துயில்

சிறுபத்திரிகை

ஜீ.முருகன்

இதுபோன்ற அகாலப் பயணத்தை பல முறை அவன் யோசித்திருக்கிறான்.  அவன் மனம் அதிக வலியை உணரும் தருணங்களிலெல்லாம் இந்த சிந்தனை அவனுக்கு வந்திருக்கிறது, ஆறுதல் அளித்திருக்கிறது. அப்போதெல்லாம் அதை நோக்கி அவனை முழுவிசையோடு தள்ளக்கூடிய எதுவும் அவன் பின்னால் இல்லையா அல்லது அந்த கனத்தின், சஞ்சலம் மிக்க மனதின் யோசனை என அவன் எண்ணினானா தெரியவில்லை, அப்பயணம் கைகூடவில்லை. ஆனால் இப்போது எல்லாம் வழிவிட்டு, வரவேற்று நிற்கிறதாக இருக்கலாம். இவ்வளவு நிச்சயத்துடன் அவனை வழி அனுப்பி வைத்த அது – அல்லது அவை – ஒரு வாகனத்தை அனுப்பித் தராதா என்ன?

“உனக்கு சிந்தனை மழுங்கிவிட்டதா?” ஒரு குரல் கேட்கிறது. ஆனால் முன்புபோல அவ்வளவு வலுவாக இல்லை. அதற்குத் தெரியும் இந்த கேள்வியின் சம்பிரதாயம். இதற்கெல்லாம் சபலப்படும் நிலையில் அவன் புத்தி இல்லை. அது தெளிவுடன் இருக்கிறது. கசடுகள் நீங்கி, கலங்கல்கள் வடிந்து, தெளிந்து, பாறைகளின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. எங்கே போக வேண்டும் என்ற நிச்சயம் அதற்கு இருக்கிறது. உயிர் உருவாகும்போதே அதன் திசை, அதன் ஸ்திதி எழுதப்பட்டுவிட்டது. அதற்குத் தெரியும் காட்டை நோக்கிப் போவதா, கடலை நோக்கிப் போவதாவென.

இதோ ஒரு ஆட்டோ சப்தம். ஆனால் எதிர் திசையில். அவநம்பிக்கையுடன் அதற்கு கை காட்டுகிறான். அது நிற்கிறது. எங்கே போக வேண்டும் என அவன் சொல்கிறான். இரவென்பதாலும், தொலைவென்பதாலும் யோசனை. அதை ஈடுசெய்யும்படியான ஒரு தொகை. அது அதிகம்தான். ஆனால் அவனிடம் இருக்கிறது. அவன் ஒப்புக்கொள்கிறான். ஆட்டோ திரும்பி வந்து நின்று அவனை உள்வாங்கிக்கொள்கிறது. அவன் மனம் கணிக்கவில்லையா? எல்லாம் முன்பான ஒரு ஏற்பாடு, வேறு என்ன? இதோ பயணம் தொடங்கிவிட்டது, மரங்கள் அடர்ந்த சாலையில்…

இது இருள் நோக்கியா, வெளிச்சத்தை நோக்கியா அல்லது இரண்டும் அல்லாது எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம்விடும் அந்த கருந்துளை நோக்கியா? நூறு சதவீத நிச்சயம் ஒன்றும் இல்லை.

தார்ச்சாலையை விட்டு விலகிய வாகனம், மண் சாலைக்குத் தாவுகிறது. பிறகு ஊர். அதன் தெருக்களில் நுழைந்து அதன் உறக்கத்தை சபித்தபடி கடந்து செல்கிறது. எப்போதும் தன் ஊராக உணராத அவன் ஊர்தான் அது. ஏன் அது? அவன் அய்யாவாலா? இருக்கலாம். ஆனால் இந்தத் தெருக்களில் நமக்கு ஒரு வீடு வேண்டும் என அவன் மனம் விரும்பாதது போல அவன் அய்யாவும் விரும்பவில்லை போல.

ஊரைக் கடந்தும் அவன் வழி காட்டினான். அது ஆட்டோக்காரனைத் திகைக்கச் செய்திருக்க வேண்டும்.

அவன் கேட்டான், “சார் இது எங்கப் போவுது?”

“காட்டுக்கு. இது வழியாத்தான் எங்க நிலத்துக்குப் போகணும்.”

அது சுடுகாட்டுக்குப் போகிறது எனச் சொல்லியிருந்தால் அவன் அதிகமே மிரட்சி கண்டிருப்பான். இந்த இருளில் இப்பாதையும் பயணமும் யாரையும் அப்படி ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவன் புதியவன் வேறு. புதியவன் என்பதாலேயே சில சாதகங்கள் இருந்தன. ஒருவேளை இவனைப்போல அந்தப் பாதையில் அவன் சிறுவயதிலிருந்து பார்த்த பல பிணங்களின் முகங்கள் ஞாபகத்துக்கு வந்தால் என்ன செய்வான்? இந்த வழியில் நடுச்சாமத்தில் கொள்ளிவாய்ப் பிசாசுகள் நெருப்பை கக்கிச் செல்லும் கதைகளைக் கேட்டிருந்தால் அவன் மனம் என்ன சிந்தித்திருக்கும்?

அப்பாதையிலிருந்து விலகி திரும்பும் போதே தொலைவில் தோப்பும் அவன் வீடும் தெரிந்தது. அந்த மாய இருளில் அது தனித்துவிடப்பட்ட ஜீவன் போல மங்கித் தெரிந்தது. தென்னை மரங்களுக்கு மத்தியில் சென்ற வாகனத்தின் ஒளி பட்டு அது திகைப்பதுபோல இருந்தது. இருளில் வாழப் பழகிவிட்ட அதற்கு இந்த ஒளி, ஆசூயையை ஏற்படுத்தியதில் என்ன ஆச்சர்யம் இருக்கப்போகிறது?

வீட்டுக்கு எதிரே இருந்த களத்தில் இவன் இறங்கும் போது ஆட்டோக்காரன் கேட்டான், “யாரும் இல்லப் போல இருக்கே சார். இந்த நேரத்துக்கு எதுக்கு சார்?”

இதற்கு அவன் என்ன பதில் சொல்லுவான்? தன் பர்சிலிருந்த சில நோட்டுகளை எடுத்துக் கொடுத்தான்.

அவன் விளக்கொளியில் சென்று சரி பார்த்துவிட்டு திகைப்புடன் சொன்னான், “என்கிட்ட சில்லரை இல்லையே சார்.”

“என்கிட்டயும் அவ்வளவுதான் இருக்கு. வச்சிக்கங்க.”

இவன் இந்த நேரத்தில் இங்கு வந்து சேர்ந்தது குறித்து அவனுக்கு ஒரு குழப்பமான எண்ணங்கள் தோன்றியதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?

அவன் சொன்னான், “சார் தப்பா நினைச்சிக்காதிங்க. நீங்க கொஞ்சம் போதையில இருக்கீங்கன்னு நினைக் கிறேன். இந்த நேரத்துக்கு நீங்க வந்திருக்கக் கூடாது. வண்டியில ஏறினிங்கன்னா உங்களத் திரும்பவும் அங்கியே கொண்டு போய் விட்டுற்றேன். காசு எதுவும் கொடுக்க வேணாம்.”

கருணையோ, மனிதாபிமானமோ, ஆபத்தின் மீதான அச்சமோ அவன் இதைச் சொல்கிறான். ஆனால் இவனோ இந்த யோசனையை ஏற்கும்  மனநிலையில் இல்லை. மேலும் இந்த இருள், இந்த வீடு, அதைச் சூழ்ந்திருக்கும் அச்சம் எல்லாம் அவனுக்குப் புதிதா என்ன?

“பிரச்சினை எதுவும் இல்ல. இது என் வீடுதான். உள்ள ஆளுங்க இருப்பாங்க. நீங்க போங்க.”

தயக்கத்துடன் அவன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

அந்த ஒளியும் சப்தமும் விலகி மறைவது வரை அவன் அங்கேயே நின்றிருந்தான். இப்போது அந்த வீட்டின் தனிமையில் அவனும் கலந்து போய் விட்டான். களத்தில் சில இடங்களில் புல்லும் சில இடங்களில் செடிகளும் முளைத்து வளர்ந்திருந்தன. இன்னும் சில நாட்களில் அவை படர்ந்து வளர்ந்து களம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும் எனத் தோன்றியது.

கேட்டை தள்ளித் திறந்து கொண்டு போய் திண்ணையில் உட்கார்ந்தான். தோளில் மாட்டியிருந்த பையை கீழே கழற்றி வைத்தான். கிழக்கு மலைக்கு மேலே நிலவின் ஒளி வானத்தில் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் உதயம் நடக்கவில்லை. சுற்றிலும் தென்னை மரங்களும், வாழைத் தோட்டமும் அரண் போல நின்று தொலைவுக் காட்சிகளை காண ஒட்டாமல் மறைத்திருந்தன. பக்கத்து நிலத்து நெல் வயலிலிருந்து தவளைகளின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. ஆமாம் நெல் வயல்கள் இரவில் உறுங்குவதில்லை என்பது அவனுக்குத் தெரியாதா என்ன? சில சமயங்களில் இரவின் மந்தகாசம் பற்றி எரிவதுபோலக் கூட தோன்றும்.

அவன் எழுந்து, வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த மாட்டுக் கொட்டகை நோக்கிச் சென்றான். அதன் ஒரு பகுதி இடிந்து அதற்கு மேலே இருந்த கூரை சரிந்திருந்தது. கொட்டகையில் மாடுகளோ, ஏன் சாணத்தின் வாசமோ கோமியத்தின் வாசமோ கூட இல்லை. அதற்குப் பதிலாக ஒரு நெடி மட்டும பரவிக் கிடந்தது.

உள்ளே போய் அங்கிருந்த ஒரு அறை யின் சுவரில் துழாவி சாவி ஒன்றைத் தேடி எடுத்தான்.  மாட்டுக் கொட்டகையிலிருந்து திரும்பி வந்த அவன், வீட்டின் நிலைக் கதவைத் திறந்தான். பாழின் அடர்த்தி கூடி அதன் மணம் நாசியில் படிந்தது. காலணிகளை வெளியே விட்டு வந்ததால் வெறும் காலில் புழுதியின் ஸ்பரிசத்தை உணர முடிந்தது. தன் கால்சராய் ஜோபியிலிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியைக் கொளுத்தினான். அதன் துணை கொண்டு வரவேற்பறை முழுவதையும் ஒருமுறை நோட்டம் விட்டான். பழக்கத் தோஷத்திலோ என்னவோ மின் விளக்கின் சுவிட்சை அவன் கைகள் அழுத்தின. ஆனால் விளக்குகள் எரியவில்லை. ஆமாம் முன்பொருமுறை-எப்போது என நினைவில்லை-வந்தபோது கூட எரியவில்லை. வயர்கள் சேதமாகி இருப்ப தாக அவன் மாமா சொன்னார்.

உள் கதவுகளின் சாவிகள் வழக்கமான இடத்தில் இல்லை. அதை அவன் மாமா எங்கோ மாற்றி வைத்திருக்க வேண்டும். அதை இரண்டு மூன்று தீக்குச்சிகளின் துணையோடு தேடி எடுத்தான். அது அவ னுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சாவிகள் இப்படி ஒளிந்து வாழ்வது அதன் சாபம் என அவனுக்குத் தோன்றியது. மனிதர்கள் மீது மனிதர்களுக்கு நம்பிக்கையற்றுப் போனதன் அவமானச் சின்னம்.

அந்தக் கதவையும் அதற்கு அடுத்து இருந்த கதவையும் திறந்து பெரிய அள விலான புழங்கும் அறைக்கு வந்தான். இடையே சில இடங்களில் நூலாம் படை அவன் முகத்திலும் கைகளிலும் ஒட்டிக்கொண்டு வந்தது. இடது பக்கச் சுவர் ஓரமாகவே நடந்து கதவற்ற பூஜை அறைக்குள் நுழைந்தான். அங்கே ஒரு தீக்குச்சியை கொளுத்தி சுவாமி உருவங்களுக்குக் கீழே பார்த்தான். தரையில் காமாட்சியம்மன் விளக்கு தெரிந்தது. அதில் கொஞ்சம் எண்ணையும் திரியும் இருந்தன. அதை ஏற்றி கையில் எடுத்துக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தான். விளக்கொளியில் அந்த பெரிய அறை துலக்கம் பெற்றது. அதன் மத்தியில் தொங்கிய ஊஞ்சலில் அவன் அய்யா படுத்திருந்தார். அங்கே இருந்த மர பீரோக்கள், நாற்காலிகள்போல அவரும் அடர்ந்த நிழல் போலத் தெரிந்தார். இடது கை நீண்டிருக்க இன்னொரு கையை மடக்கி எதிர்புறம் திரும்பிப் படுத்திருந்தார்.

அவன் ஊஞ்சலைவிட்டு விலகி நடந்து தன் கையிலிருந்த விளக்கை அங்கிருந்த நாற்காலிமேல் வைத்தான்.  இப்போது விளக்கொளி அவரின் முகத்தில் படிந்த ஸ்பரிசத்தில் அவர் விழித்துக் கொண்டது தெரிந்தது. கண்களைத் திறந்து அவனை உற்றுப்பார்த்தார். பின்னர் மெல்ல எழுந்து உட்கார்ந்துகொண்டார்.

“கொழந்தே”

அவன் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு இன்னொரு நிழல்போல நின்றான்.

“என்ன இப்போ?”

“சும்மாதான். வரணும்னு தோணுச்சி.”

அதற்கு மேல் அவர் எதுவும் பேச வில்லை. தலையணை மேல் விரித்திருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு ஊஞ்சல் கிரீச்சிட மெல்ல எழுந்தார். அவருடைய உருவம் சுவரில் படிந்து கூரை வரை வியாபித்து அசைந்தது. அவர் வெளியே போனார்.

அவன் ஊஞ்சலில் உட்கார்ந்தான். கால்கள் தரையில் மடியும் அளவுக்கு அது தாழ்ந்திருந்தது. கால்களை உதைத்து மெல்ல அதை அசைத்து ஆடிப் பார்த்தான். வெகு நாட்கள் எண்ணெய் காணாததால் அது அந்த இரவை அரைப்பது போன்ற சப்தத்துடன் முன் பின்னாக நகர்ந்தது. பிறகு மீண்டும் கால்களை ஊன்றி அதை நிறுத்தினான்.

“இந்த நேரத்துக்கு எதுக்கு வந்த?”

பக்கத்து அறையிலிருந்துதான் அக்குரல் கேட்டது. அதை எதிர் பார்த் திருந்தவன்போல அவன் அமர்ந் திருந்தான். மீண்டும் கால்களை உதைத்து ஊஞ்சலை அசைத்தான். 

“நீ எதுக்கு வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும்.”

அவன் எதுவும் பேசவில்லை.

“விடியக் கால பஸ்ஸ பிடிச்சி ஒழுங்கா வீடு போய் சேர்ற வழியப் பாரு.”

அவன் ஊஞ்சலை நிறுத்தினான். நிசப்தம் திரும்பியது.

அவன் சற்று எரிச்சலுடன் சொன் னான், “நான் அங்க போகல.”

“அப்புறம் இங்கே என்ன பண்ண லாம்ன்னு இருக்கே?”

அவன் பதில் சொல்லவில்லை.

“நீ இன்னும் திருந்தல.”

“திருந்தறதுக்கு என்ன இருக்கு. அவளும் இதத்தான் சொல்றா.”

“என்ன சொல்றா?”

“உன்ன மாதிரியேதான். நீ ஒரு அயோக்கியன். சுயநலக்காரன்னு.”

“குடும்பம், பொண்டாட்டி புள்ளிங்க நெனப்பு இல்லாம, உங்கப்பன மாதிரியே நீயும் குடிச்சி கூத்தடிச்சிக்கிட்டுத் திரிஞ்சா யாரு கொஞ்சுவா?”

அவன் அமைதியாக உட்கார்ந்தி ருந்தான்.

“பைத்தியக்காரத்தனமா யோசிக்கிறத விட்டுட்டு வீட்டுக்குப் போ.”

அவன் ஆத்திரத்துடன் சொன்னான், “எங்க போறது? எங்க போய்ப் படுக்கிறது? எவ்வளவு தட்டினாலும், கெஞ்சினாலும் கதவுதான் திறக்கலையே.”

“உனக்குத்தான் கதவத் தெறந்து வச்சிக்கிட்டு பல பேர் காத்திருப்பாங்களே, அங்க போறதானே.”

“அந்தக் கதவெல்லாம் அடச்சி ரொம்ப நாளாச்சி.”

“அதனாலதான் வீட்டுக்கு வர்றயா?”

இதற்கு அவன் பதில் எதுவும் சொல்ல வில்லை. அந்த குரலுக்கும் இதற்குமேல் கேள்விகளே இல்லைபோல.

அவன் கால்களை நீட்டி ஊஞ்சலில் படுத்துக்கொண்டான். இக்கேள்விகளுக்கு பதில் சொல்வது அலுப்பாக இருந்தது. இதை எப்படிக் கடப்பது என அவனுக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும்தான்.  வழி எங்கே பிசகியது? அது எங்கே, எத்திசையில் அவனைச் செலுத்தியது? எப்போது விபரீதப் பள்ளங்களுக்கும், மலைப்பான பாறைகளுக்கும் இட்டுச் சென்றது? அவ்வழியிலிருந்து விலகி எவ்வழியைத் தேடி, எத்திசையில்… எதிர்ப் படுவதெல்லாம் புதர்களாக இருக்க…?

“எல்லாத்தையும் பாழாக்கிட்டு இப்படி வந்து நிக்கிறயே நான் என்ன பண்ணு வேன்?” உள்ளே ஈனஸ்வரத்தில் அக்குரல் அழுவது கேட்டது. “எத்தன முற புத்தி சொல்லியிருப்பேன். அதெல்லாம் நமக்கு ஆகாதுன்னு…

“நான் சொல்றது எங்க உனக்குக் கேட்டது? பட்டாத்தான் தெரியும் பள்ளிக் குன்னு சொல்லுவாங்க. இப்ப பட்டுட்டு வந்து நிக்கற…”

விளக்கின் சுடர் காற்றில் பரபரப்புற்று அசைந்து, ஊஞ்சல் சங்கிலிகளின் நிழலைப் பிடித்து ஆட்டியது. அதை வெறித்தபடி அவன் படுத்திருந்தான். ஊஞ்சலும் கூட மெல்ல அசைந்துகொண்டுதான் இருந்தது.

எழுந்து அவன் வெளியே செல்ல நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று விடை கொடுக்காமல் காத்திருக்கச் செய்தது.

உள்ளே கேட்ட விசும்பல் ஒலி நின்றிருந்தது.

அக்குரல் சொன்னது, “வாழற வரைக்கும் கௌரவமா வாழ்ந்துட்டு சாகனும். அதுக்காகத்தான் எல்லாப் பாடும். எப்படி வேணா வாழலாம்ன்னு நினைச்சிருந்தா உங்கள எல்லாம் நான் கரை சேத்திருக்க முடியுமா? உங்க அப்பன் எப்படி வாழ்ந்தான், என்ன வச்சிட்டுப் போனான்னு உனக்குத் தெரியுமா?”

இது ஒரு பாடல் போலத்தான் அவனுக்கு ஒலித்தது. வழக்கமாக அவள் பாடும் பாடல்தான் இது. வாழ்க்கையின் பாடல், அனுபவப் பாடல், ஆதங்கத்தின் பாடல். இதுவாக மட்டுமே, இந்த சப்தத் தால் மட்டுமே அவள் வாழ்கிறாள். இந்தப் பாடலை கேட்கவே காத்திருந்தது போல அவன் எழுந்து உட்கார்ந்தான்.

எண்ணெய் தீர்ந்து திரி மட்டும் உக்கிரமாக எரியத் தொடங்கியிருந்தது.

 அவன் எழுந்து நின்றான்.

“முட்டாள்தனமா எதையும் யோசிக் காம காலையில கிளம்பி வீட்டுக்குப் போயிச் சேரு.”

விளக்கு மெல்ல அடங்கி வருவது தெரிந்தது. அவன் வாசலை நோக்கி நடந்தான். வெளியே திண்ணைக்கு வந்து சேர்ந்தான். அவன் அய்யா கிழக்குத் திட்டில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மேல் அரை நிலவு காய்ந்து கொண்டிருக்க, அவருடைய கருத்த தேகம் ஒரு நிழல் போல நிலைத்திருந்தது. அது இந்த பிரபஞ்சத்தின் ஸ்திதி கண்டு திகைத்துவிட்டதோ என்னவோ.  நிலவின் ஒளியில் தென்னை மரங்களும், வாழைத்தோட்டமும் துலக்கம் பெற்றிருந்தன. திண்ணையிலும் வெளிச்சம் படர்ந்திருந்தது.

அவன் தன் அய்யாவுக்கு பக்கமாக கீழே போய் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான்.

இரு மௌனம், ஒரு அமைதி.

அவரிடம் என்ன பேசுவது என்று அவனுக்கோ, அவனிடம் என்ன பேசுவ தென அவருக்கோ தெரியவில்லை போல. இருவரும் நீண்ட நேரம் இப்படியே உட்கார்ந்திருந்தார்கள்.

“இந்த நடுஜாம வேளையில் எதற்காக நீங்கள் இருவரும் இங்கே உட்கார்ந் திருக்கிறீர்கள்?” என பூச்சிகளின் குரலில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது அந்த இரவு.

அவன் சிறுவனாக இருந்தபோதே அவன் அய்யாவைப் பிரித்து அழைத்துக் கொண்டு போய்விட்ட கால நதி ஒன்று, எங்கோ சுற்றிச் சுழன்று இதோ அவனுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.  இதன் தலைகீழ் நிலையாக, அவனைக் கொண்டு வந்து அவருக்கு முன் நிறுத்திய தாகவும் இருக்கலாம். இருவரின் பிரத்தியட்ச வாழ்வை கணக்கில் கொண்டால், அவர்கள் இருவரின் உயிரையும் இணைக்கும் சட்டமாக அவன் அம்மா இருந்தாள் என்பதற்கு அப்பால் இரண்டையும் அருகில் வைத்தோ, ஒட்டவைத்தோ பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? காலம் முடிவற்ற நேர்க்கோட்டுப் பயணம் எனக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் இருவரும் இணைக்க முடியாத இரண்டு புள்ளிகள்தான். ஆனால் இப்போது அவர்களை அருகில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிற அதை எதுவாக உருவம் கொள்கிறோம் என யோசிக்கும் வேளையில் அது அவனுக்குள்ளும் அனைவருக்குள்ளும் நிறைக்கும் ஒரு காலமற்ற பிரக்ஞை எனவே தோன்றியது. அது நேர் கோட்டில் அல்லாது எல்லோ ரையும் மையமெனக் கொண்டு சுற்றிச் சுழல்வதாக இருக்கலாம். அல்லது கால வெளியில் அவர்களை சுழற்றுவதாக இருக்கலாம்.  

அவன் பக்கம் பார்க்காமலேயே அவன் அய்யா சொன்னார், “அவ மானப்பட்றதும், அடுத்தவனை அவ மானப்படுத்திப் பார்க்கிறதும் புதுசில்ல கொழந்தை. எங்கியும், எப்பவும் நடந்து கிட்டுத்தான் இருக்கு. இதுக்கு நடுவுலதான் நாம எல்லாம். இதை வாழ்வா சாவா பிரச்சினையாக்குறதும் நாமதான்.”

இதை எப்படித் தொடர்வது என அவர் சிறிது நேரம் யோசித்திருக்க வேண்டும். 

பிறகு அவர் சொன்னார், “எங்க ஊர்ல எனக்கு முன்னாடி மத்தவங்கதான் கையக் கட்டி நிப்பாங்க. ஆனா இந்த ஊரு என்னைக் கையக் கட்டி நிக்க வச்சது.

“ஒரு பொங்கல் பண்டிகைக்கு ஊர்ல இருந்து ஆளுங்கள கூட்டிக்கிட்டு உன் சித்தப்பன் வந்தான். இந்த ஊர்ல திரிஞ்சிக்கிட்டிருந்த தமட்டை ஒன்னப் புடிச்சிக்கிட்டுப் போயி பாய்ச்சல் காட் டிட்டான். அது இந்த ஊர்க்காரங்களுக்குப் பெரிய குத்தமாப் போயிடுச்சி. அதுக்கு நான் ஒடந்தையா இருந்ததாச் சொல்லி பஞ்சாயத்துல நிக்க வச்சாங்க. கையக்கட்டி நான் நின்னேன். கேள்வி கேட்டாங்க, மன்னிப்புக் கேட்க வச்சாங்க.

“எல்லாம் மாமன் மச்சான்னு பழகன ஆளுங்கதான், கூட ஒக்காந்து சாராயம் குடிச்சவங்கதான்.

“ஏன், உன் அம்மா எத்தனை முறை என்னை அவமானப்படுத்தியிருப்பா. ஏன்னா இது அவ சொத்து.

“நான் இங்க வரும்போது இந்த நெலமெல்லாம் காடு மேடா புல்லுப் பூண்டு மொளச்சிக் கெடந்தது. அதையெல்லாம் வெட்டிப் போட்டு, நெறவி, சமப்படுத்தி, தண்ணிப் பாய்ற நிலமா மாத்த மூணு நாலு வருஷமாயிடுச்சி. அப்புறம் கிணத்த ஆழமாக்கி, கரண்டு கனெக்சன் வாங்கி, இப்ப இங்க இறைக்கிற தண்ணி அந்தக் கடைசி கழனிக்குப் போகுதுன்னா… இதெல்லாம் அவ கண்ணுக்குத் தெரியாது. 

“நான் அவ கிட்ட தைரியமாச் சொல்வேன், என் கொழந்தைங்கள கூட்டிக்கிட்டு நான் போயிடறேன். இந்த கையி காலு இருக்கிற வரைக்கும் என்னால இதுங்களுக்கு கூழு ஊத்த முடியும்ன்னு.

“பள்ளியாப் பொறந்துட்டு ஆச்சாரி வேல,  மேஸ்திரி வேலயெல்லாம் செஞ்சேன். இந்தக் காட்டுல இருந்து எவ்வளவு மரம் வெட்டியிருப்பேன், இந்தத் தோள்ல எவ்வளவு மரத்த தூக்கிக்கொண்டு வந்து சேர்த்திருப்பேன். எத்தனை கட்டில், எத்தனை பீரோ, எத்தனை மாட்டு வண்டி, ஏர் கலப்ப… இந்த ஊர்ல இருக்கிற கால் வாசி வீடுங்க நான் செங்கல்ல எடுத்து வச்சி கட்டின வீடுங்கதான்…

“தெருவுல நடந்தா பல பேர் நம்பள கையெடுத்து கும்பிடுவான். வீட்டுக்கு வந்தா?”

அவர் விரக்தியுடன் சிரிப்பது தெரிந்தது.

அவர் சொன்னார், “இந்த கழுதைங் களுக்கு நான் யாருன்னு தெரியல, அருமை புரியல. சாகற வரைக்கும் அப்படித்தான்.

“இந்தத் திருட்டுப் பசங்களவிட அப்படி என்ன குறைஞ்சி போயிட்டோம்? எதுக்கு நாம அவமானப்படணும்?”

அவருக்காக மட்டுமல்ல அவனுக் காகவும் அவர் யாரிடமோ வாதாடுவது போல இருந்தது இது. இந்த இரவிடமா, இந்த மரம் செடி கொடிகளிடமா? அல்லது கடவுளிடமா? ஆனால் அவர் கடவுளை வணங்கி அவன் பார்த்த தில்லை. அவனுக்கும்கூட அந்தத் தேவை இருக்கவில்லை. பிறகு யாரிடம்?

அவருடைய பேச்சு அவனுக்கு ஆறுதலாக இருந்ததா, அவன் துயரத்தைக் கூட்டி மேலும் இரட்டிப்பாக்கியதா?

அவன் கேட்டான், “நான் கொஞ்சம் குடிச்சிக்கலாம்ன்னு இருக்கேன்.”

“கொண்டு வந்திருக்கியா?”

“ஆமாம்.”

அவன் எழுந்து தன் பையை எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். அதிலிருந்த மது பாட்டில், தண்ணீர், டம்ளர் எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்தான். முதல் டம்ளரை ஊற்றி காலி செய்துவிட்டு தயக்கத்துடன் கேட்டான்.

“நீங்க கொஞ்சம் குடிக்கிறீங்களா?”

“வேணாம்.”

“ஏன்”

“நான் குடிச்சிட்டேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிச்சாச்சி. நீ குடி.”

அவன் குடித்தான். அடுத்தடுத்து இன்னும் இரண்டு கிளாஸ். அவனுக்குள் கரைந்து போயிருந்த போதை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியது. தோய்வு கண்டிருந்த மனம் திரும்பவும் விழிப்புற்று எழுந்தது.

அவன் சொன்னான், “இப்ப நான் தனியாயிட்டேன். என்கூட யாரும் இல்லை. எல்லாம் தூரம் தூரமா வெலகிப் போயாச்சி. அவுங்களுக்கு எந்த விதத்திலயும் நான் உபயோகமா இல்லைன்னு நினைக்கிறாங்க. சுமையா ஆயிடக்கூடாதுன்னு நினைக்கிறாங்க.

“நான் யாரையும் குறை சொல்லவோ, குற்றம்சாட்டவோ விரும்பல. காரணம் எல்லாருக்கும் அவுங்கவுங்க வாழ்க்கை இருக்கில்லையா, அது முக்கியமில்லையா? என்னை தாங்கிப் பிடிச்சா இன்னும் அவுங்களுக்குப் பாரம்தானே?”

போதை மயக்கம் கூடக் கூட அவன் துயரமும் கூடியதுபோலும். அவன் படுத்துக்கொண்டான். தரையின் குளிர்ச்சி அவனுக்கு இதமாக இருந்தது.

அவன் பலவீனமான குரலில் முனகினான், “இங்க நான் முக்கியமில்ல. யாருக்கும் முக்கியமில்ல.”

அவன் அய்யா எழுந்து அவனுக்கு அருகில் வந்து உட்கார்வதுபோன்ற ஓர் உணர்வு. அவருடைய விரல்கள் அவன் தலையை கோதிக் கொடுக்கிறது. இப்போது அவன் அவருடைய மடியில் படுத்திருக்கிறான்.

முன்பொருமுறை மொட்டை மாடி யில் அவன் அம்மாவின் மடியில் படுத்து அழுதது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

ஆனால் இதெல்லாம் என்ன? 

அவனுடைய துயரம் எவ்வளவு அபத்தமானது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அதற்கொரு அரவணைப்பு தேவை, ஆறுதல் தேவை. தன்னை ஒரு துரோகியென, சுயபோகி என ஒப்புக்கொள்வதில் உள்ள தயக்கம் அவனை இப்படி இரக்கம் வேண்டி, கருணை வேண்டி நிற்கச் செய்ததா?

தன்னை நேர்மையின் காலடியில் விழுந்துகிடப்பவனாக தனக்கே பறை சாற்றிக்கொள்ள இதெல்லாம் தேவை என அவன் உள்ளுணர்வு சொல்லியது போலும். எல்லோரும் அதை விட்டு விலகிச் செல்லும் வேளையில் அவனாவது அதை மதிக்க வேண்டும் இல்லையா? அந்த இடத்துக்குரியவன் தான் தான் என நிற்க வேண்டும் இல்லையா? 

தனக்கான எல்லா மடிகளையும் இழுந்துவிட்டதாகத் தோன்றுவதும், துயரம் பெருகுவதும், தன் மீதான கழிவிரக்கம் கூடுவதும் அவ்வப்போது நேர்வதுதான். இந்த அழுகையும் அவனுக்கு ஆறுதல் அளிப்பதுதான். அவன் அப்படியே தூங்கிப் போனான்.

காலையில் அவனுடைய மாமா நிலத்துக்கு வந்தபோது திண்ணையில் அவன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தார். ஆனால் எழுப்பவில்லை. வெயில் சுள்ளென்று காயும் வரை அவன் தூங்கிக்கொண்டே இருந்தான்.

அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *