எம்.வி.வெங்கட்ராம்

வேள்வித்தீ நாவல் இடங்களில் ஒரு யாத்திரை

எம்.வி.வெங்கட்ராம் சிறப்பிதழ்

ராணிதிலக்

எம்.வி.வி நூற்றாண்டு முன்னிட்டு, வேள்வித்தீ நாவலில் வரும் இடங்களைக் காணப் புறப்பட்டேன். அதிகாலை, காலை, நண்பகல், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் சென்றிருக்கிறேன். முதன்முறையாக, எம்.வி.எம் அவர்களின் தோப்புத்தெரு வீட்டைப் பார்த்தேன். இரண்டு மாடிக் கட்டிடத்தின் முகப்புச்சுவரின் எம்.வி.எம். இந்தத் தோப்புத்தெருவை இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார், கண்ணன் என்னும் கதாப்பாத்திரம் வழியாக.  அவருடைய பழைய வீட்டை ரவிசுப்ரமணியனும், தேனுகாவின் மகன் வித்யாசங்கரும்  சொல்லும்போது, இரண்டு ஓட்டுவீடுகளை என் மனதிற்குள் வரைந்து பார்த்தேன்.  அது எம்.வி.எம்மின் வீடாக இல்லை. எனவே அந்த பழைய வீட்டைப் பார்க்கத் துடித்தேன். இதோ அந்தப் பழைய வீடு என்று தாங்கமுடியாத சந்தோஷத்தை எழுத்தாளர் சமஸ் எனக்கு அளித்தார். அந்தப் பழைய வீட்டின் முகப்பைத் தன் கட்டுரையில் வைத்திருந்தார். 

பிறகு, ஒரு முழுமுற்றான பயணத்தை நானும் விக்ரம் சிவக்குமாரும் அரலாற்றங்கரையில் தொடங்கினோம். அங்கிருந்து ராமச்சந்திரபுரம் வழியாக, தோப்புத்தெரு சென்று ஆசுவாசப்படுத்திக்கொண்டோம். தோப்புத் தெருவின் வீட்டில் இப்போது பழைய நபர்கள் யாரும் இல்லை. பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட்டிருந்தார்கள்.  அந்தக் கட்டிடத்தை, எம்.வி.எம்மின் சிரிப்பைப் பார்த்தபடி மீண்டும் கொத்தன் ஒத்த தெரு வழியாகத் திரும்பினோம்.  பெரிய தெரு, அதற்கு அடுத்த புதுத்தெரு. அதற்கடுத்த பிர்மன் கோவில் தெரு, அதற்கு அடுத்த. இப்போது நான் வசிக்கும் நடுத்தெரு மேற்கு முனைக்குச்சென்று, கொஞ்சம் இடது பக்கம் திரும்பி, புதுத்தெரு சென்று, திரும்ப ஹனுமான் பயிற்சிக்கூடம் இருந்த அரசலாற்று வழிநடப்புச்சென்று,  கடைசியாக அரசலாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம்.  ஒரு தெரு  இன்னொரு தெருவுக்கு வழிவிடுகிறது. ஓட்டுவீடுகள், தறி சத்தங்கள், பழைய மனிதர்கள் குறைந்த புத்தம்புது தெருக்கள், பழைய மண்வாசனை குறையாமல் இருந்தன.

கீழத்தெரு ராமசாமியும், மைசூர் ராமய்யரும் வேறு வேறானவர் என்பதை, விக்ரம் சிவக்குமார் நண்பரான பரத்வாஜின் பாட்டி, பெரிய தெரு வீட்டிலிருந்தபடி எங்களுக்குத் தெளிவாக்கினார். மைசூர் ராமயரின் வீடு சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு விட்டது. பேரன்கள் பெயர்ந்துவிட்டார்கள்.  மைசூர் ராமய்யருக்கு இப்பொழுதும் ஒருபெயர் உண்டு. அது ‘ஒன்பது கெஜம்’ ராமய்யர். நாவலில் வரும் ராமய்யர் இவர்தான் என்பது தெரியவந்தது. அவருடைய வீடு இடிக்கும்போது, தினமும் அந்தவழியில்தான் பள்ளிக்குச் செல்வேன். உடைக்கப்பட்டுக்கொண்டிருந்த மைசூர் ராமய்யர் வீட்டின் தூசு என்மேல் படியாமல் இல்லை.  சிச்சிதிலமான சுவர்களில் அநேக சித்திரங்கள் இருந்தன.

நாவலில் பல பெயர்களைக் கொண்ட மனிதர்கள் உண்மையானவர்கள், கன்னையர் உட்பட. சில பெயர்கள் சில மோசமான குணங்களுக்காக பெயர் மாற்றப்பட்டுள்ளன. நான் வசிக்கும் தெருவில் ராஜகோபால அய்யர் மகள் ஹேமா இருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை. பழைய மனிதர்களுக்குத்தான் தெரியும் என்றார்கள், புதுமனிதர்கள்.

நாவலை வாசித்துவிட்டபின் இரண்டு பேரும் அந்தந்த அந்தந்த தெருக்களுக்குள்  திரிந்தபடி, இருந்தோம். நாவலுக்குள் உள்ள  தெருக்களில் பயணிக்கிறோமோ, வெளியே பயணிக்கிறோமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

காலம் தன் பசிக்கு அவ்வப்போது மனிதர்களின் வீடுகளையும்  தின்றுவிடும் போல. காலத்தின் பசிக்கு இரையாக வீடுகள் சில, தம்மை நாட்டு ஓடு வீடுகளிலிருந்து ஓட்டு வீடுகளாக மாறிவிட்டன.

கடைசியில், கௌசலையும் குழந்தைகளும் மிதந்த பொற்றாமரைக்குளத்திற்குச் செல்லவில்லை. நான் கேட்கும்போது, வேண்டாம் என்று கூறிய விக்ரமின் முகத்தில் ஒரு வித பயமும் கலவரமும் பதற்றமும் தெரிந்தது. நான் உள்ளுக்குள் பயந்துகொண்டிருந்தேன். ஒருவேளை சென்றிருந்தால், பொற்றாமரைக்குளத் தண்ணீரின் மேற்பரப்பில் இரண்டு சடலங்கள் மிதந்துகொண்டிருக்கலாம்.

இப்போது எம்.வி.எம் இருந்திருந்தால், நாங்கள் இப்படிச் சுற்றித் திரிவதைக் கேள்விப்பட்டிருந்தால், எங்கள் இருவரையும் “பைத்தியக்காரப் பிள்ளைகள்” என்று சொல்லிச் சிரித்திருப்பார்.  இப்போது அவர் இல்லை. ஆனால், எம்வி.எம்மிற்கு என இந்த உலகத்தில் கோடானுகோடி பைத்தியக்காரப் பிள்ளைகள் இருந்துகொண்டுதான்  இருக்கிறார்கள்.

கீழே நாவலில் வரும் இடங்களை, அதன் வரிகளுடன் இணைத்திருக்கிறோம்.

வடதிசையில் காவிரியும் தென் திசையில் அரசலாறும் கும்பகோணத்திற்கு எல்லை வகுக்கின்றன
கும்பகோணம், ராமச்சந்திரபுரத் தெரு அரசலாற்றங்கரையை அடுத்துள்ள ஒரு தெரு
அரசலாற்றங்கரையை அடுத்துள்ள தோப்புத் தெருவில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்குப் பிடித்தான்
பக்கத்துப் புதுத்தெருவில் ஜவஹர் அன் கோ என்ற விலாசத்தில், சில நண்பர்களின் சிபாரிசோடு ஒரு கூலித்தறி வாங்கிக் கொண்டான்
கீழத்தெரு ராமசாமி ஐயர் ஒரு பெரிய ஜவுளி உற்பத்தியாளர்
கும்பகோணத்துக்குக் குடிபெயர்ந்து, சௌராஷ்டிரபுரத் தெருவில் ஒரு வீட்டில் சாரநாதன் குடிபுகுந்தான்.
ராமச்சந்திரபுரத் தெருவும் புதுத்தெருவும் அண்டைத் தெருக்கள்
அவனுடைய தெருவுக்கும் அடுத்த புதுத்தெரு நடுத்தெரு இளைஞர்கள், ஹனுமான் உடற்பயிற்சிக் கூடம்” நிறுவியிருந்தார்கள்
துவரங்குறிச்சி தெற்குத் தெருவில் கிரி பத்மநாப அய்யரின் பெண் கௌசலையைப் பற்றி அவன் கேள்விப்பட்டான்.
ஹேமாவின் வரலாறும் அவனுக்குத் தெரியும். அது மிகவும் சுருக்கமானது. பக்கத்து நடுத்தெருவில் இருந்த பட்டு ஜவுளி உற்பத்தியாளர் ராஜகோபலய்யரின் தங்கை அவள்.
பிர்மன் கோயில்லே நாளைன்னைக்கு பொதுக்கூட்டம் போட்டிருக்கு.
சிறிய கோவில் என்றாலும், அடக்கமாக, அழகாக இருக்கும். இதுவும், பக்கத்திலுள்ள வரதராஜப்பெருமாள் கோயிலும் சௌராஷ்டிர சமூகத்திவரின் ஆதிக்கத்தில் இருப்பவை.
வெத்திலை வாங்கப்போறப்போ, கும்பேசுவரன் வடக்கு வீதியிலே பார்த்தேன். கௌசலை மாதிரித்தான் இருந்தது
பெரியகோயிலுக்கு (சாரங்கபாணி சுவாமி கோயில்) பின்னாடி பொத்தாமரைக் குளத்து மண்டபம் இருக்கா? கௌசலை அங்கே குழந்தையோடு உட்கார்ந்து இருந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *