விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிதைகள்

சிறுபத்திரிகை

தமிழில்: சமயவேல்

தூங்கும் பொழுது

நான் கனவு கண்டேன் எதையோ நான் தேடுவதாக.
எங்காவது ஒளிந்து அல்லது தொலைந்து இருக்கலாம்
படுக்கைக்கு அடியில், மாடிப்படிகளுக்கு அடியில்,
ஒரு பழைய முகவரிக்குக் கீழே.

நான் தோண்டினேன் உடையலமாரிகள், பெட்டிகள் மற்றும் இழுப்பறைகள்
அர்த்தமில்லாமல் திணிக்கப்பட்ட சாமான்களும் மடத்தனங்களும்.

எனது சூட்கேஸிலிருந்து நான் உருவினேன்
நான் மேற்கொண்ட பயணங்களையும் ஆண்டுகளையும்..

எனது பைகளிலிருந்து நான் உதறினேன்
உலர்ந்த கடிதங்கள், குப்பைகள், எனக்கு எழுதப்படாத இலைகள்

மூச்சிறைக்க நான் ஓடினேன்
வசதியானது, வசதியற்றது வழியாக
இடப்பெயர்வுகள், இடங்கள்.

நான் தட்டுத் தடுமாறினேன்.
உறைபனிக் குகைப்பாதைகள் மற்றும் ஞாபகமறதிகள் வழியாக

நான் மாட்டிக் கொண்டேன் முட்புதர்களுக்குள்
யூகங்களுக்குள்

நான் நீந்தினேன் காற்று வழியாக
மற்றும் குழந்தைப்பருவப் புல்வெளியில்

முடித்துவிட நான் தள்ளிமுள்ளி விரைந்தேன்
காலாவதியான அந்தி வீழ்வதற்கு முன்பு,
திரைச்சீலை, அமைதி.

இறுதியில் நான் நிறுத்தினேன் நீண்டகாலமாக நான்
தேடிக் கொண்டிருந்தது என்ன என்பதை அறிவதை.

நான் விழித்தெழுந்தேன்
எனது கடிகாரத்தைப் பார்த்தேன்
கனவு, இரண்டரை நிமிடங்களைக் கூட எடுத்திருக்கவில்லை.

இவ்வாறானவை காலம் மேற்கொள்ளும் ஜாலவித்தைகள்
தூங்கும் தலைகளில்
அது இடறிவிழ ஆரம்பித்ததில் இருந்து எப்போதும்.

அஆஇ

நான் ஒருபோதும் தெரிந்துகொள்ளப் போவதில்லை
இப்போது அ. என்னைப் பற்றி என்ன நினைத்தார்.
இறுதியில் எப்போதாவது ஆ. என்னை மன்னித்தாரா.
எல்லாமே அருமை என ஏன் இ. பாவனை செய்தார்.
ஈ. என்ன பங்கு வகித்தார், உ.வின் மௌனத்தில்.
ஊ. என்ன எதிர்பார்த்துக் கொண்டிருந்தார், எதையுமா.
நன்றாக முழுமையாக அவள் அறிந்திருந்தபோதும் எ. ஏன் மறந்தாள்.
ஏ. எதை மறைக்க வேண்டியிருந்தது.
ஐ. எதைச் சேர்க்க விரும்பினார்.
என் இருப்பு அருகில் என்பதால்
எதையாவது அர்த்தப்படுத்துமா
ஒ. ஓ.க்களுக்கும் மற்றும் மீதமுள்ள அட்சரங்களுக்கும்.

வியட்நாம்

“பெண்ணே உன் பெயர் என்ன?” “எனக்குத் தெரியாது”
“எவ்வளவு வயது உனக்கு? எங்கிருந்து வருகிறாய்?” “எனக்குத் தெரியாது”
“அந்தப் பதுங்கு குழியை ஏன் தோண்டினாய்?” “எனக்குத் தெரியாது”
“எவ்வளவு காலமாக நீ ஒளிந்திருக்கிறாய்?” “எனக்குத் தெரியாது”
“எனது விரலை ஏன் கடித்தாய்?” “எனக்குத் தெரியாது”
“நாங்கள் உன்னைக் காயப்படுத்துவோம் என உனக்குத் தெரியாதா?”
“எனக்குத் தெரியாது”
“ நீ யார் பக்கம் இருக்கிறாய்?” “எனக்குத் தெரியாது”
“இது யுத்தம், நீ தேர்ந்தெடுத்தாக வேண்டும்.” “எனக்குத் தெரியாது”
“ உனது கிராமம் இன்னும் இருக்கிறதா?” “எனக்குத் தெரியாது”
“அவர்கள் உன் குழந்தைகளா?” “ஆமாம்”

பார்த்தவுடன் காதல்

அவர்கள் இருவருமே நம்பினார்கள்
ஒரு திடீர் பிரியம் அவர்களிடம் இணைந்திருப்பதை
அந்த நிச்சயம் அழகானது
ஆனால் நிச்சயமின்மை இன்னும் கூடுதல் அழகு.

அவர்கள் முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை என்பதால்
அவர்களுக்கிடையில் எதுவும் இல்லை என நம்பினார்கள் உறுதியாக
ஆனால் தெருக்கள், படிக்கட்டுகள், கூடத்தின் வழிகளில் இருந்து
என்ன சொற்கள் வருகின்றன

நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்
அவர்களுக்கு ஞாபகம் இல்லையா?
முகத்துக்கு முகம் ஒரு கணம்
சில சுழற்கதவுகளில்?
ஒருவேளை ஒரு கூட்டத்தில் முனகிய ஒரு “மன்னிக்கவும்”?
ரிசீவரில் சிக்கிய ஒரு சிறுகாட்டமான “ராங் நம்பர்” –
ஆனால் நான் விடையை அறிவேன்
இல்லை, அவர்களுக்கு ஞாபகம் இல்லை.

இப்பொழுது ஆண்டுக்கணக்கில்
தற்செயல் அவர்களோடு விளையாடியபடி இருந்தது என்பதைக் கேட்டு
திகைக்கலாம் அவர்கள்

இன்னும் முற்றிலும் தயாராகாமல் இருக்கலாம்
அவர்களது தலைவிதியாக மாறுவதற்கு.
அது அவர்களை நெருக்கித் தள்ளியிருக்கலாம்,
அவர்களைப் பிரித்து விரட்டியிருக்கலாம்
அவர்களது பாதையை மறித்திருக்கலாம்
திமிராக ஒரு சிரிப்பு,
பிறகு குதித்தோடிவிடலாம் அப்பால்.

அங்கிருந்தன அறிகுறிகளும் சமிக்ஞைகளும்
இன்னும்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாத போதும்.
மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஒருவேளை
அல்லது சரியாக கடந்த செவ்வாய்க்கிழமை
ஒரு இலை படபடத்ததா
ஒரு தோளிலிருந்து மற்றதிற்கு?
ஏதோ ஒன்று கீழே விழுந்தது, பிறகு எடுக்கப்பட்டது.
யாருக்குத் தெரியும், குழந்தைப்பருவப் புதருக்குள் தொலைந்த
பந்தாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கதவுக்குமிழ்களும் கதவுமணிகளும் அங்குண்டு
ஒரு தொடுகை இன்னொன்றால் மூடப்பட்டது அங்கு
முன்னதாகவே
அனுமதிக்கப்பட்ட சூட்கேஸ்கள் ஒட்டி ஒட்டி நிற்கின்றன
ஓர் இரவில், ஒருவேளை, அதே கனவு,
மங்கலாக வளர்ந்திருக்கலாம் காலைப் பொழுதில்.

ஒவ்வொரு ஆரம்பமும்
ஒரு தொடர்ச்சி மட்டுமே, இல்லையா,
மற்றும் நிகழ்வுகளின் புத்தகம்
எப்பொழுதுமே பாதிவழியில் திறந்து கொள்கிறது.

இறுதி ஞாபகம்

எதை அது தேடுகிறது என்பதை ஞாபகம் இறுதியாகக் கண்டுபிடித்தது.
எனது அம்மா வந்துவிட்டார், அப்பா கிடைத்துவிட்டார்
நான் ஒரு மேஜையையும் இரண்டு நாற்காலிகளையும் கனவு கண்டேன்.
அவர்கள் உட்கார்ந்தார்கள்
மீண்டும் அவர்கள் என்னுடையவர்கள், மீண்டும் உயிருடன் எனக்காக.
அவர்களது முகங்களின் இரு விளக்குகள் பிரகாசித்தன அந்தியில்
ரெம்ப்ராண்டுக்காக போல.

இப்பொழுது மட்டும் நான் கூறத் தொடங்கலாமா
எத்தனை கனவுகளில் அவர்கள் உலவி வந்தார்கள், எத்தனை கூட்டங்களில்
சக்கரங்களின் அடியிலிருந்து அவர்களை நான் வெளியில் இழுத்தேன்,
அவர்கள் அருகில் இருந்த எத்தனை மரணப் படுக்கைகளில் என்னோடு முனகினார்கள்?
துண்டித்தாலும் அவர்கள் திரும்ப வளர்ந்தார்கள், ஆனால் நேரடியாக அல்ல.
அபத்தம் அவர்களை ஒளிந்து கொள்ளுமாறு விரட்டியது
எனக்கு வெளியே அவர்கள் வலி உணரவில்லை என்பதால் என்ன,
எனக்குள் அவர்கள் இன்னும் வலித்தார்கள்
எனது கனவுகளில், நான் அம்மாவைக் கூப்பிடுவதை கேவலமான கும்பல்கள் கேட்டன
உயரே ஒரு கிளையில் எழும்பிக் கிரீச்சிடும் ஒரு பொருளிடம்.
குடுமியாகத் தொங்கும் என் அப்பாவின் முடியை அவர்கள் கேலி செய்தார்கள்
நான் அவமானத்துடன் விழித்தேன்.

எனவே இறுதியில்
ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை இரவு
திடீரென அவர்கள் திரும்ப வந்தார்கள்
அச்சு அசலாக நான் விரும்பியவாறு.
ஒரு கனவில், ஆனால் எப்படியோ கனவுகளிலிருந்து விடுபட்டு
வெறுமனே அவர்களுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் வேறெதுவும் இல்லை.
படங்களின் பின்புலத்தில் சாத்தியங்கள் மங்கலாக வளர்கின்றன
தேவையான வடிவத்தை இழந்தன விபத்துகள்.
அவர்கள் மட்டும் பிரகாசித்தார்கள், அழகாக ஏனெனில் அப்படியே அவர்களாகவே
ஒரு நீண்ட நீண்ட மகிழ்ச்சியான காலத்திற்கு அவர்கள் எனக்குக் காட்சியளித்தார்கள்.

நான் விழித்தெழுந்தேன். எனது கண்களைத் திறந்தேன்.
நான் உலகைத் தொட்டேன். ஒரு செதுக்கிய படச்சட்டகம்.

வெங்காயம்

வெங்காயம், இப்பொழுது அது பிறிதொன்றாக இருக்கிறது.
அதற்கு உள்ளுறுப்புகள் இல்லை.
ஒன்றுமே இல்லை, ஆனால் பரிசுத்தமான வெங்காயத்துவம்
நிரப்புகிறது இந்த வெங்காயவாதியை.
வெங்காயமயமாக உட்புறத்தில்
அது காட்சியளிக்கிறது வெங்காய இனிமையாய்
அது அதன் சொந்த வெங்காய நற்குரலைப்* பின்பற்றுகிறது
நமது மனிதக் கண்ணீர்கள் இல்லாமல்.

நமது தோல் சும்மா ஒரு மறைப்பு
ஒருவரும் செல்ல விரும்பாத அந்த இடத்திற்கு,
ஒரு உள் நரகம்,
உடற்கூறியலின் சாபம்.
ஒரு வெங்காயத்திற்குள் ஒரு வெங்காயம் மட்டுமே இருக்கிறது
அதன் உச்சியிலிருந்து பாதம் வரை
வெங்காயமிய ஒற்றைப்பித்து,
ஒருமனதான பரநிர்வாணம்.

அமைதியில், ஒரு துண்டினுடைய,
உள்முகமாக ஓய்வில்.
அதன் உட்புறம், அங்கிருக்கிறது ஒரு சிறிய ஒன்று
குறைக்க முடியாத அளவில்.
இரண்டாவது வைத்திருக்கிறது ஒரு மூன்றாவது ஒன்றை
மூன்றாவது ஒரு நான்காவதை உள்ளடக்கியது.
ஒரு மையநோக்கு விசை
அழுத்தப்பட்ட பல்லிசை.

இயற்கையின் உருண்ட தொந்தி,
அதன் மாபெரும் வெற்றிக் கதை,
வெங்காயம் தானாகவே உடுத்திக் கொள்கிறது
அதன் சொந்த மகிமையின் ஒளிவட்டங்களில்.
நாம் வைத்திருக்கிறோம் இரத்தக் குழாய்கள், நரம்புகள் மற்றும் கொழுப்பு
சுரப்பிகளின் ரகசிய அறைகள்.
நமக்குக் கிடையாது அத்தகைய மடத்தனமான
வெங்காயத்தனமான பூரணங்கள்.

  • daimonion என்னும் இச்சொல்லை சாக்ரட்டீஸ் பயன்படுத்துகிறார். உள்ளிலிருந்து எச்சரிக்கும் ஒரு குரல். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறாது. ஆனால் அது தெய்வமும் கிடையாது பேயும் கிடையாது.

சிறுபத்திரிகை, அக்டோபர் 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *