காலம் சென்றுவிடும் சொல் நிற்கும்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ் பிற

கு. ஜெயபிரகாஷ்

“சொல்லுன்னா என்னா, அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்”
(அறம் கதையில் இருந்து). 

எம்.வி.வி என்று அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராமனின் காதுகள் நாவலுக்குப் பிறகு சில வருடங்கள் கழித்தே அவரின் சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது.  தன் மகளின் திருமணச் செலவிற்காக மொத்தமாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு “நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்” என்ற தலைப்பில் 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை இரவுபகலாக கைகள் வீங்க எழுதியவர்  எம்.வி.வியே. அவரின் முதல்  சிறுகதை ‘சிட்டுக்குருவி’ மணிக்கொடி இதழில் வெளிவந்தபோது அவரின் வயது 17. அதன் பிறகு தொடர்ந்து பல இதழ்களில் சிறுகதைகளை எழுதி வந்தார். இதுவரையில்  ஏழு நாவல்களும் பத்து சிறுகதைத் தொகுப்புக்களும் கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. இவைதவிர “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இலக்கியத்தின் மீது கொண்ட தீரா ஈர்ப்பால்  தேனீ இதழையும் நடத்தினார். அதில்  பல எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டார். அப்படிப்பட்டவரைப் பற்றி இணையத்தில் தேடுகையில் மிகச் சொற்பமான கட்டுரைகளும்,  அவருடன் மேற்கொண்ட நேர்காணலும் கிடைத்தன. கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்,  ஏறுநெற்றியில் பொட்டுடன்  பெரிய மூக்குக் கண்ணாடியுமாக இருப்பார். எத்தனை  இக்கட்டான சூழலிலும் வெள்ளையுடையும் சவரம் செய்த முகத்துடனும் தோன்றவே விரும்புவார் என்று அவரே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். 

எம்.வி.வியின்  படைப்புகளில் மனிதனின் அகத்தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை இழை இழையாய்க் கோத்து கதைகளை நெய்திருக்கிறார் பனிமுடி மீது ஒரு கண்ணகி என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் வாழ்வியலின் பல்வேறு அடுக்குகளின் உணர்வைத் தொட்டுச் செல்கிறது. அத்தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையும் உணர்வின் ஆழத்திற்குள் பயணிப்பவை அதில் முதலில் வரும் ‘யாருக்குப் பைத்தியம்’ என்ற கதையில் ஜவுளி வியாபாரியை அடையாளம் காட்டுவதாகச் சொல்லி,  ஹோட்டலில் யாசகம் கேட்டு சாப்பிட்ட பெரியவர், பின்  சரிகை மூட்டையை இவருக்கு முன் வேகமாகத்தூக்கிச் செல்வதைப் பார்க்கும்போது  சரிகை மூட்டை  திருடு போய்விடுமோ என்ற பயமும் இருந்தது. கனத்த சரிகையைத் தூக்கிக் கொண்டே நடந்தவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து பின்  பெரியவர் தான் வாழ்ந்துகெட்ட கதையைச் சொல்கிறார். இக்கதை கண்முன்னே விரிகிறது. இறுதியில் யாருக்கு பைத்தியம் என்ற கேள்வியுடன் கதை முடிகிறது. கதை சொன்ன பெரியவரா? இல்லை பெரியவரின் மகனா?  அல்லது கதையில் வரும் தாசி ரமாமணியா? என்று யோசிக்கும் போது ஊர் மக்கள் அந்தக் குடும்பமே பைத்தியம் என்று சொல்கின்றனர். இக்கதையை நகைப்புடன் சொல்லிச் சென்றாலும் ஜவுளி மூட்டைகளை  ஊர் ஊராகச் சுமந்து செல்லும் சௌராஷ்ட்டிரர்களின் உழைப்பும்  மற்றும் அவர்கள் வியாபாரத்தில் ஈட்டிய  பணத்தை மொத்தமும் இழந்ததால் ஏற்பட்ட  மனப்பிறழ்வும் அவர்களைப் புலம்பச் செய்திருக்கிறது. அந்தப் புலம்பல்கள்  இவர்களைப் பைத்தியமாக்கியிருக்கிறது. காலம் ஒருகணத்தில் நம்மை உச்சியில் உயர்த்தியும் அதேசமயம் உச்சியில் இருந்து மொத்தமாகக் கீழே தள்ளியும் விடுகிறது.

இறுதியில் யாருக்கு பைத்தியம் என்ற கேள்வியுடன் கதை முடிகிறது. கதை சொன்ன பெரியவரா? இல்லை பெரியவரின் மகனா?  அல்லது கதையில் வரும் தாசி ரமாமணியா? என்று யோசிக்கும் போது ஊர் மக்கள் அந்தக் குடும்பமே பைத்தியம் என்று சொல்கின்றனர்.

அதைத் தொடர்ந்து வரும் ‘வாழ வைத்தவன்’ கதையில் பட்டு என்பவள் வறுமையால் மெலிந்திருக்கிறாள்  கல்யாணம் ஆவதே கஷ்டம் என்ற நிலையில். வருகின்ற வரன் எல்லாம் பட்டுவைப் பிடிக்கவில்லை என்று தட்டிக் கழித்திருந்த சூழலில் பட்டுவைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி கல்யாணம் முடித்து பின் பட்டுவிற்கு உடற்பயிற்சி யோகா  என எல்லாம் செய்யச் சொல்லி மெலிந்திருந்தவளை நெகிழ வைத்து உடலாலும் உள்ளத்தாலும் அழகுப்படுத்தியவனின் முடிவு வாழ்வில்  எப்போதும் நாம் எதிர்பாராத தருணம் திடீர் என்று நம்மை மீளாத் துயரத்தில் அழுத்திவிடுகிறது. இத்துயரின் கனத்த உணர்வோடு இடைவெளியிட்டு அடுத்த கதைக்குக் கண்களையும் மனதையும் நகர்த்துகையில், இரவில் மழையுடன் வரும் கல்யாணி. முழுவதுமாக  நனைந்துகொண்டே ஒரு வீட்டில் ஒதுங்கி தன் குழந்தைக்கு உணவு கேட்கிறாள்.   மனைவி பார்வதியை எழுப்பி ஏதும் செய்ய சொல்கிறேன்! இல்லை வேண்டாம் இருப்பதை மட்டும் கொடு போதும். பசி எனக்குப் பழக்கமான விஷயம் என்று சொல்லி தன் குழந்தை கண்ணனுக்கு மட்டும் கேட்கிறாள். இத்தனை வருடம் எங்கே சென்றாய்?  ஏன் என்னை விட்டுச் சென்றாய்?  என்று முன்னாள் காதலனின் கேள்விகள் எல்லாம் அந்த மழையில் கரையாமலே இருக்கிறது. அவனின் கேள்விக்குப் பதிலாக  விளக்கை ஏற்றி ஒளிபெற்றுவிடுகிறாள். காதலன் இருளின் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறான்.

பனிமுடி மீது ஒரு கண்ணகி
பனிமுடி மீது ஒரு கண்ணகி

‘மழை’ கதையில் வரும் கல்யாணி  நின்றிருந்த இடத்தை முழுவதுமாக ஈரம் படர்ந்திருந்தது. நினைவுகளின் பசி கொண்ட மனதுடன் அடுத்த கதைக்குள் நுழைகையில், ரகு காத்திருக்கிறான் நிர்மலாவின் வருகைக்காக காதலும் வறுமையும் உலுக்கும் கதை. வேலையில்லாத ரகு சாப்பாட்டுக்கே கஷ்டம், இண்டர்வியூக்கு போவதாக பொய் சொல்லி கிளம்பும் மகனை சாப்பிட்டுப் போகச் சொல்லிப் பசியோடிருக்கும் தாய். காதல் பசி, வயிற்று பசி என இரண்டும் ஊசியாய் குத்திச் செல்கிறது. வெயிலில் செருப்பில்லாமல் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு நடந்து செல்கிறான்.  மனதைக் காதலும் வயிற்றைப் பசியும் ருசித்துக் கொண்டிருக்கிறது. நிர்மலாவைப் பார்த்து மகிழ்கிறான் பசியால் மயங்கி விழுந்து .” அம்மாவுக்கும் ரொம்பப் பசி இல்லை.. இல்லை..எனக்கும் ரொம்பப் பசி” என்ற சொல்லும் போது நமக்குள்ளும் அடிவயிற்றையும் மனதையும் கிள்ளும்  பசியின் ஓலத்தை உணர்த்திச் செல்லும் ‘வயிறு பேசுகிறேன்’ என்ற கதையில். தொடர்ந்து பசியின் முகங்களை காட்டிச் செல்லும் எம்.வி.வி. சாமியார்களையும் விட்டுவைக்கவில்லை. ‘சிறைச்சாலை என்ன செய்துவிடும்’ கதையில் யாசகம் பெற்று வாழும் சாமியார்களின் கதை. வயிற்றைக் கழுவிக்கொள்ள நினைக்கும் லேகியச் சாமியாரின் வளர்ப்பு மகன்  நமச்சிவாயம். ஞானத்தை உணர்த்தும் பொன்னம்பலசாமிகள்  என இருவரும் இணையும் புள்ளியே இந்தக்கதை. எல்லாம் துறந்தாலும் பசி நம்மை விடமறுக்கிறதே. அந்தப் பசிக்காக இந்த மனிதன் என்னவெல்லாம் செய்கிறான். நமச்சிவாயம் யாசகத்தில் வருவதை சேமிக்க பார்க்கிறான். பொன்னம்பலசாமிகள் தனக்கிருக்கும் சொத்துகளை எல்லாம் உதறிவிட்டு வந்தவர். இருவரும் இணைந்து யாசகம் கேட்டு வீதி வீதியாகச் செல்லும்போது வெள்ளி நகைக்கடையில் பொன்னம்பலம் சாமிகள் நகையைத் திருடுவதை நமச்சிவாயம் கண்டு  சத்தம் போட்டு பிடித்துக் கொடுத்துவிடுகிறான். பின்  நல்ல பெயரும் காசும் வாங்கிக்  கொண்டு நகர்கிறான்.  குழப்பத்துடன்  காலத்தைக்  கடந்து வருகிற நமச்சிவாயம் பின் பொன்னம்பலம்சாமியை பார்த்தபின் திகைத்து தெளிகிறான். சிறைச்சாலை என்ன செய்துவிடும் ஞானத்தின்பால் செல்பவனுக்கு என்ற கனத்த மௌனத்துடன். 

ஞானத்தை உணர்த்தும் பொன்னம்பலசாமிகள்  என இருவரும் இணையும் புள்ளியே இந்தக்கதை. எல்லாம் துறந்தாலும் பசி நம்மை விடமறுக்கிறதே. அந்தப் பசிக்காக இந்த மனிதன் என்னவெல்லாம் செய்கிறான். நமச்சிவாயம் யாசகத்தில் வருவதை சேமிக்க பார்க்கிறான்.

‘மாளிகை வாசம்’ கதையின் பக்கத்தைத் திருப்புகையில், பல ஆசைகளுடன் தனக்கு வரும் கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கற்பனையில் தனக்கு வரும் வரன் எல்லா வற்றையும் உதறித் தள்ளுவாள். இறுதியில் தான் எதிர்பார்த்த எல்லா அம்சங்களுடன் ஒருவன் கிடைத்து திருமணம் முடிப்பாள். பெரிய செல்வந்தன் மாமியாரையும் கணவனையும் தவிர யாருமில்லை அந்த வீட்டில். சந்தோஷத்தின் உச்சியில் இருப்பாள். மெல்ல மெல்லத்தான் தெரியவரும் அவளின்  கணவன் பெண்தன்மை கொண்ட மாற்று பாலினத்தார் என்று இதற்கடுத்து நகரும் கதை வாழ்வின் எதார்த்தத் தளத்தின் உணர்வுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி  மனக்குழப்பத்தில் நின்று தடுமாறிக் கொண்டிருக்கும் பெண்ணின் தவிப்பை எதார்த்த மனநிலையை எழுத்தில் வடித்திருக்கிறார். மருமகளின் வாழ்வைக் கெடுத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வில் இறக்கும் மாமியார். மாமியாரின் இறப்பிற்குப் பின் எல்லா சொத்தும் தன் கைக்கு வந்துவிட்டாலும், அவள் ஆசைபட்ட வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் வேதனையும் அவளை வாட்டிக்கொண்டிருக்கையில், புடவைகளைக் கட்டி கண்ணாடி முன் அழகு பார்க்கும் கணவன் என உளவியல் ரீதியில் கதைகளைக் கோர்த்திருப்பார்.

இவ்வாறு தனது ஒவ்வொரு கதைகளையும் வாசகன் வாசித்து தனக்குள் கேள்வி எழுப்பும் தருணத்தில் கதையை முடிக்கிறார் எம்.வி.வி. 

உண்மையான வாழ்க்கையைக் கொஞ்சம் கூடக் கற்பனை கலக்காமல் அப்படியே கலைப்படைப்பாகவும்  கற்பனையும் நிஜ வாழ்க்கையும் இருசேரக் கலந்து படைத்த கதைகளுடனும்  கற்பனையின் உச்சியில் நின்ற கதைகளுமாக பல கதைகளைத் தந்திருக்கிறார் எம்.வி.வி. ஆனால் அவரின்  “நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்”  என்ற புத்தகங்கள் அவருடைய கலைப்படைப்புகளை விடவும் அதிகம் விற்றவை. அவரின் நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல்கள் என எழுதியவை அதிகம். எழுத்தை மட்டுமே வாழ்வாகக் கொண்டு இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்திட்ட பெரியவர். காலம் கடந்தும் தன் படைப்புகளால் உயிர்புடன் இருக்கிறார். 

கு.ஜெயபிரகாஷ், முனைவர், சா என்ற நாவல்களின் ஆசிரியர். திருவண்ணாமலையில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

2 thoughts on “காலம் சென்றுவிடும் சொல் நிற்கும்

  1. எம்.வி படைப்புகள் குறித்து சிறப்பான அறிமுகம். ஒரு பக்கத்திற்குள் அடர்த்தியாகவும் ஆழமாகவும் பேசியிருப்பது அருமை. படைப்பாளிகளை தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளப்படுத்தும் அடவிக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *