தனித்த கவிதையொன்றில் பிடுங்கியெறியப்பட்ட சொல்

இலக்கியம்

சப்னாஸ் ஹாஷிம்

லாவகமான கடலொன்றை
அலைகள் சப்தமிடும் ஆவர்த்தனமொன்றை
நீலத்தைக் கிடத்தி
எள்ளி நகையாடும்
நுரைச் சாரலொன்றை
இரவுகள் என்
ஜன்னலோரமாய்
பிரசங்கிப்பதை இக்காலங்களில்
எனது பாடல்கள் அழுந்தப் பீடித்திருக்கும்…

இசைந்தாடும் ஓலைக்கிடுகுக் குடிலை
‘புதினா’ மிதக்கும் சாயக்குவளையைச்
சுட்டக் கருவாட்டு மீதியைத் தின்று
நரைந்துப் படுத்திருக்கும் பூனையை
நேற்றுத் திறந்துவிட்ட வாய்க்கால் நீரில்
காது தெரியக் குளிக்கும்
எருமைப் பட்டியை
வரப்பெங்கும் ஓங்கிப்பசித்த
புல் கற்றைச் சுற்றி ரீங்காரமிடும்
மஞ்சள் தும்பிகளை
நான் முறித்த காலைச் சோம்பலில்
ஊதி வெறித்த தேனீர் டம்ளரில்
மிச்சமாய் பொசுக்கி வைத்திருக்கிறேன்…

சுபிசுத்த என் தெருக்கள்
கஞ்சிக் கோப்பையின்
கரைவரை சுற்றி ஓடி வருகின்றன…
சிகரெட் பிடித்திராத என் விரல்கள்
சுதந்திர சலனமொன்றை
சற்று வரை புகைந்து
ஊதி முடித்துவிட்டன…

மனிதர்கள் இல்லாத
மயானச் சொல்
என் அறைச் சுவரெங்கிலும்
அவ்வப்போது ஆடி பயமுறுத்தும்
சன்னல் சீலை முழுதும்
கறையாய் தோய்ந்து விட்டதாய்
திடீரென எழுந்து நடந்து
நெற்றி வலித்த
சமத்து முட்டலில் தெரிந்து விடுகிறது…

ஒவ்வொரு மூன்றாவது அய்ந்து நிமிடங்களாய் தனிமை இறப்பின்
ஞெகிழி வீச்சின் எல்லைக்கு வந்ததாய்
ஒரு கவிதை நமைச்சலைக்
கொடுத்து முடிகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *