இயல்பு

புவிக்கோளின் சூழலியச் சிக்கல்கள்

இயல்பு

ஜான் பெல்லாமி பாஸ்டர், மேக்டாப்
தமிழில்: அருண் நெடுஞ்செழியன்

“இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது மூன்றாவது நிலைகளில் நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுட்ட விளைவுகளைத் தந்து, பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்துவிடுகின்றன.
எங்கல்ஸ்

சுற்றுச்சூழல் சீரழிவென்பது தற்போதைய உலகிற்கு புதிதன்று. மாறாக அது வரலாறு எங்கிலும் பழமையான நாகரீகச் சமூகங்களில் எதிர்மறையான பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மெசபட்டோமிய மற்றும் மாயன் நாகரித்தின் பெரும் சிதைவு சூழலிய தாக்கத்தால் தான் நிகழ்ந்தது என நம்பப்படுகிறது. காடழிப்பு, மண் அரிப்பு மற்றும் பாசன நிலம் உவர் நிலமாக மாறுதல் போன்ற பிரச்சனைகள் பழங்காலத்திலிருந்தே நிலவி வந்திருப்பதை அறிகிறோம். பழங்காலக் கிரேக்கத்தில் சூழல் அழிவை பற்றிப் கிரேக்க அறிஞர் பிளாட்டோ (427-347 கி .மு ) தனது “கிரிதியாஸ்” (Critias) நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“இப்பொழுது உள்ள நிலம் முன்பு இருந்த நிலத்தின் எச்சம்தான் என்பதற்கு இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும்? நோயால் அரிக்கப்பட்டு எலும்புக்கூடாய் ஆன உடலைப் போன்ற ஒரு பகுதி (சிறிய தீவுகளுடன்) உங்களிடம் எஞ்சியுள்ளது. வளமான, மிருதுவான மண் வளங்கள் எல்லாம் போய்விட்டன. எஞ்சியிருப்பது எழும்பும் தோலுமான வெற்று நிலம்தான். தற்பொழுது இருக்கும் மலைகள் தேனீ உற்பத்திக்கு மட்டுமே துணை செய்கிறது. மாறாக அவை ஒரு காலத்தில் பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளைக் கட்டுவதற்கான மரங்களை அளித்தன. அக்கட்டிடங்களின் மேற்கூரை உத்திரங்கள் இன்னும் நிலைத்து நிற்கின்றன. கால்நடைகளுக்கு அளவற்ற தீவனங்களை வழங்கிய ஏராளமான நெடிய மரங்களும் அங்கு இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலங்களில் மண்ணானது வளமடைந்தது. மழை நீர் ஏராளமான அளவில் உறிஞ்சப்பட்டு, நீரைத் தக்க வைத்துக்கொள்ளும் களி மண் அடுக்குகளில் சேமிக்கப்பட்டது. உயர்ந்த, மேடான பகுதிகளில் உரிஞ்சப்பட்ட நீர் பள்ளத்தாக்குகளில் கீழ் நோக்கி ஓடி எண்ணற்ற ஆறுகளாகவும், நீரூற்றுக்களாகவும் தோற்றம் பெற்றது. முந்தைய நீரூற்றுக்களில் இன்னும் நீடித்திருக்கும் புனித ஆலயங்கள் இன்றைய நமது நாட்டின் நிலைமைக்கு உண்மையான நிரூபணங்களாக உள்ளன.
எவ்வாறாயினும், இந்த அம்சத்திலிருந்து நவீன உலகம் எவ்வாறு மாறுபடுகிறது? உலகின் ஆகப் பெரும் பகுதியில், ஆகப் பெரும் அளவிலான மக்கள் வாழ்கிறோம். இப்புவியைப் பெரும் அளவிலும், மிக விரைவாகவும் அழிப்பதற்கு நம்மிடையே இன்று தொழில் நுட்பம் உள்ளது ; அதோடு வரம்புகளற்ற ஒரு பொருளாதார கட்டமைப்பும் உள்ளது .தற்போதைய சூழல் சீர்கேடானது பழஞ்சமூகங்களில் நிகழ்ந்தது போன்று ஒரு குறிப்பிட பகுதியை மட்டும் சிதைக்காமல், ஒட்டுமொத்த புவிக்கோளில் வாழும் பெரும் பாலான உயிரினங்களின் இருப்பை (நம்மையும் சேர்த்து) அச்சுறுத்தும் அளவுக்குப் பரந்த அளவில் உள்ளது. ஆகையால் வேகமாக அழிந்துவரும் புவியின் சுற்றுச்சூழல் சிதைவைக் குறித்த திடமான அறிவியல் காரணங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் இன்று சொல்லும் சூழல் சிக்கலைக் குறிப்பிட்ட ஒரு சிக்கல் எனச்சுருக்க முடியாது. அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி. மாறாக அது பல சிக்கல்களை உள்ளடக்கியுள்ளது. சமீபத்தில் புவி அமைப்பு விஞ்ஞானத்தின் முக்கியமான வளர்ச்சிகளில் ஒன்றாக, “புவிக்கோள் எல்லைகள்” எனும் முக்கிய கருத்தியலை முன்னோடி விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதில் அவர்கள் புவி அமைப்பின் 9 முக்கிய எல்லைகளை வரையறை செய்கின்றனர் (அல்லது அவதானிக்கிறார்கள்). அவை:

 1. பருவ நிலை மாற்றம் 2. கடல் அமிலத் தன்மையடைதல் 3. ஓசோன் மெலிவு 4. உயிர் -புவி வேதிப்பொருள் ஒழுக்கு எல்லை (நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சங்கிலி) 5. உலக நன்னீர் பயன்பாடு 6.நிலப் பயன்பாட்டு மாற்றம் 7.பல்லுயிரிய இழப்பு 8.வளிமண்டல தூசுப்படல அதிகரிப்பு 9. வேதியியல் மாசு.
  இவ்வெல்லைகளுக்கு உட்பட்டு நாமிருப்பது மிகவும் அவசியமானது. அதன் மூலம் கடந்த 12000 ஆண்டுகளாக நிலவி வரும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை நம்மால் தக்க வைக்க முடியும். இதில் மூன்று அமைப்பான பருவநிலை மாற்றம், பல்லுயிரியம் மற்றும் நைட்ரஜன் சங்கிலியுடனான மனிதனின் இடையீடு ஆகியவற்றில் பேணிக் காக்கும் எல்லைகள் கடக்கப்பட்டுவிட்டன. புவி அமைப்பில் தீவிர பிளவுகளை இவை குறிக்கின்றன. கடல் அமிலத்தன்மையடைதல், உலக நன்னீர் பயன்பாடு, நிலப் பயன்பாட்டில் மாற்றம் மற்றும் பாஸ்பரஸ் சங்கிலி போன்றவை வரப்போகும் பிளவுகளைக் காட்டுகின்றன. புவிக்கோள் எல்லைகளின் ஒவ்வொரு பிளவும் புவியில் உள்ள உயிர் வாழ்வுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. அதில் பருவநிலை மாற்றமானது மிகப் பெரிய மற்றும் உடனடி அச்சுறுத்தலாக மற்ற எல்லாவற்றையும் பின்தள்ளி மைய இடத்தைப் பிடிக்கிறது. ஏனெனில் அது மற்றவற்றுடன் பின்னிப்பிணைந்து உள்ளது.
  மனிதனால் உருவாக்கப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் பெருக்கமானது உலக பருவ நிலையைச் சீர்குலைய வைக்கிறது. மனித இனம் உடனடியாக மாற்று வழியை நடைமுறைப்படுத்தத் தவறினால் இப்புவியில் உள்ள உயிரனங்கள் (நம்மையும் சேர்த்து) பெரும்பாலும் மிக பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு பத்து வருடமும் முன்பைவிட அதிகவெப்பமயமாகிறது; கடந்த 131 ஆண்டுகளில் 2010ஆம் ஆண்டுதான்அதிக வெப்பம் வாய்த்த ஆண்டென உலக வெப்ப அளவீட்டு கருவிகள் மற்றும் ஆவணங்கள் தெரிவிக் கின்றன. பருவநிலை மாற்றத்தோடு நேரடியாக தொடர்புள்ள சிக்கல்கள் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகளை அவை முன்னதாக வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன .
  அவை:
  · கோடையில் ஆர்டிக் கடல் பனிகளின் உருகல், சூரியக்கதிர் பிரதிபலிப்பு அளவினைக் குறைத்து உலக வெப்பமயமாக்கலை அதிகரிக்கிறது. 1970 ஆண்டிலிருந்த பனியின் அளவைக்காட்டிலும் 40 சதவீதத்திற்கும் குறைவான பனி 2007ல் கோடையின் இறுதியில் ஆர்டிக் கடலில் எஞ்சியிருந்தது என செயற்கைக்கோள் தகவல்கள் காட்டுகின்றன. (1970களிலிருந்துதான் ஆர்டிக் கடல் பனிகளைத் துல்லியமாக அளவீடு செய்யத் தொடங்கினோம் ). 2007, 2008 மற்றும் 2010 ஆகிய மூன்றாண்டுகள் ஆர்டிக் கடலில் கோடையின் இறுதியில் குறைவான பனி மூடிய காலமாகும்.
  · 1875ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 1.7 மில்லி மீட்டராக உயர்ந்து வந்த கடல் மட்டமானது 1993லிருந்து வருடத்திற்கு 3 மில்லி மீட்டர் அளவாக உயரத்தொடங்கின; இந்த வீதம் எதிர்காலத்தில் இன்னும் உயரலாம். உலக வெப்பமயமாக்கத்தால் உருச்சிதையும் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனிப் பாளங்கள் பெரியளவில் கடல் மட்டத்தினை உயர வைக்கும். கடல் மட்டமானது குறைந்தபட்சம் 1 மீட்டர் அல்லது 2 மீட்டர் உயர்ந்தாலே கடல் மட்டத்திற்கு அருகில் உள்ள வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் பிற தீவு நாடுகளில் வாழும் கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் அழிவுகளைச் சந்திப்பார்கள். தற்பொழுது ஆர்டிக் கண்காணிப்பு மற்றும் கணிப்பீடு திட்டம் மற்றும் 8 நாடுகளைக்கொண்ட ஆர்டிக் மையத்தின் விஞ்ஞானக் கிளையானது, கடல் மட்டமானது ஒரு நூற்றாண்டில் 1 1/2 மீட்டர் அளவு உயரும் எனத் தற்போதைய போக்குகளை வைத்துச் சுட்டிக்காட்டுகிறது. கடல் மட்ட உயர்வு வீதமானது இந்த நூற்றாண்டிற்கு சில மீட்டர்கள் என்றளவில் உயர்வது தொல் – பருவநிலை ஆவணப்படி சாதாரண நிகழ்வுதான். தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் அளவில் 40 கோடி மக்களும், 25 மீட்டரில் ஒரு நூறு கோடி மக்களும் வசிக்கின்றனர்.
  · (வழக்கம் போல்) பசுமைக்குடில் வாயு தொடர் வெளியீட்டால், புவியின் பனிமலைகளில் உள்ள உறைபனி படலங்கள் வேகமாக குறைந்து இந்த நூற்றாண்டில் கிட்டத்தட்ட காணாமலே போய்விடும். புவிக்கோள் வெப்பமானதால் பனிமலைகளில் உள்ள உறைபனி படலங்கள் 90 சதவீதம் ஏற்கனவே மறைந்து விட்டன. ஆசியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு இமயமலையின் உறைப்பனி படலங்கள் வறண்ட காலங்களில் நீர் வழங்குகின்றன. ஆனால் இதன் சிதைவு வெள்ளம் மற்றும் கடுமையான நீர் பற்றாக்குறையையே உருவாக்கும். ஏற்கனவே ஆண்டியன் மலை உறை பனிபடலம் உருகியதால் அப்பிராந்தியத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2010 ஏப்ரலில் பெருவில் உள்ள ஹுல்க்கன் ஆற்றில் உறைபனிப் படலங்கள் உருகிக்கலந்ததால் கரையோரம் வசித்த 50 மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது உடனடியான நிகழ்காலச் சிக்கலாக உறைபனிப் படலம் மறைதல் விளங்குவதை பெரு மற்றும் பொலிவியா காட்டுகிறது. ஏனென்றால் அங்கு உறைபனிப் படலங்கள் நீரைத் தேக்கி வைக்கும் அணைகளாக இருந்து வருகின்றன.
  · புவியின் 90% வெப்பம் கடலில் குவிக்கப்பட்டு கடல் வெப்பமடைகிறது. மேலும் கடலின் அடியில் வாழும் பைடோப்லாங்க்டன் (Phytoplankton) எனும் நுண்ணுயிர்களின் மறைவிற்கும் இது வித்திடுகிறது .ஆழ் கடலில் வாழும் உயிரினங்களின் உணவுச்சங்கிலியில் முக்கிய அங்கமான பைடோப்லாங்க்டன் கடந்த 50 ஆண்டுகளில் வேகமாக குறைந்து வருகிறது. புவி வெப்பமயமாக்கத்தால், உணவுச் சங்கிலியின் அடிப்படையாக இருக்கும் உயிரினங்களின் அழிவால் கடல் உணவு உற்பத்தியும் வீழ்ச்சியடையும்.
  · வழக்கமான வேலையால் நிலப்பரப்புகள் கடும் வறட்சியால் பாழாகி மேலும் 70% விரிவடையலாம். வடகிழக்கு ஆப்ரிக்காவும், வடக்கு இந்தியாவும் ஏற்கனவே இதற்கு சாட்சி அளிக்கின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்க பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியா இவ்வறட்சியை அனுபவித்தது. மாறாக மழை வந்தாலும் தொடர்ச்சியாக பெய்து வெள்ளத்திற்கு வித்திட்டு வாழ்வினை அழிக்கிறது; உதாரணமாக 2010ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், 2011ல் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளம். ‘சுதந்திரம்’ எனும் பிரித்தானிய நாளேடு இவ்வாறு விவரிக்கிறது” உச்சகட்டமான நீர்ப்பஞ்சத்தினை கிட்டத்தட்ட ஆண்டு முழுதும் அனுபவித்தபின் தொடர்ந்து வரும் வெள்ளப் பேரிடர்கள் என இரட்டைத் துயரங்களைப் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சந்தித்து வருகின்றன . குறைவான அளவு தூய நீரினைக் கொண்டிருக்கும் அதே நாடுகள்தான் வெள்ளங்களாலும் பாழடிக்கப்படுகின்றன.
  · வெப்பமான குளிர் காலமும், கோடை வெப் பமும் ஏற்கனவே பிராந்திய சூழல் அமைப்பில் சலனத்தை உண்டுபண்ண தொடங்கிவிட்டது.
  உதாரணமாக பைன் மரங்கள் நெடுங்காலம் வளரக்கூடிய மரங்களில் ஒன்று; சில மரங்கள் ஆயிரம் ஆண்டு பழமையானது. இம்மரங்கள் அமெரிக்காவின் மேற்கு மலைத்தொடர்களின் உச்சியில் வளர்ந்து வருகின்றன. இவை பல பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் வாழ்வினை அளித்து வருகின்றன. பைன் மர வண்டுகள் அவ்வுயர்ந்த இடத்தில் வெப்பத்தின் காரணமாக இனப் பெருக்கம் செய்ய முடிகிறது. அவ்வண்டுகள் இப்பகுதியிலுள்ள பைன் மரங்களைத் தாக்கிப் பெரும் பகுதியை பேய்க் காடாக மாற்றியுள்ளன. இக்காட்டின் மரணத்தால் அங்கு உயிர்வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்கள் உணவு கிடைக்காமல் மலையின் அடிவாரத்திற்கு செல்ல நேர்கிறது. இத்தோடு பனியும் வேகமாக உருகியதால், வசந்த காலத்தில் ஆற்று நீர் விரைவாக ஓடிமறைந்து விடுகிறது. பின் கோடைகாலத்தில் ஆறுகளில் நீர் குறைந்து வெப்பமும் அதிகரிக்கிறது. அதனால் மீன் வளமும் பாதிக்கப்படுகிறது.
  · சராசரி உலக வெப்பநிலை அதிகரிப்பதால் பயிர் விளைச்சலில் நிகழும் எதிர்மறைப் பின்விளைவுகள். வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகரிப்பால் சில வகை பயிர்களின் உற்பத்தி பெருகினாலும் எதிர்காலத்தில் உறுதியற்ற பருவநிலை மாற்றமானது வறட்சி சூழலை அல்லது மிகவும் ஈரப்பதம் கொண்ட சூழலைக் கொண்டு வரும். தெற்காசியா பகுதிகளில் செய்த கணக்கீடுகள் நெற்பயிர்களின் விளைச்சலில் ஏற்பட்டுள்ள இழப்பை ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளன. இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பால் தாவரங்களின் இரவு சுவாசத்தின் அளவு அதிகரிக்கிறது. அதாவது தாவரங்கள் பகலில் ஒளிச் சேர்க்கையின் வாயிலாய் உற்பத்தி செய்ததில் பெரும் பகுதியை இரவில் இழக்கின்றது. இதுவே பயிர்களின் உற்பத்திச் சரிவுக்கு காரணமாய் அமைகின்றது. ஆப்ரிக்காவில் செய்த ஒரு ஆய்வு முடிவின்படி 30 டிகிரி செல் சியசுக்கும் அதிகமான வெப்பத்தில் விளையும் மக்காச்சோளத்தின் விளைச்சல் மிகையான நீர் இருந்தும் 1% குறைகிறது; வறட்சிக் காலத்தில் 1.7% என இன்னும் சரிகிறது. பருவநிலை மாற்றத்தால் 1980 முதல் மக்காச்சோளம் மற்றும் கோதுமையின் உற்பத்தி சரிந்துவருகிறது எனப் பருவநிலை மற்றும் வேளாண் உற்பத்தி பற்றிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.
  · சமமமான வெப்பநிலை கொண்ட பகுதிகள் (வெப்பநிலை சாராசரியாக ஒரே மாதிரி நிலவி வரும் பகுதிகளில் குறிப்பிட்ட சில உயிரினங்கள் அதற்கேற்பத் தம்மைத் தக வமைத்துக்கொள்கின்றன.) பருவ நிலை களில் வேகமாக நிலை மாற்றம் பெறுவதால் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் துருவப்பகுதியை நோக்கி பத்துவருடத்திற்கு 4 மைல் என்ற விகிதத்தில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புலம்பெயர்ந்ததாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. மேலும் கடந்த 30 வருடங்களில் பத்து வருடத்திற்கு 35 மைல் என்ற வீதத்தில் துருவத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிகிறது. அதேசமயம் துருவப்பகுதி மற்றும் ஆல்பைன் பகுதிகளில் வாழும் உயி ரனங்களுக்கு (துருவக்கரடிகள் போன்றவை) போவதற்கு இடமேதும் இல்லை. போனால் பூமியை விட்டே போகவேண்டும்!

இவை எல்லாம் விடயமும் உணர்த்துவது என்னவென்றால், பருவநிலை மாற்றமானது வருடத்திற்கு வருடம் ஒரே சீராக நிகழவில்லை, மாறாகப் பெருகி வரும் பின்னூட்டம் மாற்றத்தையும், பின்விளைவுகளையும் வேகப்படுத்துகிறது, உச்ச அளவை அடைகிறது. இவ்வழியில் பார்த்தல் ஆர்டிக் பனி உருகல் ஒரு “பெருகி வரும் பின்னூட்டம் ஆகும்.” வேகமாக உருகும் வெண்பனி நீலக் கடலில் கலந்து, புவியின் பிரதிபலிப்பு அளவைக் குறைக்கிறது. இதனால் அதிகமான கதிர்வீச்சைக் கிரகித்து புவி வெப்பமடைவதற்கு வித்திடுகிறது. இம்மாதிரியான பெருகிவரும் பின்னூட்டம் நமக்கும் உச்ச அளவுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது (அதற்கு அப்பால் அந்த நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது.) முன்பு சொன்னது போன்று கிரீன்லாந்து மற்றும் மேற்கு ஆர்டிக் பனிப்பாளங்களின் சிதைவுகள் பெரியளவில் கடல் மட்டத்தினை உயர வைக்கிறது. மேற்கு ஆர்டிக் பனி அடுக்குகள் முழுவதும் உருகினால் 20 முதல் 25 அடிவரை கடல் மட்டம் உயரும், அது கிழக்கு ஆர்டிக் பனி அடுக்குகள் உருகுவதற்கும் வழிவகுக்கும்.
பிற புவிக்கோள் பிளவுகள்
முன்பு குறிப்பிட்டது போல, புவிக்கோள் எல்லைகளைக் கடந்த பல புவிக்கோள் பிளவுகளில் பருவநிலை மாற்றமும் ஒன்று.
கடல் அமிலத்தன்மையடைதல், பருவநிலை மாற்றம் போல, வளிமண்டலத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தின் விளைவாகும். கடல் நீர் பரப்பில் அரொக்னைட் (கால்சியம் கார்பனேட்) அளவின் சராசரி அளவை அடிப்படையாகக் கொண்டு கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பின் எல்லையைக் கணக்கிடலாம் என அண்மையில் விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர். இதன் அளவின் வீழ்ச்சி கடல் அமிலத்தன்மையடைவதைக் குறிக்கும். தொழில் யுகத்திற்கு முன்பிருந்த அதன் அளவு 3.44. பரிந்துரை எல்லை 2.75 -அதாவது இந்த அளவைக் கடந்தால் சிப்பி இன உயிர்கள்கள் கூண்டோடு இறந்துவிடும். தற்போதைய நிலைமை 2.90. கடல் அமிலத்தன்மையடைதல் பருவநிலை மாற்றத்தின் “கெடுதலான உடன்பிறப்பு” எனக் குறிப்பிடலாம். ஒரு பக்கம் கரிவாயு வெளியீட்டின் அளவு அதிகரிப்பால் பருவநிலை மாற்றமடைகிறது ,அதற்குச் சமமாகப் புவிக்கோள் அமைப்பையும் இன்னொருபக்கம் சிதைக்கிறது.
1990 களில் ஒரு விடயத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்ற கவலை அதிகரித்து முன்னிலையாய்த் தெரிந்தது; சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சு வேகமாக அதிகரித்ததன் காரணமாய் ஏற்பட்ட ஓசோன் மெலிவுதான் அது. தொழில்யுகத்திற்கு முன் ஓசோன் செறிவின் அளவு 290ஆக இருந்தது. இதன் புவிக்கோள் எல்லை பரிந்துரை 276. இந்த அளவைக் கடந்தால் புவிக்கோளில் இருக்கும் உயிர்கள் பேரளவில் இழப்பைச் சந்திக்கநேரிடும். நடப்பு நிலைமை 283 ஆக இருக்கிறது. ஓசோன் மெலிவு அளவானது தற்பொழுது வேகமாகச் சரிந்து 60டிகிரி தெற்கு 60டிகிரி வடக்கிற்கு இடையில் தங்கியுள்ளது. இருந்தபோதும், அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் ஓசோன் ஓட்டைகள் இன்னும் பல பத்து வருடங்களுக்கு நீடிக்கும். இப்புவியின் வாழ்வு முடிவு குறைந்து தூரத்தில்தான் உள்ளது.
தொழில்யுகத்திற்கு முன் ஆண்டிற்கு பத்து இலட்சத்திற்கு 0.1-1 என்கிற இயற்கை வீதத்தில் உயிரினங்கள் அழிந்து வந்தன. சமீபத்தில் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ள இதன் புவிக்கோள் எல்லை பத்து இலட்சத்திற்கு 10ஆகும். ஆனால் தற்பொழுது பத்து இலட்சத்திற்கு 100 க்கும் மேலான வீதத்தில் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இவ்வளவு துரிதமான வீதத்தில் உயிரினங்கள் மறைந்து வருவதற்குப் பருவ நிலை மாற்றம் மட்டும் காரணமல்ல, மாறாக உயிரின வாழ்விடங்களின் மீதான மனிதனின் குறுக்கீடும் இவ்வழிவுக்கு முக்கிய காரணியாகும். நாம் தற்பொழுது வாழ்ந்து வரும் சகாப்தத்தை ‘ஆறாவது அழிவு’ என விஞ்ஞானிகள் வரையறுக்கிறார்கள். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கடைசி அழிவில்தான் டைனோசர்கள் செத்துமடிந்தன. கடந்த காலத்தைய பெரும் புவியியல் அழிவுக்குப் போட்டியாக தற்பொழுது உருவாகியிருக்கும் ‘ஆறாவது அழிவு’ மற்ற கடந்த கால அழிவைக்காட்டிலும் ஒரு விதத் தில் மாறுபட்டது. புவியில் வாழும் உயிரினமே இவ்வழிவை கொண்டுவருகிறது; அது மனிதனால் தான்.
உலக இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் 2009ல் செய்த ஆய்வின்படி 17 ஆயிரம் விலங்குகள் மற்றும் தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெருவிக்கின்றன. நமக்குத் தெரிந்த பாலூட்டிகளில் ஐந்தில் ஒன்றுக்கும் மேலானவை, மேலும் கால்வாசி ஊர்வன, மற்றும் 70% தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது. அத்தோடு 2008ஐ காட்டிலும் 2009ல் புதிதாக 2800 உயிரினங்கள் இப்பட்டியலில் இணைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. “இம்முடிவுகள் பனிப்பாறையின் ஒரு சிறு நுனிதான்’’ என இப்பட்டியல் தயாரிப்பின் நிர்வாகி கிரைக் ஹில்டன் டைலர் கூறுகிறார். கணக்கில் எடுத்துக்கொள்ளாத இன்னும் பிற உயிரினங்களும் அழிவின் விளிம்பில் உள்ளதை மேலும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பல்லுயிரிய உயிரினங்களை சார்ந்து இயங்கும் சூழல் அமைப்பின் இயக்கமானது உயிரனங்களின் மறைவால் சிதைவடைகிறது. குறைவான உயிரினங்களை கொண்ட வீழ்ச்சியடைந்த சூழல் அமைப்பால் ஏற்படப்போகும் பல பின்விளைவுகளில் ஒன்று, பெரிய அளவிலான ‘தொற்று நோய்த்தாக்கம்’ ஆகும்.
வேதியியல் உரங்களிலிருந்து வெளியேறும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் வாயுக்கள் சுற்றுச் சூழலில் மிகைப் பாரத்தை ஏற்றுகின்றன. அவை உயிர்-புவி வேதிப்பொருள் சங்கிலியைப் பாதிப் பிற்குள்ளாக்கி மற்றுமொரு சூழல் பிளவைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்றன. வளிமண்டலத்திலிருந்து வேதியியல் முறைகள் மூலம் உறிஞ்சப்படும் நைட்ரஜனின் அளவும் மற்றும் சாகுபடி செய்யப் படும் பருப்பு வகைப் பயிர்கள் ஆண்டு ஒன்றுக்கு வாயு மண்டலத்திலிருந்து நிலைப்படுத்தும் நைட்ரஜனின் அளவும் எவ்வளவு மில்லியன் டன்கள் எனக் கணக்கிடப்படுகின்றன. அந்தக் கணக்கைக் கொண்டு விஞ்ஞானிகள் நைட்ரஜனின் புவிக்கோள் எல்லையைப் பரிந்துரைத்துள்ளனர். தொழிற்சாலை முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு முன்பு, குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹாபர் பாஸ்க் நிகழ்வுப் போக்கிற்கு முன்பு வளிமண்டலத்திலிருந்து உறிஞ்சப்படும் நைட்ரஜனின் அளவு ஒப்பீட்டளவில் மிகக் குறைவான அளவாகவே இருந்தது. புவியின் சூழல் சிதைவைத் தவிர்க்க இதன் எல்லை 35 மில்லியன் டன்னாக இருக்கவேண்டும். பருப்பு வகைப் பயிர்களின் உற்பத்தியில் நிலைப்படுத்தப்படும் நைட்ரஜனின் அளவு மற்றும் தொழிற்சாலை உற்பத்தியில் (முதன்மையாக நைட்ரஜன் சார்ந்த உரங்கள் தயாரிப்பில்) நிலைப்படுத்தப்படும் தழைச் சத்தின் அளவு என இரண்டும் சேர்ந்து அவ்வளவுதான் இருக்க வேண்டும். ஆனால் தற் போதைய அதன் அளவு 121 மில்லியன் டன்களாகும். பரிந்துரைக்கப்பட்ட எல்லை தேவையான அளவுக்கு உணவுப் பயிர்களை விளைவிக்கப் போதாது. இருந்தபோதும், மனித மற்றும் விலங்குகளின் கழிவுகளை வேளாண்மை நிலங்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் வளி மண்டலத்திலிருந்து உறிஞ்சி நிலைப்படுத்தப்படும் நைட்ரஜனின் அளவைக் குறைக்க முடியும்; குறைக்க வேண்டும்.
நைட்ரஜனின் எல்லையை விட பாஸ்பரஸின் புவிக்கோள் எல்லை கட்டுக்குள் உள்ளதென்றாலும், தற்போது அதுவும் வேகமாக உயர்ந்து இருக்கிறது. தொழில் யுகத்திற்கு முந்தைய காலங்களில், பாஸ் பரஸ் கடலில் கலக்கும் அளவு 1 மில்லியன் டன். இதன் புவிக்கோள் எல்லைப் பரிந்துரை 11 மில்லியன் டன். நடப்பு நிலமை 8.5 மற்றும் 9 டன் என வேகமாக உயர்ந்துகொண்டு செல்கிறது
உலங்கெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங் களில் வேதியல் கழிவுகள் கடலில் கலப்பதால் பைடோப்லாங்க்டன் பெரும் அளவில் அதிகரிக் கின்றன. அதிகரித்த அவை பிறகு பெரும் திரளான அளவில் இறக்க நேரும்போது, நுண்ணுயிர்களின் திசு அழுகல் கடலின் கீழ்ப் பகுதியில் உயிர் வாயுவின் அளவை மிகவும் குறைக்கிறது. அது ஹைபோசிக் அல்லது குறைந்த உயிர் வாய்வு கொண்ட மண்டலம் எனக் குறிப்பிடப்படுகிறது. சில நேரங்களில் ‘இறந்த மண்டலம்’ எனவும் அழைப்பார்கள்; இங்கு மீன் வகை உயிரினங்களில் பல வாழ முடியாது. இது போன்ற இடம் மெக்ஸிகோ வளைகுடாவில் உள்ள மிஸ்ஸிசிப்பி ஆற்று முகத்துவாரத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரும் ‘இறந்த மண்டலங்களில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவின் பால்டிக் கடலிலும் அத்தகைய மிகப்பெரும் பகுதி ஒன்று உள்ளது.
உலக நன்னீர் எல்லையும் வரம்பு கடந்து வருகிறது. நீல நீரோட்டம் (நீர்மம்) மற்றும் பச்சை நீரோட்டம் (நீராவி ) என இரண்டின் எல்லைகளும் சீர்குலைக்கப்பட்டு முழுமையான நீர்ச் சங்கிலியை அச்சுறுத்துகிறது. தற்போதைய மதிப்பீட்டின்படி, உலகின் 25% ஆற்று நீர்வடிகால்கள் கடலில் கலப்பதற்கு முன்பாகவே வறண்டுவிடுகின்றன. அதிகமான அளவிற்கு நன்னீர் வளங்களை மனிதனின் பயன்படுத்துவதன் விளைவே இது. தொழில்யுகத்திற்கு முன் மனிதனின் நன்னீர் பயன்பாட்டு அளவானது ஆண்டிற்கு 415 கன கிலோ மீட்டராக இருந்தது. சமீபத்தில் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ள நன்னீர் பயன்பாட்டு எல்லை 4 ஆயிரம் கன கிலோமீட்டர் (இந்த அளவைக் கடந்தால் பிராந்திய மற்றும் கண்டங்களில் உள்ள தரையிலும் நீரிலும் வாழ்கின்ற உயிரினங்களின் சூழல்அமைப்பு சிதைவடையும்). நடப்பு நிலைமை 2600 கிலோமீட்டராக இருக்கிறது.
நேரடியான மனிதத் தேவையை ஒட்டிய உலக நன்னீர் சிக்கல் ஏற்கனவே உருவாகிவிட்டது. தனது ‘நீல ஒப்பந்தம்’ என்ற நூலில் பார்லோவ் இவ்வாறு எழுதுகிறார்
“இவ்வுலகம் தற்பொழுது நீர்ச் சிக்கலை சந்திக்கிறது; அதிகரிக்கும் மாசு, பருவநிலை மாற்றம் மற்றும் வேகமான மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றால் கிட்டத்தட்ட 200 கோடி மக்கள் இப்புவியின் நீர்ப்பற்றாக்குறை பிராந்தியங்களில் வாழ்கின்றனர். நமது வழிமுறைகளை நாம் மாற்றிக் கொள்ளாவிட்டால் 2025 ஆண்டில் உலகமக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள்”. வடசீனா, வட இந்தியா மற்றும் அமெரிக்காவின் பெரும் பீட பூமிகளில் நீர் சேர்மத்தினை விட நீர் உறிஞ்சி எடுக்கும் அளவே அதிகமாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மழை நீர் மூலம் நீர் மீண்டும் நிலத்தில் சேரும் வேகத்தைவிட 45% அளவிற்கு வேகமாக நிலத்திலிருந்து நீர் உறிஞ்சிப் பாதி அளவிலான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறன-இது பெரும் அழிவுக்கான நடைமுறை.
மனிதனின் உற்பத்தியோடு இணைந்த நிலப் பயன்பாட்டின் மாற்றமானது புவிக்கோள் எல்லை களை மேலும் பிளவுபட வைக்கிறது. காடுகள் மற்றும் பிற சூழல் அமைப்புகளை வேளாண் நிலங்களாக மாற்றிவருவது புவிஅமைப்பின் ஒழுங்கமைப்பு நிகழ்முறைகளைச் சீரழித்து, பல்லுயிரிய வளத்தை அச்சுறுத்தும் ‘ஆபத்தான கட்டத்திற்கு’ இட்டுச் சென்றுள்ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உதாரணமாக அமேசான் மழைக் காடுகளை வேளாண் நிலங்களாக மாற்றிவருவதால், மழைக் காட்டின் அமைப்பு சிதைந்து பாதி வறண்ட நிலை யில் இருக்கும், மரங்களற்ற வெப்ப மண்டலப் புல்வெளியாக மாறும் நிலையில் உள்ளது. தென் அமெரிக்காவில் பொதுவாக மழைக் காடுகளை முதலில் பரந்த அளவிலான புல் நிலங்களாக மாற்றி, பின் ஏற்றுமதி செய்வதற்காகச் சோயா பீன்சு போன்றவை பயிரிடப்படுகின்றன. தென் கிழக்காசியாவில் எண்ணெய் பயிரிடுவதற்காக நிலம் மாற்றப்படுகிறது. உயிரி எரிபொருள் உற்பத்திக்காக பாம் ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு மழைக் காடுகளை அழிப்பதாலும், பூர்வகுடி மக்களைக் காடுகளிலிருந்து வெளியேற்றுவதாலும் மனிதனால் உருவாக்கப்படும் கரியமில வாயுவில் 25 % உருவாக்கப்படுகிறது. மண்அரிப்புகள், மிகையான அளவு மேய்ச்சலுக்குப் பயன்படுத்துதல், குறைவான அளவு அங்ககப் பொருட்களை மண்ணிலிடுதல் போன்றவை உலகில் உள்ள பெரும்பான்மையான வேளாண் நிலங்களில் உற்பத்தி வீதத்தை அச்சுறுத்து கிறது.
தொழிற்சாலைக்கு முந்தைய காலத்தில் மனித னின் செயல்பாடுகளால் நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவே. இதன் எல்லை பரிந்துரை பனி மூடப்படாத நிலத்தில் 15% ஆகும். இந்த அளவைக்கடந்தால் பேரளவில் சூழல் அமைப்பு இடையூறுக்கு உள்ளாகும். தற்போது உலகளவில் வேளாண்மைக்காக மாற்றப்பட்ட நிலங்களின் வீதம் 12%
கரிப்புகை, கந்தக உப்பு போன்ற துகள்களை வளிமண்டலத்தில் தொடர்ச்சியாகத் திணிக்கும் நிகழ்முறைக்கும் புவிக்கோள் எல்லையுண்டு. ஆனால் இதைக் கணக்கீடு செய்வதில் பல சிக்கல் கள் உள்ளதால் சரியான பாதுகாப்பு எல்லை வரை யறுக்கப்படவில்லை. தூசிப்படலங்களும் பருவநிலை அமைப்பை பாதிப்பிற்குள்ளாக்கும். அத்தோடு மனிதனின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். உலகளவில் தூசிப்படலங்களின் திரட்சி தொழில் யுக காலத்தில் இரு மடங்காகியுள்ளது. தூசிப் படலங்கள் புவிப்பரப்புக்குள் வரும் கதிர் வீச்சினை சிதறடித்து விண்ணுக்கே திருப்பி அனுப் பியோ அல்லது மேகங்களின் பிரதிபலிப்புச் சமச்சீரினைச் சிதைத்தோ, புவியின் கதிர்வீச்சு சமன்பாட்டினைப் பாதிப்புக்கு உள்ளாக்கிறது. இந்த தூசிப்படலங்கள் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாகின்றன. அத்தோடு இவை நீர் சுழற்சியிலும் மாறுதலை உண்டு பண்ணுவதால் பருவமழைகளைக் கணிசமான அளவு பாதிக்கிறது. இத்தூசிப்படலங்களின் எதிர்மறை விளைவுகளால் மனிதனின் உடல்நிலைபாதிப்படைகிறது. இதனால் ஆண்டிற்கு 8 லட்சம் மனிதர்கள் இளம் வயதிலேயே இறக்கின்றனர்.
புவிக்கோள் எல்லைகள் குறித்துச் செயலாற்றும் விஞ்ஞானிகள், பெரும் எண்ணிக்கையில் உள்ள, சிக்கல் மிகுந்த வேதியல் மாசின் புவிக்கோள் எல்லையை இதுவரை இன்னும் நிர்ணயம் செய்ய வில்லை. பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் இன்று செயற்கை வேதிப்பொருட்கள் உபயோகத்தில் உள்ளன. தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கதிரியக்க சேர்மங்களாலும், திட உலோகங்களாலும், பல வகையான கரிமச் சேர்மங்களாலும் பல்லுயிரியம் மற்றும் மனித வாழ்வு அச்சுறுத்தலுக்கு ஆட்படுவ தோடு பருவநிலை மாற்றம் போன்ற பல சூழல் சிக்கல்களுக்கும் வித்திடுகிறது. சில வேதியல் மாசுகள் குறிப்பாக உலோகப் பாதரசம் காற்றில் வாயுவாகத் தங்கி பின் மண்ணிலும் நீரிலும் மாசுபடுத்துகிறது.
பலதரப்பட்ட கரிமச் சேர்மங்கள் மற்றும் பாதர சத்தால் பல நன்னீர் மற்றும் கடல் வாழ் மீன்கள் விசமாக்கப்படுகின்றன. கடலானது பெட்ரோலிய வேதிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பெரும்பாலும் நெகிழிகளைக் கொண்ட பல குப்பைகளின் ‘தீவுகளாக’ உள்ளன. மின்சார விளக்குகள், புட்டி மூடிகள், பல் துலக்கி மற்றும் நுண்ணிய நெகிழிகள் பசிபிக் கடலில் குடிகொண்டு பத்தாண்டுக்கு ஒரு முறை இரட்டிப்பாகி வருகிறது. அதாவது டெக்சாஸ் மாகாணம் போன்று இருமடங்கு இப்போது உள்ளது. சூரிய ஒளி மற்றும் வெப்ப பருவநிலையானது கடலில் உள்ள திரளான நெகிழிகளைச் சிதைத்து மிகச் சிறிய துணுக்குகளாக ஆக்குகின்றன. “ஒரு கைப்பிடி கடல் மண் அல்லது ஒரு கோப்பை கடல் நீரினை உலகில் ஏதாவதொரு கடல் பரப்பிலிருந்து எடுத்துப் பார்த்தாலும் அதில் ஏக அளவில் சிறிய பட்டாணியை விடச் சிறியதான நுண் நெகிழிகள் கலந்திருக்கும். இந்நுண் நெகிழிகள் ஆழ்கடலில் வாழும் சிற்றுயிர்களின் உணவுச் சங்கிலிக்கு ஆபத்து விளைவிக்கின்றன. ஏனென்றால் அந்தச் சிறு உயிர்களுக்குள் நெகிழித் துகள்கள் சிதைவடைகின்றன. மேலும் நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருட்களை நுண்ணுயிர்கள் உறிஞ்சி, அதைச் செறிவடையச் செய்வதன் மூலம் மேலும் ஆபத்தை உண்டாக்குகின்றன.
அமெரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்துகளான அட்ரசைன், நைட்ரேட் போன்ற பிற வேளாண் தொழிலைச் சேர்ந்த நஞ்சுகள் கலந்திருக்கின்றன. நாமெல்லாம் இவ்வாறான தொழிற்சாலை மற்றும் வேளாண் வேதியல் நச்சுகளை உட்கொள்வதால் பெரியளவிலான உடல்நலக் கேட்டின் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
நாம் உட்கொள்ளும் பல பொருட்களிலும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளது. அமெரிக்காவின் வேளாண்துறையானது பாதி அளவிலான உறைந்த ப்ளூபெரியில் பாதி அளவுக்கு மேலும், ஸ்ட்ரா பெரியில் பாதி அளவுக்கு மேலும் பூஞ்சாளக் கொல்லிகள் இருப்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளன. ஸ்ட்ராபெரியில் குறிப்பிட்ட அள விலான காப்டான் என்னும் பூஞ்சாளக் கொல்லி கலந்திருப்பது தெரியவந்தது. 50% திராட்சை சாற்றில் கார்பரில் என்னும் பூச்சிக்கொல்லி இருப்பதாக ஆய்வுமுடிவு தெரிவிக்கிறது. மேலும் 75% உருளைக்கிழங்கில் குளோர்ரோபாம் என்ற களைக் கொல்லி கலந்திருப்பதும், வெங்காயம், முட்டைகோஸ் ஆகியவற்றில் ஞிசிறிகி களைக் கொல்லி கலந்திருப்பதும், 40% பூசணிக்காயில் எண்டோ சல்பான் கலந்திருப்பதும் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளன. சிலவேளைகளில் ஒரே உணவுப் பொருளில் பல வேதியல் சேர்மம் கலந் துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 20% முதல் 100% ஸ்ட்ராபெரியில் 16 வகையான பூச்சிகொல்லி வேதியல் சேர்மங்கள் கலந்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவருகிறது.இப்பட்டியல் இப்படி நீண்டு கொண்டே செல்லும்.
இருபது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் செய்த இரத்தப் பரிசோதனையில் 62 விதமான வேதியல் பொருட்கள் அவர்களின் ரத்தத்திலும் சிறுநீரிலும் கலந்திருப்பது தெரிய வந்தது. பெரும்பாலும் தீ தாங்குவான் மற்றும் குழை பொருட் குழுமம் போன்ற கரிம வேதிப் பொருட்களாக உள்ளன. ஒவ்வொருவர் உடலிலும் குறைந்தது 24 வகையான தனி வேதியல் பொருட்களும், அதிகபட்சமாக இருவர் உடலில் 39 வகையான தனி வேதிப்பொருட்களும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட அனைவரின் உடலிலும் புற்றுநோய் வளரத் தூண்டும் ஊக்கி என அனுமானிக்கப்படும் பைஸ் பினோல் கி (ஙிறிகி) இருப்பதும் தெரியவந்தது. பைஸ் பினோல் கி (ஙிறிகி) பாலி கார்பனேட் நெகிழிகளை உருவாக்கப் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. நீர் புட்டிகள், குழந்தை புட்டிகள் மற்றும் உணவு சேமிப்பு பெட்டகங்களின் உட்பூச்சுகள் ஆகியவற்றில் பாலி கார்பனேட் நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவு சேமிக்கும் பெட்டகத்தில் உள்ள உணவுகள், பல்பொருள் அங்காடிகளில் தரப்படும் ரசீதுகள், தானியங்கி இயந்திரங்கள், வாயுக்கூடங்கள் ஆகியவற்றில் தரப்படும் இரசீதுகள் என நாம் தற்பொழுது அன்றாடம் பயன்படுத்தும் எண்ணற்ற பொருள்கள் ஙிறிகி கலந்ததுதான். இதுபோல்:

தலைமுடிக்குப் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், ஒப்பனைச் சாதனங்கள், மரச் சாமான்கள் வேலைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவற்றில் ‘தலேத்ஸ்’ எனும் வேதிப்பொருள் ஏதேனும் ஒரு வடிவில் இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது.

கணினி, மரச் சாமான்கள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றில் தீ தாங்குவதற்காக றிஙிஞிணி எனும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது.

தரைவிரிப்புகளின் மேற்பூச்சு, காகித மேற் பூச்சு, ஒட்டாப் பாத்திரங்கள் போன்றவற் றில் றிதிசி எனும் வேதியல் பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது
பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் செவி லியர்களே பொதுமக்களைக் காட்டிலும் அதிக அளவில் வேதியியல் பொருட்களில் புழங்கு கின்றனர் என்றாலும், நாம் எல்லோருமே நமது உடலுக்கு அந்நியமான அத்தகைய வேதியியல் பொருட்களின் தாக்கத்திற்கு உள்ளாகிறோம். அவை நமது உடல் நலத்தை கடுமையாகப் பாதிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள 93% பொதுமக்களின் சிறுநீரில் ஙிறிகி துணைக் கூறுகள் இருக்கின்றன.அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களின் உடலிலும் குறிப்பிடும் அளவிலான றிஙிஞிணி கலந்திருக்கின்றன இவ்வகையான வேதிப்பொருட்கள் விலங்குகள் மற்றும் மனிதனின் நரம்பு மண்டலங்களில் கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தும். மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். பிரசவ காலத்தில் இவ்வகை வேதியல் கலப்புகளுக்கு ஆளானால் குழந்தைக்கு ஆட்டிசத்தின் பாதிப்பு கணிசமான அளவிற்கு உயரும் வாய்ப்புள்ளது. அதோடு ஆர்கனோ பாஸ்பரஸ் என்னும் பூச்சிக் கொல்லி மருந்திற்கும் குழந்தைகளின் கவனக் குறைவு/மிகை நடவடிக்கை (கிஞிபிஞி) குறைபாட்டிற்கும் தொடர்பு உள்ளதெனத் தெரிகின்றது.
அமெரிக்காவில் தற்போது 80 ஆயிரம் வேதிப் பொருட்கள் வணிகப் பயன்பாட்டில் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதியல் பொருட்களின் கூட்டமைவு மற்றும் அதன் தீங்கு குறித்த விவரங்கள் நமக்கு தெரியாது. அவை “வியாபார ரகசியம்” என்ற பிரிவில் அதன் கூட்டமைவுகள் சட்டபூர்வமாக மறைக்கப்படுகின்றன. ‘சைன்டிபிக் அமெரிக்கன்’ என்ற இதழின் படி, ,”அமெரிக்காவில் பயன்பாட்டிலிருக்கும் 80 ஆயிரம் வேதிப்பொருட்களில் வெறும் 5 மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளன அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 5% அல்ல 5 மட்டுமே. தோரயமாக 200 வேதியல்பொருட்களில் மட்டுமே உடல்நலப் பாதுகாப்பு ஆய்வு மேற் கொள்ள முடிந்தது. இறுதியாக 2010ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஙிறிகிவைக் “கவலையளிக்கும் வேதிப்பொருள்” என அறிவித்திருக்கிறது. அதாவது இப்பொழுதுதான் இவ்வமைப்பு இதை ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். ஆய்வு செய்யப்படாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத வேதிப்பொருட்களின் பயன் பாடு வருங்காலத்தில் மாறலாம். ஆனால் தனது உற்பத்திப் பொருட்களில் நஞ்சைத் தடவி விற்கும் வியாபார சமூகத்தின் மன மாற்றத்தால் கண்டிப்பாக அது நடக்காது. வேதியியல் தொழிற்சாலைகள் கட்டுப்பாட்டை ஏற்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், கட்டுப்பாடு இல்லாத நிலைமை அமெரிக்கத் தொழிற்சாலைகளைவிட மலிவு விலையில் தனது பொருட்களை விற்கும் சீன வேதியியல் நிறுவனங்களுக்கே அதிகப் பயனளிப்ப தாக இருக்கும்.
புற்றுநோய் ஆய்வுக்குழுவின் தலைவர் 2010ஆம் ஆண் டில் வெளியிட்ட அறிக்கை இச்சூழலை இவ்வாறு விவரிக்கிறது:
“பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிக் கைகள் தெரிவிப்பதாவது – மரபணு சார்ந்த, எதிர்ப்பு சக்தி மற்றும் சுரப்பிகள் செயல் பிறழ்ச்சியடைந்து உருவாகும் புற்று நோய் மற்றும் பிற நோய்களுக்கும் சூழல் காரணிகள் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன…பலவீனமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள், திறனற்ற நடைமுறைப்படுத்தல்கள், நடைமுறைச் சிக்கல்கள், துண்டு துண்டாக இருக்கும் அதிகாரம் போன்றவற்றால் புற்று நோய் உண்டாக்கும் காரணிகளைச் சமூகத்திலும் பணி இடத்திலும் தொடர்ந்து பெருக அனுமதிக்கிறது …”
மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் சார்ந்திருக்கும் வாழ்வாதார அமைப்பைக் கொண்ட புவியின் சூழலானது விவாதத்திற்கு இடமற்ற வகையில் மனித நடவடிக்கைகளால் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. நமது பாதைகளைத் தீவிரமாக மாற்றிக் கொள்ளத் தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது தெளிவாகிறது. பன்முகத்தன்மை வாய்ந்த ,சிக்கல்மிகுந்த மற்றும் வேகமாய் அதிகரித்துவரும் பண்புகள் கொண்ட புவிக்கோள் சூழல் சிக்கல் களுக்கு மூல காரணமாக ஒன்று உள்ளது. அது, நாம் வாழும் பொருளாதார மற்றும் சமூக அமைப்பாகும்.
“வேகம் மற்றும் அளவு, வேகம் மற்றும் எளிதான இலாபம் ஆகியவற்றின் கடவுள்களையும், அவற்றிலிருந்து தோன்றும் பூதாகரமான சாத்தான் களையும்” வழிபடும் சமூகம்தான் சூழலியல் சிதைவுக்கு முதன்மையான கரணமாக உள்ளது என சூழலியல்போராட்டத்தைத் தூண்டி விட்ட ‘அமைதியான வசந்த காலம்’ என்ற நூலை எழுதிய ராச்சல் கர்சன் வலியுறுத்துகிறார்.

ஜூன் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *