அடவி கவிதை

தன்னிருப்பிடத்திலிருந்து வெளியேறும் சிறகுகளைப் பின்தொடர்தல்

இலக்கியம்

ஜீவன் பென்னி

1.
தனக்கான சிறிய பிரார்த்தனைகளைக் கைவிட்டுவிட்டு
நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது வழுவழுப்பற்ற கூழாங்கல்.
இத்தனை நிறைவானதா உன் வாழ்க்கை!?

2.
ஒரு கதவைத் திறக்கிறோம்
எண்ணற்ற சாலைகளின் பாடல்களுக்குள் நுழைகிறோம்.
ஒரு கதவை இறுக மூடுகிறோம்
எண்ணற்ற வலிகளின் காரணங்களைத் தொடர்பறுக்கிறோம்.
காலம் எப்போதும் ஒரு சிறு தேவையைப் பரிசளிக்கிறது.

3.
நம் இசைக்கோர்வைகள் மிக எளிதாகக் கடவுளைப் படிக்கின்றன.
தொலைத்திருந்த ஒற்றை மனதின் ரிதத்தை அதில் தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.
அது அழைத்துச் செல்லும் பச்சைப்புற்களின் தேசத்தில்
இருப்பவைகளிலே மனிதன் தான் அதிகம் தேவையுள்ளவனாகயிருக்கிறான்.
அதிகம் நோய்மைகொண்டவனாகவுமிருக்கிறான்.
காலம் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஒரு மருந்தை வைத்திருக்கிறது.

4.
மிக சாதாரண ஒன்றின் முடிவில் நாம் அவ்வளவு தனிமைப்பட்டிருக்கிறோம்
இந்த வாழ்வு எவற்றையும் முன்பு போல் இல்லாமலாக்கிவிட்டது
எவற்றின் அருகாமையும் அவ்வளவு அர்த்தங்கள்கொண்டிருப்பதாகயில்லை.
நாளைக்கென ஏதேனும் கைகளிலிருக்குமென்றால் அதுஅன்பிருந்தத் தடம் தான்
காலம் தன்னிலிருந்து விடைபெற்ற உயிரியை ஞாபகங்களாக்கிக் கொள்கின்றது.

5.
பழக்கப்பட்ட இந்த வெறுப்பு ஒரு காய்ந்த செடியைப் போலிருக்கிறது
தனது நீண்ட பருவத்தின் கடைசி நொடியில்
முழுவதுமாக வெட்டப்படுவதற்கு முன்பே உதிர்ந்து கிடக்கிறது.
இத்தனை நிறைவானதா உன் மரணம்!?
காலம் தன் ஒரு பகுதியை சில சமயம் புதிராக்கிக் காண்பிக்கிறது.

6.
சிறு செடியினிலையில் இன்றைய சூரியன் விழுகிறது
தொலைவிலிருந்து துவங்கப்பட்டிருக்கும் இக்கதையில்
நாம் அவ்வளவு இயல்பாக பொருந்தியிருக்கிறோம்.
அச்செடி நம் முன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் போது தான்
நாம் கடவுளிடம் ஆழ்ந்து பிரார்த்திக்கத் துவங்குகிறோம்.
காலம் தன் முன் நிற்பவைகளின் அற்புதத்தை மறைப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *