விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

இலக்கியம்

தமிழில்: சரோ லாமா

1]
ஒழுங்குகெட்ட இந்த உலகத்தின் மீது உணர்ச்சிப் பெருக்குடன்
ஓவியக் கித்தானிலிருந்து வண்ணங்களை வாரி இறைத்தேன்
ஜெல்லி மீனின்மீது
ஓரத்தில் மினுங்கும் கடலின் கன்னக்கதுப்பை விரல்களால் துழாவினேன்
வெள்ளிபோல் மினுங்கும் சால்மன் மீனின் இருப்பை மீறி
ஓசை இல்லாவிட்டாலும் உதடுகளின் அசைவை அவதானித்தேன்
என் நண்பனே,
சாக்கடையயோரம் கிடந்த புல்லாங்குழலை எடுத்து
அந்தியை வாசித்தது நீ தானா?

2]
அந்தக் குதிரை, ஒட்டகத்தைப் பார்த்து
கேலியான குரலில் சொல்லிச் சிரித்தது:
”வெறுமனே உயர்ந்த குறும்பான குதிரை.”
ஒட்டகம் பதில் அளித்தது:
”நீ குதிரையா, வாய்ப்பேயில்லை
நீ ஒரு குறை வளர்ச்சியுடைய ஒட்டகம் அவ்வளவுதான்.”

உண்மையில் கடவுள் மட்டுமே அறிவார்
அவை இரண்டும்
வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த
பாலூட்டிகள் என்பதை.

3]
நான் கவனித்திருக்கிறேன்
காதல் எல்லாருக்கும்தான் விதிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் வருமானம் தொழில் எனப் பல லௌகீயத்தில்
சிக்கி அலைக்கழியும் காதல்
மேலும் வளராதபடிக்கு
அதன்மேல்
மண் பூச்சு சமாதி எழுப்பட்டுவிடுகிறது
உடம்பின் உள்ளுறையும் இதயத்துக்கு
மேல்சட்டை உண்டு
ஆனால் அது போதாது எனில்
யாரோ சில முட்டாள்கள்
மேல்சட்டையைத் துழாவி
இதயத்தின் சிறு முலைக்காம்பைக்
கசக்கிக் கூழாக்கிவிடுவார்கள்
அதீத முகப்பு பூச்சுடன் வரும் வயதான பெண்மணி
*முல்லரிடம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த
ஆலோசனை கேட்க நினைத்தாள்
ஆனால் காலம் கடந்துவிட்டது
தோல் சுருக்கங்கள் எல்லாவாற்றையும் சொல்லிவிட்டன
காதல் பொங்கிச் சிதைந்துவிட்டது
காதல் இல்லாமல் போய்விட்டது

· முல்லர் – ரஷ்யாவின் புகழ்பெற்ற உடற்பயிற்சி கையேட்டின் ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *