தபுதாராவின் புன்னகை

தெறிப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் திறவுகோல்

மதிப்புரை

அதீதன்

‘கவிதைகள் கேள்விகளைக் கேட்கின்றன, நாமோ அவற்றுக்கான பதில்களை அவற்றிடமே தேடிக்கொண்டிருக்கிறோம்’. இதைத்தான், கவிதையின் சிறப்பாக உணர்கிறேன். கவித்துவத்தின் மாயவெளியில் அலைகிற வாசகனுக்குப் புலப்படும் யாவுமே கவிதையின் சாயலன்றி வேறில்லை. அவைதரும் சாத்தியப்பாடுகளைப் பின்தொடரும் ஒரு வாசகனாகத் தயாராகிக்கொண்டிருக்கிற எண்ணிலடங்கா பெருங்கூட்டத்தில் ஒவ்வொருவரும் தமக்கான தர்க்கநியாயங்களைக் கொண்டு கவிதைகளை அணுகுகின்றனர். அதை எழுதியவர், அப்பெருங்கடலின் ஒற்றைத்துளியாகக் கலக்கும்போது அவருக்கு இதுவரையில் அறிந்திடாத, கவிதையின் பரிமாணம் புலப்படத் தொடங்குகிறது,.

இந்நிலையில், ஒரு கவிதை, வாசகனுக்குத் தருவது/ தரவேண்டியது/ தந்துகொண்டிருப்பது/ தரக்கூடியது வெறும் வாசிப்பு இன்பம் மட்டும்தானா? ஒரு கவிதை, அது முற்றுப்பெறும்போது வாசித்து முடிக்கப்படுகிறதா அல்லது வாசித்து முடிக்கப்பட்டவுடன் முற்றுப்பெறுகிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறேன். நிச்சயமாக முற்றுப்புள்ளியோ, மூன்றுபுள்ளிகளோ, வேறேதேனும் நிறுத்தற்குறிகளோ இடும்போதும், ஒரு கவிதையை எழுதி அப்போதைக்கு அது முடிவுற்றதாகக் கொள்ளும்போதும், பின்பு தாளிலோ, கணிப்பொறியிலோ எழுதி முடிக்கப்படும்போது அல்லது மேற்சொன்ன இரண்டையும் கடந்து வாசகன் அதை வாசித்துமுடிக்கும்போதும் அந்தக் கவிதை முற்றுப்பெறுவதில்லைதான்.

தமிழ்க்கவிதை வரலாற்றில் நீண்ட நெடிய பயணத்தில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சங்கக் கவிதைகளில் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, குறட்பா, புதுக்கவிதைகளின் அலங்கார, உணர்வெழுச்சிக் கவிதைகள், பிரச்சார கவிதைகள், நவீனக் கவிதைகளில், குறியீடு, படிமம், இருண்மை, மற்றும் எதிர்கவிதை என இப்படியாக நாம் வாசித்து வந்திருக்கிறோம். ஆனால் குறுகிய, மிகக்குறுகிய அளவிலான கவிதைகள் பலசமயங்களில் நம்மை பெருவியப்பில் ஆழ்த்திவிடுகின்றன.

அதுபோல, தாமரைபாரதியின் ‘தபுதாராவின் புன்னகை’ என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் நம்மை பெருவியப்பில் ஆழ்த்தக்கூடிய பல குறுங்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றைத்தாண்டி பல சிறந்த கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளபோதும் இவைபற்றி பிரத்யேகமாக பேசவேண்டியதை அவசியமெனக் கருதுகிறேன். ஒரு முழுக்கவிதையின் நேர்த்தியைக் காணும் அதேவேளையில், சில கவிதைகளில் வருகிற சில பத்திகளும் அந்தக் குறுங்கவிதைகளுக்கு ஒப்பான திறப்புகளையும் வியப்புகளையும் கொண்டிருக்கின்றன.

கோடையின் உக்கிரம்போல்
வலி உச்சமடைய
பித்தம்கொண்டு அலைகிறது
மனப் பூ.

நான்கு வரிகள்கொண்ட இக்கவிதையை பலமுறை வாசித்துப் பார்க்கிறேன், ஒவ்வொருமுறையும் புதிதுபுதிதாக ஒன்றைச் சொல்லிச்செல்கிறது. ஒருமுறை, அது நோய்மையின் உச்சமாகவும் மறுமுறை கைகூடா காமத்தின் தவிப்பாகவும் இவற்றை நிராகரித்து தனிமையின் தவிப்பாகவும் யாவற்றையும் தாண்டி துயரார்ந்த மனதின் அழுகுரலாகவும் தன்னை மாற்றிமாற்றி விளையாடுகிறது

‘வித்தியாசம்’ என்று தலைப்பிடப்பட்ட கவிதை, ‘உச்சத்தில் தலைமுடியைப் பிடிப்பதிலும்/ துச்சத்தில் தலைமுடியைப் பிடிப்பதிலும் உண்டு நிறைய’. கவிதையை நான் சொல்லிவிட்டேன், மற்றவை உங்கள் வசதிக்கேற்ப. முன்சொன்ன குறுங்கவிதைகளைப் போலவே பல கவிதைகளின் இடையில் வரக்கூடிய மிகத் தெறிப்பான பத்திகளும் இருக்கின்றன. ‘முழு வானத்தையும் தன்/ஒரே உள்ளங்கையால்/அளந்ததன் அளவே நீ’. ‘வலியோடு அருவெறுப்பும் சேர்ந்துகொள்ள/ சர்வசாதாரணமாக ட்ரேயை/வெறுங்கரங்களால் அப்புறப்படுத்துகிறார்/ ஆயா (பேரன்பின் சிறுகரங்கள்)’. இந்த வரியை ஒருமுறை காட்சிப்படுத்திப் பாருங்கள் அதன் வலியை நாமும் உணர்வோம். ‘நடைபாதையிலும்/தார்ச்சாலையிலும்/ வருவோர்போவோரின்/ கால்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார் /கொக்கைப்போல (செருப்புத் தைப்பவர்)’, ‘பந்துகள்/நம்மை விளையாட அனுமதிக்காததுபோலவே/ நாமும் குழந்தைகளை அனுமதிப்பது இல்லை (பந்து விளையாட்டு)’. ‘நூறு பூச்செடிகள் சுகந்தத்தை விரவும்/ பேரண்டப் பெருவெளியில்/ நினைவின் கிழங்குகளை/ அகழ்ந்துகொண்டே செல்லும்/ பெரும் பன்றி/நான்’. இப்படிப் பலவற்றைக் குறிப்பிடலாம். எனினும் ‘மூக்குக் கண்ணாடி’ கவிதை, அதன் முதல் இரண்டு பத்திகள் கொடுத்த மகிழ்வை தொடர்ந்துவரும் பத்திகள் பறித்துக்கொண்டுவிட்டன என்றே கூறவேண்டும்.

இத்தொகுப்பின் முக்கியப் பாதுகாவலராக எனக்குப் படுபவர் ‘சுஜா’தான். அவர் யாரென்றோ, கவிஞருக்கும் அவருக்கும் என்ன பந்தமென்றோ ஒரு வாசகன் அறிந்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் சுஜா வருகிற கவிதைகளெல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றன. சுசியையும் சசியையும் அறிந்துகொண்டா கவிதைகளை வாசிக்கிறோம்!

இந்தத் தொகுப்பில் ‘மலையும் மலைசார்ந்த’, ‘ரிக்ஷாக்காரர்’, ‘மழைச்செடி’, ‘உறக்கம் 1’, ‘மகளைத் தொலைத்தவன்’, ‘மல்லிகா அக்காவும் பாம்பும்’, ‘நடைபயிலுவோர் சங்கம்’, ‘சரியாக நாற்பத்தியேழாம் நாள்’ போன்ற கவிதைகள் நன்றாக இருக்கின்றன. இதில் ‘கண்ணாடி’, ‘இருவர்’ ஆகிய கவிதைகளைப் பற்றி பேசியாக வேண்டும். கண்ணாடி சுயத்தின் பிரதிபலிப்பு, அது எழுதியவருடையது மட்டுமல்ல, வாசிப்பவருடையது மட்டுமல்ல, ஒவ்வொருவருடையதும்தான். ’இருவர்’ இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று. சட்டமிடப்பட்ட அந்தப் புகைப்படங்களிலிருந்து வெளியேறிச்செல்லும் கண்ணாடியணிந்த அவ்விருவருமே அண்ணல்களாக இருப்பது ஆகப்பெரும் துரதிர்ஷ்டம்தான். ’காதலின் மெல்லிசைப்பாடல்’, ‘என்னை இப்படியெல்லாம் செய்திருக்கிறாய்’ போன்ற கவிதைகளில் சொற்றொடர்களின் அடுக்கல் வடிவம் படிப்பதற்கு சற்றே தொய்வைக் கொடுத்தாலும் அடுத்தடுத்த கவிதைகளில் அவை சரிசெய்யப்பட்டு புத்துணர்வைத் தந்துவிடுகின்றன.

இறுதியாக ஒரு கவிதை.

கடவுள்
நமது வீட்டில்
ஒரு அறையில் பதிவிடுவதை
மறு அறையிலிருந்து
விருப்பக் குறியிடுகிறாய்
நாம் லட்சியத் தம்பதிகள்
என்பதன் குறியீடாய்

உலகின் எல்லா அறைகளையும்
பார்த்தபடி விருப்பக்குறியிடுபவராக
இருக்கிறார்
மார்க் ஸக்கர்பெர்க்.

நானும், இந்தக் கவிதைக்கும் இத்தொகுப்புக்கும் செந்நிற இதயக் குறியிடுகிறேன்.

தபுதாராவின் புன்னகை (கவிதைகள்)
கடற்காகம் வெளியீடு
எஸ்.ஆலங்குளம், மதுரை-625 017
பக்கம்: 112, விலை: ரூ.100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *