ஆர்த்ர் ரைம்போ

ஒரு கவிஞரின் வாக்குமூலம்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

மிகவும் அபூர்வமான காட்சிகள் என் கனவி்ல் வருவதுண்டு. என்னுடைய கவிதையில் வானில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றை எழுதியிருந்தேன். அது ஒரு கனவு. அதுபோல, ரைம்போவின் கனவில் கடல் காட்சியளிக்கிறது.  அதன்மீது தங்கக் கப்பல்கள் செல்வதாக எழுதுகிறார். கனவுகள், கற்பனைகள், மனக்கிலேசங்கள் யாவும் கவிதைக்கான ஊற்றாக மாறக்கூடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம் குற்றமுள்ள மனதை, அதன் கீழ்மையை முழுக்க நம்மால் எழுதமுடிகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லத்தான்வேண்டும். மேலும் அதிகாரத்திற்கு முன்பாக, கடவுள்களுக்கு முன்பாக நம்மால் என்ன செய்யமுடியும்?

ஆர்தர் ரைம்போ என்றொரு கலகக்காரன், மதம், கடவுள், நிறுவனம், சமூக மதிப்பீடுகளுக்கு எதிரான கவிதைகளை எழுதிக் குவித்த ஒரு கவி. ஒருபால் உறவு விரும்புபவன். காதலனை அதிகமும் காதலித்தவன். இல்லை, அதிகக் காதலன்களைக் கொண்டவன்.  உணர்ச்சிக்கொந்தளிப்பில் எழும் மொழியை, அதன் கட்டுங்கடங்காதத் தன்மைமீது நீந்திக் கடந்தவன்.  இயேசுவின். கிறித்துவத்தின் கருணையை நிராகரித்து, மனிதர்களிடம் கருணையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், ஒரு சிறுகுழந்தைதான் ரைம்போ.

19ஆம் நூற்றாண்டின் பாதியில், ஞானக்குழந்தையாக அறியப்பட்ட ரைம்போ, பிரெஞ்ச் குறியீட்டு இயக்கக் கவிஞராக அறியப்பட்டவர்.  1854 ஆண்டு பிறந்து, 1891 ஆண்டு, 37 வயதில் இறக்கும் ரைம்போ, தன் 16 வயதிலிருந்து 19 வயதிற்குள் கவிதை எழுதி முடித்த, குழந்தை ஷேக்ஸ்பியர்  என்று அழைக்கப்பட்டவர்.  அவருடைய மிகச்  சிறந்த  படைப்பாகக்  கருதப்படும், A Season in Hell  என்ற உரைநடைக் கவிதையைத் தமிழில், “நரகத்தில் ஒரு பருவ காலம்” என்ற தலைப்பில் கார்த்திகைப் பாண்டியன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மிகச் சிறிய புத்தகம் என்றாலும், ஒவ்வொரு வாசகனும், கவிஞனும், படைப்பாளியும் தன்னகத்தே கொண்டு வாசிக்க வேண்டிய எழுத்துதான், இத்தொகுதி.

முதல் பகுதியாக, நரகத்தின் நுழைவாயில் என்ற தலைப்பில், ரைம்போவின் வாழ்க்கையும் படைப்பையும் மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் கார்த்திகைப்பாண்டியன் எழுதுகிறார்.  நரகத்தில் ஒரு பருவகாலம் எழுந்த சூழல்,  அதன் தன்மைகள்,  தாக்கங்கள் குறித்து விவரிக்கிறார்.  இந்தத் தொகுதியை  மொழிபெயர்ப்பதற்குமுன்,  அதனுடைய  3 ஆங்கில மொழிபெயர்ப்பினை ஒப்புநோக்கி, ஒவ்வொரு வரியும் மூன்று புத்தகங்களிலும் சரிபார்க்கப்பட்டு, ரைம்போவின் மனோநிலைக்குச் சரியாக இருக்கும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளதைக் குறிப்பிடுகிறார், கார்த்திகைப் பாண்டியன். 

இரண்டாம் பகுதியாக, ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கைக் குறிப்பு தரப்பட்டுள்ளது. 1854 அக்டோபர் 20 தொடங்கி (பிறப்பு), 1891 நவம்பர் 10 (இறப்பு) வரையான ரைம்போவின் வாழ்வை, படைப்புக்காலத்துடன் ஒப்பிட்ட குறிப்பாக இப்பகுதி அமைந்திருக்கிறது.

மூன்றாம் பகுதியாக, 9 பகுதிகளைக்கொண்ட நரகத்தில் ஒரு பருவகாலம் தொடங்குகிறது. முன்னுரை, தீய ரத்தம், நரகத்தின் இரவு, வெறி பிதற்றல்-1, வெறிபிதற்றல்-2, சாத்தியமற்றவை, மின்னல், காலை, பிரியாவிடை, தலைப்புகளிலான பகுதிகள் உள்ளன.

நான்காம் பகுதியாக, குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கவிதையில் இடம்பெற்றுள்ள பெயர்களுக்கான குறிப்புகள் பற்றிய தெளிவு அவை.

0

முன்னுரை

விவரிப்பாளரின் தண்டனையைக் கோடிட்டுக்காட்டுவதாக அமைந்த இப்பகுதி, கதையை “ஒரு ஆத்மாவின் நாட்குறிப்பிலிருந்து வரும் பக்கங்கள்” என்பதின் கதையை அறிமுகப்படுத்துகிறது.  துர் அதிர்ஷ்டமே கடவுளாகக்கொண்டதாக நினைக்கும் ரைம்போ, கொள்ளைநோயாலும், துப்பாக்கி அடிக்கட்டைகளைக் கடிப்பதாலும் தன் மரணத்தை அடைய விரும்பகிறார். கருணையின் திறவுகோலால், தன் விருப்பங்களை மீட்டெடுக்கவிரும்புகிறார் ரைம்போ.  இந்தப் பகுதியை வாசிக்கும்போதுதான், ரைம்போவின் தீவினைகள் நமக்குக் குறிப்பாக, ஒரு மின்னலாகத் தோன்றி மறைகிறது.

தீய ரத்தம்

இந்தப்பகுதி காலியர் பற்றி, ரைம்போவின் ஒழுக்கம், மகிழ்ச்சியின் விளைவு பற்றிக் கூறுகிறது. ஆதவனின் ஒளியில் நீராடும் சுவர்களின் கீழே, உடைந்த பானைகளின் மற்றும் முட்செடிகளின் மீது, ஒரு தொழுநோயாளியைப் போல அமர்ந்திருப்பதாக ரைம்போ எழுதுகிறார். தேசமும் அரசியலும்தான், மனிதர்கள் என்ற கீழ்மைப்பட்ட இனம்தோன்ற காரணம் என்கிறார் ரைம்போ. காலிய வம்சாவளிகளி்ன் உடைகளை, அவர்களின் காட்டுமிராண்டித்தனங்களைத் தன் அடையாளமாகக் காண்கிறார், ரைம்போ.  அவர்களிடமிருந்தே தன்னுடைய தீயொழுக்கம், கடுஞ்சினம், காமம், வஞ்சகம், அதனினும் மேலான சோம்பலைப் பெற்றிருப்பதாக நினைவுகூர்கிறார், ரைம்போ.  தன்னைக் கறுப்பனாகவும் மிருகனாகவும் கருதும் ரைம்போ, அநாதி காலம்தொட்டு கடவுளுக்காகக் காத்திருந்தாலும், ஏசுவுக்காக அல்ல. அவர் எப்போதும் சமூகத்திற்கு எதிரே, வெளியேதான் வாழ்ந்திருக்கிறார். கடற்கரையில் மது அருந்தியபடி உறங்குவதுதான் சிறந்த சங்கதியாகக் கருதும் ரைம்போ, தன்னை ஒரு போதும் கிறித்தவனாக ஒத்துக்கொண்டதில்லை. 

இயேசுவைக் கிண்டலடிப்பதில் ரைம்போவைத் தவிர யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.  அவர் எழுதுகிறார்; ‘இயேசு கிறிஸ்து உங்களுடைய மாமனாராக வீற்றிருக்கும் திருமணத்தில் தேனிலவுக்கான வாய்ப்பென எதுவும் இருக்காது”

நரகத்தின் இரவு

ரைம்போவின் இறப்பு மற்றும் நரகத்திற்குள் நுழைந்த தருணத்தை விளக்குகிறது. கொடுஞ்கனவுகள், களிவெறி, தீம்பிழம்புகளின் கூட்டில் உறக்கம் ஆகியவையே சொர்க்கம் என்கிறார் ரைம்போ. தூய்மையான எண்ணங்களே தன்னை அழிக்கும் ஒன்றாகக் கருதும் அவர், வேண்டி நிற்கும் கிராமத்தானை தன் அடையாளமாகக் கொள்கிறார். இயேசுவின் நம்பிக்கை வாதத்திற்கு எதிராக, ஊதாரித்தனத்தை முன்வைக்கிறார் ரைம்போ.  தன்னுடைய நரகம் என்பது கோபம், அகங்காரம், காமத் தழுவலாலான கூட்டிசைக் கச்சேரி என்கிறார். 

வெறிபிதற்றல்-1

ரைம்போவுக்கும் பால் வெர்லைனுக்குமான ஒருபால் உறவு (காதல்) பற்றி இப்பகுதி எடுத்துரைக்கிறது.  நரகத்தின் மணமகன் ரைம்போவுக்கும், முட்டாள் கன்னிப்பெண் வெர்லைனுக்குமான வெறிப்பிடித்த காதலைக் கூறம் பகுதிதான் இது. தவறான வாக்குறுதிகளால் அன்பைக் கவர்ந்த வெர்லைனின் காதலும் அன்பும் விரிவாக, இப்பகுதியில் பேசுகிறார் ரைம்போ. தம்மை விநோதத் தம்பதிகள் எனக் குறிப்பிடும் ரைம்போ, வெர்லைனின் முத்தங்களும் அரவணைப்புகளும் சொர்க்கத்தை ஒத்திருந்தன என்கிறார். தாயின் குணங்களையும் சகோதரியின் அன்பையும் ஒருசேர பெற்றிருப்பவர் வெர்லைன் என்கிறார் ரைம்போ. இப்பகுதியில் வெர்லைனின் மனநிலை, வெர்லைனுக்கு ரைம்போ மீதான காதல் பற்றித் துல்லியமாக எழுதுகிறார் ரைம்போ.

வெறிபிதற்றல்-2

இப்பகுதியில் ரைம்போவின் தவறான நம்பிக்கைகளையும், முறிந்த கனவுகளையும் குறிப்பிடுகிறது. பைத்தியக்காரத்தனத்தின் கதை என்கிறார் ரைம்போ.  வார்த்தையின் ரஸவாதம் என்று கருதப்படும் இப்பகுதியில் கவிதை எழுதுதல் பற்றியும், கவிதையின் புதிய மொழி குறித்தும் எழுதுகிறார்.  உயிர் எழுத்துகளுக்கான நிறங்களையும், கவிதைக்கான புதுமொழியையும் கண்டடைவதாகக் கூறுகிறார். மாயவிநோத தர்க்கங்களை ரைம்போ, தன்னுடைய மாய வார்த்தைகளின்வழி விளக்கினார்.  மனப்பிறழ்வே புனிதம் என்று கூறும் அவர், கதைப்பாடல்களின்வழி இந்த உலகத்திலிருந்து விடுபட எண்ணுகிறார். தனக்கான சாபம், வானவில்லின் வடிவத்தில் இருப்பாக எண்ணுகிறார்.

ரைம்போவின் கவித்வம் என்பது அவருடைய மனப்பிறழ்வும் கனவும்தான் என்ற சிறிய கோட்டை வரைகிறது இப்பகுதி. ரைம்போவின் கவிதைக்கோட்பாட்டை இப்பகுதியலிருந்து நாம் கண்டடையலாம்.

சாத்தியமற்றவை

நரகத்திலிருந்து விடுபடத்தோன்றும் ரைம்போவின் குரலாக இப்பகுதி அமைந்துள்ளது. ஒருவன் தன்னிடமிருந்து தப்பிக்க நிராகரிப்பு அவசியம் என்கிறார். அறிவியலும் கிறித்தவமும் கண்டுபிடிக்கப்பட்டபின்பே, மனிதன் தன்னைத் தானே முட்டாளிக்கிக்கொண்டான் என்கிறார் ரைம்போ.  இது ஒரு நவீனத் துயரம் என்கிறார். ஆன்மாவின் வழியாகவே ஒருவன் கடவுளைக் கண்டுபிடிப்பது என்பது துரதிர்ஷ்டமான சங்கதி என்கிறார். இயேசு கிறித்து. அறிவியல், குரான், தொன்மையான வரலாறு, கீழத்தேய ஆன்மீகம் யாவும் நிராகரிக்கப்படவேண்டியவை என்பதே இப்பகுதி.

மின்னல்

மனித உழைப்பையும், இருபது வருடக் கல்வியையும் கேள்விக்குட்படுத்துவதே இப்பகுதி. உழைப்பு, முன்னேற்றம் என்ற வார்த்தைகளுக்கு எதிரான சொல்லாகச் சோம்பலை அணிகிறார் ரைம்போ. அறிவியலிலும் பிரார்த்தனைகளிலும் வெம்மை உணர்வதாகக் குறிப்பிடுகிறார். நித்தியதிற்கான எந்தவொரு நம்பிக்கையையும இழப்பதே வாழ்வெனக் கருதுகிறார், இப்பகுதியில் ரைம்போ.

காலை

தன்னுடைய நரகத்தின் கதையைப் பேசிமுடிக்கும் பகுதி என்கிறார் ரைம்போ.  தன் வாழ்வின் நரகம் இயேசுவின் திருக்கரங்களால் திறக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.  இதயம், உயிர், ஆன்மா மூவரும் மூன்று அரசர்கள் என்று சொல்கிறார். 

பிரியாவிடை

இந்த பகுதி இலையுதிர் காலம் முதல் வசந்த காலம் வரை பருவங்களின் மாற்றத்தைக் குறிக்கிறது. “இப்போது ஒரு உடலுக்கும் ஒரே ஆத்மாவுக்கும் உண்மையை வைத்திருக்க முடிகிறது” என்று கூறி, நரகத்தின் வழியாக தனது பயணத்தின் மூலம் கதை மிகவும் நம்பிக்கையுடனும் வலிமையுடனும் மாறிவிட்டதாகக் குறிப்பிடுகிறார் ரைம்போ.  இப்பகுதியில் ரைம்போ தன் குணங்களை வரையறுக்கிறார்.  மந்திரவாதியாக, தேவதையாக, நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்டவராக, பொய்யான வாழ்க்கை வாழ்ந்து, நட்போடு நீளும் கரம் ஒன்றுகூட இல்லாதவராகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார்.  உண்மையை ஓரே உடல், ஆன்மாவுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள இயலும் ரைம்போ, நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் செல்லுங்கள் என்கிறார்.

0

ரைம்போவை வாசிக்கும்போதெல்லாம் குற்றம், தண்டனை என்ற ஒன்றுமில்லை என்று புரிகிறது. குடி, போதை வஸ்துகள் என்று அலைந்து திரிந்து எழுதியவர். தீய இரத்தமும், நரகத்தின் இரவும் போதையின்காலத்தில் எழுந்த எழுத்துகள்.  அறம், சமூக நியாயங்கள், கடவுள், உழைப்பு, முன்னேற்றம் ஆகிய வார்த்தைகளுக்கு எதிரான வாழ்வையும் எழுத்தையும் கொண்டவராக ரைம்போ இருப்பதை இப்புத்தகம்வழி நாம் உணரச் செய்யலாம். ஒரு சமூக மனிதனுக்கும், ஒரு கவிஞனுக்குமான ஒருவேறுபாடை, பிரிவைத் தன் கவிதைகள், வாழ்க்கை வழியாகக் காட்டியவராகவே ரைம்போ தெரிகிறார். எல்லைக் கோட்டிற்கு வெளியேதான் வாழ்க்கை இருப்பதாக. எல்லைக்கோட்டை அழிப்பதிலும் மீறுவதிலும்தான் வாழ்க்கை இருப்பதாக ரைம்போ சொல்லாமல் சொால்லி இருக்கிறார், தன் வாழ்க்கை மற்றும் கவிதைகள்வழியாக.

0

ரைம்போவின் இந்த எழுத்தை வாசிப்பவர்கள். தனக்குள்ளும் ஒரு ரைம்போ இருப்பதை உணரத்தான் செய்வார்கள்.

நரகத்தில் ஒரு பருவகாலம் | ஆர்தர் ரைம்போ | தமிழில்:கார்த்திகைப் பாண்டியன்|
எதிர் வெளியீடு | டிசம்பர் 2017,| ரூ.75)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *