லிண்டா கிரேக்

லிண்டா கிரேக் கவிதைகள்

இலக்கியம்

தமிழில் : சரோ லாமா

1.மழைக்கால காதல்

நான் இந்த நிசப்தத்தை
அலங்காரம் செய்ய விரும்புகிறேன்
ஆனால் என் வீடு சுத்தமாகவும்
வெறுமையாகவும் மட்டுமே இருக்கிறது
பகல் மங்கி மாலையானதும்
நான் வளையங்களில் மாட்டி வைத்திருக்கும்
பளிங்கு மணி
மெல்லிய இசை எழுப்புகிறது
என் தேநீரைக் குடிக்க
நீண்ட நேரம் நான் காத்திருக்கிறேன்
தேநீர் சூடாக இல்லை
ஆனால் வெதுவெதுப்பாக இருக்கிறது

2.நேர்த்தி

அதெல்லாமும் கவனிக்கப்படாததால்தான்
அசைவின்மையில் தனித்துவிடப்பட்ட
களங்கமற்ற அமைதி
இயற்கையின் நிசப்தம்
இரண்டும் முயங்கிக் கிடக்கின்றன.
கதவுகளின் அச்சாணிகள் கழன்றுவிட்டன
வெற்று அறையில்
நிறபேதம் கூடிய
நிழல்களும் அவற்றின் சாயைகளும்.
துரு ஏறி அரித்துவிட்ட
தகரக் கூரை இடுக்குகளின்வழி
முரட்டுத்தனமான
வெளிச்சம் கசிகிறது.
காலை நேரங்களில்
காற்றில் தலை உரசும்
களைச்செடிகளின்
பழகிப்போன கரகரப்பான சப்தம்.
ஒரு பேக்கான் மரம்
செங்கற்கள் இல்லாமல் கட்டப்பட்ட வீடு.
துல்லியமான எதிர்பார்க்காத அழகு
ஆரவாரத்துடன் பாடுகிறது
அது சூரியனுக்காகத்தான் இருக்கவேண்டும்
இல்லையெனில்
அது வேறு யாருக்காகவும் இருக்க வாய்ப்பில்லை.

3.பெண் கடவுளுடன் தனித்திருத்தல்

பரங்ரிட்டிஸ் கடற்கரையில் ஈர மணற்பரப்பில்
இளைஞர்கள்
குதிரைகள் மீது சவாரி செய்கிறார்கள்.
முன்னும் பின்னும் அவர்கள் மீதும்
அவர்களுக்கு அப்பாலும் தண்ணீர் சிதறுகிறது.
இந்தக் கடற்கரையில்தான் காதலில் வஞ்சிக்கப்பட்ட
ரௌத்திரம் கொண்டலையும்
அந்தப் பெண் கடவுள் வசிக்கிறாள்.
‘பச்சை உடையோ அல்லது சிவப்பு உடையோ அணியாதீர்கள்
கடற்கரையில் குளிக்காதீர்கள்.’
மக்கள் சொல்கிறார்கள்.
அவளுக்கு காணிக்கை செலுத்துங்கள்.
நான் என் காதலனை காக்க வேண்டி
தேங்காய் காணிக்கை அளித்தேன்.
கரை மீண்ட அலைகளின்
தண்ணீரை நான் கால்களால் வீசி அடித்தேன்.
”பெண் கடவுள் உன் காணிக்கையை ஏற்கமாட்டாள்”
அந்த முதியவள் என்னிடம் சொன்னாள்.
நான் பதில் சொன்னேன்
”அவளுக்கு என்னைப் பிடிக்கும்,
அநேகமாக நாங்கள் விளையாடும்
சிறு விளையாட்டு இது”
அந்த முதியவள் பதில் சொல்லாமல் அமைதி காத்தாள்.
குதிரைகள் சேணம் கட்டியிருந்தன
அந்த இளைஞர்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை
விறைப்பான உடல் மொழியுடன்
கம்பீரத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் அழகான குதிரைகள் மீது
ஏறுவதும் இறங்குவதுமாய்
பரங்ரிட்டிஸ் கடற்கரையில் ஈர மணற்பரப்பில்.

4.செம்மறி

என்னிடம் ஒரு புகைப்படம் இருந்தது
போருக்குப் பிந்தைய
குண்டு வீசப்பட்ட மேட்டுக்குடி
தேவாயலயத்தின் புகைப்படம்.
ஆங்கிலம் அல்லது போர் என்ற வார்த்தையை
சரியாகப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு
நான் வயதில் மிகச் சிறியவன், ஆனால்
அந்தப் புகைப்படத்தை நான் அறிவேன்.
அந்த சிதைக்கப்பட்ட நகரம்
இன்னும் உயர்குடித் தோற்றத்தை இழக்கவில்லை.
குண்டு வீச்சில் பிய்த்தெறியப்பட்ட
தேவாலயத்தின் மேற்கூரை
இன்னும் புனிதத் தன்மையை இழக்கவில்லை.
மழையிலும் வெயிலிலும் தேவாலயம்
வசீகரத்தை இழக்கவில்லை.
குண்டுகள் துளைத்த தெய்வாம்சம் கூடிய
சுவர் ஓட்டைகள் வழியே
பறவைகள் உள்ளே வருவதும் போவதுமாய் இருந்தன.
எம்முடைய அன்புக்கான ஏக்கமும் அல்லது
குழந்தைகளும் கந்தல் துணியைப்போல
எதிரிகளால் கையாளப்பட்டன.
இன்னும் அதிகமான சோகங்களை நான் அறிவேன்
ஆனாலும் நான் பாடுவேன்
வீழ்த்தப்படும் கடைசி கணம் வரை பாடும்
ஒரு பறவையைப் போல.
அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தியபோது
குழந்தைகள் சுள்ளிகளை பொறுக்கி
அதுதான் எங்கள் மரம் என்றார்கள்
அதுதான் எங்கள் வீடு என்றார்கள்
அதுதான் எங்கள் குடும்பம் என்றார்கள்.
எங்கள் வல்லமை அதுதான்
இடிந்த கட்டிடத்தின் குவியல்களில் கிடந்த
கதவின் மீது நின்று
தலை தூக்கிப் பார்க்கிறது
பயமில்லாத சிறு ஆர்வத்துடனும் பசியுடனும்
ஒரு தனித்த செம்மறி

5.இரவின் சங்கீதம்

மலைகளின் பக்கவாட்டில்
சமவெளி நிலங்களின் சரிந்த பரப்பு
அவள் மலைமீது அமர்ந்திருக்கிறாள்
அதுதான் அவள் வீ.டு
சரிந்து இறங்கி மேலேறும் பாதை
மடாலயத்தில் சென்று முடிகிறது.
இன்னொரு பாதை விவசாயப் பண்ணையில்
சென்று முடிகிறது, அங்கே ஒரு சிறு பெண்ணும்
அவளது அம்மாவும் நடத்தும்
துணி வெளுக்கும் கடை உண்டு.
தூரத்தே
கடற்கரை மணற்திட்டுக்கள்
நீரை சமீபிக்கும் இடத்தில்
ஒரு சிறிய துறைமுகம் உண்டு.
அந்த இடத்தில் துயரப்பட்டு ஜீவிக்கும் அவள்
தெளிவானவள் ஆனால் உணர்ச்சிகள் மரத்துப்போனவள்.
தான் சூறையாடிய இந்த நிலத்துக்கே திரும்பிவரும்
கொள்ளைக்காரர்களையும் போர் வீரர்களையும்
அவள் நினைத்துப் பார்த்தாள்.
அவர்கள் மரங்களை நட்டார்கள்
சிதிலமடைந்த சுவர்களை மீண்டும் எழுப்பினார்கள்
மாலை வேளைகளில் கிராம சதுக்கத்தில்
இசை பெருக்கினார்கள்.
அவர்கள் கொன்ற பெண்கள்
பாலியல் பலாதிகாரம் செய்த பெண்கள்
வெள்ளை வீடுகளிலிருந்து கருப்பு உடையுடன்
வெளிப்பட்டு
தனது குழந்தைகளுடனும் பெற்றோர்களுடன் அமர்ந்து
தமது தாங்கவியலாத துயரக் கண்களுடன்
இசையை கவனமாகக் கேட்பார்கள் என
அவர்கள் திடமாய் நம்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *