நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல்

தத்திக் கப்பலின் நடனம்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

ஒரு கவிதை எதைப் பற்றிப் பேசத் துடிக்கிறது? அது பேசிய பிறகு நமக்குள் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?  கவிதை என்பது அந்தரங்கமான ஒன்றா? நம் அந்தரங்க வாழ்வின் கவிதைகள், பொதுவெளியில் யாவரின் அந்தரங்கம்தானா? தனித்தனி அனுபவங்களாலான கவிதைகள் ஒரு தொகுதியாக அமையும்போது நாம் தேடும் இழை கவிஞருடையதா? கவிதைகளுடையதா? எனப் பல கேள்விகள் பா.ராஜாவின் கவிதைகளில் எழச்செய்கின்றன.

அந்தரங்கத்தன்மையிலான பல கவிதைகளில் துயரம் ஒரு மீட்கமுடியாத, ஆறாத வடுவான சம்பவமாக நிகழ்கிறது. தனக்கு ஏற்பட்ட துயரமே தன் மகளுக்கு வருவதையும், தாயின் அன்பையும் பரிதவிப்பையும் ஓருசேர பகிரும் கவிதைகள் இவை.  அம்மாவின் கூழாங்கல்லில் தேள், பூரான் அடித்த தடயமும் வாசனையும், இன்னொரு பக்கம் மாத்திரைத்தூளில் தடயமும் அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் அம்மாவின் மணத்தை மருந்துநெடியாகவும், மறுபுறம் குருதிக்கவிச்சியின் நெடியாகவும் இருப்பதையும் எழுதுகிறார்.  துயரமும் தோல்வியும் ஒருசேர கறுப்புக்குதிரையாக அவரையும், பிறகு அவரது மகளையும் பள்ளத்தாக்கில் தள்ளிவிடுவதை ஒரு கவிதையில் நாம் பார்க்கமுடிகிறது.

இயலாமை ஒரு கிளையாக எங்கும் படர்வதைக் காணலாம்.  ஒரு காரினை மூச்சிரைப்போடு வெறிகொண்டு விரட்டிச்சென்று, பின், சலவாய் ஒழுகும் நாவோடு, திசையை வெறித்துவிட்டு, தலைகவிழும் , இந்த நாயால் கவிதையில், அவ்வளவுதான்முடியும் என்று முடிக்கிறார், கவிஞர்.  கத்திக்கப்பலைச் செய்யமுடியாத தன்னை ஒரு தத்திக்கப்பல் என உருவகப்படுத்திக்கொள்கிறார். 

வெகுஜனக் கவிதைக்கும் தீவிர எழுத்துக்கும் இடையில்,  பெரிய அளவில் அவருடைய கவிதைகள் தடுமாறுவதைப் பார்க்கமுடிகிறது.  கீழ்நோக்கு நாள் கவிதைகளில் விவரிக்கப்படும் அடுக்குச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் கனமானவை. அதன் விவரிப்பில் அது வெகுஜனவடிவத்தைப் பெற்றுவிடுகிறது. ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாக விரிவாகவும் ஆழமாகவும் எழுத நவீன கவிதை வழி செய்கிறது. இன்னொன்று குறியீடு.  வெகுஜன எழுத்தின் பெரிய பலவீனம்தான் குறியீடு.  உதாரணத்திற்கு   நவீன மனம் கொண்ட கறுப்புக்குதிரை கவிதையில் கறுப்பு ஒரு குறியீடாக இருக்கிறது. இந்தக் கறுப்பை அவர் வெளிப்படையாகச்சொல்லும்போது நவீன மனம் வந்துவிடுகிறது. பிரிபிரியாய் அறுபடும் கயிறு கவிதையும் தன்னை வெளிப்படுத்த திணறுவதும் மேற்கண்ட தன்மையால்தான்.  உயிர்வலி என்ற கவிதையில் வரும் அந்தச் சொல் எது என்பதை வெளிப்படையாக  எழுதும்போது நவீன கவிதையாகிறது. வெகுஜன எழுத்து எப்படி நவீன மனமாகிறது என்பதற்கான ஒரு சான்றாக, அசம்பாவிதம் கவிதை அமைந்துள்ளது. குறுக்குவெட்டில் அலறி ஓடும் ஆம்புலன்ஸ் என முடியும் கவிதையில் அசம்பாவிதம் கவிதை நவீன மனம் பெற்றுவிடுகிறது.

யதார்த்தவாத எழுத்தினை மறுத்த புனைவு சில இத்தொகுதியில் உள்ளன. யானை மார்க் ஓடுகள் அப்படியான கவிதை.  ஐஸ்கிரீம், மீதமிருப்பவர்களுக்கான ஒரு நட்சத்திரக் கவிதை. புகைப்படத்திலிருந்து, பூனை, ஏரி ஆகிய கவிதைகள் தொகுதிக்குப் பலம் சேர்ப்பவை.  ஒரு பக்கம் அந்தரங்கம், ஒரு பக்கம் அதிகார எதிர்ப்பு,  ஒருபக்கம் இயலாமை, ஒரு பக்கம் யதார்த்தத்தை மீறத் துடிக்கும் எழுத்துகளாகப்  பா.ராஜாவின் கவிதைகள் அமைந்துள்ளன. தனிமையும் காத்திருப்பும் பல கவிதைகள் உயிரோட்டமாக இருக்கிறது. செல்லமகள் பென்சிலைச் சீவும்போது மகளின் விரலில் ஏற்படும் குருதியும் வலியும் தொகுதி முழுவதும் குறியீடாகவும் மொழியாகவும் பரவியிருக்கிறது. வானில் பறந்து எண்ணமுடியாத நட்சத்திரங்களைக் கனவில் எண்ணிக்கொண்டிக்கும் சிறுமியாகத்தான் பா.ராஜா தென்படுகிறார்.  நம் எழுதத் துடிக்கும் கவிதைகளும் அச்சிறுமியாகத்தான் இருக்கக்கூடும். ஒரு கத்திக்கப்பலையும் செய்யமுடியாத ஒரு தத்திக்கப்பலின் மனம்தான் நவீன கவிதையுடையதும்கூட.

தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

மகளுக்கு ஒன்றுமில்லை

என்ன நடந்தது என்ற கேள்விக்கு
சாப்பிட்டாயா என்று பேச்சை மாற்றாதே
ஷிஃப்டிற்கு வந்திருந்தாய்
போனில் தகவல் வர
அழுகையோடு விழுந்தடித்து ஓடினாய்
பின்
பட்டறைக்கு இழவுச்செய்திதான் வந்தது
கும்பலாய் வந்தோம்
கைதொட்டும்
கட்டிப்பிடித்தும் ஆறுதல் சொன்னோம்
எப்படி எனும் கேள்விக்கோ
திசைக்கொன்றாய் பல பதில்கள்
நீ மட்டும் மவுனமாக இருந்தாய்
இப்போது கேட்கிறேன்
சொல்
என்ன செய்யலாம் அதை

யானை மார்க் ஓடுகள்

என் படுக்கையறை கூரையில் மொத்தம் 180 ஓடுகள்
கம்பெனி இலச்சினையில் யானை
நள்ளிரவில்
எனது தலையணையின் இரு வாத்துகள் முன்
180 யானைகளில் ஒன்று குதிற்றுத் தோன்ற
ஒரு வாத்து சித்தபிரமை கண்டுவிட்டது
மற்றொன்று
யானை மிதிக்கத் தோதாய் அமர்ந்திருக்கிறது.

இந்த நாயால்…

ஒரு காரினை
மூச்சிரைப்பு
வெறி கொண்டு விரட்டிச் சென்று
பின்
சலவாய் ஒழுகும் நாவோடு
திசையை வெறித்துவிட்டு
தலை கவிழ்கிறது
அவ்வளவுதான் முடியும்.

கீழ்நோக்கு நாள்

இந்தப் பிறவியில்
இந்தக் கூத்தில் அவன் கோமாளி
துயரத் தகவல் யாதெனில்
அவனது அங்க சேஷ்டைகளுக்கு எவரும்
சிரிப்பதும் கைகளைத் தட்டுவதில்லை

இந்த தினத்தில்
இந்த நிறுவனத்தில் அவன் கடைநிலை ஊழியன்
சம்பள நாளில்
சீக்கு வந்து தொலைகிறது நிறுவனருக்கு

இந்தச் சாலையில்
இன்றைய யிரவில்
நடுக்கோட்டில் ஒளிரும் சிவப்புஸ்டிக்கர் அவன்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
தலைமேல் உருளுகிறது
கனரக வாகனத்தின் சக்கரங்கள்.

இந்தக் கட்டிடத்தில்
இத்தெற்குச் சுவரில்
அவன் ஒரு வேகாச் செங்கல்
காலண்டர் மாட்ட துளைக்கிறது கூர் ஆணி.

கறுப்புக் குதிரை

அந்தக் குதிரைதான்
துளியும் வெளுக்காத அதே நிறம்
அதன்மீது பயணித்ததில்
வெள்ளை பளிங்குப் பள்ளத்தாக்கினில்
விழ
நேர்ந்தது
தலைசிதறி நான் மரிக்க
அந்தரத்தில் சுழன்றடித்து
தப்பித்து விட்டது போலும்
இதோ
இப்போது
யாரையோ ஏற்றிக் கொண்டு வருவது
தொலைவினில் தென்படுகின்றது
யாரது
ஐய்யோ மகளே.

சிக்னலில் நிற்கிறார் திருவாளர்…. ன்

பெருங்கனவு
அல்லது
பாதாளத்தின் விளிம்பு
தாமாக நிற்கையில்
பிஞ்சு உள்ளங்கை ஏந்தி ஏந்தி
நாணயங்களின் உராய்வுகள்
கழுத்தில் வயலின் வாசிக்கிறது
அதுவொரு பயங்கரத்தின் ஒலி
சிவப்பு
பிடிவாதமாய் நிறுத்துகையில்
மின்னல்வாளின்
இத்தனைக் கூர்மையைக் கண்ட
மிரட்சியின் கணத்தின் மீதேறி
நிற்கிறான்
ற்கிறான்
கிறான்
றான்
பச்சை சற்றே கருணை கொள்
மீதமிருக்கின்றன
இரண்டு மரக்கன்றுகள்
விழிகளின் குழிகளுக்கு.

தொலைதூர விருட்சம்

வெளிறிய மாலை
ஏரி நீரில் காற்று மோதும் அலைவு.

மிகச் சுகமான சிறுநீரின் போது
மற்றொருவன் கண்டுணர்ந்தான்
மயில் ரூபா அதிசய விருட்சத்தை.

பிறிதொரு தினம்
பிறிதொரு நபர்
இவன்
தன்னுடைய வளர்ப்புப்பிராணி என்று
மயிலைக் காண்பித்தான்.

பொழுதின் ரம்மியத்தில் மாசு.

மீண்டும் சிறுநீர்
மஞ்சள்நிற நோய்க்கூறு.

நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல் |
பா.ராஜா | புது எழுத்து |
டிசம்பர் 2019 |ரூ.80)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *