இயல்பு

மார்க்சியமும் சூழலியமும்

இயல்பு

தோழர் மு.வசந்தகுமாருடன் நேர்காணல்

‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’, ‘பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை’, ‘மார்க்சியம்: மறைத்தலும், திரித்தலும்’ ஆகிய நூல்களின் ஆசிரியர். இவற்றில் ‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’, ‘பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை’ ஆகிய இரு நூல்களும் 1980களின் மத்தியில் ‘மன ஓசை’ இதழில் முதலில் தொடர்களாக வந்து பிறகு நூல்களாக வெளிவந்தன.
மேலும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் இவருடைய மொழியாக்கங்களாகப் பின்வரும் நூல்கள் வெளிவந்துள்ளன. ‘தத்துவம்-பேக்கன் முதல் மார்க்ஸ் வரை’, ‘முதலாளியத்தின் கோர வடிவங்கள்’, ‘சீனாவும் சோசலிசமும்’, ‘தேசியம் பற்றிய ஒரு மார்க்சியக் கோட்பாடு’, ‘மார்க்சும் சூழலியமும்’, ‘முதலாளிய அமைப்பின் நெருக்கடிகளும் நம் முன் உள்ள கடமைகளும்’, நிழல்வண்ணனுடன் இணைந்து ‘உலகமயமாக்கல்-அடிமைத் தளையில் இந்தியா’
‘மன ஓசை’ இதழில் வெளி வந்த தோழர் சுரேசின் கட்டுரைகளைத் தொகுத்து ‘முகமூடிகளும், முகமூடி வியாபாரிகளும்’, என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

சூழலியல் சிக்கல்களை மார்க்சியக் கண்ணோட்டத்துடன் இணைப்பது என்ற சிந்தனைக்கு எவ்வாறு வந்தடைந்தீர்கள்?
1990களின் தொடக்கத்தில் ‘‘மனிதனை மையப்படுத்துகிற மனித நேயப் பார்வைதான் மார்க்சிடம் உள்ளது. இயற்கையை வெல்ல வேண்டும், இயற்கையின்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற பார்வைதான் மார்க்சிடம் இருந்தது. இதற்கான அடிப்படை பேக்கனிடமிருந்தே தொடங்குகிறது. ஆகவே ஒரு வளமான சூழலியல் கோட்பாட்டை நிறுவுவதற்கான கருத்துக்கள் மார்க்சிடம் இல்லை. எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற மெய்யியல் அடிப்படை மார்க்சிடம் இல்லை’’ என்று எஸ்.என். நாகராசன் (எஸ்.என்.) தனது ‘மார்க்சியம்-கிழக்கும் மேற்கும்’ என்ற நூலில் மார்க்சின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். அதனை ஒட்டி நான் மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் நூல்களை ஆய்வு செய்தபோது, மார்க்ஸ் பற்றிய எஸ்.என்.னின் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்பது புரிந்தது. இயற்கை பற்றியும், சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு பற்றியும் வளமான கருத்துக்கள் மார்க்சிய மூலவர்களிடம் இருந்ததை அறிந்தேன். மேலும் சூழலியல் சிக்கல்களைச் சமூக மாற்றத்துடன் இணைந்தே தீர்க்க முடியும் என்ற மார்க்சியக் கண்ணோட்டம் என்னிடத்தில் வலுப்பட்டது. அவற்றின் அடிப்படையில் எஸ்.என்.னின் கருத்துக்களை மறுத்துக் கோவை ஞானி அவர்கள் வெளியிட்டு வந்த ‘நிகழ்’ இதழில் எழுதினேன். மேலும் அவருடைய நூலை விமர்சித்து ‘மார்க்சியம்: மறைத்தாலும், திரித்தலும்’ என்னும் சிறு நூலை 1994ல் வெளியிட்டேன். பிறகு பால் எம். சுவீசி, ஜான் பெல்லமி ஃபாஸ்டர் போன்ற மேற்கத்திய மார்க்சியர்களின் எழுத்துகள் சூழலியல் பற்றிய மார்க்சின் வளமான கோட்பாட்டை வெளிக் கொண்டு வந்துள்ளதை அறிந்தேன். அவை எனது புரிதலை மேலும் ஆழப்படுத்தின.

இயற்கையை வெற்றிகொள்வது என்ற மார்க்சின் கருத்து இன்று சூழலியலாளர்களால் விமர்சனப்படுத்துகிற நிலையில் இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த மார்க்சின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?
இயற்கையை வெற்றி கொள்வது, இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்றவை மார்க்சின் கருத்துக்கள் அல்ல.
“இயற்கை, மனிதனின் உடலாக இல்லாவிட்டாலும், அது மனிதனின் அனங்கக உடலாக உள்ளது. மனிதன் இயற்கையினால் வாழ்கிறான்- அதாவது இயற்கை அவனது உடல். அவன் இறக்காமலிருக்க வேண்டுமானால் அதனுடன் தொடர்ந்த பரிமாற்றத்தில் இருக்க வேண்டும். மனிதனின் உடல் மற்றும் ஆன்மீக வாழ்வு இயற்கையுடன் இணைந்தது. ஏனெனில் மனிதன் இயற்கையின் ஒரு பகுதி.” என்கிறார் மார்க்ஸ். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவை இதைவிட சிறப்பாக விளக்க முடியுமா? இங்கு இயற்கையின் மீது வெற்றியும், ஆதிக்கமும் எங்குள்ளது?
மேலும் “இயற்கையின் மீது நாம் பெற்ற வெற்றியைப் பற்றி அதிகம் தம்பட்டம் அடித்துக் கொள்ளக்கூடாது. அத்தகைய ஒவ்வொரு வெற்றிக் கும் இயற்கை நம்மைப் பழிவாங்கியுள்ளது” என எங்கெல்ஸ் வரலாற்றில் மனித சமூகத்தை இயற்கை பழி வாங்கிய நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறார்.
இயற்கையின் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் நாம் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், அண்மையில் சென்னைப் பெருவெள்ளம் நமது சமூகத்தைப் பழிவாங்கிய நிகழ்வையும் இந்த அடிப்படையில் பார்க்கலாம்.

இயற்கையிடமிருந்து அந்நியமாதல் என்ற கருத்திலிருந்துதான் உழைப்பிலிருந்து அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்திற்கு மார்க்ஸ் வந்தடைந்தார் என பெல்லமி ஃபாஸ்டர் சுட்டிக்காட்டுகிறார். இயற்கையிலிருந்து அந்நியமாதலை எவ்வாறு புரிந்துகொள்வது?
இயற்கையினுடைய பரிணாம வளர்ச்சியின் விளைபொருள்தான் மனிதன். எனவே மனிதன் இயற்கையின் ஒரு அங்கம்தான். மனிதன் தனது இருப்புக்கான, உயிர் வாழ்வுக்கான உணவு, உடை, உறைவிடம் என அனைத்தையும் இயற்கையிடமிருந்தே தனது உழைப்பின் மூலம் பெறுகிறான். இயற்கை அவனது உழைப்புக்கு ஆட்படும் பொருளாக உள்ளது, அதாவது மூலப்பொருளாக உள்ளது. அந்த மூலப்பொருளின்மீது செயல்படும் கருவியையும் அந்த இயற்கையே வழங்குகிறது. இவ்வாறு இயற்கையும் மனிதனின் இருப்பும் பிரிக்க முடியாமல் இணைந்துள்ளது. இந்த இயற்கை, இந்தப் பூமி, மனித சமூகம் முழுவதற்கும் சொந்தம். அப்பொழுதுதான் மனிதன் இயற்கையுடனான தனது உறவைப் பேணிப் பாதுகாக்க முடியும். உயிர் வாழ முடியும். ஆனால் சமூகத்தின் உடைமை தனியுடைமை ஆக்கப்பட்டபோது, சமூகத்தின் ஒரு பகுதியினர் இயற்கையைத் தங்களுக்குச் சொந்த மாக்கிக் கொண்டபோது சமூகத்தின் இன்னொரு பகுதியினர் இயற்கையுடன் நேரடி உறவுகொள்வது தடுக்கப்பட்டது. அவர்கள் இயற்கையிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் தமது இருப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் அவசியமான -நிலம், மூலப்பொருட்கள் ஆகியவற்றிடமிருந்து -இயற்கையிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள்.
இந்த அந்நியமாதலின் உச்சகட்டமாக, முதலாளிய உற்பத்தி முறையில், எஞ்சி இருக்கும் அனைத்து உற்பத்தி சாதனங்களும் மனிதனிடமிருந்து பறிக்கப்படுகின்றன. அவனது உழைப்பு சக்தி இங்கு பண்டமாக மாற்றப்படுகிறது. மனிதன் தனது உழைப்பிலிருந்தே அந்நியமாகிறான் இங்கு மூலதனத்தின் பெருக்கத்திற்காக மனிதனின் உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுகிறது.

சமூகத்திற்கும் இயற்கைக்குமான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாடு குறித்த மார்க்சின் பகுப்பாய்வை இன்றைய நவீன முதலாளிய சமூக கட்டத்தில் எவ்வாறு புரிந்துகொள்வது?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், முதலாளியத்தின் தொடக்கக் கட்டத்திலேயே சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பிளவு (Metabolic rift) பற்றி மார்க்ஸ் தனது மூலதனத்தில் விவரிக்கிறார்.
நகரமயமாதலுக்கு முன்பு கிராமப் புறங்களில் உள்ள மக்கள் நுகர்ந்த, நிலத்திலிருந்து கிடைத்த உணவுப்பொருட்கள், ஆடைகள் தயாரிக்கத் தேவையான பருத்தி, கம்பளி போன்ற பொருட்களால் உண்டான கழிவுகள் கிராமப் புறங்களில் இருந்த நிலங்களுக்கு மீண்டும் ஊட்டச் சத்துக்களாகப் பயன்படுத்தப்பட்டன. நிலம் வளம் பெற்றது. இந்தச் சுழற்சி தொடர்ந்து நடைபெற்று வந்ததால் நிலம் வளத்துடன் நீடித்தது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையில் இருந்த உயிர்ப்பொருளாக்கச் செயல்பாடு அறுபடாமல் இருந்தது. ஆனால் தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட முதலாளிய நகரமயமாக்கமும், கிராமப் புறங்களிலிருந்து நகரங்களை நோக்கிய ஏராளமான மக்களின் குடிபெயர்வும் முதலாளிய நாடுகளில் நடந்தபோது, நகரங்களில் குடியிருப்புப் பிரச்சனைகள், மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களின் கழிவுகளினாலும், தொழிற்சாலைகளின் கழிவுகளினாலும் சுற்றுப்புறங்களும், காற்றும் மாசுபடுதல், நீர் நிலைகள் மாசுபடுதல், நகரங்களில் ஓடும் நதிகள் சாக்கடைகளாக மாறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. இவை ஒரு பக்கம். இன்னொரு பக்கமோ, நகர்ப்புற மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், ஆடைகள் தயாரிக்கத் தேவையான பருத்தி, கம்பளி போன்றவை கிராமப் புறங்களிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள நகரங்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்களின் நுகர்வால் ஏற்பட்ட கழிவுகள் மீண்டும் கிராமங்களிலிருந்த நிலத்திற்கு ஊட்டச்சத்துக்களாகக் கிடைக்கவில்லை. அதனால் நிலம் வளம் இழந்தது. மண் மலடாகியது. அதனால் நிலத்தைச் சார்ந்த உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிலத்தை வளப்படுத்த கடற்பறவைகளின் எச்சத்திற்காகத் தீவுகளைக் கைப்பற்றும் போட்டியில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இறங்கின. பிறகு வேதியியல் உரங்கள் தயாரிப்பில் அந்த நாடுகள் இறங்கின.
இந்த முதலாளிய உற்பத்தி முறையில்தான் இன்று இந்தியா வேகமாகப் பயணித்து வருகிறது. இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழிற்சாலைகள் நிரம்பிய நகரமயமாக்கல் வேகமாக ஊக்குவிக்கப்படுகின்றது. அதனால் நகரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பும், கழிவுகள் நீர் நிலைகளை மாசுபடுத்தலும், சுகாதாரமற்ற குடியிருப்புப் பிரச்சனைகளும் பல்கிப் பெருகி வருகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழகத்தின் தலைநகரான சென்னை இன்று இருக்கிறது. கூவமும், அடையாறும், பக்கிங்காம் கால்வாயும் சாக்கடைகளாக மாறிப் போனதை நாம் பார்க்கிறோம். சென்னையே வாழ்வதற்குத் தகுதியற்ற நகரமாக, ஒரு நரகமாக மாறிப் போயுள்ளதைப் பார்க்கிறோம். இன்னொரு பக்கம், கிராமப்புறங்களில் மண் வளம் இழந்து மலடாகிப் போயுள்ளதைப் பார்க்கிறோம். வேதியியல் செயற்கை உரங்களை இடுவதன் மூலம் மென்மேலும் நாம் மண்ணை நஞ்சாக்கி வருகிறோம். கடந்த கால உலக வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளாமல் இங்குள்ள ஆட்சியாளர்கள் அழிவுப் பாதையில் நாட்டை இட்டுச் செல்கிறார்கள். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டை மீண்டும் ஏற்படுத்தும் வகையிலான ஒரு உற்பத்திமுறைக்கு, இலாப நோக்கில் அமைந்துள்ள முதலாளிய உற்பத்திமுறைக்கு மாறாக, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட சோசலிச உற்பத்தி முறைக்கு மாறுவதன் மூலமே நம்மால் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இந்த அடிப்படையில்தான் இன்று நாம் மார்க்சின் பகுப்பாய்வைப் புரிந்துகொள்ள முடியும்.

இன்றைய சூழலியல் சிக்கல்களின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கு மார்க்சியம் எவ்வகையான பங்களிப்பைச் செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்?
சூழலியல் சிக்கல்களை மார்க்சியம் தனித் தனி நிகழ்வுகளாகப் பார்க்கவில்லை. அவற்றைத் தனித் தனியாகத் தீர்க்க முடியும் என்றும் கருதவில்லை. இன்றைய சூழலியல் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருப்பது இலாப அடிப்படையில், மென் மேலும் மூலதனத்தைத் திரட்ட வேண்டும் என்ற வெறியின் அடிப்படையில் அமைந்த முதலாளிய உற்பத்திமுறைதான் என மார்க்சியம் கருதுகிறது. இன்று உலகு தழுவிய அளவில் இயற்கை வளங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதற்கும், புவி வெப்ப மயமாதலுக்கும், அணு ஆயுதப் பேரழிவு என்ற பேராபத்திற்கும், பொதுவாகக் கூறினால் இந்த உலகின் ஒட்டுமொத்த அழிவுக்கும் காரணமாக இருப்பது மூல வளங்களைக் கைப்பற்றுவது, மூலதனத்தைத் திரட்டுவது என்ற முதலாளியப் பேராசைதான். இயற்கை வளங்களுக்காகவும், சந்தைகளுக்காகவும் போர்களில் ஈடுபடுவதற்கும், நாடுகளைக் கைப்பற்றுவதற்கும் காரணமாக இருப்பது இந்தப் பேராசைதான். உலகம் முழுவதும் இன்று மக்கள் அழிக்கப்பட்டு வருவதற்கும், அகதிகளாக நாடுவிட்டு நாடு விரட்டப்படுவதற்கும் இந்தப் பேராசைதான் காரணமாக இருந்து வருகிறது. இன்றைய சூழலியல் சிக்கல்களும் முதலாளிய உற்பத்திமுறையும் பிரிக்க முடியாதவை. சூழலியல் சிக்கல்கள் பற்றிய இத்தகைய ஆழமான புரிதலை மார்க்சியம் வழங்குகிறது

மக்கள் தொகைப் பெருக்கமும் நுகர்வும்தான் சூழலியல் சிக்கல்களுக்கு பொதுவான காரணமாக விளக்கப்படுகிறது.இது பற்றிய உங்கள் கருத்து…
சூழலியல் சிக்கல்களுக்குக் காரணமாக இருப்பது இலாப அடிப்படையிலான முதலாளிய உற்பத்திமுறைதானே தவிர மக்கள்தொகைப் பெருக்கமும் நுகர்வும் அல்ல. மக்களின் இயல்பான தேவைகளை நிறைவு செய்யும் உற்பத்தி முறைக்குப் பதிலாக, பெரும் விளம்பரங்கள் மூலம் செயற்கையான தேவைகளை உருவாக்கி, அவற்றை நிறைவு செய்வதற்கான பொருட்களைச் சந்தைப்படுத்திக் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வகையில் நுகர்வுக் கலாச்சாரத்தைத் திட்டமிட்டு பரப்பி வரும் முதலாளிய உற்பத்தி முறைதான் இதற்குக் காரணம். எடுத்துக்காட்டாக, செல்போனை எடுத்துக்கொள்ளலாம். செல்போன் தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் சிறு சிறு மாற்றங்களுடன் செல்போன்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன. பெரும் செலவில் விளம்பரங்கள் செய்து, மக்களின் மனதில் ஆர்வத்தைத் தூண்டிச் செயற்கையான தேவையை உருவாக்குகின்றன. சமூகத்திற்கு அவை எவ்வளவு தூரம் அவசியம் என்பது பற்றி அந்த நிறுவனங்களுக்கு அக்கறை இல்லை. அவற்றின் நோக்கம் அனைத்தும் இலாபம்தான். மிதமிஞ்சிய செல்போன்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களும், ஆற்றலும், மனித உழைப்பும் சமூகத்திற்கு அவசியமான பொருட்களின் உற்பத்திக்குப் பயன்படாமல் வீணாக்கப்படுகின்றன. செல்போன்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இங்கு இருபத்து நான்கு மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் நாட்டுக்குத் தேவையான உணவை வழங்கி வரும் விவசாயத்திற்குத் தேவையான அளவு மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விளம்பரத்திற்காக இந்த நிறுவனங்களால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் அவற்றுக்காகப் பயன்படுத்தும் ஃபிளக்ஸ் விளம்பரப் பதாகைகள் பெரும் சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் தாள்கள் தயாரிக்கத் தேவையான மரங்களுக்காக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புகொண்ட காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் செல்போன் போன்ற காலாவதியாகிப் போன மின்னணுப் பொருட்களின் கழிவு இன்று பெரும் சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. இவை அனைத்தும் கார்கள் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மேலும், முதலாளிய இலாபத்திற்காக ‘பயன்படுத்தித் தூக்கி எறி’ (use and throw) என்ற அடிப்படையிலேயே இன்று பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு முறை வாங்கியதைப் பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்துவது (re use), மறு சுழற்சி (recycle) என்ற முறைகளை முதலாளியம் திட்டமிட்டு ஒழித்து வருகிறது. மேலும் உற்பத்தி செய்யும் பொருட்கள் விரைவில் காலாவதியாகிப் போகும் முறையிலேயே இன்று தயாரிக்கப்படுகின்றன. இந்த முறைகள் மூலம் முதலாளியம் தமது சந்தையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது.
மேலும், முதலாளியம் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதிலேயே குறியாக உள்ளது. “பொருட்களை வாங்கிக் குவி,, மென்மேலும் பொருட்களை வாங்கிக் குவி” என முதலாளியம் மக்களை எப்பொழுதும் தூண்டிக் கொண்டும், உந்திக் கொண்டும், ஊக்கப்படுத்திக் கொண்டும் இருக்கிறது. ஏனெனில் அதன் மூலமே மென்மேலும் பொருட்களைச் சந்தைப்படுத்தித் தனது இலாபத்தைப் பெருக்க முடியும், மூலதனத்தைத் திரட்ட முடியும். எனவே எளிமையான, சிக்கனமான வாழ்வுக்கு முதலாளிய உற்பத்திமுறையே எதிரி யாக உள்ளது. எனவே இயற்கை வளங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதற்கும், சூழலியல் சிக்கல்களுக்கும் இலாபத்தைத் திரட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ள முதலாளிய உற்பத்தி முறையும், அது திட்டமிட்டு பரப்பி வரும் நுகர்வுக் கலாச்சாரமும்தான் காரணமே ஒழிய மக்கள் தொகைப் பெருக்கமும் அவர்களின் நுகர்வும் காரணமல்ல.
“மக்களின் இயல்பான தேவைகளை நிறைவு செய்யப் போதுமான வளங்கள் இந்தப் பூமியில் உள்ளன. ஆனால் செயற்கையான, கற்பனையான தேவைகளை நிறைவு செய்யப் போதுமான வளங்கள் இல்லை” என கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கத் தத்துவ அறிஞர் எபிகூரஸ் கூறியுள்ளது இப்பொழுதும் பொருந்தும்.

உங்களின் ‘மார்க்சும் சூழலியலும்’ மொழிபெயர்ப்பு நூலானது இயற்கை வரலாறு மற்றும் சமூக வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்துக்களை ஆழமாகப் பேசுகிறது. இந்நூலை வாசிக்கையில் தமிழ்ச் சூழலில் இயற்கை பற்றிய பொருள்முதல்வாதச் சிந்தனை திரட்டப்படுள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி உங்களின் கருத்து என்ன?
தமிழ்ச் சூழலில் இயற்கை பற்றிய பொருள் முதல்வாதச் சிந்தனை இதுவரை போதிய அளவு திரட்டப்படவில்லை என்றே கூறலாம். தொல்காப்பியம், சங்க காலத் தமிழ் நூல்கள், திருக்குறள் போன்றவை இயற்கை பற்றிய பொருள் முதல்வாதச் சிந்தனைக்கு அடிப்படையான ஏராளமான சான்றுகளை உள்ளடக்கியுள்ளன. அவை திரட்டப்பட வேண்டும். அவ்வாறு திரட் டப்பட்டால் பண்டைக் காலத்தில் தமிழ்ச் சமூகத் திற்கும் இயற்கைக்கும் இடையில் நிலவி வந்த உயிரோட்டமான உறவுகள் பற்றிய ஆழமான புரிதல்கள் ஏற்படும். அவை இன்றைய சூழலியல் பாதுகாப்பு இயக்கங்களுக்கும் ஆயுதமாகப் பயன்படும்.

தொழில்துறை வளர்ச்சியை அதிகம் ஊக்குவிப்பதாக மார்க்சியம் மீது ஒரு பொதுக்கருத்து பரவலாக இன்று (மார்க்சியர்களிடமே கூட) நிலவுகிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இலாப அடிப்படையிலான முதலாளியத் தொழில்துறை வளர்ச்சியை மார்க்சியம் எப்பொழுதும் ஊக்குவிப்பதில்லை. “நவீன தொழிற்சாலை என்ற அடிப்படையின் மீது வேகமாக ஆரம்பிக்கப்படும் ஒரு நாட்டின் வளர்ச்சி மிக விரைவில் அதன் செல்வத்தை அழிக்கும். முதலாளிய உற்பத்திமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கிப் பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகளினூடே- நிலம், உழைப்பு- ஆகிய மூல வளங்களை உறிஞ்சி விடும்” என மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் குறிப்பிடுகிறார்.
இலாபத்திற்காக இல்லாமல், மக்களுடைய தேவைகளுக்காக உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு பற்றித்தான் மார்க்ஸ் கூறுகிறார். அங்கு முக்கியத்துவம் பெறுவது மக்களின் தேவைதான். இலாபம் அல்ல. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உழைப்பின் நேர அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் சமூகம் முழுமைக்கும் பகிர்வு செய்யப்படும். அங்கு தனி நபர்கள் இலாபம் அடைவதில்லை, மாறாகச் சமூகம் முழுவதும் பயன்பெறும். உற்பத்தியில் ஏற்படும் ஒவ்வொரு வளர்ச்சியும் சமூகம் முழுமைக்கும் பயன்படும். அத்தகைய வளர்ச்சியைத்தான் மார்க்ஸ் கருதுகிறார்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றிய மார்க்சிய கருத்தாக்கத்தை தெளிவுபடுத்த இயலுமா?
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் சமூகம் முழுமைக்கும் பயன்பட வேண்டும் என மார்க்சியம் கருதுகிறது. அவை தனிநபர்களான முதலாளிகளின் இலாபத்திற்காகப் பயன்படக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு தொழிற்சாலையில் ஒரு நவீன இயந்திரத்தைப் புகுத்தும்போது அங்கு ஆயிரம் பேர் வேலை செய்த இடத்தில் இனி 500 பேரைக் கொண்டு அந்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுகிறது என்று கொள்வோம். அந்த நிலையில், இந்த முதலாளிய அமைப்பில் 500 பேர் வேலை இழப்பர். முதலாளி மட்டும் இலாபம் அடைவார். அதைத்தான் எங்கல்ஸ், “இன்றைய சமூகத்தில் உற்பத்தியாளர்கள் உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, உற்பத்திச் சாதனங்களே உற்பத்தியாளர்களைக் கட்டுப்படுத்துகின்றன. இத்தகைய சமூகத்தில் உற்பத்தியில் ஏற்படுகிற ஒவ்வொரு புதிய மாற்றமும் உற்பத்தியாளர்களை உற்பத்திச் சாதனங்களுக்கு அடிமைப்படுத்தக் கூடிய ஒரு புதிய சாதனமாக மாற்றப்படும்” என்கிறார். ஆனால் ஒரு சோசலிச அமைப்பில், ஆயிரம் பேருக்கும் அங்கு வேலை இருக்கும். ஒருவர் கூட வேலை இழக்க மாட்டார். ஆனால் அவர்களின் வேலை நேரம் குறைக்கப்படும். அதனால் உழைப்பாளர்கள் கடுமையான வேலை நிலையிலிருந்து விடுபடுவர்.
மேலும், இங்கு தொழில்நுட்பம் முதலாளிக்கு இலாபம் அளிப்பதாக இருந்தால் மட்டுமே அவர்களால் பயன்படுத்தப்படும். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றையும், ஆம்பூர் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் பாலாற்றையும் சாக்கடைகளாக மாற்றியுள்ளதைப் பார்க்கிறோம். இந்தக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் இருந்தும் முதலாளிகள் அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இல்லை. ஏனென்றால் அவற்றுக்காக அவர்கள் செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் இலாபத்தில் குறைவு ஏற்படும். அதனால் அவர்கள் கழிவுநீரை அப்படியே ஆறுகளில் கலக்கின்றனர். சூழல் கேடுகளை உருவாக்குகின்றனர். பாதிப்பைச் சமூகத்தின் மீது சுமத்துகின்றனர். அல்லது பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசாங்கம் உருவாக்கித் தர வேண்டும் எனக் கோருகின்றனர். அதாவது மக்களின் வரிப் பணத்திலிருந்து உருவாக்கித் தர வேண்டும் எனக் கோருகின்றனர். இலாபம் முதலாளிகளுக்கு, ஆனால் செலவுச் சுமை மக்களுக்கு. எனவேதான் உற்பத்தி சாதனங்களை, தொழில்நுட்பத்தை உழைப்பாளிகள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும்போதுதான், எத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என உழைப்பாளிகள் தீர்மானிக்கும் நிலை ஏற்படும்போதுதான், அவை சமூகம் முழுவதின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும். தொழில்நுட்பத்தின் முழுமையான பயனையும் அடைய முடியும் என மார்க்சியம் கூறுகிறது.

இயற்கை வேளாண்மை பற்றிய ஆர்வம் இன்று பரவலாக தீவிரப்பட்டுள்ள நிலையில்,முதலாளிய வேளாண்மையின் தொடக்க காலத்திலேயே அதன் கோரப்பண்பு குறித்த மார்க்சின் கூர்மையான அவதானிப்பு பற்றி உங்களின் கருத்து?
ஐரோப்பாவில் முதலாளியத்தின் தொடக்க காலத்தில் வேளாண்மையில் ஏற்பட்ட நெருக்கடி பற்றிய மார்க்சின் கருத்துக்களை முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன். இந்தியாவில் முதலாளிய வளர்ச்சியினால் இன்று வேளாண்மை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து பழைய முறையிலேயே வேளாண்மை நீடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இயற்கை வேளாண்மை ஒரு மாற்றாக முன்வைக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை ஒரு சில வசதி படைத்த விவசாயிகளால் மட்டுமே இன்று முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அவர்களும் முதலாளிய உற்பத்தி முறைக்கும், இன்று ஏற்பட்டுள்ள வேளாண்மை நெருக்கடிக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளவில்லை. சந்தைப் போட்டிகளால் அவர்களால் தொடர்ந்து நீடிக்க முடியாது. மேலும் இயற்கை வேளாண்மை என்ற பெயரில் இயற்கை சார்ந்த வேளாண் இடுபொருட்களைத் தயாரிப்பதில் இன்று பெரும் நிறுவனங்களும் நுழைந்துள்ளன. இந்த நிலையில் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் கூறி வரும் தற்சார்பு வேளாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு வேளாண்மையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக பிழைப்புத் தேடி ஏராளமான ஏழை, கூலி விவசாய மக்கள் நகரங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் கிராமப் புறங்களில் உழைக்கப் போதிய கரங்கள் இல்லாததால் நிலங்கள் தரிசாகப் போடப்படும் நிலை உருவாகி வருகிறது. இந்த முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால் நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். நிலங்கள் நேரடியான உற்பத்தியாளர்களின் கைகளில் வழங்கப்பட வேண்டும். அவை படிப்படியாகக் கூட்டுறவு வேளாண்மை உற்பத்திமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். நகரங்களை மையமாகக் கொண்ட தொழில்துறை உற்பத்திக்குப் பதிலாக மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் வேளாண்மையும் தொழில் உற்பத்தியும் இணைக்கப்பட வேண்டும். அதன் மூலமே இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் விரும்பும் வேளாண்மை சாத்தியம்.

அண்மையில் பாரிசில் நடந்த ஐ.நா.வின் காலநிலை மாற்றம் பற்றிய மாநாட்டில், காலநிலை மாற்றம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானகரமான முடிவுகளை உலக நாடுகள் நடைமுறைப்படுத்துமா?
கடந்த டிசம்பரில் பாரிசில் நடைபெற்ற காலநிலை மாற்றம் பற்றிய மாநாட்டில் 196 நாடுகள் கலந்துகொண்டு இரண்டு வாரங்கள் விவாதங்கள் நடத்திச் சில தீர்மானங்களை எடுத்துள்ளன. அவற்றில் முக்கியமானது புவி வெப்ப அதிகரிப்பு தொழில் புரட்சிக்கு முந்தி இருந்த நிலையிலிருந்து 1.5 பாகை செல்சியசுக்கு மேல் செல்லாமல் தடுக்கத் தேவையான நடவடிக் கைகளை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும் என்பது. எந்த முதலாளிய நிறுவனங்கள் புவி வெப்பமாதலுக்குக் காரணமாக உள்ளனவோ அந்த நிறுவனங்களின் நிதி ஆதரவுடன் இந்த மாநாடு நடந்துள்ளது. புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக இருப்பது புதை படிவ எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், இயற்கை வாயு ஆகியவற்றைத் தொழிற்சாலைகளுக்கும், போக்குவரத்துகளுக்கும் பயன்படுத்துவது, இவற்றின் விளைவாக உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களும்தான். இன்னொரு பக்கம் இவ்வாறு உமிழப்படும் கரியமில வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் காடுகள் அழிக்கப்படுவதும் காரணமாகின்றன. இன்று தொழிற்சாலைகளின் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாததாக விளங்கும் எண்ணெய்க் கிணறுகளையும், இயற்கை வாயுவின் மூலாதாரங்களையும் கைப்பற்றவே அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மேற்கு ஆசிய நாடுகளில் போர்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த நாடுகள் தமது எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்திக் கொள்ளும், குறைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்க முடியுமா?
கடந்த 25 ஆண்டுகளில், 1992 ல் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற மாநாடு தொடங்கி, 1997ல் கியாட்டோவில் நடைபெற்ற மாநாடு உட்பட இதற்கு முன்பு பல மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அந்த மாநாடுகளில் எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானங்களும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. அந்தக் கதிதான் இந்த மாநாட்டின் தீர்மானங்களுக்கும் ஏற்படும்.

மார்க்சியக் கண்ணோட்டத்தில் சூழலியலை அணுகுகிற பசுமை மார்க்சிய விவாதங்கள் தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன?
மார்க்சியக் கண்ணோட்டத்தில் சூழலியலை அணுகுகிற மார்க்சிய விவாதங்கள் தமிழகத்தில் இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளன. 1990களின் மத்தியிலேயே சூழலியல் பற்றிய மார்க்சியக் கருத்தாக்கங்கள் தொடர்பான விவாதங்கள் இங்கு தொடங்கப்பட்டிருந்தாலும் அதன் தாக்கம் ஆழமாக இல்லை. மார்க்சியக் கட்சி வட்டாரங்களில் அதன் முக்கியத்துவம் போதிய அளவுக்கு உணரப்படவில்லை.
சூழலியல் பற்றிப் பேசினால் தொழில்கள் பாதிக்கப்படும்; தொழில்கள் பாதிக்கப்பட்டால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கண்ணோட்டம் கட்சி வட்டாரங்களில் மேலோங்கியுள்ளதுதான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன். தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்காகத் தொடர்ந்து இந்த முதலாளிய உற்பத்திமுறையை நாம் காப்பாற்றி வர வேண்டுமா? அதன் மூலம் தொடந்து தொழிலாளர்கள் கூலி அடிமைகளாகவே இருந்து வர வேண்டுமா? அதற்காகச் சமூகத்தையே அழித்து வரும் சூழலியல் சீர்கேடுகளைத் தொடர்ந்து சகித்துக் கொண்டு வர வேண்டுமா? அல்லது கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, அனைத்து உற்பத்திச் சாதனங்களுக்கும் உடைமையாளர்களாக மாறி, சமூகத் தேவைகளின் அடிப்படையில் எத்தகைய பொருட்களை, எத்தகைய தொழில் நுட்பங்கள் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் சுதந்திரமான நிலையைத் தொழிலாளர்கள் அடைய வேண்டுமா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள். உழைக்கும் மக்களின் விடுதலையுடன் சூழலியல் சிக்கல்கள் பின்னிப் பிணைந்துள்ளன. உழைக்கும் மக்கள் கூலி அடிமைகளாக நீடிக்கும் வரை சூழலியல் சிக்கல்களைத் தீர்க்க முடியாது. உழைக்கும் மக்களுக்கான தற்காலிகமான கூலி வேலை அல்ல, மாறாக உழைக்கும் மக்களின் விடுதலையே தமது இலட்சியம் என்பதைக் கொண்டுள்ள மார்க்சிய இயக்கங்கள் மக்களின் விடுதலைக்கும் சூழலியல் சிக்கல்களுக்கும் இடையில் உள்ள உறவைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதுதான் இன்றைய தேவையாக உள்ளது.

சூழலியல் சீர்கேடுகளுக்கு எதிராக உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்களின் படிப்பினைகள், சூழலியல் குறித்த மார்க்சிய கோட்பாட்டை வளர்த்தெடுப்பதில் எந்தவகையில் பங்களிப்பு செய்கின்றன?
சூழலியல் சீர்கேடுகளுக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் இன்று உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. பசுமை இயக்கங்கள் போன்ற இயக்கங்கள் நிலவுகின்ற இந்த அமைப்புக்குள்ளேயே சில சீர்திருத்தங்கள் மூலம் சூழலியல் சீர்கேடுகளைக் களைந்து விடலாம் எனக் கருதி வருகின்றன. ஆனால் தனது இலாப நோக்கத்திற்காக இயற்கையையும், மனித ஆற்றலையும் வேகமாக அழித்து வரும் முதலாளிய உற்பத்திமுறை நிலவும் வரை சூழலியல் சீர்கேடுகளைக் களைய முடியாது என்பதை எதார்த்தம் காட்டி வருகிறது. இந்த வகையில் சூழலியல் சீர்கேடுகளுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும், படிப்பினைகளும் மார்க்சியச் சூழலியல் கோட்பாட்டைச் சரியென மெய்ப்பித்து வருகின்றன.

ஜூன் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *