கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

மார்க்வெஸைப் பற்றிய தவறான பொருள்கொள்ளல்

சிறுபத்திரிகை

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் 40ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கின்றன. கொலம்பியாவில் மிகுந்த ஆரவாரத்துடனும், ஸ்பானிய மொழி பேசும் மற்ற பகுதிகளில் சற்றே குறைவான ஆரவாரத்துடனும் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டங்களிலுள்ள மிகைத் தன்மை அப்புதினத்தின் உள்ளடக்கம்/உள்ளீடு பற்றிய விளக்கம் கோருவதாக இருக்கிறது. இந்தக் கொண்டாட்டங்கள் ஒரு நட்பின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போலன்றி, வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்றினை கொண்டாடுவது போலும் (ஒரு சர்வாதிகாரியின் பிறந்த நாளை உதாரணமாகக் கொள்ளலாம்) அம்மாகாணத்தால் அனுசரிக்கப்பட்டுள்ளது. இது, அப்புதினம் சந்தர்ப்பவாத ஒருமுக அரசியலில் பிழைத்தவிதம், அப்புதினத்தின் தன்மை மற்றும் இலக்கியத்தில் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்துவதாக உள்ளது. ‘மகோண்டியன்’ எனும் பெயருரிச்சொல் தற்போதைய இலத்தீன் அமெரிக்க சொற்களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சொல்லை இக்கொண்டாட்டங்களுக்கும் பொருத்திப் பார்ப்பதில் நமக்கு எவ்வித மனவுறுத்தலும் இருக்காது என்று நினைக்கிறேன். விமர்ச கர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் மிகக் கடுமையாக முயன்று, ஒரு சவத்தினை வாசனையூட்டிப் பாதுகாப்பது போலும் இப்புதினத்தை பவனிவரச் செய்தனர். கிட்டத்தட்ட குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் போலத்தான் அது. இலக்கிய விமர்சகர்களின் ஒரே ஆயுதமும், வசதியான வாதமும் என்னவென்றால், இரண்டு தலைமுறைகளாக இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மார்க்வெஸின் இருப்பை முன்னிறுத்தி மறுபடி மறுபடி ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பதுதான். இக்கேள்வி சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய கொலம்பிய எழுத்தாளர்களைச் சுற்றிப் பீடித்திருக்கக் கூடியது, ‘நூற்றாண்டுகாலத் தனிமை’ யின் கீழ், அதன் நிழலில் எவ்வாறு எழுதுவது?’. முதலில் இந்தக் கேள்வியே அபத்தமானது. இது எழுத்தாளர்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் வெற்று ஆரவாரமான சூனியம் போன்றது. இதை நான் ஏற்கெனவே பலமுறை நேர்காணல்களில் தெரிவித்திருப்பினும் மீண்டும் ஒருமுறை என் மறுப்பை வெறுப்புகளேதுமின்றி, சரியான மற்றும் தெளிவான முறையில் சொல்ல முயற்சிக்கிறேன்.

மார்க்வெஸின் பாதிப்பு என்று திரித்துச் சொல்லப்பட்ட இவ்வனுமானம்; இதை எம்முனையிலிருந்தும் தகர்க்க ஆரம்பிக்கலாம் எனினும் முதலில் மார்க்வெஸின் ஆளுமை அல்லது செல்வாக்கு என்பதிலிருந்து ஆரம்பிக்கிறேன். இக்கருத்தில் இருக்கும் ஒரு தவறான புரிந்துகொள்ளுதல் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்று நம்புகிறேன். முதலில் இந்த அனுமானமே இயல்முரணானது, வரம்புக்குட்பட்டது, குறையுள்ளது. மேலும் இலக்கிய ஆன்மாவுக்கு முற்றிலும் வேறான தன்மையுடையது. ஆளுமை என்பதே நாடுகளுக்கேற்ப மாறக்கூடியதுதான். பொலிவிய அல்லது மொராக்கோ எழுத்தாளர்களுக்கு மேஜிகல் ரியலிச எழுத்துகளுக்கு மீறி எவ்வாறு எழுதுகிறீர்கள் என்ற கேள்வி வருவதில்லை. இந்திய எழுத்தாளர்களுக்கும் அப்படித்தான். அது ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ எழுதிய சல்மான் ருஷ்டியாகவே இருந்தாலும். ஏனெனில் அவரின் அப்புதினம் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யைப் படிக்காமல் புரிந்துகொள்வது சற்றே கடினம். இலத்தீன் அமெரிக்க மனவமைப்பினால் பலமுறை துன்புறுத்தலுக்கு ஆளான போர்ஹே சொல்கிறார், “…….. இலக்கியம் தன் கலாசாரத்தின்/நாட்டின் தனிக்கூறுகளின் அடிப்படையில் தன்னை வெளிக்காட்ட வேண்டும் என்பது புதிய விஷயம்தான்; அதே நேரம் எழுத்தாளர்கள் தங்கள் மண்ணிலிருந்தே தங்கள் கதைக்கான கருவை உருவாக்க வேண்டும் என்பது தன்னிச்சையானது மற்றும் ஒப்பிடுகையில், முற்றிலும் புதுமையானது”. போர்ஹேயின் இவ்விரு கருத்துகளும் மார்க்வெஸின் ஆளுமை எனும் அனுமானத்திலிருந்து தப்பிப் பிழைக்கின்றன. திசை திருப்பப்பட்ட வாசகன் கொலம்பியத்தன்மை என்ற ஒன்று இருப்பதாகவும், மகாண்டோ (ஒரு புனைவுக் கிராமமும் அதில் வசிப்பவர்களும்) அத்தன்மையை தனக்குள் கொண்டிருப்பதாகவும், கொலம்பிய எல்லைக்குள் பிறந்து புனைவுகளைப் படைக்கும் எழுத்தாளனொருவன் இந்த மகோண்டியப் புனைவுலகைத் தவிர்க்க முடியாது தனது படைப்புக்குள் கடத்துவதாகவும் நினைக்கிறான். பின் படைப்புகள் அந்தப் புனைவுலகின் தரத்துடன், கொலம்பியத்தன்மை எனும் கருதுகோளின் தரத்துடன் ஒப்பீடு செய்யப்படுகின்றன. இந்த சூழ்நிலையின் அசட்டுத்தனம், ஒரு புதினம் என்பதில் எழுத்தாளனின் அனுபவமே எழுத்தாக்கப்பட்டிருக்கிறது எனும் உண்மையை மறக்கச் செய்கிறது எனலாம். இத்தவறான புரிந்துகொள்ளுதல் எழுத்தாளன் தனக்கான கருவியைத் தானே கண்டடையாது, தனது பிராந்திய மரபுகளை மட்டுமே எடுத்துக்கொள்வதில் முடிகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இத்தவறான கருத்தாக்கத்தினால் எழுத்தாளன், இலக்கியத்தூண்டல் என்பது அனிச்சையானது (எழுத்தாளன் அறியாது அவனிடத்தில் வந்துவிடும்) தவிர்க்க முடியாதது (எழுத்தாளன் இதிலிருந்து தப்பிக்க முடியாது) என்று நம்ப ஆரம்பிக்கிறான். உண்மையில் செல்வாக்கு ஆளுமை என்பதெல்லாம் நோய்மையன்றி வேறில்லை.

1959 அக்டோபரில், கொலம்பியப் பத்திரிகையான லா கேல் (La Calle) ‘மார்க்வெஸின் லா வயலென்ஸியா பற்றி இரண்டொரு விஷயங்கள்’ எனும் கட்டுரையைப் பிரசுரித்தது. 3 லட்சம் மக்கள் அரசியல் வன்முறையின் கார ணமாக இறந்திருந்த அத்தருணம், அப்புதின எழுத்தாளன் அதை உண்மையாக எதிர்கொண்டதான ஒரு மாயையைத் தோற்றுவித்தது. La Novella Compro metida எனும் அப்புதினம் பன்முறை உருவேற்றப்பட்டது. அப்புதினம் பின்வரும் கருத்தை/தீர்வை உள்ளடக்கியதாக இருந்தது. “நேர்மை என்பது தாம் உணர்ந்ததை எழுத்தாக்குதலைவிட அதைச் சமகால அரசியல் சூழலுடன் பொருத்தி அது எதைச் சுட்டுகிறது என்று சொல்வதே உயர்ந்தது. அவ்விஷயத்தை நீங்கள் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாலும் சரி”. இந்நேர்மைபற்றிய கருத்தாக்கம் ஹெமிங்வேயிடமிருந்து வந்தது. அந்நாட்களில் மார்க்வெஸ் அவரால் கவரப்பட்டிருந்தார். லா வயலென்ஸியா பற்றிய கடும்தாக்குதல்களுக்குப் பிறகு அவர் பின் வருமாறு எழுதினார்,

எழுத்தாளர்கள் இது போன்ற வன்முறையைப் பார்க்க வேண்டும் என்பதற்கு நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனினும் அவர்களுக்கு அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தும் பொறுமையோ, புத்திசாலித்தனமோ இருப்பதாய்த் தெரியவில்லை. எல்லா எழுத்தாளனும் ஒரு பாதிப்பிலிருந்தே துவங்குகிறான் என்பதில்லை. ஒரு இலக்கியப் பாரம்பரியத்தை ஓர் இரவில் தொடங்கமுடியாது எனும் கருத்து கொலம்பியாவில் இல்லை. மார்க்வெஸ் அறிந்திருக்கக் கூடும் (அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லையாயினும்) பாரம்பரியம் என்பது முகம்மதிடம் வரவில்லையெனில், முகம்மது பாரம்பரியத்திடம் செல்ல வேண்டும். கொலம்பியாவைப் பொறுத்தவரையில் தனக்கு யாரும் முன்மாதிரி இல்லை என்பதால் அவர் வெளியில் தேட வேண்டியதாயிற்று.

பாக்னர்

அவரது முதல் இரை வில்லியம் ஃபாக்னர். ஃபாக்னரின் மிகுசொற்புணர்ச்சிகளும், கலைக்கப்பட்ட வரிசைகளையும் அடிப்படையாகக்கொண்டு ‘மென்புயல்’ (Leaf Storm) புதினத்தை எழுதினார். போதுமான பரபரப்போ எதிர்பார்த்த விளைவுகளோ ஏற்படாததால் அவரைப் புறந்தள்ளி விட்டு வேறு ஆட்களைத் தேட வேண்டியதாயிற்று. அடுத்து அவர் தேர்ந்தெடுத்தது எர்னஸ்ட் ஹெமிங்வே. அவரது ஆதரவில் எழுதப்பட்டதுதான் ‘கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை’ (Nobody Writes To The Colonel). ‘கடலும் கிழவனும்’ (The Old Man And The Sea) என்பதைத் தழுவி எழுதப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்குப் பின் அவர் எழுதியதுதான் La Violencia (The Violence) பற்றிய குறிப்புகள். இதைப்பற்றி ஏற்கெனவே சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் இதுவரை சொல்லாத தகவல், இந்நாவலுக்கு முன்மாதிரியாக அவர் குறிப்பிட்டிருந்தது The Plague எனும் புதினத்தை. சில வருடங்கள் கழித்து In Evil Hour வெளிவந்தது. La Violencia என்பது அவருடைய மிக மோசமான புதினம், விமரிசிக்கத்தகுந்ததும், அறிவுப் பிறழ்ச்சியையும் வன்முறையை உருவகப்படுத்தியதுமே அதில் முக்கியமானது. In Evil Hourஇல் அவர் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இலக்கிய ரசவாதத்தின் பாராட்டு ஆல்பர்ட் காம்யூக்கு செல்ல வேண்டியது என்று.

நான் சொல்ல விரும்புவது, இந்த உருப்படுத்தப்பட்ட அல்லது தொல்கதை போன்ற அல்லது இன்றியமையாத – இதில் எந்தக் க்ளிஷேவையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் க்ளிஷேவில் இருந்து நீங்கள் தப்ப முடியாது – இப்புதினம் முன்கருதுதலுடன் அமைந்த ஒரு செய்கை. அது தன் முன்மாதிரிகளால் அமைந்தது. இளம் புதின எழுத்தாளன் தன் முன்மாதிரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறான், பொறாமை கலந்த லாவகத்துடன் அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமிருப்பதை முறுக்கிப் பிழிந்தெடுப்பதை ஒரு முறைப்படுத்தப்பட்ட வடிவில் தன் தேவைகளுக்கேற்பவோ அல்லது தன் நுட்பக் குறைகளுக்கேற்பவோ, ஒரு உந்துதலுடன் (ஒரு பெரிய எழுத்தாளன் இதில் விற்பன்னன்) தன் அனுபவத்திற்கான சரியான வடிவத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறான். இந்தச் செயல் எப்போதுமே எல்லை தாண்டியது. வேறு வகையில் சொல்வதானால் இறக்குமதி செய்யப்பட்டது. மார்க்வெஸ் தன் மாகாண எழுத்தாளர்கள் யாரையும் இதில் நம்பியிருக்கவில்லை. ‘சுழல்’ (The Vortex) எழுதிய ஜோஸ் ரிவேராவிலிருந்து ‘என்னுடன் நான்கு வருடப் பயணம்’ (Four Years On Board With Myself) எழுதிய எட்வர்டோ ஸலாமி வரை யாரையுமே நம்பவில்லை. அவர்கள் அனைவரும் உபயோகமற்றவர்கள் அல்லது முழுமை அடையாதவர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார் (தன் உள்ளுணர்வால்). ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் வெளியீட்டிற்குப் பின் 1967 செப்டம்பரில் லிமோவில் உள்ள தேசியப் பொறியியற் பல்கலைக்கழகத்தில் (National University of Engineering) மரியோ வார்காஸ் ல்லோஸாவுடன் உரை நிகழ்த்தியபோது, வெளிப்படையான அறிவிப்பாக (நூற்றாண்டுகாலத் தனிமையின் முன்னோடி ‘மென் புயல்’ (Leaf Storm) தான், எனவேதான் இரண்டு புதினங்களுக்குமிடையில் மொழியில் ஒற்றுமை காணப்படுகிறது) அவர் சொன்னது, “இன்றைய இளம் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களாகிய நாம் ஃபாக்னருக்கு மிகவும் கடன்பட் டுள்ளோம்”.

இலத்தீன் அமெரிக்க உண்மைகளை எடுத்துரைக்க ஃபாக்னரின் முறைகள் சிறந்தது. இதை நாம் நம்மையறியாது உணர்கிறோம். வெளிப்படுத்த விரும்பும் உண்மைகளைக் கூற ஐரோப்பிய முறை களோ அல்லது பழைய ஸ்பானிய முறைகளோ உதவாத நிலையில் ஃபாக்னரின் முறை மிகச் சரியாகப் பொருந்திப் போவதை உணர்கிறோம். இது ஒன்றும் அந்நியமான விஷயமில்லை, ஏனெனில் யோனாபடாஃபா மாகாணம் அமைந்திருந்தது கரீபியக் கடலோரங்களில்தான். எனவே, ஒரு வகையில் ஃபாக்னரும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்தான்.

ஜோஸ் ரிவேரா

புயலினால் அடித்துச் செல்லப்படுவதுபோல ஓர் எழுத்தாளன், ஒரு முறையை, தான் உணர்ந்த உண்மையைச் சொல்லப்பயன்படுத்தினால் அதைத் தாக்கம் எனலாம். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்தத் தாக்கம் என்பது மோசமான எழுத்தாளனுக்கு அனிச்சையான செயலாக மாறிவிடும். தன்னிடத்தில் உள்ள தரவுகளின்மேல் ஓரளவே ஆளுமை உள்ள ஒரு எழுத்தாளன் அத்தரவுகளை ஆராய்ந்து, தேடித் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். அத்தரவுகள் தன்னை எந்த அளவுக்கு செயல்பட அனுமதிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறான். அதைக் கையாள்வதினால் ஏற்படக் கூடிய ஒவ்வாத விளைவுகளையும் அவற்றைச் சமாளிக்கும் விதத்தையும் அறிந்து வைத்திருக்கிறான். மார்க்வெஸின் செல்வாக்கு ஏற்பட்ட விதத்தை ஆராய்ந்தால் அது நம்பிக்கையான ஒரு பாரம்பரியம் என்ற அளவில் இருப்பதை உணரமுடியும். தேர்ந்த எழுத்தாளனொருவனுக்கு இந்தப் பாரம்பரியம் என்பது அவன் தன் அடுத்த தலைமுறைக்கு கடத்த விரும்பும் கருவிகளின் பட்டியல். இக்கருவிகள் தேசத்தின் சீரிய பண்புகள் என்ற அளவிலல்லாது இலக்கியம் சார்ந்தவையாக இருக்கின்றன. இக்கருவிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது அவனுடைய அனுபவங்களை இலக்கியமாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. போர்ஹேயின் கூற்றுப்படி, “எழுத்தாளன் என்பவன் தன் முன்னோடிகளை உருவாக்குகிறான்”. அது அப்படித்தான் நடக்கிறது. தான் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களுக்கு நேர்மையாக உள்ள எழுத்தாளன் வாழ்விலிருந்து எழுத்தாக்கக் கூடிய தரவுகளைத் தேர்ந்தெடுக்கிறான், ஏனெனில் முன்னோடிகளின் வெற்றி அவர்களின் வழிநடப்பவர்களுக்கும் சொந்தமாயிருக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு சிறப்பான உறவினை ஏற்படுத்துகிறான். இந்த அடையாளத் தேடலில் சிலசமயம் தன் இலக்கியத் தந்தை என்பவரையும் தாண்டி எதிர் கொள்கிறான், சமயங்களில் அவர்களைக் கொன்றே விடுகிறான். ஹெரால்ட் ப்ளூம் தன்னுடைய அற்புதமான சிறிய புத்தகத்தில் (The Anxiety of Influence) சொன்னதுபோல், ‘தவறுதலான வாசிப்பு’ அல்லது ‘தவறான விளக்கம்’ என்பதைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. முன்னோடிகளைத் தொடரும் ஒரு புதின எழுத்தாளன் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’ போன்ற ஒரு புதினத்தின் சாயலில் எழுதுபவன் இத் ‘தவறான விளக்கத்தை’ உள்வாங்கிக் கடத்திச் செல்கிறான். புதிய பார்வை உள்ள ஒருவன் இந்தத் தேவையான பொய்களை வேறுபடுத்தி, முன்னோடிகளின் போதாமையை, குறையை, முழுமையற்ற தன்மையை உணர்ந்து கொள்கிறான். அவனுடைய வேலை அதிலுள்ள குறைகளைச் சரி செய்வது. இதுதான் ஓர் இடைத்தர எழுத்தாளனுக்கும் உண்மையான எழுத்தாளனுக்குமான வித்தியாசம். “செயல்திறமில்லாதவன் முன்னோடி களை வரித்துக் கொள்கிறான்” என்பார் ப்ளூம். சரியான முறையில் சிந்திக்கக் கூடியவன் மற்றவர்களின் படைப்பில் இருந்து சரியானதை எடுத்துக் கொள்வான். இடைத்தரமானவர்கள் கார்சியா மார்க்வெஸிடமிருந்து தவறான விளக்கம் பெறக் கூடும். இவ்வாறு ஒருவரின் மேல் மிகுந்த மரியாதையுடனும் முட்டாள் தனத்துடனும் படிப்பவர்களின் படைப்பு கதம்பம் போலாகிவிடுகிறது. ஏனெனில் அவர்கள் தாங்கள் படித்துணர்ந்த முறைகளை மறுபடி மறுபடி பயன்படுத்தத் தயங்குவதில்லை. மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள், சரி செய்வதில்லை, இதை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறேன். எனவே விமர்சகர்களாக மாற வேண்டியவர்கள் வெறும்போலச் செய்பவர்களாகிவிடுகிறார்கள்.

ஒவ்வொரு சிறந்த உண்மையான புதினமும், முக்கியத்துவத்தின் கற்பனையைத் தூண்டும் புதினமும், முக்கியத்துவம் என்பது மாறுதல் அடைவதாக இருந்தாலும் பரவாயில்லை, அது தன்னுள் தனக்கு முன்னோடியான புதினத்தின் விமர்சனத்தை உள்ளடக்கியதாக உள்ளது. ஒவ்வொரு உண்மையான புதினமும் தன் தாய்ப் புதினத்தின் போதாமையை, அப்புதினத்தில் காணப்படும் இடைவெளிகள் அல்லது குறைகள் அல்லது எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படியில்லாமல் போன இடங்கள் என்று சுட்டிக்காட்டுகிறது அல்லது அதற்காக முயல்கிறது. முடிவில் ஒவ்வொரு உண்மையான புதினமும் ஊன்றிய பார்வை மற்றும் தற்செயல் நிகழ்வு என்பதில் முக்கியமானதாகிறது, வேறொரு புதினத்தின் விமர்சனம் என்பதாகத் தன்னை அமைத்துக்கொள்கிறது. ‘மென்புயல்’ என்பது ஃபாக்னரின் அனைத்து சிறந்த படைப்புகள் மற்றும் குறிப்பாக ‘திருமதி.டல்லோவே’வின் விமர்சனத்தை உள்ளடக்கியது. ‘கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை’, ‘கடலும் கிழவனும்’ என்பதன் விமர்சனமே. அதில் மீன் என்பது இதில் சேவலாகவும், மீனவன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் மாற்றப்பட்டது. வார்காஸ் ல்லோஸா எழுதிய கார்ஸியா மார்க்வெஸ்:உறுதியின் வரலாறு (Garcia Marquez: Historia de un decidio) என்பதில், “ஒவ்வொரு புதினமும் தனக்கு முன் நிகழ்ந்த புனைவான உண்மைகளைச் சரிசெய்யும், மாற்றும், அல்லது ஒழித்துக் கட்டும் முயற்சி என்று வாதிடுவேன்” என்கிறார். எனவே இலக்கியத்தாக்கம் என்பது அதைச் சரிசெய்யும், மாற்றும் அல்லது முடித்துவிடும் முயற்சிதான். இது கருதிச் செய்யும் செயலாகவே இருக்கும். ஏனெனில் இச்செயல் ஒரு மெய்யான உண்மையை, முற்றுப் பெறாத உண்மையை எழுத்தாளனுக்கு உணர்த்தலாம் அல்லது அவனுக்கு மட்டுமே அந்த உண்மையின் பார்வை கிடைத்திருக்கலாம். எப்படியிருப்பினும் ஒவ்வொரு உண்மையான எழுத்தாளனின் உள்ளுணர்வும் இவ்வாறான சீரான உண்மைகளைத் தேர்வதும், ஒவ்வாதன வற்றை அறிமுகப்படுத்துதலும், முரணான வரிசைகளை விதைப்பதும் அதன் ஒவ்வொரு பகுதியையும் பிரித்துப் பார்ப்பதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மரியோ வார்காஸ் ல்லோஸா

மார்க்வெஸைப் பற்றிய கற்பனை உலகத்தைக் கட்டமைத்த மெய்யான உண்மையும் மற்றும் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் புனைவான உண்மையும், கரீபியப் பிரதேசத்தின் பிரமாதமான உண்மைகளும், ஒரு குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் தனிமனப் போக்கினாலும், கலையார்வமிக்க நடைச் சிறப்பினாலும் வடிகட்டப்பட்டுவிட்டது. இது நான் பார்த்த சமகால நகர வாழ்வின் உண்மையிலிருந்து மிகவும் விலகியது. வாசிப்பவனைத் தவறான விளக்கத்தினுள் தீவிரமாகத் தள்ளிவிடும்வகையிலும் அமைந்தது. என்னுள் தளிர்க்காததும் எப்பொழுதும் முளைக்காததுமான உண்மை. இப்படி உண்மையின் மேல் முளைத்த நான் அறிந்திராத, புரிந்திராத ஒன்று எப்படி என்னை விமரிசிக்கத் தூண்ட முடியும்? என் முன்மாதிரிகளின் தேடலில் (முறைகளுக்கான தேடல்) மார்க்வெஸ் சொல்லிக் கொள்வதைப் போன்று ‘நூற்றாண்டுகாலத் தனிமை’ ஒரு தேர்வாகவே அமையவில்லை. ஏனெனில் இருபத்தோராம் நூற்றாண்டின் பிற்பகுதிப் பகோட்டா அல்லது இளம் ஐரோப்பியக் குடியேறியின் அனுபவம் என்பதைத் தவிர மகோண்டியப் புனைவில் வேறெதுவும் இல்லை. மார்க்வெஸ் தனக்கான விவரணை முறையில் ஒரு கருவியை ஃபாக்னரிடம் கண்டறிந்ததுபோல, அவரைப் பொறுத்தவரையில் அது இலத்தீனமெரிக்க உண்மையாக இருக்கலாம், நான் எனக்கானவர்களை வட அமெரிக்கப் புதின எழுத்தாளர்கள் (குறிப்பாக யூதர்கள்) சில குறிப்பிட்ட நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர்கள் உதாரணமாக, ஜோசப் கோன்ரட், வி.எஸ்.நைபால் ஆகியோரிடம், மனித அனுபவங்களை விவரிக்கும்விதம், தனிமனிதனோ அல்லது கூட்டாகவோ, என்னுடைய தேவைகளைத் திருப்திப்படுத்துவதால் பெற்றுள்ளேன். பிலிப் ராத்துக்கு நியூயார்க்கும், சாவுல் பெல்லோவுக்கு சிக்காகோவும் எப்படியோ, அப்படி American pastoral அல்லது The Dean’s December – எனக்குப் பகோட்டாவைப்போல நெருங்கியதாய் உள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் குடிமகனாக இருந்து இங்கிலாந்துக்கு வந்து எழுத்தாளனாக வேண்டும் என்று வித்தியாசமான சிந்தனையோடிருந்த நைபாலின் அனுபவங்கள், என்னுடைய அனுபவங்களை அளக்கும் அளவு கோலாக இருந்தன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், நானும் என் நாட்டைவிட்டு வந்து பன்னிரண்டு ஆண்டுகளாகிறது. எழுத்தாளனின் கற்கும் நடைமுறை என்பது நிச்சயத்தன்மை இல்லாமலும், பாதுகாப்பின்மையாலும் ஆனது. தப்பிப்பிழைக்க விரும்பும் ஒரு எழுத்தாளன் தனக்கான ஒரு முன்மாதிரியைப் பற்றியிருக்க வேண்டியுள்ளது. இப்போதிருக்கும் பல போலச்செய்யும் மேஜிகல் ரியலிஸ எழுத்தாளர்களுக்கு நடந்ததுபோன்று, போதாமையோடு இருக்கும் ஒரு முன்மாதிரி அவர்களின் புலனுணர்வை மூழ்கடித்து, ஆக்கபூர்வமான கலைஞன் என்கிறவகையில் தோல்வியுறச் செய்கிறது. உண்மையான எழுத்தாளன் வெறுமையிலிருந்து எதையும் உருவாக்க முடியாது, தன் ஒவ்வொரு அடியிலும் தன் பாரம்பரியத்தியும் சேர்த்தே சுமந்து செல்ல வேண்டியுள்ளது. அச்சுமை, உரைநடைப் புனைவுகளின் மொத்த வரலாறு மற்றும் சமகாலத்தினர் என்ன அதில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உள்ளடக்கியது. அதே நேரத்தில் தன்னுடைய தேவைகளைத் தன் முன்னோடிகளின் படைப்புவழியே அது அப்படைப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உணர முற்பட வேண்டியுள்ளது. இதைத்தான் நான் தவறான புரிந்துகொள்ளுதல் என்கிறேன். இதுவே இலக்கியத்துக்கான புதிய பார்வையும்.

போர்ஹே

நான் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் இன்றைய மேம்பட்ட நிலையினை மறுக்கச் சொல்லவில்லை. அந்நிலை தற்போது ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. கொலம்பிய எழுத்தாளர்கள் தங்களின் அனுபவக் குறைவினாலும், கவனமின்றியும் அல்லது சோம்பேறித்தனத்தினாலும் வெளியில் சென்று புதிய கருவிகளைத் தேடமுடியாதவர்களாக , தங்களுக்கான ஒரு பாரம்பரியத்தை உருவாக்க முடியாதவர்களாக, தங்களுக்கான முன்னோடியை உருவாக்க முடியாதவர்களாக, தங்களைத் தங்கள் வீடுகளுக்குள் சுருக்கிக் கொண்டு தங்கள் வீட்டைச் சுற்றி இருப்பவைகளில் படைப்புகளை நிகழ்த்திக் கொண்டு தங்கள் எல்லைக்குட்பட்ட பாரம்பரியத்திலேயே வேலை செய்து கொண்டு ‘நூற்றாண்டுகாலத் தனிமை’யின் நிழலில் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு மார்க்வெஸின் படைப்புகள் புதிய உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன. கவனியுங்கள், உண்மையான படைப்பாளிகள் எப்போதும் பொறாமை கொண்டவர்கள்.

ஹரால்ட் ப்ளூம் சொல்வதுபோல, “கவிதை என்பது கவிஞனின் முன்னுரிமை ஒழிந்த இருமை நிலை”. உண்மையான எழுத்தாளனின் ஒவ்வொரு புத்தகமும் மற்ற புத்தகங்களின் சிறப்புத்தன்மையை வீழ்த்தும் முயற்சி. இலக்கியம் என்பது தொடர் விளையாட்டு. புதின எழுத்தாளன் பயிற்சியாக, தொடக்கமாக பழகுவதற்காக இரண்டு முதல் பத்துப் புத்தகங்களை எழுதவேண்டியுள்ளது. இப்பயிற்சியின் விளைவாக எழுத்தாளன் வேறொரு புத்தகத்தின் நிலையை மறுப்பதற்கான காலத்தைத் தீர்மானிக்கிறான், அதை அகற்றுவதன் மூலமாக (தந்தையைக் கொல்லுதல்) அல்லது அதனோடு போட்டி போடுவதன் மூலமாக (தானே தந்தையாகுதல்). எந்த ஃப்ராய்டும் இதை சரி செய்தலின் மற்றொருதன்மை என்றே கூறுவார். நடப்பில் இருக்கும் குருமரபைக் கவிழ்ப்பதன்மூலமாக மற்றொரு குரு மரபையே எழுத்தாளன் ஆரம்பித்து வைக்கிறான். இதைத்தான் இன்றைய கொலம்பிய எழுத்தாளர்களாகிய நாம் செய்யவேண்டும், ‘நூற்றாண்டுகாலத் தனிமை’ என்கிற மரத்தை வெட்டி விடாது அதனருகில் மற்றொன்றை நட்டு வைப்பதுதான் அது. காலம் நிரூபிக்கும் அது யாருக்கேனும் பயன்பட்டது என, ஒருவேளை வெறுமனே அதனடியில் அமர்ந்து தலையில் ஒரு ஆப்பிள் விழக் காத்திருந்தாலும்.

சிறுபத்திரிகை, அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *