கொல்கத்தா

ராக் தர்பார்

சின்னஞ்சிறு சப்தங்கள்

ராணிதிலக்

சுப்ரமண்ய பாரதியின். நின்னையே ரதி என்ற பாடலைச் சஞ்சய் சுப்ரமண்யன் பாட கேட்டுக்கொண்டிருந்தேன். 35 வது இயல், இசை, நாடக விழாவில் (2014-15) பாடிய பாடல் அது. ராகம் பாகேஸ்ரீ. பாடலை ஆரோகணம், அவரோகணத்துடன் பாடும்பொழுது பெருத்த மௌனம் சூழ்ந்தது. காத்திருப்பும் உணர்ச்சியும் அடங்கிய த்வனி அது.  பாம்பே ஜெயஸ்ரீ இந்த ராகத்தை ஹிந்துஸ்தானில் பாடியும் இருக்கிறார். அக்பர் அவையில் தான்சேன் முதன்முதலில் பாடியதான குறிப்பையும் வாசித்திருக்கிறேன். அம்மா ஒரு வேலைக்காரியாக, சமையல்காரியாக மாறி வாழும் வாழ்க்கையை அதன் சிறு, பெரும் சப்தங்களுடன்,“பாகேஸ்ரீ ராகம்” என்ற தலைப்பில், ரூபா தாஸ் குப்தா எழுதியிருக்கிறார். இந்தக் கவிதையை நான் வாசிக்கும்போது, உணர்ச்சி மட்டுப்பட்டு, காத்திருப்பும் மௌனமும் சூழ்ந்த ஒரு தாயை உணரமுடிகிறது.  இக்கவிதையின் தலைப்புக்காக இணையத்தில் தேடும்போது, இந்த ராகத்தைக் கேட்டபிறகே கவிதையின் எல்லை கொஞ்சம் விரிந்துவிட்டது.  கையில் எரியும் தாளின் ஓசையுடன், அடுப்பின்முன் வீசும் விசிறி ஓசையுடன் அவள் வீற்றிருக்கிறாள்.  துப்புரவு சத்தம், துணிபோடும் சட்டத்தை வைக்கும் சப்தம், புத்தகங்களை வைக்கும்போது ஏற்படும் சப்தம் எனப் பல சப்தங்களுடன் கவிதை முடிகிறது. ஒருபோதும் வாய் திறக்காத தாயின் சப்தம் வேறாக இருக்கிறது. 

சமகால 19 வங்காளப் பெண்கவிஞர்களின் 197 கவிதைகளை, மேரியன் மெடர்ன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். முன்னுரையில் அக்கவிதைகளின் பாடுபொருள்களை விட்டுவிட்டு, கவிதை மொழி அமைப்புக் குறித்து அதிகமும் எழுதியிருக்கிறார். மரபான வங்கமொழியின் ஓசைநயம், நவீன கவிதையில் பரந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.  இத்தொகுதியைத் தமிழில்  இராம. குருநாதன் மொழிபெயர்த்திருக்கிறார்.

சென்ற வருடத்தில் ஒரு நாள், இக்கவிதைத்தொகுதியை வாசித்துவிட்டு கவிஞர் ஸ்ரீநேசனிடம், சுதபா சென்குப்தாவின், ‘வாய்ப்பான இடம்’ என்ற கவிதையைக் குறித்துப் பேசியது ஞாபகத்தில் இருக்கிறது. இது ஓர் உரைநடைக் கவிதை. பிரிட்டிஷ்  அரசாங்கம் விட்டுச்சென்ற தூமைத்துணியைப் பற்றிப் பேசுகிறது. உடலுக்குப் பாதுகாப்பாகவும், பயணிப்பதற்கான பொறியாகவும் சுதபா குறிப்பிட்டிருப்பார்.  இப்போது மீண்டும் வாசிக்கிறேன். தமிழ்க் கவிஞர்கள் யாராவது இந்தத் தூமைத்துணியைப் பற்றி எழுதியிருந்தால், பாராட்டலாம்.

சமகால வங்காளக் கவிதைகளை வாசிக்கும்போது, அவர்கள் மரபின் நினைவிலேயே நவீனத்தைக் காண்கிறார்கள் என்றே படுகிறது.  தமிழ் சங்க இலக்கியத்தில் உள்ள பறவைகளும் மரங்களும் ஒரு குறியீடாக, ஒரு படிமமாக வருவதுபோல் காடும் மரங்களும் மலர்களும் நதிகளும் கவிதையில் குறியீடாகவும் படிமமாகவும் உள்ளுறையாகவும் வருவதைப் பார்க்கமுடிகிறது. நவீன கவிஞர்கள் தன் கவிதையின் பின்புலமாகத் தன்நிலப் பரப்பை இப்பொழுதும் வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பழம் நினைவுக்கொண்ட புதிய மனமாக கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. 

வங்காளம் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது கல்கத்தா என்ற நகரம்தான். டிராம்களும் இனிப்புகளும் அடுத்த நினைவுகள். கல்கத்தா பற்றி சில கவிதைகள் உள்ளன. தேபாஞ்சலி முகோபத்யாயவின் என் கல்கத்தாவிற்கும், ஜோஸ்னா கர்மகாரின் கல்கொத்தாவிற்கும்,  ஊர்மிளா சக்ரவர்த்தியின் கல்கத்தா கல்கத்தாவிற்கும், விஜயா முகோபத்யாயின் கல்கத்தாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகுவிற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. வாட்69 போத்தல்களுடன் கல்கத்தா வாழ்வதைக் குறிப்பிடுகிறார், தேபாஞ்சலி.  ஜோஸ்னாவோ, வேறு வேறு முகங்களுடன் கல்கத்தா பண்டிகையைக் கொண்டாடுவதாக எழுதியிருக்கிறார். அங்கு பெண்களுக்கு இடமில்லை என்பதுபோல.கீதா சட்டோபாத்யாயவின் கல்கத்தா, பாவ நதியில் மூழ்குகிறது. பூரான்கள் நிறைந்த தண்டவாளங்கள், பள்ளங்கள். எருதுகளின் கூட்டம், சிப்பாய்கள் என நவீன கல்கத்தாவை ஊர்மிளா சக்ரவர்த்தி வரைகிறார்.

காசி மித்ரா படித்துறையில், குழப்பமடைந்த நீரால், படிகள் ஆற்றிற்குள் மூழ்வதான ஒரு காட்சியைச் சைதாலி சட்டோபாத்யாய எழுதியிருக்கிறார்.

ஆறு, ஆற்றுப்படுகை, படித்துறைகள், குளங்கள், மரங்கள், செடிகள், பூக்கள், கட்டுக்கதைகள், சில பெரிய மனிதர்களின் நினைவாகவும் பின்னணியாகவும் கொண்ட கவிதைகள்தான் வங்காளக் கவிதைகள்.  ஆறு மறைவான இடத்தை உடையது, மக்களுக்காக அல்ல என்று ஒரு கவிதையில் வருகிறது. ஆறு ஒரு பெண்ணின் பார்வையில் அவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.நண்பகல் பிறகான ஆற்றில் ஆணின் வாசம் வீசுவதாகவும் குறிப்பு உண்டு.  காசி மித்ரா படித்துறையில், குழப்பமடைந்த நீரால், படிகள் ஆற்றிற்குள் மூழ்வதான ஒரு காட்சியைச் சைதாலி சட்டோபாத்யாய எழுதியிருக்கிறார்.

வலி, வாழ்க்கை, கல்வி, பண்பாடு, நிலம் யாவும் துயரமாகவும் கண்ணீராகவும் காத்திருப்பாகவும் மனசாட்சியாகவும் பல கவிதைகளில் படர்ந்திருக்கிறது.  இயற்கையை ஓர் அங்கமாக, ரத்தசாட்சியாக இருக்கிறது.  கார்ஜன், பாகூல், அர்ஜுன், ரத்தசுரா, கேயா, பலாஷ் எனப் பல மரங்கள் அங்கே பூத்து ஒரு குறியீடாகவும் உவமையாகவும் உள்ளுறையாகவும்  அசைந்தாடுகின்றன. தன் தனிமையை, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கும் மூங்கிலோடு தன்னை இணைத்துப்பார்க்கும் பெண் அங்கே வாழ்கிறாள். வங்காளத்திற்குரிய மரவழிபாட்டை எழுதும் மல்லிகா சென்குப்தா, “என் மேல் தோல் பச்சை.  எங்கள் இரத்தத்தில் காடும் வேடுவனும் கலந்து.” என்று பேசுகிறார்.

கிருஷ்ணா சுர விருட்சத்தின் மலர்கள் நெருப்பின் தோழனாக இருக்கிறது. அது தீபக் ராகத்தைக் கேட்கச்செய்கிறது.  ஏனெனில் வைகாசி வந்துவிட்டது. எனும் குரலையும் அங்கே கேட்க முடியும். கிருஷ்ணா சுர என்பது வேறு ஏதுமில்லை, தீக்கொன்றை மரம்தான். இக்கவிதைகளில் மழையைக் குறிக்கும் ராக் மல்லாரும், நெருப்பையும் தீயையும் குறிக்கும் ராக் தீபாக்கும் கவிதைகளில் உயிராக வருவதைப் பார்க்கமுடியும்.

பெகுலா, திரௌபதி, சீதை,  என்று புராணக் கதைகளை மீட்டுருவாக்கம் செய்வதும், மரபின் மீதான எதிர்ப்பாகவும் பல கவிதைகள் எழுதப்படுகின்றன. இதை விமர்சனம் என்றும் கொள்ளலாம்.  பிரம்மராஜன் ஒரு கவிதையில், உனக்கான சாந்திநிகேதனைச் சிருஷ்டித்தபடி என்று எழுதியதாக ஞாபகம். சாந்திகேதனை, இதற்குப் பெயரா மீட்சி? என்ற கேள்வியுடன் தொடங்குகிறார் சுதபா பட்டாச்சார்யா. ஒரு கொடிய சிறையை வலைகளால் பின்னிக்கொண்டிருக்கிறோம் என்ற எதிரை முன்வைக்கிறார் சுதபா.

பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களின் பல்வேறு மனோநிலைகளைச் சொல்லும் கவிதைகள் இவை.  தனிமையும் துயரமும் அழுகையும் விருப்பமும் காதலும் காமமும் வேட்கையும் பற்றிய கவிதைகள் இவை.  ராகங்கள், புஷ்பங்கள், விருட்சங்கள், தண்ணீரால் நிறைந்த கவிதைகளான இவை, வாழ்வின் நிதர்சனத்தைப் பேசுபவை.  சமூக விழுமியங்களுக்கு எதிராக, ஆணின்பார்வையிலான புராணப் பெண்களின் குரலாகப் பல கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

பெண் வலி, வாழ்க்கை, கல்வி, பண்பாடு, நிலம் யாவும் துயரமாகவும் கண்ணீராகவும் காத்திருப்பாகவும் மனசாட்சியாகவும் பல கவிதைகளில் படர்ந்திருக்கிறது.

இந்தக் கவிதையைத் தொகுதியில் எனக்குப் பிடித்த கவிஞர்களாக, இன்றைய நவீன வாழ்வை எடுத்துச்சொல்லும் கவிஞர்களாக ரூபா தாஸ் குப்தா. சுதபா பட்டாச்சார்யா, சுதபா சென்குப்தா ஆகியோர் இருக்கிறார்கள். குறிப்பாக சுபதா சென்குப்தாவின் கவிதைகள் பெரும்பான்மை உரைநடையில் இருக்கின்றன. அவ்வளவும் கச்சிதம். இவர்கள் மூவரின் கதைசொல்லல் நவீனமாக அமைந்திருக்கிறது. 

இந்த வங்கக் கவிதைகளில் பல விருட்சங்களையும், பல மலர்களையும், ராகங்களையும் பட்சிகளையும் இணையத்தில் பார்த்தேன்.  பின்பகுதியில் வரும் குறிப்புகள், அவ்வளவு தெளிவும் ஆழமும் அற்றவை. கவிதையில் கலாபதி என்ற மலர் வருகிறது. இரண்டு மொழிபெயர்ப்பிலும் கலாபதி என்றே தரப்படுகிறது. அது தமிழில் மணிவாழை. நிஷிந்தா மரம், வெண்நொச்சி. அடசி என்பது தமிழில் ஆளிமலர். கருநிறங்கொண்டு சிறிய பாடும் பறவையான சாலிக், தமிழில் மைனா. முனியா என்பது தமிழில் இல்லை.  இப்படி மலர்களையும் ராகத்தையும் விருட்சங்களையும் பட்சிகளையும் இந்தத் தொகுதியின் வழியாகக் கண்டடைந்தது மட்டுமல்லாது, கவிதையின் இன்னொரு பரிமாணத்தையும்  உணர்ந்துகொண்டேன்.

இனி மொழிபெயர்ப்பு குறித்து.  வங்காளம் கடந்து, ஆங்கிலம் கடந்து, தமிழில் இக்கவிதைகளை வாசிக்கத் தோதாக, அன்றாட மொழியில் ஆக்கம் செய்து இருக்கிறார் இராம.குருநாதன். கவிதைக்கு உயிர்நாடி, ஓசையோ சந்தமோ இல்லை. அதன் ஆன்மாவைப் புரிந்துகொள்ள உதவும் மொழி.  அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. மிகத் தூரத்தில் இருந்து ஒன்றைத் தரிசிப்பது. தரிக்கப்படுவது தெளிவாக இருக்கிறது, தெரிகிறது. அடுத்த பதிப்பில் வங்க வார்த்தைகளுக்கான பெயர்களைத் தமிழில் தர முயற்சிக்கலாம்.

மரபும் நவீனமும் கலந்த வங்காளப் பெண் கவிதைகளைப் புரிந்துகொள்ள. சில கவிதைகளைக் கீழே தந்துள்ளேன். வாசிப்பீர்கள் என நம்புகிறேன்.

பெண்மான் / அகானா விஸ்வாஸ்

ஆர்ப்பரிக்கும் அருவியிடையே புள்ளியாய்த் தெரியும் காய்ந்த நிலம்
குளிர்ச்சியான சமவெளி இதுதான்
இங்குதான் என் காதலன் இருப்பிடம்:
புல்லின் வேர் எங்கும் பூமியைக் மறைக்கும் அளவிற்கு
விதைகள் ஊசி முனைக்கண்ணில் தெரியும் ரத்தம்
அது ஆயிரமாயிரம் வண்ணங்களில்
வனதேவதைக் கதைகள் பாடும்
நானோ சிறைப்பட்ட பெண்மான்
இரகசியமான சடங்குகள் முடிந்த பின்,
குதிப்பேன் ‘கார்ஜன்’ மரத்தோப்பில்!!

வெள்ளம் / அஞ்சலி தாஸ்

தண்ணீர் தேக்கம், ஒன்றும் தெரியாத நிலையில் ஆற்றுக்கு வந்தேன்
மணல் என்னை அழைத்தது.
ஆழ்ந்த இரகசியக் குரலின் அழகான அச்சத்தோடு அழைத்தது
நீல நுரையும், மீன் எண்ணெய்யும் மேலெழுந்து
உணவுக்குழாயை நிறைத்தது.

ஒன்றும் தெரியாமல் ஆற்றுக்கு வந்தேன்,
நீரில் மூழ்கி அதன் வழியே வாழ்க்கை நீடித்தது;
நெருப்புப்பொறி என் உடம்பில் சட்டென்று உட்புகுந்தது.
நீர்வீழ்ச்சி உருண்டு உருண்டு வீடு நோக்கி விரைந்தது.

நான் என்னில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டேன்.
அதனோடு சிப்பியின் மலர்கள் படுத்திருந்தன
சங்குகள் ஆர்ப்பரித்துப் பாடல் பாடின
சாவைக்காட்டிலும் விரையச்செய்யும்
வெள்ளம் வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டது
பத்துவிரல்களும் அவனது பாதத்தைத் தொட்டதும்
சொன்னேன்:
மரங்களின் நீண்ட மரபு எனக்கு உண்டு; வேறுவேறான இலைகளை உருவாக்கிக்கொள்வது

நள்ளிரவு / அனுராதா மகாபாத்ரா

ஆஸ்தமானிசா கிராமத்தை நோக்கி
வெள்ளையாடை உடுத்து மருத்துவர், பணிப்பெண்,
காற்றில் செல்லும் “கேயா’ மலர்கள் போல் அவர்கள் சென்ற காட்சி.
பணிப் பெண்ணே. அங்கு அமைதி நிலவுகிறதா?
மருத்துவர், அங்கு யாரிடமாவது அன்பு செலுத்துகிறார்கள்
முரட்டுக் கேயா மலர்களின் கீழ், மருத்துவமனையில் கீழ்,
இந்தியாவில் உங்கள் உறக்கங்களோடே உறங்குகிறது
தலையில் முடி சூடிய பாம்பு!

குலதெய்வம் / அனுராதா மகாபாத்ரா

தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு உரைகல்லான வசந்தம்
இப்போது இருளாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
குடிசை பாதியில் மிதந்தன
அடர்த்தியாய் இருந்த புனித அரச மரமும்
குலதெய்வமும் மூழ்கிப் போயின.
அந்த ஸ்தூபி தெற்கு மேற்காக இருள் நடனமாடி
தடுமாற்றத்தோடு நில பெறமுயல்கிறது.
உணவு விடுதியின் அரிசி, பழையதான போது
தூண்டில் கயிறு மிதந்துவருவது தெரிகிறது
பித்தளையின் கறுப்பு மார்பகத்தில், இளம்பெண்
சுள்ளிகளோடும் வைக்கோலுடும் அவற்றின் மீது மிதந்து வருகிறாள்
இளைஞர்கள், “கலாபதி“ மலர்களைப் பறித்துத்
திருகியவாறு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்
கிராமத்திலிருந்தும், காடுகளிலிருந்தும்
சாவு எண்ணிக்கை தொழிலாளர்களோடு கூடியது
பச்சைப் புல்லில் மகிழ்ச்சியில், சிரிக்கிறது குலதெய்வம்!

காட்டுமங்கை / தேபாஞ்சலி முகோபத்யாய

என் படத்தைப் பாதி வரைந்து கொண்டிருக்கும்போதே
அம்மா அடர்ந்த காட்டுக்குள் போய்விட்டாள்
பச்சை மரங்களில் தன்னை மறைத்துக்கொண்டு
நன்றாகக் குளித்தாள்
தன் அதாஷிமலர் நிறக் கால்களின் மேல்
பலாசம், அசோகம், கிருஷ்ணாசுர
மலர்களின் சிவப்புப் பொடியைப் பூசிக் கொண்டாள்
அவளது இரத்தம் அவளது அசாதாரணமான
வெள்ளை நகங்களை நோக்கிப் பாய்ந்தது.
பின்னர் அவள் ஓவியச் சட்டத்துக்குத் திரும்பி வந்து
என் படத்தின் மறு பாதியை வேகவேகமாக முடித்தாள்
வெள்ளைக் கான்வாஸ் திரையை ஊசலாட்டிவிட்டு
அடர்பச்சைக் காட்டு மங்கை ஒருத்தி உள்ளே வந்தாள்.

மேதை / கீதா சட்டோபாத்யாய

மூன்று பறவைகள் மூன்று வழிகளில்தான் போகும்
ஒன்று சந்தையை நோக்கி – இன்று சந்தை
ஒன்று வயல்வெளிகளை நோக்கி –
அறுவடைத் தானியத்தைப் புடைக்கிறார்கள்.
மூன்றாவது வானத்தின் தாறுமாறான காற்றை நோக்கி,
விழியின் இமையில் கதிரவனைத் தேக்கி

இந்த வாழ்க்கை / கீதா சட்டோபாத்யாய

இனிமேல் பொம்மை வைத்து விளையாடுவது
உன் நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்து விட்டார்களே.
இனிமேலும் நிலைப்படி தாண்டிப் போவாயா?”
சங்காலான வளையல் அணிந்திருக்கிறாய்
‘நெடுநேரம் படித்துறையில் குந்தி இருப்பாயோ’

உன் இரு கால்களிலும் அரக்கு வண்ணத் தளைகள்
அதன்பிறகு வேதனையின் துவக்கம்
இருண்ட, கலைவண்ணமான இதயத்தில்

கொல்கத்தா இனி இராது / கீதா சட்டோபாத்யாய

தலைக்குமேல் மின்னல்கள் சுழற்றும் கொலைவெறிச் சவுக்கு
காலின் கீழ் பாம்பின் நாக்கு தண்ணீர்
தொடக்கூடிய வாழ்க்கையைப் பற்றிக் கொள்கிறாய்
இடது கையில் கைப்பிடி
படிக்கட்டில் பாதங்கள்,
செய்யத் தக்கவற்றை மனத்தில் பதித்துக்கொள்.
வான் முழுவதுமிருந்து நூற்றாண்டுக் காலச் சாபம்
சொட்டுச் சொட்டாக
அசுபமான யாத்திரையின் இறுதியில்
படுமோசமான காலத்தில் மாட்டிக்கொண்டு
மௌனித்த, உறைந்து போன, சில முகங்களுடன்
வாய் பேசா ஊர்வலம் –
ஒரு கல் படிக்கட்டிலேயே, இன்னொன்று
தண்ணிருக்கு வெகு அருகில்
பிணங்கள் ஓசைப்படுத்திக் கொண்டு விழும்.
அழுகும் பாதாம் பழங்களாக
உள்ளங்கால்களைக் கருப்பு நீர் நக்குகிறது
உறுத்திக் கொண்டே
ஐந்து மரணங்களுக்குப் பிறகு
ஆறாவது யார்?
அடுத்த அடி எடுத்து வைக்கையில்
கல்கத்தா நீரில் மறைந்துவிடும்…

வெட்டுக்கிளி / ஜோஸ்னா கார்மகார்

பசுமையானவற்றைக் கடித்துக்கொதறுகிறாயே!
இக்குச்சி போன்ற தலையை உடைய பச்சை நிற பூச்சியே!
பச்சை நிறப் பூச்சியே! தீபாவளி வருகிறது.
எரிந்து போக மாட்டாயா?

முனியா பறவையின் எச்சரிக்கை / ஜோஸ்னா கார்மகார்

மக்கள் நல மன்ற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சீலையில்
மகளிர் விளையாட்டுப் பொருள்கள் கிடைக்கின்றன

எப்போதும் அறிவாளிகளுக்குத் தெரியும்
கட்டிடங்கள் மாறுகின்றன என்று.
அறையின் கதவுகள் கிறீச்சிடுகின்றன முணுமுணுப்போடு,
உருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
நடுங்கியும் விழுந்தும் வைக்கின்றன
ஒரே குழப்பம். உருவங்கள் விசுவரூபம் எடுக்கிறது
குறுகிவிடுகின்றன
தாறுமாறாய்ச் சின்னபின்னமாகின்றன
உறவினர்கள் விலை உயர்ந்த பரிசுகளைத் தருகின்றனர்.
ஒளிவிடும் வெள்ளித்தட்டிலிருந்து
புகை வளையம் வருவது போன்று:
வரதட்சணையை அளவிடும் ராஜா ராணி உருவங்கள்
அந்த அறையின் இன்னொரு அறையில்
மண்ணெண்ணெய் ‘டின் குலுங்கியபடி சத்தம் இட்டுக் கொண்டு:
ஒரு பறவையின் இதய துடிப்பு
மனிதனைக் காட்டிலும் இருபது தடவை வேகமாக இயங்கும்
காற்றில் கார்பன் மோனாக்ஸைடு.
இதனால் முனியா பறவை எச்சரிக்கை செய்கிறது.
ஆழ்ந்த கறுப்புக் கிணறு
அதனுள் கூண்டுப்பறவைகளோடு பறவையாய்
வரிசை வரிசையாக அனுப்பிக்கொண்டிருக்கிறது மேலிடம்

கருமை / ரமா கோஷ்

கருநிறப் பூக்களை விரித்து விளையாடுகிறேன்.
கருநிறச்சிறகுடன் இருண்ட நீர்ப்பரப்பில் மிதக்கும் வாத்துகள்.
மலர்ந்த “கேடகி“ பூங்கொத்து இல்லை,
மாறாக அந்த இரவில் கருநிறச்செம்பருத்திகள் கிளர்ச்சியூட்டின
கரிய அலைகளூடே நீளும் என் விரல்கள்
சொற்களோ, பாடல்களே இல்லாத வழியெங்கும்
கருநிறமரங்களே கரிய இலைகளை மட்டுமே சேமிக்கின்றன
எப்படித்திணறிப் போகிறேன் நான்,
நீயோ வீரிய மிக்க நஞ்சு.
உன் கருப்பைக்குள் இரவெல்லாம் மிதந்தபடி நான்

பாகே ஸ்ரீ ராகம் / ரூபா தாஸ் குப்தா

அம்மா பகல் முழுவதும் வீட்டைத் துப்புரவு செய்கிறாள்
துணி போடும் சட்டத்தைக் கதவை நோக்கி வைக்கிறார்.
புத்தகங்களை எடுத்து மரக் கட்டிலில் சீராக
என் தங்கையின் தோய்க்காத ரிப்பன்
இப்போது அலமாரியில், வேறு கொக்கியில்
பகல் தேய்ந்து போய் வானத்தில் மிளகாய்ப் பொடி பரவிய தோற்றம்.
சமையலறை தன்னிச்சையான புகையால் நிறையும்
ஒரு கையில் எரியும் தாள்
மறுகையால் மும்முரமாக விசிறியபடி கேட்கிறார்
காலம் ரொம்பவும் கெட்டுக் கிடக்கிறது,
ஏன் ஒருவரும் வீடு வரவில்லை .?”

மால்கோஷ் ராகம் / ரூபா தாஸ் குப்தா

இரவுதோறும் பன்னிரண்டு மணிக்கு
அப்பா கதகதப்பான படுக்கையினின்றும் எழுந்து,
எச்சரிக்கையாக நடந்து
இந்த அறைக்குள் வந்து,
மார்பின் மேல் இணைந்திருக்கும் கைகளை பிரிப்பார்
அல்லாவிடில் நான் ஊமையாகி விடுவேன் இல்லையா?
என் கைகள் இணையான வெளிமூச்சாய்க் கிடக்கின்றன
கலைந்து போய்க் கண் மீது விழுந்துள்ள முடியைச் சரி செய்து
தனக்குத் தானே சொல்லிக் கொள்வார்: “நாள் முழுவதும் குறும்பு.”
இரவுதோறும் பன்னிரண்டு மணிக்கு.

இப்போது பெண்ணாயிருப்பது / சஞ்சுக்தா பந்தோபாத்யாய

மகளிர் மட்டும் பெட்டியின் தனிமையை நேசிக்கிறேன்
சட்டை பின்னிக் கொண்டே தம் சமையலறையை
பெலா நகருடனும் அதற்கப்பாலும் இணைப்பர்
அடுத்த நிலையத்தில் மூன்று முதிய காய்கறி பெண்டிர் ஏறுவர்
என் அருகே அமரச் சங்கடத்தோடு வந்த
கண்ணாடி போட்ட இளம் பெண்ணுக்கு இடமளித்தேன் நிம்மதியோடு.
நடுப்பகலை ஒட்டிய நேரம்
ஆணினமே மொத்தமாக இந்த இடத்தைப் புறக்கணித்துவிட்டது
வழியில் குட்டைச் சுவரின் மேல்
கட்டான உடல் கொண்ட பெண்
தவழும் கோலத்தில், கையில் வில்லம்புடன்
தனியாகப் பார்த்தால் உன் இதயத்தைத் துளைப்பாள்
இப்போது, இவ்வளவு முன்பாக, நாலாபுறமும் மர்ம இருட்டு,
நான் விழித்தெழுந்து மூச்சிறைக்க
சிகரெட் மிச்சமில்லை
பல மணி நேரம் சுழல் துாய்மையாக, புகையின்றி இருக்கும்
பெண்ணின் வாழ்வில் நண்பகல்
என மூளையின் இடுக்குகளில் சாம்பார்ப்பொடி
மணமும் பாதுகாப்பும் ஊடுருவும்.

கிருஷ்ணா சுர / சுஷ்மிதா பட்டாச்சார்யா

வைகாசி வந்துவிட்டது
இதயத்தின் நகரம்
ஏறக்குறைய முற்றாக வறண்டு,
கனவுகளின் பசுமை நிறப் பிம்பங்கள்
பயங்கர வானத்தால் நீக்கப்பட்டன.
ஏதோ இங்குமங்கும்
கிருஷ்ணா சுரத்தின்
கவிதைப் பாடல்கள் எழுந்து
பாலைவனப் பயணிகளின்
அழல் பூத்த விழிகளில்
கானல் நீரை எழுப்பும்
அதுவும் கொதிக்கும் சூடு
நெருப்பின் தோழன்
அதன் நிறம்
தீபக் ராகத்தைக் கேட்கச் செய்யும்
மல்லார் ராகம் அல்ல.
அப்படியே இருக்கட்டும்
சிவப்பு மற்றவற்றைவிட மேலாகவே இருக்கும்.

சாந்திநிகேதன் / சுதபா பட்டாச்சார்யா

இதற்குப் பெயரா மீட்சி? யாருடைய அகந்தையை
உங்களால் ஓழிக்க முடியும்ஃ
ஆழமற்ற ஏரியிடையே பெருங்கடலின் ஓசை எழுவதில்லை
மயக்கமூட்டும் இருள் பரப்பெங்கும் அடர்த்தியானதொரு வாசம்!
கனவுலகின் மாயைகள் புலன்களைப் புலரச்செய்தன
ஓங்கி உயர்ந்த மரங்களின் கிளைதோறும் கேட்கும்
இனிய பாடல் ஒலிப்பதில்லை
ஒரு கொடிய சிறையை வலைகளால் பின்னிக்கொண்டிருக்கிறோம்
பூமியை வரவேற்கும் கிழக்குவாசல் மூடப்பட்டிருக்கிறது
இன்பம் முழுவதும் செலவழிக்கப்பட்டு வீணாகிவிட்டது
தேவையின்றி உடல் பருத்துவிட்டது
நாம் வளர்ந்துவிட்டோம் உயரத்தில் அல்ல, அகலத்தில்.

சுபதா சென்குப்தா கவிதைகள்

இறப்பு

அமல்டாஸ் பூக்களின் வாசத்தை நானும் உன் வளர்ப்பு நாயும் உணர்கிறோம். பகலும் இரவும் நான் உன் காலடியில். மிகப்பழைய நாற்காலியில் குளிர் ஒளிர்கிறது. திறந்திருக்கும் எனது கோரப் பற்களை ஒரு நாள் உனக்குக் காட்டுவேன்

விருப்பம்

புலன்கள் நெருப்பில் அடங்கின; சொர்க்கத்திற்கு ஒன்பது வாயில்கள்: சுவாசிக்க முடியவில்லை என்னால் நீ இக்கணத்தில் வந்து என் அருகில் நின்றிருக்கிறாய்.

வாய்ப்பான இடம்

உலர வைக்கும் போது பார்ப்பதற்கு அசிங்கமாகத் தெரிகிறது. அதனை என் புடைவையின் உள்ளே பொருத்துகையில் அது உடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கிறது. பயணிப்பதற்கான பொறி மறைந்திருக்கும் விசைப்பொறி இயங்குகிறது- நாணத்தின் அடையாளமான உள்ளாடையை நமக்கு விட்டுச்சென்றது பிரிட்டிஸ் அரசு.

உடன்பாடு

அகராதியை உரத்துப் படித்துக் காட்டினேன்; இரண்டு கடித நாட்குறிப்பை எனக்குத் தந்தாய்: இருவருக்குமான தாக்குதல் தொடங்கிவிட்டது: நீ மிகுந்த பொறுமை உடையவளாய்க் காணப்படுகிறாய். எளிதான உடன்பாட்டு உரிமம் பெற முதலில் நாம் பதிவு அலுவலகத்திற்குச் செல்லவேண்டும்.

கவிதை மலரும் காலம் | மேரியன மெடர்ன்|
தமிழில் ; இராம.குருநாதன் |
சாகித்ய அகாதெமி | மு.ப.2016 – ரூ.100)

இந்தக் கவிதைத்தொகுப்பில் குறிப்பிடப்படும் சில இராகங்களைக் கேட்க

  1. பாகேஸ்ரீ ராகம் – https://www.youtube.com/watch?v=EUobcV0Cr4M
  2. ராக் பூபாளி – https://www.youtube.com/watch?v=cZutt6B6Zo
  3. ராக் தீபக் – https://www.youtube.com/watch?v=EjHTmXfmMjY
  4. ராக் மல்லார் – https://www.youtube.com/watch?v=yRPX_ksrC8o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *