ராஜி பத்மநாபன் கவிதைகள்

சிறுபத்திரிகை

சொல்வனம்

சொற்கள் வழிந்தோடும்
நதியின் கரையொன்றில்
வெறும் கோடுகளாய்
நிரம்பிய கவிதையொன்று

கோடுகளின் இடுகுறிகளாய்
குறுக்கும் நெடுக்குமாய்
சுழிந்தோடும் நீரலைகளை
தன்னுள் அமிழ்த்தாமல்
நதியின் ஆழத்தில்
தொலைந்தது

கவிதை நதியின் கரையில்
புதிதாய் உயிர்த்ததொரு
சொல்வனம்
*

பிரிவின் மௌனமொழி

என்னில் இருந்து உன்னைத்
தொலைத்து விட்டதாய் நான்
உணர்ந்த நாள் தொட்டு
உதடுகளால் உன்னைத்
தீண்டிக்கொண்டே இருக்கிறேன்
உயிர் கொல்லும் ரணத்தின்
உக்கிரத்தைப் போர்த்திக் கொண்டே
முன்னெப்போதும் உணரா
தாபத்தோடு
இதழ்க் கசிவின் இருப்பை
கரிக்கும் நீர்த் துளிகள்
போராடித் தோற்கின்றன
மயங்குகிற பொழுதில் எல்லாம்
இமை திறக்கின்றன
உன் பரிவின் ஸ்பரிசங்கள்
பிரிவின் அகழிக்குள்
எறியப்பட்ட கவண் கற்களாய்
உயிர் தீண்டலில் ஊடாடும்
நிழற்கூத்தின் நிறைவான மொழியாய்
மருந்தில்லாப் பிணியாய்
மருகும் என் மந்தகாசப்
பொழுதுகளின் மெய்சிலிர்க்கும்
வேதனையாய்
நிறைகிறாய் என்னுள் நீ…
*

நிதியின் சைக்கிள்

ஆண்டிரண்டு ஆன பின்னும்
அதே மூலையில்தான் நிற்கிறது
குழந்தை எத்தனையோ முறை
கெஞ்சியும் பெரிசுதான் நல்லது
என்று தலையில் தட்டியதை
நினைத்துக் கொள்கிறேன்.

கால் எட்டாத அவளால்
ஓட்ட முடியாத பிடித்த
பிங்க் நிற சைக்கிளை
தினமும் பார்த்து பெருமூச்சு விடுகிறாள்

தனக்குப் பிடித்ததை வாங்கி
இருந்தால் அதில் எங்கெல்லாம்
போயிருப்பேன் என்று பட்டியலிட்டு
குறைபட்டுக் கொள்கிறாள்

ஒவ்வொரு முறையும் என் ஈகோவை
சீண்டிடும் அவளின் கேள்விக்கு
பதில் இல்லாததால்

அதைப் படர விட்டிருக்கிறேன்
மூலையில் நிற்கும்
அவளுக்கென்று வாங்கியதாய்
நான் சொல்லிக் கொள்ளும்
சைக்கிளின் அழுத்தமான
தூசியின் ஒவ்வொரு துகளிலும்…

அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *