ஓவியம்: சாகர்

புரட்சிப்பெண்

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ் பிற

எம்.வி.வெங்கட்ராம்

எளிமையே  வடிவெடுத்து  வந்ததுபோல் வெண்மையான நூல் சேலையும் ரவிக்கையும் உடுத்திக்கொண்டு பிரகாசமாய் உள்ளே புகுந்த சாவித்திரியைப் பார்த்த சீனிவாச ஐயரின் மனதில் முதலில் இயற்கையான ஓர் அமைதிதான் ஏற்பட்டது; ஆனால்,  மறுவினாடி, தம்முடைய மகள் இவ்வளவு ஏழ்மைக் கோலத்தில் காட்சி அளிக்கிறாள் என்ற எண்ணம் அவருக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டாக்கத்தான் செய்தது. 

“வா, அம்மா உட்காரு”

“சொந்த வீட்டிலேயே என்னை விருந்தாளி ஆக்கி விட்டீர்களே!”  என்று சிரித்துக்கொண்டே தகப்பனாருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் சாவித்திரி. ” யாரோ பெரிய ஆபிஸரைப்  பேட்டி காண்பதுபோல் சீட்டு எழுதி அனுப்பி விட்டீர்களே  அப்பா?”

“பின் என்ன காலையில் வந்தவள்,  கொஞ்ச நேரம் தனித்து பேசுவோம் என்று நானும் பார்க்கிறேன்,  உனக்கு ஓயாத வேலையாக இருக்கிறது. அதனால்தான் பேட்டி கேட்டு சீட்டு எழுதினேன்.”

“எப்போதும் உங்களோடு இருக்கப் போகிறவன் தானே நான். பார்க்க வந்து ஊராரை முதலில் அனுப்பிவிட்டு பிறகு உங்களோடு பேசலாம் என்று நினைத்தேன்.  நான் என்ன சாதாரண பெண்ணாகவா திரும்பி இருக்கிறேன்?  சாவித்திரி எம் ஏ மாகாணத்திலேயே முதலாவதாக தேறி இருக்கிறேன் .  பத்திரிகைகளில் எல்லாம் பெயர் வந்திருக்கிற பெண்ணைப் பார்க்க கூட்டம் கூடாமல் இருக்குமா ?”

“ஆனாலும் நீ பத்திரிகைகளுக்குப் புகைப்படம் தருவதற்கு மறுத்திருக்க வேண்டாம்.”

“எனக்கு எதற்கப்பா விளம்பரம்?  நாளைக்கு – அதைப் பார்த்துவிட்டு சினிமாவில் நடிப்பதற்கு யாராவது அழைத்தாலும் அழைக்கலாம்.”

“நாளை நீ ஒரு கலெக்டரின் மனைவியாகப் போகிறவள்,”

“விடிந்தால் தானே நாளைக்கு?…பேட்டிச்  சீட்டில் சொந்த விஷயம் பற்றிப் பேச’  என்று குறிப்பிட்டிருந்தீர்களே,  என்ன அப்பா அது?”

“எனக்கு எதற்கப்பா விளம்பரம்?  நாளைக்கு – அதைப் பார்த்துவிட்டு சினிமாவில் நடிப்பதற்கு யாராவது அழைத்தாலும் அழைக்கலாம்.”

“சொல்லத்தானே கூப்பிட்டேன்?  ஆமாம்,  நளினி ஏன் உன்னோடு வரவில்லை?”

“இரண்டு நாளில் வருவாள்.  சென்னையை விட்டு வருவதற்கு அவளுக்கு மனமே இல்லை.  அவளும்தான் பி.ஏ.யில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறி இருக்கிறாள். முரளி அவளை விட்டால்தானே?  நாளைக்கு ஒரு விருந்து; நண்பர்களுக்கு அறிமுகம்.  பத்திரிகைகளில் அவன் புகைப்படம் அமர்க்களப்படுகிறதே,  அதற்காக நீங்கள் சந்தோஷப்பட வேண்டாமா,  அப்பா?”

“மாகாணத்திலேயே எம் ஏ பி ஏ இல் முதன்மையாகத் தேறிய சகோதரிகள் என்று உங்கள் இருவருடைய படங்களும் சேர்ந்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”

“தஞ்சாவூர் பிரபல வக்கீல் சீனிவாசய்யரின் புதல்விகள் என்றும் குறிப்பிட்டு வந்தால் அழகாய்த்தான் இருக்கும். ஆனால் எனக்கு என்னவோ என் படத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை”

“அது சரி! நளினி தான் உன்னோடு வரவில்லை என்றால்,  முரளியுமா உன்னோடு வரவில்லை?”

“சொன்னேனே,  அப்பா!  அவருக்கு நளினியை விளம்பரப்படுத்தவே  நேரம் போதவில்லை . கலெக்டர் உத்தியோகத்தையும் துறந்து அவர் நளினியின் காரியதரிசி ஆகிவிடுவார்போல் இருக்கிறது.  ஊருக்குத்  திரும்பும்போது அவரிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று அவர் வீட்டுக்குப் போனேன். அவரும் நளினியும் சினிமாவுக்கு போய் விட்டதாகத் தெரிந்தது. பேசாமல் திரும்பி விட்டேன்.”

ஓவியம்: சாகர்
ஓவியம்: சாகர்

“சரிதான்” என்று மனத்தாங்கலுடன் சொன்ன ஐயர்,  வழுக்கை தலையைத் தேய்த்துக்கொண்டார்.  சாவித்திரி பேசுவதில் உள்ளர்த்தம் ஏதாவது இருக்குமோ என்று அவள்  முகத்தைப் பார்த்தார்.   வெள்ளை பளிங்கு சிலை போல் அமர்ந்திருந்த அவள் முகத்தில் அழகையும் அமைதியையும் தவிர வேறு ஒன்றையும் அவரால் காண முடியவில்லை. 

“முரளி உன்னோடு வராதது, தவறு” என்றார் அவர், உறுதியான குரலில்.   அவளிடம் பேச விரும்பிய விஷயத்தை சொல்வதற்கு இது சரியான தருணம் தானா என்று அவருக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது. வேலையை அழைக்கும் மணியின்மீது கை வைத்தார்.

“என்ன வேண்டுமப்பா?”

“ஏதாவது சாப்பிட்டபடி பேசுவோமே, உனக்கு என்ன வேண்டும் காபியா ஓவலா? “

” நீங்கள் சாப்பிடுங்கள் அப்பா.   நான் காப்பி, ஓவல் ஒன்றும் சாப்பிடுவதில்லை.”

“குளிர்ச்சியாக ஏதாவது… “

“அதுவும் நான் சாப்பிடுவதில்லை!”

“இது என்ன ஆச்சரியம்? சென்னையிலிருந்து படித்த பெண் காப்பி கூட சாப்பிட மாட்டாயா?  உள்ளே வந்து கைகட்டி நின்ற வேலைக்காரனை வெளியே போகும்படி சைகை காட்டிவிட்டு , வக்கீல் மறுபடியும் சொன்னார் .” நூல் சேலை,  நூல் ரவிக்கை, சிவப்பு தோடு, பவுடர் பூசி இல்லாத முகம் பானங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை.”

 “ஆச்சரியமாக இருக்கிறதே?”

“ஆடம்பரப் பொருள்கள் எல்லாம் உங்களுக்குத் தேவை பொருள்கள் ஆகிவிட்டன.  அதனால் இந்த சாதாரண விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு ஆச்சரியம் தருகின்றன. தேவைக்கு அதிகமாக நான் எதையும் உபயோகிப்பது இல்லை.  தேவை இல்லாததை நான் தொடுவதில்லை. நான் ஒரு விதவை தானே?”

‘விதவை’ என்ற சொல்லைக் கேட்டதும் தம் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது போல் பதறி எழுந்தார் வக்கீல்.

“அந்த வார்த்தையை  இனி நீ சொல்லக் கூடாது அம்மா”  என்றார் அவர், தழுதழுக்கும் குரலில். 

” நான் சொல்லவில்லை”  என்றாள் சாவித்திரி. 

‘விதவை’ என்ற சொல்லைக் கேட்டதும் தம் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது போல் பதறி எழுந்தார் வக்கீல்.

திடீரென்று அந்தச் சூழ்நிலையை இருண்டுவிட்டது போன்ற பிரமை சீனிவாச ஐயருக்கு ஏற்பட்டது.  அவளை அழைத்துப் பேச முயன்றது தவறு என்று அவருக்குத் தோன்றியது.  தம்முடைய விவாதத்திறன்  முழுவதும் எதிரிக்கு சாதகமாகி, தம்,  கட்சி தோல்வியுறுவது போன்ற ஒரு சோர்வில் வசப்பட்டார் அவர்.

o

ஓவியம்: சாகர்
ஓவியம்: சாகர்

தஞ்சாவூர் ஜில்லாவில் சீனிவாச ஐயர் மிகவும் பிரபலமான கிரிமினல் வக்கீல்.  நாற்பது வருடங்களுக்கு மேலாக அவர் அத்துறையில் இணையற்ற விளங்கினார்.  அவரிடம் ஒப்படைக்கப் பெறும் எந்த வழக்கும் கட்டாயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கட்சிக்காரர்களுக்கு இருந்தது.  அவருடைய உதவியால் நிரபராதிகள் மட்டும் தப்பினார்கள் என்று கூறமுடியாது.  குற்றமிழைத்தவர்கள் தான் அவரைப் பெரிதும் நம்பினார்கள்.  தாம் மேற்கொண்ட வழக்கை கெலிப்பதற்காக ஐயர் சட்டத்தை மட்டும் நம்பவில்லை. நீதிபதியைக் கவிழ்ப்பது முதல் எதிர் சாட்சிகளைக் கலைப்பது வரை அவர் சகல வழிகளையும் கையாண்டார்.  அதனால் அவருடைய வருமானம் ஏறிக்கொண்டிருந்தது. 

குற்றத்தோடும் குற்றம் செய்தவர்களோடும் பழகுவதாலோ என்னவோ அவருக்கு எந்தக் குற்றமும் பெரிதாகப் படுவதில்லை.  தொழிலில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் அவர் நெறியற்ற மனிதராகவே இருந்தார். அவருடைய கணக்குப்படி அவர் வாழ்க்கையை வெற்றி என்று சொல்லலாம்;  ஏனென்றால் அவருக்குக் கிட்டாத இன்பம் எதுவும் இல்லை.  அவ்வளவு இன்பத்திற்கு ஈடு கொடுத்த பிறகும் குறையாத வங்கிக்கணக்கு இருந்தது. 

அவருடைய குடும்ப வாழ்க்கையும் அமைதியானதுதான்.  குடித்துவிட்டு வந்தாலும்,  கூத்தடித்து விட்டு வந்தாலும் தட்டிப் பேசாத மனைவி வீட்டில் இருந்தாள்.  அமைதிக்குக் குறைவு ஏது? இரண்டு புத்திரிகளைப் பெற்று கொடுத்துவிட்டு அவர் மனைவி காலமானார்.  

அய்யரின் நெஞ்சத்தில் பலவீனமான அம்சம்,  அவர்கள் தம்முடைய பெண்களிடம் இருந்த அளவற்ற பாசம் தான் எனலாம்.  சாவித்திரி,  நளினி  இருவரையும்  இரு கண்களாகவே அவர் கருதினார். பிள்ளை இல்லாத குறை அவரை ஒருபோதும் உறுத்தியதேயில்லை. இரண்டு சகோதரிகளுக்கும் இடையே நான்கு வயது வித்தியாசம்.  இருவரும் நல்ல அழகிகள் . 

மூத்த பெண் சாவித்திரி பி.ஏ., தேறியதும் அவளுக்கு நல்ல வரனாகத் தேர்ந்தெடுத்து, அவளுடைய முழு சம்மதமும் பெற்று தடபுடலாக மணம் செய்து வைத்தார்.   ஆனால் இரண்டே ஆண்டுகளில்,  அவள் கைம்பெண்ணாக வீடு திரும்பினாள்.  அவரின் வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிகழ்ச்சி இதுதான்; மனைவியின் மரணம் கூட அவரை அசைக்கவில்லை.  ஆனால்  புதல்வியின் துர்பாக்கியம் அவரை கவிழ்த்து விட்டது.

அவருடைய குடும்ப வாழ்க்கையும் அமைதியானதுதான்.  குடித்துவிட்டு வந்தாலும், கூத்தடித்து விட்டு வந்தாலும் தட்டிப் பேசாத மனைவி வீட்டில் இருந்தாள்.

சாவித்திரி வீட்டுக்கு வந்ததும் அவர் வக்கீல் தொழிலைத் துறந்தார். எப்படியாவது அவள் வாழ்க்கையில் மறுபடியும் பசுமை தழைக்க வேண்டும் எனும் ஏக்கம் அவரைப் பிடித்தது. அதற்கு அவர் ஒரு வழியும் கண்டுபிடித்தார். சாவித்திரிக்கு  மறுமணம் செய்து வைப்பது என முடிவு செய்தார். அவள் மேல் படிப்புக்காக சென்னைக்கு அனுப்பி விட்டு நல்ல வரன் தேடுவதில் முனைந்தார்.  அவருடைய அதிர்ஷ்டம் தானோ என்னவோ ஐஏஎஸ் தேறிக்  கலெக்டராக இருந்த முரளி தான் சாவித்திரி எம்.ஏ., தேறும் வரை இரண்டு ஆண்டுகள் காத்திருந்து அவளை மணக்க இசைந்தான்.  

ஓவியம்: சாகர்
ஓவியம்: சாகர்

ஐயரின் மனம் மறுபடியும் அமைதி உற்றது.  முரளிதரன் என்ற அற்புதமான கணவனை கை பிடிக்கத்தான்  சாவித்திரி முதல் கணவனை இழந்தால் போலும்’ என்று கூட அவர் சில சமயம் நினைப்பது உண்டு.

0

அவர் எதிர்பார்த்தது போலவே சாவித்திரி எம் ஏ தேறிவிட்டாள்.  அடுத்தபடியாக அவளுக்கும் முரளிக்கும் மணமுடித்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசத்தான் அவர் அவளை அழைக்க முற்பட்டார். ஆனால் அவளுடைய நடை,  உடை,  பேச்சு எல்லாம் அவருக்கு கலவரம் உண்டாக்கின.

 “முரளி உன்னைப் பார்க்க வருவதில்லையா?”  என்றார் கவலையுடன். 

“வராமல் என்ன, அப்பா?  ஞாயிற்றுக் கிழமை தவறாமல் எங்களைக் காண வருவார். பரீட்சை முடிவு தெரிந்ததும்,  எங்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். நான்தான் கலந்து கொள்ளவில்லை. நளினியை மட்டும் அனுப்பினேன்.”

 “நீ கலந்து கொள்ள வேண்டியது அவசியமில்லையா, சாவித்திரி ?”

“நளினி தானே உலகைப் பார்க்க வேண்டியவள்?”

“ஆமாம் உனக்குத் தொன்னூறு  வயது ஆகிறது.  உலகம் எல்லாம் பார்த்தாகிவிட்டது: இல்லையா?”

“எல்லா உலகங்களையும் நான் எனக்குள் காண வேண்டியவள் : நளினி வெளியில் காணவேண்டியவள்.”

“நீ ஒளிவு மறைவாகப் பேசுவது எனக்கு அர்த்தமாகவில்லை.  நான் உன்னோடு பேச விரும்பிய சொந்த விஷயம் இதுதான்.  நான் எதிர்பார்த்தது போல் நீ எம்.ஏ, தேறி விட்டாய்.  உனக்காக முரளி இரண்டு வருடங்களாகக் காத்திருக்கிறான். சீக்கிரத்தில் இருவருக்கும் கல்யாணம் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் உன்னைக் கூப்பிட்டேன்.” 

“ஆமாம் உனக்குத் தொன்னூறு  வயது ஆகிறது.  உலகம் எல்லாம் பார்த்தாகிவிட்டது: இல்லையா?”

சாவித்திரி சிறிது நேரம் பேசவில்லை. பாதத்தில் தொடங்கி உச்சந்தலையை முடிவது போன்ற ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் சொன்னாள்: “நளினியும் முரளியும்தான் சரியான இணை”.

“நீ பேசியதிலிருந்தே  நான் ஊகம் செய்தேன். முரளியின் சூழ்ச்சியா  இது ?” என்றார் வக்கீல் ஆத்திரமாக.

“நீங்கள் நினைப்பது தவறு. அவர்கள் இருவரும் சந்தோஷமாக பேசுவதற்கும் சுற்றுவதற்கும்  அனுமதி அளித்தவள் நான்தான்.  இருவர் பெயரிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

“அப்படியானால்…. சாவித்திரி,  நீ சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் நான் முரளியைத் தேர்ந்தெடுத்தேன். நீ வேறுவிதமாக முடிவு செய்வதை நான் எதிர்பார்க்கவில்லை.  ஒருவேளை நீ யாரையாவது…”

“என் மனத்தில் ஒருவருக்கு இடம் கொடுத்துவிட்டேன்.”

“யார் அது?” என்றார்  தந்தை ஆவலோடு.

தன் கையோடு எடுத்து வந்த அருகில் வைத்திருந்த புத்தகத்தைப் பிரித்து, அவரிடம் ஒரு சிறு புகைப்படத்தை நீட்டினாள், அவள்.  படத்தைப் பார்த்தவர், “இது உன் முதல் புருஷன் ராகவனின் படம் அல்லவா?” என்றார்,  சோர்ந்துபோய்.

“என் முதல் புருஷர் – கடைசி புருஷர்  எல்லாம் இவர்தான் அப்பா எனக்கு.”

 சீனிவாச ஐயர் திகைத்துப் போனார். அவளுடைய மனப்போக்கு அவருக்குப் புரிந்தது. ஆனால் அது காலத்திற்கு ஏற்காத மனப்போக்கு மட்டுமல்ல; அவளுடைய வாழ்க்கையை வீணாக்கும் மனப்போக்கு என்றும்  அவர் கருதினார்.

“நீ வாழவேண்டும் என்பதற்காகத் தானே அம்மா இந்த ஏற்பாடு செய்தேன்? முரளி பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன்; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். நல்ல உத்தி யோகத்திலும் இருக்கிறான்.”

“அது நளினியின் அதிர்ஷ்டம்.”

“என் முதல் புருஷர் – கடைசி புருஷர்  எல்லாம் இவர்தான் அப்பா எனக்கு.”

“சாவித்திரி, ஏதோ ஒரு மயக்கத்தில் நீ பேசுகிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது. ராகவன் நல்ல பையன், என்னிடம் மிகவும் அன்பாக இருந்தான் என்பதெல்லாம் உண்மை. ஆனால் இரண்டு வருஷங்கள் கூட அவனிடம் நீ  சரியாக வாழவில்லை.”

“அந்த இரண்டு வருஷத்தில் ஒரு வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து முடிந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.  அவர் என்னிடம் விடை பெற்றுக்கொண்ட நாள், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.  ஆபீஸ் வேலையாக கல்கத்தாவுக்குப் புறப்பட்டவர்,  ‘ஒரு வாரத்தில் வந்து விடுவேன், ஜாக்கிரதையாக இரு’  என்று சொல்லிக்கொண்டார். விமானம் கவிழ்ந்த செய்தியைத் தந்தியில்  படித்ததும்தான் நான் பிரக்ஞையற்று விழுந்துவிட்டேன். வயிற்றில் இருந்த கர்ப்பமும் சிதைந்தது. அவர் ஞாபகமாக அந்தக் குழந்தையாவது இருந்திருக்கலாம். அதற்கும் நான் கொடுத்து வைக்கவில்லை.  அப்போதே நானும் போயிருக்கவேண்டும். அப்பா, உங்களுக்கு தெய்வ நம்பிக்கையோ, விதியில் நம்பிக்கை இல்லை. ஆனால், எனக்கு நம்பிக்கை உண்டு. நாம் செய்த வினையின் விளைவை நாம் ஏற்கத்தான் வேண்டும்.”

 “நடந்தது நடந்து விட்டது. இதற்காக வாழ்க்கை முழுவதையும்  வீணாக்கிக் கொள்ள வேண்டுமா?”

“நடந்ததற்காக, நான் கண்ணீர் விட்டுக்  கதறிக்கொண்டு இருக்கிறேனா? விதியை நான் சமாதானமாக ஏற்றுக்கொண்டு விட்டேன். அவர் என்னுடன் இருப்பது எனக்கு ஒரு பிரமை. சாப்பிடும் போதும் தூங்கும் போதும் எந்நேரமும் அவர் என்னோடு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அவருடைய ஸ்தானத்தில் இன்னொருவர் எப்படி இருக்க முடியும்?”

“நீ இந்த  காலத்துப் பேச்சு பேசவில்லை.”

“இல்லை. எதிர்காலத்தில் பேச்சுதான் பேசுகிறேன். நான் பேசுவது உங்களுக்குப் புரட்சிகரமாக இருக்கிறது: இல்லையா, அப்பா?”

” புரட்சியா? பத்தாம்பசலி ஆன பேச்சைப்  புரட்சி என்கிறாயே அம்மா?  காலத்திற்கு ஏற்காத புராணத்தைச் சொல்லி புரட்சி என்கிறாயே?  எவ்வளவோ  விதவைகளுக்கு என் தலைமையில் கலியாணம் நடந்து இருக்கிறது. சமூகத்தில் விதவை ஒரு பெருநோயாக இருப்பதை அறிந்து, அறிவாளிகள் பெண்ணுக்கு மறுமணம் நியாயம் என்று சொன்னார்கள்.  ஆனால்…”

“நான் அதை மறுக்கவில்லை. இருபது  வயதாகியும் கல்யாணம் செய்யாமல் காத்து கிடக்கும் கன்னிப்பெண்கள் அதிகமாக உள்ள சமூகத்தில்,  விதவா விவாகத்தை ஆதரிப்பது சரியாகுமா?   அதனால்தான் நான் விதவை புரட்சி என்றேன்.”

“இல்லை. எதிர்காலத்தில் பேச்சுதான் பேசுகிறேன். நான் பேசுவது உங்களுக்குப் புரட்சிகரமாக இருக்கிறது: இல்லையா, அப்பா?”

“ஆனால், வாழ்க்கையில் இன்பத்தை மறுப்பது-அதுவும் பெண்களுக்கு எளிய காரியமா, அம்மா?”

‘நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.  உடலை வெல்லுவது அவ்வளவு இலகுவான வேலை அல்ல தான்.  ஆனால், கணவரின் உருவத்தை சாதனமாக என்னைப் படைத்த கடவுளுக்கு,  காணிக்கை சமர்ப்பிக்க கைம்மையை  ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறேன்.”

சீனிவாச ஐயர் தம் கட்சி தோற்றதை உணர்ந்தார்; ஆயினும் அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்தது.

“முரளிக்கும் நளினிக்கும் திருமணம் செய்ய நாள் பாருங்கள்” என்றாள் சாவித்திரி.

O

சுதேசமித்திரன், தீபாவளி மலர்,  1958
கதை தந்தவர் – ராணிதிலக்
நன்றி: சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம், கும்பகோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *