ஜா, தீபா

நீலம் பூக்கும் திருமடம் – ஜா.தீபா

இலக்கியம்

சுப்பிரமணி இரமேஷ்

கதையைப் புனைவதில் தேர்ந்தவர்களாகப் பெண்களே தொடக்க காலத்தில் இருந்திருக்கிறார்கள். கதைசொல்லும் மரபு, அச்சு ஊடகத்தின் தொடர்ச்சியாகச் சிறுகதையெனும் நவீன வடிவத்தைக் கைப்பற்றும்போது பெண்களின் இடம் தளர்ச்சியடைந்திருக்கிறது. நவீன இலக்கியத்தில் கவிதையில்தான் பெண்களின் பங்களிப்புக் குறிப்பிடும்படியாக இருக்கிறது. கதைகளால் நிரம்பியவர்கள் கவிதையை வரித்துக்கொண்டது எப்படி நேர்ந்ததெனத் தெரியவில்லை. புனைகதைகளில் சிரத்தையானப் பங்களிப்பைச் செய்தவர்களை எண்ணிவிடலாம். இரண்டாயிரத்திற்குப் பிறகுதான் கவிதையெழுதியப் பெண்கள் பலர் கதையெழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நம்பிக்கை தரும் பல படைப்பாளிகள் இக்கால கட்டத்தில் உருவாகியிருக்கிறார்கள். அதில் ஒருவர் ஜா.தீபா. ‘நீலம் பூக்கும் திருமடம்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. பல எழுத்தாளர்களின் முதல் சிறுகதைத் தொகுப்புகள் இன்றும் அவர்களின் அடையாளங்களாக இருக்கின்றன; தொடர்ந்து அப்படைப்புகள் மீள்பதிப்புச் செய்யும் தகுதியையும் பெற்றிருக்கின்றன. படைப்புக்குத் தகுந்த காலத்தை வழங்காமல் உணர்ச்சிவேகத்தில் முதல் படைப்பை வெளியிட்டுவிட்டு, புகழ்பெற்றபின் அதனை மறைத்த படைப்பாளர்களும் தமிழில் உண்டு. ஜா.தீபா முதல் பட்டியலில் இடம்பெற வேண்டியவர். மொழியைக் கூர்மையாகப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு கதைக்கும் உருவாக நேரம் அளித்திருக்கிறார். திரும்பத் திரும்ப வாசித்துக் கதைகளைச் செம்மைப்படுத்தியிருக்கிறார். இந்த உழைப்பு ஒவ்வொரு கதையிலும் தெரிகிறது. யாரிடமும் முன்னுரை வாங்கவில்லை. தொகுப்பை வாசிப்பவர்களின் புரிதலுக்கேற்ப கதைகளை உள்வாங்கிக்கொள்ள பலநேரங்களில் முன்னுரை தடையாக அமைந்துவிடுவதுண்டு. அந்தப் பிரச்சனையும் இத்தொகுப்புக்கு இல்லை.

neelam-pookkum-thirumadam

வாழ்க்கையின்மீது நம்பிக்கைகொண்ட பெண்கள், இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளையும் இணைக்கும் கண்ணியாக இருக்கிறார்கள். புராண காலம் முதல் தற்காலம் வரையுள்ள வெவ்வேறு மனநிலைகளுடன் வாழும் பெண்களின் அகத்தைத்தான் புனைவுகளாக எழுதியிருக்கிறார். தீபாவின் கதைகள் பெண்ணியம் பேசவில்லை; அவர்கள் காலந்தோறும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பேசுகிறது. பெண்களை இச்சமூகம் எப்படி அணுகியிருக்கிறது என்ற உரையாடலைக் கதைகளினூடாக நிகழ்த்துகிறார். மகாபாரதம் நிறைய எழுதுவதற்கு இடமளிக்கும் நெகிழ்வுத் தன்மையுள்ள பிரதி. தங்களின் சுய கௌரவத்தை நிலைநாட்டுவதற்காக ஆண்கள் பெண்களைப் பகடைகளாக உருட்டினார்கள். அதில் காந்தாரி சகுனியின் பகடை. பார்வையற்ற திருதராஷ்டிரனுக்குத் தன் தங்கையைக் கொடுக்க அவன் கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. துரியோதனின் கௌரவத்தை நிலைநிறுத்துவதற்காக காலத்தின் கரைபட்ட பழிகளைத் தேடிக்கொள்கிறாள் காந்தாரி. காந்தாரி தன்னுடைய தேசத்தில் சுபலாவாக இருந்தபோது எவ்வளவு மென்மையுடையவளாக இருந்தாள்; சக உயிர்கள்மீது எவ்வளவு கருணை கொண்டிருந்தாள். அவளது இருப்பு திருமணத்திற்குப் பிறகு என்னவானது? இப்படி ஒவ்வொரு பெண்ணுக்குமுள்ள கதைகள்தாம் இத்தொகுப்பு.

தீபாவின் கதைகள் நியாயம் கேட்கவில்லை. பெண்களுக்காக இரக்கத்தைக் கோரவில்லை. இச்சமூகம் காலந்தோறும் பெண்களை இப்படித்தான் நடத்தி வந்திருக்கிறது என்பதை அதிர்வுகளைக் கூட்டாத மொழியில் சொல்லியிருக்கிறார். அண்ணனை நம்பிய காந்தாரி, மகன்களை நம்பிய நாகம்மை, ஆசிரியரை நம்பிய சிவகாமி, கணவனை நம்பிய நீலா எனப் பலரும் அவர்களது நம்பியாலேயே வீழ்த்தப்படுகிறார்கள். அந்த உறவுகள்மீது இவர்கள்கொண்ட கருணையும் நம்பிக்கையும்தான் அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணங்களாக இருக்கின்றன. அதிர்ந்து பேசாத இப்பெண்கள், தாங்கள் வீழ்த்தப்பட்ட பின்னும் உறவுகள்மீது கொண்ட இறுக்கத்தை விடவில்லை. அதனால்தான் நீலா சுவரோவியனிடமும் தன்னுடைய அன்பைப் பரிமாறிக்கொள்ள விழைகிறாள். நாகம்மையின் மனம் திருடனுக்காகவும் நெகிழ்கிறது. இருபது வருட வலியைத் தன் ஆசிரியரிடம் இறக்கிவைக்கும்போதும் சிவகாமி முதிர்ச்சியுடன் நடந்துகொள்கிறாள். இப்பெண்களை இச்சமூகம் நடத்திய விதத்தைத்தான் தீபா விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார். ஒவ்வொரு கதையின் முடிவிலும் இவர் வாசகனுக்குப் பல திறப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார். உறவுகளின் சிதைந்த மனநிலையைப் பகடி செய்கிறார். புதுமைப்பித்தனுக்கு நெருக்கமாக வெளிப்படும் பகடி. நெல்லைமொழி சில கதைகளில் வட்டார அடையாளம் இல்லாமல் வெளிப்பட்டிருக்கிறது. இவரது புனைவுகள் அடுத்தடுத்து நில அடையாளத்தையும் நோக்கி நகரும்போது இன்னும் கூடுதல் கவனம் பெறும்.

தீபாவின் எழுத்தில் வெளிப்படும் நிதானம் கதைகளுக்கு ஓர் அழகைக் கொடுக்கிறது. இன்று இரவுக்குள் அச்சாகவேண்டும் என்ற அவசரத்தை இவர் புனைவின்மீது ஏற்றவில்லை. இழப்புக்குப் பிறகும் வாழ்க்கையைப் நேசிப்பதற்கு இவரது பெண்கள் பழகியிருக்கிறார்கள். மரம், செடிகொடிகளையும் சக உயிர்களாகக் கருதி வாழும் இவரது கதாபாத்திரங்கள் இறுதியில் பருகுவது துயரத்தின் சாறைதான். நவீன வாழ்க்கைமுறை மனிதர்களிடம் மிச்சமிருக்கும் ஈரத்தத்தைதான் முதலில் கௌவிக்கொள்கிறது. நீலா மண்ணுக்காகத்தான் கொலை செய்யப்படுகிறாள். மனிதர்களின் ஆசை முதலில் பெண்களைத்தான் பலி கேட்கிறது. புகுந்தவீடு செல்லும் பெண்களுக்கு ஆந்தையைக் குறியீடாக்கியதில்கூட தீபாவுக்கு உறவுகள்மீது வெறுப்பு இல்லை; பரிதாபமே மிஞ்சியிருக்கிறது. ‘குருபீடம்’ கதையில் நவீனத் தன்மை முக்கியமானதாகப் படுகிறது. ஆசிரியருக்கென்று ஒரு பீடம் உண்டு. அது தங்கத்தாலானது. அந்த பிம்பம் செதில் செதிலாக உடைந்து நொறுங்கும்போதுகூட வெற்றி பெற்றதாக சிவகாமி கருதவில்லை. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற துயரத்தின் சாயைதான் அவளது பேச்சில் வெளிப்படுகிறது. தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ ஆசிரியர்களுக்கு மறைமுகமாகப் பெருமையைக் கூட்டியது. அந்தப் புனிதத் தொழிலின்மீது விழுந்த சிறு கீறலையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்ற கொதிப்பில் அப்படைப்பு வெளியானது. ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ குருவைப் புனிதத்திலிருந்து விடுவிக்க முயற்சித்தது. இங்கு குரு என்பவர் ஆசிரியர் மட்டும் அல்லர். ஜெயகாந்தனின் தத்துவப் பார்வையிலிருந்து இப்பிரதி செயல்படுகிறது. தீபாவின் குருபீடத்தில் வரும் மாறன் வாத்தியார்கள் இன்று வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லா காலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை கல்விப் புலத்தில் நடந்துகொண்டுதான் இருந்திருக்க வேண்டும். அதனைப் பொதுவில் நிறுத்தியிருப்பதுதான் நவீனத்தின் சிறப்பு. புனைவுகளில் வெளிப்படும் கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை மொழியில் பிடித்துக் காட்டியதில் ஜா.தீபா கவனத்தைக் குவிக்கிறார். யாரிடமும் இருக்கும் கதைகள்தாம்; சொன்ன விதத்தினால் தனித்துத் தெரிகிறார்.சுப்பிரமணி இரமேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *