தங்கமான எங்கள் ஊர்

தங்கமான சிறுவர்கள்

மதிப்புரை

நிழல்

இரண்டு மல்யுத்த வீரர்கள் எதிரெதிரே நிற்கிறார்கள். ஒருவன் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறான்… 

சண்டை போடலாமா?  சமாதானமா போலாமா? 

எதிரில் இருப்பவன் பதில்…. 

சண்டையும் போடலாம். 

சமாதானமாகவும் போலாம்… 

ஆம்,  சிறுவர்களுடைய பேச்சுதான் இது. கிரமேத் சிகரத்தில் உள்ள மீன்களற்ற ஏரியில் மீன்களை கொண்டு வந்துவிடும் குழுவிற்கு தலைமையைத்  தேர்ந்தெடுக்கத்தான் இந்தப்  போட்டி. 

குழந்தைகளோடு விளையாடும்போது நமது விதிகள் எதுவும் செல்லாதுதான். 

ஆனால் அவர்கள் உருவாக்கும் விதிகள் நாம் இதுவரை உணர்ந்திராத புதிய ஒன்றை நமக்குள் மலர்த்துகிறது. 

எதையும் படிக்க விடாமல் சதா விளையாட்டிற்கு அழைத்துச் செல்லும் சிறுமி பந்தை கொஞ்சம் உயரமாக எறிந்ததற்கு நேற்று இப்படிச் சொன்னால்….

“பிறகு உன்னோடு விளையாட மாட்டேன்!”

நல்ல கதைகள் குட்டி போடும் வேலையை செய்துவிடுகின்றன. அப்படி ஒரு கதை உள்ள புத்தகம் தங்கமான எங்கள் ஊர். மலைமேல் அமர்ந்து ஷரிபுல்லா மாமா நான்கு குழந்தைகளுக்கும் அந்த மலையில் உள்ள ஏரி மீன்களின் கதையை சொல்கிறார்.  தங்க மீன்களும் வெள்ளி மீன்களும் நிறைந்த அந்த ஏரிக்கு இரவில் நட்சத்திரங்கள் விளையாட வருமாம். அந்த ஊரை சுற்றி இருக்கும் மலைகள் ஒன்றை ஒன்று விரட்டி விளையாடியபடி இருக்குமாம். 

அந்த சிறுமியோடு நான் தினமும் பேசும் கதையில் சிறுமி கனவில் மலை உச்சிக்குத் தனியாக நடந்து செல்ல விரும்புகிறாள். முயல்கூட்டம் விரட்ட மலை உச்சிக்குப் போனால் அங்கே உயரமான மரங்களில் எல்லாம் நிலாவும் நட்சத்திரங்களும் அமர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து சமவெளியில் உள்ள சின்னஞ்சிறிய வீடுகளை பார்ப்பதில் இருந்து கதை தொடர்கிறது. 

வருடம் முழுவதும் பள்ளி விடுமுறை என்றாலும் கூட குழந்தைகள் தங்களுக்கான வேலைகளை எப்போதும் வைத்திருப்பார்கள் அல்லது கண்டுபிடித்துக் கொள்வார்கள். நகரத்திற்கு வெளியே வாழ்பவர்கள் என்றால் கதை கதையாக விரித்துக் கொள்வார்கள். வளர்ந்தவர்களைப் போல் சலிப்பு நிறைந்ததாக அவர்கள் வாழ்வு இல்லை. 

தங்கமான எங்கள் ஊரில் பெரிய இலக்குகளும் அதீத கற்பனைகளும் இல்லை. நாம் சிறுவர்களாக இருந்த போது நிகழ்த்திய கதைகளை எல்லாம் நினைவின் மேல் அடுக்குக்கு எடுத்துத் தந்துவிட்டு கடந்து செல்லும் கதைதான். 

எழுதி முடித்துவிட்டு மீன்களுக்காக ஊர் சுற்றும் சிறுவர்களைப் பிரிவது குறித்து இறுதியில் வருத்தப்படுகிறார் கதை சொல்லி. ஒருவேளை வாசிக்கும் சிலருக்கும் அவர்களது சொந்த சிறிய வயது கதை குறித்து அப்படி இருக்கலாம். 

தங்கமான எங்கள் ஊர் | சிறுவர் இலக்கியம்|
2020| ஆசிரியர்: முஸ்தாய் கரீம் |
ஆதி பதிப்பகம்| ரூ.150

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *