நிக்கி ஜியோவன்னி

கருப்பு எழுத்துகள்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

நீக்ரோவியம் என்னும் வார்த்தையை லியோபோல்டு சிடார்செங்கார் கட்டுரையொன்றின் வழியாகவே அறிமுகம் பெற்றிருக்கிறேன். அந்த அறிமுகம்கூட, தமிழில் முதன்முதலில் இந்திரன் அவர்களின் முயற்சியால் வெளியான, “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” என்ற ஆப்பிரிக்க எழுத்துகள் பற்றிய தொகுப்பின் வழியாகத்தான்.  1982இல் வெளியான இந்நூலை, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு வாசித்திருக்கிறேன். ஒரு கருப்பு மங்கையின் கண்ணீர் துளி துயரத்தில் சொட்டும் காட்சி கருப்பு இலக்கியம் வாசிக்கும்போது தோன்றுவது இன்னும் தீரவே இல்லை. கண் நீர்த்துளிகள் யாவும் கருப்பாய்த் தோன்றுகிறது இப்போதும்.

நிக்கர் என்ற சொல், நீக்ரோக்களைக் கேவலமாக அழைக்க வெள்ளைகள் (ஹாங்கிகள்) சொல்லும் வார்த்தை. நீக்ரோ என்ற சொல் இழிவான சொல் என்றால், நிக்கர் என்பது அதனினும் இழிவான சொல் என்றே கருப்பர்களால் கருதப்படுகிறது. 

ஆப்பிரிக்காவைத்தாண்டி, அமெரிக்கா முழுவதும் கறுப்பர்கள் அடிமைகளாக, இழிவானவர்களாக இருந்த விஷயம் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். ஹாங்கிகள் தம்மையும் தம் நாட்டையும் முன்னேற்றிக்கொள்ள, நிக்கர்கள் தேவைப்பட்டனர்.  அமெரிக்க – ஆப்பிரிக்கர்களின் அடிமைத்தனத்திற்கு எதிராக ஆப்பிரிக்கர்கள் இலக்கியம், கலை, அரசியல் என்று பலதரப்பட்ட துறைகள் வழியாகச் செயல்பட்டனர்.

1960-1970களில், BAM (Black Arts Movement)  என்ற அமைப்பு, அமெரிக்காவிற்கு எதிராக, கலையின் வழியாகச் செயல்பட்ட, அமெரிக்க-ஆப்பிரிக்க கலைஞர்களின் இயக்கமாகும். இதே காலத்தில் செயல்பட்ட Black Power என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்ட அமைப்பு இது. அவ்வமைப்பின் அரசியலை இலக்கியத்திலும் கலைகளிலும் செலுத்தியது.  இன்னும் சொல்லப்போனால், ஆப்பிரிக்காவின் கருப்பு வாழ்வியலை,  மேற்கத்திய எழுத்தின் பாதிப்பில்  படைத்து வந்தது. இந்த அமைப்பினை நிறுவியர், கவிஞரும் நாடகாசிரியருமான அமிரி பாராக்கா. இந்த அமைப்பில் முக்கிய செயல்பாட்டாளராக இருந்து பணியாற்றியவர்கள் பதினோரு பேர். மாயா ஏஞ்சலோ அதிகம் பரிச்சயம் ஆனவர். அதற்கு அடுத்துத் தமிழ் சூழலில் தற்போது பரிச்சயம் ஆகுபவர் நிக்கி ஜியோவன்னி. 

நிக்கி ஜியோவன்னியின் வரலாற்றுடன் சில கவிதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் சா.தேவதாஸ்.  நிக்கியின் சில கவிதைகளை சரோ லாமா மொழிபெயர்த்திருக்கிறார்.  இவர்களுக்கு முன்பாகவே டாக்டர். த.கிருஷ்ணராஜ் அவர்கள், நிக்கி ஜியோவன்னி கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.  ஆண்டு 2006.

நிக்கி ஜியோவன்னி அமெரிக்க-ஆப்பிரிக்க எழுத்தாளர். கவிஞர், செயற்பாட்டாளர், கல்வியாளர் என்று பலமுகம் கொண்ட நிக்கி, 1943ஆம் ஆண்டு பிறந்தவர். கருப்புப் புரட்சியின் கவிஞர் என்று வர்ணிக்கப்பட்டவர். கருப்பர்களின் உரிமைக்காகவும், அடிமைத்தனத்திற்கு எதிராகவும் செயல்பட்ட நிக்கி பற்றிய கூடுதல் விஷயம், பாரக் ஓபமா பதவியேற்பில், அதற்காகக் கவிதை எழுதப் பணிக்கப்பட்டவர். தன் பாட்டியின் கதைசொல்லலே தான் எழுதவதற்கான உத்வேகம் என்று நேர்காணல் ஒன்றில் சொல்லியிருக்கிறார், நிக்கி. இங்கு நிக்கி பற்றி அதிகம் பேசப்போவதில்லை. நிக்கி ஜியோவன்னி யார்? அவருடைய எழுத்துலகம் எப்படிப்பட்டது? அவருடைய களச் செயல்பாடு எதைநோக்கியது? என்று மிக விரிவாக, த.கிருஷ்ணராஜ் அவர்கள் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.  எனவே நான் அதைப்பற்றி எழுதவிரும்பவில்லை. அவருடைய கவிதைகள் குறித்தே எழுத விரும்புகிறேன்.

நிக்கியின் கவிதைகளை வாசிக்கும்போது, மொழிபெயர்ப்பு என்ற நிலையையும் கடந்து ஒர் இசைத்தன்மை பெற்றிருந்தது.  ஒருவேளை, தன்னுடைய கவிதைகளின் ஓசை, ஜாஸ் இசையுடன் பொருந்திய ஒன்று நிக்கி சொல்லியிருப்பது நினைவில் வந்ததால் இருக்கலாம்.

தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்த கவிதைகள், லாங்டன் ஹியூஸ், ராபெர்ட் கென்னடியின் படுகொலை, மார்டின் லூதர்கிங் ஜுனியர், ஸ்வீடி வொன்டர், க்வெண்டலின் ப்ருக்ஸ், நீக்ரோக்கள் என்று  பல நபர்களுக்கான கவிதைகள் இரங்கற்பாவாகவும் நினைவாகவும் அமைந்த கவிதைகள் கொண்ட தொகுதி, இது. அவர் கவிதைகள் தன்னையும், தன்னைத்தாண்டி கருப்பர்களுக்கான விடுதலையைத் தேடுவதாகவும் அமைந்துள்ளது. 

எனது வாசிப்பு முடிந்தபின் சிறிது அதிர்ச்சியுடன்தான் இருந்தேன். சிறுவன் முன்பாகத் தன் தனிமையைப் பேசும் தன்மையையும், புணர்ச்சிக்குப்பின்னான மனோநிலையையும் அவர் கவிதைகளில் அவ்வளவு வெளிப்படையாக,  ஆக்ரோஷமாக இருந்ததைப் பார்த்தேன். “நிக்கர்களைக் கொல்ல படியுங்கள் / கருப்பர்களாக இருக்கப் படியுங்கள்” என்று தன் சமூகத்திடம் வேண்டும் குரல், நிக்கியுடையது. அமெரிக்காவைப் பைத்தியக்காரநாடு என்று குறிப்பிடும் நிக்கி, தன் பற்களுக்கு, இரு தொடைகளுக்கு இடையே உள்ள ஒரு சிறிய ஒலிப்பெருக்கியுடன் பேசுவதாகவும் எழுதுகிறார்.  அப்பொழுது கருப்பர்களின் பேச்சு கண்காணிக்கப்பட்டது.  அமெரிக்காவின் முகமாக விளங்கும் நியூயார்க் பற்றிய கவிதையொன்றில், “அதிருப்தியின் முக்காடுகளுடன், எதிர்ப்பை மறைக்கும் முகமூடிகள் அணிந்த நகரம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். கருப்பு என்பது வேறொன்றும் இல்லை, வலிமை என்பதைத் தன் கவிதைகளின் வழியே புரிய வைக்கிறார். கருப்பு துவேஷம் கொண்ட ஹாங்கிகளுக்கு எதிரான கவிதைகள் மட்டுமல்ல, ஒரு வரலாறாகவும் வாழ்வாகவும் இருப்பவைதான்  நிக்கி ஜியோவன்னி கவிதைகள்.

கருப்பு தனித்துவம், கருப்பு ஒரு கலை, கவிதை, கவிதைக்கலை, ஆப்பிரிக்கா ஆகிய கவிதைகள் வேறுதளத்திற்கு நம்மை அழைத்துச்செல்பவை. நிக்கி ஜியோவானி கவிதைகளைக் குறித்து அதிகம் எழுதமுடியாத காரணம், அதை ஆழமாக உணர்ந்ததுதான். நீக்ரோவிசம் என்ற  கருத்தாக்கத்தினைப் புரிந்துகொண்டதால் இல்லை. எனவே, அத்தொகுப்பினைத் தமிழில் தந்த த.கிருஷ்ணராஜ் அவர்களுக்கும், அகரத்திற்கும் நன்றி சொல்லிவிட்டுச் சில கவிதைகள் கிழே தந்துவிடுகிறேன். அவை திரும்ப திரும்ப என்னால் வாசிக்கப்பட்டவை. கவிதைகளுடன் அவரைப்பற்றிய இணைய இணைப்புகளைத் தந்திருக்கிறேன், கூடுதலாய் தேடல் கொண்டவர்களுக்கு…

நிக்கி ஜியோவானி கவிதைகள்

லேசான பழுப்பு மஞ்சள் நிறமுள்ள சனல் போன்ற முடி உடைய பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டபோது

அவனுக்குச் சணல் போன்ற
பழுப்பு மஞ்சள் முடியுடன் ஒரு பெண்மணி
என்னவளுக்குச் சாம்பல் நிறத்தில் முடி
என்னவள் அதிகாலையில் கண் விழிப்பாள்
அவனவள் தான் முழுவதும் தூங்குவாள்

அவன் பெண்மணிக்கு இனிய வாசனை
திரவியங்களால் மிருதுவாக்கப்பட்ட கைகள்
மிருதுவான உதடுகள் இளஞ்சிவப்பில்
என்னவளுக்கு உதடுகள் உச்சி வெயிலில் எரியும்
அவனது கைகள் கறுப்பு மையைப் போன்றவை

அவன் அவளை மகிழ்விக்க
இசையமைப்பாள்
இரவு வருகிறது நான் அசதியாகிறேன்
அவன் இசைக் குறிப்புகள் எழுதுவான்
அவளது இதயம் வேகமாய்த் துடிக்கும்

ஒரு வேளை நான் இத்தனை வேகமாய்ப்
பருத்திப் பஞ்சு பறிக்காமல் இருந்தால்
நான் அழகாய்ப் பாடுவேன்
சாம்பல் நிற முடி உள்ள என்னவளுக்காக
பாட்டிசைப்பேன், பேபி, நீதான் என.

கவிதை

கசப்பான கறுப்பான கசப்பு
கறுப்பான கசப்பான கசப்பு
கசப்பு கறுப்புச் சகோதரர்கள்
கசப்பு கறுப்பு மேலும்
கறுப்பாகிறது மேலும்
கசப்பாகிறது
கறுப்புக் கசப்பாகிறது
இப்பொழுது

ஏன் என்று விளக்கும் ஒரு சிறு கட்டுரை

‘ஹாங்க்கிகள்’ எப்பொழுதும்
கறுப்பர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்
வீதியில் நடக்கும் போது
கருப்பர்கள் தம்மிடமே பேசிக் கொள்கிறார்கள்
எங்களைப் போதையுள்ளவர்கள்
அல்லது புத்தி பேதலித்தவர்கள் என்கிறார்கள்

சமீபத்திய நிகழ்வுகள்
நாங்கள் யாருடன் பேசுகிறோம்
எனக் காட்டியுள்ளன

பற்களிடையேயுள்ள
அல்லது தொடைகளுக்குள் இருக்கும்
அச்சிறிய ஒலிபெருக்கிகளுடன்
பேசுகிறோம்

அவை வேறு எங்கேனும் இருக்கலாம்
மருத்துவ உதவி
நாடலாம்
சமீபத்தில் எனக்கு வரும் தபால்
தடுக்கப்பட்டுள்ளது.
நான் கண் விழிக்கும் போது
சுவரில் செருகப்பட்டுள்ள “லஸ்ஸி’ யின் பேசுகிறேன்
அது அடித்து நொறுக்குகிறது
என் கறுப்பு பேச்சு முழுவதையும்

இது ஒரு பைத்தியக்கார நாடு

அவர்கள்
மனக்கோளாறு
உள் பயம்
என்கிற சொற்களை
எங்கள் மீது திணிக்கிறார்கள்

ஆனால் நீங்கள் கறுப்பர்களாயிருப்பின்

லெஸ்ஸி – ஒட்டுக்கேட்கப் பயன்படும் கருவி

கறுப்பு வலிமை (கிழக்கேயுள்ள அனைத்து அழகான கறுப்புச் சிறுத்தைகளுக்கு)

ஆனால் அந்த மொத்த நிகழ்வும்
ஒரு அற்புதம்தான் – பாருங்களேன்

நாங்கள் அங்கே வெறுமனே
நின்றுக் கொண்டிருந்தோம்
பேசிக் கொண்டிருந்தோம்
போதைப் பொருளைத் தொடமலிருந்தோம்
காவலதிகாரி ஒருவன் வந்து
டைரொனிடம்

உன்னுடைய வேசிகளை
இழுத்துக்கொண்டு
இங்கிருந்து கிளம்பு நண்பனே

தலைப்பு -கறுப்பர்களின் ஒரு புரட்சி அமைப்பு

வசியம்

ஒருநாள்
நீ என் வீட்டுக்குள் நுழைவாய்
நான் நீண்ட ஆஃப்ரிக்க அங்கியொன்றை
அணிந்திருப்பேன்
நீ அமர்ந்து இந்த “கருப்பர்….”
எனத் தொடங்குவாய்
என் ஒரு கையை
வெளியில் எடுப்பேன்
என்னைக் கவனிக்காமலேயே
“இந்தச் சகோதரனைப் பற்றி….” என்று சொல்வாய்
நான் தலைவழியாக அதைக் கழற்றுவேன்
நீ பேச்சை தொடர “இந்தப் புரட்சி,… என்பாய்
நான் உன் கையை என் வயிற்றில் வைப்பேன்
நீ பேசிக்கொண்டிருப்பாய்
உனக்கிது புரியவில்லை.. என்பாய்
நான் உன் கையால் மேலும் கீழும்
தேய்ப்பேன்

தனியே

நான் மட்டும்
என்னோடு
தனியே இருக்க
இயலும்நான்
தன்னந்தனியே
இருந்தேன் இப்பொழுது
உன்னோடு தனியே
ஏதோ தவறு
நான் எங்குச் சென்றாலும்
ஈக்கள் மொய்க்கின்றன.

பொதுமை

இதோ பாருங்கள்
சிறுவன் ஒருவன்
பொதுமையை ஏற்பவனாக
இருக்கலாம்
ஒரு மனிதனோ
ஒரு பெண்ணோ
ஒரு குழந்தையும் தான்
ஆனால் வழக்கமாக
ஒரு நிக்கர்
என்றாலே போதும்
என்று என்னிடம் சொன்னார்கள்

பரம்பரைச் சொத்து

விளையாட்டு மைதானத்தில் இருந்து
பாட்டி கூப்பிட்டாள்
இதோ வந்துவிட்டேன் பாட்டி
நீ ரொட்டிச் சுருளைச்
தயாரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்
பாட்டி பெருமிதத்தோடு பணித்தாள்
அந்தப் பெண்ணுக்கு அது வேண்டாம்
அவளால் சொல்ல இயலவில்லை
என்றாலும் பாட்டியின் உயிர் பிரிந்து
பாட்டியின் ஆவியைச் சார்ந்து
இருக்க வேண்டியதில்லை

நான் ரொட்டிச் சுருள் செய்யத்
தெரிந்து கொள்ளத் தேவையில்லை
உதடுகளைப் பிதுக்கி சொல்லி முடித்தாள்
கடவுளே இந்தக் குழந்தைகள்
பாட்டி முணுமுணுத்து தன்
முந்தானையில் கையைத்
துடைத்துக் கொண்டாள்

அவ்விருவரும்
தங்களுக்குத் தேவைப்பட்டதைச்
சொல்லிக் கொள்ளவில்லை
யாரும் தேவைப்படுவதைச்
சொல்வதில்லை யென்றுதான்
ஊகிக்கிறேன்

நான் உணரும் முறை

நான் இதை கவனித்திருக்கிறேன்
உன்னோடு புணர்ச்சி நிகழ்த்திய பின்
வாசல் காவலாளிக்கும் புன்முறுவல் ஒன்று மீதியுள்ளபோது
பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்

ஒரு பருத்த கொழுத்த பசு
பெற்றதைப் போல
என் திருப்தியை உணர்ந்திருக்கிறேன்
மிருதுவான கார்னேஷன் மலரின் திருப்தியைத் தான்
தேடினேன்,
நீ உன்
தேர்ந்தெடுத்த இடமான முழங்காலுக்கு நேர் பின்னே
முத்தமிடுகின்ற போது

நான், ஒரு செங்கல்லிலுள்ள
காரைச் சாந்தைப்போல் கிளர்ச்சி அடைகிறேன்
இன்னொரு செங்கல் வருவது
அதற்குத் தெரிவதால் நீ
என் வாசல் வழி வரும்போது
வெகுவாய் நீ அருகில் உள்ளபோது
ரோபர்டா ஃப்லேக் பாடப்போகும்
இசைப் பகுதியைப் போல உணர்கிறேன்

என் மனதில்
நீ ஒரு கடிகாரம்
நான் வினாடி முள்
நான் சுழன்று வருவது
ஒரு நேரத்தில் அறுபது முறையும்
நாளில் இருபத்திநான்கு நேரங்களிலும்
ஒரு முன்னூற்றி ஐம்பத்தாறு நாட்கள்
ஓர் ஆண்டிலும்,
சேர்த்து ஒரு நாள்
‘லீப் வருடத்திலும்
ஏனெனில்
அப்படித்தான் அப்படித்தான்,
நான் உன்னைப் பற்றி உணர்கிறேன்

இரவுவேளை

ஆஃப்ரிக்காவின் இரவுவேளை
நாளையை நோக்கி நடக்கிறது
சுடர் மீதுள்ள மோகத்தால்
தன்னை மாய்த்துக்கொள்ளும்
வண்டின் வேகத்தில்

கரிபியனில் மேகங்கள்
இரவை எடுத்துச்செல்கின்றன
காமவேட்கையின் விளிம்பிலுள்ள
இளைஞனின் ஆண்குறியின்
ஆணவ எழுச்சியைப் போல
கறுப்புத்துளிகள் நீல வானத்தின் குறுக்கே
சொட்டுகின்றன. சூரியனின்
ஆசை நாயகியான காற்று
இயல்பாக நடக்கும்
கருவுறலைக் கண்டு
சீறிக் கதறுகிறது

ஆனால் நியூயார்க்கின்
இரவுகள் வெண்மையானவை
அதிருப்தியின் முக்காடுகள்
நம்மை நாமே தனிமைப் போர்வைகளில்
எதிர் கொள்ளும் பீதியை மறைக்கும்
முகமூடிகளாகின்றன.

ஏனென்றால்

நான் ஒரு கவிதை எழுதினேன்
உனக்காக ஏனென்றால்
நீ என் சின்ன பையன்

நான் ஒரு கவிதை எழுதினேன்
உனக்காக ஏனென்றால்
நீ என் கண்ணான மகள்

இந்தக் கவிதையில்
ஒரு பாட்டுப் பாடினேன்
அது சொல்கிறது
காலம் செல்லச் செல்ல
நான் நீயாகிறேன்
நீ நான் ஆகிறாய்
அப்படித்தான்
வாழ்க்கை செல்கிறது

மையத்திலிருந்து விலகிய ஒரு கவிதை

கவிஞர்கள் எப்படி இத்தனைக்
கவிதைகள் எழுதுகிறார்கள்
என் கவிதைகளின் பெரும் பகுதி
கழுவ இருக்கும் பாத்திரங்களிலும்
துவைக்க இருக்கும் துணிகளிலும்
சகோதரியின் இன்னொரு பிரச்சினை
சாகடிக்கப்படுகின்றன
படுக்கையைச் சரிசெய்ய வேண்டும்
வழியில் சூறாவளியிருக்கிறது
மளிகைக் கடைக்குப் போயாக வேண்டும்
சுத்தம் செய்பவர்களைச் சென்று
பார்த்தீர்களா
பிறகு மின் இணைப்பு சிதறிப்போகிறது
பிறகு
மின் இணைப்பு சிதறித்தான் ஆகவேண்டும்
பெண்கள் சீக்கிரம் தங்கள் குழந்தைகளை பற்றியோ
தங்களைப் பற்றியோ பேசத் துவங்குவார்கள்
எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும்
புத்தம் புதிய துப்பரவு இயந்திரங்களைப் பற்றி
குறிப்புகள் சொல்வதில் சென்று சேர்கிறோம்
பூசிக் கொள்ளும் நாற்றம் நீக்கும்
எண்ணெயை பற்றி எடுத்துரைக்கிறார்
அரசியல் கவிதை எழுதினால்
யூதர்களுக்கு எதிர் என்பார்கள்
வீட்டுக் கவிதை எழுதினால்
நீ முட்டாள் ஆவாய்
ஒரு பொழுது போக்கு கவிதை எழுதினால்
கருத்தார்வம் இல்லை என்பார்கள்
காதல் கவிதை எழுதினால்
வெற்றுப் பசப்பு செய்பவளாவாய்
சரியாகச் சொன்னாய்
ஒரே உண்மைக் கவிதை
கேடு கெட்டுப் போ என
அரசு நிறுவன கவிதை எழுதுவது தான்
ஆனால் அதைப்படிப்பவர்கள்
யாரைப்பற்றி நீ எழுதுகிறாய்
என அறிய மாட்டார்கள்
அது என்னை
முதல் குறிப்புக்கு
இட்டுச் செல்கிறது.

நிக்கி ஜியோவானி கவிதைகள் –
டாக்டர் த.கிருஷ்ணராஜ் –
அகரம் – தஞ்சாவூர் – டிச.2006 – ரூ.60

இணைப்பு

  1. https://en.m.wikipedia.org/wiki/Nikki_Giovanni
  2. https://www.scholastic.com/teachers/articles/teaching-content/nikki-giovanni-interview-transcript/
  3. https://www.npr.org/2013/10/29/241605794/poet-nikki-giovanni-on-the-darker-side-of-her-life
  4. https://mosaicmagazine.org/nikki-giovanni-interview/
  5. https://www.youtube.com/watch?v=iC7LLk0b-nA
  6. https://www.youtube.com/watch?v=biMclnyeKu8
  7. https://www.youtube.com/watch?v=Wr7587oAdpQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *