இடாலோ கால்வினோ

செய்ய வைத்தல்

சிறுபத்திரிகை

இடாலோ கால்வினோ
தமிழில்: பிரம்மராஜன்

அங்கே எல்லாமே தடை செய்யப்பட்ட ஒரு நகரம் இருந்தது. இப்போது அங்கு தடை செய்யப்படாதிருந்த ஒரே விஷயம் தள்ளு-பூனை* விளையாட்டுதான் என்பதால், நகரத்தின் பிரஜைகள், நகரத்தின் பின்புறமிருந்த புல்படுகைகளில் குழுமி அங்கே அந்த நாளை தள்ளு-பூனை விளையாடிக் கழிக்கும் வழக்கமிருந்தது.

விஷயங்களைத் தடை செய்யும் சட்டங்கள் ஒன்றடுத்து ஒன்றாக அமல்படுத்தப்பட்டு வந்ததாலும் எப்போதுமே தகுந்த காரணத்துடன் கொண்டுவரப்பட்டதாலும் யாருக்குமே அவை குறித்து எந்தப் புகாரும் செய்ய இருக்கவில்லை என்பதோடு அவற்றுக்குப் பழக்கப்படுத்திக் கொள்வதிலும் எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

வருடங்கள் கடந்தன. இனியும் எல்லாமும் தடை செய்யப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதைக் கவனித்த கான்ஸ்டபிள்கள் தூதுவர்களை அனுப்பினார்கள். பிரஜைகள் விரும்பிய எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைத் தெரிவிக்க.

பிரஜைகள் வாடிக்கையாகக் குழுமும் இடங்களுக்கு தூதுவர்கள் சென்றனர்.

‘‘கேளுங்கள்! இதை, கேளுங்கள்! இதை’’ அவர்கள் அறிவித்தனர்:  ‘‘எதுவுமே எதற்குமே இனிமேல் தடையில்லை.’’

பிரஜைகள் தொடர்ந்து தள்ளு-பூனை விளையாடிக்கொண்டேயிருந்தார்கள்.

‘‘புரிகிறதா?’’ தூதுவர்கள் வற்புறுத்திக் கூறினர்: ‘‘நீங்கள் விரும்பியதைச் செய்ய முழு சுதந்திரம் உடையவர்களாக இருக்கிறீர்கள்’’

‘‘நல்லது’’, பிரஜைகள் பதிலளித்தனர். ‘‘நாங்கள் தள்ளு-பூனை விளையாடுகிறோம்.’’

தூதுவர்கள் துரிதமாக அவர்கள் ஒரு காலத்தில் ஈடுபட்டிருந்த பல அற்புதமான பயனுள்ள வேலைகளைப் பற்றி நினைவூட்டி, இப்போது மீண்டும் அவற்றில் ஈடுபடலாம் என்றனர். ஆனால் பிரஜைகள் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடியடுத்து அடியாக, மூச்சு விடுவதற்குக்கூட நிறுத்தாமல்.

அவர்களின் முயற்சிகள் பயனற்றுப் போனதைப் பார்த்த தூதுவர்கள் கான்ஸ்டபிள்களிடம் செய்தியை சொல்லச் சென்றனர்.

‘‘சுலபம்.’’ கான்ஸ்டபிள்கள் கூறினார்கள். ‘‘தள்ளு-பூனை விளையாட்டை நாம் தடை செய்வோம்.’’

அப்பொழுதுதான் மக்கள் பொங்கி எழுந்து அவர்கள் எல்லோரையும் கொன்று போட்டனர்.

பிறகு நேரத்தை வீணாக்காமல் மீண்டும் தள்ளு-பூனை விளையாட்டுக்குத் திரும்பினர்.

•அகராதி அர்த்தம், மிகச் சரியாக நம் ஊரின் கிட்டிப்புள் என்பதாகத் தான் இருக்கிறது. இருப்பினும் நம் ஊர் விளையாட்டை இத்தாலியர்கள் விளையாடினார்களா என்ற கலாசார குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நேரடி மொழிபெயர்ப்பே தரப்பட் டுள்ளது.

Making Do-[from Numbers in the Dark (1999) Vintage Edition.
New York] Translated by Tim Parks

நன்றி: கால்வினோ கதைகள், யுனைடட் ரைட்டர்ஸ்

சிறுபத்திரிகை, அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *