மகாவீரர்

சமண சமயத் தோற்றமும் தென்னகப் பரவலும்

தொல்லியல்

முனைவர் சொ.சாந்தலிங்கம்

இயல் 1

இந்திய வரலாற்றில் வேதகாலம் மிக முக்கியமான சமூகப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. மக்கள் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர். அந்தணர் என்பார் யாகங்களையும், சடங்குகளையும் அரசனின் நன்மைக்காகச் செய்து பல வெகுமதிகளைப் பெற்றனர். அரசர் (சத்திரியர்) என்பார் உடல் வலிமையால் மற்றவர்களை அடக்கியாண்டு சமூகத்தின் தலைமையைப் பெற்றனர். வைசியர் என்பார் உழவுத் தொழிலும், கால்நடை வளர்ப்பும், வணிகம் செய்வதுமான தொழில்களைக் கொண்டிருந்தனர். நான்காவது வர்ணத்தவரான சூத்திரர்கள் என்பார் உடைமை எதுவும் இல்லாத உடல் உழைப்பாளிகள். மற்ற மூன்று வர்ணத்தவர்களும் இரு பிறப்பாளர்கள் (துவிஜர்கள்). அவர்கள் வேதம் கற்கலாம், ஓதலாம், பூநூல் அணியலாம். நான்காம் வகுப்பார்க்கு அவை மறுக்கப்பட்டன. அவர்கள் மற்ற மூன்று வகுப்பார்க்கும் அடிமை வேலை செய்யப் படைக்கப்பட்டவர்கள் என்ற நிலை இருந்தது.

யாகங்களில் பல கால்நடைகள் பலியிடப்பட்டன. பெரும் விருந்துகளிலும் அவை கொல்லப்பட்டன. இதனால் வேளாண் பணிகளுக்கான கால்நடைகள் குறைந்தன. ஒரு ராஜசூய யாகத்தைச் செய்து முடிக்கும் ஓர் அந்தணப் புரோகிதனுக்கு 2,40,000 பசுக்கள் வெகுமதியாகக் (தட்சிணையாக) கொடுக்கப்பட்டன. இதன்முலம் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்தது. சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. வைசியர்களே அதிகமான வரி செலுத்துபவர்களாக இருந்தனர். வைசியர்களும் சூத்திரர்களும் தங்களது இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது என்ற தயக்கத்திலிருந்தனர். ஆனால் இரண்டாம் வருணத்தவரான சத்திரியர்கள், பிறப்பால் முதல் வர்ணமாகவும், புரோகிதத்தால் பெருஞ்செல்வராகவும் மாறிவரும் அந்தணர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த விழைந்தனர். இதன் காரணமாக எழுந்த சத்திரியர் இயக்கங்களே சமண, பௌத்த சமயங்களாக நிலைபெற்றன. கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் கங்கைச் சமவெளியில் 62 வகையான சமயப் பிரிவுகள் இருந்துள்ளன. ஆனால் அவற்றில் நின்று நிலைத்தவை சமணமும், பௌத்தமுமே.

ஒரு மாற்றுச் சமயத்தை எதிர்பார்த்திருந்த அந்தணர்களுக்கு எதிரான வைசியர்கள் பௌத்த, சமண மதங்களை வெகுவாக வரவேற்று ஆதரித்தனர். சொத்துடைமை, செல்வக்குவிப்பு போன்றவற்றைச் சமண, பௌத்த மதங்கள் நிராகரித்தன. எளிய, தூய, துறவு வாழ்க்கையை அம்மதங்கள் வலியுறுத்தின. எனவே, இச்சமயங்கள் சாதாரண, அடித்தட்டு மக்களின் ஆதரவையும், வைசியர்களின் ஆதரவையும் அமோகமாகப் பெற்று வளர்ந்தன.

மகாவீரர்: சமண சமயத்தின் நிறுவனராக வரலாற்று நோக்கில் கருதப்படுபவர் வர்த்தமான மகாவீரர். இவருக்கு முன் ஆதிநாதர் (ரிஷப தேவர்) தொடங்கி பார்சுவநாதர் வரை 23 தீர்த்தங்கரர்கள் சமண சமயத்தைப் போதித்தவர்கள். இருபத்து நான்காவது தீர்த்தங்கரராகிய மகாவீரரே சமணத்தைக் கட்டமைத்து நிறுவனப்படுத்தியவர். தொடக்க காலத் தீர்த்தங்கரர்கள் கற்பனைக்கு எட்டாத ஆண்டுகள் வாழ்வும், அதிசயத் தக்க உடல் அளவும் கொண்டவர்களாகக் கூறப்பட்டாலும் 23ஆவது தீர்த்தங்கரரையும், 24ஆவது தீர்த்தங்கரரையுமே வரலாற்றுக்கால மனிதர்களாக வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர். 22ஆவது தீர்த்தங்கரராகக் கருதப்படும் நேமிநாதர், மகாபாரதக் கண்ணனின் சகோதரர் என்றும் கூறப்படுவதுண்டு. பார்சுவநாதர் கி.மு. 817-717 வரை நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் என்றும் மகாவீரரை கி.மு. 599-527 வரை வாழ்ந்தவர் என்றும் கூறுவர். ஆனால், இதிலும் கருத்து வேறுபாடு உண்டு. மகாவீரர் கி.மு. 540இல் பிறந்தார் என்றும் கி.மு. 467இல் நிர்வாணம் அடைந்தார் என்றும் கூறுவர்.

வர்த்தமானர் வைசாலிக்கு அருகிலுள்ள ‘பசரா’ என்னும் கிராமத்தில் பிறந்தவர். வடபீகாரில் உள்ளது இக்கிராமம். இவருடைய தந்தை சித்தார்த்தர். சத்திரிய குலத் தலைவர். தாய் திரிசலை என்னும் பிரியகாருணி. வைசாலி நகரத்து வேந்தன் சேடகனுடைய மகள். அரச குலத்தில் பிறந்த மகாவீரர் 72 ஆண்டுகள் வாழ்ந்தார். முப்பதாம் வயதில் கடுந்தவம் மேற்கொண்டு நாற்பத்திரண்டாம் வயதில் ஞானம் பெற்றார். இவரோடு ஆறு ஆண்டு காலம் உடனுறைந்து வாழ்ந்தவர் மற்கலி கோசாலர் என்னும் ஆஜீவக நிறுவனர் ஆவார்.

வர்த்தமானர் வைசாலிக்கு அருகிலுள்ள ‘பசரா’ என்னும் கிராமத்தில் பிறந்தவர். வடபீகாரில் உள்ளது இக்கிராமம். இவருடைய தந்தை சித்தார்த்தர். சத்திரிய குலத் தலைவர். தாய் திரிசலை என்னும் பிரியகாருணி. வைசாலி நகரத்து வேந்தன் சேடகனுடைய மகள்.

தனது நாற்பத்து இரண்டாம் வயதில் கைவல்ய பதவியை அடைந்து நிர்வாணம் பெற்றுத் துன்பத்தையும் இன்பத்தையும் வென்றார். இந்த வெற்றியின் பயனாக அவர் ‘மகாவீரர்’ அல்லது ‘ஜினர்’ என அழைக்கப்பட்டார். அவரின் சீடர்கள், பற்றாளர்கள் ஜினர், ஜைனர் எனப்பட்டனர். அவர்களைத் துறவிகள் என்னும் பொருளில் ‘ஸ்ரமணர்’ என வடமொழியில் வழங்கினர். இவர்களே தமிழில் சமணர் அல்லது அமணர் எனப்பட்டனர்.

சமணக் கொள்கைகள்: சமணம் முக்கியமான ஐந்து கொள்கைகளை வலியுறுத்தியது. 1. அஹிம்சை (உயிர்க் கொலை மறுப்பு) 2. பொய்யாமை 3. கள்ளாமை 4. பிறனில் விழையாமை 5. மிகுபொருள் விரும்பாமை. மேலும் துறவு நெறி பெரிதும் வலியுறுத்தப்பட்டது. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்னும் மும்மணிகள் (திரிரத்னங்கள்) மனிதர்க்குத் தேவை என சமணம் போதித்தது. மகாத்மா காந்தி தனது போராட்ட ஆயுதமாக கையில் எடுத்த ‘அஹிம்சை’ சமணத்திலிருந்து அவர் பெற்றதே. பிறப்பால் அவர் வணிகர் (பனியா) குடியினராதலால், வணிகர்கள் பெரிதும் ஏற்றுப் போற்றிய சமணத்தின் அஹிம்சைக் கொள்கையை அவர் இயல்பாகவே பெற்றார் எனலாம். எளிமையான, ஆடம்பரம் அற்ற, சடங்குகள் இல்லாத, பிறப்பால் வேறுபாடு காட்டாத சமயமாகச் சமணம் உருவெடுத்ததால் அரசர் முதல் ஆண்டிவரை இச்சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.

நேமிநாதர்

சமணம் – தென்னக வருகை: சமணம் தென்னகம் நோக்கி வந்தமைக்குப் பரம்பரையாக ஒரு கதை சொல்லப்படுகிறது. மௌரியப் பேரரசன் சந்திரகுப்த மௌரியன் காலத்தில் (கி.மு.322-298) அவனுடைய குருவான பத்ரபாகு என்னும் சமணத்துறவி, பீகார் பகுதிகளில் (பாடலிபுரம்) பன்னிரண்டு ஆண்டுகள் கடும் பஞ்சம் ஏற்பட இருப்பதாகத் தனது சோதிட அறிவைக் கொண்டு கூறினாராம். எனவே அந்தப் பஞ்சத்திலிருந்து மக்களையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள பாடலிபுரத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறிப்பாகச் சமணர்கள் பத்ரபாகுவின் வழிகாட்டுதலின்படி தென்னகம் நோக்கி வந்து கர்நாடகத்தில் சிரவணபெளிகுளிம் என்னும் பகுதியில் குடியேறினர். இச்செய்திக்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. எனினும் கி.பி. 600 வாக்கில்தான் சில ஆதாரங்கள் சிரவணபெளிகுளித்தில் காணப்படுகின்றன. இந்தக் குடியேற்றத்திற்குப் பிறகு விசாகாச்சாரியார் என்னும் சமணத் துறவியின் தலைமையில் ஒரு குழுவினர் கொங்கு நாடு வழியாகத் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வந்து தங்கினர். இவர்கள் தங்கிப் பணியாற்றுவதற்கும், மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்வதற்கும் ஏற்ற மலைவாழிடங்கள் மதுரைப் பகுதியில் மிகுதியாக இருந்ததால் மதுரைப் பகுதியில் பல மலைகளில் அவர்கள் தங்கிச்சமயப் பணிகளைத் தொடங்கினர். கி.மு. 300 அளவில் இத்தகைய குடியேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு மதுரைப் பகுதியிலுள்ள பல குகைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் சான்றுகளாக நிற்கின்றன. ஆனால், கி.மு. 4ஆம் நூற்றாண்டளவிலேயே சமணம் தமிழகம் வழியாக இலங்கைக்குச் சென்றது என்ற கருத்தும் உண்டு.

ஜைன மதம் மகாவீரரால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறுவனப்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டாலும், சமணம் சார்ந்த தடயங்கள் மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரிக காலத்திலேயே காணப்படுவதாக சிலர் கருதுவர். ரிஷபதேவர், அஜிதநாதர் மற்றும் அரிஷ்ட நேமி ஆகிய தீர்த்தங்கரர்களின் பெயர்கள் யஜூர் வேதத்தில் காணப்படுகின்றன என்பார் டாக்டர் இராதாகிருஷ்ணன் (Indian Philosophy Vol. p.287). பிற்காலத்திலும் வைதீக சமயங்களான சைவ, வைணவ இயக்கங்களுடன் சமண, பௌத்த மதங்களுக்கும் கலப்பு ஏற்பட்டது. இதனைத்தான் ‘புத்தர் இருந்த இடத்தே பெருமாள் புகுந்தார் அருகர் இருந்த இடத்தே சிவபெருமாள் புகுந்தார்’ என்பார் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

மதுரையை மையமாகக் கொண்ட பாண்டிய நாட்டின் முக்கியமான மலைகளில் சங்க காலத்திலேயே (கி.மு. 300 – கி.பி. 300) சமணம் காலூன்றி வளர்ந்தது. மதுரையைச் சுற்றிலும் 14 மையங்கள் சங்க காலத்திலேயே சமணத் தலங்களாகத் திகழ்ந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்மலைகளில் எல்லாம் கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன. ‘மதுரைக் காஞ்சி’ மதுரை மாநகரின் எழில் நலங்களையும், வளங்களையும் விளங்க வைக்கும் இலக்கியம். அக்காலத்தில் மதுரை நகரில் இருந்த அனைத்துச் சமயங்களையும் வரிசைப்படுத்தும் வகையில் பல செய்திகளைத் தன்னகத்தே கொண்டது. அதில் சமணம் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. இதோ, மதுரைக்காஞ்சி வரிகள் “வண்டுபடப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துக்குப்

பூவும் புகையும் சாவகர் பழிச்ச
சென்ற காலமும் வரூஉம் அமையமும்
இன்று இவண்தோன்றிய ஒழுக்கமொடு நன்குவளர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல் புரிச் சிமிலி நாற்றி நல்கு வர
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து
செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி
இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும்
குன்று பல குழீஇப் பொலிவனதோன்ற”

(மதுரைக் காஞ்சி வரி 475 – 488)

அமண்பாழிகள் பூந்தோட்டங்களுடனும், செம்பாலானது போன்ற சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களுடனும் விளங்கின என்று படம் பிடித்துக் காட்டுகிறார் மாங்குடிமருதனார். இது தவிர வேறு சில சங்கப் பாடல்களிலும் சமணப் பள்ளிகள், சமணத் துறவிகள் பற்றிய செய்திகள் பேசப்படுகின்றன.

“நீடிய சடையோடு ஆடாமேனிக்
குன்றுறை தவசியர் போல”

என நற்றிணை 141ஆம் பாடலிலும்,

“உண்ணாமலையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறுநெறி நிரையுடன் செல்லும்
கானயனை கரவினழி குன்றம்”

(அகம். 123)

எனும் அகநானூற்றுப் பாடலிலும், கலித்தொகை – மருதக்கலி 28ஆம் பாடலில் (வரி எண். 93) கடவுளர் பற்றிய செய்திகளிலும் சங்ககாலச் சமணப் பள்ளிகள் பற்றிய செய்திகளைக் காணலாம். சங்க இலக்கியச் சான்றுகளையும் தாண்டி சமகாலக் கல்வெட்டுச் சான்றாக ஒரு குறிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கலிங்க மன்னன் காரவேலன் முதல் தீர்த்தங்கரரான ஆதி பகவனுக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டுள்ளான். இதனை ஒரிசா மாநிலத்தின் ஹத்திகும்பா கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கோயிலில் ஆதிநாதர் படிமம் பிரதிட்டை விழாவிற்காகத் தமிழகத்திலிருந்து பாண்டிய மன்னன் ஒருவன் சென்றுவந்ததாகக் குறிப்பு ஒன்றும் காணப்படுகிறது (ஜைனவியல் கட்டுரைத் திரட்டு, பக்கம் 23-24).

சங்க காலத்தில் மதுரையைச் சுற்றியுள்ள குன்றுகளில் சமணத் துறவியர் தங்கிச் சமயப்பணி ஆற்றுவதற்காகப் பல கற்படுக்கைகளைச் சங்ககாலப் பாண்டிய மன்னர்களும், வணிகர்களும் செய்து கொடுத்துள்ளனர். அவ்வகைப் படுக்கைகள் மாங்குளம், அரிட்டாப்பட்டி, திருவாதவூர், கீழவளவு, வரிச்சியூர், கருங்காலக்குடி, அழகர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கற்புளியங்குளம், விக்கிரமங்கலம், முதலைக்குளம், கீழக்குயில்குடி முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. மதுரையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் திருமலை, குன்றக்குடி ஆகிய ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை ஆகிய இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் மறுகால்தலை, அய்யனார்குளம் (மன்னார் கோயில்) ஆகிய இடங்களிலும் கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, பாண்டிய நாட்டில் மட்டுமே தமிழ்நாட்டின் பிற்பகுதிகளைக் காட்டிலும் சங்ககாலத்தில் சமணம் மக்களிடையே பேராதரவைப் பெற்று வளர்ந்துள்ளது என்பதை உணரலாம்.

சங்க காலத்துக்குப் பிறகு தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என்ற அந்நிய ஆட்சிக்காலம் சுமார் 250 ஆண்டு காலம் நீடித்தது. களப்பிர மன்னர்கள் கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த வேளாண் மரபினராவர். இவர்கள் வைதீக மதத்திற்கு எதிரானவர்கள் என்ற கருத்துப் பரவலாக நிலவினாலும் அவர்கள் எத்தகைய மதத்தைச் சார்ந்தவர்கள் என்றும் உறுதியாகக் கூறமுடியாது. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் களப்பிரர் காலத்தது எனக் கருதப்படுகிறது. சுமார் கி.பி. 500ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற களப்பிர மன்னன் பெயரைக் கொண்டுள்ளது. இக்கல்வெட்டுகளில் இவர்கள் தேவ குலங்களையும், தாபதப்பள்ளி, வசுதேவர் கோட்டம் ஆகியவற்றையும் உருவாக்கிக் காத்தனர் என்ற செய்தி அறியப்படுகிறது. மேலும் பிரமதேயங்களையும் வழங்கியுள்ளனர் என்னும் குறிப்பினால் இவர்கள் வைதீகத்திற்கும் ஆதரவாகவே இருந்தனர் என்பது புலப்படுகிறது.

களப்பிரர்கள் காலத்தில் (கி.பி. 250-550) தமிழகத்தில் கோயில்கள் கட்டும் மரபு தொடக்க நிலையில் இருந்ததே தவிர வெகுவாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் எதிரானவர்கள். சமண, பௌத்த சமயங்களை மட்டுமே ஆதரித்தனர் என்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை. மதுரைப் பகுதியில் மூர்த்தி நாயனார் காலத்தில் கருநடர் வேந்தர் (களப்பிரர்) ஆட்சி நடந்ததாகவும் அப்போது அவர் துன்புறுத்தப்பட்டார் என்றும் பெரியபுராணம் கூறும் செய்தி வெறும் புனைவே எனக் கொள்ளல் வேண்டும்.

களப்பிரர் ஆட்சிக்குப்பின் கி.பி. 550களில் முற்பாண்டியர் ஆட்சி கடுங்கோன் தலைமையில் எழுந்தது. இம்மரபின் நான்காவது அரசன் அரிகேசரி மாறவர்மன். இவனே கூன்பாண்டியன் என்ற நின்ற சீர் நெடுமாறன் (கி.பி. 650-700) என அடையாளம் காட்டப்படுபவன். இவன் சமணம் சார்ந்திருந்ததாகவும் சம்பந்தர் மதுரைக்கு வந்து மன்னனின் வெப்புநோயைக் குணப்படுத்தி சைவனாக்கினார் என்றும் தேவாரப் பதிகங்களால் அறியப்படுகிறது. ஆனால் இம்மன்னனால் சமணர்கள் எத்தகைய பலன்களைப் பெற்றார்கள் என்பதற்கு எவ்விதக் கல்வெட்டு செப்பேட்டு ஆவணங்கள் எதுவும் இல்லை. மாறாக, இம்மன்னன் ‘அக்ரஹாரம் பல செய்து அபரிமிதமாகிய இரண்ய கர்ப்ப கோஸகஸ்ர துலாபாரத்து மகாதானங்களால் கலிகடிந்து மங்கலபுரம் நகரமாக்கினான்’ என்று கூறுகிறது வைகைக்கரைக் கல்வெட்டு. இதுபோல வேள்விக்குடிச் செப்பேடு, “இரணியகர்ப்பமும் துலாபாரமும் தரணிமிசைப் பல செய்தும் அந்தணர்க்கும் அசக்தர்க்கும் வந்தனணக என்று ஈத்தளித்த மகரிகை யணிமணி நெடுமுடி அரிகேசரி அசமசமன் சிரீமாறவர்மன்” என்று குறிப்பிடுகிறது. இக்குறிப்புகள் மூலம் நெடுமாறன் வைதீக மதங்களுக்குப் பேராதரவு கொடுத்தான் என்பதே உறுதியாகிறது. சமணம் சார்ந்திருந்தான் என்பதற்கு நேரடி வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை.

களப்பிரர் ஆட்சிக்குப்பின் கி.பி. 550களில் முற்பாண்டியர் ஆட்சி கடுங்கோன் தலைமையில் எழுந்தது. இம்மரபின் நான்காவது அரசன் அரிகேசரி மாறவர்மன். இவனே கூன்பாண்டியன் என்ற நின்ற சீர் நெடுமாறன் (கி.பி. 650-700) என அடையாளம் காட்டப்படுபவன்.

திருஞானசம்பந்தர் தனது மதுரைப் பயணத்தின்போது ஆனைமலை மிகமுக்கியமான சமணத்தலமாக விளங்கியதை ஒரு பாடலால் உறுதிப்படுத்துகிறார்.

“ஆனைமாமலை ஆதியாய விடங்களில் பல
அல்லல் சேர் அமணர்க்கு எளியேன் அல்லேன்”

என்ற வரிகள் இதனை உணர்த்தும். அனல்வாதம், புனல்வாதம் என பல விவாதங்கள் சமணர் – சைவர்கட்கிடையே நடைபெற்றதாகவும் அவற்றில் தோல்வியுற்ற சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டதாகவும் பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் சம்பந்தர் தனது தேவாரப் பாக்களில் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாடலில் சமணர்களைப் பழித்தும், இழித்தும் பாடுவது கொண்டு எந்த அளவிற்குச் சமணம் மதுரைப் பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது எதிர்மறையாக விளங்குகிறது. ஆனாலும் சமணர் எண்ணாயிரவர் கழுவேற்றப்பட்டனர் என்பதற்கு எவ்வித நேரடிச் சான்றும் இல்லை. இத்தகைய புனைவுகள் சிலப்பதிகார காலத்திலேயே கற்பனையாகச் செய்யப்பட்டுள்ளதையும் காணலாம். ஓராயிரம் பொற்கொல்லர்களைக் களவேள்வி செய்து கண்ணகிக்குச் சாந்தி செய்ததாக வரும் குறிப்பை எடுத்துக்காட்டலாம்.

“கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்
பொற்றொழில் கொல்லர் ஈரைஞ்நுற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒரு பகவெல்லை உயிர்ப்பலி பூட்டி
உரைசெல வறுத்த மதுரை மூதூர்”
(சிலம்பு-27 : 127-131)

அக்காலத்தில் ஓராயிரம் பொற்கொல்லர்கள் மதுரையிலிருந்திருப்பார்களா என்பதே ஐயத்திற்குரியது. அதுபோலவே எண்பெருங்குன்றங்களில் எண்ணாயிரம் சமணர்கள் இருந்தார்கள் என்பதும் ஐயப்பாடே.

“எண்பெருங்குன்றத்து எண்ணாயிரம் இருடி
பண்பொருத்தப் பாடிய நானூறும்”

எனக் கூறும் தனிப்பாடல் நாலடியார் பாடியவர்கள் எண்பெருங்குன்றங்களிலிருந்த சமணர்கள் என்கிறது. இதனையே,

“எண்பெருங்குன்றத்து இருந்தவ முனிவர்
அறம் பொருள் இன்பம் வீடெனுமி வற்றின்
திறம்பிறர் அறியும் திறத்தை நாடி
பண்புற எழுத்தும் பாங்குறப் பகன்ற
வெண்பாவியல் எண்ணாயிரம்”

என்கிறது நாலடியார் (அதிகாரவியல் அடைவு). மதுரையைச் சூழ்ந்திருந்த எண்பெருங்குன்றங்களில் சமணர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதற்கான முதற் குறிப்பு கி.பி. 11ஆம் நூற்றாண்டின் யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாகச் சுட்டப்பட்ட பாடலிலேயே கிடைக்கிறது.

“பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
யருங்குன்றம் பேராந்தை யானை – இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு”

என்பதே அப்பாடல்.

மதுரையைச் சுற்றியுள்ள எண்பெருங்குன்றங்களில் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதற்குத் தக்கயாகப்பரணியும் சான்று தருகிறது.

“வேதப்பகைவர் தம்முடம்பு
வீங்கத்தூங்கும் வெங்கழுவிற்
சேதப்படும் எண்பெருங்குன்றத்து
எல்லாவசோகும் எரிகெனவே”
(218ஆம் தாழிசை)

என்ற இக்குறிப்பும் சமணர் கழுவேற்றப்பட்டதைக் குறிக்கிறது. சிலம்பு குறிக்கும் ஓராயிரம் பொற்கொல்லர் கொலை போல, தக்கயாகப் பரணியும், பெரியபுராணமும் குறிக்கும் எண்ணாயிரம் சமணர் கழுவேற்றமும் கற்பனையே என்பது நடுநிலையாளர்களின் கருத்து. மதுரையைக் கலை நகரமாகக் காண்பதற்குப் பதிலாகக் கொலை நகரமாகச் சித்தரிக்கும் முயற்சியே இது.

அரிகேசரி நெடுமாறன் காலத்தில் (கி.பி. 650-700) சமண – சைவ பூசல்கள் ஒன்றிரண்டு ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாகச் சமண சமயம் சிறிய பின்னடைவையும் சந்தித்திருக்கலாம். ஆனால், அடுத்த அரை நூற்றாண்டு காலத்தில் சமணம் மீண்டும் எழுச்சி பெற்றுத் தனது பழைய நிலைகளில் செல்வாக்கு பெற்றது என்பதே வரலாறு காட்டும் உண்மை. சங்ககாலத்திலிருந்ததைக் காட்டிலும் பாண்டிய மன்னர்களின் பேராதரவுடன் சமணம் மக்கள் தொண்டாற்றியுள்ளது என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் இன்றும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. முந்தைய மலைப் பள்ளிகளில் மாங்குளம், மேட்டுப்பட்டி, விக்கிரமங்கலம், முதலைக்குளம் தவிர பிற அனைத்துமலைகளிலும் சமணம் மீண்டும் செல்வாக்குப் பெற்றது. இவையும் தவிர குறண்டி திருக்காட்டுப்பள்ளி, குப்பல் நத்தம், உத்தமபாளையம், பழனி ஐவர் மலை போன்ற புதிய மலைப்பள்ளிகளும் பிற்காலத்தில் (8-10ஆம் நூற்றாண்டு) உருவாயின. மேலும், பாண்டி நாடு முழுமையும் சராசரியாக பத்து கி.மீ. தொலைவில் ஒரு சமணச் சின்னம் இருப்பது நமது முடிவுக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது. இத்தகைய எழுச்சிக்குப் பெரிதும் காரணமாக அமைந்த ஒரு சமணத் துறவி அச்சணந்தி ஆவார். கி.பி. 9ஆம் நூற்றாண்டளவில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து (கால்நடையாகவே) சமணத்தை மீண்டும் உயர் நிலையில் அமரச் செய்தார். சிதரால் (கன்னியாகுமரி) முதல் பாண்டிய நாட்டின் அனைத்து முக்கியமான சமணத்தலங்களிலும் அவர் வைத்த திருஉருவங்கள் உள்ளன. அச்சணந்தி என்பவரே ஜீவகசிந்தாமணியின் நாயகன். ஜீவகனின் ஆசிரியராக திருத்தக்கத் தேவரால் அறிமுகம் செய்யப்படுகிறார். இலக்கியத்தில் இடம்பெற்ற அச்சணந்தி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனே என ஊகிப்பதில் தவறில்லை. திருத்தக்கத் தேவரும் இதே சமகாலத்தில் வாழ்ந்து தனது மாபெரும் காப்பியத்தை இயற்றியிருக்க வேண்டும். எனவேதான் சமகாலத்தில் கண்ட ஒரு வரலாற்று மனிதனைத் தனது படைப்பிலும் இடம்பெறச் செய்தார் எனக் கொள்வதில் தவறில்லை.

அரிகேசரி நெடுமாறன் காலத்தில் (கி.பி. 650-700) சமண – சைவ பூசல்கள் ஒன்றிரண்டு ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாகச் சமண சமயம் சிறிய பின்னடைவையும் சந்தித்திருக்கலாம்.

மதுரையைச் சுற்றி சங்ககாலம் தொடங்கி கி.பி. 11ஆம் நூற்றாண்டுவரை சிறப்பாகச் செயல்பட்ட, அனைத்து சமணத்தலங்கள் பற்றிய செய்திகளை அடுத்த இயலில் விரிவாகக் காணலாம். தொடக்கக் காலத்தில் சமணம் உருவ வழிபாட்டை ஆதரிக்காவிட்டாலும் பிற்காலத்தில் அருகக் கடவுளை ஏற்று தீர்த்தங்கரர்களையும் வழிபடத் துவங்கியது. அவர்களது புராணங்களின் அடிப்படையில் தீர்த்தங்கரர்களுக்கும் இயக்கர், இயக்கியர்க்கும் சிற்பங்களை வடித்து வழிபட்டனர். மேலும் இசை, ஓவியம் போன்ற நுண் கலைகளிலும் ஆர்வம் செலுத்தினர் என்பதற்கான சான்றுகளையும் அவர்களது வரலாற்றுச் சின்னங்களில் காணலாம்.

கருத்து=பட்டறை வெளியிட்ட (2014)
மதுரையில் சமணம் புத்தகத்திலிருந்து
இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *