இயல்பு

சூழலியத்துக்கு ஒரு சோசலிசக் கொள்கை அறிக்கை

இயல்பு

Joel Kovel, Michael Lowy (செப்டம்பர், 2001)
தமிழில்: சாமி

21ஆம் நூற்றாண்டு எரிமலை மீது நிற்கிறது! இதுவரை இல்லாத அளவுக்கு நமது உயிர்ச்சூழல் உருக்குலைந்து போயுள்ளது. பேரச்சமும், பெருங்குழப்பமும் இப்புவிக்கோளத்தை பிடித்தாட்டிக்கொண்டிருக்கின்றன! உடலில் பரவும் அழுகல் நோயாய் உலகின் பெரும் பகுதியில் – மத்திய ஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு, தென்னமெரிக்காவின் வடமேற்குப் பகுதி ஆகியனவற்றில் – நடந்துவரும் குறைந்த அளவிலான, ஆனால் கொடூரமான, போர்த் தாக்குதல்கள் எல்லா தேசங்களையும் உலுக்கிக்கொண்டிருக்கின்றன. சூழலுக்கு நேர்ந்துள்ள நெருக்கடிக்கும், சமூகச் சிதைவுக்கும் இடையிலான உறவு ஆழமானது; அது தோற்றுவிக்கும் சிக்கல்கள் வெளிப்படும் விதம் வெவ்வேறாயினும் அவற்றின் ஊற்றுக்கண் ஒன்றே என்பதுதான் எங்களின் கருத்து!
முன்னது -அதாவது, உயிர்ச்சூழலுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி- சூழலியல் நிலைகுலைவைத் தடுத்து நிறுத்த இப்புவிக்குள்ள ஆற்றலையும் அதன் தாங்கு சக்தியையும் வரைமுறையற்ற தொழில்மயம் அடித்து நொறுக்கிவிட்டதன் விளைவு; பின்னது-அதாவது, சமூகச்சிதைவு – தனது சுரண்டல் கொள்கைகளை ஒப்பாத சமூகங்களைச் சுக்குநூறாக்க உலகமய வடிவம்கொண்ட ஏகாதிபத்தியத்தால் வந்தவினை! மொத்தத்தையும் முடுக்கி விடுகிற ஒரேவிசையின் வெவ்வேறு அம்சங்களே இந்த நெருக்கடிகளுக்குக் காரணமான சக்திகள்! அந்த ஒரே விசை உலக முதலாளிய அமைப்புதான்!
முரட்டுத்தனமான இந்த அமைப்புமுறைக்கு முட்டுக்கொடுக்கும் நோக்கில் பயன்படுத்தப்படுகிற சொல்லாடல்களையும், பரப்புரைகளையும் நாங்கள் முற்றாகப் புறந்தள்ளுகிறோம்-மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியனவற்றின் பெயரில் மனிதருக்கும் சூழலுக்கும் விளைவிக்கிற கேடுகளை மறைக்கவே அவை பயன்படுகின்றன என்பதால்! அதனால்தான் அதன் மெய்யான செய்கையைக் கொண்டு மூலதனத்தை மதிப்பிடுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்!
இடையறாத இலாப வேட்டையில் மூலதனம் இறங்கியே ஆகவேண்டுமாதலால் அதன்பொருட்டு இயற்கையின் மீதும் அதன் உயிரி-சூழலியல் சமநிலை மீதும் அது புரியும் வினை,

  • சூழல் மண்டலத்தை நிலைகுலையச் செய்யும் மாசுகளை அம்மண்டலத்தின் மீது ‘மழையாய்க் கொட்டுகிறது’;
  • செடி கொடிகளும், விலங்கினங்களும் இயற்கையாக செழித்து வளர ஏதுவாகக் காலங்காலமாக உருப்பெற்று வந்த இடங்களைக் குத்திக்கிழித்துக் கூறு போடுகிறது;
  • (இயற்கை) வளங்களை ஊதாரித்தனமாக வீணடிக்கிறது;
  • மூலதனத் திரட்சிக்கான தேவை கருதி, இயற்கையின் கிளர்ச்சியூட்டும் உயிராற்றலை உயிரற்ற வெறும் பரிவர்த்தனை சரக்காக்கி விடுகிறது;
  • மானுடத்தின் தேவைகளான தன்-முடிவுரிமை, சமூக உடைமை முறைமை, பொருள் பொதிந்த உயிர் வாழ்க்கை ஆகியன வற்றை மறுதலிக்கும் மூலதனம் உலக மக்களில் பெரும்பாலோரை உழைப்பாற்றலின் உறைவிடமாக மட்டுமே பார்க்கிறது; பிறவற்றைத் தொல்லைதரும், உதவாக்கரையாகக் கருதிப் புறந்தள்ளுகிறது;
  • நுகர்வு மோகத்தை உலகளாவிய பண்பாடாக்கி, அதன் வழியே சமூகங்களின் கட்டுறுதியைக் குலைக்கிறது;
  • செல்வவளம், அதிகாரம் ஆகியனவற்றில் ஏற்றத்தாழ்வை மிகைப்படுத்துகிறது;
  • ஊழல் மலிந்த தனது கைப்பாவை அரசுகளுடன் கமுக்கமாக உறவாடி அவற்றின் செல்லப்பிள்ளைகளாம் மேட்டுக்குடிகளைக் கொண்டு எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குகிறது; வெறுத்து ஒதுக்கத்தக்கவர்களுக்கு வெண்சாமரம் வீசுகிறது;
  • ‘ஓரங்கட்டப்பட்ட’ தேசங்களின் தன் னாட்சி உரிமைக்கு வேட்டு வைக்கவும், அவற்றைத் தனது கடன் வலையில் சிக்க வைக்கவும் மேலைநாடுகள், அமெரிக்க வல்லரசு ஆகியனவற்றின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ்ச் செயல்படும் அமைப்புகளை அந்நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது; முதலாளிய மையத்துக்குக் கட்டுப்பட்டனவாக அந்நாடுகளை வைத்திருக்க பிரமாண்டமான இராணுவ இயந்திரத்தைப் பராமரித்து/மாபெரும் பட்டாளத்துக்குத் தீனி போட்டு வருகிறது.

தான் தோற்றுவித்த நெருக்கடிகளுக்கு இன்றைய முதலாளிய அமைப்பு தீர்வு காண்பது ஒரு பக்கம் கிடக்கட்டும்-அவற்றை ஒரு கட்டுக்குள் கொண்டுவரக்கூட அதனால் இயலாது என நாங்கள் கருதுகிறோம்! சூழலுக்கு நேர்ந்துள்ள ஊறுக்கு அதனால் உரிய தீர்வு காண முடியாது-ஏனெனில், அது தனது பெருக்கத்துக்குத் தானே வரம்புகளை விதித்தாக வேண்டும். “வீங்கிப் பெருகு அல்லது வீழ்ந்துமடி” எனும் விதிக்கு ஆளான அதனால் தனது ‘வாயைக் கட்டி உயிர் வாழ முடியாது’!
பேரச்சமும் (terror-பயங்கரமும்), வன்முறையால் வழிநடத்தப்படும் பல்வகையான கலகமும் விளைவிக்கும் நெருக்கடியை அதனால் தீர்க்க முடியாது. ஏனெனில், அப்படிச் செய்தால் ‘பேரரசு’ என்பதன் அடையாளத்தை அது இழக்க நேரும்; அந்த இழப்பு அதன் பெருக்கத்தின் மீதும், அது தூக்கிப் பிடிக்கிற ஒட்டுமொத்த “வாழ்முறை”யின் மீதும் அதற்கு ஏலாத கட்டுப்பாடுகளை விதிக்கும். அதற்குள்ள ஒரேவழி மிருகபலத்தை நாடுவதுதான். காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் கைக்கொள்வதுதான். அது அந்நியமாதலை அதிகப்படுத்தி முன்னிலும் மூர்க்கத்தனமான பயங்கரவாதத்துக்குப் பாதை சமைக்கும்… அது எதிர்ப் பயங்கரவாதத்துக்கு உரமாகும். இந்த எதிர்ப் பயங்கரவாதம் புதிய வடிவிலான, கொடிய பாசிசமாக வலம் வரும்!
இறுதியாக, உலக முதலாளியம் வரலாற்றுப் பாங்கில் உளுத்து உள்ளீடற்றுப் போய்விட்டது. மாறிய நிலைமக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றலை அது இழந்துவிட்டது. ஊதிப்பெருத்துவிட்ட அதன் ‘உருவம்’, அதன் உள்ளார்ந்த தளர்ச்சியை நன்கு வெளிப்படுத்துகிறது. சூழலியல் மொழியில் உரைப்பதெனில், அதை இனி எவராலும் தாங்கிப் பிடிக்க அல்லது தூக்கி நிறுத்த இயலாது. உயிர் வாழ்க்கைக்குத் தகுதியான எதிர்காலம் ஒன்று இருந்தாக வேண்டுமெனில், அதை அடியோடு மாற்றியமைத்தாக வேண்டும்-இல்லை இல்லை, அதனிடத்தில் வேறொன்றை அமர்த்தியாக வேண்டும்!
ஆக, ரோசா லக்சம்பர்க் ஒரு முறை முன்வைத்த ஒளிவுமறைவற்ற தெரிவுதான் ஒரேமாற்று: சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்! பின்னதன் முகத்தில் இடைவரும் நூற்றாண்டின் ‘முத்திரை’ இப்போது பதிந்துள்ளது; சூழலியல் பேரிடர், பயங்கரமும் – அதற்குப் பதிலடியும் பாசிசமாய் உருக்கொள்ளல் ஆகியனவற்றின் குறி அதில் தென்படுகிறது.
ஆயின், ஏன் சோசலிசம்? இருபதாம் நூற்றாண்டு அதற்களித்த விளக்கங்கள் சந்தித்த தோல்விகள், அதை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்டன எனக் கருதப்படுகிறபோது அச்சொல்லுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
காரணம் இது ஒன்றுதான்: அதை அழித்தொழிக்க எவ்வளவுதான் முயன்றாலும் – இன்னும் அதை அடைய இயலவில்லையாயினும் – மூலதனத்தின் முதுகெலும்பை முறிக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற கருத்தாயுதம் அதுமட்டுமே! நாகரிகம் தப்பிப்பிழைக்க வேண்டுமெனில் மூலதனத்தின் முனைமுறிக்கப்பட்டாக வேண்டும்! அப்பெருமுயற்சியின் விளைவாகவும் வெளிப்பாடாகவும் இருக்கப் போவது “சோசலிசமே”! ஏனெனில் முதலாளியத்துக்குப் பிந்தைய சமூகத்துக்குள் நுழைவதற்குள்ள தடைகளைத் தகர்க்கும் தாரகமந்திரம் அதனிடம் மட்டுமே இருக்கிறது!
மூலதனம் தொடர்ந்திருக்க முடியாது என்றும், நாம் ஏற்கெனவே கோடிட்டுக்காட்டியுள்ளவாறு அது காட்டுமிராண்டித்தனத்தில் போய் முடியும் எனவும் சொல்கிறோமெனில், மூலதனம் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணத் தக்க “சோசலிசத்தை” நாம் கட்டமைக்க வேண்டுமெனச் சொல்கிறோம் என்றும் பொருள்! கடந்த கால சோசலிசம் அக் கடமையிலிருந்து தவறியது எனில்-மீண்டும் காட்டுமிராண்டித்தனத்துக்குக் கட்டுப்பட நாம் மறுக்கிறோம் எனில்-வெற்றிதரும் வேறொன்றை வடிவமைக்க உழைப்பது நம் கடமை!
தவிர்க்க முடியாத தனது மாற்றை லக்சம்பர்க் அவர்கள் தெளிவுற முன்மொழிந்த பின்னர்க் காலத்துக்கேற்ப அக்காட்டு மிராண்டித்தனம் தன்னை மாற்றிக் கொண்டதைப்போல சோசலிசத்தின் பெயரும், எதார்த்தமும் இக்கால நிலைக்கேற்றதாக இருக்க வேண்டும்.
இக்காரணங்களின் பொருட்டுதான் சோசலிசம் பற்றிய எமது விளக்கத்தை ‘உயிரி-சூழலிய’ சோசலிசம் என்கிறோம்! அதை அடைந்திட எம்மை முற்றாக ஒப்புக்கொடுக்கிறோம்!
‘சூழலிய சோசலிசம்’ ஏன்?
‘சூழலிய’ சோசலிசத்தை இருபதாம் நூற்றாண்டின் “முதல் காலகட்ட” சோசலிசங்களின் மறுப்பாக நாங்கள் பார்க்கவில்லை; சூழலியல் நெருக்கடியின் பின்னணியில் அவற்றைச் சென்றடைதல் என்றே அதைப்பொருள்படுத்துகிறோம்! அவற்றைப் போலவே, மூலதனம் என்பது பொருள் வடிவங்கொண்ட கடந்த கால உழைப்பே எனும் புரிதலின் அடிப்படையில்தான் ‘சூழலிய’ சோசலிசமும் அமைகிறது; அனைத்து உற்பத்தியாளர் தம் கட்டற்ற வளர்ச்சிதான்-வேறுவகையில் சொல்வதெனில், உற்பத்திக் கருவிகளிலிருந்து உற்பத்தியாளர்களை அந்நியப் படுத்தலைத் தடுப்பதுதான்-அதன் ஆகப் பெரிய குறிக்கோள்!
முதல் காலகட்ட / தலைமுறை சோசலிசத்தால் அக்குறிக்கோளை அடைய இயலவில்லை என நாங்கள் கருதுகிறோம்; அதற்கான காரணங்கள் மிகவும் சிக்கலானது என்பதால் அவற்றை இங்கே விளக்க இயலவில்லை; எனினும், முதலாளிய அரசுகளின் நடுவில் மாட்டிக்கொண்டதால் குறை வளர்ச்சி நோய்கண்ட சோசலிசம் சந்தித்த சோதனைகள் ஏராளம் என்று மட்டும் இங்கே குறித்து வைப்போம்! இடர்தரும் இந்த இக்கட்டு, இன்றைய சோசலிசங்களின் மீது தீங்கான விளைவுகளைத் திணித்திருக்கிறது; அவற்றில் முதன்மையானவை யாவன: உள்நாட்டில் மக்களாட்சி முறை (ஜனநாயகம்) மறுப்பும், முதலாளிய பாணி உற்பத்தித்திறன் வளர்ச்சிமுறையை முந்த முயற்சித்தலும். இவை அச்சமூகங்களையே தகர்க்கும் அளவுக்குப் போயின; அவற்றின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்துவிட்டன.
‘கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை’ எனும் முதல் காலகட்ட / தலைமுறை சோசலிசத்தின் குறிக்கோள் அட்சரம் பிறழாமல் அப்படியே தொடர்கிறது ‘சூழலிய’ சோசலிசம்; அத்துடன், சமூக ஜனநாயகத்தின் வீரியமற்ற, சீர்திருத்தவாத நோக்கங்களையும், உற்பத்தித்திறன் ஒன்றை மட்டுமே குறியாய் கொண்ட அதிகார வர்க்கப் பார்வையில் அமைந்த சோசலிசத்தின் அனைத்து வடிவங்களையும் அது புறந்தள்ளுகிறது. அவற்றுக்கு மாற்றாக, சோசலிச உற்பத்தி முறையின் பாதையையும், குறிக்கோளையும் ‘சூழலிய’ சட்டகத்துள் பொருந்தும் வண்ணம் மறுவரை செய்திட வேண்டுமென அது வலியுறுத்துகிறது!
சமூகத்தின் தொடர்ச்சிக்கு “வரம்புக்குட்பட்ட வளர்ச்சி” அவசியமெனும் கண்ணோட்டத்திலிருந்து அது அவ்வாறு செயல்படுகிறது; அந்த “வரம்பு”க்குப் பற்றாக்குறை, துன்ப துயரம், அடக்குமுறை ஆகியனவற்றை சமூகத்தின் மீது திணிப்பது என்று அர்த்தமில்லை; தேவைகளை மாற்றியமைப்பது, அளவைவிடத் தரத்தை நாடுவது எனும் பொருளில், சமூகக் கண்ணோட்டத்தில் ஆழமானதொரு திருப்பத்தை ஏற்படுத்துவது என்று பொருள். சரக்கு உற்பத்தியைக் கருதி இதனை விளக்குவதாயின், கைமாற்று (பரிவர்த்தனை) மதிப்புகளைவிடவும் கூடுதலாகப் பயன் மதிப்புகளை உயர்த்துவது எனப் பொருள்-இதுவொரு உடனடிப் பொருளாதார நடவடிக்கையில் கால் கொண்ட பரந்த செயல்விளைவுடைய திட்டம். சூழலியப் பாங்கிலான உற்பத்தியைப் பொதுமைப்படுத்துவது இன்றைய நெருக்கடிகளின் தீர்வுக்கு அடித்தளமாக அமையும். தாமாக முன்வந்து கூட்டு சேர்கிற உற்பத்தியாளர்களைக்கொண்ட சமூகம் தன்னை ஜனநாயகப்படுத்திக் கொள்வதுடன் நிற்காது; அனைத்துயிர்களின் விடுதலையே அதன் ஆதாரமும் குறிக்கோளும்! ஆக, அது இவ்வாறு வல்லாண்மைக்கான அகப்-புற உந்துதல்களை வெற்றி கொள்கிறது!
அத்தகு குறிக்கோளை அடைவதற்குத் தடைக்கல்லாகும் பாலினம், இனம் ஆகியனவற்றின் பேரிலான ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் அடித்து நொறுக்க அது முயல்கிறது. அடிப்படைவாதத் திரிபுகளையும், பயங்கரவாத வடிவிலான அவற்றின் வெளிப்பாடுகளையும் தோற்றுவிக்கிற சூழ்நிலைகளை அது கடந்து செல்கிறது. சுருங்கச் சொல்வதாயின், இன்றைய நிலைமையில் கொஞ்சமும் கற்பனை செய்ய இயலாத அளவில் இயற்கை யுடன் இணக்கங்கொண்டதோர் உலக சமூகத்தை அது முன்னிறுத்துகிறது.
தொழில் முதலாளியத்தின் உயிர்நாடியான படிவ எரிபொருள்களின் அவசியம் தானாகவே அடங்கிப் போவதுதான் இப்போக்குகளின் எதார்த்த விளைவாக இருக்கும். இவை தம் பங்குக்கு எண்ணெய் ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கிற நிலங்களை விடுவிக்கும்; புவி வெம்மையைக் கட்டுக்குள் நிறுத்தும்; சூழல்சார் நெருக்கடியால் நேரும் பிற கேடுகளைக் களையும்.
நடைமுறையின் பாங்கிலும், கோட்பாட்டளவிலும் அவை எத்தனை விதமான கேள்விகளை எழுப்புகின்றன என்பதைச் சிந்திக்காமல் இந்த நிர்ணயிப்புகளை ஒருவரால் நோக்க முடியாது. இரண்டாவது, இன்றைய உலகம் இருக்கிற இருப்பிலிருந்து அவை எவ்வளவு தூரம் தள்ளி நிற்கின்றன என்பதை எண்ணுகையில் அவற்றின் மீதான அவரின் அவநம்பிக்கை இன்னும்கூடவே செய்யும்! ஏனெனில் இவ்வுலகம் இன்று நிறுவனங்களில் சிக்குண்டு/நிறுவனமயமாகிக் கிடக்கிறது; அதே உருவில் அவரின் ஆழ்மனதில் அது பதிந்தும் கிடக்கிறது.
இந்த விசயங்கள் எடுத்த எடுப்பிலேயே எவர் ஒருவருக்கும் தெரியக் கூடியவை என்பதால் அவற்றை நாம் விரிவாகப் பேச வேண்டியதில்லை; ஆயினும் அவை அவற்றுக்குரிய கோணத்தில் அணுகப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் வேண்டும்!
இந்த வழிமுறையின் ஒவ்வொரு கட்டத்தையும் வரையறுப்பதோ அல்லது நமது எதிரியின் வல்லமை கண்டு அஞ்சி அடிபணிவதோ நமது வேலை இல்லை! மாறாக, இன்றைய (உலக) முறைமையை முற்றிலுமாக உருமாற்றம் செய்வதற்குப் போதுமான – தேவையான தருக்க முறையை வளர்த்தெடுப்பதும் அக்குறிக்கோளை அடைவதற்குத் தோதாக நமது இடைநிலைப் பணிகளைத் தொடங்குவதுமே நமது திட்டம்!
இந்த சாத்தியப்பாடுகளை இன்னும் ஆழமாக ஆய்ந்திடவே இதை நாம் செய்கிறோம்; அதேசமயம், எம்மைப் போன்ற எண்ணங்கொண்டோருடன் இணைந்து அப்பணியைத் தொடங்கவும் விழைகிறோம். இந்த வாதங்களில் ஏதேனும் வலு இருக்குமாயின் இவற்றை ஒட்டிய எண்ணங்களும் அவற்றை அடைவதற்குரிய தேடல்களும் இவ்வுலகின் எண்ணற்ற இன்னபிற இடங்களிலும் தோன்றவே செய்யும்!
சூழலியம் உலகளாவியது, எங்கும் பொருந்துவது- அன்றெனில் அது உயிரற்றது! நாம் இன்றுபடும் இன்னல்களைப் புரட்சிகரமான வாய்ப்புகளாக நம்மால் கருத முடியும் – நாம் கருதத்தான் வேண்டும்; அவற்றை அவ்வாறே எதிர்கொண்டு புத்துலகு படைப்போம்!

ஜூன் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *