laura kasischke

லாரா கசிஸ்க் கவிதைகள்

இலக்கியம்

தமிழாக்கம்: சரோ லாமா

1]
ஆழமாகப் புதை.
கற்கள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன
நான் இன்னும் எலும்புகளைத் தோண்டியெடுக்கவில்லை.
எப்படிப்பட்ட மனிதன் நான்?

2]
யேகோவா மற்றும் முது மறதி நோய்
பட்டினி கிடக்கும் குழந்தையின் கைகளில்
தனிச்சிறப்புடைய அளவில் பெரிய வைரம்.
வெறுமையான நிலத்தில் அமைதியான கும்பல்.
வெம்மை சூழ் பால்கனியில்
என் தந்தை நாற்காலியில் அமர்ந்தபடி
ஆழ்ந்து உறங்குகிறார்.
அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,
ஆழ்கடலின் அடியாழத்தில் உட்கார்ந்திருக்கிறது.
அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,
கடல் பரப்பில் பயணிக்க காத்திருக்கிறது.
அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,
கடற்பயணம் போகிறது..
போய்க்கொண்டேயிருக்கிறது.

3]
அவள் என்னுடைய தோழி
கிறுக்குத்தனமாய் போய்விட்ட தோழி
முன்பொரு காலத்தில்
அவள் என்னுடைய கிறுக்குத்தனமான தோழி
நாங்கள் ஏரிக்குப் போகும் வழியில் அவள்
கிறுக்குத்தனத்தை தேர்ந்துவிட்டாள்
வணிக வளாகத்தின் மதிய உணவு விடுதியில்
மணப்பெண் அளிக்கும் விருந்து.
உண்மையில்
அவள் கிறுக்குத்தனம் கொண்டவள்தானா?

இரவுகளில்,
திருடப்பட்ட குழந்தைகள் அமைதியாய் உறங்குகின்றன
திருடர்களின் தோள்களில்.
அம்மையே, தயவு செய்து கத்தாதீர்கள் உங்கள் குழந்தையை திருடும்போது,
அம்மையே, தயவு செய்து கத்தாதீர்கள் உங்கள் குழந்தையை திருடும்போது.

அதே நேத்தில்
நாங்கள் அழைக்க மறந்த இருட்டுதான்
எங்கள் விருந்தாளி
காலையில் எங்கள் மெத்தையில்
அது ஆழ்ந்து உறங்குவதை நாங்கள் பார்த்தோம்.
தன் விளைவு
அதுதான்
அதுதான்
வருத்தம்.

4]
சூரியன் தண்ணீராலானது,
நாவுகளால் உருவாக்கப்படும் ரகசியங்களைப் போல.
எல்லா இரவுகளிலும் அது மறைந்து போகிறது
மற்றும் காலைவேளைகளில்
சூரியக் கதிர்கள் சுடர்கின்றன

கற்களுக்கு சூன்யம் வைக்கப்பட்டதை
நாம் பார்க்க முடியும்

இழந்துவிட்ட நேரங்கள்
கடந்தகாலத்தில் நுழைகின்றன.
குழந்தைகளின் நினைவுகள்,
பூனைகளின் நினைவுகள்,
கற்களின் நினைவுகள்,
எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு
அஃதெல்லாமும் ஆன்மாக்கள்தான்.

மற்றும் நரிகள் தரும் பேரச்சம்
மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள்
மற்றும் தூக்கிலிடுபவனின் விழிப்புக் கடிகை
மற்றும் கதவருகே நிற்கும் அதிகாரி.

மற்றும் ஊழலில் சம்பாதித்த சென்ட் மற்றும் டாலர்கள்
மற்றும் நான் உன்னைப் பார்த்த
கடைசித் தருணம்.

5]
விவசாயிகள் தங்கள் சப்தமிடும் அறுவடை எந்திரங்களுடன்
வயலில் மெதுவாக நகர்கிறார்கள்.
சில ஆணையிடும் சொற்கள்.
இன்னும் சரியாக பழுக்காத பீச் பழங்களின்மீது
எங்கிருந்தோ சூரியன் உதிக்கிறான்.
சிக்கலான பாதைகள் கொண்ட அந்த பழத்தோட்டத்தில்
நான் இலக்கின்றி அலைகிறேன்.
என்னை நோட்டமிட்டவாறே
நரிகள் மெதுவாய் நகர்ந்து செல்கின்றன.
என்னுடைய குதிகால் செருப்புகூட பசுமை கொண்டுவிட்டது.
பெறுமதியான அன்பு , பெறுமதியான இசை
ஏசு எனக்கு ஒவ்வொரு புலர் காலையிலும்
அனுபவிக்க அளிக்காத அதிசயம் அது.

”நாங்கள் தூரத்து கிரகத்திலிருந்து பயணப்பட்டு இங்கே வந்தோம்,
ஒரு மனிதனாக இருப்பது எப்படி என்பதை உங்களுக்குச் சொல்லித்தர.”

என் கையிலிருந்த காகிதக் கோப்பைகள்கூட
சுவாசிக்கக் கற்றுக்கொண்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுரங்களைப்போல்
கடல் மட்டத்துக்கு மேலே
செங்குத்துப் பாறையின்மேல் மிதக்கும் இசையின்
ஒவ்வொரு குறிப்பும் அழகானது.

லாரா கசிஸ்க் (Laura kasischke): அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் பிறந்த லாரா கசிஸ்க் கவிஞர், நாவலாசிரியர். நுண்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதுவரை ஒன்பது கவிதை தொகுப்புகளும், பத்து நாவல்களும், ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய பத்து நாவல்களில் மூன்று நாவல்களைத் தழுவி திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மெக்சிகன் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் இவர் கவிதைக்கான புஸ்கார்ட் விருதுகளை பலமுறை பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *