தலையங்கம்

சிறுபத்திரிகை

தமிழில் சிற்றிதழுக்கான தேவை எப்பொழுதும் இருந்தே வந்திருக்கிறது.  அதன் தொடர்ச்சியாக இந்த ‘சிறுபத்திரிகை’யின் பங்களிப்பும்.

ஒருவர், தான் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்கான, சுதந்திரமான தளம் என்ற அளவில் முகநூலிலும் வலைதளங்களிலும், இலக்கியம் என்பதாக பகிர்ந்துகொள்ளப்படும் எழுத்துகள் பெரும்பாலானவை அதுகுறித்த புரிதலற்ற பாவனைகளாகவே இருப்பது கண்கூடு. தற்போது புத்தகங்களின் உற்பத்தி பெருக்கமடைந்துவரும் அதேவேளையில், வாசிப்பு பழக்கம் குறைந்துவருவதே அதற்கான காரணமாக இருக்கமுடியும்.

ஆகவே, படைப்பிலக்கியம் குறித்த நம்முடைய கலை-இலக்கிய மதிப்பீடுகளைக் கூர்மைப்படுத்த வேண்டிய தருணமிது. மேலும் நடுத்தர இதழ்களின்மீது விமர்சனம் வைக்கும் இன்றைய சில சிற்றிதழ்கள் தங்கள் இதழ்களில் பார்முலாவை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருப்பது சூழலின் அவலமின்றி வேறில்லை. இங்கு ஏறத்தாழ சில தசாப்தங்களாக, உரையாடலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், விமர்சனத் துறையும் இன்றி, படைப்புச் செயல்பாடும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. 

இது ஒருபுறமிருக்க, தற்போதைய அரசு இயந்திரம் நம்முடைய பணப் பரிவர்த்தனைகளில் நம் விருப்பத்தைக் கேளாமலேயே நம் கணக்கிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை தனது திட்டங்களுக்காக பறித்துக்கொள்கிறது. உணவகங்களின் மெனு கார்டில் மாட்டிறைச்சி வகைகள் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் தனது அதிகாரத்தின் மூலம் நேரடியாக அரங்கேற்றியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, பொதுப்புத்தியில் அம்பேத்கர், காந்தி, புத்தன், மகாவீரர் என  அனைவரையும் இந்துத்வாவிலிருந்து முளைத்தவர்களென அனைவரையும் தன் மையத்திற்கு மாற்றும் முயற்சி நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கிறது. இவ்வகையான பாசிசத்துக்கு எதிராக படைப்பாளி, தன் சிந்தனைகளையும் படைப்புகளையும் கூர்மைப்படுத்தும்போது, அவர் நீதி மற்றும் அரசு இயந்திரங்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகிறார்.

அனைத்து நிலைகளிலும் கண்காணிப்பின் அரசியல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், எந்தப் பிரக்ஞையுமின்றி முருகனுக்குக் காவடியெடுப்பது போல் அய்யப்பனுக்கு மாலை போடுவதுபோல் படைப்பாளிகள் சந்தை களைக் குறிவைத்து புத்தகங்களை ரிலீஸ் செய்வதும் நடந்து வருகிறது. இவ்வகை கோமாளித்தனங்களைக் களைவதோடு, புதிய அரசியல் நோக்கிய எழுத்துகளைக் கண்டடைவதே நம் முன்னுள்ள மிகப்பெரிய சவால் என்பதோடு அதுவே படைப்பாளியின் பொறுப்பாகவும் மாறுகிறது.

***

லத்தின் அமெரிக்க எழுத்தாளர் யுவான் கேப்ரியல் வாஸ்க்யூஸின் நேர்காணலும் கட்டுரையும் இந்த இதழில் முதன்முறையாக பிரசுரமாகின்றன.

அரசியல் பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கும் இடாலோ கால்வினோவின் சிறந்த படைப்பான செய்ய வைத்தல் கதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது. இந்தக் கதையை மொழிபெயர்த்திருக்கும் பிரம்மராஜன் அவர்களுக்கு நன்றி.

இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் ஆலன் கின்ஸ்பெர்க்கின் கவிதைகளின் வழியாக விஸ்வநாதன் கணேசன் தமிழ்ச் சிறுபத்திரிகை சூழலில் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கியிருக்கிறார்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *