ஜீனத் கவிதைகள்

சிறுபத்திரிகை

வேதனை குறைத்த தொழுகைகள்

என்றோ மரணித்திருந்தாள்
பட்டுப்புழுக்களாலான ஆடையைப் போர்த்தி
மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவள்
பணியேற்றுப் புலம் நீங்கிப்போன
கணவனின் நினைவுகளில் நித்தமும்
ஓட்டுக்குள் அடங்கும் நத்தையாய்
பதினாண்டுத் தனிமையில் தொலைத்த இளமையை
மீட்கவொண்ணா வாசனைத் திரவியங்களின் நெடி
வைபவங்களின் மகழ்வில் உற்றோரைக் காண்பதற்கும்
திறக்கவேண்டிய வாயிற்கதவின் சாவியை
கைக்கொண்டவனின் தொலைபேசி அழைப்பொலிகள்
இடிப்புரைகளுக்கிடையிலும் மாறிடாது
முகமலர்ந்த விருந்தோம்பல்கள்
சோகங்களைக் குவித்த மையத்திலடர்ந்த
புற்றாய்ப் பரவிய நோய்மையின்
வேதனை குறைத்த தொழுகைகள்
சுவாசம் நீத்த இறுதிக் குளியலில்
பாதம் கழுவியவளின் கைகளில் படிந்து
நீங்காமல் மணம் பரப்பும்
சருமத் துணுக்குகளில் நிறைந்த
மரணத்தின் மணம்
*

காதல்

புதிதாய் ஈன்ற கன்றை
தன் நாவின் வருடலில் எழவைக்கும்
தாய்ப்பசுவின் இணக்கமொத்த
அவன் வருகை சமீபத்தில்தானிருந்தது

கல்லாய்ச் சமைந்தவளை உயிர்ப்பிக்கும்
அட்சயப் பாத்திரமாய் பெருக்கெடுக்கும்
நேசத்தின் மொழிகள்

வளர்ந்த காதலின் நேர்க்கோட்டில்
பயணிக்கும் இணைபயணியாய்த் தொடரும் /உரையாடல்கள்

பௌர்ணமி கடலின் ஆர்ப்பரிப்பாய்
காமங்களின் தீண்டாத் தொலைவுகளில் மூழ்கும்
நிலவைச் சுமக்கும் அலைகள் தூவிய
பழுதற்ற சிப்பிகள் கோர்த்து வரையும்
சித்திரங்கள்

யுகயுகமாய்
தொடரும் உறவின் நீட்சியில்
தொன்மங்கள் அறுத்த
தொப்புள்க்கொடியின் இரத்தத் துளிகள்
சிந்திய நிலத்தில் பிணைந்து வளர்ந்த
இரு விருட்சங்கள்

அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *