கவர்ச்சி

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ்

எம். வி. வேங்கடராமன்

மாயை பல உருவத்தில் வடிவெடுத்து ஆனந்தம் பெறாமல் தடை செய்கிறது. அதை துணிந்து மற்றவர்கள் பாக்கியவான்கள்.

நினைக்கிறேன்; ஏனென்றால் நான் நினைக்க வைக்கப்படுகிறேன். சொல்லுகிறேன்;  ஏனென்றால் நான் சொல்ல வைக்கப்படுகிறேன். செய்கிறேன்;  ஏனென்றால் நான் செய்ய வைக்கப்படுகிறேன். என்னால் எவ்வளவு அழகாய் நினைக்கப்படுகிறது!

அந்த இரவின் பிற்பகுதியில் என் தூக்கம் கலைந்தது.   தூங்கப்போகும் முன் என் மனதில் ‘ஏதோ வருகிறது, ஏதோ வருகிறது’ என்னும் ஒரு  நினைவு வலுவாக இருந்தது.  என்ன வரும்,  எப்படி வரும் என்பது எனக்கு தெரியாது.  ஆனால் ‘வரும்’  என்கிற நினைவு மட்டும் வேறு ஒரு நினைவுக்கும் சிறிதும் இடம் தராமல்,  மனம் முழுவதையும் அடைத்துக் கொண்டு கிடந்தது. அந்த ஒரே நேரம் நினைவோடு தான் விழித்தபோது அந்த நினைவும் என்னோடு விழித்தது.

‘ஏதாவது வந்திருக்கிறதா?’  என்று சுற்றிலும் பார்த்தேன். ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. வழக்கமாக வருகிற புலி, நரி ஓநாய், பாம்பு முதலிய ஜீவராசிகள் கூட வந்ததாகத் தெரியவில்லை.

‘அது வெறும் நினைப்பு தான் போலும்!’ என்று முடிவு செய்தவனாய் இரவைப் பார்த்தேன். ஒளிக்கற்றை பட்ட இருள் செறிந்த இரவு எவ்வளவு கவர்ச்சி உடையதாக இருக்கிறது! பஞ்செனப் பறக்கும் வெண் முகில்கள் மிதக்கும் நீல வானும், வானத்து மீன் மாதர் நிலைக் கண்ணாடியில் முகம் பார்த்து மகிழும் இந்த விந்தையும், மழைபோல் கொட்டுகிற பனியின் தன்மையும், மலைப் பாறைகளின் மீது இருள் மெழுகிய  ஒளிக்கோலமும், ஓங்கி வளர்ந்த மரங்கள் வெடவெடவென நடுங்கும் அழகும், மலையினிடம் சரணாகதி அடைந்துவிட்டதுபோல் சுருண்டு கிடக்கும் கொடிகளிலின் எழிலும் என்னைக் கவர்ந்தன; அந்தக் கவர்ச்சியால் என் உடல் கலகலப்பு கொண்டது; மனதில் ஒரு தெளிவு. உற்சாகமாய் நான் என்னுடன் பேசிக் கொண்டேன்:

“தூக்கம் என்பது ஒரு வகை தவந்தான். வினை சுமையான உடலை மறதி என்கிற சமாதியில் ஆழ்த்தும் நித்திரை ஒரு யோகமே!”

மேலும் சொன்னேன்: “நான் அதிர்ஷ்டசாலி. என்னால் நன்றாகத் தூங்கவும்  முடிகிறது; ஆகையால் நன்றாக விழிக்கவும் முடிகிறது.”

பேச வேண்டும் என்கிற என் ஆவல் மட்டுப்படவில்லை. தொடர்ந்து பேசினேன்: “அருவியின் இரைச்சலையும் நிச்சப்தத்தோடு கூட்டும் அமைதியான இரவு!”

நான் பேசிய வாயை மூடுமுன் ஒரு குரல் கேட்டது: “இத்தனை அழகுகளையும் சுவைக்க உடல் வேண்டாமோ? உடலைப் பொசுக்கி, கண்களையும் கட்டிவிட்டால்,  எந்த அழகை சுவைக்க முடியும்?”

கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை. அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன? மலை முடியில் இருக்கிறேன். அருவியின் தலையில் அமர்ந்திருக்கிறேன். அந்த இடத்துக்கு வர துடிக்கின்றனர் சிலர் தாம்; அவர்களும் இருட்டுக்கு முந்தி இறங்கிவிடுவார்கள். பின்,  அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன?

சொற்கள் என்பவை தான் என்ன ? ஒளி பாறையில் ஒழுங்காய்ச் செதுக்குண்ட வடிவுகள் தாமே? மனிதன் தான் நினைப்பதை வெளியிடுவதற்காக உருவாக்கிய ஒலி வடிவமாக தானே சொற்களை கருதுகிறோம்? அது உண்மைதான். ஆனால் சொற்களைச் சொல்லுவதற்கு உதவுவது என்ன?  தொண்டையும் நாவுமா?  மனிதர்களை விடப் பெரிய தொண்டையும் நாவும் விலங்குகளுக்கு உள்ளன. அவை சொற்களை உபயோகிக்கவில்லையே!

தொண்டையும் நாக்கும் சொல்லுக்கு ஆதாரம் என்று நான் நினைக்கவில்லை;  மூளைதான் சிந்தனைக்கு ஆதாரம் என்றும் நான் நம்பவில்லை. நாவில்லாமல் சொல்லமுடியும், மூளை என்னும் பொருள் இல்லாமல் சிந்தனை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.  நம்புவது என்ன? எனக்கு தெரியும். நான் கண்டவன்; ஒரு முறை.

* * *

நான் ஒருமுறை தியானத்தில் இருந்தேன். குரு தியானம் செய்வது என் வழக்கம். குருநாதரை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர் எந்நேரமும் என்னோடு இருக்கிறார்; இருந்து என்னை வழிநடத்தி செல்கிறார்; ஆயிரம் கூறிட்ட பரமாணுவிலும் உள்ள அவரை முருகன் என்பேன்; குமரன் என்பேன்.

அன்றைக்குத் தியானம் கூடவில்லை. மனம் கிளை விட்டு கிளை  தாவியது. அதைக்கட்ட வேண்டும் என்னும் கவலையில் பார்வையைப்  புருவ நடுவும் உருகினேன். சுழிமுனையில் பார்வை நிற்க பூமி மாபெரும் வான வழியாக வெளியே அந்த விரைவில் ஒடுங்கி தியானம் செய்வது என் வழக்கம் அன்றைக்கு பார்வை உள்ளே செல்ல மறுத்தது வெளியே ஓடியது.

மனதோடு நான் மல்லுக்கு நிற்கும் அந்தச் சமயத்தில், மிகவும் தெளிவான ஒரு குரல் என்னை அழைத்தது. அது பெண் குரல்; பெண்ணுக்கு இருக்கும் மென்மையான குரல் என்று புரியும் அளவுக்கு அது அத்தனை தெளிவாகக் கேட்டது.

“பசுபதி, எழுந்திரு.  உடலை ஏன் இப்படி வாட்டுகிறாய்? அழகையும் உடல் வலிமையையும்  இழந்தவனுக்கு உலகம் இல்லை, சுகமும் இல்லை. மலையையும் தனிமையையும் விட்டு கீழே இறங்கு.  உனக்குத் தேவையான இன்பங்களை எல்லாம் அள்ளித் தருவதற்கு  உலகம் காத்திருக்கிறது.”

நான் ஒருமுறை தியானத்தில் இருந்தேன். குரு தியானம் செய்வது என் வழக்கம். குருநாதரை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர் எந்நேரமும் என்னோடு இருக்கிறார்; இருந்து என்னை வழிநடத்தி செல்கிறார்; ஆயிரம் கூறிட்ட பரமாணுவிலும் உள்ள அவரை முருகன் என்பேன்; குமரன் என்பேன்.

ஒருமையுறாத தியானம் முழுவதும் கலைந்தது. அந்த மலை உச்சிக்கு மாலை மயங்கும் நேரத்தில் துணிந்து வந்ததோடு, எளிய துறவியிடம் ஆசை மூட்டும் சொற்களைப் பேச வந்த பெண் யார் என்று அறிய எண்ணியவனாய்க் கண்திறந்து சுற்றிலும் பார்த்தேன்;  யாரும் இல்லை. எழுந்து, நாலு  திசைகளிலும் கொஞ்ச தூரம் சென்று, பாறை மறைவுகளில் பார்த்தேன்;  யாரையும் காணவில்லை.

ஏதோ பிரமை என்று எண்ணி, மீண்டும் தியானத்துக்கு  முயன்றேன்.

“எவ்வளவு அழகான உடலை  பாழாக்குகிறாய்! பசுபதி,  தவமும் யோகமும் அறிவு வளராத காலத்தில் ஆதி மனிதனுடைய இளம் பிராயத்து மழலைச் சொற்கள். அறிவு மிகுந்த இக்காலத்தில் சொற்களுக்குப்  பொருள் காண முயல்வது அறிவீனம்” என்று மறுபடியும் அந்தப் பெண்குரல் சந்தேகிக்க முடியாத தெளிவோடு பேசியது.

ஜாக்கிரதை கொண்டேன். என்னைக் கீழே இழுக்க முயலும் அந்த குரலில் கவனம் செலுத்தவோ, அந்தக் குரலுக்கு உரியவளை  அறியவோ நான் விரும்பவில்லை. கலையும் ஞானத்தை கூட்ட முயலாமல் குருநாதரின் திருப்புகழை வாய்விட்டு உரக்கச் தொடங்கினேன்.

பிறகு அந்தக் குரலை நான் கேட்கவில்லை.

அப்போதுதான் நான் கண்டேன்; தொண்டையும் நாவும் மட்டுமல்ல மனித வடிவமே இல்லாது சொல்  தோன்றும் என்பதை. கனவில் பேசும் குரலுக்கு நாக்கு உண்டா? அது நம் மூளை செய்யும் ஜாலம் என்று எளிதில் பதில் கூறி விடலாம்.கனவு மட்டும் அன்று,  நாம்,  நம் வாழ்க்கை,  இந்த உலகம் மட்டும் அன்று, அப்பாலும் உள்ள உலகங்கள் எல்லாமே ஜாலம்  என்கிறேன்.   என் குருநாதரின் விளையாடல் என்கிறேன். அது இருக்கட்டும்.

அந்த இரவின் கவர்ச்சியால், பேச வேண்டும் என்னும் முனைப்பு எனக்கு ஏற்பட்டது என்றேன். மண்டுகள் போல் கிடக்கும் பாறைகளும் மௌனம் சாதிக்கும் மரங்களோடும்  பேசுவதற்குப்  பதிலாக உருவமில்லாத குரலோடு பேச நினைத்தேன்.

“அழகுகளைச்  சுவைக்க உடல் வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்குவது யார் என்று தெரியவில்லையே! உடலை பெருமையைப்படுத்துக்கிறவளுடைய உடல் எங்கே?”  என்று கேட்டேன்.

“உடல் இன்பம் தேவைப்படும் போது உடல் எடுக்க என்னால் முடியும்; உடல் தேவைப்படாத போது நான் சக்தியாக உலாவுவேன்”  என்றது குரல்.

“அவ்வளவு சக்தி வாய்ந்த உன்னை என்னவென்று அழைப்பது?”

“மோகினி என்று அழை. உலகத்திலுள்ள அத்தனைக்கும் நான் தான் ஆதாரம். உலகத்தை இயக்கி ஆட்டி வைக்கிறார்கள் நான்தான்.”

“மோகத்தை வெல்ல  முயலும் ஏழையிடம் மோகத்தை உண்டாக்கிறவளுக்கு என்ன வேலை?”

“உடல் இன்பம் தேவைப்படும் போது உடல் எடுக்க என்னால் முடியும்; உடல் தேவைப்படாத போது நான் சக்தியாக உலாவுவேன்”  என்றது குரல்.

“இருக்கிற கவர்ச்சிகளைக் கவனியாமல், இல்லாத கவர்ச்சிகளை நாடிப் புலன்களை வென்ற உன் மேல் இரக்கம் கொண்டு உன்னை நேர் வழியில் அழைத்துச் செல்ல வந்தேன். மேடும் பள்ளமுமாக மலைப்பாதை வேண்டாம்: சுகமாக நடக்கும் ராஜவீதிக்குப் போகலாம், வா.  நீ பேரழகன் உலக இன்பங்களை அநுபவிக்கப் பிறந்தவன்”.

அவள் கூறுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது அவள் மோக சக்தி;  என் உடலைக் கவர வந்தவள்; உலகை உருவாக்க முயலும் என்னை உலகத்துக்கு கவர வந்தவள். அவளுடன் பேசுவதை அபாயம் என்று எண்ணினேன். அவளை ஏமாற்றி விட வேண்டும் எனக் கருதி, ஓடலானேன்.

அவள் பின் தொடர இயலாதவாறு ஒதுங்கி பதுங்கி ஓடினேன். உட்கார்ந்தபடியே செல்ல வேண்டிய குகை  ஒன்றில் நுழைந்தேன்;  பாறைகளைச் சுற்றி வளைத்தேன்.  ஊர்ந்து போக வேண்டிய மற்றொரு குகையை ஊர்ந்து கடந்தேன். மலை அடிவாரத்தில் இருக்கும் சிற்றூரை அடைந்த பிறகுதான் எனக்குத் துணிவு வந்தது.   மோகினி மலையிலும் பாறைகளிலும் கானகத்திலும் தேடிக் கொண்டிருப்பாள். அவள் எட்டமுடியாத தொலைவுக்கு வந்துவிட்டேன் என்று திருப்தி அடைந்தேன்.

அப்போது பொழுதுபுலர்ந்த ஆவ்வூர் சுறுசுறுப்பு கொள்ளலாயிற்று. வீடு என்ற ரகசியத்தியலிருந்து மக்கள் வெளிவரலாயினர்;   அவர்களைக் கவனிக்க எனக்கு மனம் இல்லை; ஆனால் என் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர். வியப்புடன் என்னை உற்று நோக்கிய ஆண் விழிகள் மலைப்பதைக் கண்டேன். பெண் விழிகளோ என் உடல் மீது,   தலை முதல் கால் வரை அங்கம் அங்கமாய் நின்று, ஊர்ந்து, ஏறி, இறங்கி விளையாடுவது நான் கவனியாது இருக்க முடியவில்லை. ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் என்னைச் சுற்றிப் பேசுவதைக் கண்டேன். அதற்கு முன்னரும் திரும்பி பார்ப்பவரின்றி  நான் அலைந்தது உண்டு. அன்று திடீரென்று நான் ஒரு வியப்பு ஆகி, என்னிடம் அவர்கள் மிகவும் கவர்ச்சி கொள்கின்றனர் என்பதை உணர்ந்தேன்.  இந்தக்  கவர்ச்சியால் துன்பமே விளையும் என அறிந்து விரைவாக நடந்தேன். எவ்வளவு விரைந்தும் என் விரைவு நேரான விரைவுடன் பின்தொடரப்படுவதை  உணர்ந்த எனக்கு அச்சமாக இருந்தது;  திரும்பிப்  பார்க்கவும் தயக்கமாக இருந்தது; திரும்பினால் கேள்வியும் பதிலும் வாய்ப்பேச்சு பிறக்கும்; மனிதர் கண்ணுக்கு அப்பால் செல்வதே மேல் என எண்ணி மேலும் விரைந்தேன்.

ஊர் எல்லை கடந்த பின்னும் பின்னால் காலோசை கேட்டது. ‘ஐயா’ என்றும் அழைத்தது.

நின்று திரும்பினால் என் முன் ஒரு பெண் நின்றாள். இளமையின் பசுமை அவள் மேல் மண்டியிருந்தது; அந்தப் பசுமையின் கவர்ச்சியை அவள் கண்களில் கண்டேன்.

“நீ யார்? என்ன வேண்டும்?” என்றேன்.

“உங்கள் பின்னால் நான் வருகிறேன். நீங்கள் கவனிக்கவில்லை.”

“கவனிக்கத் தேவை இல்லை.”

தன் கண மணிகளில் என்னை அப்படியே சுமந்து, அச்சுமையால் சொக்கிக் கூறினாள்; “நீங்கள் எனக்குத் தேவை. ஆகையால் உங்கள் பின்னால் வருகிறேன்.  வரலாமா?”

அவளுடைய துணிவு எனக்கு வியப்பளித்தது. ஆனால் நான் ஏன் அங்கிருந்து நகரவில்லை? நகரவேண்டும் என்ற நினைவே ஏன் எழவில்லை?

ஊர் எல்லை கடந்த பின்னும் பின்னால் காலோசை கேட்டது. ‘ஐயா’ என்றும் அழைத்தது.

“உன் விருப்பம் போல் எங்கும் போகலாம்; எனக்குப் பின்னால் நீ ஏன் வரவேண்டும்?”

“காலையில் எழுந்து வெளியே வந்தேன். நீங்கள் எதிரில் வந்தீர்கள். உங்கள் உருவம் என்னைக் கவர்ந்தது. மனதோடு நான் உங்களை தொடருகிறேன். கூட இருக்க அநுமதிக்கப்பட்டாலும் உங்களோடு வருவதற்கு அநுமதி கொடுங்கள்” என்று அவள் கூறியபோது, என் புத்தி வட்ட வட்டமாய்ச்  சுற்றியது; குழம்பியது;  வாய், சொல்லை இழந்தது.

அவள் சொன்னாள்: “நான் என் பெற்றோருடன் அருவி ஸ்தானத்திற்கு வந்தேன்.  அவர்களுக்கு நான் ஒரே புதல்வி. கண்ணுக்கு கண்ணாய என்னை வளர்க்கிறார்கள். எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. நான் வசீகரிப்பவளாக  இருந்தேன்:  உங்களால் இன்று வசீகரிக்கப்பட்டேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.”

நான் பேசாமல் நிற்பதைப் பார்த்த அவள்,  மேலும் துணிந்தாள்: “என்னோடு வாருங்கள். இன்பம் காண்போம்.”

என்னோடு வருவதாகக் கூறி, அவள் தன்னோடு என்னை அழைத்தாள்.

“நான் சந்நியாசி;  பிரம்மசாரி.”

“நான் கன்னி; செல்வம் என் காலடியில் கிடக்கிறது” என்ற வண்ணம் அவள் மண்டியிட்டு, என் இடுப்பை அணைத்துக்கொண்டபோது என் உடல் ஆடியது; உடலில் உள்ள நார் நரம்புகள் ஆடின; புத்தியும் ஆடிவிட்டது.

அவள் என் கழுத்துக்கு ஊர்ந்தபோதுதான் அவளுடைய சுமையை அறிந்தேன். மோகினியிட மிருந்து தப்பி அவன் ஒரு பேதை பெண்ணிடம் சிக்கிய பேதமையை உணர்ந்தேன். “இருபது ஆண்டுகளின் தவத்தையும், உடலை அடக்கும் முயற்சியையும் ஒரு பெண்ணிடம் தோற்கிறாயே” என்று பகுத்தறிவு என்னை இகழ்ந்தது.  பட்டப்பகலில் வெட்கம் கெட்ட அவளை, மோகினியைப்போல், ஏமாற்றி விட்டு நழுவினேன்.

“அவளுடைய குரலுக்கும் கண்ணுக்கு எட்டாத தூரம் அடைந்த பிறகு, ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். அலைச்சலால் நான் களைப்புற்று இருந்தாலும் சூழ்நிலை மிகவும் கலையாக இருந்தது. கானத்தால் நிரப்பும் பறவைகளும் அந்த கானத்தால் பூரித்து மலர்ந்தவைபோல் மணம் பரப்பும் மலர்களும், அந்த மணத்தாலும் கானத்தாலும் மயங்கி தலையாட்டும் மரங்களும் – எல்லாமே கவர்ச்சி வடிவு தான்.  இருந்தும் என் நெஞ்சு என்னைச் சுட்டது. சிறிது நேரம் தான் என்றாலும் வழிமறித்த பெண்ணிடம் மதி இழந்த தவறு தவறுதானே?”

‘நீ செய்தது தவறு’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டேன்.

மலை உச்சியில் நான் விடுத்து வந்த மோகினியின் குரல்தான். ஓடி ஓடி நான் கடந்த தூரத்தை இவ்வளவு சுளுவாக அவள் எப்படி கடந்தாள்?

‘அந்தப் பெண்ணை நீ ஏற்காதது தவறு. அவள் கன்னி; அழகி; நல்ல செல்வி கூட. அவளால் உனக்கு எல்லா சுகங்களும் கிடைத்திருக்கும்.’

‘நீ இங்கே எப்படி வந்தாய்?’

“நான் வந்தேனா?  நீ என்னைச் சுமந்து வந்தாய். உன்னோடு உனக்குள் நான் இருக்கிறேன். நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதனால்தான் ஊரார் அதிசயிக்கும்படியான கவர்ச்சியை உடலுக்கு அளித்தேன். அந்தப் பெண்ணைத் தூண்டியதும் நான் தான். பாவம்!  அவள் நடுத்தெருவில் அழுது கொண்டு நிற்கிறாள்.”

“அவளைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நீ எப்படி எனக்குள் இருக்க முடியும் என்பதை தான் யோசிக்கிறேன்.”

“பசுபதி, பேதையாகப் பேசுகிறாய். இருபது  ஆண்டு தவம் உன் அறிவைத் தீட்டி விட்டது போலும். உன்னுள் இருக்கும் எனக்கு, உன் அந்தரங்கள் எல்லாம் தெரியும். நீ தாய் தந்தை இல்லாத அநாதை. தாய்மாமன் வீட்டில் தங்கிப் படித்து வந்தாய். அவர் உன்னிடம் மிகவும் அன்பாக இருந்தார். பள்ளி புத்தகங்களைத் தவிர வேறு அறிவு அறியாத பதினாறாவது  வயசில்,  ஒருநாள் இரவு நீ  நிம்மதியாகத்  தூங்குகையில்…”

ஆகா!  மோகினி குறிப்பிடுகின்ற அந்த இரவுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் உண்டாக்கியது. அந்த அற்புதமான இரவை நான் எப்படி மறக்க முடியும்?

அன்று,  நன்றாகத் தூங்குகையில் விடியலுக்குச் சற்று முன்னர் ஒரு கனவு கண்டேன்.

கனவிலும்,  நான் தூங்குகிறேன்.

அழகான குழந்தை ஒன்று,  குறுநடை நடந்து குறும்பாகத்  தள்ளாடியவாறு என்னை நோக்கி வருகிறது.

அவன் கரத்தில் அவனை விட உயரமான வேல் ஒன்று; சுமக்க மாட்டாமல் சுமப்பவன் போல இரு கைகளாலும் அதைப் பிடித்துக் கொண்டு என் மருங்கில் வருகிறான். மெதுவாக என்னைத் தொட்டு எழுப்புகிறான்.

“பசுபதி, கண்ணைத் திற; தூங்கியது போதும்” என்று அந்தக் குழந்தையின் மழலையைச் சேவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கிறது.

எழுந்த நான், அவனை அன்போடு அழைக்கிறேன். வம்பாக ஓடுகின்ற அவனைத் துரத்திப் பிடிக்கிறேன். இடுப்பில் ஏந்துகிறேன்.

அவன் தன் இடக் கரத்தை என் கழுத்தில் மாலையாக சுற்றிக்கொண்டு, வேலை தன் வலது தோளில் சாத்திக்கொண்டு என் காதில் மிருதுவான சொற்களைச் சொல்லுகிறான்:

“நீ பள்ளிக்கூடத்தில் படித்தது போதும். என்னை நம்பி வீட்டை விட்டு வெளியே வா. உனக்கு நான் சொல்லித் தர வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. உன்னோடு நான் எப்போதும் இருப்பேன். தேவைப்படும்போது தேவையானவற்றைக் கூறுவேன். உன்னைத் தேடி வந்த என்னை மறந்து விடுவாயோ” என்று சிரித்தது, அந்த குழந்தை.

அவ்வளவுதான் கனவு. வெறும் கனவு. அதனால் என்ன என்று எவரும் எளிதில் கூறலாம். ஆனால் அந்தக்  கனவோடு கண்விழித்த என்னை,  அந்தக் குழந்தை பைத்தியம் பீடித்தது. மாமாவையும் மாமியையும் விட்டு இரவோடு இரவாகக் கிளம்பியவன்தான்: எந்த ஒரு பொருளை கற்பதால் எல்லாப் பொருள்களையும் கற்பதாகுமோ, அந்த ஒரு பொருளை  அந்தப் பொருளினிடமே  இருபது ஆண்டுகளாய் கற்கிறேன்.

மோகினி அந்தக் கனவை நினைவுபடுத்தியதும் நிதானித்துக்கொண்டேன். கனவில் தோன்றி என்னை ஆட்கொண்ட அண்ணலை, இந்நேரம் மறந்து பிழையை உணர்ந்தேன். ‘பெயரே கடவுள்’  என்கிற சத்தியத்தை அநுபவ வாயிலாக அறிந்த நான்,  அவருடைய பெயரை இடைவிடாமல் உச்சரித்தேன்; என்னை முற்றுகையிட்டு வளைக்க முயலும் மோகினியிடம் இருந்து என்னை விடுவிக்கும்படி முறையிட்டேன்.

அப்போது, என் புலன்களில் ஒளி ஒன்று பாய்வதை உணர்ந்தேன்.  அந்த ஒளியின் துணையோடு பார்வையை எனக்குள் செலுத்தி நோக்கவும், என் உடலில், உள்ளத்தில், புத்தியில், மோகினி என்ற அந்தச்  சக்தி அழகாக அமர்ந்திருப்பதைக் கண்டேன்;  ஒளியுண்ட என் புத்திக்கு அவளுடைய சரித்திரமே புலனாயிற்று!

எனக்குள் புத்தொளி பரவியதை அவள் அறிந்துகொண்டாள்;  எனினும் அவள் என்னை விட விரும்பவில்லை. “உன் குருநாதன் பெயரைக் கேட்டு அஞ்சிவிடுவேன் என்று நினைக்காதே.  நீ என்னைப் பார்க்க முடிகிறது; பார். நான் சர்வ லோக நாயகி; உன் நாயகியாக ஆசைப்பட்டேன்.  எனக்கு இணங்கு.  உனக்கு எல்லாம் தருகிறேன்” என்றாள்.

அவளை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். மனித இறைச்சியில் எத்தகைய மேடு பள்ளங்கள் இருந்தால் ‘அழகான பெண்’ என்று வர்ணிப்பார்களோ அப்படித்தான் இருந்தாள். அவள் என் கண்களோடு அவள் தன் கண்களை கோத்துக்கொண்டாள்; கனலும் காமத்தை உமிழும் அவ் விழிகள்!

“நான் உன்னைத் தாயாக வணங்குகிறேன்” என்று அமைதியாக.

“தாய் என்பதும் தகப்பன் என்பதும் மனிதர் வகுத்த தர்மம். அவை  எனக்கு ஏன்?  என் விருப்பம்தான் என் தர்மம். கவர்ச்சி அளிக்கும் நான் உன்னிடம் கவர்ச்சி கொண்டு வந்தேன். எனக்கு தெரியாத வித்தை இல்லை; முடியாத திறமை இல்லை. என்னைச் சுவை; எனக்கு இன்பம் தா”.

ஆம் நாடக நாயகிகள் போலத்தான் அவள் பேசிக் கெஞ்சினாள்.

“மோகினி,  உன் நாடகம் என்னிடம் நடவாது. உன் உண்மை எனக்குத் தெரியும். கரும் குழலும், காதல் நோக்கும், சிவந்த மேனியும், உடை காட்டும் அழகும் உன் வேஷம். நீ யார் என்பதை அறிவேன்.”

“நிசமாகவா?” என்றாள்  அவள் சற்றே அச்சத்துடன்.

“சொல்லுகிறேனே. உன் வடிவத்தை வருணிக்கட்டுமா? விரித்த சடை,  வெறித்த விழிகள், கருத்த மேனி,  அதைவிடக் கருத்த உள்ளம்,  செவ்விரத்தம் கொட்டும் நாக்கு, செம்மை பூசிய பற்கள்,  கொழுத்த கொங்கைகள்,  கபால மாலை ஆடை- உன் வடிவங்கள் இதுதானே?   மோகினி என்ற அழகான பெயர் சொன்னாய்; அதுவும் பொய்.  நீ காளி சக்தி; காளிகளிலும் நல்லது செய்யும் காளி அல்ல நீ;  உன் பெயர் நாசகாளி அல்லவோ?   மயானத்தில் அலைந்து சவங்களைப்  பிடிங்கி உண்பது உனக்கு இன்பம்; ” அம்மா” என்று பணிகின்றவர்களின் உதிரம் உண்பது என்பது உனக்கு விளையாட்டு.  ஜகதம்பிகை, உமாதேவி,  திருபுவன சுந்தரி,  பரமேஸ்வரி என்ற பல பெயர்களால் அறியப்படும் அன்னை பார்வதியும் நீயும் ஒன்றுதான் என்று பலர் ஏமாறுகிறார்கள். நீ அசுத்தம்’  நீ மாயை’  நீ இருட்டு. அருள் நெறி  நடப்போரை இருள்நெறிக்கு இழுப்பதே உன் லட்சியம். நீயும் கெட்டு,  உன்னை நம்புவோரையும் கெடுக்கும்  இழிமதி படைத்தவளே, எட்டிச் செல்!”

“அழகாய்ப் பேசி விட்டாயே! மோகினி என்று அழை;  காளி என்று அழை.  என் காமத்தை பூர்த்தி செய்!”

“நாசகாளி,  வெளியே போ. என் குருநாதரிடம் முறையிடுவேன். அழிவாய்.”

“அவன் என்னை என்ன செய்வான்? என் அருகில் வர அவன் துணிவானா?  என்றாள் அவள் தருக்குடன்.

எனக்குச் சினம் வந்தது. “என் குருதேவரை நிந்தனை செய்தால், உன்னை மாய்ப்பேன்!”

“பசுபதி, இச்சையோடு வந்த பெண்ணைக் கொல்லுவது தர்மமா?”

“உத்தமிபோல் அறம் பேசுகிறாய்! ‘அம்மா’ என்று உன்முன் குனிகின்றவர்களிடம் முறைப் பிசகாய் பழகுகின்ற நீ பெண்தானா? அஹிம்சை பேசுகிறாய்; அறம் கொல்லுகிறவர்களிடம் அகிம்சை பலியாது; வரம்பு கடந்த அஹிம்சை தெய்வ நீதி ஆகாது. சத்தியம் நிரந்தரமானது;  அது ஒன்றுதான்; அதைப் பல பெயர்களால் அழைக்கிறோம்.  அதனை ‘முருகா’ என்று அழைத்தால் வேலும் படைகளும் தாங்கி வருகிறது. ‘ராமா’ என்று குரல் கொடுத்தால் வில்லும் அம்பும் ஏந்தி வருகிறது. ‘பரமேசுவரா’ என்று கூப்பிட்டால் திரிசூலம் சுமந்து வருகிறது. ஆயுதம் தரியாத கடவுள் வடிவங்களே இல்லை;  இந்த ஆயுதங்கள் வெறும் அழகுக்காகவா இருக்கின்றன?  உன்னைப்போல் தமோ குணம் நிறைந்த துஷ்டர்களை மாய்க்கத்தானே அவை இருக்கின்றன?”

“நீ பாசத்துக்கு கட்டுப்பட மாட்டாய்.  உன்னையும் உன்னைக் காக்க வருகின்றவர்களையும் தூளாக்குகிறேன்” என்று வீரம் பேசியவாறு|  தன் சொந்த வடிவெடுத்து, என்னை அணைத்து, அப்படியே அரைத்துவிட முற்பட்டாள்  அவள்.

குருநாதரை நினைத்தேன்; தேவைப்படும்போது தேவையைப் பூர்த்தி செய்வதாக அவர் அளித்த வாக்குறுதியை நினைத்தேன். எனக்குள் அகங்காரம் மூண்டது; அது சுத்த அகங்காரம்.

மண்ணை அழைத்தேன்; வந்தது; சூலம் சுற்றிக் குதிக்கிற அவளைக் கட்டப் பணித்தேன்.

தீயை அழைத்தேன்: வந்தது. கட்டுண்ட அவளை எரித்திட பணித்தேன்.

காற்றை அழைத்தேன்; வந்தது. அவளை எரிக்கின்ற நெருப்பை ஊதிப் பெருக்கிடப் பணித்தேன்.

நீரை அழைத்தேன்; வந்தது. அவள் எரிந்த எச்சத்தைக் கரைத்திடப் பணித்தேன்.

வானை அழைத்தேன்; வந்தது. அவள் ஞாபகமும் உரு அறுமாறு செய்திடப்  பணித்தேன்.

அவள் ஒழிந்தவுடன், நான் சத்துவம் ஆயினேன்.

அக்கணம்,  நானே எனக்குக்  குரு ஆகிறேன். ஆறுமுகத்தன் ஆகிறேன். ஈராறு கரத்தன் ஆகிறேன். சக்திவேல் என் கைக்கு வருகிறது.மயில் எனக்கு வாகனம் ஆகிறது.  அப்பால்..

அப்பால்…அப்..

கலைமகள் – ஜூலை – 1957
கதை தந்தவர்- ராணிதிலக்
நன்றி – சிவகுருநாதன்
செந்தமிழ் நூல் நிலையம்,  கும்பகோணம்.

1 thought on “கவர்ச்சி

  1. அருமை. காதுகள், நித்தியகன்னி இந்த நாவல்கள் எங்கிருந்து அத்தகைய பேருருவம் கொள்கின்றன என்பதை என்னால் இச்சிறுகதை வழியே விளங்கிக்கொள்ள இயல்கிறது. எண்ணத்துக்கு எதிரான ஒரு போர்க்கள காட்சி என்றும் சொல்லத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *