கருப்பு வெள்ளை புகைப்படங்கள்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ் பிற

ஜி.பி.இளங்கோவன்

இந்துவாகிய நான் ஊழைநம்புகிறவன். நான்செய்த தீவினைகளின் பயனாகவே எழுத்தாளனாக பிறக்கநேர்ந்தது. 1992ஆம் வருடம் எம்.வி.வெங்கட்ராமின் படைப்பரங்கத்தின் இறுதியில் அவர் இப்படிப் பேச நேர்ந்தது. அவரது தனிப்பட்ட சாபமல்ல; தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் அக்காலத்தில் இயற்கை தாமாகவே முன்வந்து வழங்கிய கொடைதான் அத்துயரம். எம்.வி.வியின்  மிக நெருங்கிய நண்பரான கரிச்சான்குஞ்சுவிற்கும் அதுதான் நேர்ந்தது.  எழுத்துக்கான வெகுமதியோ, அங்கீகாரமோ கிடைக்காமல் போனதுமட்டுமல்ல தான் விரும்பி பணியாற்றிய ஆசிரியப்பணியிலும்கூட தன்னிறைவு ஏற்படாமல் விலகியே நின்றார். வீட்டு வாடகை செலுத்த முடியாமல் பலவீடுகள் இடம்மாறிக்கொண்டேயிருந்தார். கரிச்சான்குஞ்சுவின் தனித்திறமிக்க வேதஞானமே அவருக்கு வீட்டு வாடகைக்கான வருமானத்தைத் தேடிதந்தது. திருச்சியில் சிலகாலம் தங்கி ஒருவேத பாடசாலையில் மாணவர்களுக்கு வேதம் சொல்லிக்கொடுத்து அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தின்மூலமே அவர்தன் குடும்பத்தை ஓரளவு நடத்திவந்தார். எழுத்தோ அவரை சிறுமைதான்படுத்தியது. அவரோ எழுத்தை பெரிதும் நம்பினார், கொண்டாடினார். சாட்டோயுபாத்யாவின் இந்திய தத்துவத்தில் நிலைத்திருப்பனவும், மறைந்திருப்பனவும் என்ற  நூலின் மொழிபெயர்ப்பின் உழைப்பிற்காக கரிச்சான்குஞ்சுவிற்கு கிடைத்திட்ட சன்மானம்  அவரது கண்சிகிச்சைக்கே போதுமானதாக இல்லை.  அவ ர்விரும்பிய எழுத்தின்மூலம் அவர் பெற்றதைவிட இழந்ததே அதிகம்.  தன் பெண்குழந்தைகளுக்கு உரியநேரத்தில் திருமணம்கூட செய்துவிக்கமுடியாத துர்பாக்கியசாலியாக எழுத்தை நம்பியிருந்தார்.

கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் இருவருமே கு.ப.ராவின் சீடர்களாக அறியப்பட்டவர்கள். தி.ஜா.ரா, எம்.வி.வெங்கட்ராம் இருவரும் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். தி.ஜா.ரா எம்.வி.வி மீது மிகுந்த அன்புகொண்டவர்.  அதன்வெளிப்பாடாகவே  மோகமுள் நாவலில் எம்.வி.வியை ஒரு பாத்திரமாக உருவாக்கியிருப்பார். திஜா.ராவின் முதல் சிறுகதையான ரத்தப்பூ  எம்.வி யின் தேனீ இதழில்தான் வெளிவந்து சிறப்பாக பேசப்பட்டது.

நித்ய கன்னி
நித்ய கன்னி

ஒலிவடிவம் மட்டுமேகொண்ட எழுத்துவடிவம் இல்லாத மொழியான செளராஸ்ட்ரா மொழியின் ஓசைநயம் கேட்க இனிமையானது. அம்மக்கள் அம்மொழியினை தங்களுக்குள் உரையாடும் அழகு இசையைக் கேட்பதுபோலவே இருகக்கும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருபுவனம் பகுதிகளில்தான் இவர்கள் பரவலாக வாழ்ந்துவருகிறார்கள். இம்மக்களின் பிரதானத் தொழில் பட்டுநெசவுதான்.  எம்.வி.வெங்கட்ராம் அப்படியொரு நெசவுக்குடும்பத்தில்தான் பிறந்துவளர்கிறார். நெசவுத்தொழிலில் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த எம்.வி.வெங்கட்ராம் அவரது தந்தையின் தொழிலையே தொடர்ந்து நடத்திவருகிறார். தொழில் என்றால் தங்கத்திற்கு நிகரான ஜரிகைத்தொழில்.

அன்றையநிலையில் மிகப்பெரிய அளவில் பணம் புழங்கக்கூடிய தொழில் ஜரிகை மொத்த வியாபாரம்தான். அதைதான் எம்.வி.வி செய்துவந்தார். இளங்கலை பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்த எம்.வி.விக்கு இலக்கியத்தின்மீது ஆர்வம் மிகுந்தது. மணிக்கொடி, கலாமோகினி போன்ற சிற்றிதழ் வாசிப்பு அவரை தீவிர வாசகராக உருவாக்கிவிட்டது. அதுவே அவரை ஒரு எழுத்தாளராகவும் மாற்றியமைத்துவிட்டது.  சிறுகதை, நாவல் என பரிணாமம் கொண்ட எம்.வி யின் படைப்புமனோபாவம் அவரைத் தொழில்மீதான கவனத்திலிருந்து சிதறவைத்துவிட்டது. வியாபார நோக்கம் குறைந்ததால் வருமானமும் குறையத்தொடங்கியது. தேனீ சிற்றிதழ் மீதான அவரது கவனம் மிகவும் சிரத்தையானது.  சிற்றிதழில் எழுதுபவர்களுக்கு யாராவது சன்மானம் வழங்குவார்களா? ஆனால் எம்.வி.வி தாராளமாகவே வழங்கினார். அதுவே அவர் இலக்கியத்தின்பால் கொண்டமோகம். தேனீ இதழ் சில ஆண்டுகளோடு நின்றுபோனது. ஆனால் அவரோ தளரவில்லை. தொடர்ந்து வெவ்வேறு சிற்றிதழ்களையும் வீட்டிற்கு வரவழைத்து நண்பர்களுக்கு படிக்ககொடுத்தார்.

திருமணத்திற்குப் பிறகுதான் அவர் அதிகம் எழுதினார். குழந்தைகள் வரிசையாகப் பிறந்தது. அடுத்தடுத்து சிலகுழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தும்போனது. இழப்புகளின்போதுதான் அசாத்தியமான வலிமை உருவாகும். அதுவே நம்மை முன்பைவிட உறுதிப்படுத்தும். மகாபாரதம் முழுவதையும் அதாவது இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும் நிலவிவந்த மகாபாரதக் கதைகளை கேட்டும், வாசித்தும் உருவானதே நித்தியகன்னி  என்னும் புதினமாகும். பெண் ஒரு மகாசக்தி அதிகாரமும், புராணங்களும் அவளை எப்படி அடிமையாக மாற்றுகிறது. அவள் அதை எப்படி மறுக்கிறாள், ஏற்கிறாள் என்பதை  இதிகாசத்தின் வழியே சொல்லவருவதே நித்தியகன்னி நாவல். இந்தியநாவல் வரிசையில் முதன்மையான இடங்களில் நித்தியகன்னியும் ஒன்று. நூற்றுக்கும்மேற்பட்ட சிறுகதைகள், ஏழு நாவல்கள் என தொடர்ந்து எழுத்துலகில் பயணம்செய்துகொண்டே இருந்தார். தன் படைப்புகளுக்கு உரிய வெகுமதிதராத பதிப்பாளரை அறம்பாடி சபித்தார்.  காதுகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்றபோது, கிடைக்கபோகும் ஒருலட்சம் ரொக்கமே அன்றைய நாளில் அவருக்கு பிரதானமாகத் தோன்றியதே தவிர, அவ்விருதினால் பெறப்போகும் புகழ், இலக்கிய அங்கீகாரம் எல்லாம் இரண்டாம்பட்சமாக அப்போதைக்குத் அவருக்குத் தோன்றியது. அதற்கு அவர்மட்டுமே பொறுப்பல்ல. இச்சமூகம் கலைஞர்களின்மீது காலந்தோறும்  நிகழ்த்திடும்  அறமற்ற ஒருபோர்முறையே அவர் வாழ்விலும் நிகழ்ந்தது. சதா புனைவிலும், இருண்மையிலும் வாழவேண்டிய நிர்ப்பந்தம் அவரை அப்படி நினைக்கத் தோன்றியது. அச்சூழல் இன்றுவரையிலும் அப்படியே தொடர்வதே தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய  சாபக்கேடு.  

திருமணத்திற்குப் பிறகுதான் அவர் அதிகம் எழுதினார். குழந்தைகள் வரிசையாகப் பிறந்தது. அடுத்தடுத்து சிலகுழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தும்போனது.

கல்லூரி பயிலும்காலத்தில் நண்பனின் முதுகலைப்பட்ட ஆய்வுக்காக வேள்வித்தீ  நாவலை வாசித்துவிட்டு இரண்டுமுறை சந்தித்துள்ளேன். கவிஞர் ரவிசுப்பிரமணியன், கவிஞர் மீராவோடு அடிக்கடி நிகழும் உரையாடல்களை அருகேயிருந்து கேட்டிருக்கிறேன்.  மிகவும்  சத்தமாகப்பேசுவார், அடிக்கடி சிரிப்பார். வீடுமுழுக்க பெண்களின் பேச்சுக்குரல் கேட்டபடியே இருக்கும். காபி, டீயென ஏதாவது குடிப்பதற்கு கொண்டுவந்து தந்தபடியே இருப்பார்கள்.  சுற்றுக்கட்டு ஓட்டுவீடு நடுவில் அளவான முற்றம். பெரும்பாலான சந்திப்புகள் வாசலின் திண்ணையில்தான் நிகழும். அபூர்வமான மனிதர் உயரமானவீட்டில் வாழ்ந்துவந்தார்.

மூன்றுவருடங்களுக்கு முன்பு சாருநிவேதிதா நிகழ்ச்சி ஒன்றிற்காக கும்பகோணம் வந்திருந்தார். தாராசுரம் ஜராதீஸ்வரர் கோவிலுக்கு அவருடன் சென்றுவிட்டு வரும்வழியில் எம்.வி.வெங்கட்ராமின் வீட்டைப் பார்க்க வேண்டுமென்று சாரு விரும்பியதால் தோப்புத்தெருவிற்ககுச் சென்று எம்.வி யின் வீட்டை தெருவாசிகளிடம் விசாரித்தோம். அவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் வீடெதுவுமில்லை. மேடான காலிமனையொன்றுதான் புற்கள் முளைத்துக் கிடந்தது.  சாருவின் முகத்தைப் பார்த்தேன், அவரோ, அந்த காலிமனையை பார்த்தபடியே வெகுநேரம் அங்கேயே நின்றுவிட்டார். எம்.வி.வி எவ்வளவு பெரிய எழுத்தாளர்  அவர்நினைவை காக்கும்பொருட்டாவது அந்த வீட்டை இடிக்காமல் விட்டிருக்கலாம்  என்று ஆதங்கபட்டுக்கொண்டே வந்தார்.

எனக்கு மட்டும் இன்றுவரை அந்த திண்ணையின் உயரம் இடிந்ததாகத் தெரியவில்லை.

1 thought on “கருப்பு வெள்ளை புகைப்படங்கள்

 1. கட்டுரை சிறப்பு விருதின்
  தொகை 25000. தான் அன்னாளில் இணையத்தில்
  அவரின் படைப்புகள் மின்
  புத்தகமாக வரவேண்டும்
  பல ஆயிரங்கள் செலவில்
  விழா எடுப்பதை விட
  அவரின் படைப்பின்
  சிறப்புணர்த்தும் அடவிக்கு
  வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *