நித்தியா வீரராகு கவிதைகள்

சிறுபத்திரிகை

முதற்கனியின் ருசி

கழுத்தறுபட்ட பிணங்களின்
புரையேறிய மாமிசத்தை
தன் உருவச்சிலைக்குப்
படைத்துக் கொண்டிருந்தான் தேவன்

அகாலத்தின் எதிரொளிப்பாக
இருள் சூழ்ந்ததொரு பொழுதில்
எனை இடைமறித்துக் கூறினாய்
காதல் விழிகளில் தொடங்குவது அல்ல

வானெங்கும் மீயொளிர
காலப் பிரக்ஞையற்றதொரு கணத்தில்
நிறைந்த வெண்பசுவின்
வயிற்றைக் கிழித்து வெளிவந்த தேவன்
விழிகளைக் காதலிப்பதாய்ச் சொன்னான்

யுகாந்திரங்களுக்கு முன்னால்
விண்மீன்களுக்கிடையில் திரிந்தோமென்றும்
முதற்கனி சுவைக்கப்பட்ட நாளில்
பூமிக்கு வந்திறங்கியபோது
தொலைந்துபோன தேவதை நானே என்றான்

மெய்சிலிர்த்த தேவதருணங்களுக்குப் பிறகு
மாயை அருளும் சர்ப்பத்தின்
நஞ்சிட்டு நொதித்த
பழச்சாற்றுப் போதையின் இறுதியில்
என் பரிசுத்தத்தின் மீதூர்ந்து
வெளியேறினான்

அறிவாயா?
இப்போது கனவில் தோன்றும்
இராட்சச ஊர்வனவற்றை என்
முதுகில் படர அனுமதித்துள்ளேன்
அதீதத்தின் எதிர்முனையிலிருந்து
நீ எனதிரு முலைகளைக் காதலிப்பது
அவ்வளவு சரியானது
இனி வரும் இரவுகள் ஒருபோதும்
எனை அச்சுறுத்தப் போவதில்லை.

சிறகுகளின் தழும்புகள்

நகரோடிணைந்திருந்த
பெரும் மைதானமொன்றில்
பந்தயத்திற்கான
அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன
வெற்றி பெறுபவருக்கும் பயிற்றுவித்தவருக்கும்
பரிசாக தங்கச் சங்கிலிகள்
வழங்குவதாக அறிவித்திருந்தனர்

தொடக்க ஒலி முழங்கப்பட்டதும்
லாடங்கள் திறக்கப்பட்டு
அதி வேகத்தில் ஓட ஆரம்பித்தன
குழந்தைகள்.
உதிரம் கசிய மாமிசத்தைக்
கவ்விக்கொண்டு ஆர்ப்பரித்த
கழுத்தில் பட்டையணிந்த கழுகுகள்
வானில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தன

ஒரு புறத்தில் உடலில் ஏர் பூட்டப்பட்டு
நிலத்தை உழுது கொண்டிருந்த
குழந்தைகள் சிலரைக்
கடத்திக் கொண்டு வந்தேன்

அவர்களின் முதுகில் முளைத்திருந்த சிறகுகள்
கட்டப்பட்டிருந்தன.
ஒரு துண்டு சூரியன் , சில நீர்த்துளிகளை அள்ளி
அவர்களின் கைகளிலிட்டேன்.
அவர்கள் வானவில்லை
உருவாக்கித் தந்தார்கள்.
வண்ணத் தூரிகையால்
வனம் ஒன்று, குளம் ஒன்று,
மேலும் பறவைகள், விலங்குகள்,
தாவரங்கள் என
அவர்கள் வரைந்த யாவும்
உயிர்பெற்று எழுந்தன.

முதுகெலும்பு வளைக்கப்பட்ட குழந்தைகள்
சிறகுகளை செயற்பாடற்ற உறுப்புகளென
நம்பியிருந்தனர்.
சிறகுகளைக் கட்டவிழ்த்தேன்,
அவர்கள் பறவைகளானார்கள்

பெருமிதத் தருணமதில்
மேற்கில் விழவிருந்த சூரியனைத்
தூக்கிப் பிடிக்க முயன்ற குழந்தைகளை
எதிர்பாராமல் பறந்து வந்த கழுகுகள்,
கொத்துக் கொத்தாய் கவ்விச் சென்றன
செய்வதறியாததொரு நொடிக்குள்
இரத்த வாடையில்
அமிழ்ந்துபோனது வனம்

பிறிதொரு நாளில் உற்பத்தி ஆலைகளில்
தேர்வுக் கூடங்கள் அமைந்திருந்தபோது
குழந்தைகள் தங்களின் விரல்களைச் சீவி
கூர் தீட்டிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் முதுகில் சிறகுகள்
அறுக்கப்பட்ட தழும்புகள் இருந்தன
வழி தவறிய வண்ணத்தி

அவள் சிறுமியாக இருந்தபோது
பூக்களை நேசித்தவள்.
குரல்வளையில் காற்றைக் குழைத்து
பாடித் திரிந்தவள்.
கொல்லைப்புறத்தில் தட்டாரப்பூச்சியின்
வாலைப் பிடித்துப் பறந்திருந்தவளை
இடைமறித்த தருணத்தை
மூடிய பாட்டிலில் இறந்துகிடந்த
பொன்வண்டுகள் அறிந்திருக்கக்கூடும்.

பின்பு ஒருநாள் அவள்
பறவைகளின் கூடுகளைக் கலைத்து
சேகரித்த முட்டைகளை
உள்ளங்கையில் அடைகாத்தாள்
நேசம் சொறிந்த மரங்களின்
நிறமிகளைச் சுரண்டியவள்
பூக்களுக்குப் பதிலாக
குழந்தைகளின் தலைகளைக் கொய்து தன்
பூசைகளில் வைத்தாள்

நெடுந்தூரம் கடந்து எங்கிருந்தோ
வீடு திரும்பியவளின் அறையில்
வழி தவறிய வண்ணத்திகள்
கண்ணாடி கோளங்களில்
பாடம் செய்யப்பட்டிருந்தன.

சூரியத் தாரகை

பிழிந்த கருந்திராட்சை
சாற்றிலூறியவள்
வெடித்த சூரியத் தாரகையின் கருந்துளையென
கண்களை இழுக்கிறாள்

கொடிய நாகத்தை
மார்பிலிட்டு உயிர்நீத்த
இறுதி அழகின்
வடிவமவள் மேனியெங்கும்
நிறமிகளின் குவியம்

முதல் மனிதனின்
மரபணுக் குளத்தில்
மூழ்கி எழுந்தவளின் தேகத்தில் பகுத்தறிவின் பாரம்பரிய நிறம்
விறகில் கனலும் தீயின் நிறத்தவள்
தனது அத்தியை ஒத்த இதழ் பிரித்துக் கூறிச் செல்கிறாள்
தேவதைகளை வெள்ளையாகச் சித்தரித்தவன் ஆதிக்கவாதி

ஃப்ராய்டின் வெற்றுப் பக்கங்கள்

வானூர்தியிலிருந்து வந்திறங்கிய சிறுவர்களின்
பூனைக் கண்கள் அச்சுறுத்துகின்றன
பாழடைந்த கோப்பிக் கடையின்
பளிங்குச் சுவரோரம் ஒளிந்து கொள்கிறாள்.
அங்கே உதிர்ந்து கிடக்கும் பூக்களைப் பார்த்தவள்
கருப்பையில் துடிக்கும் சிசுவைப் பரிசோதித்துக் கொள்வதை
மர நாற்காலியில் அமர்ந்திருந்த சீன வயோதிகன்
கவனித்துக்கொண்டே இருக்கிறான்

பூனைக் கண் சிறுவர்களையும்
சீன வயோதிகனையும்
பாழடைந்த கடைகளையும்,
உதிர்ந்து கிடக்கும் பூக்களையும்
கருப்பையில் துடித்த சிசுவையும்
கனவொன்றில்
இருண்ட வீதிகளில்
நிர்வாணமாய் அலைவதையும்
தொடர்புபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை

அது போலவே
மற்றுமோர் இரவில்
வினோதமான முறையில்
இரு ஓநாய்கள் புணர்ந்துகொண்டிருந்தபோது
காற்றில் விரிந்தன
ஃப்ராய்டின் வெற்றுப் பக்கங்கள்

அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *