அரோரா

கணங்களின் நடனம்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

சாகிப்கிரான் கவிதைகளின் அறிமுகம், வண்ணச்சிதைவு தொகுப்பின் வழியாகத்தான் அமைந்தது. படிமமும் குறியீடுகளும் நிறைந்திருந்த தொகுப்பு அது. வாழ்வின் கணங்களில் தோன்றும் தத்துவம் உரையாடல் கொண்ட தொகுப்பு முழுவதும் மொழி முதன்மையாகியிருந்தது. ஓருசேர அபியையும் சி.மணியையும் பிரமிளையும் ஞாபகம்செய்த வரிகள் அவை. மொழி ஒரு குறியீடாகி, படிமமாகி, அரூபக் கவிதைகள் அவை. சாகிப்கிரானின் ஆளுமை முழுவதும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தது. சமீபத்தில் வந்த ‘அரோரா’ அப்படியில்லை. குறைந்தபட்சம் ஐந்து தடவையாவது வாசித்திருப்பேன்.

அரோரா என்பது துருவ ஒளி. வட, தென்துருவங்களில் பச்சையாகவும் நீலமாகவும் படரும் இரவின் ஒளி. இது இயற்கையின் வாணவேடிக்கையாகவும் ஒளிக்கோலமாகவும் கருதப்படுகிறது என்ற குறிப்பையும் வாசித்திருக்கிறேன். வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்மீது சூரியனின் கதிர்கள் பாயும்போது ஏற்படும் ஒளிச்சிதறல்களே இந்த துருவ ஒளி, பச்சை, நீலம் மட்டும்தானா? இல்லை. வாயுக்களில் கலவையைப் பொறுத்தே பச்சை, நீலம், சிவப்பு. ஊதா நிறங்கள் தோன்றி, ஒரு திரைச்சீலையைப்போல் அசையும். சாகிப்கிரான், இத்தொகுப்பு முழுவதும் திரைச்சீலைக்கு வெளியே சிறிய நடனமாடுகிறார்.

வெவ்வேறு மனநிலைகளில்தான் கவிதை எழுதப்படுகின்றன. வாழ்வு ஒரு பட்டகம் எனில், எழுதுபவன் ஒளி எனில், அந்த எழுத்து, பட்டகத்தின் உள்ளே சென்று வெளியேறும்போது வெவ்வேறு மனநிலைகிளைகளில், வெவ்வேறு சிதறலாகப் பரவுகிறது. அன்பு, கருணை, உயரம், மேடு, துயரம், மகிழ்ச்சி, தனிமை என்று பல மனோநிலைகளைத்தான் அரோராவில் ஒளிவீசுகின்றன.

கருத்த பாறைகளுக்கிடையே அருவி கொட்டிக்கொண்டிருக்கிறது. அதைக் காண்கிறேன். பாறைகள் வட்டங்களாக. அருவி நீள் சதுரமாக மாறும் காட்சியையும், இக்காட்சியைத் தவிர்த்து பாறையின் இறுக்கமும், அருவியின் தண்மையையும் காண்கிறேன். இதுவே அரோராவின் தன்மை.

அர்த்தத்திலிருந்து அநர்த்தத்திற்கு, அதர்க்கத்திலிருந்து தர்க்கத்திற்கு, அன்பிலிருந்து வன்முறைக்கு, துயரத்திலிருந்து மகிழ்ச்சிக்கு உருமாறும் கவிதைகள்தான் இவை. காஃப்காவுக்கு கரப்பான் எனில், சாகிப்பிற்கு பல்லி. அதுவும் ஒருசொல்தான் தீர்மானிக்கிறது, ஒரு மழையைப்போல. வெளி, காலம், பிரக்ஞையின்மை, அறிவு எனப் பல தளத்தில் புழங்கும் கவிதைகள் இவை. 

கடுகும், நாயும், மனிதர்களும், பைத்தியமும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கணங்கள் தீர்மானிக்கின்றன. மலை முகடாகிறது, முகடு மலையாகிறது. சிரசின் மேல் இருக்கும் கல், உயரத்தை ஒரு கல் அளவு உயர்த்துகிறது. அதே அளவு பாதாளம் இன்னும் ஆழமாகிறது. உயரமென்று பள்ளமென்று ஒன்றும் இல்லை என்பதான எழுத்து சாகிப்கிரானுடையது. தத்துவம் கற்பனையாலும், கனவாலும் எழுதப்படுகிறது. அதனாலேயே ஒற்றைச்சாலையில் ஓடியோடி வரும் ஒரு பனைத்தாள் தனிமையைப் போக்குகிறது. சுவரில் நிகழும் விநோத நடனங்கள், அவனைத் துயரத்திலிருந்து கற்பனை வடிவங்கள் வழியாக மீட்கிறது.

அறிவியலும் கணிதமும் ஒரு காட்சியாக அமைந்து, கவித்வ மனோநிலைகளைத் தந்துவிடுகிறது. பட்டகம் கவிதையை வாசிக்கும்போது, நாமும் அக்காட்சியுடன் பயணிக்கிறோம். கவிதையில் ஒலி இல்லை. ஆனால் எல்லா ஒலிகளும் மறைந்திருந்து ஒலிக்கின்றன. ஒலிகள் மட்டும் அல்ல, நிறங்களும் தான். துயரத்தின் அருகில் இருக்கும் சிவப்பும், விதிகளை மீறிப்போகும்போது எரியும் விதியின் சிவப்பும் சிவப்பாக இல்லை. நிறம் என்பது நிறமின்மையே என்பான மெய்மை அது. கருந்துளை பற்றிய கவிதைகள் சிலவும் உள்ளன. பாரதியின் கவிதையொன்றினை எடுத்து உரையாடும் கவிதையின் முடிவு, கருந்துளையில் மறையும் பராபரமாகிறது.

ஒரு கவிதை என்பது முடிவதில்லை. ஒரு கவிதை தனக்குள் பல முடிவிலிகளைக் கொண்டிருக்கிறது, ஒரு கணத்தைப்போல. அரோராவின் கவிதைகள் பலவும் ஒரு முடிச்சாக இருக்கிறது. அந்த முடிச்சை நாம் அவிழ்த்துவிடும்போது, ஒரு புதிர்த்தன்மையில் இன்னொரு முடிச்சாக மாறிவிடுகிறது. ஒரு கவிதையில் வருவதுபோல, நாம் ஒரு பூனை. பெருகும் அதிசய அர்த்தங்களைக்கொண்ட வரிகள்தான் இக்கவிதைகள். பெரும்பான்மையான கவிதைகள் முடிவிலியாகவே இருக்கின்றன. ஆனால் முடிவுடன். சில கவிதைகளில் அறிவார்த்தம் ஒரு புனைவாக மாறும்போது, கவிதை, ஒரு முடிவிலியாக கற்பனையுடன் பேசப்படுகிறது. வால்பேப்பர் என்ற கவிதை இதற்கு உதாரணம். கோடை என்ற கவிதையில் மூன்று கோடரிகள் வழங்கப்படுகின்றன. ஒரு கோடரி பற்றி மட்டும் பேசப்படுகிறது. இரண்டு கோடரிகள் எவை? எப்படி? என்ற புதிர்தான் கவிதையாக அமைகிறது. இப்படி துண்டுத்துண்டான காட்சிகளின் ஒருங்கிணைப்பில் சிறிய நடனம் ஒன்றை நிகழ்த்தி புதிராகவும் மர்மானதாகவும் மாற்றும் வித்தை பல கவிதைகளில் காண முடிகிறது.

சாகிப்கிரானின் அரோரா மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டிய பிரதி என்பதை மறுப்பதிற்கில்லை. அறிவிலிருந்து உணர்ச்சிக்கு, உணர்ச்சியிலிருந்து அறிவுக்கு உருமாறும் ஒரு பல்லியாக, கரப்பானாக மாறும் நிலையைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது.  எளிமை, கடினம், சிகரம், பள்ளம் என்கிற மாய விளையாட்டின் வழி சாகிப்கிரான் சொல்வதெல்லாம், சிறிய விடுதலை அல்லது ஒன்றில்லாமல் மறைந்துபோதல் என்பதுதான்.

வாழ்வு நூல்கண்டு எனில், கணங்கள் சிக்குகள் எனில், நாம் எல்லாம் பூனைகள்தான். சாகிப்கிரானின் பூனைகள்தான். இக்கவிதைகள் பலவும் ஆயிரங்கால் ஜடைபோட்டுக்கொள்கின்றன. உற்றுநோக்கும்போது, ஒரு முடியின் ஆரத்தழுவலும், அன்பும். பரிகசிப்பும், ஏமாற்றமும், தப்பித்து ஓடும் பைத்தியமும், முடிவில், புயல்காற்றைச் சாந்தப்படுத்தும் ஒரு ஒற்றை இறகும் நாம்தான். அல்லது சாகிப்கிரான்தான். இக்கவிதைகள் ஒருபக்கம் அறிவியல். கணிதம் வழியாகத் தன்னைத் தேடுகிறது எனில், மறுபக்கம் இயேசு, அஸ்வத்தாமாவின் வழியாகவும் தன்னைத் தேடுகிறது.

இயேசுவின் ரோகமுள்ள கை, இக்கவிதைகள். அவை ஆரத்தழுவ விரும்புகின்றன. வெற்றி என்கிற கவிதையில் வருவதுபோல், சுழன்றோடிக்கொண்டிருக்கும் ஒரு பந்து, தான் தப்பித்து விட்டதாகவே நினைக்கிறது. இந்தக் கவிதைகள் அப்படித்தான் சுழன்றுகொண்டிருக்கின்றன, வாழ்வின் துயரமிக்க, இன்பமிக்க நடனத்திலிருந்து தப்பிக்க.

வாழ்வில் தோன்றும் கணத்தின் நடனமே. “அரோரா” அந்நடனத்தில் அமைவதெல்லாம் உருமாற்றமும் தப்பித்தலுமே.

சில கவிதைகள், தொகுப்பினைப் புரிந்துகொள்ள

அன்பு

அமைதியோ பேரமைதியோ
ஒரு கடுகு இரைந்து ஓடிக்கொண்டேதானிருக்கும்
அன்போ பேரன்போ
ஒரு சொல் மிகச் சின்னஞ்சிறு
சொல் துடித்தபடியே தானிருக்கிறது.

ஒரு சின்னஞ்சிறு பறவை
கொத்தும் வரை
நிகழும் இரைச்சலில்
மெல்ல ஆடிக்கொண்டிருக்கிறது
பொறி…

ஒற்றைப் பனை

நள்ளிரவில்
பேரதிசயத்தை முணுமுணுத்தபடி
காற்றில் ஓடி வந்தது
காகிதம்.
தனிமையின் ஒற்றைச் சாலையில்
ஓடோடி வந்த அதை வாயெடுத்தேன்,

மீண்டும் அரவமற்ற மௌனக்காடு
வீடுவரை வந்து படுக்கையில்
என்னுடன் படுத்துக் கொண்டது.

தனிமை தணிந்தது
தன்னுள்.

o

மாநகரின் வீதி வழியே
நாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
கொட்டி வழியும்
மழையை மீண்டும் மீண்டும்
சிலிர்த்தபடி விரைகிறது
சாலை
இருமருங்கிலும் ஆயிரம் கண்கள்.
இப்படித்தான்
மழையைக் கடந்து விடும் போல

ஓடி

அன்பின் நிழல்

நீதிமன்றம்
அப்பாவியைத் தண்டிக்கப் போகிறது.

நீதிபதியின் வரவுக்காக
அவனும்தான் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்த நீதிமன்றத்தின்
ஆலமரம் திடீரென
வேரோடு சாய்ந்து விட்டது.

தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது.

அந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தவனைத்தான்
யாரோ தீர்ப்புக்கு அழைத்திருக்கிறார்.

இப்போது அவன் நீதிமன்றத்தில்.

எளிமை

எளிமையைக் கொண்டாடுகிறோம்
மிக
மிக
கடினமாக இருக்கிறது

எளிமையானது கடினத்தை
மிகத் தொலைவில் குவிக்கிறது
அதற்கு ஒரு
குண்டூசி துளை போதும்

ஆனால் உலகம்
தலையால் நடக்கும்
பயனற்ற கால்கள்
ஒரு
பறவை கூட்டை எந்துமா?

எப்படியாவது ஒரு
பறவையைத் தேடிப் பிடியுங்கள்
சிரசுப் பயணம் எளிதுதான்
மிக

ஆயிரம்கால்
ஐடை போட்டுக் கொள்ள
வேண்டும்
அவ்வளவுதான்

தொட்டி

அழுக்குப் பெண்
தன்னோடு ஒரு மூட்டையைச்
சுமந்தலைகிறாள்.

காம்பௌண்ட் முள்ளில்
மௌன காகம்.

ஜன்னல் வழியாக
வெறித்து ஒருவன்.

அந்தப் பெரிய
குப்பைத் தொட்டியிலிருந்து
ஒரு நாய் குதித்தாடுகிறது.

கொஞ்ச நேரத்திற்கு
அதன் கால்
ஒடிந்து விட்டது.

அவ்வளவுதான்.

மழை சுகம்

குழந்தைகளுக்கு பலூன் என்றால்
பெரியவர்கள் எதைக் கொண்டாடுவது?

அதற்கு கண்களுமில்லை
காதுகளுமில்லை
ஆனால் ஒரு
வாய் இருக்கிறது
அதில்தான்
நூல் கட்டியிருந்தது.

அதற்கென்ன
தெரியப்போகிறது இதெல்லாம்?
அல்லது
எனக்கென தெரியப்போகிறது
அதெல்லாம்?

உருண்டையான
அது எப்போதும் கலகலவென இருந்தது.

சாய் பகலில் மழை
பெய்து கொண்டே தான் இருக்கிறது.
யாருக்கும் இது
தெரியவதில்லை

மீண்டும் அவர்கள்

மலையிலிருந்து இறங்கியவர்களில்
எல்லாம் தெரிந்தவன்
எப்போதும் பேசிக்கொண்டிருந்தான்.
எதுவும் தெரியாதவன்
பஎல்லோரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்

எதுவும் தெரியாதவன்
எல்லோருக்கும் தெரிந்தவனானான்
எல்லாம் தெரிந்தவன்
யாருக்கும் தெரியாதவானான்

எல்லோருக்கும் தெரிந்தவனையே
கர்த்தா என்கின்றனர்
அவன் கையில் பிடித்திருந்த
ஆகாயத்தையே ஆகாயமென்றனர்.

ஆனால்
மலையுச்சியை நோக்கி
பைத்தியம் ஒன்று
ஓடுவதாக உங்கள் கற்பனை
மகா துயரம்தான்

அவன் இவன்

அவளறையில்
இவன் எழுதியெழுதி கசக்கி
வீசிக்கொண்டிருந்தான்

அவன் திட்டிக்கொண்டே
பெருக்குகிறான்.

இவன் சொல்லிக்
கொள்கிறான் தனக்குள்
நான் குப்பைகளை வெறுப்பவன்
என்பதை அவன் நம்புகிறான்

அந்த வீட்டில்
யாரோ ஒருவன்
இருப்பதாகவே ஊர் மக்கள்
சொல்லிக்கொண்டார்கள்.

வனவிகாசம்

கடைசியாக

தன் நினைவின் காட்டை எழுதிவிட
அந்தப் பறவைக்குக் கிடைத்தது
ஓர் ஒற்றை மரம்.

அது அவ்வாறு தான் நினைத்தது.

அந்த மரங்கொத்தியைப் பார்த்து
எல்லோரும் சிரித்தனர்.

ஆனால் அது நினைத்தது…
எல்லோருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதென.

உருமாற்றம்

விஷயம் மிகச் சிக்கலாகிவிட்டது.
முடிவெடுப்பதில்
பெரும் குழப்பமடைந்து விட்டார்கள்.

நான் அப்போது பல்லியாக
உருமாறிறேன்
ஓரிரு சொற்கள்தான்.

விஷயம் எளிதாகிவிடும்.

இங்கேதான்
காஃப்கா தவறி விட்டான்.

தீட்சை

நீளமான குச்சியை எடுத்து
அதன் முனையில் ஒரு கந்தல்
துணியைக் கட்டியிருந்தான்.

அந்த வாகனம்
நெருக்கடியான எல்லா சாலைகளிலும்
தாராளமாகப் பயணிக்கிறது.

நடந்து போய்க்கொண்டிருந்த
என் கண்ணில்கூடக் குத்திவிட்டது.

எல்லோரும் என்னை
பார்த்து வரக் கூடாதா என்கின்றனர்.
என்ன செய்வது?

கிட்டே வந்து உற்று பார்த்தவர்கள்
“ஓ நீதான் அந்த ஒற்றைக் கண்ணன்?” என்கின்றனர்.
யாருக்கேனும் நாயன்மார்கள்
கதை ஞாபகத்தில் வருகிறது?

குட்டி

ஒரு நூல்கண்டைக்
கைப்பற்றிய பூனைக்குட்டி
உற்சாகமடைந்து வருகிறது.

மறைந்திருக்கும் சிக்குகளின்
பெருகும் அதிசய வரிகளை
ஓடி ஓடித் தீர்க்கிறது.

கவிதை எழுதுதல்

ஒற்றை மலரைப் பறிக்க கரையிறங்கும் குழந்தையைப்
பதறி தூக்கும் கரங்களை புறமொதுக்கும் வீரிடலில்
மெல்ல அசைந்தாடுகிறது ஆறு.

பட்டகம்

முதலில் மாணவர்களை விட்டார்கள்
அவர்கள் இடப்பக்கமாக நடந்தார்கள்
பிறகு மாணவிகள்
இவர்கள் வலப்பக்கமாக நடந்தார்கள்
நெரிசல் மிகுந்த அந்தக் கல்லூரிச் சாலையில்
நான் நடுவில் எனது வாகனத்தைச்
செலுத்திக்கொண்டிருக்கிறது.

சுவடற்று மறைதல்

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ
அப்படி வீழ்வேனெனில்
அது ஒரு கருந்துளை அன்றி
வேறொன்றில்லை பராபரமே.

0

முடிவெடுப்பது யாரென்றே தெரியாத வெளியில் நின்று கொண்டிருக்கும் அந்த சுழல் காற்றுக்கு ஒரு பறவையின் மெல்லிய இறகு தன் அரூப கையொன்றைத் தந்து சாந்தப்படுத்துகிறது.

சாந்தி
சாந்தி
சாந்தி

0

பிரசங்கம்

இயேசு கையை நீட்டுகிறார்
அவரது கரங்களில் ரோகம்.
சிலுவையிலிருந்து சிலர்
கத்துகின்றனர்.
காற்றின் பேரொலியில்
கேட்கிறது. “அஸ்வத்தாமா’
என்கிற ஒரு சொல்

சரிதம்

ஆஹா
எத்தனை உயரமானது
எனது இருக்கை.

கண்டறிதலிலிருந்து
தனித்திருக்கிறது ஒன்று.

பரிதாபம் என்றும்
வரமென்றும் கடக்கிறது
சாதகப் பட்சியொன்று.

அரோரா- சாகிப்கிரான்
புது எழுத்து – டிசம்பர் 2019 – ரூ.100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *