ராஜம் தற்கொலைக்கு யார் காரணம்?

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ்

த.ராஜன்

எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதை வாசிப்பு…

எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு இது. நாவல்களாலேயே (‘காதுகள்’, ‘வேள்வித் தீ’, ‘நித்யகன்னி’) அவர் இன்றைய தலைமுறையால் அடையாளம் காணப்படும் சூழலில் அவரது கிளாஸிக் கதைகளில் ஒன்றை வாசித்துப்பார்க்கத் தோன்றியது. முன்னோடிகளை நினைவுகூர்ந்து புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் சமகாலப் படைப்பாளிகள் பலரும் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ கதையை எம்.வி.வெங்கட்ராமின் மிகச் சிறந்த கதையாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கதையைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் அம்மா பாத்திரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; அம்மா பாத்திரத்தைக் குறிப்பிடாமல் ‘பைத்தியக்காரப் பிள்ளை’யைப் பேசிவிட முடியாதுதான். ஆனால், அவர்களில் சிலர் அந்த அம்மாவை மகனைப் பழிவாங்குபவளாக, சுயநலக்காரியாக, கொடூரமானவளாகச் சித்தரிக்கிறார்கள். ராஜத்தின் மரணத்துக்கு அவளைப் பொறுப்பாக்குகிறார்கள்; அவளைக் குற்றவாளி ஆக்குகிறார்கள். அப்படிச் சொல்லிவிட முடியுமா என்பதுதான் எனது சந்தேகம்.

அதிகாலை நான்கரை மணிக்கு ராஜம் விழிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. எழுந்ததுமே அம்மாவோடு காரசாரமான உரையாடல். அதையடுத்து கிளப் கடையில் காலைச் சாப்பாடு முடித்துக்கொண்டு 5.30 மணிக்குத் தறியில் உட்காருகிறான். இன்னும் ஒண்ணேமுக்கால்முழம் பாக்கி இருக்கும்போதே தறியிலிருந்துஎழ நேர்கிறது. வீட்டிலிருந்து வெளியேறி 9:50-க்கு ரயிலில் விழுந்து இறந்துபோகிறான். குறுகிய நேரத்துக்குள் நடந்து முடிந்துவிடும் கதைதான். அதற்குள் அந்தக் குடும்பத்தின் வரலாறு, அவர்களது அன்றாட வாழ்க்கைச் சூழல், ஒரு காலகட்டத்தின் வாழ்க்கைமுறை, ராஜத்தின் மனவோட்டம், ராஜம் அம்மாவினுடைய குணவார்ப்பு என ஒரு பெரும் சித்திரம் எழுந்துவிடுகிறது. கட்டுக்கோப்பான கட்டமைப்பும், உரையாடல் அடையும் தீவிரத்தன்மையும், ராஜம் அம்மாவின் விசித்திரமான குணாம்சமும் இந்தக் கதைக்குத் தனித்த இடத்தைக் கொடுத்துவிடுகின்றன. கதையின் முடிவில் பங்கஜம் பேசும் ஒரே ஒரு வரி கதையை வேறொரு பரிமாணத்துக்கு எடுத்துச்சென்றுவிடுகிறது.

அம்மாவுடன் நடக்கும் உரையாடலிருந்து தப்பிச்சென்று ராஜம் ஏன் தற்கொலை செய்துகொள்கிறான்? அவனது தற்கொலைக்கு அம்மாதான் காரணமா? அவள் அன்றைக்கு மட்டும் அப்படி நடந்துகொள்ளவில்லை; எப்போதும் அப்படித்தான் இருக்கிறாள். காலையில் அம்மா முகத்தில் விழித்துவிடக் கூடாது என்று ராஜம் கவலைப்படுகிறான்.

அம்மா முகத்தைப் பார்த்தபடி எழுந்தால் அன்றைய பொழுது முழுவதும் சண்டையும் சச்சரவுமாகப் போவதாக நினைக்கிறான். மேலும், ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எரிச்சலூட்டும் விதமாகவே அவனுக்கு இருக்கிறது. காலையில் சேவல் கூவுவதுகூட ஐயோய்யோ என்று கத்துவதுபோல சகிக்க முடியாததாக இருக்கிறது. நாய் துரத்தும் கனவு அவனுக்கு ஆயிரம் தடவைக்கு மேல் வருகிறது.இப்படியான குறிப்புகளிலிருந்து அவனது அன்றாட வாழ்க்கை எவ்வளவு அலுப்பூட்டக்கூடியதாக இருக்கிறது என்பது புலப்படுகிறது. மற்ற பிள்ளைகளைப் போல அல்லாமல் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் ராஜம் மீது ஒரு சுயநல நோக்கத்திலாவது அவனது அம்மா அக்கறையோடுதானே இருக்க வேண்டும்? மாறாக, ஏன் எரிந்து விழுகிறாள்? ஆனால், ராஜம் சாவக் கிளம்பும் அன்றைய தினம் அவனிடம் அம்மா எரிந்து விழுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. வெகு இயல்பாகத்தான் உரையாடல் ஆரம்பிக்கிறது என்றாலும் அவள் மனதுக்குள் இருந்த ஆற்றாமை அன்று தீவிரமாக வெளிப்பட்டுவிடுகிறது.

ராஜம் நான்கு தம்பிகளுக்கும் ஐந்து தங்கைகளுக்கும் அண்ணன். அப்பாவின் மரணத்துக்குப் பின்பாகக் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவன். மூன்று தங்கைகளுக்குத் திருமணம் முடித்துக்கொடுத்திருக்கிறான். குடும்பப் பொறுப்பைச் சுமந்துகொண்டிருப்பவன் என்கிற வகையில் அப்பாவின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டிருப்பவன்.மூத்த பிள்ளைக்கு அப்பா இல்லாத இடத்தில் இயல்பாகவே அப்பா ஸ்தானம் வந்துவிடுகிறது என்றாலும், இங்கே அவன் அப்பாவின் தறியை ஓட்டிக்கொண்டிருப்பதால்கூட அந்த ஸ்தானத்தை எடுத்துக்கொண்டிருந்திருக்கலாம்.அம்மாவை அணுகுவதில் கிட்டத்தட்ட அப்பாவின் சுபாவம்தான் ராஜத்திடமும் இருக்கிறது.

ராஜம், அம்மா இருவருக்கும் அந்த நாளில் பிரச்சினை எங்கே தீவிரமடைகிறது என்றால் அவன் திருமணம் செய்துகொள்ளத் தயாராகிறான் என்பது அம்மாவுக்குத் தெரியத் தொடங்கிய பிறகுதான். ராஜம் தன்னுடைய திருமணத்துக்காகச் சேகரித்து வைத்திருக்கும் நகை, பணம், மனைவிக்கான சேலை ஆகியவற்றை அவள் பார்த்துவிடுகிறாள். அவனுக்கென ஒரு குடும்பம் என ஒன்று வந்துவிட்டால் இனி தன் குடும்பத்தை அவன் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை எனும் பதற்றம் அம்மாவிடம் வெளிப்படுகிறது. அவனுக்கும் எதிர்வீட்டுப் பெண்ணுக்கும் இல்லாத கதையை இட்டுக்கட்டிப் பேசுகிறாள். அவளை அவமானப்படுத்தும் விதமாகப் பேசுகிறாள். அவன் சாதாரணமாகப் பேசுவதற்குக் கூடுதலான அர்த்தம் கற்பிக்கிறாள். அப்படிப் பேசுவதன் வழி அவனைச் சீண்டுகிறாள். ராஜமோ தன்னுடைய தங்கைகளைப் பார்த்துக்கொள்ள மாட்டேனா என்றுதான் கேட்கிறான். “செய்யறவங்க ரொம்பப் பேரைப் பார்த்தாச்சு. கல்யாணத்துக்கு முந்தியே தலைகீழா நடக்கிறே. கல்யாணம் ஆனப்புறம் யார் புத்தி எப்படி இருக்குமோ, யார் கண்டா?” என்கிறாள் அம்மா.

ராஜம், அம்மா இருவருக்கும் அந்த நாளில் பிரச்சினை எங்கே தீவிரமடைகிறது என்றால் அவன் திருமணம் செய்துகொள்ளத் தயாராகிறான் என்பது அம்மாவுக்குத் தெரியத் தொடங்கிய பிறகுதான்.

ராஜத்துக்கு அவனுடைய திருமணம் பற்றி நிறைய கனவுகள் இருக்கின்றன. பல நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்திருக்கும் கனவுகள். யாருக்கும் தெரியாமல் பெட்டியில் பூட்டி வைத்திருக்கும் கனவுகள். அவனுடைய கனவுகளை, ஆசைகளை அம்மா நிராகரிக்கிறாள். அவனுடைய நிலைமை மற்ற தம்பிகளுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், நான்கு தம்பிகளும் தனியாக இருக்கிறார்கள். அம்மாவிடம் பணம் கொடுத்துவிட்டு இரண்டு வேளை சாப்பிட்டுப் போகிறவர்களா இருக்கிறார்கள். அவர்களில் யாரும் குடும்பப் பொறுப்பைச் சுமக்கவில்லை.

ராஜத்துக்கும் அவனுடைய அம்மாவுக்கும் இடையே நடக்கும் அந்தக் கடைசி உரையாடலில் அம்மாவின் நுட்பமான தாக்குதல் வெளிப்படுகிறது.

“நீ வேறே ஆளைப் பார்த்துக்கோ. குள்ளிதான் வேணும்னா நூறு ரூபா முன் பணம் கொடு.”

ராஜத்துக்கு அவளுடைய தந்திரம் புரிந்தது. களவாணித்தனமாய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாளா? பெட்டியில் தாலி, சேலை செயினோடு நூறு ரூபா பணம் இருப்பதைக் கண்டுவிட்டாள். அந்தப் பணத்தைப் பறிக்கத்தான் இந்தக் குறுக்குவழியில் போகிறாள்.

“மூணு பேருக்கும் நான் உழைச்சுப் போடறேன். குள்ளி வெளியிலே வேலை செய்வாளா?”

“நீ உழைச்சி எங்களுக்குப் போட வேணாம். முன்பணம் நூறு ரூபா கொடுத்தாத்தான் குள்ளி உன்னோடு வேலைசெய்வாள். ராஜாமணிக்கு வயசாச்சு. அவ கல்யாணத்துக்கு நான் தயார் செய்யணும். அவளுக்கு ஒரு தோடு வாங்கப் போறேன்.”

அவன் கல்யாணத்துக்குத் தயார்செய்துகொள்கிறான் அல்லவா? ஏட்டிக்குப் போட்டியாக ராஜாமணியின் கல்யாணத்துக்குத் தயார்செய்கிறாளாம்! ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு; கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அப்படியே நல்ல இடத்தில் கேட்டாலும் அவனுக்கல்லவா அந்தப் பொறுப்பு!

மூன்று தங்கைகளைக் கட்டிக்கொடுத்துவிட்டுக் கடன்காரனாய்க் கஷ்டப்படுகிறவன் அவன் அல்லவா? இவள் என்ன செய்தாள்? ராஜாமணிக்குத் தோடு வாங்கவா பணம் கேட்கிறாள்? அவனிடமுள்ள பணத்தைக் கறக்க வேண்டும்; அவனுக்கு மணமாகாமல் இடைஞ்சல் செய்ய வேண்டும்; அவன் வேலை செய்ய முடியாதபடி தொல்லை தர வேண்டும். இதுதான் அவள் எண்ணம்.

நூறு ரூபாயை வாங்குவது என்பது வெறுமனே பணம் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல. ராஜத்தின் திருமணக் கனவுகளைக் கலைப்பது. அவனுக்கென ஒரு குடும்பம் என்று வந்துவிட்டால் தான் நிர்கதியாய் நிற்க வேண்டியிருக்கும், இரண்டு பெண்களைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்கிற பதற்றத்தில் வந்தது. இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கைக்கு இடையே அவன் பாதுகாத்து வைத்திருந்த நியாயமான் சின்ன ஆசையும்கூட மிகக் கடுமையாகத் தகர்க்கப்படுவதால் எழுந்த விரக்தியில் ரயிலில் பாய்கிறான் ராஜம்.

நாம் இந்த விஷயத்தில் ராஜத்தின் அம்மாவைக் குற்றவாளி ஆக்கினோம் என்றால் நம் ஊரில் பல ஆயிரம் அம்மாக்களைக் குற்றவாளி ஆக்க வேண்டியிருக்கும்.

இவ்வளவுக்கும் நாம் ராஜத்தின் அம்மா மீது குற்றம் சுமத்த முடியாது. ஏனென்றால், அவள் இதைப் பிரக்ஞைபூர்வமாகச் செய்யவில்லை. மனிதனுக்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அமைப்புகள் ஒவ்வொன்றுமே தனிநபரின் சுதந்திரத்தில் தலையிடக்கூடியவையாக இருக்கின்றன; குடும்பம் உட்பட. அவை ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஏற்ப வேறுபடக்கூடியவையும்கூட. மேலும், அந்த அமைப்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தனிநபரைப் பலியிடவும் அவை தயங்குவது கிடையாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அது எல்லா நேரங்களிலும் பிரக்ஞைபூர்வமாக நடைபெறுவதில்லை என்பதுதான். இந்தக் கதையில் ராஜத்தின் அம்மா தன்னுடைய குடும்பத்துக்காக மூத்த பிள்ளையை இரையாக்குகிறாள். ராஜம் அவனுடைய ஐந்தாவது வயதில் தறியில் உட்கார நேர்கிறது. குடும்பத்துக்காகப் பலியாவது அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது. குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு இன்னும் அதிக அளவில் தன்னுடைய சதையைப் பிய்த்துக்கொடுக்க வேண்டியிருக்கிறது. நாம் இந்த விஷயத்தில் ராஜத்தின் அம்மாவைக் குற்றவாளி ஆக்கினோம் என்றால் நம் ஊரில் பல ஆயிரம் அம்மாக்களைக் குற்றவாளி ஆக்க வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *