ரெய்னர் மரியா ரில்கே

ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்

இலக்கியம்

தமிழில் : சரோ லாமா

1] தொடங்குதல்

நீங்கள் யாராக இருந்தாலும் சரி,
மாலையில் உங்களுக்குப் பழக்கமான
வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்
நீங்கள் யாராக இருந்தாலும் சரி,
உங்கள் வீடு
முடிவிலிக்கு அருகாமையில் இருக்கிறது.
பிறகு உங்கள் கண்கள்
விரிசலுற்ற வாசற்படியின்
நிலைக்கல்லைத் தாண்டி
அபூர்வத்தை அணிந்துகொள்ளும்
பலம் குன்றிய நீங்கள்
தனி ஒரு ஆளாக
நிழல் பொருந்திய மரத்தை
மெதுவாக
மேலே உயர்த்துவீர்கள்
வானத்தின் உயரத்திற்கு.
நீங்கள் ஒரு உலகத்தை சிருஷ்டிப்பீர்கள்
அது வளர்ந்து முதிர்ந்து
பேசப்படாத
பக்குவமடைந்த சொல்லாக மாறும்.
நீங்கள் உங்கள் சுய முயற்சியால்
அந்த வார்த்தையின் அர்த்தத்தை
விளங்கிக்கொண்டீர்களானால்
மேலும் நுட்பமாக உங்கள் பார்வை விசாலமடைந்து
உங்களை தாண்டிச் செல்லும்

2] தேவதைகள்

தேவதைகள் எல்லோரும்
களைப்புற்று உலர்ந்துபோன உதடுகளைக் கொண்டிருக்கிறார்கள்
காயங்களற்ற பிரகாசமான ஆன்மா அவர்களுடையது
பாவங்களுக்கு விரும்பி ஏங்கும் அவர்களுடைய மனம்
கனவுகளில் வந்து அவர்களை அலைக்கழிக்கும்

கடவுளின் தோட்டத்தில்
அமைதியாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொருவரும் மற்றவரைப்போல
வெவ்வேறு கால இடைவெளியில்
கடவுளின் சூரத்தனங்களிலும் மெல்லிசையிலும்

அவர்கள் தம்மின் சிறகுகளை விரிக்கும்போது
பூமியில் பேய்க்காற்றை மேலெழுப்புகிறார்கள்
தனது மகத்தான,
சிற்பியின் கைகளைக்கொண்ட கடவுள் திரும்புகிறார்

இருண்மையான புத்தகத்தின் முதல் பக்கத்திற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *