சற்றே பெரிய கரித்துண்டு

நவீன அரசியல் மீதான எதிர்வினைகள்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

“மரங்களைப் பற்றிப் பேசுவதென்பதும் குற்றமே. காரணம், அது நீதியின்மையைப் பற்றிய மௌனத்தை உள்ளுணர்த்துகிறது” – பெர்டோல்ட் ப்ரெக்ட்.

மேற்கண்ட வரிகள், சூ.சிவராமனின், சற்றே பெரிய நிலக்கரித்துண்டு என்னும் கவிதைத்தொகுதிக்கு அணுக்கமாக எடுத்தாளப்பட்ட ஒரு திருமுகம். இதையே இக்கட்டுரைக்கான தொடக்கமாகப் பயன்படுத்த விரும்புகிறேன்.

இத்தொகுதிகளில் உள்ள கவிதைகளை நான் வாசித்ததாக நினைவில் இல்லை. இக்கவிதைகளைப் பற்றி என்னிடம் யாரும் சொன்னதாகவும் நினைவில் இல்லை. ஆனால், இக்கவிதைத்தொகுதியை வாசிக்கும்போது கிடைத்த அனுபவம் கொஞ்சம் சந்தோஷம் அளிப்பதும்கூட.

இந்தத்தொகுதியை எடுத்து வாசிக்கத் தொடங்கும்போது, ஒரு முழுமூச்சுடன் அனைத்துக் கவிதைகளையும் வாசித்துவிட்டேன். முதல் தொகுப்பில் எப்போதும் இருக்கும் பதற்றம் இத்தொகுதியில் இல்லை. ஒரு கவிஞனின் தனித்துவம் அவருடைய முதல்தொகுப்பில் தெரிந்துவிடும். அப்படி பார்க்கையில் சமகால வாழ்வில் இழந்துவிட்ட நிலத்தையும், அதற்குக் காரணமான அரசியலையும் இக்கவிதைகள் பேசுகின்றன.

இழந்துபோன நிலம் பற்றிய நினைவு, நான் X நீ என்றமையும் அன்புசார் கவிதைகள், அரசியல் தேசிய முன்னேற்ற முன்னெடுப்புகளால் இழந்துபோன நிலம் எனச் சில அடுக்குகளில் கவிதைகளின் பொருண்மை அமைகிறது. கோபம் ஒரு மௌனமாகத் தொடரும் பல கவிதைகளில் மிகச் சரியான தெளிவு இருக்கிறது, எடுத்துரைப்பதில். நிதானம் கைகூடியிருக்கிறது. இக்கவிதைகளை வேறுசிலர் எழுதியிருந்தால், வெறும் பிரச்சாரமாகிவிட்டிருக்கும். ஆனால் இதைக் கவிதையாக மாற்றும் வித்தை சூ.சிவராமானுக்கு வாய்த்திருக்கிறது.

தன்னுடைய நாகை மாவட்டத்தில் நிகழும் சம்பவங்களைக் கவிதைகள் பலவற்றிலும் எழுதியிருக்கிறார். கடல் கொந்தளித்து ஊரை விழுங்கியது, கடன் தொல்லையால் விவசாயிகள் மரிப்பது, எண்ணெய் வளத்திற்கான நிலம் சுரண்டப்படுவது, அணு உலைகளால் மனிதர்களின் ஆதாரவாழ்வு அடியோடு அழிந்துபோவது எனப் பல மோசமான நிகழ்வுகளைச் சித்தரிக்கிறார்.

பெரும்பான்மையாக இருக்கும் அரசியல் கவிதைகள் முழுவீச்சுடன் அமைந்திருக்கின்றன. தற்காலத்தில் அரசால் நிகழும் முன்னேற்றம் என்ற வகையிலான வன்முறையில் இழந்துபோன மனிதர்களையும் நிலத்தையும் தன் கவிதைகள் வழியாகப் பேசுகிறார், கவிஞர்.

கதைசொல்லலில் ஓர் உத்தி அவரிடம் இருக்கிறது. தனித்தனிக்காட்சிகளாகக் கவிதையின் வரிகளை அடுக்கிறார். ஆனால் அவற்றைக் கோர்க்கும் கண்ணியை மறைமுகமாக வைத்துவிடுகிறார். நாம் வாசித்தபின் அவற்றிற்கான கண்ணி. ஒரு தீர்க்கமான முடிவாகக் கவிதையைப் பற்றிச் சொல்லிவிடுகிறது. பெரும்பான்மையான கவிதைகள் இந்த உத்தியில்தான் எழுதப்பட்டுள்ளன.

இன்னொன்று கவிதையின் நடை. ஒரு பொறுப்புணர்ச்சிமிக்க, எளிய, தெளிவான உரையாடலை முன்வைக்கும் திறந்தநிலைத் தன்மையான நடை, அவருடைய எல்லா கவிதைகளிலும் அமைந்திருக்கிறது. ஒரு சிக்கோ, குழப்பமோ அற்ற நடை அது. கதைச்சொல்லலுக்கான எளிய நடை இது. வாசகனுக்கு முன்பாக அமர்ந்து மௌனமாக உரையாடுகிற நடை. இதற்கு மொழி ஒத்துழைக்கிறது, ஒன்றிப்போகிறது.

ஒரு கவிஞன் தன் அனுபவத்தை எழுதலாம். அல்லது சமூகம் சார் அரசியல் கவிதைகள் எழுதலாம். பின்னது கடினம். அதைத்தான் எளிமைாக, தெளிவாக இன்னும் கூடுதலாச் சொன்னால் நேர்மையாக எழுதியிருக்கிறார், கவிஞர்.

வாசித்துமுடித்தபோது, பெரும் மௌனம் என்னைச் சூழ்ந்துகொண்டது. அந்த மௌனம், அரசுமீதான கோபம்தான் என்று சொல்லாமல் இருக்கமுடியவில்லை. நமக்குள் ஒரு கவிதை செய்யும் எதிர்வினை, குறைந்தது இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

கீழே தொகுப்பிலிலுள்ள சில கவிதைகள் தந்திருக்கிறேன். அது இத்தொகுதியின் மையத்தைப் புரிந்துகொள்ள உதவலாம்.

0

ஆளரவம் கேட்டு
சாலையோர இருளில் எழுந்து நிற்பவள்
புதர் இழந்த கீரி
வெட்டுண்ட மரத்தின் குருவிக்கூடு
வற்றிய குளத்து நத்தை ஓடு
துருவேறிய மண்வெட்டி
கைவிடப்பட்ட தானியக்குதிர்

நானொரு மண்புழு.

0

முன்னொரு காலத்தில் ஒரு நதி இருந்தது

அய்யனார் குலசாமி
காரைப்புதர் புதைகாடு
சுழித்தோடும் நீரில் நீச்சல்
மணல்திட்டில் விளையாட்டு
அப்பா குளித்த சிதைந்த படித்துறை
ஆடிப்பெருக்கில் மிதந்து போகும்
அக்காளின் மணமாலைகள்
அம்மாவைச் சுமந்த பாடைக் கழிகள் கரையில்
ஆடுகள் மாடுகள் மேய்ந்த ஆற்றுப்படுகை
நீர்க்காகங்கள் வெளியேறுவதற்கு முன்புவரை
வாழ்ந்து கெட்டவன் விழுந்து சாக
ஒரு நதி இருந்தது.

0

முற்றும்

வெட்ட ஓங்கிய கிளையில்
அந்தப் பூ
அழகாகச் சிரித்தது

அவ்வளவுதான் கவிதை முடிந்தது

0

நம் நிலத்து வாரிசு

மா மரத்தின் பூக்கள் வண்டுகளை ஈர்க்கிறது
காத்திருந்தோம்
காயிலேயே பழுக்க வைக்கும் பீய்ச்சு மருந்திற்கு
கொப்புளங்களுக்கு
வேப்பிலை, மஞ்சளை மருந்தாக்கும் முயற்சியிலிருந்தோம்
மருந்துக் குப்பிக்குக் காப்புரிமையும் விலை நிர்ணயமும்
செய்து சிரிக்கிறார்கள்.
நஞ்சைப் பாலாக்கும் கரங்களில் மரபீனி விதைகள்
புல் மேயாத மாட்டின் பாலை விற்கிறார்கள்
நெகிழிப் பைகளில்
விடலைகள் அணையாத காளைகளோ
ஆண்மையிழந்துவிட்டன.
தானியக்குதிரின் கதகதப்பிற்குள்
முளைவிடத் துடிக்கும் உழவரின் உயிரணுக்கள்
ஆற்றை நம்பி உழப் போனவர்கள்
அதிர்ச்சியில் உறைந்தனர்
மற்ற எல்லோரும்
நீளும் வங்கி வரிசையில் நின்றுகொண்டார்கள்
ஆம்
நீளசதுரப் பெட்டிகளில் மீன்களை நீந்தவிட்டது
தற்செயலில்லை.

0

புத்தனின் முகத்தில்
மணக்கும்
ஓரிதழ்த் தாமரை

0

நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்

காளைகளின் நுகத்தடிக் கயிற்றில்
அழகிய சுருக்கொன்றைப்
போடக் கற்றுத் தேர்ந்தான்
நிலத்தின் நிர்வாணம் சகிக்கவில்லை
நிமிர்ந்த பால் கதிரென
அந்தரத்தில் தொங்குகின்றான்
சட்டைப் பையில் ஓயாமல் ஒலிக்கிறது கைப்பேசி
தொடர்ந்து அழைத்தபடி இருக்கிறார்
வங்கி மேலாளர்.

0

கரிநிலமே

உவர்நீரும் நன்னீரும் புணரும் ஓடையில்
கடல் நீலம் சிந்தும் மலரைத் தொலைத்தோம் அன்பே
என் கண்ணே… நீ வருகிறாய்
கரித்துகள்களால் மூச்சு முட்ட
எப்படிக் காப்பேன் உன்னை
கரி படிந்த என் கன்னங்களில்
உன் உதடு கவிய ஒருபோதும் ஒப்பேன்
புகைக்குழாயென மாறும்
நுரையீரலையா கொண்டு சேர்ப்பது குழந்தைக்கு
விலை நீரைப் பருகின பின்
அதன் புட்டிகளோடு
புதைக்கிறோம் எதிர்காலத்தை
நேசிப்பில் ஊரும் அன்பைப்போல்
நீரூரும் நல் நிலங்கள்
புவிக்கு வெளியே சென்றுவிட்டன
நம் காதலோ நீண்டிருக்கிறது
கதிராமங்கலம் வரை.

0

சற்றே பெரிய நிலக்கரித்துண்டு

அதிகாலை மிதிவண்டியில் அமர்ந்துள்ள மூட்டைகள்
பெல்லாரி மரவள்ளியாய் வியாபாரத்திற்குச் சென்றவை
தகரம் நெகிழியாக வீடு திரும்பும்
அவரது வாழ்க்கை ஆடிக்காற்றில் எதிர்நீந்துவது
தாகத்தின் கோப்பைகளை நிரப்பிய
ஊர்க்கிணறும் கொல்லைக்கிணறும்
ஊற்றுக் கண்களை மூடிக்கொண்டன
குடிசையின் கிழோடும் கெயில் குழாய்கள்
சூழ்ந்திருக்கும் அனல்மின் நிலையங்கள்
அவர் உறக்கத்தின் மணித்துணிகள் சரிகின்றன
இரவுகளில் கொச்சை வார்த்தைகளால் சினம் வடிக்கிறார்
நிலம் கைவிட்டுப் போவது பற்றிய
அவநம்பிக்கை அரும்பத் தொடங்கிய நாட்கள் அவை
நுரையீரலில் குடியேறிய கரித்துகள்கள்
துறைமுகத்தில் அணிவகுக்கின்றன லாரிகளில்
கெட்டகாலம் பொறந்ததை
எந்தக் குடுகுடுப்பைக்காரனும் சொல்லவில்லை
இப்போது அவர் கிடத்தப்பட்டிருந்தார்
பெரிய நிலக்கரித் துண்டென.

0

துரத்தும் நிலக்காட்சி

உணவுப் பொட்டலங்கள் வீசி
ஆகாயத்தில் பறந்தவன்
இறங்கி வருகிறான்
துண்டிக்கப்பட்ட பெண்ணின்
தலை அருகில் கிடந்தது
பிஞ்சுக் கரம் ஒன்று.

0

கண் முன்னே
கழுத்தறுத்து
உயிர்க்கோழி விற்பவள்
நீ

0

ஒரு கிலுகிலுப்பையின் தனிமை

உரத்துப் பெய்யும் மழை
ஓயாத அழுகை
தூளி நடுவே
காற்றில் ஆடும் கிலுகிலுப்பை
சவப்பெட்டியோ
மிகச் சிறியது.

சற்றே பெரிய நிலக்கரித்துண்டு / கவிதைகள்
/ சூ. சிவராமன் / கொம்பு பதிப்பகம் /
முதல் பதிப்பு ஜனவரி 2020 / ரூ. 50)

‘சின்னஞ்சிறு சப்தங்கள்’ என்னும் இத்தொடரில், ராணிதிலக் தான் படிக்கும் முக்கியமான நூல்களைப் பற்றிய மதிப்புரையை ஒவ்வொரு வாரமும் எழுதவிருக்கிறார். அதன் முதல் மதிப்புரையாக ‘சற்றே பெரிய நிலக்கரித் துண்டு’ கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியுள்ளார்.

3 thoughts on “நவீன அரசியல் மீதான எதிர்வினைகள்

  1. கருத்தியலையும் மொழி செயல்பாட்டையும் ஒருங்கே விமர்சிப்பதென்பது சற்றே கடினமான ஒரு விமர்சன முறை. ராணிதிலக் இதை நுட்பமாகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார்.

  2. கவிஞர் ராணி திலக்கின் நூல் மதிப்புரைகள் சிறக்க என் வாழ்த்துகள். முதல் தொகுப்பாக சற்றே பெரிய நிலக்கரித் துண்டு என்னும் கு.சிவராமனின் கவிதைத் தொகுப்பை நடுநிலையோடு எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் கவிதையின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ளஅதன் அடி ஆழம் வரை சென்று அலசியிருக்கிறார். வாசித்தகவிதைகளில் சிலவற்றை வாசகர்களுக்காக பதிவிட்டுள் மை குறிப்பிடத்தக்கதுமுற்போக்கு போலிகளை குறிப்பிட்டு சொல்லாமல் முற்போக்கு மடையர்கள் என்று பொத்தாம் பொதுவாக சாடுவது ஏற்புடையதல்ல. ஏனெனில் மர பிலிருந்துது பிறந்தது தான் புதுக்கவிதை. முற்போக்கு சிந்தனைகளால் தான் தமிழின் சிறகுகள் என்றும் புத்தம் புதிதாய் விரிந்த வண்ணம் உள்ளன.

  3. நூலைப்படிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிடுகிறது சூ.சிவராமன் நூலினைத்தாங்கள் விமர்சித்திருக்கும் முறை. நல்ல திறனாய்வு.் எடுத்துக்காட்டியிருக்கும் கவிதைகள் நிதரிசன வாழ்வின் நிழற்படங்கள். வாழத்துக்கள் நூலை நடமாட விட்ட படைப்பாளருக்கும், நூலேணியில் ஏறித்திசை காட்டிய விமர்ச்சகருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *