விஸ்லாவா சிம்போர்ஸ்கா

கவிஞனும் உலகமும் விஸ்லாவா சிம்போர்ஸ்கா

சிறுபத்திரிகை

நோபல் உரை

தமிழில்: சமயவேல்

எந்த ஓர் உரையிலும் முதல் வாக்கியம் மிகக் கடினமானது என்று கூறுவார்கள். நல்லது, அந்த ஒன்று எனக்குப் பின்னே இருக்கிறது. ஆனால் எனக்கு ஓர் உணர்வு அதாவது, வரவிருக்கும் வாக்கியங்கள் – மூன்றாவது, ஆறாவது, பத்தாவது, அதற்கு மேலும், கடைசி வரிவரை – கடினமானதாகவே இருக்கும். ஏனெனில் பேச வேண்டியிருப்பது கவிதையைப் பற்றி அல்லவா? உண்மையில், இந்தப் பொருளில் நான் மிகக் கொஞ்சமே பேசியிருக்கிறேன் – ஒன்றுமின்மைக்கு அருகில். மற்றும் எதையாவது நான் பேசியிருக்கிற சமயங்களில், அதில் நான் மிகத் தேர்ந்தவள் அல்ல என்னும் சந்தேகம் எனக்குள் எப்போதும் பதுங்கியிருந்தது. எனவேதான், எனது உரை கொஞ்சம் சிறியதாக இருக்கப்போகிறது. முழுமையின்மையை சிறிய அளவுகளில் பொறுத்துக்கொள்வது எளிது.

சமகாலக் கவிகள், நம்பிக்கை இல்லாதவர்களாகவும் சந்தேகப் பிராணிகளாகவும் இருக்கிறார்கள் அல்லது ஒருவேளை, விஷேசமாக அவர்களையே பற்றிக்கூட. அவர்கள் வேண்டா வெறுப்பாக, கவிஞர்களாக இருப்பது குறித்து பொதுவில் வந்து ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். ஆனால் நமது இரைச்சலான காலத்தில், நமது சொந்த சிறப்புகளுக்கு அங்கீகாரம் வேண்டுவதைவிட, நமது தவறுகளை, குறைந்தபட்சம் அவை ஈர்ப்புமிக்க வடிவில் இருந்தால், ஒப்புக்கொள்வது என்பது மிக எளிது. ஏனெனில் இவை ஆழத்தில் புதைந்துள்ளன மற்றும் நீங்கள், நீங்களேகூட ஒருபோதும் அவற்றில் முழு நம்பிக்கைகொள்ளப்போவதில்லை. அவர்கள் வினாப் படிவங்களை நிரப்பும்போது அல்லது பிறரிடம் உரையாடும்போது – கவிகள், ‘எழுத்தாளன்’ எனும் பொதுவான சொல்லைப் பயன்படுத்துவார்கள் அல்லது ‘கவி’ என்பதற்குப் பதிலாக, அவர்கள் எழுதுவதோடு கூடுதலாக செய்யும் வேறு எந்தத் தொழிலையாவது குறிப்பிடுவார்கள். அதிகாரிகளும் பேருந்துப் பயணிகளும் ஒரு கவிஞரைக் கையாள்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்கும்போது, ஒருவித சந்தேகத்துடனும் எச்சரிக்கையுடனும் பதிலளிப்பார்கள். இதையேதான் தத்துவவாதிகளும் சந்திப்பார்கள் என்று எண்ணுகிறேன். எனினும், அவர்கள் ஒரு மேலான நிலைமையில் இருக்கிறார்கள், ஏனெனில், அடிக்கடி இல்லாவிட்டாலும்  அவர்கள் அழைக்கப்படும்போது சில வகையான மேதாவிப் பட்டங்களால் அலங்கரிப்பார்கள். தத்துவப் பேராசிரியர்: இப்போது மிகக் கூடுதலாக மதிக்கத்தக்கதாக ஒலிக்கும்.

ஆனால் கவிதைப் பேராசிரியர்கள் என்று யாரும் இல்லை. அதன் பொருள், சிறப்பான படிப்பு, முறையான தேர்வுகள், நூற்பட்டியலும் அடிக்குறிப்புகளும் இணைக்கப்பட்ட கோட்பாட்டுக் கட்டுரைகள் மற்றும் இறுதியாக, சடங்குபோல வழங்கப்படும் பட்டயங்கள் என எல்லாம் தேவைப்படுகிற ஒரு தொழில்தான் கவிதை. மேலும் இதன் பொருள், ஒரு கவிஞனாவதற்கு மிகச்சிறந்த கவிதைகளால் பக்கங்களை நிரப்பினால் மட்டும் போதாது. தீர்மானிக்கிற விஷயம், ஒரு அதிகாரபூர்வ முத்திரை பதிக்கப்பட்ட ஒரு துண்டுத்தாள். ருஷ்யக் கவிதையின் பெருமை, வருங்கால நோபல் விருதாளர் ஜோசப் பிராட்ஸ்கி, ஒருமுறை அப்படிப்பட்ட காரணங்களுக்காக  உள்நாட்டு அகதியாக தண்டிக்கப்பட்டதை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். ‘ஒரு நச்சுண்ணி’ என அவரை அழைத்தார்கள், ஏனெனில், ஒரு கவிஞனாக இருப்பதற்கான உரிமையை வழங்கும் அதிகாரபூர்வமான சான்றிதழ் அவரிடம் இல்லையாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பிராட்ஸ்கியை சந்திக்கும் மதிப்பும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைத்தது. எனக்குத் தெரிந்த எல்லா கவிஞர்களிலும், தன்னை ஒரு கவிஞன் என தானே அழைப்பதில் ஆனந்தம் கொள்பவராக அவர் ஒருவரே இருப்பதை நான் கவனித்தேன். அந்தச் சொல்லை அவர் தயக்கமில்லாமல் உச்சரித்தார். அப்படியே எதிராக: திமிர்ந்த சுதந்திரத்துடன் அவர் அதைப் பேசினார். அவரது இளமையில் அவர் அனுபவித்த கொடுமையான அவமானங்களை அவர் நினைவு கூர்ந்ததே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது.

மனித கௌரவம் மிக அவசரமாக அழிக்கப்படாத அதிர்ஷ்டமிக்க நாடுகளில், கவிஞர்கள் பிரசுரிக்கப்பட, வாசிக்கப்பட மற்றும் புரிந்துகொள்ளப்பட ஆசைப்படுவதாக இருக்கலாம். ஆனால் பொது மந்தைகளுக்கும் அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புக்கும் மேலாக தங்களை நிலைநிறுத்துவதற்காக அவர்கள் ஏதேனும் செய்கிறார்கள் என்றால் அது மிகக் சிறிதே. இதுவும்கூட மிக நீண்டகாலத்துக்கு முன்பு கிடையாது, இந்த நூற்றாண்டின் முதல் பத்துகளில்தான் கவிஞர்கள் அவர்களது அதீதமான உடைகளாலும் பிறழ்வு நடத்தைகளாலும் நம்மை அதிர்ச்சிகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் எல்லாமே வெறும் பொதுவெளிக் காட்சிப்படுத்துதலே. கவிஞர்கள் தங்களுக்குப் பின்னே கதவுகளை மூடவேண்டிய, தங்களது மேலங்கிகளையும், வீண் பகட்டு அணிமணிகளையும், பிற கவித்துவ கவசங்களையும் கழற்றி வைத்துவிட்டு அமைதியாக, தாங்களாகவே பொறுமையுடன் காத்திருக்கிற – அசையாத வெள்ளைக் காகிதத்தை – எதிர்கொள்கிற ஒரு தருணம் எப்போதுமே வந்தது. இறுதியாக, இதுதான் உண்மையில் கணக்கிலெடுக்கப்படுகிறது.

மாபெரும் விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களது தன்வரலாற்றுத் திரைப் படங்கள் ஏராளமாக தயாரிக்கப்படுவது ஒன்றும் விபத்தல்ல. முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அல்லது ஒரு மகோன்னத படைப்பு வெளிப்படுவதற்கு நடத்திச் சென்ற படைப்புருவாக்க முறைகளை ஏற்கத்தக்கவகையில் மீட்டுருவாக்கம் செய்வதையே லட்சிய இயக்குநர்கள் நாடுகிறார்கள். குறிப்பிட்ட வகையிலான அறிவியல் ஆக்கத்தை ஒருவரால் கொஞ்சம் வெற்றிகரமாக சித்தரிக்க முடியலாம். சோதனைக் கூடங்கள், உதிரியான உபகரணங்கள், விரிவான எந்திரங்கள் உயிர்ப்புடன் வந்திருக்கலாம்: அவ்வாறான காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை ஒரு சிறிது கைப்பற்றலாம். மற்றும் நிச்சயமின்மையின் அந்தத் தருணங்கள் – ஆயிரமாவது முறையாக, மிகச்சிறிய மாறுதல்களுடன் நடத்தப்பட்ட பரிசோதனை, விரும்பிய முடிவை இறுதியாகத் தந்துவிடுமா?- சரியான நாடகமாக முடியும். ஓவியர்களைப் பற்றிய திரைப்படங்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்க முடியும். ஏனெனில், அவை முதல் பென்சில் கோட்டிலிருந்து இறுதி தூரிகைத் தீட்டல் வரை ஒவ்வொரு கட்டத்தையும் மீட்டுருவாக்கப் போகின்றன. மற்றும் இசைக் கோர்ப்பாளர்கள் பற்றிய திரைப் படங்களில் இசை பெருகி ஓடுகிறது: இசைஞனின் காதுகளில் ரீங்காரமிடும் இன்னிசையின் முதல் சரணங்கள், இறுதியில் ஒரு முழுமையான சிம்பனி வடிவில் ஒரு முதிர்ந்த படைப்பாக வெளிப்படுகிறது. ஆயினும் இவை எல்லாமே குழந்தைத்தனமாகவும், அகத்தூண்டல் என பிரபலமாக அறியப்பட்ட வினோத மனநிலையை விளக்க முடியாததாகவும் இருக்கிறது. ஆனால் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் குறைந்தபட்சம் அங்கே ஏதோ இருக்கிறது.

ஆனால் கவிஞர்கள் மிக மோசம். அவர்களது வேலை கொஞ்சங்கூட நிழற்பட அழகற்றவை. யாரோ ஒருவர், ஒரு சுவரையோ அல்லது கூரையையோ அசையாமல் வெறித்தபடி ஒரு டேபிளில் உட்கார்ந்திருக்கிறார் அல்லது சோஃபாவில் சாய்ந்திருக்கிறார். இடையில் இந்த ஆள், ஒரு ஏழு வரிகளை எழுதிவிடுகிறார், பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவற்றில் ஒன்றை அடித்து அழிக்கிறார். பிறகு மேலும் ஒரு மணி நேரம் கழிகிறது. அப்போது எதுவும் நடப்பதில்லை… இந்த மாதிரியான ஒன்றைப் பார்க்க யாரால் காத்திருக்க முடியும்?

நான் அகத்தூண்டுதல் பற்றிக் குறிப்பிட்டேன். இது என்ன என்றும், உண்மையில் அது இருக்கிறதா என்றும் கேட்கும்போது சமகாலக் கவிகள் விட்டேத்தியாக பதிலளிக்கிறார்கள். இந்த அகத்தூண்டலின் ஆசிர்வாதத்தை அவர்கள் ஒருபோதும் அறியாதவர்கள் என்பதில்லை. உங்களுக்கே புரியாத ஒன்றை யாரோ ஒருவருக்கு விளக்குவதென்பது எளிதல்ல. இதைப்பற்றி என்னிடம் கேட்ட சமயத்தில் நானும்கூட வாயை மூடிக்கொண்டேன். ஆனால் எனது பதில் இது: அகத்தூண்டுதல் என்பது கவிஞர்கள் அல்லது கலைஞர்களுக்கு மட்டுமேயான தனிச்சலுகை அல்ல. அகத்தூண்டுதல் பார்வையிடுகிற ஒரு குறிப்பிட்ட மனிதர் குழு எப்போதுமே இருந்து வந்தது, இருக்கிறது, இருக்கும். இதில் அடங்கியிருப்பது மருத்துவர்கள், ஆசிரியர்கள், தோட்டக்காரர்கள் – ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்களை என்னால் பட்டியலிட முடியும். அதில் புதிய சவால்களை கண்டுபிடித்துக் கொண்டிருக்க இயலும்வரை, அவர்களது பணி ஒரு தொடர் சாகசமாக ஆகிவிடுகிறது. கஷ்டங்களும் பின்னடைவுகளும் அவர்களது பேரார்வத்தைத் தணிக்க முடியாது. அவர்கள் தீர்வு காண்கிற ஒவ்வொரு பிரச்னையிலிருந்தும் புதிய வினாக்கள் தேனீக்கூட்டமாக எழும்பு கின்றன. அகத்தூண்டுதல் என்பது எதுவாக இருந்தாலும் ஒரு தொடர்ந்த ‘நான் அறியேன்’ என்பதிலிருந்தே அது பிறக்கிறது.

அப்படிப்பட்ட மனிதர்கள் இங்கு நிறைய கிடையாது. பூமியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பிழைப்புக்காக வேலை செய்கிறார்கள். செய்தே ஆக வேண்டும் என்பதால் அவர்கள் வேலை செய்கிறார்கள். இந்த அல்லது அந்த வகையான வேலைகளை, அவர்கள் ஆசைப்பட்டு ஏற்கவில்லை; அவர்களது வாழ்க்கைச் சூழ்நிலைகள் அவர்களுக்காகத் தேர்வு செய்தன. விருப்பமற்ற வேலை, அலுப்பூட்டும் வேலை, அந்த அளவுக்குக் கூட மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக மட்டும் மதிக்கப்படும் வேலை – இது ஒரு கொடூரமான மானிடத் துயரம். மற்றும் இதை மேம்படுத்துவதற்காக, வரும் நூற்றாண்டுகள் எந்த மாற்றங்களையாவது உண்டாக்கும் என்பதற்கான ஒரு அறிகுறியும் தென்படாததால் இது வெகுகாலம் தொடரும்.

ஆகையால் அகத்தூண்டலின்மேல் கவிஞர்களுக்கு இருக்கும் பிரத்யேக உரிமையை நான் மறுத்தபோதிலும், நான் இன்னும் அவர்களை அதிர்ஷ்டத்தின் செல்லங்களால் ஆகிய ஒரு தேர்ந்த குழுவில் வைத்திருப்பேன்.

இருப்பினும் இந்த இடத்தில், எனது உரையை கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக ஐயங்கள் எழலாம். அனைத்துவகையான வதையாளர்கள், கொடுங்கோலர்கள், மதவெறியர்கள் மற்றும் சில உரத்த கோஷங்களுடன் அதிகாரத்துக்காகப் போராடும் கிளர்ச்சியாளர்களும் தங்கள் பணியில் இன்பமடைவதுடன், அவர்களும்கூட கண்டுபிடிப்பு ஆர்வத்துடன் தங்களது கடமைகளைச் செய்கிறார்கள். நல்லது, ஆம்; ஆனால் அவர்கள் ‘அறிவார்கள்’, மற்றும் அவர்களுக்கு என்னென்ன தெரியுமோ அவையே காலம் முழுமைக்கும் போதுமானது. ஏனெனில், அது அவர்களது விவாதங்களின் வலிமையை மங்கச் செய்துவிடலாம். ஆனால் புதிய வினாக்களுக்கு இட்டுச் செல்லாத எந்த அறிவும் வேகமாக செத்துவிடும்; உயிரை தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான வெப்பத்தைப் பராமரிக்க அது தவறிவிடும். மிகத் தீவிரமான நிலைகளில், பழமையான மற்றும் நவீன வரலாற்றிலிருந்து நன்கு தெரியும் நிலைகளில், அது சமூகத்துக்கு ஒரு ஆபத்தான அச்சுறுத்தலாகவும்கூட நிற்கிறது.

இதன் காரணமாகத்தான், அந்த குட்டித் தொடர் ‘நான் அறியேன்’ என்பதை நான் மிக உயர்வானதாக மதிக்கிறேன். அது சிறியது ஆனால் அது வலிய சிறகுகளால் பறக்கிறது.   நமக்குள் விண்வெளிகளையும் அதேபோல, நமது மிகச்சிறிய பூமி அந்தரத்தில் தொங்கும் பரந்த புறவெளிகளையும் உள்ளடக்குவதற்காக, அது நமது வாழ்வை விரிவுபடுத்துகிறது. ஐசக் நியூட்டன் தனக்குள் ‘நான் அறியேன்’ சொல்லாமல் இருந்திருந்தால், அவரது சிறிய தோட்டத்தின் ஆப்பிள்கள் ஆலங் கட்டிகள்போல தரையில் விழுந்திருக்கும், அவரும் விழுந்தடித்து ஓடி பழங்களை எடுத்து அவசர அவசரமாக சுவைத்து விழுங்கியிருப்பார். எனது நாட்டைச் சேர்ந்த மேரி ஸ்கலொடெவ்ஸ்கா-கியூரி அவளுக்குள் ‘நான் அறியேன்’ சொல்லாமல் இருந்திருந்தால், ஏதோ ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில், நல்ல குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு வேதியியல் கற்றுத்தரும் ஆசிரியராக ஆகியிருப்பார். மற்றபடி, முற்றிலும் மதிப்புக்குரிய இந்த வேலையைச் செய்தவாறே தனது நாட்களை முடித்திருப்பார். ஆனால் அவர் தொடர்ந்து ‘நான் அறியேன்’ சொல்லிக்கொண்டே இருந்தார். இந்தச் சொற்கள் அமைதியற்ற, தேடல்கொண்ட ஆவிகள் எப்போதாவது நோபல் பரிசு பெறும் ஸ்டாக்ஹோமுக்கு, ஒரு முறையல்ல – இரு முறை அவரை அழைத்துச் சென்றன.

கவிஞர்கள், உண்மையானவர்களாக இருந்தால் ‘நான் அறியேன்’ என்பதை திரும்பத் திரும்ப  சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த ஒப்புதலுக்குப் பதிலளிக்க ஒவ்வொரு கவிதையும் ஒரு முயற்சியை குறிக்கிறது. ஆனால் கவிதைப் பக்கம் கடைசி முற்றுப்புள்ளியை அடைந்தவுடனே கவிஞர் தயக்கமுறத் தொடங்குகிறார். இந்த குறிப்பிட்ட விடை தற்காலிகமானதாக, முற்றிலும் போதாமையுடன் இருப்பதாக உணரத் தொடங்குகிறார். எனவே, கவிஞர்கள் தொடர்ந்து முயல்கிறார்கள் – உடனேயோ அல்லது பின்னரோ அவர்களது தொடர்ந்த சுய அதிருப்தியின் விளைவுகள், இலக்கிய வரலாற்றாளர்களால் ஒரு பெரும் காகித க்ளிப்பில் கோர்க்கப்பட்டு அவர்களது ‘பெருந்தொகுப்பு’ என அழைக்கப்படுகிறது.

சில நேரங்களில், நான் உண்மையாக முடி யாத சூழ்நிலைகளை கனவு காண்பதுண்டு. எடுத்துக்காட்டாக, எல்லா மனித முயற்சிகளும் வீணே என்று உருக்கமாக ஒப்பாரிவைக்கும் அந்த ஆசான் எக்லெசி யாஸ்டெஸுடன் உரையாடுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைப்பதாக நான் மிகத் துணிச்சலாக கற்பனை செய்கிறேன். அவருக்கு முன்பாக நான் மிகத் தாழ்ந்து தலைவணங்குகிறேன். ஏனெனில் குறைந்தபட்சம் என்னளவிலாவது, மகாகவிகளில் அவரும் ஒருவர். பிறகு நான் அவரது கைகளை பற்றிக் கொண்டேன். ‘சூரியனுக்குக் கீழே எதுவும் புதிதில்லை’ இதைத்தானே நீங்கள் எழுதினீர்கள், எக்லெசியாஸ்டெஸ். ஆனால் நீங்கள், நீங்களே சூரியனுக்குக் கீழே புதிதாகப் பிறந்திருக்கிறீர்கள். அத்துடன், நீங்கள் படைத்த அந்தக் கவிதையும் சூரியனுக்குக் கீழே புதியது. ஏனெனில் உங்களுக்கு முன்பு ஒருவரும் இதை எழுதியிருக்கவில்லை. மேலும் உங்கள் வாசகர்கள் எல்லோருமே சூரியனுக்குக் கீழே புதியவர்கள். ஏனெனில் உங்களுக்கு முன்பு பிறந்தவர்கள் உங்கள் கவிதையைப் படித்திருக்க முடியாது. நீங்கள் அமர்ந்திருக்கும் மரத்தடி, அந்த சைப்ரஸ் அனாதி காலம் தொட்டு வளர்ந்ததில்லை. உங்களுடையதைப் போன்ற வேறொரு சைப்ரஸ் மூலமாகத்தான் அது முளைத்திருந்தது, ஆனால் மிகச்சரியாக அதுவே இல்லை.

மற்றும் எக்லெசியாஸ்டெஸ், உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்: இப்போது சூரியனுக்குக் கீழே எந்தப் புதிய விஷயத்தைப் படைக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கும் எண்ணங்களுக்கு ஒரு பின்னிணைப்பா? அல்லது அவற்றில் சிலவற்றோடு இப்போது முரண்பட நீங்கள் ஆசைப்படலாம் அல்லவா? இன்னும் நீங்கள் குறிப்பெடுக்கிறீர்களா, உங்களிடம் குறிப்புகள் இருக்கின்றனவா? நான் ஐயப்படுகிறேன், நீங்கள் கூறுவீர்கள், ‘நான் எல்லாவற்றையும் எழுதிவிட்டேன், இணைப்பதற்கு என்னிடம் மீதமில்லை’ இதைக் கூறமுடிகிற கவிஞர்கள் உலகில் ஒருவருமில்லை, எல்லோரிலும் கீழாக, உங்களைப் போன்ற ஒரு மகாகவி.

உலகம் – அதன் பிரமாண்டம் மற்றும் நமது கையாலாகாத்தனத்தால் அச்சுறுத்தப்படும்போது அல்லது மனிதர்களின், மிருகங்களின் மற்றும் ஒருவேளை தாவரங்களின் (தாவரங்கள் வலி உணர்வதில்லை என்று நாம் மிக உறுதியாக ஏன் இருக்கிறோம்?) தனிப்பட்ட துயரங்களின் மீதான அலட்சியத்தால் நாம் கசப்பூட்டப்படுகிற சமயங்களில், என்ன வேண்டுமானாலும் நாம் சிந்திக்கலாம். தற்சமயம், நாம் கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கும் கோள்கள், ஏற்கனவே மரித்த கோள்கள் மற்றும் இன்னும் இறந்துகொண்டிருக்கும் கோள்களால் சூழப்பட்ட விண்மீன்களின் கிரணங்களால் துளைக்கப்பட்ட, அதன் பெரும்பரப்பைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நாம் சிந்திக்கலாம். முன்பதிவுச் சீட்டுகள், ஆனால் நகைப்புக்குரிய அளவுக்கு, இரண்டு தன்னிச்சையான நாட்களுக்கு உட்பட்ட மிகச்சிறிய வாழும் காலத்தைக்கொண்ட சீட்டுகள் வைத்திருக்கும் நாம், இந்த அளக்கமுடியாத நாடக அரங்கு குறித்து என்ன வேண்டுமானாலும் சிந்திக்கலாம் – அது திகைப்பூட்டுவது.

ஆனால் ‘திகைப்பூட்டல்’ ஒரு தர்க்க பூர்வமான அபாய வலையை மறைக்கும் பண்புச்சொல். சில நன்கு அறிந்த மற்றும் பொதுவான வரையறைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, பழக்கப்பட்டு நாம் வளர்ந்திருக்கிற ஒரு தெளிவிலிருந்து விலகிச் செல்லும் விஷயங்களால்தானே நாம் திகைப்படைகிறோம். ஆனால் அப்படி ஒரு தெளிவான உலகம் எங்கும் இல்லை என்பதே உண்மை. நமது திகைப்பு இருக்கிறது அதுவாகவே, மற்றும் வேறு எதனுடனும் ஆன ஒரு ஒப்பீட்டின் அடிப்படையில் அது இல்லை.

அன்றாடப் பேச்சில், ஒவ்வொரு சொல்லையும் பரிசீலிப்பதற்காக நாம் நிற்காத இடங்களில், நாம் அனைவருமே ‘சாதாரண உலகம்’, ‘சாதாரண வாழ்க்கை’, ‘சாதாரண நிகழ்வுகளின் போக்கு’ போன்ற சொற்றொடர்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு சொல்லும் எடை பார்க்கப்படுகிற கவிதையின் மொழியில் எதுவுமே சாதாரணமானதோ, வழக்கமானதோ கிடையாது. அதற்குமேல் ஒரு தனித்த கல்லும் இல்லை, ஒரு தனித்த மேகமும் இல்லை. அதன்பின் ஒரு தனித்த பகலும் இல்லை, ஒரு தனித்த இரவும் இல்லை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உலகில் எவரொருவரின் இருப்பும்  ஒரு தனித்த இருப்பில்லை.

கவிஞர்களுக்கு எப்போதுமே அவர்களது வேலை அவர்களுக்குப் பொருத்தமாக இருப்பதாகவே தெரிகிறது.

டிசம்பர் 7, 1996, ஸ்டாக்ஹோம்

சிறுபத்திரிகை, அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *