குளிர்மலை

குளிர்மலை-ஹான்ஷான்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பாக, சி.மணி அவர்களின் மொழியெர்ப்பில், தாவோ தே ஜிங் வாசித்த ஞாபகம், இப்பொழுது ஹான்ஷான் கவிதைகளை வாசிக்கும்போது, நினைவில் வருகிறது. தாவோ என்னும் சமயத்திற்கு அடிப்படையான தாவோ தே ஜிங் எழுதியவர் லாவோட்சு. இது எல்லாருக்கும் தெரியும். இந்த நூல் ஆறாம் நூற்றாண்டில் வருகிறது என்றால், ஹான்ஷான் கவிதைகளின் காலம் கி.பி.9ற்குள் என்று சொல்லலாம். தாவோ மற்றும் சான் மரபை ஒட்டிய கவிதைகள், ஹான்ஷானுடையவை. தாவோ தே ஜிங் தத்துவம் எனில், ஹான்ஷான் அதை மறுக்காமல் மறுக்கும் ஒரு தனிமனிதன் அகப் பயணம்.

யார் இந்த ஹான்ஷான்? எங்கே பிறந்தார்? எங்கே கல்வி பெற்றார்? அவர் எங்கே வளர்ந்தார்? என்பதைப் பற்றிய செய்திகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மஹாயான புத்தம், ஜென் பௌத்தம் ஆகியவற்றில் ஓர் அடையாளமாக, ஆயிரம் ஆண்டுகளாக இருப்பவர்தான் ஹான்ஷான். ஹான்ஷான் பற்றிய சித்திரம் வரும்பொழுது, அவரது நிழலாக, நண்பராக இருப்பவர்தான் ஷிதே. இந்த இரண்டு விசித்திர குள்ளர்களும் எழுதிய கவிதைகளைத் தொகுத்தவர்தான், லூசியூயின். உண்மையில் ஹான்ஷான், ஷிதே இருவரும் உண்மையாகவும் இருந்திருக்கலாம்; கற்பனையாகவும் இருக்கலாம்.

ஹான்ஷான்

ஹான்ஷான், ஷிதே இருவரும் தம் கவிதைகளை மரங்களில், பாறைகளில், விவசாயிகள் வீட்டுச்சுவர்களில், சிலவேளை தாங்கள் செல்லக்கூடிய மடாலயங்கள் சுவர்களில் எழுதி இருக்கிறார்கள். தென்கிழக்கு ஆசியாவில், ஹாங்சௌ விரிகுடாவின் தெற்கே, செகியாங் மாகாணத்தின் வடகிழக்கு மூலையின் கடலோரத்தில் அமைந்துள்ள தியான்-டாய் மலைத்தொடரில் உள்ள குளிர்மலையின் அருகில் உள்ள, கொவொ சிங் மடாலய அடுப்பங்கரைச் சுவரிலும் எழுதியிருக்கிறார்கள். ஆடம்பரமான பிர்ச் மரப்பட்டைத் தொப்பி, பருத்தியாலான கந்தலான ஒரு மேலங்கி, தேய்ந்த செருப்பு அணிந்திருந்த ஹான்ஷான் கவிதை எழுதுபவராக மட்டும் இல்லாமல், கிராமத்தான்களின் வீட்டில் அமர்ந்து விசில் அடிப்பவராகவும் இருந்திருக்கிறார்.

 ஹான்ஷான் கோவொசிங் மடாலயத்தில் பணி புரிபவராக இருந்திருக்கிறார். தனக்கு அளிக்கப்பட்ட வேலைக்கு மாறாக, சிரிப்பதும் கொண்டாடுவதுமான மனோநிலையில் கவிதைகள் எழுதுபவராக, விசில் அடிப்பவராக, கிண்டலடிப்பவராக சொல்லப்போனால், அதன் அருகில் இருக்கும் குளிர்மலையின் குகைக்குள் தன்னை மறைத்துக்கொண்டு, இயற்கையையும் தத்துவத்தையும் தரிசிப்பவராக இருந்திருக்கிறார்.

 ஹான்ஷான் கவிதைகளை வாசிக்கும்போது மனம் காற்றில் அசைந்தாடும் ஒரு பழத்த இலை ஒன்று, நதியில் மீது விழுந்து உயிர்பெற்று ஒரு மீனாக உள்ளுக்குள் நீந்திசெல்வது போல் இருந்தது. வாழ்வின் மென்மையான, கடினமான கணங்களைக் கேள்விக்கேட்கும் குரல்தான் ஹான்ஷான். வஸ்துகளின், ஜந்துகளின், மனிதர்களின் பெருமதிப்பைக் கேள்விக்குள்ளாக்கி, வாழ்வின் கணங்களில் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று கற்றுத்தருபவராக இருக்கிறார். மனிதர்களின் மதிப்பற்றதின் மீதான மதிப்பு. மதிப்பற்றவைகளின்மீதான மனிதர்களின் காதல், அரசு, அதிகாரம் ஆகியவற்றின் நம்பகமற்றத்தன்மை எனப் பல புனிதங்களை உடைப்பராக இருக்கிறார், ஹான்ஷான். தவிர, இக்கவிதைகளில் உலாவும் ஒரு மனிதராக, தன் அந்தரங்க வாழ்வை எழுதுவராகவும் ஹான்ஷான் அலைகிறார்.

ஹான்ஷான் என்ற கவியின், நாடோடியின், ஏகாந்தவாசியின் வாழ்வை பெரும்பாலான கவிதைகளில் காணமுடிகிறது. திட்டவட்டமாக தான் யார் என்பதை ஹான்ஷான் கூறிவிடுகிறார். தனிமனித ஒழுக்கம், கல்வி, வேலை இவற்றைக்கடந்து, ஆற்றின் ஓரத்திலும், காட்டிலும், குளிர்மலையின் குகையிலும் வாழும் மனிதாக ஹான்ஷான் தன்னைச் சித்தரித்துக்கொள்கிறார். கவிதைகள் எழுதுவது, மரங்களுடன் வாழ்வது, புத்தகங்களுடன் வாழ்வது என்கிற வாழ்வை எழுதிச் செல்பவராக, வாழ்ந்து அனுபவிக்கும் ஒரு சித்திரமே ஹான்ஷான். அவரால் மட்டுமே இலவங்க மரத்தின் மாயையில் கட்டுண்டு, மேகத்தின்மீது அமரமுடியும். அதனால்தான் தமக்குள் தீங்கு விளைவித்துக்கொள்ளாத நீரும் நெருப்பும் போன்றவை வாழ்வும் மரணமும் என உண்மையை ஓர் ஒற்றை அங்கியாக உடுத்திய ஹான்ஷானால் மட்டுமே இதைச் சொல்லமுடியும்.

இந்த நூறு கவிதைகளில் வழியாக, அன்றைய கால அரசியல், புத்த குருமார்கள், ஆடம்பர மனிதர்கள், தாவோயிச ரசவாதிகள் ஆகியோர்களை எதிர் விமர்சனமாகத்தான் ஹான்ஷான் பார்க்கிறார். குளிர்மலைக்கான வழி பற்றி, குளிர்மலையின் தோற்றம் பற்றி, அதன் இயற்கைத்தன்மை பற்றி, அழகியல் பற்றி, அது உணர்த்தும் வாழ்விற்கான அறம் பற்றி இக்கவிதைகள் பேசுகின்றன. அல்லது ஹான்ஷான் நம்முடன் உரையாடுகிறார். இன்னொரு முக்கியமான அம்சம், அன்பற்ற, உண்மையற்ற, அழிவதுமீது பற்றுள்ள மனிதர்களைக் குறித்து எழுதியிருப்பது.

0

ஹான்ஷான் கவிதைகளில் வெளிப்படையான இருண்மை இருக்கிறது. அந்த இருண்மை கொண்ட மனிதர்களை அவர் அதிகமும் எழுதியிருக்கிறார். காஞ்சனப் புட்கள் பாட, அவற்றிற்கு ஏற்றாற்போல, யாழின் நரம்புகளை இசைக்கும் பெண்ணின் கண்ணீர்த்துளிகள், வசந்தகாலத்தில் விழுவதாக இருக்கிறது. ஏன் அவள் அழவேண்டும்?

இன்னொரு கவிதையில், குடித்திருப்பவை வீட்டிற்குச் செல்லாதே என மறுக்கும் ஹான்-டான் நகரத்துப் பெண், தன் படுக்கையறையில் பூத்தையல் வேலைப்பாடுகள் நிறைந்த படுக்கை விரிப்பொன்று, வெள்ளிக்கட்டில் முழுவதும் மறைக்கும் அளவுக்கு விரிந்திருக்கிறது என்கிறாள். ஏன்?

அறிஞரின் தாயும் பிரபுவின் மனைவியும் விருந்துண்ண போகிறார்கள். அங்கே அவர்களுடைய ஆடை கசங்கி இருந்ததால். புழக்கடைக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே விருந்தில் மீதமான இனிப்பப்பம்தான் உண்ணத் தரப்படுகிறது. எதனால்?

சுங்கின் மனைவியின் சாவிற்கு வந்தவர்கள் இறைச்சியையும் வைனும் உண்டு போகிறார்கள். ஆனால் சுங்கின் மரணத்திற்கு யாரும் வரவில்லை, அழவும் இல்லை.அம்மனிதர்கள் அன்பற்ற இதயங்களாக இருக்கிறார்கள், ஒரு கவிதையில்.

இப்படித் தனிப்பட்ட மனிதர்கள் நாகரிகப் போர்வையில் பெரும் அவமானங்களை, தோல்விகளை ஹான்ஷான் கவிதைகள் சொல்கின்றன.

பேரரசோ, சிற்றரசோ, வணிகனோ, அதிகாரியோ, எதுவானாலும் அவற்றின் வாழ்வு நிலையற்றது என்கிற தத்துவத்தை மொழியும் கவிதைகள் பலவும் இத்தொகுதியில் இருக்கின்றன.

0

ஹான்ஷான் கவிதைகள் மனதில் ஒரு விதையாகப் புதைந்திருக்கிறது. ஓர் ஊமைப்போல்தான் இருக்கிறேன். அல்லது குளிர்மலையில் புலிகளை எதிர்நோக்கும் ஒரு மனமாக இருக்கிறேன் என்றும் சொல்லலாம். சொல்லவிரும்பியதெல்லாம் சொல்ல முடியாத மௌத்திற்கு இக்கவிதைகள் என்னைக் கொண்டு சேர்த்துள்ளன. ஓடும் நதிகளும் அசையும் பிர்ச் மரங்களும் கொண்ட குளிர்மலை என்பது மனமே, புத்தர் என்பதும் மனமே என்கிறார் ஹான்ஷான். ஒருவகையில் குளிர்மலை என்பதுகூட ஹான்ஷான் கற்பனைசெய்து வாழும் நிலமாகவும் இருக்கலாம். மனம் வழியாகப் பயணிக்கும்போது குளிர்மலையை அடைந்துவிடலாம் என்று சிரிக்கிறார், ஹான்ஷான். ஒருகட்டத்தில் உனக்குள் உன்னைத் தேடும்போது புத்தரை நீ அடைந்துவிடமுடியும் என்ற சூட்சுமப்பாதையைக் காட்டுகிறார்.

0

ஹான்ஷான் கவிதைகளைச் சீனத்திலிருந்து ஆங்கிலத்திற்கு red pine, gary Snyder, kazuaki tanahashi என்று பலபேர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதில் button Watson மொழிபெயர்ப்பிலிருந்து 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, சசிகலா பாபு மொழிபெயர்த்திருக்கிறார். ஹான்ஷான் என்னும் ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ளவைக்கும் கவிதைகள் இவை. ஹான்ஷான் வாழ்ந்த இடம், அவர் கவிதைகளின் தன்மை, ஆகியவற்றைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் முன்னுரையில் எழுதியிருக்கிறார். இக்கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கான சாவியாக அமைந்திருக்கிறது, இம்முன்னுரை. குளிர்மலைக்கான வழியைத் தெள்ளத்தெளிவாக. எளிமையாகக் காட்டுகிறார், மொழிபெயர்ப்பாளர்.

இத்தொகுதியிலிருந்து சில கவிதைகள்

0

ஒரு ஓலைக்குடில்தான் இக்கிராமத்தான் வீடு.
குதிரையோ வண்டியோ எப்போதேனும் என் வாசலின்
வழியே செல்லும்
அனைத்துப் பறவைகளும் வந்து கூடடைந்திட காடுகள்
அசைவின்றிக் கிடக்கும்.
பரந்துவிரிந்த பள்ளத்தாக்கு ஓடைகளில் எப்போதும்
மீன்கள் நிறைந்திருக்கும்.
என் குழந்தையுடன் சேர்ந்து காட்டுப்பழங்கள்
பறிப்பேன்
என் மனைவியோடு சேர்ந்து மலைச்சரிவு வயல்களை
உழுதிடுவேன்
என் வீட்டில் நான் என்னதான் வைத்துள்ளேன்?
புத்தகங்கள் குவிந்து கிடக்கும் ஒரு படுக்கை மட்டுமே.

0

பசிக்கும் குளிருக்கும் இடையே தொடர்ந்து
வதைப்பட்டு.
வறிய அறிஞர்களாகிய நாங்கள் இங்கே
வாடிப்போயுள்ளோம்,
எங்களுக்கென வேலையேதுமில்லை, எங்களின் ஒரே
இன்பம் கவிதைதான்;
அவற்றைக் கிறுக்கிக் கிறுக்கி எங்களின் மூளை
களைத்துவிட்டது.
இத்தகையோரின் படைப்புகளை எவர்தான்
வாசிப்பார்கள்?
அதையெண்ணும்போது எங்களுக்கு
ஏக்கப்பெருமூச்சுகள்தான் எழுகின்றன.
நாங்கள் எங்கள் கவிதைகளை ரொட்டிகளில்
பொறித்து வீசினாலும்
வீடேதுமில்லாத தெருநாய்கள்கூட மனமிரங்கி
அவற்றை உண்ண முன்வராது.

0

குடியானவர்கள் அனைவரும் அனலில் இருந்து
தப்பித்துக்கொள்ள தம் வீட்டினுள்ளேயே முடங்கிக்
கிடக்கின்றனர்.
என்னோடு மது அருந்திக்களிக்க எவர் வருவர்?
இதோ என் கைநிறைய மலைப்பழங்களை
நீட்டுகிறேன்.
ஆனால் வைன் ஜாடியின் அருகே என்னைத் தவிர
எவருமேயில்லை.
பாயாய் விரிக்க கோரைப்புற்கள் உள்ளன.
உணவு பரிமாறும் தட்டாய் வாழை இலை உள்ளது
குடித்து முடித்ததும், மோவாயின்மீது கைவைத்து
அமர்ந்திருக்கிறேன்
சுமேரு மலையோ கவண்கல்லை விடவும் சிறியதாய்
காட்சியளிக்கிறது.

0

நான் அரும்பாடுபட்டு மூன்று வரலாறுகளையும்
அறிந்துகொண்டது வீணாய்ப்போனது
நான் மிகுகவனத்துடன் ஐந்து செவ்விலக்கியங்களையும்
வாசித்தது பயனற்றுபோனது.
எப்போதும் போல, ஒரு அற்ப குமஸ்தாவாக
வரிவிதிப்புப் பேரேடுகளில் கிறுக்கியபடி,
முதுமையெய்தும் வரையிலும் கணக்குகளைச்
சரிபார்த்துக்கொண்டிருக்கப் போகிறேன்;
“ஐ சிங்“கிடம் ஆருடம் கேட்டேன், எதிர்காலத்தில்
பிரச்சினை இருக்குமெனக் கூறியது.
என் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே தீய
நட்சத்திரப் பலன்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது.
என்னால் நதியோர மரமாக இருக்க முடிந்திருந்தாலும்
கூட,
ஒவ்வொரு வருடமும் மீ்ண்டும் பசுமைக்குத்
திரும்பியிருப்பேன்!

0

நானாகக் கண்டறிந்து, நான் வாழவென
தூரதேசமொன்றைத் தேர்வு செய்தேன் –
அதுவே தியான்-டாய் இதற்குமேல் நான் கூற
என்னவுள்ளது?
பள்ளத்தாக்கில் மூடுபனியின் கடுங்குளிர்நிறைந்த
காலங்களில் குரங்குகள் ஓலமிடும்
கல்மலைகளின் நிறமும், புற்களாலான என்
வீட்டுக்கதவின் நிறமும் ஒன்றிப்போகும்.
எனக்கென ஒரு குடிலை முடைந்துகொள்வதற்காக
தேவதாரு மரங்களிடையே இலைகளைப்
பொறுக்கியெடுத்தேன்.
குளமொன்றை வெட்டி, சுனையிலிருந்து குளத்திற்கு
சிற்றோடையொன்று வர வழிசெய்தேன்.
தற்போது உலகின் உதவியின்றி வாழ நான் கற்றுக்
கொண்டேன்.
சூரல் இலைகளைச் சேகரித்தபடியே என் வாழ்வின்
மீதி வருடங்களையும் கழித்துவிடுவேன்.

0

புத்த மதகுருமார்கள் மதக்கட்டளைகளைப்
பின்பற்றுவதில்லை
தாவோயிசம் கடைப்பிடிப்போரோ அமரத்துவ
குளிகைகளை உண்பதில்லை
பழங்காலத்திலிருந்தே பலவாயிர அறிஞர்பெருமக்கள்
வாழ்ந்து வந்துள்ளனர்
அவர்கள் அனைவரும் அதோ அந்தப் பசுமையான
மலையின் கீழே கிடக்கின்றனர்.

குளிர்மலை / ஹான்ஷான் /
தமிழில் சசிகலா பாபு / எதிர் வெளியீடு /
ஜனவரி 2020 / ரூ.130

1 thought on “குளிர்மலை-ஹான்ஷான்

  1. நூல் விமர்சனம் சரியாகப்பயணித்திருக்கிறது. கவிஞனின் வரலாற்றுப்பார்வை நல்லதோர் நடையில் சொல்லப்பட்டிருக்கிறது.கவிதைகளின் உள்ளீடு நல்ல பதிவு. எடுத்துக்காட்டியுள்ள கவிதைகள் நூலைப் படிக்கத்தூண்டுவன. ஹான்ஷான் மனத்தில் நிற்கிறார் தங்களின் விமர்சனம் மூலமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *