யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

சிறுபத்திரிகை

நேர்கண்டவர்: சில்வியா பேட்டர் நோஸ்ட்ரோ, தமிழில்: சா.தேவதாஸ்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ் (பி 1973): கொலம்பிய நாவலாசிரியர். 2011இல் வெளியான The Sound of Things Falling என்னும் நாவல் இவருக்குப் புகழ்சேர்த்தது. சட்டத்தில் பட்டமும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் தகுதியும் பெற்றுள்ளவர். பாரீஸில் 3 ஆண்டுகள் பெல்ஜியத்தின் ஆர்டென்னெஸில் ஓராண்டு என வாழ்ந்துவிட்டு, இப்போது சொந்த நகரமான பொகோட்டாவில் வசித்து வருகிறார். இந் நாவலுக்காக 2014ஆம் ஆண்டின் சர்வதேச டப்ளின் இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இந்த விருதை முதலாவதாகப் பெற்றுள்ள தென் அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவர்.

லத்தீன் அமெரிக்காவின் மாய யதார்த்தவாதத்திற்கு எதிராக இவர் எழுதுகிறபோதும், மார்க்யூஸின் ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ நாவலுக்காக கடன்பட்டிருப்பதாகக் குறிப்பிடுவார். ‘லத்தீன் அமெரிக்கா ஒரு மாய/அற்புதக் கண்டம் என்னும் அபத்த அடுக்கு மொழியை மறக்க விரும்புகிறேன். என் நாவலில் வீதாச்சாரத்திற்குப் பொருந்தாத யதார்த்தம் இருக்கிறது; ஆனால் வீதாச்சாரத்திற்குப் பொருந்தாததில்தான், எங்கள் வரலாறு (ம) அரசியலின் வன்முறையும் குரூரமும் இருக்கின்றன. என் பதின் பருவத்தில் ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ யை வாசித்தது, எனக்கு நிறையவே பங்களிப்புச் செய்துள்ளது – ஆனால் அதன் மாய யதார்த்தவாதம் என்னைச் சிறிதும் ஈர்க்கவில்லை. கொலம்பிய வரலாற்றின் சீர்குலைக்கப்பட்ட பதிவாகவே அதை வாசிக்க விரும்புகிறேன். வாழைத்தோட்டத் தொழிலாள ரின் படுகொலை (அ) 19ஆம் நூற்றாண்டின் உள்நாட்டு யுத்தங்களில்தான் சுவாரஸ்யமான பகுதி இருக்கிறதே அன்றி, மஞ்சள் பட்டாம்பூச்சிகளிலோ, பன்றி வால்களிலோ இல்லை. எல்லாப் பெரும் நாவல்களைப்போல ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ உண்மையை மறுகண்டுபிடிப்புச் செய்ய நம்மைக் கோருகிறது. இம்மறுகண்டுபிடிப்பே நம்மை மாய யதார்த்தவாதத்தில் இழந்திடச் செய்கிறது என்று நம்புகிறேன்.’

வாஸ்க்வெஸ் கட்டுரையாசிரியராகவும் கொலம்பிய செய்தித்தாள் ஒன்றில் பத்தியாள ராகவும் விளங்குகிறார். பலமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள நூல்களையுடைய இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். ஜான் ஹெர்ஸே, விக்டர் ஹியூகோ, இ.எம்.ஃபார்ஸ்டர் போன்றோரின் படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ளார்.

நேர்காணல் செய்துள்ள சில்வானோ பேட்டர் நோஸ்ட்ரோவும் கொலம்பியா நாட்டவரே. In the land of god and man: confronting our sexual culture My Colombian war: A Journey through the country I left behind என்னும் நூல்களின் ஆசிரியை.

பேட்டர்நோஸ்ட்ரோ: The Informers (வாஸ்க்வெஸின் முதல் நாவல்) வரையிலும் கொலம்பியாவின் யூதச் சமூகம் குறித்து எந்த நூலும் இல்லை.

வாஸ்க்வெஸ்: சில நாவல்கள் இருந்தன. ஆனால் இந்நிகழ்வுகள் குறித்ததாகக் கிடையாது. யூத சமூகத்தைப் பற்றி மட்டுல்லாமல், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜெர்மானியர், எதிரி நாட்டுக் குடிமக்களின் ஒதுங்கிய வாழ்க்கை குறித்தும் கிடையாது. நாவலாசிரியர்களாகிய நாங்கள் மிகவும் தன்முனைப்பானவர்கள். ஒரு நாவலில் ஓர் உலகம் அலசி ஆராயப்படாதுபோனால் அது முழுமையற்றதென்று எண்ணிக்கொள்வோம்.

பேட்டர்நோஸ்ட்ரோ: நான் வளர்ந்துகொண்டிருந்தபோது பேரன்க்வில்லாவில் ஒரு ஜெர்மானிய ரொட்டிக்கடை இருந்தது. நான் உங்களது நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அந்த ரொட்டிக்கடையின் மங்கிய வெளிச்சத்தில் வேறொரு ஒலிப்புமுறையுள்ள பெண்கள் தம் வீட்டிலிருந்து ஓடியதை நானே பார்த்தேன். அக்கடைக்குள் ஓடிச்சென்று, நான் கொலம்பியாவில் இல்லை எனச் சட்டென்று உணர்வேன் – அவர்களது அப்பங்கள் மாறுபட்ட வாசனை கொண்டிருந்தன. நாஜிஸத்தையும் ஜெர்மானிய ரொட்டிக்கடையையும் இதற்குமுன் நான் ஒன்றாய்க் குறிப்பிட்டிருந்ததில்லை. எங்களது நாட்டின் அதிகப்படியான வரலாற்றைப் போலவே, ஜெர்மானியரெல்லாம் சந்தேகிக்கப்பட்டனர் (ம) எனக்குப் புரிபடாததான சூனியக்கார வேட்டைக்குப் பலியானவர்களாயிருந்தனர்.

வாஸ்க்வெஸ்: அந்நாட்களை நினைத்துப் பார்க்க மக்கள் விரும்புவதில்லை. இரண்டாம் உலகப்போரில் அச்சு நாடுகளுக்கு எதிராக நேசநாடுகளுடன் சேர்ந்து துடிப்பாகப் பங்கேற்றிட கொலம்பிய அரசாங்கம் தீர்மானித்ததும், அதுசெய்த ஆரம்ப நடவடிக்கைகளில் ஒன்று கடற்கரைகளையும் எல்லைகளையும் பாதுகாத்தது. ஜெர்மானிய, இத்தாலிய, ஜப்பானியப் பிரஜைகள் அப்பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டனர். அட்லாண்டிக்கில் மிக முக்கியத் துறைமுகமான பேரன்க்வில்லா, பெரியதொரு குடியேறிய மக்களைக்கொண்டிருந்தது. பல தசாப்தங்களாக வாழ்ந்த பின்னர், உட்புறப்பகுதிகளுக்கு நகரவேண்டியிருந்த அம்மக்களைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள் – அவர்கள் குறிப்பிட்ட இடங்களிலிருந்து வந்தனர் என அவர்தம் கடவுச் சீட்டுகள் சொன்னதால்.

பேட்டர்நோஸ்ட்ரோ: வரலாற்றைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழி புனைவிலக்கியத்தை வாசிப்பது என்பது சுவாரஸ்யமானது இல்லையா? அந்த ரொட்டிக்கடைக்காரர்களுக்கு அண்டை வீட்டாரால் தெரிவிக்கப்படவில்லையா என வியப்புறுகிறேன். அது காரணமில்லையெனில் விநோதமான நேரங்களில் கடை திறந்திருந்ததற்கும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததற்கும் என்ன காரணமாயிருக்கக்கூடும். என் ஞாபகங்கள் கடந்த எழுபது களைச் சேர்ந்தவை, உங்கள் நூலிலுள்ள கதையாடல்களுள் ஒன்று, நிகழும் நாற்பதுகளைச் சேர்ந்தவை அல்ல.

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

வாஸ்க்வெஸ்: பேரன்க்வில்லா இன்னொரு வகையில் இடம் பெறுகிறது – கொலம்பிய நாஜிக் கட்சி அங்கே அமைந் திருந்தது. கரீபியக் கடற்கரையில் ஸ்வஸ்திகா, ஜெர்மன் கொடிகள், உயர்த்திய கைகள் என்பனவற்றின் ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படங்களை பத்திரிகையாளர்கள், சில்வியா கால்விஸும், அல்பெர்ட்டோ டொனாடிவியோவும் அங்கே பார்த்திருக்கின்றனர். ஒரு நாவலாசிரியனுக்கு அவை நம்ப முடியாத காட்சி. அரசாங்கத்தின் எதிர்வினை வெறிகொண்ட தாக இல்லையென்பது கவலைக்குரியதாகும். எனவே தான்,  The Informers-இல் விவரிக்கப்பட்டுள்ள நிலைமை எனக்கு சுவாரஸ் யமாயிருந்தது – அது சாம்பல் பிரதேசத்திற்குள் வருவதால்.

பேட்டர்நோஸ்ட்ரோ: The Informers எனக்கு ஒரு திரையை விலக்கிவிட்டது போலிருந்தது. பேரன்க்வில்லாவில் ஜெர்மானிய ஒலிப்புடன்கூடிய இறுதிப் பெயர்கள்கொண்ட பல நண்பர்கள் எனக்கில்லை. மாறாக, அமெரிக்கப் பள்ளியில் பல யூத வகுப்புத் தோழர்கள் இருந்தனர். ஆதாரப்பள்ளியில் இருந்த மிகச் சிறந்த நண்பி டெப்பி ஸ்வார்ட்ஸ் என்னும் பெயருடைய யூதச்சிறுமி – அவளது முடிச்சுருள்களும் கன்றிய பொட்டுகளும் நீலவிழிகளும் என்னை வசீகரித்தன. அவளின் வீடுதான் என்னை மர்மத்தில் ஆழ்த்தியது. டிசம்பரில் அவர்களுக்கு ஏன் கிறிஸ்துமஸ் மரமும் குழந்தை ஏசுவின் பிறப்புக் காட்சியும் இல்லை! அவளின் பெற்றோர் ஒருவித அழுத்தத்துடன் பேசினர், அவளின் வீட்டுக்குப் போவது வேறோரு, மேலான நகரத்திற்குப் போவதாயிருந்தது.

நீங்களும் நானும் கொலம்பியாவைவிட்டுக் கிளம்பினோம். நீங்கள் பாரீஸுக்குப் போனீர்கள். கிளம்புவதற்குமுன், எழுத்தாள ராக வேண்டுமென்று தீர்மானித்தீர்களா?

நான் சட்டம் படித்துக்கொண்டிருந்தபோது அரைபாதியில் அத்தீர்மானம் ஏற்பட்டது. புனைவுகளுடன் சுற்றிவந்துகொண்டிருந்தேன் (அ) ‘காகிதத்துடன் விளையாடுதல்’ என்னும் கவிதையில் ஆர்.எல்.ஸ்டீவன்ஸன் கூறுவதுபோல – ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’யை வெட்கமின்றிப் போலி செய்துகொண்டிருந்தேன்.

வாஸ்க்வெஸ்: நான் சட்டம் படித்துக்கொண்டிருந்தபோது அரைபாதியில் அத்தீர்மானம் ஏற்பட்டது. புனைவுகளுடன் சுற்றிவந்துகொண்டிருந்தேன் (அ) ‘காகிதத்துடன் விளையாடுதல்’ என்னும் கவிதையில் ஆர்.எல்.ஸ்டீவன்ஸன் கூறுவதுபோல – ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’யை வெட்கமின்றிப் போலி செய்துகொண்டிருந்தேன். நன்கு தெரிந்ததை எடுத்துக்கொண்டு மீண்டும் அதை எழுதிப்பார்ப்பது, பத்திகளும் வாக்கியங்களும் எப்படி உருக்கொள்கின்றன என்று அறிந்திடச் சிறந்த வழியாகும். ஒருநாள் ஜாய்ஸின் The Dead (ம) போர்ஹேஸின் The Circular Ruins ஆகிய இரண்டையும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நகலெடுக்கத் தொடங்கினேன். என் கதைகளை எழுதத் தொடங்கியிருந்ததால் இதை மேற்கொண்டேன். நீண்ட காலமாக எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் இக்கதைகளே, பிரசுரத்திற்கென முதலில் எழுதப்பட்டவை. கதை சொல்வதில் தேர்ச்சிகொள்ளாத எதிலும் முற்றிலும் அக்கறையில்லாது இருந்தேன்.

பேட்டர்நோஸ்ட்ரோ: யாரிடமேனும் இதை ஒத்துக்கொண்டி ருக்கிறீர்களா?

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்

வாஸ்க்வெஸ்: சட்டப்பள்ளியில் பட்டம் பெற்ற பிற்பாடு, வழக்குரைஞராகப் பணியாற்றிடும் உத்தேசமே இல்லை என்று என் குடும்பத்தினரிடம் கூறினேன். என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்திருந்தேன், எழுதுவது வார இறுதிவேலை, பத்தோடு பதினொன்று என்று நான் கருதவில்லை.

பேட்டர் நோஸ்ட்ரோ: இதற்கு முன்னர் இரகசியமாக எழுதி யிருந்தீர்களா?

வாஸ்க்வெஸ்: எனக்கு எட்டு வயதாக இருந்தபோது என் முதல் சிறுகதையை எழுதினேன்; அது எனக்குப் பள்ளியில் பரிசை பெற்றுத்தந்தது. நான் எழுதாத காலம் என் வாழ்வில் இருந்ததாக நான் எண்ணவில்லை.

பேட்டர் நோஸ்ட்ரோ: அக்கதை எதைப்பற்றியது? ஆனால் அதற்கு உங்களின் அப்பாவின் எதிர்வினை என்னவென்பதை முதலில் கூறுங்கள்; நீங்கள் குடும்ப மரபைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினாரா?

வாஸ்க்வெஸ்: என் குடும்பத்திற்கும் என் தொழிலுக்கும் இடையேயான மோதல் குறித்து காஃப்கா மாதிரியிலான கதைகள் சில வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்; ஆனால் என்னிடம் இல்லை. மாறாக, அது நாவல்களுக்கு உரமேற்றிக் கொண்டிருக்கிறது. என் வாழ்வின் ஒரு கட்டத்தில் கால்பந்தாட்டம்தான் எனக்கு ஆர்வமூட்டியது. ஸ்பெயினில் உலகக்கோப்பை நெருங்கிக்கொண்டிருந்தது. அது, 1981 ஆக இருக்க வேண்டும். பிரேஸில் வீரரான பீலேயின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் தந்தார் எனது அப்பா. இதை ஸ்பானிய மொழியில் படிக்க விரும்பிய அவர், சிறிய தொகைக்கு இதை மொழியாக்கம் செய்துதர இயலுமா என்று கேட்டார். அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது எனக்கு விளங்கிவிட்டது. புத்தகங்களுடனும் ஆங்கில மொழியுடனுமான என் உறவுக்கு உரமேற்றிக் கொண்டிருந்தார். எனக்கு உற்சாகமாயிருந்தது. சிறிது பணமும் கிடைத்தது.

கதையைப் பற்றி… எனது புனைவுகளின் முக்கிய மையக் கருத்திழைகளை நிழலாடவிடுவதாக அது இருக்கிறது. இதனின்றும் மலினமான உறவியல் முடிவுகளை அடைந்து விட வேண்டாம், ஆனால் அதைச் சொல்லாதிருக்க முடியவில்லை. சந்தர்ப்பவசமாக லண்டன் செல்லும் கப்பலொன்றில் சிக்கிக் கொள்ளும் சிறுவனைப் பற்றியது அது: ஒரு நகரில் காணாமல் போகிறான், ஒரு நாயை வாங்குகிறான், கொலம்பியா திரும்பிடும் வழியைக் கண்டறிகிறான்; எல்லாம் ஒன்றரைப் பக்கங்களில்.

பேட்டர் நோஸ்ட்ரோ: ஆக, எட்டு வயதிலேயே கிளம்பிச்செல்வது குறித்து புனைவு செய்துகொண்டிருந்தீர்கள். கொலம்பியர்களாகிய நமக்கு எப்போதும் தாழ்வுமனப்பான்மை இருந்திருக்கிறது (அ) அது ஆர்வமா, சாகச உணர்வா? பேரன்க்வில்லாவில் இருக்கும் நமக்கு மியாமி மிகச் சிறந்தது. பொகோட்டாவிலுள்ள உங்களுக்கு லண்டன். The Informersஇல் வரும் பிரதான பாத்திரமான, மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவன் உண்மையிலேயே ஐரோப்பியப் பின்புலங்களான ஸாரா குட்டர்மானையும் என்ரிக்யு டெரெஸ்ஸரையுமே மதிக்கிறான். இது, வெளிப்புற உலகத்தின்மீதான நமது ஈர்ப்புடன் தொடர்புடையதா?

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்

வாஸ்க்வெஸ்: வேறெந்த மூன்றாம் உலகத் தலைநகரிலிருந்தும் பொகோட்டா வேறுபட்டதல்ல; பெருநகரத்துடனான அந்த ஈர்ப்பை நீங்கள் எங்கேயும் காணக்கூடும் – நைப்பாலின் டிரினிடியிலிருந்து நேரியின் ஆஸ்திரேலியா வரையிலும். இது ஒரு தாழ்வுமனப்பான்மையிலிருந்து வருவதாக எண்ணவில்லை – எதுவாயினும், மக்கள் ஏன் கிளம்பிச் செல்லவில்லை என்பதற்கு அதுவே காரணம். எப்படியோ, இவ்வகையில் கொலம்பியா விசேடமானது, அது, இரு கடற்கரைகளையும் உள்நாட்டில் தலைநகரையும் கொண்டுள்ளது. அதுபோலவே லிமாவும் சாந்தியாகோவும் பியூனஸ்அயர்ஸும். விமானங்கள் வரும்முன்னர், பேரன்க்வில்லாவிலிருந்து பொகோட்டாவுக்கு சுமார் 5 நாட்களிலிருந்து இரண்டு வாரங்கள் வரை ஆனது. பொகோட்டா மறைந்த நகரமாயிருந்தது, பண்பாட்டின் மேல் தட்டினர் உலகை தேடிப்பார்க்க வேண்டும் என்னும் தேவையை உணர்ந்தனர் என்றெண்ணுகிறேன்; இல்லாதுபோனால், பிரதேசக் குறுகியதன்மையாலும் சலிப்பாலும் அவர்கள் மடிந்து போயிருப்பார்கள்.

பேட்டர் நோஸ்ட்ரோ: லண்டனைவிடவும் பொகோட்டாவில் மக்கள் அதிக கம்பளி உடை உடுத்தினர்; நகரமெங்கிலும் விக்டோரிய டூடர் கட்டடங்கள் இருந்தன.

வாஸ்க்வெஸ்: ஐம்பதுகளில் சிறிதுகாலம் என் மாமா ஒருவர் லண்டனில் வசித்தார், அப்போது வெறுமனே பதின்பருவத் தினரான என் அப்பாவை, லண்டனுக்கருகிலுள்ள உறைவிடப் பள்ளியில் படிப்பதற்காக சுமார் மூன்றாண்டுகாலம் அளவுக்கு அங்கேயிருக்க அழைத்துச் சென்றார். அதிலிருந்து என் அப்பா விடம் நம்பமுடியாததான ஆங்கிலமோகம்; அதை நான் சுவீகரித் திருப்பதாகத் தோன்றுகிறது. எப்படியானாலும், தொப்பி, கையுறைகள், மூங்கில்கழி சகிதமாக இருக்கிறவர்களைப் பற்றி நீங்கள் பேசுகிற நபர்களுள் ஒருவராக என் மாமா இருந்தார். அவையெல்லாம் மறைந்துபோயிருப்பது வெளிப்படை-காலம் மாறியுள்ளது (ம) இப்போது உலகம் பொகோட்டாவை நெருங்கியுள்ளது என்பவற்றால் மட்டுமல்லாமல், அந்நாட்களில் அந்நகரம் இருந்ததைவிடவும் குறைந்தது ஐந்து பாகைகள் வெதுவெதுப்பாயிருக்கிறது, யாரும் இப்போது கையுறைகள் அணிவதில்லை. உலகளாவிய வெப்பமேற்றம் (ம) கொலம்பியாவில் பிரிட்டானியத் தாக்கம்-ஒரு நல்ல கட்டுரைக்கான தலைப்பு.

பேட்டர் நோஸ்ட்ரோ: பொகோட்டாவின் மேல்வர்க்கத்தினர் லண்டனுக்குப் பயணித்த நூற்றாண்டுத் திருப்பத்தில் ‘கோஸ்டகு வானாவின் இரகசிய வரலாறு’ என்னும் உங்களது நாவலின் பெரும்பகுதியும் நிகழ்வது ஒன்றும் தற்செயலானதில்லை. அப்போது ஜோஸப் கான்ராடும் Nostromo எழுதியபடி அங்கிருந் தார் – கோஸ்டகுவானா என்று அவர் பெயரிட்ட கற்பிதமான லத்தீன் அமெரிக்க நாட்டில் அந்நாவல் நிகழ்கிறது. கொலம்பியக் கடற்கரையில் அவர் கழித்த மூன்று நாட்கள் (ம) அதுபோலவே லண்டனில் உள்ள கொலம்பியவாசி ஒருவருடன் அவர் நடத்திய உரையாடல்கள் மீதமைகிறது உங்கள் நாவல். பொகோட்டா நபர் ஒருவரை அவர் சந்தித்திருக்கக்கூடும் என்பதை அறிவீர்களா?

வாஸ்க்வெஸ்: கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் இம்சிக்கப்பட்ட பிறகு, கொலம்பியாவுக்குத் தப்பியோடியிருந்த முன்னாள் லிபரல் அதிபரின் மகனான சாந்தியாகோ பெரெஸ் ட்ரை யானாவை அவர் சந்திக்கவே செய்தார். அவர் லண்டனில் சுற்றிவந்தார்; சிறிது காலத்திற்குப்பின், தன் நாட்டுடன் இணக்கம்கண்டு தூதுவரானார். கான்ராட் Nostromo-வை எழுதிக்கொண்டிருந்தபோது, ராபர்ட் கன்னிங்காம் கிரஹாம் மூலம் அவரைச் சந்தித்தார். கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்துகொண்டிருந்த நேரத்துடன் அது தற்செயலாகப் பொருந்திப் போயிற்று.

எப்படியாயினும் பிரான்ஸுடன் வலுவான தொடர்பும் இருந்தது-கொலம்பியர்கள் எப்போதும் படிக்கும்பொருட்டு பாரிஸ் சென்றுகொண்டிருந்தனர். உதாரணமாக, மாபெரும் கொலம்பியக் கவிஞர் ஜோஸ் அஸன்ஸியான் சில்வா.

பேட்டர் நோஸ்ட்ரோ: கடற்கரை சார்ந்தவகையில், நமக்கு இங்கிலாந்துமீது நாட்டமில்லை, ஆனால் பிரஞ்சுக்காரர், இத்தாலியர், லெபனானியர் (ம) சிரியரின் தாக்கம் உண்டு.

வாஸ்க்வெஸ்: (ம) ஜெர்மானியர். அந்நியப் பண்பாடுகளும் குடியமர்வும் இயற்கையாகவே பேரன்க்வில்லாவுக்கு வந்தன.

பேட்டர் நோஸ்ட்ரோ: நிச்சயமாக. பிரதான துறைமுக நகரமாக, பேரன்க்வில்லா மொத்தமும் கடைவீதியாயிருந்தது. அப்போது அங்கே வந்த ஒவ்வொன்றும், நமது இருளின் இருதயமான மக்தலேனா நதிவாயிலாக, உட்புறப்பகுதிக்குக் கொண்டு செல்லப் பட்டது. கோஸ்டகுவானாவில் இந்நதியை ‘சேறான மக்தலேனா’ என்கிறீர்கள். எனது கொலம்பிய யுத்தத்தில் இதைப்பற்றி எழுதுகிறேன். கான்ராடுக்கு காங்கோ, இருளின் இருதயமெனில், எனக்கு மக்தலேனா, கொலம்பியாவின் திறந்துள்ள புண். இன்றைக்கு ஒவ்வொன்றும் மக்தலேனா மூலமாக மிதந்து செல்கிறது-மருந்துகள், ஆயுதங்கள், படை வீரர்கள், துணைநிலை ராணுவ வீரர்களான-அத்துடன் மருத்துவ உதவிகளும், ஆசிரியர் களும் பாதிரியார்களும்.

கொலம்பியாவை விட்டுவிட்டு, எழுத்துக்குத் திரும்புவோம்; உங்கள் தலைமுறை எழுத்தாளர்களுள் பலர், ஐரோப்பாவில் நேரத்தைச் செலவிடுவதாகத் தோன்றுகிறது. முதலில் பாரிஸ், அப்புறம் ஸ்பெயினுக்குப் போகின்றனர்.

வாஸ்க்வெஸ்: அநேகமாக, அது ஒரு மரபுபோல, இல்லையா? என்னைப் பொருத்தவரை, பாரிஸ் கிளம்புவதற்கான உடனடிக் காரணம், எழுத்தாளராக வேண்டும் என்னும் தீர்மானமே. நான் கிளம்பியாகவேண்டும், செல்லவேண்டிய இடம் பாரிஸ் என லத்தீன் அமெரிக்க மரபு கட்ளையிட்டது

பேட்டர் நோஸ்ட்ரோ: Boom எழுத்தாளர்கள் பற்றிப் பேசுகிறீர்கள்.

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்

வாஸ்க்வெஸ்: ஆம், அவர்களெல்லாம் புலம்பெயர்ந்தவர்கள், தம் நாடுகளை இலக்கியத்தில் மறுகண்டுபிடிப்புச் செய்வதில் அவர்களெல்லாம் பீடிக்கப்பட்டிருந்தனர். மரியோ வர்காஸ் யோசா, கார்லோஸ் ஃபுயண்டஸை எடுத்துக்கொள்ளுங் கள். பெருவைப் பற்றின மாபெரும் நாவல்கள் லண்டனிலும் பாரிஸிலும் எழுதப்பெற்றன. மெக்ஸிகோவைப் பற்றின மாபெரும் நாவல்கள் பாரிஸிலும் நியூயார்க்கிலும் எழுதப்பட்டன. ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ மெக்ஸிகோவில் எழுதப்பட்டது. இது ஒரு லத்தீன் அமெரிக்க அபத்தம். Boom எழுத்தாளர்கள் இதைக் கண்டுபிடிக்கவில்லை என்பது வெளிப்படை: பத்தொன் பதாம் நூற்றாண்டில், பாரிஸில் இருப்பது தன்னையொரு கவிஞனாக்கிவிடும் என்று நம்பிய முதல் எழுத்தாளர் ரூபென் தாரியோவே. பாரிஸின் இலக்கிய உலகம் நவீன வாழ்க்கைபற்றி நிழற்சாலைகளிலான வாழ்க்கைபற்றி தான் எழுதுவதை விரும்பவில்லை என்று நான் அறிந்துகொண்டதையே அநேகமாக அவர் கண்டுகொண்டார். லத்தீன் அமெரிக்க நிலவியல் காட்சிகள் குறித்து தாரியோ எழுதவேண்டுமென்று விரும்பினர். பரிச்சய மற்றது. உள்ளூர்வண்ணம். அதுதான் அவர்கள் விரும்பியது. இப்பதட்டம் எப்போதும் இருந்திருக்கிறது. கொலம்பியாவிலுள்ள என் தலைமுறைக்கு இது மாய யதார்த்தவாதம்.

பேட்டர் நோஸ்ட்ரோ: உங்கள் நூல்களில் அது அவ்வளவாக இல்லை. அது பிரக்ஞைபூர்வ முடிவா? மாய யதார்த்தவாதத்திற்கு எதிரான இயக்கமான Mcondoவின் நிறுவனர்களாகிய அல்பெர் ட்டோ ஃபூஜியெட்டும் எட்மண்ட்டோ பாஸ் ஸோல்டானும் எந்தவகையிலேனும் உங்களைப் பாதித்தனரா?

பாரிஸில் இருப்பது தன்னையொரு கவிஞனாக்கிவிடும் என்று நம்பிய முதல் எழுத்தாளர் ரூபென் தாரியோவே. பாரிஸின் இலக்கிய உலகம் நவீன வாழ்க்கைபற்றி நிழற்சாலைகளிலான வாழ்க்கைபற்றி தான் எழுதுவதை விரும்பவில்லை என்று நான் அறிந்துகொண்டதையே அநேகமாக அவர் கண்டுகொண்டார்.

வாஸ்க்வெஸ்: இல்லை. என்னுடையது கலகக்கார முடிவல்ல. எனது வேலைச் சாதனங்கள் மார்க்வெஸுனுடையது அல்ல என்றளவிலே அது பிரக்ஞைபூர்வமானது; எனவே, அவரது முறையைச் சார்ந்திருப்பது பயனற்றதாயிருக்கும் என்பது எனக்குத் தெளிவானது. இலக்கியம் ஒரு முறைசார்ந்த பிரச்சனை. எழுத்தாளர் என்றளவிலே உங்கள் பணி, தொடர்புறுத்த விரும்பும் கதைக்குப் பொருத்தமான முறையையும் நீங்கள் யூகிக்க விரும்பும் பாத்திரங்களையும் கண்டறிவதே. மார்க்வெஸ் எழுதத் தொடங்கியபோது, லத்தீன் அமெரிக்க நாவல்களுக்கான ஏற்கப்பட வடிவமான, பிரதேசம் சார்ந்ததும் குறுகியபார்வையுடையதுமான மாய யதார்த்தவாதத்தில் சலிப்புற்றிருந்தார். 1899இன் மாபெரும் உள்நாட்டுப்போரில் கர்னலாக இருந்த அவரது தாத்தா அவருக்குச் சொல்லியிருந்த கதைகளை அவர் மீண்டும் சொல்ல விரும்பினார். அவர் ஃபாக்னரை கண்டறிந்தபோது, தன் நாவல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டார். ஆதலின் The Leafstrom-ஐ எழுதிட ஃபாக்னரை அமர்த்திக்கொள்வதில் அவருக்குப் பிரச்சினையே இருக்கவில்லை என்று சொல்லலாம். பின், அவர் ஃபாக்னரிடமிருந்து விடுபடுகிறார், ஹெமிங்வேயை அமர்த்துகிறார். யாரும் கர்னலுக்கு எழுதுவதில்லையென எழுது கிறார். அவர்களின் முறைகளைப் பின்பற்றுகிறார், அவ்வளவே. என் நாவல்களை எழுத முயன்றபோது இதே நிலையை நான் எதிர்கொண்டேன் – மாபெரும் கொலம்பிய நாவலாசிரியரின் முறை எனக்கு முற்றிலுமாக உதவவில்லை.

பேட்டர் நோஸ்ட்ரோ: தன் தாயும் பாட்டியும் பேசிய பாணியை அப்படியே பதிவுசெய்திருப்பதாக மார்க்வெஸ் கூறிக்கொள்கிறார். நீங்கள் அம்மொழியைப் பேசவில்லை – பொகோட்டாவிலுள்ள உங்கள் இல்லத்தில் நீங்கள் கேட்கிறதாக மாய யதார்த்தவாதம் இல்லை.

வாஸ்க்வெஸ்: அதேதான். நிலவுகிறமுறையுடன் என் கதைகள் முரண்பட்டு நின்றதால், என் முறையை வேறெங்கோ தேட வேண்டியவனாக இருந்தேன். எனக்கென்று பாடங்களைக் கொண்டுள்ள நாவல்களின் வரிசை இருந்தது! ராத்தின் American Pastoral, பான்வில்லின் The Untouchable, பெல்லோவின் The Dear’s December என.

பேட்டர் நோஸ்ட்ரோ: ஆக, சட்டப்பள்ளியிலிருந்து நின்றுவிட்டீர் களா (அ) உண்மையில், வழக்குரைஞராக இருக்கிறீர்களா?

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்

வாஸ்க்வெஸ்: இலியாதில் பழிவாங்குதலை சட்டரீதியிலான மூல முன்மாதிரியாகக்கொண்ட, விசித்திரமான ஆய்வுமூலம் பட்டம் பெற்றேன். அது எப்படி ஏற்கப்பட்டது என்பதைக்கூட நான் புரிந்துகொள்ளவில்லை. சட்டப் படிப்பை முடிக்கும் முன்பே பிரெஞ்சு பயிலத் தொடங்கினேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: பாரிஸை தெரிவு செய்திருந்த காரணத் தினாலா? அமெரிக்கப் பள்ளியில் பயின்றுள்ளதால் நியூயார்க் அல்லாமல் பாரிஸ் ஏன்?

வாஸ்க்வெஸ்: விஷயங்களை எனக்குச் சிக்கலாக்கிக்கொள்ளும் மறைவான போக்கு என்னிடத்தே உண்டு என யாரோ ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். ஆனால் அப்படி நான் எண் ணுவதில்லை. எழுத்தாளர்களுக்கு (அ) எழுத்தாளர்களாக விரும்புபவர்களுக்கு பாரிஸ் என்ன செய்தது என்று நான் எண்ணியதை வைத்து பாரிஸை தெரிவுசெய்தேன். என் எழுத்தில் தாக்கம் கொண்டுள்ள எழுத்தாளர்கள், ஏதேனும் ஒரு புள்ளியில் பாரிஸுடன் சிறு தொடர்பு உள்ளவர்களே.

பேட்டர் நோஸ்ட்ரோ:  Boom எழுத்தாளர்கள் தவிர்த்தோரைப் பற்றி பேசுகிறீர்களா?

வாஸ்க்வெஸ்: இழந்துபோன தலைமுறை, ஹெமிங்வே, ஃபிட்ஸ்ஜெரால்ட். ஆனால் நான் அதிகமும் பேசிக்கொண்டிருப்பது ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றி. யுலீஸிஸும் ஒரு நூற்றாண்டு காலத் தனிமையும்தான் என்னை எழுத்தாளராக வேண்டுமென்று ஆக்கின. யுலீஸிஸ் பாரிஸில் எழுதப்பட்டது. மார்க்வெஸ் சிறிதுகாலம் பாரிஸில் வாழ்ந்தார். அநேகமாக அனைத்து லத்தீன் அமெரிக்க ஙிஷீஷீனீ எழுத்தாளர்களும் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாரிஸில் வாழ்ந்திருந்தனர்: ஜீலியோ கொர்த்தஸார், யோசா, ஃபுயண்டஸ் என. ஆதலின், என்னைப் பொருத்தவரை எழுத்தாளராக விரும்பும் ஒருவருக்கு, பாரிஸ் சரியான நகரமா யிருந்தது. எவ்வளவு வெகுளித்தனமானது, இல்லையா?

மூன்று வருடங்களை அங்கே கழித்தேன், மதிப்புமிக்க பலவற்றைக் கற்றேன். முதல் வருடம் மிகப் பெரியது. இரண்டாவது அவ்வளவு பெரிதில்லை. மூன்றாவது, அங்கிருந்து கிளம்பி எங்கேனும் போக விரும்பினேன் அவ்வளவுதான்.

பேட்டர் நோஸ்ட்ரோ: ஆக வந்துசேர்ந்தீர்கள், அடுக்கக வீடொன் றைத் தேடினீர்கள், உங்கள் கணினியை நிறுத்தினீர்கள், மறுநாள் எழுத ஆரம்பித்தீர்கள்? எப்படி ஒருவர் அவ்வாறு செய்ய முடியும்?

வாஸ்க்வெஸ்: அதற்கான சந்தர்ப்பமாயிருந்தது, ஸோரபோன் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டம். நான் விரும்பிய தெல்லாம், பாரிஸில் இருந்து எழுத வேண்டும் என்பதே. இப் பெரிய எழுதும் தருணம் வந்ததும் ஸோரபோனில் ஆய்வு எழுதுவதும் சேர்ந்துகொண்டது; என்னால் முடியவில்லை. நாவல் எழுதுவதா (அ) ஆய்வுக் கட்டுரை எழுதுவதா என்று தெரிவுசெய்ய வேண்டிவந்தது. நாவலைத் தெரிவுசெய்வது கடினமாயில்லை.

பேட்டர் நோஸ்ட்ரோ: ஆக, ஏற்கனவே நாவல் எழுதுவதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் பாரிஸ் போகவில்லை?

வாஸ்க்வெஸ்: அநேகமாக முடிக்கப்பட்டிருந்த நாவலை எடுத்து வந்தேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: உண்மையிலேயே எழுதப்பட்டிருந்ததா?

வாஸ்க்வெஸ்: பாரிஸுக்கு வந்து இரு வாரங்களில் அதை முடித்துவிட்டேன். 1997இல் அது வெளியானது. அதை விரும்பு கிறேன், ஆனால் அது முதிர்ச்சியுற்ற எழுத்தாயில்லை. எனவே, எனது இரண்டாவது நாவலுடன் சேர்த்து அதை உரிமை கொண்டாடி இருக்கவில்லை – அப்படித்தான் The Informers எனது முதல் நாவலாகிறது. இத்தகவல் குழப்பத்திற்கு நான்தான் பொறுப்பு.

பேட்டர் நோஸ்ட்ரோ: உண்மையின் தெளிவற்ற இயல்புபற்றியும் கதைசொல்லியாக இருப்பதன் தர்மசங்கடம் பற்றியும் The Informers இல் விவரிக்கிறீர்கள் – எழுத்தாளர்களை ஒட்டுண்ணித் தன்மை மிக்கவர்களாகக் குறிப்பிடுகிறீர்கள்.

வாஸ்க்வெஸ்: 1938 கொலம்பியாவுக்கு வந்திருந்த ஒரு ஜெர்மானிய யூதப் பெண்ணுடன் நான் கொண்டிருந்த உரையாடலே, இந்நாவலின் நிஜமான தோற்றுவாயாக இருந்தது. ஜெர்மனி யிலிருந்த கடைசி ஆண்டுகள் (ம) கொலம்பியாவில்தான் குடிய மர்ந்த வாழ்க்கைகுறித்த தன் கதையை என்னிடம் கூறினாள். அதை எப்படிக் கையாள்வதென்று அவ்விஷயம் மூன்றாண்டு களாகக் காத்திருந்து பெட்டியில் தூங்கிற்று. இதற்கிடையே என் மாமனார் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தன் அறுவைச் சிகிச்சையை எனக்கு விவரிக்கும் வகையில் அவர் குணமாகும் வரையிலும், அவரது மருத்துவமனை அறைக்கு வெளியே காத்திருந்தேன் – ஒரு கதையில் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு. எனவேதான், நாவலாசிரியர்களை ‘ஒட்டுண்ணித்தன்மை மிக்கவர்கள்’ என்று எண்ணுகிறேன்: அதிசயப்படும்விதத்தில் குற்றவுணர்வின்றி, பிறருக்கும் உங்களுக்கும் நிகழ்கிற மோசமான விஷயங்களை இரையாகக்கொள்கிறார்கள். எல்லாம் புனைவுக்கான விஷய மாயிருக்கிறது; புனைவாகும்போது எனக்கு வருத்தமில்லை. தன் தாயின் கல்லறையிலுள்ள பதிவை, சிறிதும் நேசிக்க இயலாத தனது பாத்திரங்களில் ஒன்றுக்காக தாஸ்தாயெவ்ஸ்கி பயன் படுத்தினார் என்னும் கருத்தை நேசிக்கிறேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: The Informers இல் இடம்பெறும் இன்னொரு பெரிய மையக்கருத்து அடையாளம். ‘கலப்புக் குருதி உடையவரும் நிலைத்த நாடு இல்லாதவரும்’ என்று என்ரிக்யு டெரெஸ்ஸரை விவரிக்கிறீர்கள். 15வது வயதில் கொலம்பியாவை விட்டுக் கிளம்பியதிலிருந்து நியூயார்க்கில் தங்கியுள்ள என்னால் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். உங்களையே சிறிது விவரித்துக் கொள்கிறீர்களா?

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்

வாஸ்க்வெஸ்: அப்படித்தான் கருதுகிறேன். பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் ஸ்பெயினிலுமாக மூன்றிலொரு பங்குக்கும் மேலான வாழ்வை வாழ்ந்திருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் பார்ஸிலோனாவுக்குப் புறப்பட்டபோது, நான் ஒரு நாட்டைவிட்டுக் கிளம்புவது அது மூன்றாம் முறையாகும். நான் எழுதுவது கொலம்பியாவின் ஸ்பானிஷில், என் நாவல்களின் களன் கொலம்பியா – ஆனால் அங்கு நான் வசிக்கவில்லை. அத்துடன், அமெரிக்காவும் இங்கிலாந்தும் என் பண்பாட்டு – இலக்கியக் கருத்துகளை உருவாக்கியுள்ளதுபோல, நான் வாழ்ந்துள்ள நாடுகள் செய்திருக்கவில்லை. எனவே, தேசியத்தன்மை (ம) எந்தவிதமான தேசியவாதத்தையும் மிகவும் அவநம்பிக்கையின்றி எண்ணிப் பார்ப்பது தவிர்க்க இயலாதது.

பேட்டர் நோஸ்ட்ரோ: எனவே பாரிஸுக்குப்பின்னர், வீடு திரும்பாது பார்ஸிலோனா சென்றீர்கள். கொலம்பியா எதைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று?

வாஸ்க்வெஸ்: La Violencia என நாங்கள் அழைக்கும் காலத்திலிருந் தான வரலாற்றில் மிகவும் வன்முறை நிறைந்த தசாப்தத்திலிருந்து பொகோட்டா வெளிப்பட்டிருந்தபோதுதான் 1996இல்தான் நான் கிளம்பியிருந்தேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: அப்போதுதான் நான் திரும்ப முடிவெடுத் தேன். 1999இல் திரும்பினேன். அப்போது கொலம்பியா சாதனை படைப்பதாயிருந்தது. அதிகபட்ச கடத்தல்களையும் கொலைகளையும் அது கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தம் இல்லங்களைவிட்டு வெளியேறப் பயந்தனர்; இருப்பினும் உலகில் மிகவும் சந்தோஷமானவர்கள் கொலம்பியர்கள் என்று பத்திரிகைகளில் வாசித்தேன். நான் அனுபவிக்க விரும்பிய நம்ப முடியாத தொடர்பின்மை இருந்தது.

வாஸ்க்வெஸ்: 1996இல் நான் கிளம்பியபோதிருந்த நகரமாகவே இன்னும் என் மனதில் போதை மருந்துக் கும்பல்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான யுத்தங்களும் வெடிகுண்டுகளும் கடத்தல்களுமாக பொகோட்டா இருந்ததால், திரும்ப வேண்டாம் என்று தீர்மானித்தேன். முதலில் நான் கிளம்பிச்செல்ல காரண மாயிருந்த காரணங்களுள் ஒன்று, இலக்கியமாக இல்லாது வன்முறையாக இருந்ததுபோலவே, அது காரணமாகவே – ஒரு பகுதி – திரும்பவும் இல்லை. திரும்பாததற்கான பிரதான காரணம் உண்மையில்சூக்குமமானது: நான் திரும்பிப்போனால் நான் விரும்பியவாறு எழுத்தாளனாக மாட்டேன் எனப் பயந்தேன்.

பாரிஸை விட்டுக் கிளம்பிய சமயத்தில் இரண்டாவது நாவலை முடித்திருந்தேன்; ஆனால் அவ்விரு நாவல்களிலும் நான் திருப்தி கொண்டிருக்கவில்லை. Supplicating Alina என்னும் இரண்டாவது நாவல். அது வெளியாகியிருந்த வேளையில், அதுபற்றி ஏற்கனவே வருத்தம் கொண்டிருந்த என்னை ஆழ்ந்த நெருக்கடிக்குள் தள்ளிற்று. பாரிஸில் நான் இருந்தபோது, 70 வயது நிரம்பிய ஆச்சரியகரமான தம்பதியரான சூஸன் – பிரான்ஸிஸ் லாரண்டியிரைச் சந்தித்திருந்தேன். பெல்ஜியன் அர்டென்னிஸில் ஒரு பெரிய வீட்டில் அவர்கள் வசித்தனர். அவர்களது பிள்ளைகள் திருமணமாகி வெளியேறி இருந்ததால், அவர்களது வீட்டில் நிறைய அறைகள் இருந்தன. 1998இன் இறுதியில் ஒரு வார இறுதியின்போது அவர்களைச் சந்தித்த நான் என் நெருக்கடியைத் தெரிவித்தேன். ‘நீ ஏன் ஒரு வாரம் இங்கு வந்து தங்கி முயன்று பார்க்கக்கூடாது?’ என்றார். வார இறுதியில், ‘அதிர்ஷ்டமில்லையா, ஒரு மாதம் தங்கிப் பார்க்கலாம்’ என்றனர். மாத இறுதியில் ‘என்ன நடக்கிறது என்பது தெளிவாகும்வரையிலும் தங்கி விடு’ என்றனர்.

பேட்டர் நோஸ்ட்ரோ: அது எழுத்தாளரின் கனவு; எழுத்தாளர் குடியிருப்புக்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. கொலம்பிய எழுத்தாளர்களை இன்னும் எடுத்துக்கொள்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?

வாஸ்க்வெஸ்: அது ஒரு எழுத்தாளர் குடியிருப்பு, சரிதான்.

பேட்டர் நோஸ்ட்ரோ: இருந்தது நீங்கள் மட்டுமே.

வாஸ்க்வெஸ்: ஆமாம். பத்து மாதங்கள் ஒருவித இணைவாழ்வை நடத்தினேன். காலையில் வெளியே போவோம். ஒரு கோழியை வேட்டையாடி வருவோம். சூஸன் அதை விருந்துக்குச் சமைத்து விடுவார்கள்.

அப்போது கொலம்பியா சாதனை படைப்பதாயிருந்தது. அதிகபட்ச கடத்தல்களையும் கொலைகளையும் அது கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தம் இல்லங்களைவிட்டு வெளியேறப் பயந்தனர்; இருப்பினும் உலகில் மிகவும் சந்தோஷமானவர்கள் கொலம்பியர்கள் என்று பத்திரிகைகளில் வாசித்தேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: அப்போது உங்கள் மனதில் சமைக்கப்பட்டி ருந்தது என்ன கதை?

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்

வாஸ்க்வெஸ்: கதைகளில்லை. என்னவித எழுத்தாளராக விரும் பினேன், என்னவிதமான வாசிப்பு எனக்கு உதவும் என்று கண்டுபிடிக்கவே முயன்றுகொண்டிருந்தேன். அந்த ஆண்டு நான் வாசித்ததுபோல என்னால் ஒருபோதும் இயலாது. பெல்ஜியத்தில் ஓராண்டைக் கழித்த பிற்பாடு, ஒரு நாளைக்கு ஒரு புத்தகத்தை வாசிப்பது என்னும் ட்ரூமன் கபோட்டின் வாசகம் சாத்தியம் என்றிருந்தேன். ஆக, கான்ராட் போல சாராம்சமான எழுத்தாளர்கள் சிலரைக் கண்டறிந்தேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: அவருக்கென்று முழுநீள அஞ்சலி எழுதி யிருக்கிறீர்கள்

வாஸ்க்வெஸ்: கோஸ்டகுவானாவின் இரகசிய வரலாற்றை ஓர் அஞ்சலியாகக் கருதவில்லை. கான்ராடின் பாத்திரங்களை மனிதாயப்படுத்த முயன்றேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: ஆனால் அவரை மனிதாயப்படுத்துவது இத்தகைய அஞ்சலியாக உள்ளது. ஆனால் கான்ராட் ஏன்?

வாஸ்க்வெஸ்: அவரது எழுத்தின்வாயிலாக, புனைவென்றால் என்ன, அது என்ன செய்ய வேண்டும், அது எப்படி இயங்குகிறது என்று அறிந்துகொண்டேன். அவரது புனைவிலிருந்து மட்டுமல்லாமல், அவரது முன்னுரைகள், கடிதங்கள், சில கட்டுரைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. இவை மிகப்பெரிய, சூக்கும கருத்தமைவுகள்; ஆனால் அவை எனக்கு எவ்வளவு பருண்மையானவை, அவசியமானவை என்பதை உங்களுக்குச் சொல்ல இயலாது. உண்மையில், கான்ராட் (ம) நைப்பால் ஆகிய இருவருமே, என் நாட்டை இருளின் பிரதேசமாகக் காண கற்றுத் தந்தனர். என் பிறந்த ஊருடன் பதட்டமான உறவுநிலையைக் கொண்டிருப்பது சரிதான், விரும்பத்தக்கதுமாகும் என்று கற்றுத் தந்தனர்; ஒரு நாட்டின்மீதான விசுவாசம் பெரிதும் மிகைப்படுத்தப்படுகிறது. வரலாற்றை தனிநபர்களின் ரீதியில் பார்த்திட அவர்கள் கற்றுத் தந்தனர். அது, அவ்வப்போது நாம் நம்பமுடியாதவகையில் மறந்து விடக்கூடியதாக இருக்கிறது. உடல்ரீதியில் நகர்ந்துபோவதை, படைப்பாக்க ஆற்றலாக பார்க்கவும் கற்றுத் தந்தனர்.

பேட்டர் நோஸ்ட்ரோ: உங்கள் இரு நூல்களிலும் இடம்பெயர்தலும் கொலம்பியா எதை அர்த்தப்படுத்துகிறது என்று புரிந்துகொள்ளும் தேடலும் மிக வலுவாயுள்ளன. போர்ஹேஸின் கதை ‘உல்ரிஸியா’ உங்களுக்குப் பரிச்சயமாயிருக்க வேண்டும் – அதிலுள்ள பிரதான பாத்திரம் கொலம்பியனாக இருந்திட பாவனை செய்யும். கொலம்பியனாக இருப்பது என்னவென்றால், ‘அது ஒரு நம்பிக்கை சார்ந்தது’ என்று கூறும் அப்பாத்திரம், கொலம்பியர்கள் அதை முடிவின்றி மேற்கோள்காட்டுபவர்; போர்ஹேஸை தவறாக மேற்கோள்காட்டுவதிலிருந்து நான் மாறுபடுகிறேன். அவர் அதை தேசியவாத லட்சியமாக அன்றி, அப்போதைக்கான சாதன மாகப் பயன்படுத்துகிறார்! புதிய அரசாங்கத்தின் ‘சிஷீறீஷீனீதீவீணீ மீs ஜீணீssவீஷீஸீ’ என்னும் முழக்கத்தைக் குறித்து அதையே உணருகிறேன். வேட்கையும் நம்பிக்கையும் படுக்கையறைக்கு உரியவை; ஒரு குடிமகனின் பொறுப்புணர்வுடன் தொடர்பற்றவை.

வாஸ்க்வெஸ்: எங்கே நான் கையொப்பமிட வேண்டும்? அதுதான் இப்பிரச்சனை. 1999இல் இருந்த எனது நெருக்கடியின் ஒருபாதி, கொலம்பியாவைப் பற்றி எழுதமுடியாத தன்மையே. எனது நாட்டை, அதன் வரலாற்றை (அ) அதன் அரசியலை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

பேட்டர் நோஸ்ட்ரோ: நானும்தான். இதை நீங்கள் சொல்லக் கேட்பது என்னை மேலாக உணரச் செய்கிறது. எந்தளவுக்கு நம் வரலாறு பற்றி நாம் அறிந்துள்ளோம் (அ) அக்கறை கொண்டுள் ளோம் என்பதில் நண்பர்களிடையே பெரும் வெற்றிடம் உள்ளது – சிமோன் பொலீவாரின் படங்களில் ஒன்றுக்குப் பதிலாக, வகுப்பறையில் கென்னடியின் உருவப்படமிருந்த அமெரிக்கப் பள்ளிக்கு நாங்கள் சென்றதால் இது இருக்கக்கூடும். ஒவ்வொரு 50 ஆண்டுகள்தோறும் வன்முறை வளையங்கள் இருக்கின்றன. அதற்கான விளக்கம், நம் ஒவ்வொருவரிடமான அக்கறை யின்மையும் நமது பிரதேசப் போட்டியுமே என்பதை ஒத்துக் கொள்வீர்களா? கொலம்பியா நெடுகிலும் பயணித்திருக்கிறீர்களா? நிச்சயம், நான் செய்திருக்கவில்லை.

வாஸ்க்வெஸ்: ஆமாம். பெல்ஜியத்திலிருந்த ஓராண்டில், கொலம்பியா குறித்து எழுதுவது எனக்கு மிகவும் சவாலாக இருந்ததை உணர்ந்தேன். உனக்குத் தெரிந்ததையே எழுத வேண்டும் என்னும் ஹெமிங்வே-யின் கருத்துடன் வளர்ந்திருந்தவன் நான். ஆனால், எழுத்தாளர்களுக்கு தம் நாடுகளைப் பற்றி எழுத வேண்டிய கடப்பாடுண்டு என்னும் லத்தீன் அமெரிக்க கருத்தை முதலில் சவாலுக்கிழுத்த, போர்ஹேஸின் படிமத்துடனும் வளர்ந்தி ருந்தவன் நான். நாவலாசிரியர்கள் தூதுவர்களாக, சரியா? ‘அர்ஜென்டின எழுத்தாளரும் மரபும்’ என்னும் கட்டுரையில் போர்ஹேஸ் அச்சிறுபிள்ளைத்தனமான கருத்தைச் சாடுகிறார்; அதனின்றும் எங்களுக்கெல்லாம் வாழ்க்கை லகுவாய் இருந்து வந்திருக்கிறது. கொலம்பியா பற்றி எழுதவேண்டும் என்னும் எந்தக் கடப்பாட்டையும் நான் உணரவில்லை. ஆனால் என்னால் முடியவில்லை என்பது என்னை வருத்துகிறது.

நம் வரலாறு குறித்த சில சாம்பல் பகுதிகள், மக்கள் என்றவகையிலான நமது ஆர்வப்பாங்கு குறித்துப் பெரிதும் பீடிக்கப்பட்டவனாகிக் கொண்டிருந்தேன். அதைப்பற்றி எழுதுமுன்பு சிறிதேனும் புரிந்துகொள்ள வேண்டும் என்றெண்ணிய நான், இவற்றைக் கையாள இயலாதவனாக இருந்ததை உணர்ந்தேன். அது முடமாகிவிட்ட பயங்கரத் தருணமாகும். வெற்றுப்பக்கம் பற்றிப் பேசுங்கள்; நான் வெற்று உலகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

பேட்டர் நோஸ்ட்ரோ: இதற்கு மறுதலையானதை நான் செய்தேன். எழுத்தின்மூலம் ஒரு கல்வியில் ஈடுபட்டேன். நீங்கள் புரிந்துகொள்ள இயலாத நாடு?

வாஸ்க்வெஸ்: தம் நாடுபற்றிய உணர்வு, நன்கு உத்தேசிக்கப்பட்ட தேசப்பற்றுகள் குறித்துப் பேசுவோரையெல்லாம் எப்போதும் வெறுத்துள்ளேன். நான் புரிந்துகொள்ளாதது அதற்கு நெருக்கமாக வருவதுதான்: என்னவாயிருக்கிறது என கொலம்பியாவை ஆக்கிடும் சூக்குமக் கருத்தான ஆன்மா. அது பெரிதும் வன்முறை சார்ந்தது என்பது வெளிப்படை. ஆனால் அதைத் தாண்டியும் அது செல்வது.

பேட்டர் நோஸ்ட்ரோ: பெல்ஜிய கிராமப்புறத்தில் நம் வன்முறை தெளிவாகி வந்ததா? உங்கள் எழுத்துமூலமாக கொலம்பியாவில் நடந்துகொண்டிருந்த சம்பவங்களின் சங்கிலிமீது உங்கள் கண் களைத் திறக்க முடிந்ததாக உணர்ந்தீர்களா?

வாஸ்க்வெஸ்: இல்லை. என்னால் முடிந்ததெல்லாம், என் பாத்திரங்களின் கண்களைத் திறக்க முடிந்ததுதான். என் நாவல்களின் எந்தவொரு வாசகனும் இறுதியில், தான் எதையேனும் கற்றுள்ளதாக உணருவான் என்பது நிச்சயம். ஆனால், நாவல்கள் ஒருபோதும் தகவல் சார்ந்தவை மட்டும் அல்ல, இல்லையா? அவற்றினின்றும் பெறப்படும் அறிவு மறை முகமானது, தெளிவற்றது, ஆதலின் வளப்படுத்துவது. தனி நபருக்கும் வரலாற்றுக்குமிடையிலான உறவுநிலை, அப்புதிரான திருமணம் எப்படி நீடிக்கிறது என்பதை நாம் உணருமாறு செய்ப வையே நாவல்கள்.

பேட்டர் நோஸ்ட்ரோ: புனைவற்ற நல்ல உரைநடைபற்றியும் இதைக் கூறமுடியும். ஒவ்வொரு கதைக்கும் இரு பக்கங்கள் இருப்பது எப்படி, உண்மையின் தெளிவற்ற இயல்பு, இணக்கம் நிகழ்ந்திட இரு பக்கங்களையும் அறிந்துகொள்வதற்கான அவசி யம் என்பவைபற்றியெல்லாம் The informers அழுத்திப் பேசுகிறது.

வாஸ்க்வெஸ்: நாடுகளும் அரசாங்கங்களுமே சிறந்த கதை சொல்லிகள்! திருப்திப்படுத்துவதிலான அவற்றின் திறமை, சிறந்த உருவகங்கள்மீதான அவற்றின் நாட்டம், எந்தவொரு நிரடலான அம்சத்தையும் அவற்றின் கதையாடலை கேள்விக் குள்ளாக்கும் எதையும் அகற்றிடும் ஆற்றல் – இது நாவலா சிரியர்களிடம் ஒருபோதும் இல்லாதது. வரலாறு என்பது அதிகாரத்தால் சொல்லப்படும் கதை; இதில் புதிதேதும் இல்லை. ஆக, நாவல்களுக்கு சாத்தியப்படும் நியாயங்களுள் ஒன்று – அவற்றுக்குத் தேவைப்படும் என்பதில்லை – முரண் பாடு. என்ன நிகழ்ந்தது என்பதைக் கூறுவதல்ல, மாறாக, என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைக் கூறுவதே. கடந்தகாலம், பொதுவானது (அ) தனிப்பட்டது என நாம் அழைப்பதெல்லாம், குறிப்பிட்ட சில அக்கறைகள், தப்பபிப்பிராயங்கள் (ம) பாரபட்சங்களுள்ள ஒருவரால் முதன்முறையாகச் சொல்லப்படும் நிலைத்த கதையாடல் மட்டுமே, நாவல்கள் நமக்கு அதை ஞாபகப் படுத்துகின்றன; ஓர் உண்மை, ஒரு வரலாறு, ஒரு கடந்தகாலம் என்பதில்லை.

அடிக்குறிப்பு:

Boom Writers:: லத்தீன் அமெரிக்காவில், 1960கள் (ம) 1970களில் இலக்கியம், கவிதை, விமர்சனம் ஆகியவை செழித்தோங்கி இருந்ததைக் குறிப்பிடுவது. இதற்கு முன் இருந்திராதபடி எழுத்தாளர்கள் புதிய கருத்துகளை வெளியிட்டு புகழப்பட்டனர். கொர்த்தஸார், மார்க்வெஸ், ஃபுயண்டஸ், யோசா போன்ற எழுத்தாளர்களைக் குறிக்கும்.

அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *