தத்துவக்கூறு. இருத்தலின் அச்சமூட்டும் , முதிர்ச்சியூட்டும் விளங்கா விடுகதை. மரணம்  யாராலும் விடுவிக்க முடியாத கணக்கு. மரணம் எல்லா வீடுகளிலும் இருக்கும் கடுகு..

மரணம் குறித்த விவரணைகள் தத்துவ உருவம் கொண்டவை. அது பற்றிய கதைகள்  மெய்யியல் சாயல் கொண்டவை. வயது கூடக்கூட மரணம் ஒவ்வொருவருக்குள்ளும் தலை சுற்றிப் பறந்து கூடு கட்ட காத்திருக்கும் பறவை. மரணத்தை இலகுவாக கையாண்ட பிரதிகள் குறைவு. அதிலும் புனைவுகள் வழி மரணத்தை அணுகுவது தவிர்க்க முடியாமல் தீவிர விசாரத்திற்குள் இழுப்பவை. உலகம் முழுக்க மரணத்தை மையம் கொண்ட புனைவுகள் உண்டு. அவை சிக்கலான தத்துவ முடிச்சுகளுக்குள் பயணிப்பவை.

பத்தாவது மாடியிலிருந்து குதிக்கத் தயாராகும் பெயரற்ற கதைசொல்லியின் குரலாக விரியும் சா நாவல்; மரணங்களின் கதையை சாமந்திப்பூ வாசனையோடு சொல்ல முயல்கிறது. மரணத்திற்கென்று ஏதேனும் பிரேத்தியேக வாசனை உள்ளதா? ஒருவருக்கு ஊதுபத்தி; மற்றவருக்கு திரி கருகும் வாசனை; வேறொருவருக்கு பூ வாசம். ஆனாலும் மரணம் என்னவோ ஏதோவொரு வாசனையோடு தன்னை ஒர்மைப்படுத்திக் கொள்கிறது. சிறுவயதில் மரணத்தை எதிர்கொள்வது அதிர்வூட்டுவது. மரித்தவர் நெருக்கமானவர் என்றால் இன்னும் சிக்கல். பின்னாளில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதை சந்தித்தவர் அதீதத்தின் கையில் சிக்கிக்கொள்ளும் சாத்தியம் உண்டு. “சா”விலும் அம்மா; அம்மாவுக்குப் பிறகு அம்மாவாகவே ஆன அக்கா சாந்தியின் மரணம் கதைசொல்லியை கடும் நெருக்கடிக்கு உட்படுத்துகிறது. பிறகு தொடரும் எல்லா சாவுகளுமே முதல் சாவின் பிம்பமான சாமந்திப்பூவாக மாறிவிடுகிறது. கதையின் ஓட்டத்தில் எதிர்கொள்ளும் எல்லாமே சாமந்தியின் உருவகங்கள். அதன் வாசனை.

 ப்ராய்ட் வாழ்வு விருப்பு சாவு விருப்பு என இரண்டு உள்மன ஆற்றல்களை விவரிக்கிறார்.  THANATOS- கிரேக்கத்தின் மரணக் கடவுள்  EROS  -காமத்தின் கடவுள். முதலில் தான் என்கிற ஈகோவுக்கும் ஈரோஸ் என்கிற வாழ்வுணர்ச்சிக்குமான போராட்டமே வாழ்வு என்ற ப்ராயிட் பின்னர் சாவு ணர்ச்சியைக் கண்டுகொண்டார். வெறுப்பு குரோதம் இவையெல்லாமே சாவு விருப்பத்தின் புறத்தோற்றங்கள் என வகுத்தார். மனிதர்கள் வாழ்வதற்கான இச்சை கொண்டவர்கள் மட்டுமல்ல சாவதற்கான இசையும் உள்ளூர நனவிலியில் வைத்திருப்பவர்கள் என்பதை அறிந்தே தானட்டோஸை முகப்படுத்தினார். ஈரோஸ் அன்பையும் ,காதலையும், சமூகப் பிணைப்பையும் உற்பத்தி செய்ய தானடோஸ் திரும்பத் திரும்ப வெறுப்பை செலுத்திக்கொண்டே இருக்கிறான். இரண்டும் பின்னிப் பிணைந்தே வாழ்வு நகர்கிறது. இரண்டுமே ஆற்றலைக் கொடுக்கிறது. ஆற்றல் கட்டுகடங்காமல் உச்சத்தில் தானட்டோஸ் தற்கொலையை தேர்கிறான். ஈரோஸ் காமத்தை அடைகிறான். காமமும் மரணமும் எழுதித் தீராத கருக்களாக பொலிவுடன் திகழக் காரணம் இந்த விருப்புறுதி.

சா வில் கதைசொல்லியின் பரிணாமம் தானட்டோஸின் பிடியிலிருந்து நழுவி ஈரோசுக்கு திரும்புகிறது. இடையில் மீண்டும் மரணத்திற்கு பின் வாழ்விற்கு. சுருக்கமாக சொல்லப்பட்ட கதையில் வாழ்வும் சாவும் மாறி மாறி அடுக்கப்படுகிறது. மொழியும் கதையும் இந்த அமைப்பிலேயே சுழல்கிறது.

சாவின் வாசனையில் தொடங்கும் நாவல் இறுதிக்கு முந்தைய மூன்றாம் பகுதியில் மீண்டும் வாழ்விற்கான நம்பிக்கைக்கு திரும்புகிறது. இழப்புகளை மட்டுமே சுமந்து வெற்றிடமாகிப் போன பின் புதிய மனிதர்களின் நெருக்கம் சிறு நிரப்புதல். வாழ்வு தரப்போகும் ஏதோவொன்றின் முன்னறிவிப்பு. புது மனிதர்கள் கதைசொல்லிக்கு அவன் இழந்த ஒன்றை திருப்பித் தருகிறார்கள் .அது தற்செயலா? தீர்மானிக்கப்பட்டதா? வாழ்வின் சில விநோதங்களைப் பார்த்தால் நிச்சயமாக அறுதியிட்டு எதையும் சொல்ல முடியவில்லை. சமீபமாக கேரளத்தில் கணவன் வீட்டில் இருக்கும்போது பாம்பு கடித்த பெண் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றப்பட்டாள். சரியாக மூன்று மாதம் கழித்து  அம்மா வீட்டில் ஓய்வுக்கு வந்திருந்தவள் ஒரு மதிய நேரம் வாயில் நுரை தள்ள செத்துகிடக்கிறாள். அந்த அறையில் ஒரு பாம்பு இருப்பதை பின்னர் அறிகிறார்கள். இது தற்செயலா? தீர்மானிக்கப்பட்டதா? இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் குழப்பமே மிஞ்சும். வாழ்வை பொறுத்தவரை எளிமையான தர்க்கங்களே சரியானவை. ஆப்பிரிக்க படமொன்றில் அந்த கதை நாயகனிடம் “இத்தனைக்குப் பிறகும்  இன்னும் ஏன் வாழ்கிறாய்” என்று நண்பன் கேட்பதற்கு இப்படி சொல்வான்:

“சும்மா just to know how the story ends..” “சா” வின் கதைசொல்லிக்கும் இது பொருந்துகிறது. அவன் கதையின் முடிவுக்கு காத்திருந்தபடி மரணங்களை நினைத்து  வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

“சா”வின் குறைகள் என பார்த்தால் மரணம் போன்ற கனமான விஷயங்களை எடுத்துக் கொள்ளும்போது பயில வேண்டிய அடர்த்தி இன்னும் செழுமைப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயங்களின் தொடக்கத்தில் வரும் மேற்கோள்கள் சில அத்தியாயங்களில் பொருத்தமே இல்லாமல் துருத்திக் கொள்கிறது. மூன்றாம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சாமி கதைசொல்லியின் அறைக்கு புதிதாக தங்குவதற்கு அழைத்துவரும்; பெரியவர் கதாபாத்திரம்; கதைக்கோ கதைசொல்லிக்குக் கூட தேவை இன்றி தொக்கி நிற்கிறது. என்றாலும் பெரும் பரப்பையோ அதிகப் பக்கங்களில் மட்டுமே ஒரு நாவலை எழுத வேண்டும் என்கிற கற்பிதத்தையோ கலைத்துப்போடுகிறது “சா”. மிகச்சிறிய அத்தியாயங்கள் கொண்டு கூட ஒரு நாவலை எழுதிவிட முடியும் என்கிற நம்பிக்கையை பலருக்கும் “சா” தருகிறது.

போகிற போக்கில் நாய்க்கு அரசு என்ற பெயரிடுவது. பெயரிட்டவுடன் அதற்கு வெறி ஏறிவிடுகிறது. பலரின் கால்களை பதம் பார்த்துவிடுகிறது. வேலை தேடும் கதைசொல்லியிடம் பெயரைக் கேட்டவர்களைவிட சாதியைக் கேட்டவர்களே அதிகம். சாதியை பொறுத்து வேலையைப் பிரித்து கொடுகிறார்கள். எட்டு வழி சாலைக்கு தனது ஒரே வாழ்வாதாரமான சாமந்தித்தோட்டம் பறிபோகும் நிலையில் நிலத்தோடான கதைசொல்லியின் பிணைப்புகள் அதன் இழப்பு  என மௌனமான அரசியல் தூவல்களும் “சா”வில் உண்டு. பெரும் நாவல்களின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது “சா” சொல்லும் மற்றுமொரு உண்மை.

மரணம் பற்றிய நாவல் என்ற போதிலும் எந்த இடத்திலும் தொய்வின்றி எளிமையாக, நேரடியாக சொல்ல வந்ததைச் சொல்கிறது. பெயர்கள்/வாசனை/ என்பவை திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்தாலும் உறுத்தவில்லை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் சந்தித்த மரணங்களை நினைவூட்டி திரும்ப கதைக்குள் இழுக்கிறது நாவல். வடிவ ரீதியாக கச்சிதம் கூடி வந்திருப்பது திருப்தியளிப்பது.

அதிர்ச்சி மதிப்பீடுகளோ, பெரும் தத்துவ உரையாடல்களோ வலிந்து திணிக்கப்படாமல் உணர்ந்த ஒன்றை எளிமையாக உணர்த்தும் முயற்சியாக “சா” உருவாகியிருக்கிறது. ஜெபிக்கு அன்பும் நல்வாழ்த்துக்களும்.

சா நாவலைப் படித்து முடித்ததும்  மரணம் பற்றி எப்போதோ நடந்த உரையாடலில் மலையாள பாதிரி ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

 “எடோ மரிக்காதிரிக்கெணுமெங்கில் ஜெனிக்காதிரிக்கணும்”.  “சா” வும் வேறு வார்த்தைகளில் இதைத்தான் சொல்கிறது போல.

சா – நாவல்
கு.ஜெயபிரகாஷ்
ஆதி பதிப்பகம் திருவண்ணாமலை
பக்கங்கள் 128 ரூ.120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *