நிக்கி ஜியோவானி

நிக்கி ஜியோவானி கவிதைகள்

இலக்கியம்

தமிழாக்கம் : சரோ லாமா

1] நீனா சிமோனுக்கு ஒரு பிரார்த்தனை

நீனா சிமோன்:
மத வெறியாளர்களுக்கும் வெறுப்பை விதைப்பவர்களுக்கும்
ஒரு தீப்பந்தம் போன்றவர்
மாற்றுக் கருத்து கொண்டவர்களிடமும்
மிதப்போக்கை கடைபிடிப்பவர்.
பயந்தாங்கொள்ளி மனிதர்களை ஊக்குவிப்பவர்
கோழைகளுக்குத் தைரியமூட்டுபவர்.
உறவற்றவர்களுக்கு அன்பாகவும்
வீடற்றவர்களுக்கு கூரையாகவும் இருப்பவர்.
அவர்,
இன்றைக்கும் என்றைக்கும் நம்மவர்.
ஆமென்!

2] என்னை என்னைப்போல ஓவியம் தீட்டுங்கள்

இது எனக்குத் தெரியும்
வளர்ச்சியடைவது கடினமானது
இதற்கு முன்பும் அது அப்படித்தான்
இனி எதிர்காலத்திலும் அப்படித்தான்

இது எனக்குத் தெரியும்
யாரும் இதை எப்படி செய்வது என்று
உங்களுக்கு சொல்லித்தர மாட்டார்கள்
நீ செய்த தவறுகளையே திரும்பவும் செய்வாய்
அதே மன எழுச்சியைத்தான் அடைவாய்

இது எனக்குத் தெரியும்
வாழ்க்கை என்பது ஒரு நல்ல கருத்தாக்கம்

இந்தப் பிரபஞ்சத்தில் வேறு வாழ்க்கையே இல்லை என
கருதிக்கொள்வது முரண்பாடானது என்று
நான் எண்ணிக்கொள்கிறேன்.

நம்மை மறு ஆக்கம் செய்துகொள்வதென்பது
நம் கையில்தான் உள்ளதென
நான் எண்ணிக்கொள்கிறேன்.

மனிதர்களால் மட்டுமே சிந்திக்க இயலும் என்பதை
நான் நம்பவில்லை.
ஆனால் நாம் அவ்வாறு இருக்கப்
படைக்கப்பட்ட இனம் என்று நான் எண்ணிக்கொள்கிறேன்,
அது நமக்கு இழப்பே.

நாம் படைப்புத் தொழிலாளிகளின் கோரிக்கைகளில்
கவனம் செலுத்த வேண்டும்
நாம் வலியில் துடிப்பவர்களின் அழுகைக்கு
செவிமடுக்க வேண்டும்.
நாம் புதிதாக வன்முறைக்குத் திரும்பிய
விளிம்பு மனிதர்களிடம் மதிப்பும்
ஏக்கம் மிகுந்தவர்களிடமும் வாஞ்சையும் கொள்ளவேண்டும்.

நான் அறிவேன் கற்பனை என்பது
ஒரு நல்ல கருத்தாக்கம் என்று.
நான் அறிவேன்
மோசடியில் முன்னணிக்கு வருபவர்கள்
படைப்பாக்கத்தைத் தழுவிக் கொள்பவர்கள் என்று.
நான் அறிவேன்
மனிதர்கள் உணர்வு ரீதியான தேவைக்கு மனம் சுருங்குபவர்கள் என்று.மனிதர்கள் பசியாலோ அல்லது வயிற்றுப்போக்காலோ
இறக்கும் முன்பு
உடல் தன்னைக் காத்துக்கொள்ளும்.

நம் ஆன்மாவுக்கு ஊட்டம் தேவை

நமக்குக் கவிதை வேண்டும்
நாம் கவிதை பாடத் தகுதியானவர்கள்
நாம், நம்மை மறு உருவாக்கம் செய்யும்
கவிதைக்குக் கடன்பட்டிருக்கிறோம்.
அதைவிடவும் வாழ்வதற்கான வேறு சிறந்த
மார்க்கமொன்றுமில்லை.

என்னை நம்பிக்கையானவனாய்த் தீட்டுங்கள்
என்னை காலக் கணிப்பானாகத் தீட்டுங்கள்
என்னை மிகுந்த அழகுடையவனாக ஓவியம் தீட்டுங்கள்
நான் கவிஞன்.

3] எப்படி அவர்களைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

1]
அவர்கள் எப்படி பிரார்த்தனை செய்வது என்று
கற்றுக்கொள்ளவில்லை எனில்
நீங்கள் எப்படி அவர்களைக் காப்பாற்றப் போகிறீர்கள்?
நான் யூகித்த பாடலை அவர்களுக்குப் பரிசளியுங்கள்
ப்ளூஸ் இசைவடிவத்தை அவர்கள்
துரத்திப் போகட்டும்.

2]
அவர்கள் எப்படி பிரார்த்தனை செய்வது என்று
கற்றுக்கொள்ளவில்லை எனில்
அவர்களைக் காப்பாற்றுவது கடினம்
அவர்களுக்கு ப்ளூஸ் இசை வடிவத்தை பரிசளியுங்கள்
நாள் முழுதும் அவர்களை கதறி அழவிடு.

3]
அவர்கள் பிராத்தனையை நிராகரித்தால்
அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று
நான் உங்களுக்குச் சொன்னேன்.
அவர்கள் விரல்களை முறித்துக்கொள்ளட்டும்
அவர்கள் கால்விரல்களைப் பிணைத்துக்கொள்ளட்டும்
அவர்கள் பொய் மயிரைப் பொருத்திக்கொள்ளட்டும்
அவர்கள் தளர் உடை அணிந்து கொள்ளட்டும்
பல் வரிசைகளில் மின்னும் வைரம்
கூந்தலில் பூக்கள்
அவர்களை சந்தோசம் கொள்ளச் செய்ய அன்பு போதுமானது
பிரச்சனைகளை அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள்
பாடல் முணுமுணுப்புகளையோ அல்லது பெருஞ்சிரிப்புகளையோ
அவர்கள் பகிர்ந்து கொள்ளட்டும்.

நிக்கி ஜியோவானி [Nikki Giovanni] அமெரிக்காவில் பிறந்தார். புகழ் பெற்ற கறுப்பினப் பெண் கவிஞர். அமெரிக்காவில் அறுபதுகளில் உருவாகிய ‘கறுப்பினக் கலை இயக்கம்’ மூலம் வெளிச்சம் பெற்றவர். விர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இருபதுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டின் லூதர் கிங் பெயரிலான விருது, தேசிய கவுன்சில் நீக்ரோ பெண்மணி விருது, மாயா ஏஞ்சலு வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *